உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 8/007

விக்கிமூலம் இலிருந்து

6. பாவேந்தர் பாரதிதாசன்

(காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 9.2.73இல் நடைபெற்ற
முத்தமிழ் விழாப் பாட்டரங்கில் பாடியது)

பாப்புலவர் தந்திறமை பாடும் அரங்கிற்கு
மாப்புலவ ராய்த்தலைமை சான்ற மதிமிகுந்தீர்!
பேரா சிரியப் பெருமாண்பீர்! கல்வியெனும்
ஆரா வமிழ்துண்ணும் ஆண்மைமிகு மாணவரீர்!
எல்லார்க்கும் என்றன் இனிய தமிழ்வணக்கம்!

சொல்லார்க்கும் பாட்டில் சுவையார்க்கும் வண்ணம் இங்குத்
தெய்வப் புலவர் திருவள் ளுவர்ப்பற்றி,
கைவருசெஞ் சொற்புலவர் கம்பர் திறம்பற்றி,
ஈட்டுபுகழ் மாயா இளங்கோ எழில்பற்றி,
பாட்டுக் கொருபுலவன் பாரதி சீர்பற்றிப்
பாப்பொழிந்து வைத்தார்கள்; பாராட்டிக் கேட்டீர்கள்!
நாப்பொழிவால் உள்ளம் நனைந்து பதம்பட்டு
வித்துதற்கு நல்ல விளைநிலமாய்த் தோன்றுகின்றீர்?
கத்துதற்குத் தேவையில்லை; கன்னித் தமிழ்விதைகள்,
பாவேந்தன் பாவிதைகள் பன்னூறு வைத்துள்ளேன்.
சாவேந்தா நல்வி கள் சாவியாய்ப் போவதில்லை.
அந்த விதையெல்லாம் அள்ளித் தெளிக்கின்றேன்.
எந்த வகையாய் விளையுமென எண்ணுகின்றீர்,
உள்ளத்தே ஊன்றி உயிரில் முளையெடுக்கும்.
வெள்ளத் துணர்வில் விளைந்து பயிராகும்.
காலத்தே முற்றிக் கருத்துக் கதிர்சாய்க்கும்.
ஞாலத்தே நம்விளைவு நல்ல விலைபோகத்
தக்கவொரு நேரமிது! நல்ல தமிழ்விளைச்சல்
மிக்க பரவுமொரு மேலான காலமிதாம்!

அக்காலந் தன்னில் அடியெடுத்து வைக்கின்றோம்!
எக்காலும் ஞாலம் இருண்டிருக்கப் போவதில்லை.
போர்த்த இருளொருநாள் போகத்தான் போகும்;எழில்
ஆர்த்த ஒளிவந்தே ஆளத்தான் ஆளும்;எமை
மாய்த்த இழிநிலைகள் மாளத்தான் மாளும்;இதை
வாய்த்த பெரும்புலவன் வான்முட்டச் சொல்லி விட்டான்!
பாரதிதா சன்,அவன்பேர்; பாரதிக்கும் நல்லாசான்!
ஈரமிகு நெஞ்சால் இவனவற்குத் தாசனென்றான்!

மற்றபடி தாசனென்றால் மாண்புகுன்றப் போவதில்லை.
கற்றபடி தானே கணக்குவரும்; பாட்டுவரும்!
நல்லபடி பாவேந்தன் தன்னை அளப்பதற்கு
வல்லபடி ஒன்றில்லை; வாய்த்தபடி தள்ளுபடி!
அப்படியாய்ச் செய்தி அளந்தபடி யாயிருக்க
எப்படி யாய்வீர் எழிற்பாவேந் தன்பாட்டை?
பாருங்கள், பாவேந்தன் பாரதிதா சன்திறத்தை!
ஓருங்கள்! நான்சொன்ன துண்மையா பொய்யாவென்
றப்போது சொல்லுங்கள்! ஆன்றமைவாய்க் கேளுங்கள்.
எப்போதும் காணீர் இடர்.

பாரதி தாசன் பகருவான் தன்னை:
‘நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்’
- என்றே
இதைவிடத் தன்னை எளிதாய் எவன்சொன்னான்?
புதைவிடந் தோண்டி ஆராய்ச்சி பண்ணி
இதோ,இவன் இப்படி; அதோ அவன் அப்படி
எனவோர் அறிஞன் இயம்பிட வேண்டும்!

மனத்தைத் திறந்து மற்றும் உரைப்பான்:
“சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
போர்த்திறத் தால்,இயற்கை புனைந்த ஓர் உயிர்நான்!

எப்படி அவன்திறம்? அவனே உரைத்தது!
அப்படிப் புனைந்த ஆருயிர் அவனுக்குக்
கைவரும் பாட்டுத் திறத்தைக் கணிக்கிறான்.
பொய்வரா வாயால் புகல்வதைக் கேளுங்கள்;

எப்படி அவன்றன் கொள்கை?
எப்படி அவன்றன் வேகம்?
தப்படி அடித்துத் தள்ளித்
தலைகீழாய்ப் பொய்யைப் பேசிச்
செப்படி வேலை செய்யும்
சிறுமதிப் புலவன் அல்லன்.
இப்படி நான், காண் - என்பான்.
இதுவேயென் கொள்கை என்பான்.
‘இருளினை வறுமை நோயை
இடறுவேன்’ என்பான்; இன்னும்
‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்.

ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்.’

- என்பான் புலமை இறுமாப் போடு!
தன்பாத் திறத்தைத் தனித்தனி யாகச்
சொன்னால் அஃதொரு சுவைதரு விருந்தாம்!
என்னால் முடியுமோ இல்லையோ! எதற்கும்
இயன்ற வரைநான் எடுத்துக் கூறிட
முயன்று பார்க்கின்றேன். முடிவது முடிக!

பாவலர் ஒருவர்க்குப் பதின்திறம் வேண்டும்.
நுண்ணோக்கு, கற்பனை, உவமை, பாத்திறன்,
எண்ணும் இயற்கை ஈடுபாடு, உலகியல்,
மனவியல் அறிவு, மற்றுமொழி யறிவு,
புரட்சி யுள்ளம், பொதுவுணர்வு - இவற்றில்
வரட்சி யில்லா மனநிலை வேண்டும்!
பார்க்கும் பொருளெலாம் பசையொடு நோக்கி
ஆர்க்கும் அழகை அறியும் நற்றிறன்
புலவோர்க் கல்லால் புறத்தார்க்கு வருவதில்!
பலவோர் புலவராய்ப் பயின்று திரியலாம்!
உண்மைப் புலவோர்க்கு உள்ளமும் அறிவும்
நுண்மையாய்ப் படிந்து நோக்குதிறம் வேண்டும்!

