உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 8/014

விக்கிமூலம் இலிருந்து

13. பாவேந்தர் உள்ளம்!

(புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பாவேந்தர் தமிழ் இயக்கத்தின் சார்பில் 1.6.87 அன்று நடைபெற்ற பாவேந்தர் விழா பாட்டரங்கில் தலைமையேற்றுப் பாடியது.)

முன்னுரை!

பேரன்பு மிக்க பெரியோரே! தாய்மாரே!
போராசிரியப் பெருமக்காள்! நல்லிளைஞீர்!
பாட்டரங்கம் ஏறவந்த பாப்புலவீர்! பாவேந்தை
நாட்டரங்கம் தன்னில் நலஞ்சுவைக்க வந்த, தமிழ்
அன்புடையீர்! இனநலம் ஆர்க்கின்ற நல்லவையீர்!
என்பு நெகிழ்ந்துருக யாவரையும் வணங்குகின்றேன்!

புரட்சிக்குப் பாவேந்தன்! பொங்குதமிழ்ப் பேரினத்தின்
மருட்சி நீக்கவந்த மாமருந்து! ஆரியத்தைப்
பாட்டால் அடித்துப் பதைபதைக்க வைத்ததமிழ்க்
கோட்டுக் களிறு! கொட்டிவைத்த பாக்குவியல்!
கூனாத நெஞ்சன்! குறைவுபடாக் கொள்கைமலை!
ஆனான பாட்டனெல்லாம் அவனடிக்குத் தாளாமல்
நெஞ்சை நசுக்கிக்கொண்ட நேர்ச்சியினை நாம் கண்டோம்!
பஞ்சைப்பா வலனல்லன்; பாய்ந்தெழுந்த தேனருவி!
அஞ்சாமல் யார்க்கும் அரிமாப்போல் முழங்கியவன்!
துஞ்சாமல் தோளுயர்த்தித் தமிழினத்தைத் தூக்க வந்தோன்!

ஈங்கதனால் தானே இவனுக்கு விழாவெடுத்தார்!
தூங்குகின்ற நந்தமிழர் உணர்வுக்குத் தீவைத்தார்!
புரட்சிப்பா வேந்தனுக்குப் போற்றுவிழா அமைந்ததனால்
மருட்சி யடைந்திருப்பார் நம்பகைவர் மனம்வைத்தே!

பாவேந்தைப் பாடினால் பணம்வந்து சேராது!
ஆவல் அடங்கும்! அடிவயிறு தான்குளிரும்!
மேனியெலாம் நன்றியெனும் நல்லுணர்வால் மேல்சிலிர்க்கும்!
தேனில் விழுந்ததுபோல் நாவெல்லாம் தித்திக்கும்!
உள்ளம் கிளர்ச்சியுறும்! உயிரும் உவகைபெறும்!
குள்ள நினைவழியும்! கோபுரமாய் வாழ்வுயரும்!
அவனுரைத்த சூள்தன்னை அவன்வாயால் கேளுங்கள்!
எவனுரைத்தான் இவ்வாறாய், எந்தமிழ்ப்பா வேந்தனல்லால்?

(வேறு)

“நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி

உழைத்திட நான் தவறேன்”

(வேறு)


சாவேந்தாப் புகழ்பெற்ற நல்லுணர்வுச் சான்றோன்,அப்
பாவேந்தன் குறிக்கோளைப் பாடுகின்றான் கேளுங்கள்!

(வேறு)


புதுவைக் குயிலொலித்த புதுமைக் குரல்தன்னில்
பொதுமை உணர்வால் பொலிந்த தமிழுள்ளம்
இன்றுவரை பிறர்அறியா இனவுணர் வுள்ளம்
நம்மவரை மேலுயர்த்தும் நாட்டுணர் வுள்ளம்
எம்மவர்க்கே இன்பூட்டும் இயற்கை வுணர்வுள்ளம்
காளையர்க்கும் கன்னியர்க்கும் இனிக்கும் காதலுள்ளம்
என்றெல்லாம் பாவலர்கள் இங்கெடுத்துப் பாடவுள்ளார்!
தொன்றெழுந்த உள்ளுணர்வால் எழுச்சி தோற்றுவிப்பார்!
இங்கெடுத்துப் பாடுகின்ற பாடல்களை நீங்களெல்லாம்
பொங்கும் உணர்வோடும் பூரிக்கும் நெஞ்சோடும்
அமைந்திருந்து கேட்கும்படி ஆவலினால் வேண்டுகின்றேன்!
இமைதிறந்து கண்பார்த் திருந்து!

