கனிச்சாறு 8/011
10. மது ஒழிப்பு
(தி.பி. 2006 விடை 22 (5.6.75)ஆம் நாள் அன்று நடைபெற்ற உரத்தநாடு
வட்ட மதுஒழிப்புச் செயற்பாட்டு மாநாட்டில் நடந்த பாட்டரங்கத்தில்
தலைமையேற்றுப் பாடியது)
முன்னுரை:
பேரன்பு மிக்க வாய்மைப்
பெரியோரே! அன்னை மாரே!
கூரம்புச் சொல்லால் பாக்கள்
குமிழ்த்திடும் பாவல் லோரே!
சேரன்பாண் டியன்சோ ழன்கள்
சேர்ந்திங்கே இருப்ப தைப்போல்
ஈரன்பால் வந்தீர் இங்கே!
எல்லார்க்கும் வணக்கம் சொல்வேன்!
கற்றோரும் வந்தீர்! நூலைக்
கல்லாரும் வந்தி ருப்பீர்!
கற்றோரும் குடிக்கின் றார்கள்!
கற்றோரே குடிக்கும் போது
மற்றோரா விலக்கு வார்கள்?
மதுவைத்தான் சொல்லு கின்றேன்!
மற்றொரு - குடியு முண்டு;
மதியினால் குடிக்கும் பாட்டாம்!
பெண்களும் இக்கா லத்தில்
பெருமையாய்க் குடிக்கின் றார்கள்!
பண்களே அவர்கள் என்றால்
பாடல்கள் ஆண்கள் ஆகும்!
பண்களும் பாட்டும் சேர்த்தே
பயிலுதல் வேண்டும் அன்றோ!
பெண்களும் அதனால் தானோ
என்னவோ, பிழைசெய் கின்றார்!
(வேறு)
மதுவிலக்கு வந்தபின்னே மாநாடா என்பீர்!
மதுவிலக்கு வந்தாலும் மதிவிலக்கு வேண்டும்!
எதுவிலக்கு நேர்ந்தாலும் சட்டத்தால் நேரின்
எல்லாரும் மனத்தாலும் அதுவிலக்கல் வேண்டும்!
புதுவிளக்கு மாற்றுக்குப் பட்டுக்குஞ் சம்போல்
போற்றாத சட்டத்தால் யாருக்கென் பயனாம்?
புதுவிளக்கம் பெறவேண்டி மாநாடு வைத்தார்!
பொற்பதக்கம் தனில்வயிரம் பதித்ததுபோல் என்பேன்!
சட்டத்தால் தடுத்தாலும் பழக்கத்தால் செய்வோம்!
‘சரிக்குச்சரி’ என்பதெல்லாம் சட்டந்தான்! சாதிப்
பட்டத்தால் - சாதியினால் - வேறுபட்டுப் போனோம்!
பழக்கமென ஒன்றுண்டே யார்சொல்லிக் கேட்கும்?
திட்டத்தால் நடப்பதெல்லாம் பொருட்செலவாம் ஆட்சி!
திருப்பதிக்கும் பழனிக்கும் போய்ப்போய் வந்தாலும்
ஒட்டுவது தான்ஒட்டும்; முழுமையுமா ஒட்டும்?
உண்மையிலே மதுவிலக்கும் அப்படித்தான் என்பேன்!
மதுக்கடையை எடுத்தார்கள்; புதுக்கடைவைத் தார்கள்!
மதுவேண்டாம் என்றார்கள்; கலக்கல்குடித் தார்கள்!
எதுக் குறைவு நம்மவர்க்கு? எதையும்செய் வார்கள்?
எத்தனைதான் தடுத்தாலும் கள்ளப் பணத்தாள்கள்
புதுப்புதிதாய் அடித்துவர விலையா, நம் மக்கள்?
போட்டசட்டம் ஏட்டிலென்றால் புழங்குசட்டம் நாட்டில்!
பதுக்கலுக்குச் சட்டமிட்டார்! கடத்தல்செய் கின்றோம்!
பாதியினைச் சட்டத்தால்! பழக்கத்தால் மீதி!
எனவேதான் ‘மதுவிலக்கு மாநாடென்’ றில்லை!
‘மதுவிலக்குச் செயற்பாட்டு மாநாடென்’ றார்கள்!
முனமேதான் மதுவிலக்குச் சட்டத்தால் செய்தோம்!
