கனிச்சாறு 8/008
7. இக்காலத் தமிழ் மாந்தர்!
(வேலூர், ஊரீசுக் கல்லூரித் திரு.வி.க. தமிழ்மன்றம்
1973 பிப்ரவரி 14 இல் நடத்திய முத்தமிழ்க் கலைவிழாப்
பாட்டரங்கத்தில் தலைமை யேற்றுப் பாடியது.)
முன்னுரை
ஓங்கு புகழ்கொண்ட ஊரீசுக் கல்லூரி
தாங்கு முதல்வரீர்! தண்டமிழ்நாட் டுக்கல்வி
பேணிவரும் பேரா சிரியப் பெருமாண்பீர்!
தூணிகர்த்த வாறாகத் தோளோடும் நெஞ்சோடும்
செந்தமிழ்க்குக் காப்பாய்ச் சிறப்புக்குக் கொள்கலனாய்,
எந்தமிழ் நாட்டின் எதிர்கால நற்குடியாய்,
ஆளும் அமைச்சராய் ஆன்றஅதி காரிகளாய்
நாளும் வளர்ந்து வரும் நல்விளைவின் மாணவரீர்!
எல்லார்க்கும் என்றன் இனிய தமிழ் வணக்கம்!
சொல்லார்க்கும், பாட்டில் சுவையார்க்கும், அச்சுவையைக்
கள்ளாரும் வண்டாய்க் களிப்பாரும் உள்ளமுடன்
வெள்ளமென இங்குவந்து வீற்றிருப்பீர்; போற்றுகின்றேன்!
இக்காலை பாட்டரங்கம் என்றாலே மக்களிடை
தக்க விறுவிறுப்பு! தாவிவரும் சொற்களிலே,
சொல்லின் பொருள்களிலே, சொல்லும் வகையினிலே,
சொல்லுக்குச் சொல்லிடையில் சூழும் நகைச்சுவையில்
உள்ளம் பறிகொடுத்தே, உள்ளுணர்வு தாம் பெருகக்
கள்ளமின்றி, வாழ்க்கைக் கனமின்றிச், சின்னேரம்
இன்பத்தில் தோய்ந்திடவே எண்ணி வருகின்றார்!
துன்பத்தை நீக்கும் துடிப்பிருக்கும் எல்லார்க்கும்!
அந்தத் துடிப்பறிந்தே ஆர்வமொடு பாவலரும்
எந்தச் சொல் போட்டால் எதிரிலுள்ள மக்களெல்லாம்
பல்லெல்லாம் நன்றாய்ப் பளிச்சென்று காட்டி, யுடன்
‘கொல்’லென்று தாம்சிரிப்பார்; கூடிக் கை தட்டிடுவார்.
என்றே பகலிரவாய் எண்ணி யெண்ணி, ஆய்ந்தாய்ந்து
நன்றாகச் சொல்லை நகைச்சுவையில் தோய்த்தடுத்து
வந்திங்குப் பாடும் வழக்கத்தை நானறிவேன்!
இந்தவழக் கத்தை எவரும் எதிர்க்கவில்லை!
நன்றாய்ச் சிரிப்பதற்கே நாம் பிறந்தோம்; நல்லபடி
என்றும் சிரித்தே இருப்போம்; மகிழ்ந்திருப்போம்!
ஆனாலும் சொல்லுகிறேன்; அன்புடைய மாணவரீர்!
தேனும் தினையும் தெவிட்டுகின்ற செந்தமிழை -
செந்தமிழ் நாட்டைச் - சிறிதே நினையுங்கள்!
எந்தமிழ மாந்தர் இருக்கும் நிலையறிந்தால்
இக்கால் நகைத்திருக்க ஏது இடம்? கல்வியினால்
முக்காலும் நல்லபயன் மூண்டிருக்க வேண்டாவா?