1. தமிழுள்ளம் -புலவர் இறைக்குருவனார் வருகை அழைப்பு

பாவேந்தர் உள்ளமெனும் பாத்தோப்பில் தமிழுள்ளம்
பாடுவார் இறைக்குருவ னார்!
பைந்தமிழில் புலவரவர்; பாவேந்தர் உளமறிவார்!
பன்னூல்கள் யாத்த திறவோர்!
தேவேந்தன் அழைத்தாலும் தமிழ்க்கொள்கை மாறாதார்!
தீமைக்குத் துணைபோகாதார்!
திரு.வி.க., மறைமலை சார் தீந்தமிழின் வழிமரபார்;
தேவநேயர்க்கும் துணைவர்!
நாவேந்தும் தனித்தமிழில் நயமுறவே பயிற்றுவிக்கும்
நற்றிறமும் வாய்ந்த திருவார்!
நாளிதழாம் முரசொலியில் கலைஞர்க்குத் துணையாக
நாள்தோறும் தொண்டுசெய்வார்!

ஈவேந்தும் தென்மொழியின் தொடக்கநிலைத் தொண்டரவர்!
இனியவுரைப் பொழிவில் வல்லார்!
இசைப்புலவர்; உரைப்புலவர்; இவண்வருவார்; பாவேந்தர்
இனியதமிழ் உள்ளம் காண்பார்!

2. இனவுணர்வு - அரிமாப் பாண்டியன்

பெரியார் கொள்கையின்
அரிமாப் பாண்டியன்
அரிய இனவுணர் வளிக்கும் பாவலர்!
ஆனைமுத் தீன்ற அணிமுத்தைச் சூடியவர்!
கோணைக் கொள்கையர் அல்லர்! என்றும்
குனியாக் கொள்கையர்! தனித்தமிழ் உணர்வினர்!
இனநல உணர்வை எடுத்திங் குரைத்திட!
அன்புடன் அவரை அழைப்போம்! அவரும்
தென்புடன் நறும்பா திகழ்ந்திடத் தருவார்!

3. நாட்டுணர்வு - தமிழியக்கன்

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனார்
இனித்த தமிழில் இலக்கியம் வடிப்பவர்!
தென்மொழி தமிழ்ச்சிட் டிதழ்களில் தெவிட்டா
நன்முறை அறிவியல் உயிரியல் பற்றிப்
பற்பல பாக்கள் பயன்மிக எழுதி
நற்புகழ் பெற்றவர்! நற்றமிழ் வளர்ப்பவர்!
அன்ன புலவர்தாம் அரும்பா வேந்தர்
நன்னரும் உணர்வில் நாட்டுணர் வூட்டிடும்
இன்னரும் பாக்களை எடுத்திங் கியம்புவார்!
இந்நாள் அவர்குரலுக் கேற்றம் பலவாம்!
இளைஞர்க் கவர்குரல் ஏற்ற நறுங்குரல்!
வினைவலர் பலரை விளைவித் திடும்வகை
அவர்குரல் அமைக! ஆர்வம் பொங்குக!
எவரும் மகிழ்ந்திட இவரையாம் அழைப்போம்!

4. இயற்கை - கலியபெருமாள்

கவின்தமிழ்ப் பாவலர் கலிய பெருமாள்!
செவியும் உள்ளமும் சிலிர்த்து மகிழ்ந்திட
பாவேந்தர் இயற்கையைப் பாடிய உணர்வினை

நாவேந்தி உரைத்திட நம்மிடை வருவார்!
அருந்தமிழ் பயிற்றும் ஆசிரியர் என்னும்
பெருந்தமிழ்ப் பணியால் பைந்தமிழ் வளர்ப்பவர்!
அன்னவர் தம்மை அழைப்போம்! இயற்கையின்
நன்னரும் பாக்களை நயமுடன் வழங்கவே!

5. பாவேந்தர் பொதுமையுள்ளம் - பாவலர் முல்லைவாணன்

பாவலர் முல்லை வாணன்
பாவேந்தர் பொதுமை யுள்ளம்
ஆவலால் வந்துரைப் பார்!
அவர்வரவை வாழ்த்துவோம்!
மேவியிருந்தசிங்கை யிலிருந்து
மேன்மைத் தமிழ்வளர்த்தவர்!
ஆவியால் தமிழையும்
உடலால் இனத்தையும் கொண்டவர்!
பாவேந்தர் பொதுமை யுள்ளம்
பாடுவார் முல்லை வாணன்!
மூவேந்தர் இருந்தால் இங்கே
பாவேந்தர்க்கு ஊரளிப்பார்!