முழுவதையும் விலக்கினமா? கள்ளமது வுண்டோம்!
மனமேதான் சட்டத்தின் செயற்பாட்டு மேடை!
மனந்திருந்தத் தானிந்த மாநாடு போட்டார்!
இனமெல்லாம் அப்படித்தான்; கோணிக்கொண்டு போகும்;
குடிக்காதீர் என்றுசொன்னால் யாரிங்குக் கேட்பார்!
குறள்முனிவன் காலத்தில் இருந்தேதான் சொன்னார்!
பிடிக்காத ஒன்றாநாம் விட்டுவிட்டுப் போக!
பெரியபுட்டில் ஒன்றென்றால் அடடா, நம் அண்ணன்
நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பார்; வான் மேலே
நடப்பது போல் மனமகிழ்வர்! அதைவிலக்கு வாரா?
துடிக்காதா அவர்நெஞ்சம்! எண்ணி யெண்ணிப் பார்ப்பார்?
‘தூதூதூ என்னசட்டம்?’ எனத்தேடிப் போவார்!
துடிக்கின்ற நெஞ்சத்தை அங்கொருவன் பார்ப்பான்;
தோன்றுமவன் மூளையிலே புதுக்கருத்தாம் ஒன்று!
வடிக்கின்ற மறைவிடத்தைத் தேடிமது விற்பான்!
வந்துவிழும் அண்ணன்மார் தம்பிமார் கூட்டம்!
படிக்கின்றோம், சொல்கின்றோம்; பழக்கம்விட்டுப் போமா?
பழக்கத்திற் கிடம்விட்டால் முழுக்கஅது கேட்கும்!
நடிக்கின்றோம் திரைப்படத்தில் குடித்ததுபோல்! தம்பி,
நாள்தோறும் பார்க்கின்றான் ஒருநாளில் செய்வான்!
எனவேதான் நம்மக்கள் மனந்திருந்த வேண்டும்!
என்பதற்குச் செயற்பாட்டு மாநாடு போட்டார்!
தினவிருக்கும் மனத்தினிலே; ஆனாலும் அறிவால்
தேர்ந்துவிட்ட நல்லவற்றை நினைத்திருக்க வேண்டும்!
இனமிருக்கும் இருப்பினிலே செயலிழந்து போனால்
என்றென்றும் அடிமையராய் ஏழையராய்ப் போவோம்!
மனமிருக்கும் பெரியோரே! மதியிருக்கும் போதில்
மதுவெதற்கு? இழிவெதற்கு? மானம்விடல் எதற்கு?
குடித்தவனைப் பாருங்கள்; குடிக்கத்தோன் றாது!
குடித்தவனைப் பெற்றெடுத்த தாயும்மனம் வெறுப்பாள்!
குடித்தவனை மனைவியுமே உளம்விரும்ப மாட்டாள்;
குடித்தவனை அப்பன்என மகன்கூற விரும்பான்!
குடித்தவனுக் குறவு - எனச் சுற்றத்தார் சொல்லார்!
குடித்தவனை ஊர்வெறுக்கும்; உலகமெலாம் தூற்றும்!
குடித்தவனுக் கவனையன்றி யாருந்துணை யில்லை;
குடிக்கையிலே மதுத்துணை;பின் அதற்கவன்தான் துணையே!
மதுக்குடிப்பால் ஒருவனது மானமெல்லாம் போகும்;
மதுக்குடிப்பால் குலப்பெருமை மண்ணாகிப் போகும்;
மதுக்குடிப்பால் கல்விநலம் சீர்கெட்டுப் போகும்;
மதுக்குடிப்பால் அறிவுணர்வும் அழிந்துமடந் தோன்றும்!
மதுக்குடிப்பால் பொருளழியும்! உடல்நலமும் தாழும்!
மற்றுநம்மின் முயற்சியெல்லாம் வாழ்க்கையெலாம் சாகும்!
மதுக் குடிப்பு மதிகுடிக்கும்! உயிர்குடிக்கும்! மற்றும்
மாண்டபின்னும் குடும்பத்தின் பெயர்குடிக்கும் அன்றோ?
(வேறு)
மதுவால் அழிவது மானம் என்றே
த. தோ ழப்பன் சொல்வார்!
மதுவால் அழிவது குலமும் என்றே
பன்னீர்ச் செல்வன் சொல்வார்!
