உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 8/010

விக்கிமூலம் இலிருந்து

9. அரசுயர் பள்ளி, உரத்தநாடு

(தி.பி. 2006 விடை 17 (31.5.75) அன்று உரத்தநாடு அரசுயர்பள்ளியில்
நிகழ்ந்த பாரட்டரங்கத் தலைமையுரை)


முன்னுரை:

பேரன்பு கொண்டவரே! பெரியோரே!
தாய்மாரே! பெருமை மிக்க
காரம்பு மழைபொழியும் கழனிமிகு
எழிலுரந்தைக் கவின்மிக் கோரே!
நீரம்பொன் நெல்விளைத்துச் சோறுதரும்
நெடும்புகழ்சேர் தஞ்சை யோரே!
வீரம்பொய் யாத்தடந்தோள் இளைஞர்களே!
விறல்தமிழால் வணங்கு வேனே!

பாவேந்தன் பெருவிழாவாம்! இவ்விழாவில்
பாவலர்யாம் பாட வந்தோம்!
பாவேந்தன் பாட்டிலவன்; மறல்வேந்தன்
புரட்சியிலே! மலர்மி குந்த
காவேந்துங் கருங்குயில்போல் தமிழகத்தின்
கரையணைந்த புதுவை தன்னில்
சாவேந்தும் வரையினிலே செந்தமிழைச்
சலிப்பின்றிப் பாடி னானே!

இக்காலும் தமிழ்ப்பாடும் புலவருளார்:
இரந்துசோ றுண்ண வேண்டித்
திக்காலுக் கோரிருசொல் பழந்தமிழில்
திருடியொரு பாட்டைச் செய்து
முக்காலும் என்பாட்டே நம்புங்கள்
எனப்பொய்யால் முக்கா டிட்டுப்
பொக்காயும் பதராயும் தமிழ்வளர்ப்பார்;
போலிலனே புதுவை வேந்தன்!

(வேறு)


தக்கதமிழ்ச் செழுந்தீம்பா! நற்றமிழ்ப்பா!
தனிச்சுவைப்பா! தண்டமிழ்ப்பா! தப்பாதப்பா!
எக்காலுந் தமிழரிடை இருந்தமிழ்ப்பா!
இணையிற்பா! எழில்சேர்பா! இலக்கணப்பா!

முக்காமல் முணகாமல் முகிழ்த்ததப்பா!
முறுவல்பா! புரட்சிப்பா! முழுதுந்தேன்பா!
செக்காடும் ஓசைவராச் செந்தமிழ்ப்பா!
சிறப்புப்பா! சுவையப்பா! சொல்வா யப்பா!

காராடும் குளிரிருக்கும்! கதிராடும்
கனப்பிருக்கும்! காற்றிருக்கும்! ஊற்றிருக்கும்!
சீராடும் குழந்தைக்குச் சிணுங்காத
சிரிப்பிருக்கும்! செழிப்பிருக்கும்! செழும்பூஞ்சோலை

நீராடும் கன்னிக்கு நினைவிருக்கும்
படிகாதல் நிகழ்விருக்கும்! அன்பிருக்கும்!
போராடும் வீரர்க்குப் புரட்சியெனும்
புத்துணர்வால் தோள்களெலாம் புடைக்கும் அன்றோ!

(வேறு)


தமிழ்க் குடும்பத் திட்டம்
தந்திருப்பார் அங்கே!
குமிழ்த் தெழுந்த இன்பம்
குவித்திருப்பார் பாட்டில்!
சிமிழ்த் துவிழி யாத
செந்தமிழ வீரர்!
தமிழ்ப் புரட்சித் திட்டம்
தந்திருப்பார் பாட்டில்!

ஆரியத்துக் கோழைக்
கடிமையுற்ற போதில்
வீரியத்தை நாமும்
விட்டுவிட்ட போதில்,
கூரியசொல் வாளால்
குத்திமறம் கீண்டி
நேரியபு ரட்சி
நிகழ்த்திவைத்த கோமான்!’