6. காதலுணர்வு பொன்னடியான்

புதுவைப்பா வேந்தன்வழிப்
பூத்திருக்கும் பாமலருள்
பொன்னடியான் என்னும்
புரட்சிமலர் ஒன்றாகும்!
நன்னரும் இம்மலர் நாடறிந்த பாமலர்!
கடற்கரைப் பாவரங்கம் கூட்டும் கவின்மலர்!
கெடற்கரிய பாக்கள் கிடைத்துள் ளனஅவரால்!
முல்லைச் சரமென்னும் முழுப்பாடல் நல்லிதழை
நல்ல நல்ல பாக்களுடன் நயந்தளிக்கும் பாட்டறிஞர்!
அன்ன பாவலர்தம் ஆசிரியர் உள்ளத்தில்
காதல் உணர்வு களிக்கின்ற உணர்வுதனை
ஈங்கெடுத்துச் சொல்வார்! இருந்துநாம் கேட்போம்.

முடிவுப்பா:

புலவர் இறைக்குருவனார் பாவேந்தர் தமிழுள்ளம்
இலகுசெந் தமிழில் நன்கெடுத்துக் காட்டினார்.

அடுத்து,

அரிமாப் பாண்டியன் அழகுத் தமிழில்
அரிமா முழக்கமாய் பாவேந்தர் உரைப்பதுபோல்
அவரின் இனஉணர்வு எடுத்துக் காட்டினார்.
இருந்து கேட்போம்! இனி,

அடுத்து,

பாவலர் தமிழியக்கன் பாடினார் பாவேந்தர்
நாவால் உதிர்த்த நாட்டுணர்வை கேட்டோம்!
இற்றைத் தமிழர்க்கு இன்றியமையா உணர்வது
அற்றைப் பெருமையை ஆக்குவது அவ்வுணர்வு!

அடுத்து,

பாவேந்தர் இயற்கை உணர்வினை எடுத்தே
ஆவலாய் இங்கே அருமைப் பாவலர்!
கலிய பெருமாள் களிப்பெழப் பாடினார்!
பொலிந்த வாணிதாசன் மருகர் வாழ்க!

முடிவுரை

பாவேந்தர் கருத்துநலன் பாப்புலவர் சொன்னார்!
பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டிருந்தோம் நாமும்!
பூவேந்தும் நறுந்தேனைச் சுவைத்திடும்தே னீக்கள்
போலன்றோ நாம்சுவைத்தோம்! புலவரெலாம் வாழ்க!
சாவேந்திச் சென்றதெனப் பாவேந்தைச் சொன்னார்!
சரியில்லை என்போம் நாம்! செந்தமிழ்த்தீம் புலவர்
நாவேந்தி வாழ்கின்றார் பாவேந்தர்! உண்மை!
நாடெல்லாம் வீடெல்லாம் அவர்வாழ்கின் றாரே!

1. தமிழுணர்வு:

செந்தமிழ்க்கே அவர்பிறந்தார்;! செந்தமிழ்க்கே வாழ்ந்தார்!
செந்தமிழ்க்கே மூச்சுயிர்த்தார்; செந்தமிழ்க்கே பேசிச்
செந்தமிழ்க்கே அவருழைத்தார்! செந்தமிழாய் நின்றார்!
செந்தமிழ்க்கே ஒளியேற்றிச் செந்தமிழ்க்கே மாய்ந்தார்!
செந்தமிழ்க்கே பாவேந்தால் செழும்பெருமை யன்றோ?

செந்தமிழ்க்கே நாமிருப்போம் என்னில்,அவர் கொடையே!
செந்தமிழ்க்கே வாழ்ந்தவரும் செத்தொழிவ துண்டோ?
செந்தமிழும் வாழும்வரை அவர்தமிழும் வாழும்!