எல்லாப் பொருளையும் யாவரும் பார்க்கலாம்.
எல்லார்க்கும் அவற்றின் இயல்புகள் தெரியா!
மாலைப் பொழுதை நாளும் பார்க்கிறோம்?
வேலை யிருந்ததா, நமக்கந்த வேளையில்?
பாவேந்தர் மாலையைப் பார்ப்பதைப் பாருங்கள்;
நாவேந்திச் சொன்னால்தான் நல்லது தெரியும்!

‘அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்;
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே, நீதான்?
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேயியற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந் தானோ?’

எப்படி அவர்க்கு மாலை இருந்தது?
அப்படி நாமதை அறிந்திட வில்லையே!
காரிருள் நிலவைக் ‘கவின்நிலா’ வென்றே

யாருந்தான் புகழ்வார்; மகிழ்வார்; யாப்பிலே!
ஆனால், பாரதி தாசற் கந்நிலா
ஈனா நின்ற எழுச்சியைப் பாருங்கள்.

‘உனைக்காணும் போதினிலே என்னுள் ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவ தில்லை;
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின்நிலவே உனைக்காணும் இன்பந் தானோ?’

முழுமை நிலாவை மேலும் காண்கிறார்;
கொழுமை அழகுக் குலாவலைப் பாருங்கள்!
சிறுவர்க் கிதனைச் செப்பிப் பாருங்கள்!
உருவம் மாறும்; உணர்வும் பெருகும்!

“முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே அது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!

அழுதமுகம் சிரித்ததுபோல்.
அல்லி விரிந்தாற்போல் - மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டு
தொத்திக் கிடந் தாற்போல்!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு - நம்
பொருட்டு வந்தது பாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!

மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்!
மயிலின் தோகை விழிகள்! - பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்

சேர்த்து மெழுகும் வழிகள்!”

எப்படி அவரின் நிலவுக் காட்சி?
இப்படி யாநாம் எழிலைக் காண்கிறோம்?

காட்டைப் பற்றியவர் கழறுதல் கேண்மின்!
காட்டையே கண்முன் நிறுத்துதல் காண்மின்!


“முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும் - எதிர்
முட்டுகருங் கற்களும் நெருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில் தடுங்கும் உள்- நடுங்கும்!

கிட்டிமர வேர்கள் பலகூடும் அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர
மட்டையசை வால்புலியின்
குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத் தேடும் - பின்வாடும்.

நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால்சுழற்றிப் பாயவரும் - காடு - பள்ளம் மேடு.

கேளொடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கே,எடுத்த தன்றி - மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி, குன்றில் - புகும் ஒன்றி!

வானிடை ஓர் வானடர்ந்த வாறு - பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு - நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும் ஆறு - இன்பச் சாறு.

கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி

ஆறெனவே பால்சுரந்து தீர்க்கும் - அடை ஆக்கும்!”

பாவேந்தர் நுண்ணோக்குப் பாடல்கள் ஏராளம்!
ஆவலால் ஒன்றிரண் டழகைக் காட்டினேன்!
எத்துணை எளிமை! எத்துணை இனிமை!
கொத்தும் கிளியும் கொய்யாப் பழமும்போல்!
அடுத்து, அவர் கற்பனை எடுத்துக் கூறுவேன்.
மடுத்துளம் மகிழ்வீர்! மயக்கம் தவிர்ப்பீர்!
வானொரு ஆடையாம்! நிலவு பெண்ணாம்!
மானுடல் மறைத்து மதிமுகம் காட்டுமாம்!
என்னே புலவரின் கற்பனை எழுச்சி!


“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அமுதஊற்றோ?
காலை வந்த செழும்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ?"

புலவர் பாடல் தீட்டுவ தற்கே
எழுதுகோல் எடுத்தார்; ஏடும் எடுத்தார்!
வந்த கற்பனை வடித்துத் தருகிறார்
எந்தப் புலவன் இப்படி எழுதினான்!

“ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில்நிகர் பெண்களெல்லாம் உயர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்பார்!

சோலைக் குளிர்தரு தென்றல் வரும் - பசுந்
தோகை மயில்வரும் அன்னம் வரும்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் வந்து
மாணிக்கப் பரிதி காட்சி தரும்!
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி ‘வரைக’ எனும்!
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை இவற்றிடையே,

இன்னிலிலே தமிழ் நாட்டினிலே உள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக் கும்நிலை எய்திவிட்டால்,

துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில்

தூய்மையுண் டாகிடும், வீரம் வரும்!’

புதுவைப் புலவன் கற்பனை வளத்தில்
எதுவெடுத் துரைப்பேன்? எதனை விடுப்பேன்!
கற்பனைத் தேனாறு! கவின்நிலா வானம்!
பொற்புனைந் தெடுத்த புதுமணப் பூக்கள்!

‘முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற

பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை’

- என்று, அவர் காயும் தலைவியின் ஏசலில்
நின்ற கற்பனை நினைத்து மகிழ்மின்!
மேலும் அத்தலைவி பகலினைக் கடிவாள்!
ஏலுமா நமக்கு ? இத்தகு கற்பனை!

“மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து

வெந்து நீறாகாமல் இருப்பதொரு வியப்பே”

பாரதி தாசன்,தன் உள்ளக் கொதிப்பைப்
பாரதிர முழக்குதல் பாருங்கள் இங்கே;

‘மண்மீதில் உழைப்போ ரெல்லாம்
வறியராம்: உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்;இ தைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த

விரிவானம் பாராய் தம்பி!’

எப்படி? அவர்தாம் இயம்பிய கற்பனை?
இப்படிப் புரட்சியாய் எழுதிய தவர்மனம்!