கொஞ்சம் உமைமறந்து, என் கூடவரு வீர்களெனின்,
பஞ்சம், பசித்துயரம், பாடுபட்டும் உண்ணாமல்
உள்ளொடுங்கிப் போன உலர்வயிறு, கூன்முதுகு,
முள்ளெழுந்து நின்றதுபோல் மொய்த்த தலைமயிர்கள்
சப்பைத்தோள், வெள்ளெலும்பு, சாறுபிழிந் திட்டவுடல்,
குப்பைமேல் வாழ்க்கை, குழந்தையெனும் கொத்தவரைப்
பிஞ்சுகளைத் தாம்சுமந்த பீற்றைச் சடலங்கள்,
குஞ்சு குளுவான்கள், குந்தவழி யில்லாமல்,
சாலையோ ரத்தும், சகதியிலும், பொட்டலிலும்,
ஆலையிலே நுண்பஞ் சலைவதுபோல் தாம்அலைந்து,
வாழாமல் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையினைக் காட்டிடுவேன்!
சூழாமல் சூழ்ந்திருக்கும் கொல்வறுமை என்சொல்வேன்?
உண்ணுவதோ கூழ்தான்! உடுத்துவதோ கந்தைதான்!
எண்ணுவதே இல்லை; எதிர்ப்படுவ தெண்ணுவது!
தின்னுவதில் ஆவலில்லை; தென்படுவ தின்பதுதான்!
என்னயிது புன்வாழ்க்கை என்னும் சலிப்பில்லை!
வாழ்ந்திருக்க ஆசையில்லை; வாய்ந்திருக்கப் பாசமில்லை!
சூழ்ந்திருக்கும் இவ்வுலகம் சுற்றுவதா? நிற்பதுவா?
தட்டையா? இல்லை, தனியுருண்டை யா வென்னும்
நெட்டை நினைவில்லை; ஏதோ நிலத்திடையில்
வந்து பிறந்துவிட்டார்; வாழ்கின்றார்! தீம்பசிக்கு
வெந்ததுவோ? வேகா ததுவோ? விழுங்கிவிட்டால்
நல்ல நிழலோ? நடுத்தெருவோ? தூக்கந்தான்!
கல்லொன்றோ, கையோ, தலைக்கு; கருத்திருந்தால்!
இன்னவர்கள் எங்கோ இருப்பாரென் றெண்ணாதீர்!
அனைவரும் நம்மிடைதான் அன்றாடம் வாழ்கின்றார்!
இத்தகைய காட்சிகண்டே, இப்புறமாய் நாம் நகர்ந்தால்
மெத்தைகள், மாடிகள், மேன்மாட மாளிகைகள்,
வண்ணங்கள் தோய்ந்த வழவழப்பு வன்சுவர்கள்,
கண்ணாடிச் சாளரங்கள், காற்றுலவும் மாடங்கள்,
மின்னோடுங் கூடம், மினுமினுப்பு மென்தரைகள்,
முன்னே இருக்கைகள், மூசைப்பொன் பூச்சுகள்,
கட்டிலிலே மெத்தை, கதவு பலகணிக்குப்
பட்டாலே தொங்கு திரை, பல்வண்ணப் பேழைகள்,
பற்பலவாய் உள்ளறைகள், பாங்கான காப்பறைகள்,
கற்பதித்த தட்டுகள், காட்சிக் கவின் பொருள்கள்,
உள்ளே குளியலறை, ஒன்றிரண்டு நீந்துகுளம்!
கள்ளின் இளமயக்கம், காற்றோ கதகதப்பு,
முல்லைக் கொடிபோன்ற மின்னிழையார் மூசுகின்ற
மல்லிகைக் காடு, மணக்கின்ற மென்தென்றல்,
சொற்புனைந்து வாழுகின்ற சோர்விலாப் பாவலர்கள்
கற்பனையில் காட்டும் கனவுலகக் காட்சியெல்லாம்
மெய்யாய் விரிந்திருக்கும் மேம்பட்ட கோலங்கள்!
பொய்யன்றே இங்குப் புகன்றிருத்தல் கொஞ்சந்தான்!
அப்படிப் பட்டதோர் அண்ணாந்த வாழ்க்கையிலே
எப்படிப் பட்டோர் இருப்பாரென் றெண்ணுங்கள்!
அன்னவர்கள் வாழ்முறைகள்! அன்றாட உண்டிகள்!
மின்னிழைகள் ஓடுகின்ற மேலுடைகள்! கண்கவரும்
பொன்னிழைகள் என்ன! பொலிவுநிலை என்னென்ன!
