கனிச்சாறு 7/136
131
அறுபது பொங்கல்!
(அறுபது அகவைக் கிழவி, தன் பெயர்த்தியிடம் சொல்கிறாள்.)
நீண்ட சுருட்குழல் சேல்விழி மேவியென்
நெஞ்சை யிழுத்திடும் பாவையே,
ஆண்டுக் கொருமுறை பொங்கல் வந்தே, உளத்
தாக்கிய கூத்தினைக் கேளடி!
1
பொங்கல் பிறக்குமுன் நான்பிறந் தேன்எனப்
பெற்றவர் என்னிடம் சொல்லியே,
பொங்கி மகிழ்ந்து மகிழ்ந்தத னால்,இரு
பொங்கல் கழிந்தது வல்லியே!
2
மூன்று கழிந்தது; நான்கு கழிந்ததென்
முல்லைப்பல் கண்டு மகிழ்ந்தனர்;
ஆன்று சிறந்த தமிழ்மொழி யை, என்றன்
அன்னை எனக்கறி வித்தனள்.
3
பள்ளியிற் குந்தினேன்! ஐந்தெனப் பொங்கல்
பறந்தோடி வந்ததே! ஆறினில்,
துள்ளி மகிழ்வுட னாடுதற்கே என்றன்
தோழிகளும் உடன் சேர்ந்தனர்!
4
சிற்றில் கட்டி விளையாடி மகிழ்வெய்திச்
செம்மலர் ஊஞ்சலில் உந்தியும்.
நெற்றி சுழித்திரு நீள்விழி யால், இசை
நேருக்கு நேராக ஆடியும்,
5
பூத்த மலர்க்கொம்பை எட்டிப் பிடித்தற்குப்
புன்னை யிலையடி தாவியும்,
கோத்த மலர்ச்சர மிட்டிரு பெண்களைக்
காதலர் ஆக்கியும் ஆடிட,
6
பத்தும் இரண்டும் பறந்து, பதின்மூன்றிற்
பாதியும் தீர்ந்ததப் போதிலே
பத்தரை மாற்றுப் பொன் மேனியென, எனைப்
பார்த்தவர் கூறிடக் கூசினேன்!
7
அன்றொரு பொங்கலில், ஆறுசென்றேன்; மக்கள்
ஆட்டினை மாட்டினை மூழ்க்கியே,
நன்று கழுவிய வாறிருந்தார்; கண்டு
நின்றிருந்தேன்; எனை நோக்கியே,
8
குன்று விரைவது போல விரைந்தது,
கொம்பு வளர்ந்தவோர் காளையும்;
சென்று வளைத்து மடக்கி யடக்கினன்,
செக்கச் சிவந்தவோர் காளையும்!
9
அஞ்சி நடுங்கிய வாறிருந்தேன்; அவன்
அண்டை வந்தே யெனை நோக்கியே,
“வஞ்சி நடுங்கிடல் ஏன்?” எனக் கேட்டனன்,
வாயின் நடுக்கங் காணாதவன்!
10
உள்ளத்தினைப் பறித்தான்; அவன் எண்ணத்தை
ஊன்றிவிட்டான் என துள்ளத்தில்!
அள்ளிப் பருகுநல் லின்பங் கொடுத்திடும்
ஆளானா னொரு நாளிலே!
11
வெல்லச் சுவைமொழி பேசியென் உள்ளத்தை
விண்ணுக் கழைத்திடும் பாவையே!
செல்லச் சுவைமொழி கொஞ்சி மகிழ்ந்திடச்,
சென்றன ஐந்தாறு பொங்கலும்!
12
பேழை திறந்தொளி முத்து வெளிப்படப்
போலச் சிரித்திடும் நங்கையே!
தாழை மலர்நிறத் தோடுனைப் பெற்ற, உன்
தந்தையை முன்னர் பெற் றேனடி!
13
ஞாயிறு வந்தது! திங்கள் வருமென
நாட்டங்கொண் டார்மனம் போலவே,
ஆயிரு பத்தைந்து பொங்கலுக் குள்ளேவுன்,
அத்தையைப் பின்னர்பெற் றேனடி!
14
பிள்ளை தவழ்ந்து நடந்து வளர்ந்திடப்
பொங்கல் ஐந்தாறு கழிந்தன!
பள்ளி சென்றான்; படித்தான், எனக் கூறிடப்
பாதி கடந்தது வாழ்வினில்!
