உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 8/005

விக்கிமூலம் இலிருந்து

4. உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு

(தி.பி. 2000 சிலை கங-ஆம் நாள் (28.12.69இல்) பறம்புக்குடியில் நடைபெற்ற
உலகத் தமிழ்க் கழக முதல் மாநாட்டில் நிகழ்த்திய பாட்டரங்கத்
தலைமையுரை)

முன்னுரை:

பெயரா வியற்கைப் பெருவானும், வானத்(து)
அயரா தியங்குகின்ற ஆர்கதிரும் விண்மீனும்
திங்களும் கோளும் திரிகின்ற செம்போக்கும்
எங்குமோர் ஆற்றல் இருக்கின்ற மெய்ம்மையும்
உள்ளத் திருத்தி உறுபொருளை ஆங்கிருத்தித்
தெள்ளத் தெளிந்தநறுந் தீந்தமிழாய் ஊற்றெடுக்கும்
வெள்ளத் துணர்வை விரித்துரைப்பேன்; செம்புலவர்
கொள்ளத் தகுமளவோர் குன்றிமணி ஆனாலும்
செந்தமிழ்த்தாய்க் கேற்ற செழும்பொன் மணியென்றே
எந்தமிழைப் பேண இறைஞ்சி வணங்குகின்றேன்!

பேரறிவு சான்ற பெரியோரே! தாய்மாரே!
ஆர்தலுறும் செந்தமிழ அன்பரீர்! நல்லிளைஞீர்!
பாட்டரங்கம் ஏறவந்த பாவலர்காள்! நும்மை - தமிழ்ப்
பூட்டறுக்க வந்தவர்போல் போற்றிவர வேற்கின்றேன்.
செந்தமிழைப் பாடுதற்குச் சேர்ந்தொருங்கே வீற்றிருப்போம்
எந்தமிழை நாம்பாட என்னதிறன் பெற்றுவிட்டோம்?
அன்றுதிரு வள்ளுவனார் ஆன்ற திருக்குறள்போல்
ஒன்று செய்ய வல்லோமா? ஓங்குயர்ந்த நற்சிலம்பு
மேகலைபோல் தெய்வத் திருமூலர் மந்திரம்போல்
சாகாப் பெருநூல்கள் சாயலிலே நாமொன்று
செய்திறன் பெற்றோமா? இல்லெனினும் செந்தமிழ்க்கே
வெய்யபகை தானும் புறத்தே வெருட்டினமா?

செந்தமிழ்க்கு வந்தபகை மாய்த்திடவே சேர்ந்தமெனத்
தொந்தோம்தொந் தோமெனவே துள்ளிக் குதிப்பதல்லால்
எந்தப் பகைகளைந்தோம், எல்லாரும் உட்பகைத்தோம்!
சொந்த நலங்கண்டோம்; சொந்த இனமறந்தோம்!
வாழ்கதமிழ் வாழ்கதமிழ் என்றபடி வாழ்த்திவிட்டு
“வாழ்வதற்கே என்ன வகைகிடைக்கும்” என்றெண்ணி
நன்மை கிடைக்குமெனில், நாற்காசு சேருமெனில்,

புன்மையொடு புன்மை புகுவதுபோல் தொண்டுசெய்யப்
போகின்றோம் நாமும்; புதுமையென்ன நாட்டிவிட்டோம்!
ஆகும் வினையில் அணுவளவும் செய்தோமா?

எத்தனையோ கட்சி, கழகமென்றும் மன்றமென்றும்
எத்தனையோ பேச்சு! எழுத்தெல்லாம் தீப்பறக்கும்;
எத்தனையோ தீர்மானம்! எத்தனையோ மாநாடாம்!
அத்தனைக்கும் இன்னபயன் என்றே அளந்துரைக்க
யாரேனும் உள்ளாரா? யாக்கைக்கு மெய்யென்று
கூறி அழைத்ததுமே கூற்றை உதைத்துவிட்டோம்
என்ற தருக்கும் செருக்கும் இருக்கட்டும்!
இன்றளவில் நாம்கண்ட தென்ன அளவிருக்கும்!
பொய்மூட்டை ஒன்றால் புளுகுமூட் டையல்லால்
மெய்மூட்டை என்ன விளைவிருக்கும், மேதகையீர்!

நாடெல்லாம் மாநாடு! நாள்தோறும் பாட்டரங்கம்!
வீடெல்லாம் ஊரெல்லாம் வெற்றி விழாக்கூட்டம்!
வானொலியில் பாட்டரங்கம்! வாய்கிழிக்கும் சொல்லரங்கம்!
வீணுக்குக் கைத்தட்டல்! வீழ்கின்ற பூமாலை!
“ஆகாகா! செந்தமிழ்க்கே ஆக்கமிது ஆக்கம்” எனும்
வேகாத பேச்சுகள்! வீழ்த்துகின்றோம் பல்கோடி!