அடுத்து, ஒரு புலவருக் கிருக்கும் ஆற்றல்
எடுத்தது உவமையால் விளக்குதல்; இல்லையா?
பாவேந்தர் உவமைகள் பழுதிலா உவமைகள்.

‘பொரியலோ பூனைக்கண்போல் பொலிந்திடும்' என்பார்.
‘குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீறல்கள்போல்

துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி ஏனழுதாய்’

- என்று கேட்பார்!

‘கேள்வியால் அகலும் மடமைபோல்

நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது’


என்றே அறிவோடு உவமையைப் பொருத்துவார்.

பரிதியின் வரவால் இருள்வில கியதை,

‘தொட்டியின் நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது’

- என்பார்!

- இங்கோர் ஏழைக் குடிசை!
மிகவும் சிறியது; மிகமிகச் சிறியது!
புகவும் இயலாப் புன்மைக் குடில் அது!
எப்படிச் சொல்வீர் அதனை? எண்ணுங்கள்!
அப்படிச் சொன்னால் அனைவர்க்கும் விளங்குமா?
இப்படிச் சொன்னால் எல்லார்க்கும் தெரியுமா?
என்றே எண்ணி, எண்ணி இயம்புதற்
கொன்றும் இயலாமல் உழல்கையில் சொல்வார்:

‘கூனன் புகுந்தாலும் குனிந்து புகும்குடிசை’

எப்படி அவர்தம் உவமை இயல்திறம்?
சிட்டுக் குருவியை எல்லோரும் கண்டோம்!

“கொத்தும் அதன்மூக்கு முல்லை யரும்பு!

மல்லிபிளந்தது போன்றது அதன்கண்”!

என்றுசொன் னோமா? பாவேந்தர் சொன்னார்!

‘பின்னிய ஆடை காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து

நளிர்கடல் நெளிதல்’ கண்டார்!

நாம்கண் டோமா? நறுக்கென
ஊம்எனும் முன்னே, உவமையால் விளக்கிய
புலவன் பாரதி தாசனைப் போலச்
சிலபேர் இருப்பார்; பலபேர் இருக்கார்!

“காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்தகுடை தூக்கி - நல்ல
கல்விக் கழகமதை நோக்கி - காய்ச்சும்
பாலுக்கு நிகர்மொழிப் பாவைநீ செல்லுவதைப்
பார்க்கும் இன்பந்தானடி பாக்கி!

மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற் றாடைகட்டி

வீட்டினின்றும் ஆட்டமயில் போலே - கைம்


மேற்சுவடி யோடுதெரு மேலே - கூர்
வேலுக்கு நிகர்விழி மெல்லிசெல் வதைக்காண
வேண்டுமே இப் பெற்றவள் கண்ணாலே!
.................................................................
மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே, நீ
மங்கை எனும் பருவம் கொண்டு - காதல்
வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு - காட்டித்
‘தேவை இவன்' எனவே செப்பும்மொழி எனக்குத்

தேன்! கனி! தித்திக்குங்கற் கண்டு!”


கோடிக் கணக்கில் உவமைகள் கூறுதல்
வாடிக்கை அவர்க்கு! வரட்சியங் கில்லை!
அடுத்தது பாத்திறன் அத்திற மைக்கும்
எடுத்த புலவன் ‘பாரதி தாசனுக்’
கீடில்லை என்பேன்! எனைமறுப் பீரா?

“கண்ணுக் கொரு வண்ணப்புறா!
காதுக்கவள் கானக் குயில்
பெண்ணுக்கர சானவளை
வந்தால் வரச்சொல் - எனக்கே
பேச்சுப்படி ஆசைமுத்தம்

தந்தால் தரச்சொல்!”


சொல்லச் சொல்ல சுவைத்திடும் கட்டி
வெல்லச் சொற்கள்! துள்ளு நடை!

“ஓர்நிலவே அவள்தானோ கதிர்தானோ?
கொம்புத் தேனோ நடை

ஓவியமோ புள்ளி மானோ?”


சிந்துத் தேனிசை வந்திடும் பாக்கள்!

“கைப்பிடியில் கூட்டிவரக் கட்டளையிட் டாளெனவே
செப்புகின்றாய் வாழியவே வாழி! - நான்
ஒப்பவில்லை என்றுரைப்பாய் தோழி!’

“மந்தையின் மாடு திரும்பையிலே - அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தியிருந்தவள் வீடு சென்றாள் - அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!”

தொந்தி மறைந்திட வேட்டி கட்டி - அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக்கொடுத் திட்டான்டி அவன்

எட்டி ஒரே முத்தம் இட்டான்டி!

‘கட்டிவெல்லத்தைக் கசக்கு தென்றாள் - அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்!
தொட்டியின் நீரில் குளிக்கச் சென்றான்! - அவன்
தோளை அவள்ஓடித் தேய்த்து நின்றாள்!”

‘கொட் டிய நீரில் குளிர்ச்சி உண்டோ இந்தக்
கோடை படுத்திடும் நாளில்’ என்றாள்!
‘தொட்டியின் தண்ணீர் கொதிக்கு’ தென்றான் -நீ

தொட்ட இடத்தில் சிலிர்க்கு’ தென்றான்.


இசைத்தேனில் காதலைப் பிசைந்த பாக்கள்!
பேச்சுப் போலவே பாநடை யிருக்கும்!
மூச்சுப் பிடித்துப் பாடிட வேண்டா!
இதோ பாருங்கள் பாநடை எழிலை!

“கிழக்கு வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம்
வழக்கப் படிவீட்டு வாயிற் படிதுலக்கிக்
கோல மிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல
வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே
ஏழுமணிக் காலை எழுந்தாள் அவள்மாமி!
‘வாழுகின்ற பெண்ணாநீ வாடி’ என்றாள் தங்கத்தை!
‘இந்நேரம் தூங்கி இருந்தாயா? என்பிள்ளை
எந்நேரம் காத்திருப்பான் இட்டளிக்கும் ‘காப்பிக்கும்’?
என்றே அதட்டி இழுத்துத் தலைமயிரை

நின்ற பொற்பாவை நிலத்தில் விழச்செய்தாள்”


எப்படிப் பாநடை? யாப்பெலாம் இவர்க்கு
ஒப்பஅடி போட்டே உடன்வர வில்லையா?
புலவர்க்குத்தான் தமிழ் என்ற போக்கினை
இலையென் றாக்கிய ஈடிலாப் பாவலர்!