செந்தமிழ்மேல் பாவேந்தன் வைத்தபெரும் அன்பைச்
சிறுமைபெற வெறியென்னும் வெறிநாய்கள் மட்டும்
தந்தம்மொழி மேல்வைக்க விலையா,இந் நாட்டில்?
தாய்மொழிமேல் அன்புவைத்தே இனம்பேணல் தீதா?
இந்திமொழி மேலவர்கள் வெறியின்றித் தானோ
‘எல்லாரும் இந்திபடித் திடுக’ என மொழிவார்!
சொந்தமொழிக் குயர்வின்றி இனந்தாழும் போது
சொத்தைமொழி பிறமொழியைப் போற்றுவதே தீது.

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே!


தமிழ்வளர்ச்சி யாலிந்த வையகமே உய்மாம்!
தண்டமிழ்ப்பா வேந்தனவன் சொல்லுவதைக் கேட்பீர்!

‘வையகமே உய்யுமாறு, வாய்த்த தமிழ்

என் அரும் பேறு’


தமிழ்வளர்ச்சித் திட்டமொன்றே அவனின் தமிழியக்கம்
தமிழியக்கம் நூல்போதும் அவன்பெருமை சாற்ற!
தமிழ்வளர்க்காத் தமிழினமோ தான்வளர்தல் இல்லை!
தன்மொழிகா வாதஇனம் வளர்ந்ததுண்டோ உலகில்?

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!

உன்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற

வெற்றியெலாம் உன்றன் வெற்றி.

2. இனவுணர்வு!

இனம்பாடி இனம்பாடி இனம்விழிக்கும் என்றே
எதிர்பார்த்தான் பாவேந்தன்! இனும்விடிய வில்லை.
மனம்போன படிவாழ்ந்து மாக்களினும் கேடாய்
மண்ணுலகில் தமிழினந்தான் பின்னடைந்த தென்று
பெனம்பெரிய பெருமையினை நாம்வாங்கிக் கொண்டோம்
பேசுகின்றோம்! வீசுகின்றோம்! பெருத்தநடைபோட்டோம்!
இனும்திருந்த வில்லையெனில் என்றுந்திருந் தோம்நாம்!
‘இன்னலிலே துயில்கின்றோம்’ பாவேந்தன் சொல்வான்!

‘இன்னலிலேதமிழ் நாட்டினிலே உள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கி,என்

ஆவியில் வந்து கலந்ததுவே!’


‘இருட்டறையில் உள்ளதடா உலகமெலாம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றான்’
என்றான்!

திருட்டுக்கூட் டம்தமிழர் கூட்டமென்று சொல்வேன்!
தில்லுமல்லுக் கூட்டமிது; இல்லையென்று சொன்னால்
குருட்டடியாய்ப் பாவேந்தன் பாட்டையெல்லாம் கூட்டங்
கூட்டந்தோறும்சொல்லிப் பெரும்புலவர் போல்
மருட்டுவமா மக்களைநாம்? சொன்னவற்றுள் ஒன்றை
மதிப்பிற்கே னும்செய்து பெருமைபெற் றோமா?

அதைக்கண்டு வருந்துகின்றான் பாவேந்தன் இங்கே!
அப்பாட்டில் அவன்ஏக்கம் கனவெல்லாம் தோன்றும்!

“தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழுண்டா? ஒழுக்கம் உண்டா?
அமைவுறச் சிறிதுமுண்டா
அன்றைய மறத்த னந்தான்?
கமழ்ந்திடல் உண்டா கல்வி?
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளவி லேனும்
ஒற்றுமை உண்டா?”

‘சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?

சமயம் சாதி தவிர்வ தெந்நாள்?

‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவ ரேமற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொ ணாதே’.
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளுநாள் எந்நாள்? உள்ளம்

சொக்குநாள் எந்த நாளோ?


இதைக்கண்டு கொண்டோமா நாம்? என்செய்தோம்? இங்கே
ஏற்றத்தாழ் வொழிந்ததுவா? சாதிகள்மாய்ந் தனவா?
கதைக்கின்றோம் பாடுகின்றோம்! பாவேந்தன் சொன்ன
கருத்துக்கு மதிப்பில்லை! விழாவெடுப்போம்! அதனால்
புதைக்கின்றோம் அவன்பெருமை! புகழ்ச்சிவெறுஞ்சொல்லா?
புரட்சிசொன்னான்! மருட்சியுற்றோம் இருட்காட்டில் வாழ்வோம்!