நீண்டதொரு துண்டு! நிலம்பெருக்கும் மெல்வேட்டி!
ஆண்ட தமிழ்ச்சொல் அடுக்கிவைக்கும் சொற்சுவர்கள்!
என்னே தமிழ்வளர்ச்சி! என்னே புகழ்மாலை!
என்னே தமிழன் இருந்தநிலை! - என்றுரைத்துத்
தம்முதுகில் தாமே தடவித் தருங்காட்சி!
அம்மவோ! ஒன்றிரண்டா! அன்றாட வாழ்க்கையிது!

இன்றிந்தச் சூழலில்தான் நாமும் இருந்துகொண்டு
வென்று குவிப்பதுபோல், வெற்றிபல சாய்ப்பதுபோல்
பாட்டரங்கம் கூட்டிவிட்டோம்; பாடுகின்ற நேரமிதா?
நாட்டரங்கில் நம்பெயரோ நல்லடிமை! நாம்கொண்ட
வல்லடிமைத் தன்மைக்கு நல்லுணர்வு வந்துவிட்டால்
இல்லடிமை நீக்கி எழுந்ததோள் தாழுமுன்னர்
வேட்டரங் கங்காண வேண்டுமல்லால் இஃதைப்போல்
பாட்டரங்கம் பாடிப் பயனென்ன பைந்தமிழீர்!

பாவேந்தர் போர்ப்பாட்டுப் பாடியது போதாதா?
மூவேந்தர் கூட்டிவைத்த முக்கழகம் போதாதா?
எல்லாம் இருந்தும்நாம் இன்னுமெழ வில்லையெனில்
நல்ல அடிமைநலம் நாம்சுவைத்து வந்தகுறை!
இன்றுமுதல் நாம்செய்யும் எந்தவினைப் பாட்டுக்கும்
ஒன்று, பயன் வேண்டும்; இன்றேல் ஊமைத் தனம் வேண்டும்!
“பாட்டரங்கம் கேட்டவொரு கோழை புடைத்தெழுந்தான்;
நீட்டுவாள் தூக்கியவன் நெற்றிக்கு முன்னிறுத்தி
ஏடா தமிழ்ப்பகையே! என்னநீ சொல்கின்றாய்!
கூடா? உயிரா? எதுவேண்டும் கூறென்றான்”.
என்றோர் கதைநிகழ்ந்தால் இத்தகைய பாட்டரங்கால்
முன்னோர் விளைக்கா முழுப்பயனும் வாய்த்த தென்பேன்!
அவ்வுணர்வை ஊட்டாத பாட்டாலே ஆவதென்ன?
இவ்வரங்கும் அந்த எழுச்சியிலோர் எள்முனையே!

இக்கால் இலக்கியமும் சொற்பொழிவும் எங்ஙனென்றால்
முக்காலும் பொய்ப்படியில் மூழ்கிக் கவிழ்த்தளந்து
மெய்யாய் அளந்தமென மெய்யடித்துச் சொல்லுவதாம்!
உய்யாது நின்றென்ன? உய்ந்தென்ன? போயென்ன?
நம்பிழைப்பு நன்றாய் நடந்துவரும் என்றாலோ
கும்பிக்குக் கேடில்லை என்றறிந்து கொண்டாலோ
எப்படியும் பாடலாம்! எப்படியும் பேசலாம்!
எப்படியும் தாளில் எழுத்தெழுத்தாய்த் தீட்டலாம்!
அப்படியே நாமுமதை ஆமாமாம் என்றுசொல்லி
ஒப்படிக்கு மேல்படியில் ஒன்றிரண்டு மேலேறி
நின்றால் பிழைக்கலாம்; நிற்கவில்லை என்றாலோ
என்றுமே ஏற்றம் இருக்காதே! இன்றெல்லாம்
மானத்தை விட்டால் மறுநொடியில் நற்பதவி!
ஏனம் நிறைய, இடுகின்ற வாய்நிறைய
வெண்சோறு! வெள்ளைஉடை! வேளைக்குப் பால்பழங்கள்!
மண்தரையில் கால்படுமா? போக மகிழுந்து!
வேறென்ன வேண்டும்? தமிழால் எதுவேகும்?
சேறு குழம்பிடுமா? செந்நெல் விளைந்திடுமா?
ஆகவே தமிழ்வளர்ச்சி என்பதெல்லாம் ஆர்ப்பரிப்பே!
ஈகம் பொதுத்தொண்டிங் கென்பவெல்லாம் ஏய்ப்பதுவே!
இன்றைக் கிருக்கும் நிலையிதுவே! இந்நிலையிற்
குன்றைத் தகர்க்கக் குறிவைத்துப் பாடுகின்றோம்!
பொய்புளுகு மூட்டைகளைப் பொத்தலிட்டுப் பார்க்கின்றோம்!
செய்பயனை நம்பியுள்ளோம்! செல்வத்தை எண்ணவில்லை!

தன்னறிவும் தன்திறனும் அல்லால் துணையில்லை
முன்னறிவும் உண்டெனினும் உட்பகையும் மூள்வதுண்டாம்!
ஏதோ முனைந்துவிட்டோம்! ஏதோ இணைந்து விட்டோம்!
காதோடு காதாகக் கசமுசப்புக் கேட்டாலும்
ஒன்றுபட்டு விட்டோமென் றூர்முழங்க வந்து விட்டோம்!
நன்றுபட வாழ்வோம்நாம்; அல்லால் நயந்திரவோம்!