இப்படிப் பாத்திறன்! அடுத்தது இயற்கை,
ஈடு பாட்டினை இயம்பவே வேண்டா!
பாடு பட்டே இயற்கையைப் பாடும்
கேடுகெட்ட கீழ்மைப் புலவர்கள்
போல்இல்லை இந்தப் புரட்சிப் புலவன்!
ஓலைச் சுவடிக் காலத்தும் இவன்போல்
இயற்கையைப் பாடுவோர் அரியராய் இருந்தனர்!

எடுத்துக் காட்டாய் இரண்டொரு பாடல்கள்
மடுத்துக் கேட்போம்! மாண்பது விளங்கும்!

காலை, கதிர், கடல், செம்பொன் வானம்!
கோலக் காட்சியைப் பாவலன் கூறுவான்:

‘எழுந்தது செங்க தீர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூறல்!

வெளியெலாம் ஒளியின் வீச்சு!”


‘அழகின் சிரிப்பு’ எனும் நூல்,அவர் சுவைத்த
இயற்கை ஓவியக் கோப்பென் றியம்பலாம்!

‘அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும் சிலிர்க்கச்

செல்வம்ஒன்று வருமதன்பேர் தென்றற் காற்று!’


இருள்போய் ஒளிந்த இடத்தைத் தேடி
அருள்தோய் பாவலர் அடைந்ததைக் காண்மின்!

‘அடுக்கிதழ்த் தாம ரைப்பூ
இதழ்தோறும் அடிப்புறத்தில்

படுத்திருப் பாய், நீ’ - என்றே


இருளினைப் பாடுகின்றார்!

“களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப்போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லே, நீ!

செருந்தி,ஆச்சா, இலந்தை
தேக்கீந்து, கொன்றை, எல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு மூங்கில்; இரு குரங்கு
கண்டேன் பொன் னூசல் ஆடல்!

ஆனையொன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனையொன் றணுகும்; அங்கே

புலியொன்று தோன்றும்; பாம்பின்

பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக் காணாது நிற்கும்!
அதைஒரு நரிபோய் மாய்க்கும்!

கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்குதொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென இழுத்ததைப் போல்
கிளைதொறும் தாவித் தாவி
விழுதெல்லாம் தொங்குகின்ற
ஒளிப்பாம்பாய் எண்ணி அஞ்சி

உச்சிபோய் தன்வால் பார்க்கும்!”


காட்டிடை நடந்ததொரு காட்சியைப் பாவலர்
காட்டும் வகையிது! காணுங்கள் மேலும்!

‘அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்கொடி பச்சைப் பட்டே!
குருவிகள் தங்கக் கட்டி!
குளிர்மலர் மணியின் குப்பை!
குறத்தியர் கவண்எ டுத்துக்
குறிபார்க்கும் விழி,நீ லப்பூ!
எறியும்கை செங்காந் தட்பூ!

உடுக்கைதான் எழில் இடுப்பே!’


தத்தும் அருவியாய்த் தாவும் கருத்துகள்!
முத்தும் பவழமும் வயிரமும் மிடைந்த
பன்மணி மாலை! பாவியக் கொத்து!
என்வகை யாயிதை இயம்புவேன்? கேளீர்!
வெள்ளப் பெருக்கை விரிப்பதைக் காண்மின்!

“இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள்! நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங் களின்மேல்

ஒருநாரை, வெண்டா ழம்பூ!”


எதுகை மோனைக்கு இறவானம் பார்க்கும்
புதிய தலைமுறைப் புழுக்கை யலன், அவன்!

அகர முதலியைத் தேடி அலையும்
பகற்கனா காணும் பாவலன் அல்லன்!
எண்ணிய பொழுதெலாம் எதிர்வந்து நிற்கும்
வண்ணச் சொற்கள்! வனைகின்ற ஓவியம்!
பாடிக் கொண்டே பறக்கும் வண்டுபோல்
நாடிக் கொண்டே நாட்டிடும் பாவலன்!
இதோ, பாருங்கள் இன்னொரு பாடல்!
எதோ, இதன்பொருளை எண்ணுங்கள் பார்க்கலாம்!

“இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும் செவ்வி தழ்கள்
விரியாத தாம ரைபோல்
ஓர்இணை! மெல்லி யர்கள்
கருங்கொண்டை! கட்டி ஈயம்!
காயாம்பூக் கொத்து! மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ!

உயிருள்ள அழகின் மேய்ச்சல்!”


அழகின் மேய்ச்சலை அறிந்துகொண் டீரா?
புலவர் மொழிகின்றார் பொருள்விளங் கிற்றா?
இருநிலா இரையுண்ணும் என்கின்றார் புலவர்!
கருங்கொண்டை இரண்டு; கட்டி ஈயம்!
தாமரை ஓர்இணை இருவா ழைப்பூ!
ஆம்,இவை புறாக்கள்; அறிந்து கொள்க!
பாடலை மீண்டும் படித்துப் பார்க்க!
ஆடலை - அழகின் ஆடலை - அருந்துக!
அடுத்து, அவர் உலகியல் அறிவைப் பார்ப்போம்.

‘வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களென்றால்

சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்’


என்கிறார் புலவர், என்ன சரிதானே?
தின்கிறோம் இவற்றைத் திரும்ப நினைத்தோமோ?

“வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள்,
ஆனது செய்யும் அநுமார்கள், சம்பவந்தர்,
ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்!
விஸ்வரூ பப்பெருமை மேலேறும் வன்மைகள்
உஸ்என்ற சத்தங்கள் அஸ்என்ற சத்தங்கள்

எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்!

செவ்வைக் கிருபை, செழுங்கருணை, அஞ்சலிக்கை
முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்!

இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?”


- என்றே உலகியல் இயம்பக் கேண்மின்!
அன்றே எழுதியதால் ஆறேழு வடசொற்கள்
வந்து கலந்ததலால் கருத்தில் வழுவுண்டோ?
சொந்த வெறுப்பின்றிச் சொல்லுவதற் காருளரே!
பொதுக்கருத்து போகட்டும்! புலவர் புகன்ற
புதுக்கருத் தொன்றைப் புரட்டிப் பார்ப்போம்!
மருமகட்கு மாமி விருந்தோம்பும் மாண்பை
அருமைத் தமிழில் அறிய உரைக்கின்றார்!