இன்னிசைகள்! ஆடல்கள்! என்றும் ஒளி மழைக்குள்
வாழ்ந்திருக்கும் வாழ்க்கையினை வண்ணிக்க நாமறியோம்
சூழ்ந்திருக்கும் வெற்றுநிலைச் சூழலிலே வாழ்கின்றோம்!
இப்படியோர் வாழ்க்கை!
இதைவிட்டு நாம்நகர்ந்தால்,
முப்படியாய்த் தம்முடலை முப்பொழுதும் வாட்டுகின்ற
அன்புத் தொழிலாளர் அன்றாட வாழ்க்கையினைத்
துன்பமுறக் காண்போம்! துயரத்திற் கென்னகுறை?
என்பை முறுக்கி, எழிலுடலைத் தாம்உருக்கி,
மன்பதை தன்னலத்தில் முற்றும் மனந்தோய்ந்து,
தம்பெண்டு பிள்ளைத் தனிநலத்தைக் காணாமல்,
கம்புண்டும், மொத்தைக் களியுண்டும், ஆண்டுக் கோர்
நல்லுடையைக் கண்டும், நலமின்றி வாழ்பவர்கள்!
கல்லுடைப்போர், மண்ணெடுப் போர், காட்டுமரமறுப்போர்,
பாதை அமைப்போர், பயிர்த்தொழில்கள் செய்திடுவோர்,
காதை அடைக்கும் கடும் இரைச்சல் போடுகின்ற
ஆலையிலே பஞ்செடுப்போர், நெய்வோர், அழலிரும்புச்
சாலையிலே தம்முடலைச் சாறாய்ப் பிழிந்திடுவோர்,
ஊர்திகளை ஓட்டிடுவோர், ஓடாக வெய்யிலிலே
சேர்துகளும் தூசிதும்பும் சேர்ந்திடவே கைவண்டி
தள்ளல், இழுத்தல், தலை - முதுகில் தூக்கிவரல்,
அள்ளல், அடைத்தலெனும் ஆன்றபணி அத்தனைக்கும்
பொன்னுடலை ஆட்படுத்தும் புண்பட்ட நெஞ்சாளர்,
என்னபடி யாயுழைத்தும் ஏறாத வாழ்க்கையிலே,
சீறும் கடல்விளைவைச் சென்று கொணர்ந்துவந்தே
ஊறும் குருதிக்கே ஊட்டமென விற்றுவிடும்
மீன்பிடிக்கும் தோழர், மிகப்படிப்பார் கல்விக்குத்
தான்படிக்கா வாழ்க்கையினைத் தந்துதவும் அச்சாளர்,
- என்று பலவாறாய் இவ்வுலகம் வாழ்வதற்கே
அன்றாடம் தாம்சாகும் அருமைத் தொழிலாளர்!
அன்னவர்வாழ் கின்றநிலை! அங்கே எழுகின்ற
சின்ன தெருச்சண்டை! சிற்சிலகால் குத்து வெட்டு!
கம்புகத்தி மோதும்; கணக்கு மருத்துவர்க்கே!
வம்புவழக் காகும்; வழக்குரைஞர் பைநிறையும்!
இப்படியோர் வாழ்க்கை!
இதைவிட்டு நாம்நகர்ந்தால்
எப்படிப்பும் வாய்க்க இருக்கின்ற கல்வியகம்!
அங்கிருக்கும் ஓருலகம்! ஆசிரியர் மாணவர்க்குப்
பங்கிருக்கும் அவ்வுலகில்! பண்பும் மிளிர்ந்திருக்கும்!
என்றாலும் சிற்சிலகால் தொல்லை எழுந்துவிடும்!
நின்றாலும் தப்பாய், அமர்ந்தால் நெடுந்தப்பாய்
நேர்ந்துவிடும்! அக்கால் நிகழ்ந்துவிடும் போராட்டம்!
ஆர்ந்துவிடும் காவலர்க்கோ ஆக்கம் பலவிருக்கும்!
குண்டாந் தடிகள் குலைநடுங்கச் சூழ்ந்தாடும்!
மண்டைக்குள் மாணவர்கள் வைத்திருப்ப தென்னென்று
காவலர்கள் சிற்சிலபேர் காண உடைப்பார்கள்!
ஆவலாய் உள்ளிருந்து மூளைவெளி யானவுடன்
‘ஓகோகோ’ வென்றே உரக்கச் சிரிப்பார்கள்!