மதுவால் அழிவது கல்வியென் பதையே
பொன்னியின் வளவன் சொல்வார்!
மதுவால் அழிவதே அறிவுதான் என்றே
அரங்க சாமியிங் குரைப்பார்!
(வேறு)
“பொருளழியும் மதுக்குடிப்பால் எனும் பொருளின் பாட்டைப்
புலவர் இரா.பண் டரிநா தன்வந்திங் கிசைப்பார்;
இருள்சூழும் முயற்சியெலாம் மதுக்குடிப்பால் என்றே
இங்குவந்து தமிழேந்தி எடுத்தெடுத்துச் சொல்வார்!
மருளழிந்த மதிமிகுந்தீர்! பெருமைமிகக் கொண்டீர்!
மானத்தை, நற்குலத்தை, கல்வியறி வதனை,
பொருள்முயற்சி தம்மையெல்லாம் யாரிழக்கச் செய்வார்?
பொதுமைநலம் வேண்டியதைப் பொறுமையுடன் கேட்பீர்!
(வேறு)
முதற்கண்,
மதுக்குடிப்பால் அழிகின்ற மானந்தன்னை
மதிமிகுந்த தோழப்பன் எடுத்துச் சொல்வார்!
மதுக் குடிப்புப் போலில்லை தமிழ்க் குடிப்பு;
மதிக் குடிப்பு! தேன்குடிப்பு! அமிழ்தம் தோய்ந்த
புதுக்குடிப்பு! பாக்குடிப்பு! பருகு தற்குப்
புளிப்பில்லை; தனியினிப்பு தமிழினிப்பு!
எதுக் குடிப்புத் தவிர்த்தாலும் தமிழ்க் குடிப்பை
எந்தமிழர் மேற்கொள்க! உயிரி னிக்கும்!
(தோழப்பன் ‘மானப்’ பாட்டு)
அடுத்து,
புலவர்பொன்னி வளவனையே அறியார் இல்லார்;
பொலமிகுந்த புலமைநலம் வாய்ந்தார் அன்னார்,
சிலவர்போ லன்றியிவர் சிரிப்பை மட்டும்
சிந்துகின்ற புலவரல்லர்; கருத்தை வாரிக்
கலகலெனப் பாக்கள்விளைக் கின்ற உள்ளம்!
கனித்தமிழைப் பெற்றெடுக்கும் தாய்மைமிக்க
புலவரிவர்; அவர்பாட்டில் மதுவினாலே
கல்விநலம் போக்கடிக்கும் புதுமை காண்போம்!
(பொன்னி வளவனின் ‘கல்விப்’ பாட்டு)
இனி,
அறிவழியும் மதுக்குடிப்பால் என்று சொல்வார்;
அ. அரங்க சாமியென்னும் புலவர் இங்கே!
பொறிவழியே அறிவியங்கும் உளமி யங்கும்;
பொன்னான வாழ்வியங்கும் உணர்வோம் நாமே!
நெறிவழியே போவதற்கு விரும்பு கின்றோம்;
நேர்வழியில் போகாமல் குறுக்கே போவோம்!
குறிவழியில் போவதெனின் குடிக்கா தீர்கள்!
குடும்பவழிச் செலமாட்டீர், கெட்டுப் போவீர்!
(அரங்சாமியின் ‘அறிவுப்’ பாட்டு)
அடுத்து,
பண்டரி நாத னென்னும்
பாவலர் இனிமேல் இங்குக்,
கொண்டநற் பொருளைப் போக்கும்
குடித்தீமை எடுத்துச் சொல்வார்!
மண்டையில் உறைத்தால் உண்டு;
மனத்தினில் பதிந்தால் உண்டே!
அண்டையின் குப்பை மேட்டில்
அதைப்போட்டால், நாமும் குப்பை!
(பண்டரிநாதனின் ‘பொருள்’ பாட்டு)
இனி,
பன்னீர்ச் செல்வப் பாவலர் வந்து
நன்னெறிக் குலத்தை நசுக்கும் மதுவினைப்
பற்றிப் பாடுவார்! பயன்பெறக் கேட்போம்.
(பன்னீர்ச் செல்வத்தின் ‘குலப்’ பாட்டு)
(வேறு)
இனி,
கோவி - தமிழேந்தி கொண்ட முயற்சியெல்லாம்
தாவி யழியும் தகைகாண்பார் - கேவி
அழச்செய்யும்; ஆற்றழிக்கும் ஆன்றவறந் தீய்க்கும்;
விழச்செய்யும் கட்குடியால் வீண்!