“முன்வைத்த முத்துத் தயிரிருக்கும்; பின்னறையில்
வெண்ணெய் விளாங்காய் அளவிருக்கும் - கன்றே
மறக்கினும் அம்மாவென் றழைத்து மடிப்பால்
கறக்கப் பசுக்காத் திருக்கும் - சிறக்கவே”

“சேலத்து அங்காடிச் சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில் மிகக்கருத்தாய்த் - தோலில்
கலந்த சுளைபிசைந்து காயவைத்து விற்கும்
இலந்தைவடை வீட்டில் இருக்கும் - மலிந்துநீர்
பாய்நாகர் கோயில் பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே பொன்போல - தேய்பிறைபோல்
கொத்தவரை வற்றல்முதல் கொட்டிவைத்தேன், கிள்ளையே
வைத்தவரை உண்டுபின் வையாமைக் - குத்துன்பம்
உற்றிடச்செய் ஊறுகாய் ஒன்றல்ல கேட்பாய்நீ
இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை - வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை!
மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் - நேருறவே
வெந்தயம் மணக்கஅதன் மேற்சாயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் - நைந்திருக்கும்
காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன் - தேடிப்பார்!
........................................................................
கீரை தயிர் இரண்டும் கேடு செயும் இரவில்!
மோரைப் பெருக்கிவிடு முப்போதும் - நேரிழையே
சோற்றை அள்ளுங்கால் துவள்வாழைத் தண்டில்உறும்

சாற்றைப்போ லேவடியத் தக்கவண்ணம் - ஊற்றுநெய்யை!

வாழை இலையின் அடிஉண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக் கறிவகைகள் சூழவைத்துத்
தண்ணீர்வெந் நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன் மிக இனிக்கும் - பண்ணியமும்
முக்கனியும் தேனில் நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின் சோறிட்டுத் - தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல் ஒண்டொடியே கேட்டுப்போ
எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்டே லும் அள்ளிவை - விக்குவதை
நீமுன் நினைந்து நினைப்பூட்டு நீர் அருந்த!

ஈமுன்கால் சோற்றிலையில் ட்டாலும் - தீமையம்மா!”


 - என்றே குடும்ப விளக்கில் எழுதுகின்ற
பொன்னேர் வரிகளாற் பாவேந்தர் பூண்விளங்கும்!
அடுத்து, அவர் மனவியல் அறிவை உரைக்கிறேன்.
தந்தை குழந்தையைத் தாவி யணைத்துப்
பள்ளிக் கனுப்பும் பாங்கை உரைக்கிறார்!

“தலைவாரிப் பூச்சூடி உன்னை-பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள்உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?

விலைபோட்டு வாங்கவா முடியும் - கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை யல்லவோ கல்வி - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என்
கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு!”

‘கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண்

கல்வி,பெண் கல்வி என்கின்ற தன்போடு!’

பள்ளிப் பிள்ளையின் பச்சை மனத்தைத்
தெள்ளத் தெளிவாய்த் தெரிந்திருந் தாலன்றி
இப்படி எழுதிட இயலுமோ புலவர்க்கே!
அப்படியே கன்னியின் மனத்தை அறிந்தவர்!

‘நான்குபக்கமும் வேடர் சுற்றிட
நடுவில் சிக்கிய மான்போல் - இங்
கேன் பிறந்தேன் இவர்கள் வீட்டில்
கரையி லிட்டதோர் மீன்போல்!’

‘நூறுமுறை அவள்பார்த்தாள், அவனை! ஆளன்
நூறுமுறை நோக்கினான். இனிது பெற்ற
பேறுதனை இழப்பாள்போல் குறட்டினின்று
பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்குமுன்னர்
ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!

அவன்வண்டிப் படிமிதித்தான் திரும்பிப் பார்த்தான்!


இளைஞனின் இளைஞையின் இனிய மனங்களைக்
களைந்திடா வண்ணம் கையகப் படுத்திடும்
பெருந்திறன் பாவேந்தர் பிறப்பிலே முகிழ்த்தது!
அருந்திறன் பிறர்க்கே! அடுத்தது பாருங்கள்!

“நகைமுத்தை விரும்பு கின்றேன்;
நாளைக்கே மணக்க வேண்டும்!
வகைசெய்க அப்பா’ வென்று
வாய்விட்டு நானா சொல்வேன்?
நிகரற்றாய்! உன்பெற் றோர்பால்
நீசொன்னா லென்ன வென்றான்.”

‘மகளுக்கு நாண மில்லை

என்பார்கள் மாட்டேன்’ என்றாள்


இதைவிட மணக்கப் போகும்
இருவரின் மனத்தும் உள்ளே
புதைந்துள கருத்தை யார்தாம்
புகன்றிட வல்லார்? மற்றார்
கதைவிடு வார்கள்; நெஞ்சக்
கருத்தினை உணர மாட்டார்!
எதைவிட? எதைநான் சொல்ல?
இன்னொன்று, மணந்தோர் காதல்!

‘தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை!

துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான்.’

எத்துணை நயமாய் எடுத்துச் சொல்கிறார்!
பித்தனைப் போலப் பிதற்றவா வேண்டும்?
சமையல் செய்யும் குடும்பப் பெண்ணின்
அமைவான மனத்தை அளந்து தருகிறார்.

“கொண்டவர்க் கெதுபி டிக்கும்?
குழந்தைகள் எதைவி ரும்பும்?
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன?
உண்பதில் எவரு டம்புக்
கெதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள்; கறிகள் தோறும்

உண்பவர் தம்மைக் கண்டாள்!’