சாகாக் கணக்குவரும்! ஆட்சியினர் சான்றுவரும்!
மன்றம் நிறுவார்! மாணவரும் ஒப்பிடுவார்!
ஒன்றிரண்டு மூன்றென்றே ஓடிவிடும் நாட்களெல்லாம்!
எல்லாம் மறந்துவிடும்! என்றேனும் மீண்டொருவர்
கல்லால் அடிப்பார்; கலகம் எழுந்துவிடும்!
அப்போதும் அப்படியே ஆட்டத்தின் காட்சிவரும்!
எப்போதும் போல்,பின் இறுதித் திரையிறங்கும்!
இப்படியோர் நல்லுலகம்! இங்கிருக்கும் மாணவரை
அப்படிநான் சொல்லவில்லை! ஆனாலும் சொல்லுகின்றேன்!
சொல்லுக்குச் சொல்லவில்லை; உண்மைக்குச் சொல்லுகின்றேன்!
மல்லுக்கா இங்குவந்தோம்? மற்றெதற்கு வந்தோம், நாம்?
வாழ்க்கைக்கிங் கேதான் வழியமைக்கப் பட்டிருக்கும்!
பூழ்க்கை விழைவிற்கும் இங்கேதான் போக்கமையும்!
நன்றாக எண்ணுங்கள்; நானுரைப்ப துங்களுக்கே!
ஒன்றும் கருத்தென்றால் - உண்மையென்றால் ஒப்புங்கள்!
கொள்ளத் தகுந்ததெனில் கொள்ளுங்கள்; குப்பையிலே
தள்ளத் தகுந்ததெனில் தள்ளுங்கள்; தாழ்வில்லை!
தோற்றம் முதலாத் தொடர்ந்திருக்கும் நல்லொழுக்கம்;
ஆற்றலுடல், அன்புமனம், அன்றாடம் கல்விநலம்,
போற்றற் குரிய புகழ்தற்குத் தானுரிய
ஏற்றஞ்சேர் வாழ்க்கைக்(கு) எழுதுமொரு முன்னுரையாய்
மாணாக்கர் வாழ்க்கையொரு மாண்புலக வாழ்க்கை யென்பேன்;
வீணாக்க வேண்டாவென் றன்னவரை வேண்டுகிறேன்!
இக்கால மாணாக்கர் தோற்றத்தை என்னுரைப்பேன்?
முக்கால் முகத்தைவந்து மூடுகின்ற தொங்குமயிர்!
அந்த மயிர்ச்சுமைக்குக் கால்கள் அமைந்தன போல்
வந்திறங்கித் தாடைவரை வாய்ந்திருக்கும் கன்னமயிர்!
பல்வண்ணச் சட்டை! பருத்த தொடையிரண்டை
நல்வண்ண மாயெடுத்து நன்றாய்ப் புறங்காட்டும்
காற்சட்டை! போட்டுக் கழற்ற அரை நாளாகும்!
மேற்சட்டை பெண்களுடை போல மினுமினுக்கும்!
உள்ளக் கவர்ச்சிபோய் ஊனின் தசைக்கவர்ச்சி
எள்ளும் வகையாய் இருப்பதனைக் காண்கின்றோம்!
கற்கின்ற பொத்தகங்கள் தம்மிடையில் காசடிக்கச்
சொற்குன்று மாறுபல சோம்பல் எழுத்தாளர்
பாலியலைத் தூண்டிப் பணம்பறிக்கத் தாமெழுதும்
‘காலிப்பயல்’ - என்னும் [1]கௌபாய்’ வெளியீடு!
அம்மணத்துக் காட்சியிலே ஆர்வமிகக் காட்டிவரின்
செம்மனத்தில் நஞ்சு சிறுது சிறிதாகச்
சேர்ந்தே உடல்கெடுத்தும் உள்ளச் சிறப்பழித்தும்
ஆர்ந்தபே ராண்மை அடியோடு வீழ்த்தியும்
வாழ்வைக் கெடுக்கும் வகையறிய மாட்டாமல்
தாழ்வெய்தும் நல்லிளைஞர் தம்மை எவர்தடுப்பார்?