பழந்தமிழ்ப் புலவர்போல் அவனெழுத வில்லை;
பாவேந்தன் புதுமைக்குக் குரல்தந்து நின்றான்!
இழந்திட்ட புகழ்மீட்க எந்தமிழைப் பாடி
எழுத்தாலே புரட்சிக்குக் கனல்மூட்டி வந்தான்!
முழந்தேடிச் சொற்களையும் வரிகளையும் எழுதல்
முழுவதுமே புலமைக்குத் திறம்என்றெண் ணாமல்
குழந்தைக்கும் விளங்குகின்ற எளியசொல் லாலே
குமுகாயச் சீர்மைக்குப் பாடல்கள் யாத்தான்!

எழுச்சிக்குக் குரல்கொடுத்தான் தமிழர்எல் லாரும்
இனம்மீட்க எழுந்தொருங்கே வாருங்கள் என்றான்!
முழுச்சிதைவே உற்றிருக்கும் இனநலமுன் னேற்றம்.
முன்பிருந்த வரலாற்றைப் புதுக்குகின்ற நோக்கம்.
மழுச்சிதைவே இல்லாமல் உழவேண்டும் தமிழர்!
மறுமலர்ச்சி பெறவேண்டும் தமிழ்இனமும் நாடும்!
குழுச்சிதைவாய் இல்லாமல் கட்சிசிதை வின்றிக்
கூடிநின்றால் தமிழர்க்கு வெற்றியுண்டாம் என்றான்!

(வேறு)


‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’

‘தமிழென்ற உணர்வினைக் குவியடா யார்க்கும்
தமிழருக் கிங்குள்ள குறையெலாம் தீர்க்கும்’

‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய்தடுத்தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் விடேன்”

‘உயர்தமிழ், உயர்நடை, உயர்தனி வீரம்
இங்கிவை தமிழரின் உடைமை’

'பண்டிருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழுதுமே
கண்டிருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணுறக்கம் ஏனோ?'

‘தனி உலகை ஆண்டனை முன்னாள்
தன்மானம் இழந்திடாதே இந்நாள்”

‘சின்ன நினைப்புகள் தன்மான மற்ற,
செயல்களை இனிவிட்டு வையோம்’

‘தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி
தாழ்வதில்லை! தமிழ்நாடு தமிழமக்கள்
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ் நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை’

‘இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வுவிளக் கேற்று’

‘தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே!
‘கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப்
பொய்விரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

‘தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது மாளும்’

‘ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்

பேரர்க்குப் பேரனே!’


- புதுவைக் குயிலின் புரட்சிக் குரலொலி
இதுவரை மட்டுமா? இன்னமும் கேளீர்!

தமிழனொரு தமிழனுக்குத் தீங்கு செய்தால்
தனிமுறையிற் செய்ததென அதை மறந்து
தமிழரது பொதுநலத்துக் குயிரும் தந்து
தமிழரது பண்பைநிலை நிறுத்தல் வேண்டும்!
தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை
தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா?
தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்

தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்!


நம்மினத்தை அன்னவன்போல் விழிக்கவைத்த முயற்சி
நாளைவரை எப்புலவன் தமிழகத்தில் செய்தான்!
வெம்மனத்தைக் கொண்டுள்ளோம்! வீண்வாழ்க்கை வாழ்வோம்!
விடியாத மூஞ்சிகளாய்த் தூங்குகின்றோம் இன்னும்!
அம்மணமாய் நம்முன்னர் அலைந்தவர்கள் எல்லாம்
அழகழகாய் உடையுடுத்தே உலகஉலாப் போந்தார்!
கும்மிருளில் குருட்டாட்டம் போடுகின்றோம்! ஐயோ!
‘கும்பிக்குச் சோறு’என்றால் தாயினைவிற் கின்றோம்!

3. நாட்டுணர்வுள்ளம்:

மொழிவிடு தலையும் இனவிடு தலையும்
பழியிலாப் பாவலன் விரும்பிய கொள்கை!
நாட்டு விடுதலையும் நன்றென மொழிந்தான்!
வாட்டு ஆரியத்தினும் வடவர்சூழ்ச் சியினும்
தமிழக மக்கள் தப்பிட வேண்டில்
தமிழகம் பிரிதலும் தக்கதே என்றான்!

“விடுதலை பெறுவது முதல் வேலை!
அடிமையில் உழல்வது முடியாது!