எங்களுடை வாழ்வும் இனிமேல் வருஞ்சிறப்பும்
தங்குதமிழ் ஒன்றே! தனித்துணையும் அஃதொன்றே!
எங்கள் தனிக்குலமும் எங்கள் பெரும்புகழும்
மங்காத் தமிழ்ஒன்றே! மாயாத வாழ்வதுவே!
அந்தத் தமிழே அனைத்துச் சிறப்புக்கும்
உந்துகின்ற வல்விசையாய், ஊறும் அரத்தமாய்
நாடி நரம்பாய், நலமிக்க ஊன்தசையாய்
ஆடி அசைக்கும் அரசாணைக் கொம்பொலியாய்
வீற்றிருக்கக் காண்கின்றோம்! வேறியக்கம் கண்டதில்லை;

மாற்றுரைகள் கேட்டதில்லை! மண்ணில்வே றாக்கமில்லை;
வாழ்க்கைவே றில்லை; வளத்துக்கு வாய்பிளக்கோம்!
பூழ்க்கைப் புகழ்ச்சிக்குப் பொக்காய்ப் பறந்துவரோம்!
செல்வம் செருப்பு! சிறப்புக்குச் செக்காகோம்!
வெல்வ துறுதி! விளை(வு)அதற்கு மேலுறுதி!
அந்த உறுதிக் கணிவகுத்த பாவலர்யாம்!
எந்தப் புகைக்கும் பகைக்கும் இடமில்லை!

எந்தமிழின் ஏற்றம் எடுத்துரைக்க வந்தோம்யாம்!
செந்தமிழின் எண்மைச் சிறப்புரைப்பார் எண்புலவர்!
இந்தவுல கத்தரையில் ஏந்தும் மொழிக்கெல்லாம்
செந்தமிழே தாய்மைச் சிறப்புப் பெறுவதுவாம்!
செந்தமிழே தூய்மைச் செழுமை பெறுவதுவாம்!
செந்தமிழே நல்லினிமை சேர்ந்து வழங்குவதாம்!
செந்தமிழே வேறு கலவாத் தனிமையதாம்!
செந்தமிழே என்றும் புதுமை சிறப்பதுவாம்!
செந்தமிழே என்றும் பழமை திகழுவதாம்!
செந்தமிழே சொல்வளமை சேர இயல்வதுவாம்!
செந்தமிழே நல்லிளமைச் செவ்வி கொழுவியதாம்!

அந்த வகையெல்லாம் அறிவும் அழகுமிகக்
கூறி உணர்வு கொளுத்துவதற்கே பாப்புலவர்

ஏறி இருக்கின்றார் பாட்டரங்கம்! இன்னோர்
உரைக்கும் தமிழ்ப்பாட்டில் உண்மை இருக்கும்!
கரையற்ற நீர்க்குக் கரைபோல யாப்பிருக்கும்!
இன்பத் தமிழிருக்கும்! ஏற்றம் குறைந்தார்க்குத்
தென்பிருக்கும்! சொல்லில் தெளிவிருக்கும்! நீங்களெல்லாம்
கேட்கின்ற பாட்டரங்கில் கேளாச் சுவையிருக்கும்!
வேட்கின்ற செந்தமிழும் வீறிவரும் நல்லுணர்வும்
சொல்லுக்குச் சொல்லிருக்கும்! சொல்லில் பொருளிருக்கும்!
பல்லுடைக்கும் எங்கள் தனித்தமிழ்தான் என்பார்க்கே
ஏற்ற மருந்திருக்கும்! எம்வழியில் அன்னவரை
மாற்ற வகையிருக்கும்! மற்றவர்க்கும் வாய்ப்பிருக்கும்!
மற்றே இனியிருக்க வேண்டுவதென் னென்றாலோ
சற்றேனும் நீங்கள் அமைந்துசெவி சாய்ப்பதுவே!

பாவலர்கள் பாடி முடித்தவுடன் பாட்டரங்கில்
ஆவலுடன் நீங்கள் அமைதியுடன் வீற்றிருந்தால்,
பின்னுரையில் செந்தமிழர் பீடுறவே இன்றுவரை
மன்னுந் தமிழ்மொழியின் மாண்புரைக்க எண்ணுகின்றேன்.
அன்பர்கள் எல்லாம் அமர்ந்திருக்க வேண்டுகின்றேன்.
இப்பொழுது செந்தமிழின் எண்மைச் சிறப்புரைக்க
ஒப்பும் புலவோரை ஒவ்வொருவ ராய் அழைப்பேன்.
முப்பாலும் ஆய்ந்த முதுபுலவோர் வீற்றிருக்கத்
தப்பாமல் வாழுந் தமிழ்!

