கனிச்சாறு 8/002
1. ‘தமிழியக்கம்’ எழுச்சி!
(29.3.68 இல் மதுரை தியாகராயர் கல்லூரி முத்தமிழ் விழாவில்
பாட்டரங்கத் தலைமை யேற்றுப் பாடிய தலைமையுரை)
எங்கும் நிறைந்த இறைவன் கழல்வாழ்த்திப்
பொங்கும் அவன்றன் புகழ்வாழ்த்தி உள்ளவுயிர்ப்
பூட்டரங்கம் என்ன உலகோர் உவந்தேற்கும்
பாட்டரங்கம் வாழ்த்தவந்த பைந்தமிழ்ச் சான்றோரே!
வீட்டரங்கம் விட்டு வியன்தமிழில் என்னசுவை
காட்டுகின்றார் பார்ப்பமெனக் காணவந்த தாய்மாரே!
“எந்ததமிழ்காண்! எங்கள் இருவிழி காண்! உடல்காண்!
அந்தமிழ்தான் எங்களுடை ஆருயிர்காண்! சீர்காண்!
இயக்கங்காண்! எம்வாழ்வுக் கேற்றங்காண்! பூண்காண்!
மயக்கறுக்கும் உள்ளொளிகாண்! மாய்தலிலாப் பண்காண்!
விடிந்ததுகாண் நற்பொழுதும்! வீறுகிளர்ந் தோம்காண்!
பொடிந்ததுகாண் வெம்பகையும்! பூத்ததுகாண் மாட்சி!
எழுந்ததுகாண் எம்கூட்டம்! எங்கெங்கும் தூள்தூள்!
விழுந்ததுகாண் தாழ்ச்சியெல்லாம்! வீழ்ந்தது காண்மடமை!”
என்றெழுச்சிப் பண்பாடி ஏறுநடை போட்டுவரும்
மன்றஞ்சேர் கல்விவளர் மாணவர்காள்! மாணவிகாள்!
நீட்டுறக்கம் கொள்ளுகின்ற நீணிலத்தோர் நும்பாடல்
கேட்டுறக்கம் கொள்ளாமல் உள்ளம் கிளர்ந்தெழுந்தே
இன்பம் சிலிர்த்தும் இளைத்தவுடல் பூரித்தும்
துன்பம் தொலைக்கின்ற தொல்பெருமை கேட்டுணர்ந்தும்
நாட்டரங்க வாழ்க்கையிலே நல்வடிவம் கொள்ளவைக்கும்
பாட்டரங்கம் ஏறுகின்ற பைந்தமிழ்ப் பாவலர்காள்!
செந்தமிழ்தான் வெல்லாதோ? இந்தவுல குய்யாதோ?
அந்தமிழ்தான் நம்மையர சாளாதோ? ஈங்கிருக்கும்
மாந்தக் குலமெல்லாம் மண்ணுலகில் விண்சுடர்போல்
காந்தத் தமிழால் கனவுலகம் காணாதோ?
எல்லை பொடிந்தே இருங்கடலும் தான்விலகித்
தொல்லை மடிந்த துயர்மாந்தர் எல்லாரும்
எந்தமிழால் கூடி இசைத்தமிழைப் பாடிநடந்
தந்தோம்தந் தோமெனவே தாளங்கள் போடாரோ?
வாழ்க்கைத் துயரெல்லாம் வன்பொடியாய்ப் போகாதோ?
பாழ்க்கை மனப்பூசல் பாழ்வெளிக்கே ஏகாதோ?
சாதிச் சழக்கெல்லாம் சாத்திரத்தின் பூசலெல்லாம்
ஊதிப் புறந்தள்ளி ஓங்குநிலை காணாரோ?
அற்றைப் புலவரெல்லாம் ஆங்கொருங்கே வீற்றிருந்தே
இற்றைப் புவிமாந்தர் ஏற்றமிகக் கொள்ளுதற்கே
காட்டிநின்ற நல்வழியைக் கண்ணெடுத்துப் பாராரோ?
வாட்டும் வறுமைக்கே வல்லுறக்கம் வாய்க்காதோ?
கொட்டிவைத்த முத்தளந்து கொண்டுவந்த பொன்னளந்தே
கட்டிவைத்த நற்புகழால் காணியெலாம் தாமளந்த
பாண்டியனார் மக்கள் பழம்புகழைத் தேராரோ?
மீண்டுமிந்தச் செந்தமிழை மேன்மைப் படுத்தாரோ?
சோழன் அறப்பெருமை சொந்தமெனக் கொள்ளாரோ?
வீழாத தோளான் வியன்சேரன் சீர்த்தியெல்லாம்
பாட்டாகப் பாடிப் பைந்தமிழைப் பாய்ச்சாரோ?