(கோவி. தமிழேந்தியின் ‘முயற்சிப்’ பாட்டு)
முடிவுரை:
பல்வகையாய்க் குடித்தீமை பாடிவைத்தார் முன்பு
பாவலர்கள் இன்றைக்கும் பாடிவிட்டார்; ஆனால்
வெல்வகையைக் கண்டோமா? நல்லனபெற் றோமா?
விறலழிக்கும் மதுக்குடிப்பை விட்டோமா வாழ்வில்?
தொல்பெருமை கட்டழிக்கும் கட்குடிதான் என்று
தொன்மைதிருக் குறள்சொன்ன போதும்அதைத் தள்ளி
நல்வழியைப் பின்பற்றத் தயங்குகின்றோம்; நாளும்
நலிகின்றோம்; இழிகின்றோம்; நம்பெருமை விட்டோம்!
எத்தனையோ குடிப்புவகை இந்நாட்டி லுண்டாம்!
இருமல்வரும் புகைக்குடிப்பு; குளம்பியும்தே நீரும்
பித்தனைப்போல் அலைக்கழிக்கச் செய்யும்பெருங் குடிப்பு!
பேரளவில் விற்பவைதாம் பிழிவுகள்!என் றாலும்
அத்தனைக்கும் பெருங்குடிப்பு மதுக்குடிப்பாம் என்றே
அனைவரும்நாம் அறிந்திருப்போம்; ஆனாலும் நம்மில்
எத்தனைப்பேர் அதனைப்பின் பற்றுகின்றோம் இங்கே?
இருந்தாலும் குடிக்கின்றோம்; குடிகெட்டுப் போனோம்!
பெரும்பாலும் நல்லவற்றைக் கைக்கொள்வ தில்லை;
பேசுகின்றோம்; எழுதுகின்றோம்; பின்பற்று வோமா?
இரும்பாலும் கல்லாலும் கடவுளென்று நாளும்
எதையெதையோ வணங்குகின்றோம்; நாளெல்லாம் என்ன
அரும்பாடு படுகின்றோம்; உழைக்கின்றோம், செல்வம்
ஆக்குகின்றோம், ஆனாலும் மதுக்குடிப்பால் அதனை
விரும்பாத தீயவழி வகைகளிலே தேய்த்து,
வெறும்வாழ்க்கை வாழுகின்றோம்! இதையெண்ணிப் பாரீர்!
கட்குடியைக் கடியாத மதத்தலைவர் இலரே!
கட்குடியை மறுக்காத அறநூலார் இலரே!
கட்குடியை நீக்காத கல்வியினார் இல்லை;
கட்குடியை மறுக்காத பெரியோர்கள் இல்லை;
கட்குடிதான் நிலவுகின்ற தீமைக்கெலாம் முதலாம்;
கட்குடிதான் குடிகெடுக்கும் - என்றறிவோம்; ஆனால்
கட்குடியை ஒழித்தோமா? சட்டத்தால் ஒழித்தோம்!
கள்ளவழிக் காய்ச்சுகின்றோம் குடிக்கின்றோம் நாளும்!
தீமையென்றே உணர்ந்திருந்தும் தீமைசெய் கின்றோம்;
திருட்டாகக் குடிக்கின்றோம்; குடும்பநலம் தேய்ப்போம்!
ஊமையரைக் குருடர்களைப் போல்இருட்டில் நாளும்
உண்டுவிட்டு வருகின்றோம்! உள்ளத்தை மாய்த்தோம்!
ஆமையராய்க் கைசோர்ந்து கால்சோர்ந்து போக
அடுப்படியில் காய்கின்ற மனைவிநலம் காவாத்
தீமையராய் - குழந்தைநலம் தீய்த்தகொடி யோராய்த் -
திருடர்களாய் வாழ்கின்றோம்! இதையெண்ணிப் பாரீர்!
எத்தனையோ வாழ்வுநலம் நாம்பெறுதல் வேண்டும்!
என்றென்றும் அடிமையராய்க் கோழையராய் வாழ்ந்தோம்!
எத்தனையோ நாட்டார்கள் - நமக்குப்பின் எழுந்தோர்;
என்னென்ன வகையாக முன்னேறி விட்டார்!
