கனிச்சாறு 7/200
193
எதிர்நீச்சல் நூலுக்குப் பாராட்டுப்பா!
தனித்தமிழ் நெஞ்சால் கற்பனையால்
தகுசால் கடவூர் மணிமாறன்
இனித்திடு பாக்கள் ஒருங்கிணைந்த
‘எதிர்நீச் சல்’நூல் தொகுத்தளித்தார்!
பனித்துளி அளவிற் சிறுவடிவம்
பரந்துள வான்போல் கற்பனைகள்!
கனித்திரள் போலும் பல்சுவைகள்
கதையும் உண்டு! மிகமகிழ்ந்தேன்!
யாப்பினிலே சிறுபிழைக்கும் இடமில்லை; தமிழ்நடையில்
யாங்கேனும் தடையே இல்லை;
தோப்பினிலே படர்ந்திருக்கும் குளிர்நிழல்போல் ஆங்காங்கே
தூயதமிழ் கொஞ்சும் பாங்கில்
பாப்புதையல் கண்டதுபோல் பல்வகைப்பா கண்டுவந்தேன்
பளிங்குநன்னீர்ச் சுனைகள் போல!
காப்புதனித் தமிழுக்காம் கடவூர்நன் மணிமாறன்
கற்கண்டுப் பாடல் நூலே!
காதல், தமிழ் அறம், பொதுமை எனுந்தலைப்பில்
கருத்துமிகக் கனிந்த பாக்கள்!
ஓதுதற்கோ மிகஎளிமை! உணர்வதற்கோ
மிகவளமை! இனிமை! ஒன்றுந்
தீதில்லாத் தமிழ்த்தொண்டு! தீங்கில்லாச்
சுவைநலன்கள் திகழச் செய்தார்!
ஆதலினால் வாழ்த்துகின்றேன்! அன்பர்மணி
மாறன், எதிர் நீச்சல் வாழ்க!
1983