(வேறு)


பாவேந்தன் சொல்லெடுத்துத் தன்மானந் தனைக்குழைத்துப்
பாட்டென்று தாரா விட்டால்,
நாவேந்தும்மொழி யெல்லாம் சமற்கிருதம்! கதைகளெலாம்
இராமன்கதை பார தந்தாம்!
பூவேந்தும் கைகளிலே புழுக்கையினை அன்றோநாம்

ஏந்திநிலம் புதைந்தி ருப்போம்!
ஈவேந்தும் கடமையினால் விழா வெடுப்போம்!
எனினும்வினை இம்மி செய்யோம்!

(வேறு)


செந்தமிழர் தோள்களிலே மறமேற்றி
வைத்த செம்மல்! செழுந்தீம் பாவால்
எந்தமிழர் நாவினிலே இனித்ததமிழ்க்
கண்டெடுத்தே இழைத்த வேந்தன்!
அந்தமிழப் பெண்டிரெலாம் அணியணியாய்
ஆரியத்தால் அழிந்த போதில்
வந்துதமிழ் மானத்தைத் தூண்டுவித்து
மங்கையரைக் காத்த வீரன்!

கைம்பெண்கள் எழுகென்றான்! கடிமணங்கள்
செய்கென்றான்! கன்னிப் பெண்கள்
மொய்ம்புதரும் காதலினால் தாம்விரும்பும்
ஒருவனையே முடிக்க என்றான்!
செய்ம்புதுமை ஒன்றன்றே அவன்பாட்டில்!
சீர்திருத்தம் முழங்கச் செய்தான்!
பைம்புதரில் பூத்ததமிழ்ப் பூவானான்!
பைந்தமிழ்ப்பூந் தும்பி யானான்!

ஒட்டாரங் கட்டியொரு சொல்லுக்கே
ஊர்முழுதும் அலைந்து தேடிக்
கொட்டாவி விட்டுமுகம் மேல்பார்த்துக்
கீழ்பார்த்துக் குனிந்தெ ழுந்து
கட்டாத பாட்டெல்லாம் மொழிக்கயிற்றில்
கட்டியொரு ‘கவி’யென் றூரைத்
தெட்டாமல் தெட்டிவரும் பொய்ப்புலவர்
போல்அல்லன் புதுவை வேந்தன்!

மாணிக்கச் செழும்பரிதி மேற்றிசையின்
வானத்தில் மறையும் போதில்
ஆணிப்பொன் முத்தெனவே கீழ்த்திசையில்
நிலவொளிரும் அழகைப் போல
ஏணிக்குப் படிபோல ஒருசொல்மேல்
ஒன்றுவந்தே இறங்கு கின்ற
பாணிக்கிங் கார்புலவன்; பாவேந்தப்
புலவனல்லால்? பாவல் லோரே!

கண்ணனுக்குத் தாசனென்பான் ‘கவி’யெழுத
வல்லனென்பான்; கழுத்த றுப்பான்!
புண்ணுக்குச் சீழ்போலப் புழுவுக்கு
மலம்போலப் புதுமை யென்னும்
மண்ணுக்குச் செந்தமிழால் மாரடிப்பான்!
மாண்பிழப்பான்! மலத்தைத் தின்னும்
பெண்ணுக்குப் பிறக்கின்ற குட்டிகள்போல்
பாப்பலவாய்ப் பெற்றான் அங்கே!

ஆயிரம்பேர் நடுவினிலே பெண்விளக்கை
நிறுத்தியங்கே அவிழ்த்துப் போட்டு
வாயினிலே நீருற்றல் போல்மதுவை
வயிறார மண்டி விட்டுக்
காயாயும் பிஞ்சாயும் சொல்லுதிர்த்துக்
காட்டியவை கனிகள் என்றே
வாயுரமாய்ப் பேசுகின்ற வகையல்லால்
நல்லதமிழ் வழக்கங் குண்டா?

பளபளக்கும் திரைப்படத்துக் கூத்தியர்தம்
பண்பிழக்கும் பான்மை யெல்லாம்
வளவளக்கும் சொல்லாலே வழித்தெடுத்துப்
பாட்டென்னும் வடிவங் காட்டித்
தொளதொளக்கும் ஆடையினைச் சிறுகுழந்தை
போட்டதுபோல் துவளக் காட்டும்,
சளசளக்கும் ஓசையெல்லாம் பாட்டென்றால்
செந்தமிழும் சாதல் நன்றே!