15
கண்ணுக் கிணையெனக் காத்துவந் தேன்; அவன்
காளை நிகர்த்தவன் ஆகினன்!
‘பெண்ணுக் கழகது பேணல்’ என்றே எனைப்
பார்த்தவர் கூறிப் புகழ்ந்தனர்!
16
வண்டு பறந்து வளைந்து திரிந்திடும்
வார்த்த மலர்க் கருந் தீங்குழல்
பண்டு நடந்த பழமை மறப்பது
போலக் கருமை மறந்ததே!
17
முல்லை முகையெனப் பேசி மகிழ்ந்திட்ட
முத்துப்பல் செத்து முடிவினில்,
‘இல்லை’யெனப் பிறர் பேசிக் களித்திட
ஏற்றதடி என்றன் தோற்றமும்!
18
சந்தனத் தூளினைப் பூசிக் கழுவிச்செந்
சாந்தினைப் பூசிக் குளித்தவள்,
குந்தி யெழுந்திடக் கோல் ஒன்று வேண்டிடுங்
கோணி வளைந்தவள் ஆயினேன்!
19
தாமரைச் செம்முகம் என்றும் இருகண்கள்
தாவிடும் வண்டுகள் என்னவும்,
தேமலர்ச் செவ்விதழ் என்னவும், இவ்வுடல்
தேன்சுவை மாநிறம் என்னவும்,
20
பேசிப் புகழ்ந்திட்ட பொன்னுடலோ, இன்று
பேரொளி குன்றிட யாவரும்
ஏசித் திட்டி மகிழ் வெய்தும் நிலையினில்
ஏன்திரை யுண்ட தோ? கேளடி!
21
காலம் விரைந்ததுன் அத்தை யுளத்திற்குக்
காத்திருந் தானெரு காவலன்!
நீலமலர் விழிக் கானவன்; அன்னவன்
நேரிழை தொட்டிடும் மன்னவன்!
22
உன்னை மணந்திடப் பெற்றெடுத்தாள், ஓர்
ஓவியத்தை! இளங் கன்றினை!
மின்னை விரட்டிடும் சிற்றிடை நீ, எழில்
மேவி வளர்ந்திடும் பைங்கிளி!
23
பாலுலை யேற்றிச் சருக்கரை யிட்டின்பம்
பொங்கிடும் பொங்கல் அறுபதை
வாலைக் கன்னி! என்றன் வாழ்வில் கண்டே, உளம்
வீங்கி மகிழ்ந்திருந் தேனடி!
24
எப்பொங்கல் போன்றேயிப் பொங்கல் இருப்பதால்
என்ன புதுமையென் றேவுளஞ்
செப்புதல் போலச் சிரிக்கும் வகையினைச்
சொல்லடி! பூவின் இளமுகை!
25
பண்டுயாம் பொங்கிய பொங்கலில் பார்ப்பனப்
பாதை யிருந்தது! ஈண்டெனில்
தொண்டு விரவி யறிவு படர்ந்துளம்
தோய்ந்த தடி புதுப் பாதையில்!
26
செந்தமிழ் நூல்களைக் கண்டுளம் பொங்கிடுஞ்
சிந்தை யிருந்தவர் ‘போகி’ யில்
வெந்தழலிற் பெருஞ் செந்தமிழ் நூல்களை
வீசி யழித்தனர் பண்டையில்!
27
மூடப் பழக்க வழக்க மழிந்தது!
முன்னையினும் தமிழ்ப் பற்றினை,
நாடிப் பறந்தனர்; எங்கணும் செந்தமிழ்
நாட்டங் கொண்டாரடி மக்களும்!
28
கோவில் குறைந்தது! பள்ளி நிறைந்தது!
கோவர சாட்சி மறைந்தது!
ஆவல் விரைந்தது செந்தமிழ்மேல்! மக்கள்
ஆட்சி மலர்ந்ததிக் காலையே!
29
அன்றுகண்ட பொங்கல் ஆரியப் பொங்கலாம்!
ஆனாலிது தமிழ்ப் பொங்கலாம்!
நின்று தலைநிமிர்ந் தேறு நடையென
நீ நடந் தாடி மகிழ்ந்திடு!
30
சங்கு நிறைகரை சூழ்ந்து, பொருவளஞ்
சேர்ந்து விளங்குபொன் னாட்டிலே,
‘பொங்குக பொங்கல்’என் றே,வுளம் பொங்கிப்
பொலிந்திடுக தமிழ்ப் பாட்டிலே!
31
-1952