மாணவியர் போக்கினிலும் மாண்பவியப் பார்க்கின்றோம்.
தூணவர்தாம்! வாழ்க்கைத் துணையவர்தாம்! தாயவர்தாம்!
ஆனாலும் இக்கால் அவர்தோற்றம், போக்கு - எல்லாம்
ஏனோ தெரியவில்லை; ஏற்றமின்றிக் காண்கின்றோம்!
கற்கின்ற பெண்டிர் கவனமெல்லாம் இற்றைக்கு
விற்கின்ற மேலாடை, நாகரிக வீண்பொருள்கள்
பூச்சுகள், சாயங்கள், பூணும் உடற்கவர்ச்சிப்
பேச்சு திரைப்படங்கள், தீமைதரும் பொத்தகங்கள்,
என்பவற்றில் தோய்ந்தே இருப்பதை நாம் பார்க்கின்றோம்!
தின்பவற்றைக் கூட அவர், தீர நினைப்பதில்லை!
நாகரிகம் என்பெயரால் நாமெல்லாம் தாழ்ந்துவிட்டோம்.
வாகாய் அதைப்பெறவும் உள்ளநலம் விற்றுவிட்டோம்.
கண்களை விற்றுக் கலைப்பொருளை வாங்குதல்போல்
பெண்மையை விற்றுவிட்டுப் பேய்மையினை வாங்கிவிட்டோம்.
ஆண்மையை விற்றே அடிமைநலம் வாங்கிவிட்டோம்.
மாண்புதனை விற்று மலத்தைவிலை பேசிவிட்டோம்!
கல்வி உயர்வில்லை; காசுவரும் எவ்வழியும்
நல்வழிதான் என்கின்ற நப்பாசை நம்மவர்க்கு!
இப்படியே போனால் நாம் எவ்விடத்தில் போய்ச் சேர்வோம்?
ஒப்புக்கே வாழ்கின்றோம்! ஓங்குமன வாழ்க்கையில்லை!
காசுபணம், நாகரிகம், காட்சிக் கலைகளின் மேல்
மூசுகின்ற ஈக்களென மொய்ப்பதுவே வாழ்வென்று
பேசுகின்றோம்; செய்கின்றோம்! உள்ளத்தைப் பேணவில்லை!
கூசுகின்றோ மில்லை; ஒன்றாய்க் கூடிப் புலைவிளைப்போம்!
இத்தகைய வாழ்வை - இதில்வாழும் மாந்தரினைப்
புத்துருவில் காட்டிப் புனைந்துரைக்கப் போகின்றார்
இங்கிருக்கும் பாவலர்கள்! இன்னவரின் பாட்டினிலே
பொங்கிவரும் நல்லுணர்வைப் பொக்கென்றே எண்ணாதீர்!
ஆசிரியர், மாணாக்கர், பெண்டிர், தொழிலாளர்,
காசற்ற ஏழையர், காசுநிறை செல்வர் - என
ஆறுவகை மாந்தரின் மாறுவகை ஆக்கமெல்லாம்
ஏறுவகை நல்லுணர்வோ டிங்கே உரைப்பதுடன்,
பெற்ற அழிவெல்லாம் பேச விருக்கின்றார்!
கற்றவர்கள் நீங்கள்! கருத்துநலம் கொண்டவர்கள்!
ஆகவே பாட்டை அமைந்திருந்து கேளுங்கள்!
போகவே கூடாது! புன்மைத் திரையரங்கில்
மூன்றுமணி நேரமும் மூச்சடைக்கும் வாறாக
ஆன்றமர்ந்து கேட்கிலையா? ஆங்கதுபோல் தீங்கின்றிப்
பாவலர்கள் கூறுகின்ற பாட்டரங்கைக் கேளுங்கள்!
தாவிவரும் இன்பம்! தழைத்துவரும் நல்லுள்ளம்!
மேவிவரும் வாழ்க்கை! மிளிர்ந்துவரும் நல்லாக்கம்!
தூவுகின்ற செந்தமிழால் தீங்குவரத் தோதில்லை,
ஆகவே பாவலரை அன்பால் அழைக்கின்றேன்
ஓகத் தமிழுரைக்க ஒவ்வொருவ ராய்வருவர்!
முடிவுரை
அன்புநிறை மாணவர்காள்! ஆன்றமைந்த சான்றோர்காள்!