ஆடையினை முற்றாக அவிழ்த்துப்போட்
டாடுவதே ஆடல் என்றால்,
ஓடையிலே நீர்போல ஒன்பதுகோ
டிப்பாடல் உரைக்க வல்லோம்!
கூடையிலே வாருகின்ற சரளைகள்போல்
கோடிப்பா குவித்தும் என்ன?
பாடையிலே போகின்ற பிணம்போலுன்
பாடலெல்லாம்! பயனென் காண்போம்!

பாவேந்தன் மொழியுணர்வுப் பாடலொன்றைக்
குழந்தைக்கும் படித்துக் காட்டில்
நாவேந்தும் செந்தமிழை! நல்லுணர்வை

நெஞ்சேந்தும்! நடையில் வீரம்
தாவேந்திச் சதிராடும்! இனப்பற்றுத்
தழைத்துவரும்! தமிழ்நாட் டுக்குக்
காவேந்தி வல்பகையை ஓட்டிவிடும்
திறம்முகிழ்க்கும்! காண்பாய் இன்றே!

அத்தகைய புதுமைப்பா, புரட்சிப்பா
ஆக்கிவைத்த அண்ணலுக்கே
இத்தகைய விழாவெடுப்பார் எந்தமிழர்
இழிவுக்கா ஏற்றஞ் செய்வார்!
புத்தகத்தைப் புரட்டாமல் புழுத்திருக்கும்
இந்துமதம் புரட்டு கின்ற
எத்தகத்தைக் கண்டுகொள்வார் எந்தமிழர்
இனிவருநாள்! ஏற்றங் காண்பார்!

முடிவுரை!

அன்புடைப் பெரியீர்! அருமைத் தமிழரீர்!
இன்பம் தந்த இனியபா வரங்கம்
ஒருவா றாக உய்வைத் தந்தது!
கருவாய் இருந்த தமிழ்நலம் கனிந்தது!
எண்ணிப் பாருங்கள்! எந்தமிழ் வாழும்
மண்ணில் பாரதி தாசனார் வந்து
பிறந்திரா திருந்தால்...! உணர்வு பிறக்குமா?
இறந்திரா திருந்தால்...! என்னென்ன விளையும்?
எண்ணிப் பாருங்கள்! எண்ணிப் பாருங்கள்!
கண்ணினா லன்று! கருத்தில் பாருங்கள்!

பாவேந்தர் பிறந்தார்! பாட்டினி லேஓர்
ஆவல் பிறந்தது! தமிழர் அனைவரும்
பாட்டுத் திறத்தினில் பாரையே வெல்லுவார்!
நாட்டுப் பற்றும், நன்மொழிப் பற்றும்
பாட்டால் வளரும் பான்மையை அறிக!
பாட்டுப்புலவன் பாரதி தாசன்
ஊட்டிய உணர்வால் ஊமையும் பாடினான்!
காட்டிய கருத்தால் கண்ணிலான் கண்டான்!

தென்றலாய்ப் பாடினான்! தீந்தமிழ் சொன்னான்!
தென்றலடிக்கும் திறத்தைப் பாருங்கள்!

‘தென்றலடிக்கையில் பச்சிளங்கீற்றுச் சிலிர்த்து
நிலைகுலைந் தாடுதல் போல்....’

‘அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடங்கும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன்
சிந்தை, உடல் அணுஒவ்வொன் றுஞ் சிலிர்க்கச்

செல்வம்ஒன்று தவழ்ந்துவரும் அதன்பேர் தென்றல்!’

(வேறு)


இனி,
பாவேந்தர் உள்ளத்துள்ளே எரிமலை புகைந்ததென்றால்
ஈவாக என்னநிற்கும்? என்பதை அறிய வேண்டும்!
சாவேந்திச் சென்ற தந்த தனிமகன் தனையென்றாலும்
தூவுந்தீக் கனப்பால் இன்றும் துவைகின்றார் பகைவர் அன்றோ?

(வேறு)


எரிமலைக் குமுறலை இதோ; இவண் காணுக!:

‘எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆணை!

இனியெங்கள் ஆட்சியிந் நாட்டிலே!”

அடுத்தொரு குமுறலை அதோ கேளுங்கள்!