பின்னுரை:

பாவலர்கள் எல்லாரும் பைந்தமிழைப் பாய்ச்சி விட்டார்;
நாவளங்கள் காட்டிவிட்டார்; நல்லுணர்வைத் தூண்டி விட்டார்!
செந்தமிழின் எண்மைச் சிறப்பினையும் பாடலுற்றார்
எந்தமிழ்க்கே மேலுஞ்சீர் ஏற்றிவிட்டார்; உங்களொடு
யானுஞ் செவிமாந்தி இன்பத்தில் ஆழ்ந்திருந்தேன்!
தேனருவி பாய்ந்ததுபோல், தீங்குழல்யாழ் நல்லிசை போல்
பாட்டருவி ஆடினோம்! ஆதலினால் பைந்தமிழீர்
நாட்டும் முடிவுரையும் நாகம்போல் காதுபுகும்!
ஆனாலும் சிற்சிலசொல்! ஆங்கொருவர் ஈங்கொருவர்
போனாலும் போகட்டும்! போக்கற்றார் கேட்கட்டும்!
முன்னுரையைக் கேட்டு முடிவுரையைக் கேளாதார்
என்ன பயனும் இலராகச் சென்றிருப்பார்!
செந்தமிழின் எண்மைச் சிறப்புரைத்த பாவலர்கள்

தந்த கருத்தில் தாராத சிறப்புசில
காட்ட விருக்கின்றேன்; காதலினால் இஃதுரைப்பேன்
நீட்டுகின்றேன் என்றாலும் நேயமொடு கேட்க!

தாய்மை

இமிழ்கடல் நல்லுலகின் இற்றை இயல்பால்
தமிழ்க்கன்று; மங்கையர்க்கே தாய்மைச் சிறப்பில்லை.
கன்னியரும் வந்து கருத்தடைசெய் காலமிது!
மன்னுதமிழ்த் தாய்மை மறுக்கா திருப்பாரோ?

செந்தமிழ்த்தாய் வாய்த்தபெருந் தாய்மைச் சிறப்புரைக்கின்
இந்தியா ஆசியா ஏர்ந்த அமெரிக்கா
தென்கிழக்குத் தீவுகள் யாவிலுமே தேர்ந்தபசும்
பொன்கொழிக்கும் நாகரிகம் ஒன்று புலர்ந்ததுண்டே!
அக்காலம் இற்றைக்கே ஆறா யிரமாண்டு
முற்கால மாகும்! முதல்மாந்தக் கூட்டத்தின்
கற்கால மாகும்! கழிந்த சுமேரியத்தும்

பொற்பழிந்த டைகரிசு யூப்பிரடீ சாற்றிடையும்
வாழ்ந்திருந்த மக்கள் வழங்கிநின்ற பேச்சினிலே
செந்தமிழும் வாழ்ந்த சிறப்பைஎவ் வாறுரைப்பேன்.
அந்தமிழே தாயாய் அனைத்து மொழிக்கெல்லாம்
வாய்ந்ததென்று கூறும் வரலாற்றை யார்மறுப்பார்?
தாய்த்தமிழை எண்ணித் தருக்குவதால் என்னபிழை?

ஈரா யிரத்திருநூ றாண்டுக்கு முற்பட்ட
ஆரியர் வேதத்தும் சாயம், தா, முத்தென்னும்
சொற்கள் உளவென்றால் சொல்வதெவர் இல்லையென்று?
முற்கால பாபிலோன் மூத்த எபிரேயம்
நல்ல எகுபதியம் நண்ணும் அரபிமொழி
இன்னவற்றில் எந்தமிழ்ச்சொல் ஏற்றம் விளைத்த தென்றால்
அன்ன திலையென்பார் ஆர்?

(வேறு)


குப்பா என்பது ஜிப்பா என்றும்
கூலி என்பது ஒலிமா றாமலும்
ஞாலம் என்பதோ ஆலம் என்றும்
நீலம் என்பது நீலா என்றும்

கதம் என்பது கடப் என்றும்
நெருப்பு என்பது நபிர் என்றும்
அராபி மொழியில் வழங்கிய ஆட்சியும்,

அப்பன், செவ்வை, அம்மை, மெத்தை,
ஊர், பழம், சாய், மாறு என்பன முறையே
ஆப், ஷாவாஹ் ஏம், மித் தாஹ்” என்றும்
ஆர், பெரி, ஷா, மூர் ஆகவும் திரிந்தே
அற்றை எபிரேயத் தின்தமிழ் ஆட்சியும்
அது- தெ;இரு- சுர்;தா-து; மனை-மென்;
செம்மை-சென்ப்;மாத்திரை-மெத்தர்;
நக்கு-லெக்கு;வாரி-மெர் என்றும்
பண்டை எகுபதில் பைந்தமிழ் ஆட்சியும்
தமிழின் தாய்மையைக் காட்டும் அன்றோ?