இன்பமெழப் பாடி எழிற்றமிழின் நற்றிறத்தை
ஒவ்வொரு பாவலரும் இங்கே உரைத்திருந்தார்!
வெவ்வேறு பாச்சுவையால் உள்ளம் விரிந்திருந்தீர்!
சொல்லின் சுவைகண்டீர்! சொன்ன பொருள்கண்டீர்!
வெல்லத் தமிழிரின் விரிவான நற்கருத்தால்
இக்காலம் வாழ்கின்ற எந்தமிழின் மாந்தரையே
தக்கபடி காட்டிவிட்டார்; தங்கொள்கை சாற்றிவிட்டார்.
பாவலர்கள் மக்களையும் பாடிடுதல் நன்றென்னும்
ஆவலால் நாமும் அதைச் சுவைத்துக் கொண்டிருந்தோம்!
என்ன சுவை! என்ன சுவை! என்றே இடையிடையே
தின்னுந் தமிழ்ப்பாத் திறத்தினிலே மெய்மறந்தோம்!
அத்துடனே நம்கடமை ஆகி முடிந்த தென்றால்
மெத்தத் திருடர்நாம்! ஆமிதுவே மெய்யுரையாம்!
பல்வேறு மக்களையே பாவலர்கள் காட்டிவிட்டார்!
சொல்வேறு நம்மின் செயல்வேறா? சொல்லுங்கள்!
ஆசிரியர்க் கண்டோம்! அவர்வழியே கற்கின்ற
மாசற்ற உள்ளத்தின் மாணாக் கரைக்கண்டோம்!
இக்கால் இருவருக்கும் ஏற்றத்தாழ் வெல்லாமும்
தக்கபடி ஆய்ந்து, தகாதவற்றை நீக்கிவிட்டு,
மேலான கொள்கையினை மேற்கொண்டு வாழ்வதுவே
சால்பாகும்! அந்நிலையைச் சாற்றிடவும் தேவையில்லை!
மாணாக்கர் தம்நிலையின் மாண்புணர வேண்டுகின்றேன்!
வீணாக்க வேண்டா விளைபயிரை என்றே நம்
பேரா சிரியப் பெருமக்கள் எண்ணட்டும்!
வாராத வந்தெய்தும்! வந்தவிடர் மாண்டொழியும்!
நேராக யார்மேலும் குற்றம் நினைக்கவில்லை!
தேராமல் கூறுவது தேர்ந்தபின்னை மாறுவது
தீரா இடர்ப்படுக்கும் என்று தெளிந்திருப்பீர்!
ஓராமல் யாருக்கும் ஓர்குறையும் சாற்றற்க!
அஞ்சுதற்கே அஞ்சுக! அஞ்சாமைக் கஞ்சற்க!
எஞ்சுகின்ற நாளெல்லாம் எந்தமிழ்க்கும் நாட்டுக்கும்
மக்களுக்கும் நற்றொண்டு மாண்புறவே செய்மின்கள்!
தக்கபடி வாழ்மின்கள்! தாழ்வகலக் காண்பீர்கள்
பெண்டிர் நலம்பற்றிப் பேசுகின்றோம்! பெண்களுக்குப்
பண்டைப் பெருமை பரக்கவுண்டாம்! ஆனாலும்
அன்னவர்க்குத் தக்க அறிவமைப்பு, செய்கடமை,
பன்னலமும் வாய்க்கும் பரந்த நறுங்கல்வி,
ஆகிய வற்றில் அறிவாய்ந்த சான்றோர்கள்
ஈக வுளத்தோடே எண்ணி வகுத்தளிக்க
வேண்டும்! அவர்க்குரிமை வேண்டும்! அவர்க் காடவர்போல்
யாண்டும் துணிந்துரைக்க - யாண்டும் துணிந்துசெய
வாய்ப்பளிக்க வேண்டும்! வளமாய் உடல்வேண்டும்!