கன்னித் துடிப்பையும், கணவனை மணந்த
பெண்ணின் துடிப்பையும் பிரித்துப் பேசியோர்,
ஊருக்குச் சென்றான் ஊர்வரக் கண்டதும்,
மோருக்குள் சிலிர்க்கும் மத்தென உணர்ச்சிகள்
கொப்ப ளித்தன! ஆயினும் மாமியார்
செப்பும் பகடிக்கு உள்ளம் நாணி
ஒப்பனை செய்வதும் உலாவரத் திரிவதும்
செப்பமாய்ச் செய்யும் மருமகள் செயல்களை
ஊன்றி நோக்கி உரைப்பதைக் கேளுங்கள்:

‘தென்றல் அடிக்கையில் பச்சிளங் கீற்றுச்
சிலிர்த்து நிலைகுலைந் தாடுதல் போல்
இன்றைக்கு நீகொண்ட பூரிப்பின் காரணம்
என்னடி மின்னல் இடைச் சிறுக்கி?
நின்றஉன் கால்கள் நிலைக்கவில்லை; கடல்
நீராய் நெளிந்தது பொன்னுடலும்!
அன்றைக்குச் சென்றவன் என் மகன் வீட்டை
அடைந்த மகிழ்ச்சித் திருக்கூத்தோ?’

‘மாற்றியணிவதும் சேலையினை, மலர்
வாங்கி யணிவதும் கூந்தலிலே, ஒரு
காற்றென ஓடிச் சிரிக்கும் முகத்துக்குக்
கண்ணாடி காட்டிப்பின் மீளுவதும்'
நேற்றில்லையே! இன்று பூரிப்ப தென்னடி
நீள்புருவத்து நிலாப் பிறைச்சி?
வேற்றூர்க்குச் சென்றவன் என்மகன் வீட்டுக்கு

மீண்ட மகிழ்ச்சித் திருக்கூத்தோ?’

வெளிப்படை யாகப் பொருள்தரும் சொற்கள்!
விளக்கிடப் பிறரோ உரைகளோ வேண்டா.
துளிப் பிச காத உணர்வின் தொடையல்!
தோகைக் குறும்பினை இன்னும் கேளுங்கள்:

‘கறிகள் சமைத்தபின் தெருவினில் விற்றிடும்
காய்களை ஓடி அழைப்பதுவும்

சிறுவிரல் மோதிரம் பார்ப்பதுவும், பார்த்து
மகிழ்வதும், செவ்விதழ் சேர்ப்பதுவும்
அறையினை நோக்கலும் நேற்றிலையே, இன்று
அப்படிப் பூரிப்ப தேதுக்கடி?
பிறநகர் சென்றவன் - என்மகன்- ஊர்வரப்
பெற்ற மகிழ்ச்சித் திருக்கூத்தோ?

கச்சையை நோக்கலும், கண்கள் மலர்வதும்
கைவளை யைச்சரி செய்வதுவும்,
மொச்சை உரிக்கையில் முன்கட்டில் ஓடி, மு
ழங்கும் சிலம்படி மீளுவதும்,
பச்சைப் பசுங்கிளி தானெனக் கொஞ்சலும்
பார்த்தில னேஇன்று பூரிப்பதேன்?
அச்சீமை சென்றவன் - என்மகன் - வீட்டை

அடைந்த மகிழ்ச்சித் திருக்கூத்தோ’?


மருமகள் பூரிப்பை மகிழ்வொடும் குறும்பொடும்
அருமையாய் உரைக்கும் பாவேந்தர் அருந்திறன்
எத்துணைப் பெரியது! எத்துணைச் சிறந்தது!
இத்துணைச் சிறப்பாய் எவரெடுத் துரைத்தார்?
இக்கா லத்துத் திரைப்படப் பாடலை
முக்கலும் முணகலும் முறுகலும் திருகலும்
கெக்கலி இசையொடு கேட்டுமுகஞ் சுளிக்கும்
அருவருப் புணர்ச்சியிப் பாடலில் உண்டா?
பெருமகிழ் வன்றோ பின்னிப் பிணையும்!
காசடிக் கின்ற கயவரின் கண்கள்
மாசிலா இத்தகு மாண்புடைப் பாடல்கள்
பக்கந் திரும்புமா? பயனும் விளையுமா?
எக்காலத் தந்நிலை எய்துவ திங்கே?

புதிய மனநிலை புகட்டும் பாவலர்
முதியோர் காதலை முழக்குதல் கேளீர்!

‘அறம்பெய்த கையும் ஓயும்;
மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்;
செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறங்கேட்ட காதும் ஓயும்!
செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்

மனம்மட்டும் ஓய்தல் இல்லை!’


மறவனைச் சுமக்குமாம் மங்கையின் முதியவுள்ளம்!
மனம்மட்டும் ஓயாதாம்;! புலவரின் மனவியல்
எத்தகு சிறப்பாய் இருந்தது பாருங்கள்!
மெத்தவும் சிறப்பாய் மேலும் உரைக்கிறார்!

‘அருகரு கிருவர்; மிக்க

அன்புண்டு, செயலே இல்லை!’


இரண்டே அடிகளில் முதுமையின் இன்பம்
திரண்டு வெளிப்படல் புலமையின் திறமே!
அடுத்தது பாவலர் மொழித்திறன்; அதனையும்
எடுத்துச் சொல்வேன்;! இருந்து கேளுங்கள்:
புலவர் ஒருவர் புகன்ற சொற்களின்
வளத்தை யறிந்தால் மொழித்திறன் உணரலாம்!
பாவேந் தர்க்குப் பழந்தமிழ்ப் பயிற்சியின்
ஈவாய் அமைந்தது சொல்திறன்! இதோ! ஒன்று

‘நூலைப்படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி
காலையில்படி! கடும்பகல்படி!
மாலையிரவு பொருள்படும்படி நூலைப்படி - சங்கத்தமிழ்
                                                 நூலைப்படி - முறைப்படி
கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி.
கற்கத்தான் வேண்டுமப்படி!
கல்லாதவர் வாழ்வதெப்படி - நூலைப்படி - சங்கத்தமிழ்
                                                 நூலைப்படி - முறைப்படி
அறம்படி - பொருளைப்படி - அப்படியே இன்பம்படி
இறந்ததமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும்படி - நூலைப்படி - சங்கத்தமிழ்
                                                 நூலைப்படி முறைப்படி
தொடங்கையில் வருந்தும்படி - இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி - நூலைப்படி சங்கத்தமிழ்

                                                 நூலைப்படி- முறைப்படி


பொய்யிலே முக்காற்படி - புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி
                                                 - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி
அகப்பொருள்படி அதன்படி புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப்
புலமைவரும் என்சொற்படி - நூலைப்படி - சங்கதமிழ்