இன்னும்
ஆப்பிரிக்கா அடுத்த நாடுகள் அனைத்திலும்
மூப்பற வழங்கும் செமிதிக் இனமாம்
அரமியம், கல்தேயம், சீரியம், பெர்சியம்,
அசீரியம், சுமாரித்தம், பொனிசியம் என்னும்
மொழிகளும் அவற்றின் கிளைமொழி தாமும்

ஆசி யாவில் தென்பால் வடபால்,
பகுதியில் வழங்கும் துரானிய இனமெனும்
தைக்கம், மலாயம், காங்கையம், முண்டா,
பர்மியம், சிங்களம், துருக்கியம், சீனம்,
பின்னிய மொழிகளும் கிளைமொழி தாமும்

இக்கால இந்திய வடபால் வழங்கிடும்
ஒரியா, சிந்தி, வங்காளி, அசாமி,
பலுசியம், மராத்தி, பஞ்சாபி, கூர்க்கம்,
கோட்டு, கோண்டு, கூய், ராசு மகாலி,
மாலடா, காசுமீரி, நேபாலி
என்னும்
மொழிகளும் இவற்றின் கிளைமொழி தாமும்

தாய்த்தமிழ் பெற்ற சேய்மொழி என்ப,
ஆய்மதி மொழியியல் அறிஞர் தாமே!

தூய்மை:

எந்தமிழ்த் தூய்மையை எடுத்துப் பேசின்
செந்தமிழ் உணர்வு சிலிர்சிலிர்த் தோடும்.
ஏறத் தாழ மூவா யிரமாண்(டு)
ஊறிக் கிடந்த வடமொழி உணர்வினால்
மாறிக் கிடக்கும் தமிழனின் மனத்துள்
ஏறி மிதித்தது ஆங்கிலர் ஆட்சி!
பிற்கால் பிரஞ்சும் அதனொடு சேர்ந்தது.
போர்த்துக் கீசியம் அதன்பின் புகுந்தது.

மொகலாயர் ஆட்சியில் உருது முளைத்தது.
தகவுடைத் தமிழன் தமிழினை மறந்து
கலப்படத் தமிழினில் கால்கைப் பிடித்துப்
பிழைப்பை நடத்தினான். அதற்குப் பின்னரும்
தமிழ்தன் தூய்மையில் துளிகெட விலையெனின்
அமிழ்தென இதனை, அறைவதும் தவறோ?

இத்தனைக் கலப்பினை ஒருமொழி ஏற்றால்
இத்தனைக் காலத்து உருவம் இராது.
செந்தமிழ் முனைந்தால் இன்றையும் செழிக்கும்!
இந்திமற் றில்லைவே றெந்த மொழியொடும்
தூய்மை கெடாது துலங்குதல் தமிழே!
நோய்மை புகுத்திடில் தனித்தமிழ் நொடியும்!

சத்தியம் என்பதை உண்மை வாய்மை
மெய்ம்மை எனமூன்று சொற்கள் முழங்கும்!
ஊர்ஜிதம் நீங்கிடில் உறுதி உண்டு!
உபதேசம் போயின் அறிவுரை உண்டு.
அநுபவம் என்பதைப் பட்டறி வடக்கும்.
அகங்கா ரத்தினைச் செருக்கு நீக்கும்.
இரேகை போனால் வரைநின் றிலங்கும்
இரகசியம் தன்னைக் கமுக்கம் காத்திடும்
எடுத்துக் காட்டுண்டு, உதாரணம் ஏகின்!
பரிசுத்தம் போனால் துப்பரவு ஆகும்.
பிறமொழிக் கலப்பை இன்று பிரிக்கினும்
உரமொழி, தூய்மை யுறுமொழி தமிழ்போல்
உலகினில் வேறெதும் இல்லென உணர்வீர்.

இனிமை:

இனிமை என்பது தமிழின் மறுபெயர்
“இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு
இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது.”


- என்பார் பாவேந்தர்.
இன்பத் “தமிழ்போல் இனிதாவ தெங்கும்
காணோம்” என்பார் பாவலர் பாரதி!
தனிப்பால் கசக்குமோ? புளிக்குமோ தனித்தேன்!
தனித்தமிழ் அவைபோல் தருவது இனிமையே!
தனித்தமிழ் புளிப்பெனல் நாவினது தவறே!
ஒன்றால் அவன்நா ஒருமொழிக் கடிமை!
அன்றால் அவனுடை மனமயக் காகும்!
அதுவும் இல்லெனின் அறிவுச் செருக்கால்
புதுவது நயக்கும் புன்மையால் மொழிவான்!
மொழி இனிமையா? பாஷை,லாங் வேஜா?
முதுமை இனிமையா? வயோதியம் சுவையா?
மனைவியா தாரமா? மங்கையா ஸ்திரியா?
 நாம் தேயமா?‘நேமா’ பெயரா?
உறவு இனிமையா? பந்துகள் வேண்டுமா?
அறமன் றம்மா? நியாய ஸ்தலமா?
இளமை இனிமையா? யௌவனம், யூத்தா?
குளிர்ந்த நீரா? தூத்தமா? ஜலமா?
உலகியல் இனிமையா, லோகா யதமா?
கலைமகள் இருக்கையா, சாரதா பீடமா?
மந்தமா ருதமா? நல்லிளந் தென்றலா?
அந்தமா, முடிவா? ஆதியா முதலா?
அங்கயற் கண்ணியா; மீனலோ சனியா?
பங்கஜம் பத்மமா? தாமரை முளரியா?
ஜனநா யகமா, மக்க ளாட்சியா?
மனம், உளம்
இனிமையா? ஹிருதயம் நன்றா?
ராஜாதி ராஜனா, மன்னர் மன்னனா?
ஜேஷ்ட புத்திரனா, மூத்த மகனா?
பேறு
இனிமையா? பிரஸவம் இனிமையா?
விவாஹக் கிரமமா? திருமண முறையா?
வேண்டு கோளா, விக்ஞா பனமா?
விஜயமா வருகையா? விருக்ஷமா மரமா?
புஜமா தோளா? புஷ்பமா மலரா?
மயூரமா மயிலா? மார்க்கமா நெறியா?