தாய்ப்பெண்டிர் யாவர்க்கும் தன்னந் தனிச்சலுகை
நல்குவதே நல்லறமாம்! நஞ்சுமன ஆடவர்கள்
பல்குழந்தைப் பேறளித்துப் பாவையரைக் கொத்தவரைப்
பிஞ்சுபோ லாக்கிப், பிணந்தின்னுந் தீக்கழுகுக்
குஞ்சுகள்போல் ஏழெட்டைக் கொத்திப் பிடுங்குதற்கே
ஆளாக்கி விட்டே அவரைக்கை விட்டிடுவார்!
தூளாக்க வேண்டுமவர் தோளெலும்பை; மார்பெலும்பை!
கன்னி ஒருத்தியை,ஓர் காமுகனும் கற்பழித்தால்
அன்னவனின் பெற்றோர்க்(கு) அகலாச் சிறையென்று
சட்டமிடல் வேண்டும்! சரிக்குநிகர் வாழ்க்கையினைக்
கட்டியவன் தன்மனைக்குக் காட்டிவிடல் வேண்டுமென
வல்லார் வகுத்தளிக்கும் வாய்ப்புவரும் நாள்வரட்டும்!
நல்லார் பிழைபடவும் நாமிசையக் கூடாது!
பெண்டிர்க்குக் கற்பு பெரிதானால் ஆடவர்க்கும்
உண்டு அதுபோல் என்னும் உயர்நெறியும் வேண்டுமிங்கே!
கன்னியரை விற்றிங்குக் காசடிக்கும் பெற்றோர்க்கும்,
அன்னவரைத் தாம்கொள்ள ஆயிரம்பத் தாயிரமென்
றெண்ணிவை என்னும் இளைஞருடைப் பெற்றோர்க்கும்
நண்ணும் சிறையென்றால் நாடு திருந்தாதா?
மங்கையர் கூட்டம் மகிழ்ந்திருக்க மாட்டாதா?
இங்கிருக்கும் நல்லிளைஞர் எண்ணிச் செயற்கெழுக!
மற்றுத் தொழிலாளர் மாய்ந்துபோ கின்றநிலை
எற்றுக் கிருந்திடுதல் வேண்டுமிங்கே? எண்ணிடுவீர்!
வெற்றுக்கே கட்சி வெறியாட்டம், கொள்கை - எல்லாம்!
தொற்றுநோய் போலத் தொழிலாளர் போராட்டம்!
தன்னுடலால் மக்கள் தனிநலத்தைக் கூட்டுகின்ற
பொன்னேர் தொழிலாளர் உள்ளம் புகையாமல்
கண்ணெனவே காத்தல் அரசின் கடமையென்க!
உண்ணும் உணவும் உடையும் உறையுளுமென்
றெல்லாம் அவர்க்கிருத்தல் எல்லார்க்கும் நல்லதுவாம்!
கல்லா அவருடலம்? காய்ச்சி வைத்த வல்லிரும்பா?
உண்டது தான்செரியா தோர்கூட்டம் வாழுவதா?
உண்பதற்குக் கூழின்றி ஓர்கூட்டம் வாழுவதா?
பேச்சுப்பேச் சென்று நாம் பேசுகின்றோம்! செய்தோமா?
காச்சுமூச் சென்றே கதறுகின்றோம் கூட்டத்தில்!
வல்ல தொழிலாளர் வாழ்ந்திருந்தால் வாழ்வோம், நாம்!
அல்லதவர் வீழ்ந்தால் அனைவோரும் வீழ்ந்திடுவோம்!
ஏழையரின் தம்நிலையோ ஈண்டுரைக்க வொண்ணாது!
கோழையரைப் போலவும்நாம் கூனிவிடல் ஆகாதே!
இல்லையெனும் கூட்டத்தை இல்லாமல் ஆக்குவதில்
தொல்லையென்ன வந்ததுவாம்? தோது தெரியாதா?
ஏழையெனும் ஒர்கூட்டம் என்றும் இருந்திடவே
மோழை மனத்தினர், நாம் முக்காலும் எண்ணுகின்றோம்!
அல்லாக்கால் ஏனவர்க்கே ஆக்கம் ஒதுக்கவில்லை!
எல்லார்க்கும் எல்லாமும் என்னும் சமவுடைமைச்
சட்டமிட அஞ்சுகின்றோம்! உள்ளம் தயங்குகின்றோம்!
திட்டமிட ஏன்தயக்கம்! செல்வரிடம் ஏன்அச்சம்?