                                                 நூலைப்படி - முறைப்படி’


எப்படி? படிபடி! எத்தனைப் படிகள்?
செப்படி வேலையா, சொற்படி கட்டுதல்?
எழுதிப் பாருங்கள்; இழுப்பு தெரியும்!
பாரதி தாசனோர் புலவனா என்பான்.
பாரதிர முழக்குவேன்! பாரதி தாசன்
உன்னை விட, உன் அப்பனை விடவும்
மன்னாதி மன்னன்! பாட்டிலே மன்னன்!
பொழுதிருந் தால், நான் புரட்டிக் காட்டுவேன்!
அழுமூஞ்சி களுக்கே அடிமுடி தெரியுமா?
எதுகைத் தொடையால் எம்பா வேந்தன்
புதுவகைப் பாநடை புனைந்து காட்டினான்!
சத்தி முத்தப் புலவர் மாக்கதை!
பத்தன்று; ஒன்றைப் பகர்வேன் கேளுங்கள்;
அரசி இரவெலாம் அரசனின் வரவை
எதிர்பார்த் திருந்தாள்! இவனோ விடியலில்
பள்ளி எழுச்சி பாடுவான், வந்து!

‘இருள் மடிந்தது!
கூவும் சேவல் கழுத்தோ ஒடிந்தது!
கதிரொளி எங்கும் படிந்தது!
துயில் எழுப்புவோரின்
இசைத்தேன் காதில் வடிந்தது!
பெண்ணே விழி, பொழுது விடிந்தது!

கதவைத் திறந்து அரசி சொல்கிறாள்:

இரவுநான் தூங்கியபின் வந்தீர்கள் போலும்!
வழிபார்த் திருந்தன இருவிழி வேலும்!
உலாவி அலுத்தன என்இரு காலும்!
துவண்டு போயிற்று என்இடை நூலும்!


ஆறிப் போயிற்றுப் பாலும்!
அழகு குன்றின முப்பழத் தோலும்!
வாடின கட்டிலில் மலர்வகை நாலும்!
கண்விழிக்க எவ்வாறு ஏலும்!
மேலும்!
மேலும்!


எத்துணை இனிய சொற்கள்?
எத்துணை எளிமை பாட்டில்!
எத்துணைக் கருத்துத் தேட்டம்!
எத்துணை நயங்கள்! இன்பம்!
எத்துணை யளவு கல்வி
யறிந்தவர் எனினும் பாட்டை
எத்துணை எளிதாய்ப் பாடி
இலக்கிய இன்பம் காண்பார்?
புலமக்கள் கண்ட இன்பம்
பொதுமக்கள் காணு மாறு
சிலபல சொற்க ளாலே
செய்தவர் பாவின் வேந்தர்!
இலைஇலை என்பார்க் கின்னும்
எடுத்தெடுத் தீவேன்; ஆனால்
நிலையிலை நேரம்; ஆக
மொழித்திறம் நிறுத்து கின்றேன்.

அடுத்தது புரட்சி யுள்ளம்!
பாவலர்க் கதுதான் நற்பேர்
கொடுத்தது; அவர்க்கும் பீடு
கொடுத்தது! தமிழ்ச்செம் மாப்பால்
எடுத்தது; நேற்றும் இன்றும்
இருக்கின்ற புலவர் யார்க்கும்
மடுத்திலாப் பெரிய செல்வம்!
மற்றதன் சிறப்பைப் பார்ப்போம்!

‘விடுதலை பெறுவது முதல்வேலை!

அடி மையில் உழல்வது முடியாது!

விழிதுயில் வதுமிகு தவறாகும் - எழுவீரே!’

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!’

என்றே குயிலைக் கூவச் செய்தவர்!

‘சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால் - மற்ற

பாதி துலங்குவ தில்லை!’


சாதிமேல் அடித்த சம்மட்டி அடியிது!

‘இந்த உலகில் எண்ணிலா மதங்கள்!
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!

சாதிக்குச் சாவுமணி அடிக்க!’


சாதிக்கு அடித்த சாவு மணியிது!

‘அடக்குமுறை செய்திடல் முடியும் .- கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும்! - உணர்

வொடுக்குதல் எவ்வாறு முடியும்!’


அடக்கு முறைமேல் அடித்த அடியிது!
“தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை.’

தமிழ்த்தொண்டு செய்வோர்க்குத் தந்த துணிவிது!

‘சிம்புட் பறவையே சிறகை விரி,எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திற!விழி!
இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந் திரு.
குறிக்கும் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக் கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்

தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை!’


தொய்ந்த தமிழனைத் தூக்கி நிறுத்தும்
வெய்யுரை! அழல்சேர் வீர வரிகள்!

‘உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு

நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்

நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம்
உணர்வாகி நண்ணி டாரோ?
‘இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சிமனப் பான்மை

ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்!’


என்று புரட்சிக் கெழுத்தா ளர்களே
நின்றிங் குதவுதல் வேண்டும் என்பார்!

இவைபோல் பாடல்கள் ஏராளம் உண்டு
அவையெலாம் கூறிட ஆகிடும் ஒருநாள்!
இறுதியாய் அவரின் புரட்சியுள்ளத்தை
உறுதியாய் விளக்கும் ஒரேஒரு பாட்டு!
நகைச்சுவைப் பாடல்! நன்றாய்க் கேளுங்கள்!

ஏசு நாதர் ஏன்வர வில்லை
என்னுந் தலைப்பில் எழுது கின்றார்:

‘தலை, காது, மூக்குக்,க ழுத்துக், கை, மார்பு, விரல்
தாள் என்ற எட்டுறுப்பும்,
தங்கநகை, வெள்ளிநகை, ரத்தினமி ழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்!
நிலைகண்ட பாதிரி, பின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள் உதடு நாக்கு
நிறைநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும் உண்டென
இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்து சேர்ந்தார்!
ஏசுநாதர் மட்டும் அங்குவர வில்லையே,

இனிய பாரத தேசமே!’