விரைவா ஜல்தியா? விசாரணையா உசாவலா?
வருஷமா ஆண்டா? வருகையா ஆஜரா,
ஸ்நானமா குளிப்பா? ஸ்நேகமா நட்பா?
திவ்வியம்
தேவையா? இனிமை தேவையா?
இவ்வகை தொடர்ந்தே? இயம்பிப் போகலாம்.
எனவே அன்பரீர் இனிமை என்பது
கனவோ நனவோ அன்று, தனித்தமிழ்
தனிச்சுவை பொதுளத் தான்நடப்பதுவே!

தனிமை:

தனிமை என்பதும் தமிழ்மொழிச் சிறப்பே!
பனிமலை வரையே பரவிய மொழிகளுள்
இராச மாலம் குடகம் கோண்டு,
மகா ராட்டிரம் கூர்க்கம் இவற்றொடு
தெலுங்கங் கன்னடம் துளுமலை யாளம்
முதலிய திரவிட மொழிகள் பிரியினும்
தனித்து நிற்கும் தமிழ்மொழி போல
இனித்த மொழியினை எங்ஙன் காண்குவம்?

புதுமை:

புதுமை பேசலும் பொதுமை கூறலும்
மதுநிகர் தமிழ்க்கலால் மற்றதற் கியல்வதோ?
மூலத் தனிப்பெயர் எதுவானாலும்
கோலத் தமிழில் கூறுதல் புதுமையே!

புகைவிடும் வண்டியைப் புகைவண்டி என்றது
பகையினாலா? புதுமையின் பயில்வா?
மிளகுபோற் காயை மிளகாய் என்றதும்
அழகுக் காகவா? புதுமையின் ஆய்வா?
இன்னும்
உருளைக் கிழங்கும் உந்து வண்டியும்
கருத்தடை, புகைப்படம், நாடாப் பதிவு,
திரைப்படம், வானொலி, அச்சு, தட்டச்சு,
இரையொலி பெருக்கி, இசைத்தட்டு, அஞ்சல்,
தொலைபேசி யோடு தொலைவரி, காட்சி,
வானூர்தி மற்றும் உந்தம், மதிவண்டி,
வேதியல், விளங்கியல், விலங்கியல் யாவும்

புதுமை நோக்கினால் புலர்ந்த சொற்களே!
எதுமுடி யாதென எவர்தாம் இயம்புவார்?
ஆரியப் பார்ப்பான் அப்படி மொழிந்தால்
சீர்சால் தமிழனும் சேர்ந்து மொழிவதா?


பழமை:

புதுமை என்பதால் தமிழ்மொழிப் பழமை
கதையெனக் கதைப்பதா? கதைப்பது நாமா?
ஆரியக் கதைப்புக் களவொன் றேது?
பூரியர் பொய்யைப் புராணங்கள் கூறும்.
தென்தமி ழகமே மக்களின் தொட்டில்!
அந்தமிழ் பிறந்து ஐம் பதாயிர மாண்டுகள்
ஆயின என்பதை அறிஞர்க் கறிஞர்
மொழிநூல் முதுவர் பாவாணர் மொழிவர்.
பழமைக்கும் பழமையாய்ப் பைந்தமிழ் வாழ்வதைக்
கிழமையால் தமிழ்மொழிக் கிளர்வினால் அன்று,
நுண்மாண் நுழைபுல வன்மையாற் கண்டார்!
பன்மொழி யறிஞரும் பகர்ந்த கூற்றிது.
‘உணர்ச்சி மிகுதியால் உரைப்பதால், தமிழர்
அறிவிற் குறைந்தவர்’
என்று மொழிவார்
சட்டர்சி என்னும் வடமொழிச் சார்பினார்.
திட்டமாய் அவர்க்குத் தெரிவித் திடுவோம்;
உணர்ச்சி உள்ளவர் தமிழர் என்றால்
உணர்ச்சி யற்ற உருவமா சட்டர்சி?
‘உணர்வது உடையார் முன்சொலல்’
என்று
நுணங்கிய அறிவினார் வள்ளுவர் நுவன்றது
அறிவிலை என்றே அவர்மொழி வாரா?
செறிவிலா துரைப்பது செப்பமென் பாரா?
சட்டர்சி போன்ற வடமொழி அடிமைகள்
இட்டதே சட்டம் இயன்றதே உண்மை
என்பது அரசியல் ஏற்றத்தால் வந்தது.
தின்பதற் கேதேனும் சொல்ல வேண்டுமே!