கூட்டாக நின்றியங்கிக் கோடா அறம்வளர்த்துச்
செந்தமிழை வான்தூக்கிச் செங்கதிர்க்கு மேல்நிறுத்தி
இந்தவுல குய்ந்திடவே ஏற்றம் உரைக்காரோ?
வள்ளுவனார் வாய்மை வழிவழிக்கே நின்றிருக்க,
கொள்ளும் உயர்வாழ்க்கைக் கூறுகளை மக்களினம்
ஏற்று வழிநடக்கும் இன்பநிலை வாயாதோ?
வேற்றூர் அயலர்எனும் வேற்றுமைகள் சாயாவோ?
மண்ணாவல் கொண்டுலக மாந்தர் மடிவதையும்
எண்ணாமல் வாய்மையறம் ஏற்காமல் தீமைசெயும்
வல்லரசப் போக்கை வழிமடக்க மாட்டாரோ?
நல்லரசால் இவ்வுலகை நல்லுலகாய் மாற்றாரோ?
தம்மனைவி தம்மக்கள் தம்வாழ்க்கை தாம் என்றே
தம்மனத்துக் கொள்ளும் தருக்கெல்லாம் வீழாதோ?
இவ்வுலக வாழ்க்கைநலம் எல்லாம்எல் லார்க்குமெனும்
அவ்வுரையெங் காதில்தேன் ஆறாகப் பாயாதோ?
காற்றேபோல் செங்கதிர்போல் காருலவும் வானம்போல்
ஊற்றேபோல் மண்ணின் உடைமை பொதுவென்னும்
ஏற்றவுரை என்றன் இருசெவியால் கேளேனோ?
மாற்றத்தை என்றன் மணிவிழிகள் காணாவோ?
பூசிக் கழுவிப் புனுகு குழைத்திட்டுப்
பாசி உடலுக்குப் பட்டுடைகள் தாமணிந்து
செல்வச் செருக்காலே சீர்த்தநடை போடுகின்ற
புன்மைக் கயவோர்கள் போக்கில் அடிநசுங்கும்
கோடான கோடி ஏழைக் குறுமக்கள்
பாடாகப் பட்டும் பசியடங்க உண்ணாமல்
வெள்ளெலும்புக் கூடாக வீதிப் புறங்களிலே
தள்ளப் படுகின்ற தாழ்ச்சிநிலை சாகாதோ?
புண்ணுக்கே அப்பும் பொடிமா முகத்தப்பிக்
கண்ணுக்கு மையிட்டுக் கார்குழலைக் கொண்டையிட்டுப்
பெண்ணுக்கு வாய்த்த பெருமையெலாம் கால்மிதித்துக்
கண்ணாடிச் சேலையினைக் கால்தெரியக் கைதெரியப்
பின்முதுகு காணப் பிறைவயிறு தோன்றிடவே
முன்னுடுத்துப் போகின்ற முச்சந்தி நாகரிகம்
செந்தமிழ்ப் பண்பாட்டின் சீர்மையினைச் சீய்க்காமல்
வந்தவழிப் போகுமொரு வாய்ப்பையிங்குக் காண்பேனோ?
முத்துத் தமிழால் உலகம் முழுதளந்தே
எத்திசையும் பேர்மணக்க எந்தமிழர் வாழாரோ?
பூக்காரோ? வாழ்க்கை புதுக்காரோ? நூல்பலவும்
ஆக்காரோ? செந்தமிழால் ஆகாத தில்லையெனக்
காட்டாரோ? வேற்றுலகம் காணாரோ? எந்தமிழின்
பாட்டாலே இவ்வுலகப் பான்மை உயர்த்தாரோ?
ஊர்ஊராய்ச் சென்று, தெருத்தெருவாய்க் கால்நடந்து
வார்கடலைத் தாண்டி வளர்மலைகள் ஏறிப்போய்
வேற்றுநில மாந்தர் விழிப்புறவே நந்தமிழின்
ஊற்றுப் பெருக்கை உயிராம் கலைப்படைப்பைக்
காட்டி மயர்வறுத்துக் காட்சிநிலை சேர்ப்பாரோ?
ஏட்டில் எழுத்தில் இடைநடக்கும் சொற்பெருக்கில்
எந்தமிழின் ஏற்றம் எடுத்தே முழக்கமிடச்
செந்தமிழின் மாணாக்கர் சேர்ந்தொருங்கே செல்லாரோ?