ஆள்கின்ற நாமும் அவர்போல வாழ்வதற்கே
மூள்கின்ற ஆசைவந்து மொய்த்துக் கிடக்கின்றோம்!
செல்வர்போல் வாழச் சிறியமனங் கொண்டுவிட்டோம்!
வெல்வர்போல் பேசி விளையாட்டுக் காட்டுகின்றோம்!
மெய்யாய் வினைபடவே உள்ளம் தயங்குவது
பொய்யன்றே! ஆகப் புரட்டுபல பேசுகின்றோம்!
நாட்டுடைமைச் சட்டமிங்கு நாளைக்கே வந்தாலும்
வாட்டுகின்ற கொல்வறுமை வாட்டம் தவிராதா?
குந்தக் குடிசையின்றிக் கொல்பசிக்குக் கூழின்றி
நொந்திருக்கும் ஓர் கூட்டம்! நோகாமல் மற்றொன்று
தொப்புளுக்கும் கீழாகத் தோள்வரைக்கும் தானுண்டு
கொப்புளிக்கப் பன்னீரைக் கேட்பதென்றால் யார் குற்றம்?
ஆள்வோர்கள் சட்டம் அரைநொடியில் அந்நிலையைத்
தூள்தூளாய்ச் செய்யாதா? தோல்விவந்து நேர்ந்திடுமா?
விண்வெளியும் விண்ணின்று வீழும் மழைத்துளியும்
நுண்ஒளியும் காற்றும் - எனும்பூத நுகர்ச்சியைப்போல்
மண்வெளியும் இங்கெல்லா மக்களுக்கும் சொந்தமென்றும்,
உண்வழியை எல்லாம் உழைத்தடைய வேண்டுமென்றும்,
ஏனிங்கோர் சட்டம் இயற்றிவிடக் கூடாதாம்?
ஏனிங்கோர் கூட்டம் எதிர்த்துரைக்க வேண்டுமிதை?
மண்ணுடைமை ஒன்றன்றோ மற்றுடைமை யாவைக்கும்
நண்ணுடைமை யாகநின்று நம்முயர்வை வீழ்த்தியது?
மண்ணைப் பொதுவென்றால் மண்விளைவுந் தான் பொதுவாம்!
பண்ணை முறையில் பயிர்விளைவும் கண்டிடலாம்!
அக்காலை ஏழையென்றும் ஆங்கொருவன் செல்வனென்றும்
செக்காலை மாடுகள்போல் சென்றுவரல் ஏலாது!
செல்வன் இருப்பானேல் ஏழ்மையும் சேர்ந்திருக்கும்!
செல்வம் எவரிடத்தும் சேர்ந்திருத்தல் கூடாது!
எல்லார்க்கும் ஊண் உடைகள், எல்லார்க்கும் வாழ்மனைகள்;
எல்லார்க்கும் வாழ்க்கை எனில், உழைப்பும் எல்லார்க்கும்;
என்றிங்கே ஆகுமட்டும் என்னெழுதி, என்பேசி,
வென்றுவிடப் போகின்றோம்? வீணவைதாம் என்றிடுக!
கற்றோர்கள் இந்தக் கணக்குவிடை கண்டிலரேல்
மற்றோர்கள் ஓர்நாள் மளமளனெத் தாமெழுந்து
கற்றோரின் முன்பே கணக்கெழுதித் தீர்ப்பார்கள்!
வெற்றுரை அன்று விளைவுரையே என்றுணர்க!
அந்தநாள் மட்டும் அடிபிடிகள் சண்டைகள்தாம்!
எந்தநாள் ஆனாலும் எத்தனைநாள் போனாலும்
அந்த ஒருநாள் அனைவருக்கும் நல்லநாள்
வந்துதான் தீரும் வரவேற்க நாமெல்லாம்
காத்திருப்போம்; உள்ளம் கனிந்திருப்போம்; அந்நாளில்
பூத்திருக்கும் இன்பம் பொலிந்து!
- ↑ (Cow Boy: Cow: காலி (ஆ) Boy: பையல் (பையன்) *மேனாடுகளில் மாடு குதிரை மேய்ப்பவர்கள் அணியும் உடை, பழகும் முறை இவற்றை அடிப்படையாகக்
கொண்ட அரையம்மண வெளியீடுகள்!)