வளமை:

அடுத்தது வளமை!
வளமை என்பது தமிழ்க்கே வாய்த்ததாம்.

அளவறப் பரந்து விரிந்துயர் ஆல்போல்
அகற்சியும் விரிவும் கொண்ட தாகையால்
நுகர்ச்சி தமிழர்க்கு நுண்ணிய தெனவே
ஒருசொல் பலபொருள், பலசொல் ஒருபொருள்,
அருமைத் தமிழில் ஆயிரம் உண்டு!
தமிழில் உள்ள ஓரெழுத்து மொழிபோல்
இமிழ்கடல் உலகில் யாங்கணும் இல்லை.
ஏறத்தாழ அறுபத்து நான்காம்
ஓரெழுத்து மொழிகள் தமிழில் உண்டே!
ஆ, ஈ, ஐ, கா, கூ, கோ, கை, தை
மே, மூ,யா, மோ, வீ, வா, தா, வை
மா, மை, பை, தே, போ, மீ, நா, நீ

எனவரும் சொற்களை எண்ணிப் பார்மின்!
புல்லைப் ‘பிடுங்கு’ எனல், பூவைக் ‘கொய்’ எனல்
வல்ல காயைப் ‘பறி’ எனல் வழக்கு.
உலகம் அளாவிய ஆங்கிலத் துரைத்தால்
‘பிக்’ கெனும் ஒருசொலே மூவிடம் பயிலும்
திக்கெலாம் பரவிய ஆங்கில மொழியில்
காய்க்கென ஒருசொல் இல்லெனக் காண்க.
சோறாய் வெந்ததை அரிசி யாய்ச் சொல்லுவர்!
எந்தமிழ் மொழியில் சொற்சோர்வு இல்லை;
செந்தமிழ் என்றும் செழுந்தமிழ் என்றும்
கொழுந்தமிழ் என்றும் தமிழையே கூறுவர்;
யானையைக் குறிக்க முப்பத் தெண் சொல்!
ஆன ‘மது’விற்கோ அறுபது சொற்கள்!
‘சூரிய’னுக்கு இருபத்து இரண்டு!
மூரி ‘முகிற்’குப் பத்தொன் பதுசொல்!
உளை, நவிர், குடுமி, பித்தை, ஓரி
தளை, குழல், குஞ்சி, கார், முடி, தொங்கல்
பங்கி,
எனவரும் பன்னிரு சொற்களும்
தங்கும் ஆடவர் தலைமயிர் குறிக்கும்!
குருள், குழல், ஓதி, கூழை, கூந்தல்
குரல், ஐம் பாலொடு, மராட்டம், அளகம்

ஒன்பதும் பெண்டிர் தலைமுடிப் பெயர்கள்!
பின்னகம், முச்சி, கொண்டை, சிகழிகை
கொப்பம்; தம்மிலம், பந்த
மென் பனஅவர்
குழல்புனை பெயர்கள்! இன்னும் கூறுவேன்.
தும்பி, மா தங்கம், தூங்கல், கறையடி,
உம்பல், எறும்பி, வாரணம், புழைக்கை

தோல், வல் விலங்கு, நாகம், கும்பி
நால்வாய், பூட்கை, குஞ்சரம், அத்தி
வேழம், கரி, உவா, கைம்மா, சிந்துரம்
களிறு, இபம், வயமா, கைமுகம், புகர்முகம்
தந்தி, மதாவளம், கயம், பகடு, ஒருத்தல்
வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா
மாதிரம், போதகம்,
என்பன யானையின்
புதுப்பெயர் அல்ல! பழந்தமிழ்ப் பெயர்கள்!
ஒவ்வொரு பெயரும் யானையின் பண்புகள்!
எவ்வொரு மொழியில் இருந்ததிவ் வாறு?
அவ்வள வானே அமர்ந்திலர் தமிழர்.
தால வட்டம் - என்பது யானைவால்!
வேசகம் என்பது - யானை வால்நுனி!
யானையின் முதுகை மஞ்சு என மொழிவர்.
யானை மத்தகம் - கும்பம், மதகம்!
யானை மதம்பாய் கவடு - கரடம்!
யானைக் கைந்நுதி - புழைக்கை யாகும்!
கடம், கடாம், தானம் என்ப ததன்மதம்!
கோடும், எயிறும் - யானைக் கொம்புகள்
நிரியாணம் - என்பது யானையின் கடைக்கண்
யானைச் செவியடி - சூளிகை ஆகும்.
கவுள் - கதுப்பு; உமிழ்நீர் - விலாழி.
யானைப் பல்லடி - கரீரம் ஆகும்.
துதிக்கை - தொண்டை, தொண்டலம், சுண்டை!
வடவை, அத்தினி, கரிணி, பிடி - பெண்ணே!
கயந்தலை, போதகம், துடியடி, களபம்
கயமுனி என்பன யானைக் கன்றுகள்!
கடகம் என்பது யானைக் கூட்டம்.
யானைப் படுகுழி பயம்பு - எனப் பகர்வர்.
பாகலம் என்பது யானைக்கு வருநோய்!
அம்மவோ! எத்தனை அருந்தமிழ்ச் சொற்கள்
எம்மருந் தமிழில் எத்துணை வளமை!
சொல்லிலை என்பான் சோம்பேறி யல்லனோ!
பல்லெலாம் எண்ணுக யானையின் பெயர்க்கே!
எந்த மொழியில் இத்தனைச் சொற்கள்?
அந்த மொழியைத் ‘தென்மொழிக்’ கனுப்புக!
யாவரும் கற்றிட யானே வேண்டுவேன்!
ஆவலால் முந்தி அதனைக் கற்கலாம்!
முத்தமிழ் மொழிவளம் மூங்கிலும் உரைக்கும்!

