கனிச்சாறு 7/207
200
தமிழியக்கன் - நூலுக்கு அணிந்துரை!
தூவலி னால்பொருள் தொகுத்திடும்
விழைவினால் சிலர்தமிழ்த் தொண்டரென்பார்;
ஆவலி னால்சிலர் அருந்தமிழ்
அணியொடும் யாப்பொடும் ஆர்ப்பரிப்பார்;
நாவலர் ஆகியே நறுந்தமிழ்
நயத்தொடும் நடிப்பொடும் சிலர் நவில்வார்;
பாவலர் தமிழியக் கன்தமிழ்
பயில்வது பைந்தமிழ் பயனுறவே!
செறிவுற இலக்கியம் செய்குவார்
சிலரிவண் செந்தமிழ் செழிப்படைய!
நெறியியல் அறவியல் நிகழ்த்துவார்,
நீணிலம் கோணலை நிமிர்க்கவென்பார்!
வெறியியல் உணர்வுகொண் டாண்பெண்
உறவெலாம் சுவையோ டுரைத்திடுவார்!
‘அறிவியல் இலக்கியம்’ முழக்குவார்
தமிழியக் கன்தமிழ் அணிபெறவே!
(வேறு)
தனித்தமிழில் அறிவியலைப் பாட லாகத்
தகுகருத்துப் புலப்படவே ஆக்கித் ‘தந்தார்;
கனித்தமிழில் வல்லமைசேர் ‘தமிழி யக்கன்’
கருத்துக்கும் பாவுக்கும் தலைவ ரானார்!
‘இனித்தமிழில் எதனையுமே கூற லாகும்'
எனும் உண்மை மெய்ப்பித்தார் இந்த நூலால்!
நுனித்தறிந்த தமிழ்த்திறனால் ஆக்கம் சேர்க்கும்
நூலிதுபோல் பலவெழுதித் தருதல் நன்றே!
இன்றுவரை இயற்கையினைப் பாட வந்தார்,
எழில், உருவம், வண்ணங்கள், இலைகள், பூக்கள்,
குன்றுவளர் வெள்ளருவி, பறவை, மேகம்,
குளிர்கடல், தென் றல் - இவற்றைப் பாட லாக,
அன்றுயர்ந்த செந்தமிழில் ஆக்கித் தந்தார்;
ஆனால்நம் தமிழியக்கள் புலமை மிக்கார்,
நின்றவற்றின் அறிவியல்சேர் நிலைக ளெல்லாம்
நிலைத்ததமிழ் வல்லமையால் பாடல் செய்தார்!
நாம்வாழும் நிலக்கோளம், உலகம், வானம்,
ஞாயிறு, வெண் ணிலவு, விண் மீன்கள், மின்னல்,
தீம்புயல்சேர் நிலநடுக்கம், மழை, காற் று,உப்பு,
தேங்குநிலக் கரி, கல்நெய், இழுவை, ஆடி,
மேம்படு வெள் ளொளி, ஒலிகள், வால்மீன்,
மேலறுவான் வில்,என்னும் இயற்கூ றெல்லாம்
தேம்படுசெந் தமிழ்ப்பாவில் விளக்கிச் சொன்னார்,
திகழ்புலமை தமிழியக்கன்! வாழ்த்து கின்றேன்!
(வேறு)
தட்டாத யாப்பழகு! தளர்வில்லாப் பாவோட்டம்!
தமிழறிந்த புலவோர்க் கெல்லாம்
எட்டாத அறிவியலை எடுத்தளிக்கும் நல்விளக்கம்!
எந்தமிழில் பிறமொ ழிச்சொல்
முட்டாத தூயநடை! முனைமழுங்காச் சொல்வழக்கு!
முழுக்கருத்தும் கூறும் பாங்கு!
தெட்டாத தமிழ்த்தொண்டர் தமிழியக்கன் செயுந்தொண்டு
தேயாமல் திகழ்க! வாழ்க!
-1985