‘என்றே பலவாறாய் எண்ணி வருந்துகையில்,
“இன்றே புறப்பட்டோம்! ஏற்றமினி நாட்டுவம்காண்;
வீணாக்கோம் ஓர்நொடியும்” என்றே விரைந்தெழுந்து
மாணாக்கர் கூட்டம் மடிதட்டி நின்றதுகாண்’
என்னவடா சொல்வேன்? எடுத்தெங்ஙன் பாவிரிப்பேன்?
முன்னர் தமிழ்க்குடி செய் மூண்ட தவப்பயனோ?
வள்ளுவர்தம் வாய்மை வளங்கொண்டு விட்டதுவோ?
உள்ளுவர்தம் நெஞ்சமெல்லாம் ஊற்றாய்ப் பெருகிற்றோ?
நக்கீரன் சொல்துணிவும் நற்கபிலன் பாத்திறனும்
ஒக்க இணைந்தவர்தம் உள்ளத்துப் பொங்கினவோ?
பாண்டியர்தம் பூட்கை பனிமலைக்கண் நின்றிருந்து
மீண்டுமிவர் உள்ளத்தே மின்னலிட்டுப் பாய்ந்ததுவோ?
சோழர் குடிப்பெருமை சோர்ந்தயிவர் நெஞ்சத்தே
வேழப் பெருமுழக்காய் வீறுபெறக் கீண்டதுவோ?
குன்றத்துச் சேரன் குலையாத வில்மறவன்
மன்றத்தே வந்து மறவிதையை நட்டானோ?
யாங்ஙன் பொருள்விரிப்பேன்? யாப்பில் கருத்தெடுப்பேன்?
தூங்காத எந்தமிழர் தோளுயர்த்தி நின்றுவிட்டால்,
ஆழிமுழக் கென்னாகும்? ஆன்றமலை தூளாகும்!
‘வாழிதமிழ்’ என்றொலித்தால் வாரிடியும் மேற்பொடியும்!
மின்னல் முறிந்தொசியும்! விண்கோள்கள் அற்றுதிரும்!
துன்னும் ஐம் பூதங்கள் தோற்றே அடிவணங்கும்!
வெங்கதிரும் நுண்பொடியாய் விண்டுதிர்ந்து வான்சிதறும்!
பொங்குணர்வு விண்ணெல்லாம் போர்த்துப் புடைநிரம்பும்!
ஊழி பெருக்கெடுக்கும்! ஓங்காரம் சங்கார்க்கும்!
நாழி தவறுமோ? என்றே நனிமகிழ்ந்து
திந்தோம்திந் தோமெனவே திக்கெட்டும் கால்தாவத்
துந்துபி பாடத் துடிமுழக்கம் ஆர்த்தெழவே
உள்ளம், உயிர், அணுக்கள் எல்லாமும் ஒக்கநின்று
வெள்ளப் பெருக்கேபோல் வீங்கும் பெரும்புயல்போல்
கற்பனை நெஞ்சம் கரைமீறி ஆர்த்ததுகாண்!
சொற்புனைவால் வல்லுணர்வு சூர்த்தல் விளக்குவதோ?
ஆர்த்தெழுந்த மாணவரை ஆரத் தழுவி, எனை
ஈர்த்த குளிர்தமிழால் இஃதுரைப்பேன்; கேளீர்;
“தமிழியக்கம் காணத் தலைப்பட்டீர்! வாழ்வீர்!
சிமிழ்த்தெழுந்த தொல்மறவக் கூட்டமே, சீர்த்துவரும்
வேங்கைக் குருளைகளே! வல்லரிமாக் குட்டிகளே!
ஈங்கெழுந்த பேரெழுச்சி இந்நாள் பெருமுயற்சி!
வீங்கிநின்ற குன்றத்தோள் வீழாமுன் உள்ளத்தே
தேங்கிநின்ற வல்லுணர்வு தேய்ந்து குறையாமுன்,
செந்தமிழை மேல்நிறுத்தி, சீர்த்த பகையழித்தே
எந்தமிழ்ப் பண்பாட்டை, நாட்டை இடைமீட்க
வேண்டி வழுத்துகின்றேன்! வெற்றிவந்து வாய்த்திடுக!
ஈண்டெழுந்து நிற்போம் இணைந்து!”
1.வாணிகர் என்னுந்தலைப்பில் பாடிய திரு. தமிழண்ணல் பாடற்கு அறிமுகம்
புத்துணர்வு வேட்பாளர்; புலிப்போலும் பாய்ந்துபகை வெல்லும் தொண்டர்! தொத்துணர்வால் பாடிநலம் ஊட்டவல்ல பாவலர்; செந் தமிழ அண்ணல் கத்துகடல் போல்முழங்கித் தமிழகத்து வாணிகரை ஒன்று கூட்டி முத்தமிழ்சேர் நல்லியக்கம் காணுதற்கு முனைந்திடுவார்; காண்போம் இங்கே!