அத்தனைக்கும் கேளாத - காணாத - வாறாய்
அன்றிருந்த படியாக இன்றுமிருக் கின்றோம்!
எத்தனைப்பேர் வந்தார்கள்; சொன்னார்கள்; ஆனால்
ஏனென்று கேட்டோமா? பின்பற்றி னோமா?
ஆனாலும் நமையடிமை செய்திடவந் தார்கள்:
ஆரியர்கள்! அவர்நம்மை அடிமைகொண் டார்கள்!
‘வானாக வந்தவர்கள் தேவர்கள்யாம்’ . என்றார்
‘வாயில்வந்த சமற்கிருதம் தேவமொழி’ . என்றார்
‘ஏனென்று’ கேட்கவில்லை; ‘எப்படி’‘எவ் வாறாம்?’
என்றெல்லாம் கேட்கவில்லை; நம்பிவிட்டோம் அவரை!
கூனாத தமிழ்ப்பெருமை கூனிற்றவர் பேச்சில்!
குடிகெட்டோம்; மதிகெட்டோம்; கொடிவழியும் கெட்டோம்!
நம்பெருமை அவர்கொண்டார்; நாமவரைப் பற்றி
நல்லதில்லாத் தீமைகள் உடன்தழுவிக் கொண்டோம்!
நம்பெருமை தனைவிட்டோம்; நலிந்திழிந்து போனோம்!
நற்பிறப்பு தனைத்தவிர்த்தோம்; நாற்பிறப்புக் கண்டோம்!
செம்பொருள்சேர் தமிழ்மொழியைப் பழித் திழித்துப் பேசிச்
செப்பமிலா வடமொழிக்குத் தலைகுனிந்து நின்றோம்!
அம்பொருளாம் பரம்பொருளுக் கவன்தலைமை யென்றான்!
ஆமென்றோம்; அவர்க்கடிமை ஆகிவிட்டோம், தாழ்ந்தோம்!
எத்தனையோ தெய்வங்கள்! எத்தனையோ சாதி!
எத்தனையோ மூடங்கள்! இழிவுகளும் தாழ்வும்!
அத்தனையும் நாம்எண்ணிப் பாராமல் நம்மை
அணுஅணுவாய் நாள்நாளாய் மிகத்தாழ்த்திக் கொண்டோம்;
இத்தனைக்கும் அடிப்படைதான் என்ன? உணர்ந் தீரா?
இழிவான மதுக்குடிதான்! எண்ணிப்பா ருங்கள்!
செத்துவிடும் போதொருவன் எதையெண்ணிப் பார்ப்பான்?
சீரழிந்த பின்னொருவன் எதையெண்ணிச் செய்வான்?
கருத்தழிக்கும் கட்குடியை நாம்விட்டு விட்டால்,
கண்திறக்கும்; செவி திறக்கும்; மதிதிறக்கும்; அக்கால்
உருத்தெரியாப் போனதமிழ்ப் பெருமையெலாம் எண்ணி
வென்றே அழச்செய்யும்; அதன்பின்னர் நின்று
திருத்தமுறச் செய்திடுவோம் தமிழ்க்குடியை; மொழியை!
தீர்த்துவிட்ட பழம்பெருமை போராடி மீட்போம்!
பெருத்தவினை நமக்குண்டு! தெருத்தெருவாய் ஊராய்ப்
பேசிடுவோம்; எழுதிடுவோம்; செய்திடுவோம் வாரீர்!
நமைத்தீய்த்த சாதிகளை நாம்தீயில் தீய்ப்போம்!
நமைத்தாழ்த்த மதக்கீழ்மை நாம்தோண்டிப் புதைப்போம்!
இமைத்தாழ்த்தம் செய்தாலும் இனியழிந்து போவோம்!
எந்தமிழ்த் தந்தையரே! தாய்மாரே! இளைஞீர்!
எமைத்தாழ்த்தும் தீமைகளை இனிப்பொறுக் கோம்! நம்மை
எவரடிக்கும் கீழ்ப்படுத்தோம்! நாம்உரிமை பெற்றோம்!
உமைத்தாழ்ந்து வேண்டுகின்றேன்! ஒன்றுபட்டே உய்வோம்!
ஒழியுங்கள்! கட்குடியை! உழையுங்கள் நன்றே!