முந்தூழ், பாதிரி, முடங்கல், காம்பு
ஆம்பல், வேழம், அரி, அமை, திகிரி
தூம்பு, வேய், தட்டை, துளை, வேல், வேரல்
கிளை, கழை, விண்டு, பணை, வரை, வெதிரி

என்பன மூங்கிலின் இன்றமிழ்ப் பெயர்கள்!
கன்னி மொழியில் காடு அறு நான்குசொல்!
மரங்களில் ஆண்பெண் மரபு தெரியுமா?
கருங்காலி முதலிய வன்மரம், ஆண்கள்.
தெங்கு, பனை, மூங்கில் வன்புல், பெண்கள்,
முருங்கை முதலிய அலிமரம் என்பர்,
அகக்காழ் உற்றன ஆண்; பெண் புறக்காழ்!
தொகவெளி றுற்றன எல்லாம் அலிமரம்!
எத்துணை மொழிவளம்! எத்துணை அறிவு!
எத்துணை மெய்யுணர் விருந்த தமிழ்மொழி!

இளமை:

வளமை உடைய தமிழ்கண் டீர்கள்
இளமை உடைய தமிழைக் காட்டுவேன்.
ஆயிரம் இரண்டொடு முந்நூறாண்டுகள்
வாயுரைக் கெளிதெனின் வரையறை நீண்டது.
தொல்காப் பியத்தின் தொன்மை அதுவென
பல்கால் ஆய்ந்த பாவாணர் உரைப்பார்.
அத்துணைப் பழமை வாய்ந்தஅந் நூலில்
வந்த சொற்களில் பலஇற வாதன.
‘விளிம்பு’ம் ‘தொகுதி’யும் ‘உடைமையும்’ போன்ற
இளமைச் சொற்கள் எண்ணி றந்தன.
‘தந்தையர் ஒப்பர் மக்கள்’ எனும்வரி
முந்தைத் தமிழ்வரி! முதிரா இளமை
பொருந்திய சொற்கள் இன்றும் பொருந்துவ.
முதுமொழி விளக்கிய நூற்பா ஒன்று.
“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி”
- என்பது
நூற்பா வாகும்! இன்று நுதலினும்
வேறுபொருள் பெறுமோ? வேறொன்று காண்மின்,
“சூத்திரந் தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
யாப்பினுன் தோன்ற யாத்து அமைப் பதுவே”
- சாசர் காலத்து ஆங்கிலம் வேறு!
சாக்சா னியரின் ஆங்கிலம் வேறு.
சேக்சு பிரியரின் ஆங்கிலம் வேறு!
இக்கால் மொழிந்திடும் ஆங்கிலம் வேறு!
துளசி தாசர் எழுதிய இந்தியும்
வழங்கும் இந்தியும் வேறு வேறு!
ஆனால் தமிழில் அப்படி இல்லை.
மேனாள் எழுதிய புறப்பாட் டிதுவாம்!
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”
சொற்கள் எத்துணைத் தெளிவொடு தோன்றின.
இக்கா லத்துப் பாடல் போல
எத்துணை இளமையோ டுள்ளது பாடல்!
எனவே தமிழரீர்! இதுவரை ஆற்றுப்
புனலோட் டம்போல் தமிழ்நலம் பயின்றோம்.
இன்பத் தமிழின் எண்மைச் சிறப்பைத்
தம்பாத் திறமையால் பாவலர் தந்தனர்.
நம்மருந் தமிழை நாடிப் புகுந்தால்
செம்மைப் பண்பின் சிறப்புகள் தெளிவீர்!
மொழிநலம் ஒன்றே தமிழரின் முனைப்பாம்!
மொழிநலங் குன்றின் தமிழன் முடங்குவான்.
அறிவிய லுக்கென ஆங்கிலம் படிக்க!
நெறியெனும் வாழ்விற்குத் தமிழ்வழி நிற்கெனக்
கேட்டுக் கொள்ளுவ தோடு
பாட்டரங் கினையுமென் பாட்டையும் முடிப்பனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_8/005&oldid=1858574" இலிருந்து மீள்விக்கப்பட்டது