2.அரசியலார் என்னுந்தலைப்பில் பாடிய திரு. நா.காமராசு பாடற்கு அறிமுகம்
செந்தமிழ் காக்கச் சிறைசென்ற வல்லரிமா! இந்திக்கு முன்னம் எரிபுயல்! இன்றே விடுதலை வேண்டுமெனில் வெற்புத்தோள் தூக்கிக் கொடுதலை என்றாலும் கூனாத் தமிழ்மறவன் நற்காம ராசன்! இங்கு நல்லர சாளுநர்க்குப் பொற்பா புனைவான் பொலிந்து!
3.செல்வர் என்னுந்தலைப்பில் பாடிய திரு.காளிமுத்து பாடற்கு அறிமுகம்
தனித்தமிழ்க்குப் பெருந்தொண்டர் தகுகாளி முத்தென்னும் தனிமுத் தென்பார். குனித்தமுது கெழும்வகையில் கூடியுள்ளார் கொளும்வகையில், கொம்புத் தேன்போல் இனித்ததமிழ்ப் பேச்சாளர்; எந்தமிழ்க்கே மூச்சாளர்; இனிமேல் இங்குப் பனித்தமிழில் தமிழியக்கம் பாடிடுவார் செல்வருடைப் பங்கு சொல்வார்!
4.மாணவர் என்னுந்தலைப்பில் பாடிய திரு. மு.இராமச்சந்திரன் பாடற்கு அறிமுகம்
ஈர்க்கின்ற மொழியாலும் இசைத்தமிழின் நயப்பாலும் இணைந்து நின்று
சேர்க்கின்ற மொழிநடையால் சொல்முறையால்செந்தமிழ்ச்சீர் காட்டி இன்பம்
வார்க்கின்ற பாட்டுணர்வில்
வல்ல,திரு.
இராமச்சந் திரன்என் பாரை
ஆர்க்கின்ற மாணவர்தம் தமிழியக்க
அணிசேர்க்க அழைப்போம் இங்கே!
5.இதழாசிரியர் என்னுந்தலைப்பில் பாடிய
திரு சு.ப.முருகபாரதி பாடற்கு அறிமுகம்.
பாவேந்தர் கான்முளையாப் பைந்தமிழ்க்குத்
தொண்டாற்றிப் புலவோர் தம்மைச்
சாவேந்திப் போகாமல் புறங்காத்துத்
தமிழியக்கம் சார நின்று,
மூவேந்தர் தமிழ்காக்கும் சு.ப.முருக
பாரதி வாய் மூண்டு நிற்கும்
பாவேந்தும் இதழாளர் செவிகளோடு
நம்செவியும் பயன்பெ றட்டும்!
தலைவர் முடிவுரை
பாவலர்கள் தமிழியக்கம் பாடக் கேட்டீர்!
பைந்தமிழின் பேருணர்வு கொண்டிருப்பீர்!
ஆவலுறப் பெற்றிருப்பீர்! அகத்தே வாழும்
அன்னைமொழி காத்திடுவீர்! தமிழ்க்கே என்றும்
காவலிருக் கின்றார்கள் தமிழ்மா ணாக்கர்!
கட்டளைக்குக் காத்திருப்பார்! தமிழியக்கம்
மேவலுற வளர்ந்திட்டால் மேன்மை பொங்கும்!
மீமிசைசேர் மாந்தரினம் தோன்றும் இங்கே!
மாணவர்கள், வாணிகர்கள், அரசாள் வோர்கள்
மக்களிடைப் பேசுகின்ற பேச்சா ளர்கள்
மாணொக்கும் இதழாளர் செல்வர் எல்லாம்
மங்காத தமிழியக்கம் வளர்ப்பா ராயின்
தூணெனவே செந்தமிழும் உலக மன்றில்
துலக்கமுறக் கால்கொள்ளும்! வளமுற் றோங்கும்!
வீணரென வாழாமல் பயன்சேர் வாழ்க்கை
விளைத்திடுக! எல்லார்க்கும் விளையும் இன்பம்!
கல்விவல்ல சான்றோர்கள் கருத்தால் காக்க!
கருத்துவளம் மிக்கோர்கள் நூலால் காக்க!
செல்வவள முற்றவர்கள் செழிக்கச் செய்க!
செய்வினைகள் விரும்பிடுவார் பொறுப்பை ஏற்க!
சொல்வளங்கொள் பேச்சாளர் ஊர்கள் தோறும்
சோர்வின்றிப் பொழிந்திடுக! புரிவீ ராயின்
வெல்வழியும் தொலைவிலில்லை! தமிழி யக்கம்
விரைந்துலகில் மறுமலர்ச்சி கூட்டும் நன்றே!