பத்தர்கள் மண்டையில் படீரென அடிக்கும்
முத்திப் பாடல் இதுவென முழங்கலாம்!
நகைச்சுவை யோடு நயமாய்ச் சொல்லி
வகையாய்ப் புரட்சியை மனத்தினில் விளைத்தார்.
புரட்சிப் பாவலர் பொதுமை உணர்வினை
இறுதியாய்க் கூறுவேன் இருந்து கேட்பீர்!

‘புதியதோர் உலகுசெய்வோம் - கெட்ட

போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!’

என்று பொதுமை உலகம் புனைய விரும்பினார்!

‘மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி, மேலே ஏற்று’
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து உலகத்தை!
உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்!
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஓட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும்! பேத மில்லை!
உலகம் உண்ணஉண்; உடுத்த உடுப்பாய்!
புகல்வேன் உடைமை மக்களுக் குப்பொது;

புவியை நடத்து பொதுவில் நடத்து!’


எத்துணை எழுச்சி; எத்துணை உயர்ச்சி!
எத்துணை விரிந்த எண்ணக் குவியல்!
சடசட சடவெனச் சொற்கள் ஆட்சி!
மடமட மடவெனும் கருத்து மாமழை!
உணர்வு மின்னல்; உருட்டும் இடிகள்?
இதைவிடப் பொதுமை என்ன வேண்டும்?
புதுக்கருத் தெவர்தாம் புகன்றிடப் போவார்?
வெறுப்பிலா திருந்து பொதுமையாய் விளக்கினால்
மறுப்பிலா தவரை மாப்புல வோனாய்
ஏற்றுக் கொள்ளுவார்; இல்லெனின் தூற்றுவார்!
மாற்றுக் கொள்கையர் மறுத்திட முடியுமா?

‘எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமையெலாம்

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!’


என்றே உரிமைப் பட்டையம் எழுதுவார்!

‘இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களை ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்,

தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?


பாவேந்தர் காட்டிய பொதுமை வழியிது!
தீண்டாமை பற்றிப் பாவலர் சாற்றுவார்.

‘அற்பத் தீண்டாதார் என்னும் அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தா ரன்றோ? - சகியே (கர்ப்பத்தில்)
பொற்புடை முல்லைக் கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார் நம்புவார்? - சகியே (சொற்படி)

ஏகபரம் பொருள் என்பதை நோக்க எல்லாரும்

உடன் பிறப்பே - ஒரு


பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதிலே உள்ள

தோ சிறப்பே?’



எப்படி அரசியல் இருக்க வேண்டுமாம்.

‘ஒப்பிட எவர்க்கும் ஒருவீடு, ஒருநிலம்
ஒருதொழில் ஓர்ஏர் உழவு மாடுகள்’


என்னும் சமநிலை எய்த வேண்டுமாம்!
பின்னும் பாவலர் கனல்எழப் பேசுவார்:

‘ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்.’
‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப் பதான

இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்!’


என்று பொதுமைக்கு முத்தாய்ப்பு இடுவார்!
ஒன்று மட்டில் உண்மையென் றறிவீர்!
உலகப் பாவலர்க் குண்டான சிறப்புக்கும்
கழகப் புலவர்பால் காணும் பெருமைக்கும்
மேலாம் இவர்க்கொரு மேன்மை இருந்தது!

தமிழ்உள்ளம் நாட்டுப்பற்று தகுவுயர் சீர்திருத்தம்
இமியுமே குறையாவாறு இருந்தன அவர்பால்!
தமிழ்உள்ளம் அவர்க்கே உள்ள தனியுள்ளம்!
இதற்குமுன் யார்க்கும் இல்லா தது,அது!

‘இன்பத் தமிழ்மொழி எமது! - எமக்
கின்பம் தரும்படி வாய்த்தநல் லமுது!’ - என்றதும்,

‘கனியிடை ஏறிய சுளையும் முற்றற்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!’ - என்றதும்

‘செந்தா மரைக்காடு பூத்தது போல
செழித்த என்தமிழே ஒளியே வாழி!’ - என்றதும்,

‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே?’ - என்றதும்,

‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்

செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்! - என்றதும்,


தமிழ்மேல் அவர்க்குள்ள காதலைக் காட்டும்!
தமிழ்க்காக வாழ்ந்தார், தமிழைப் பாடினார்;
தமிழைத் தொழுதார்; தமிழைப் புதுக்கினார்!

‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்

தாய்தடுத் தாலும் விடேன்’ - என்று


தமிழ்க்காகப் போரிட்டார்;

‘இன்பத் தமிழ் குன்றுமேல் தமிழ்

நாடெங்கும் இருளாம்’ - என்று

கவன்றார்; அறிவுறுத்தினார்; கண்ணிமையாது காத்தார்!

‘தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்

தூய்தமிழ் பிதற்றும் என்வாய்’


என்று, தமிழும் தாமுமாய்
ஒன்றிக் கிடந்தார்; உயிரொடு பொருத்தினார்.
அந்தத் தமிழே அவரையும் உயர்த்தி
இந்த நாட்டையும் இனிதுயர்த் துவது!
இவர்க்குத் தமிழ்மேல் எத்துணை ஆவலோ
அத்துணை அக்கறை தொழிலா ளர்மேல்!

‘குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி

வசங்கெட்டுப் போனது நமதுநன் னாடு!’


என்றவர் கூறுதல் எவ்வகை யில்பிழை?

‘சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் . ஆறு
தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்

போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?’


என்றஅவர் கேள்வி ஏற்றதோர் கேள்வியே!

தமிழ்க்கவர் தந்த தாழாத உழைப்பும்
தொழிலா ளர்க்கவர் தோள்தந்த மாண்பும்
பாரதி தாசனைப் பாவேந்தர் ஆக்கிப்
பாரறி யும்படி பண்ணி வைத்தன!

இத்தகு புலவர்போல் எந்தமிழ் மொழியிலோர்
ஒத்த புலவரை உணர்ந்திட வில்லை!’
வீரமும் தமிழும் வியத்தகு புலமையும்
ஈரமும் ஏழைமேல் இரக்கமும் சேர்ந்தால்
பாரதி தாசனென் பாவலர் தெரிவார்!
ஊரதி ர,அவர் ஒண்புகழ் வாழ்கவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_8/007&oldid=1858579" இலிருந்து மீள்விக்கப்பட்டது