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!’

‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!

செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’


அடுத்து, அவர் புரட்சிப் பாவலர் ஆகிக்
கடுத்த நெஞ்சொடும் கனலொடும் பேசுவார்!

“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு!

பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்

தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை!”

“இருக்கும் நிலைமாற்றஒரு புரட்சிமனப் பான்மை

ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.”


அடுத்துப்
பெண்மை போற்றிய பெருமைப் பாவலர்
ஒண்மை பாரதி தாசப் பாவலர்!

‘பெண்களால் முன்னேறக் கூடும். நம்

வண்தமிழ் நாடும்எந் நாடும்’ - என்று

எடுத்த எடுப்பிலே முழக்கம் இடுவார்!
அடுத்த குரலிலே ஆணையே பிறக்கும்!

‘பெற்றநல் தந்தைதாய் மாரே நும்

பெண்களைக் கற்கவைப் பீரே!


அடுத்தொரு பாடல் அடியைக் கேட்பீர்!
துடித்த அவர் உள்ளக் குமுறலைத் தோய்ப்பார்!

‘ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை!
வாணிகம் செய்யலாம் பெண்கள் - நல்

வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!’


தமிழகம் தன்னைக் காத்திடச் சொல்லிக்
கமழ்நறும் பெண்மைக்குக் கடமையைத் தூண்டுவார்!

‘தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் - பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்!
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்!
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!’

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள் -
என்று


மெச்சும் பெண்மையின் மேன்மையைப் பாடியோர்
உச்சுக் குடுமிகள் காலத்தில் உண்டா?

‘கலியாணம் ஆகாத பெண்ணே! - உன்
கதிதன்னை நீநிச் சயம்செய்க கண்ணே!
வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
வாங்கவே வந்திடு வார்சில பேர்கள்!

நல்ல விலைபேசு வார்கள் உன்னை

நாளும் நலிந்து சுமந்துபெற் றோர்கள்;

கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையும் காட்டார்;
வல்லி உனக்கொரு நீதி - இந்த

வஞ்சகத் தரகர்க்கு நீஅஞ்ச வேண்டாம்!’

- என்று கூறி,

‘கற்றவளே ஒன்று சொல்வேன் உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்’

என்று முடித்தவர்,

“...... .... ...... .... அவர்

ஞாயந் தராவிடில் விடுதலை மேற்கொள்’


- என்று துணிவையும் ஏந்திழைக் குரைப்பார்!
பெரிய உலகில் பெண்ணலம் பேசிய
அரிய பாவலன் பாரதி தாசன்!

அடுத்துப்,
பாவேந்தர் ஒரு பகுத்தறி வுணர்வினர்.
ஆவலால் இதனையும் அவர்வா யாலே
கேட்டு மகிழ்வோம்!

‘குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசங்கெட்டுப் போனது நமதுநன் னாடு!’

‘கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமை யாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்!
உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடைமை முற்றும் படையைஏவி
அடையும் மன்னர் நிலைமையும்
கடவுளாணை யாயின், அந்த
உடை வெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ? தன்

கழுதைதான் முன்னேற்றுமோ?

அடுத்துப்,
பாரதி தாசன் பைந்தமிழ் இனத்தையெந்
நேரமும் காலமும் நிமையமும் காத்தான்!
அவனின் காவல் எப்படிப் பட்டது?
அவன்குர லாலே அவனுளங் கேட்போம்!
அவனின் சூளுரை ஆர்ப்பரிப் பிஃதாம்!


‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்’

“செந்தமிழே உயிரே நறுந்தேனே!

செயலினை மூச்சினை உனக்களித்தேனே!’


- இப்படிப் பலவா றெடுத்தெடுத் துரைக்கலாம்!
அப்படி உரைக்கினும் அடிமைத் தமிழனுக்
குணர்வு கொளுத்துதல் உலகினில் கடினம்!
உணர்வுத் தீயினை ஊர்ஊ ராகப்
பாரதி தாசனின் பாடலால் பரப்புக!
வேர்அது தமிழர்க்கு! தமிழ்க்கது விளைவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_8/010&oldid=1858587" இலிருந்து மீள்விக்கப்பட்டது