விழிதுயில் வதுமிகு தவறாகும் எழுவீரே”


- என்று எழுச்சி பாடினான்

இனியவனும் நாடுபற்றி எடுத்துரைத்த வெல்லாம்
இங்கெடுத்துக் கூறிவிடல் எளிதிலைகாண் பெரியீர்!
‘எனையீன்ற தந்தைக்கும் தாயினுக்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்குமென்ற னாலே
தினையளவும் நலமேனும் கிடைத்திடுவ தென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாம்'என்றே
பனிமொழியில் சூளுரைத்துப் பாவேந்தன் சொன்னான்!
பாவலருள் எவரிந்த உரைசொன்னார்? பாரீர்!

எரிகின்ற நெஞ்சின்மேல் ஆணையிட்டுச் சொன்னான்!
இனியெங்கள் ஆட்சியிந்த நாட்டிலென்றே உரைத்தான்!
எரிசருகு தமிழர்களை எதிர்த்திடுவோர் என்றான்!
இன்னுமவன் நாடுபற்றிச் சொன்னமொழி கேட்பீர்!

‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்’

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!


புரிகின்ற தமிழ்ப்போர்க்குப் புதுப்புரட்டுக் காரர்
புலைமனத்தால் தடையிடுவார் நாம்அஞ்சல் வேண்டாம்!
சரிகின்ற தமிழினத்தைக் காத்திடுதற் கென்றே
சாகாத உணர்வுடைய இளைஞர்க்கிவை சொல்வான்!

‘சிம்புட் பறவையே சிறகை விரி! எழு!
சிங்க இளைஞனே! திருப்புமுகம்! திற விழி!

இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?’

வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி!
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத்தாண்டு பார்த்தார்!
விடுவா யடா தன்னலத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையில் உண்டு!”

“வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை!
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை!”

“சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்!
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்!
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு!
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!”

‘எந்தமிழ் அன்னை துன்பம் நீங்கித்
தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன்!
என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்குதல் காண்பேன் தமிழர்
நலங்காண் பேன்நான் நானில மீதிலே!”

‘வீடெல்லாம் விடுதலை முழக்கம் மேவுக!
ஊரெல்லாம் விடுதலை முழக்கம் உயர்க!
காலையில் விடுதலை முழக்கம் காட்டுக!
உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க!

உறங்குமுன் விடுதலை முழக்கி உறங்குக!


4. இயற்கை உணர்வுள்ளம்!


இருக்கின்ற பாவலர்கள் இருகோடி என்றால்
இயற்கைப்பா வலர்அவருள் இருபதுபேர் இருப்பர்!
கருக்குழியில் ஒளியேறி உணர்வேறித் திருவில்
கற்பனையாம் பொலிவேறிப் பாட்டுணர்வும் ஏறி,
உருக்கொண்டு தாய்மடிமேல் வீழ்ந்தபின்னே அவளின்
ஒளிமார்புக் காம்புவழித் தமிழேறிப் பாய்ந்தால்,
தெருக்கடையில் இறங்குகையில் பாட்டுவரும் தெளிவீர்!
தெம்மாங்குச் செந்நாவில் எழுந்துவிளை யாடும்!
அன்னவரைத் தாம்இயற்கைப் பாவலர்கள் என்போம்!

அப்படித்தான் ‘கனகசுப்பு ரத்தினம்’ ‘பா வேந்தன்’
இன்னவரைப் போல்இயற்கை இயற்றிவைத்த பேருள்
இவர் அவரின் ஆசானுக் காசான்என் றுரைப்போம்!
முன்னவரைப் - பாரதியைக் - குறைசொல்ல வில்லை!
மூச்சில்இவர் தமிழுயிர்த்தால் பேச்சில்அவர் என்போம்!
என்னபடி பார்த்தாலும் பாரதிபாட் டுக்கே
ஏழுபடி மேலிருக்கும் பாவேந்தன் பாட்டு!

நடுநிலையில் லாமலிதை நாம்சொல் வில்லை!
நாமவரின் வழிவந்த நன்றியுரை இல்லை!
கெடுநிலையில் பார்ப்பனர்கள் பாவேந்தர் பாட்டைக்
கீழ்வைத்துப் பேசுகின்றார்; நாமவர்க்குச் சொல்வோம்!
தொடுநிலையில் - பாட்டுணர்வில் - தோய்கின்ற நிலையில்.
தூய்தமிழை மனங்கொண்டு பாடுகின்ற நிலையில்,
நெடுநிலையில் - மலைப்புனலாய்ப் பொழிந்திருக்கும் நிலையில் -
நிலைத்திருக்கும் நிலையினிலே - பாவேந்தன் வெல்வான்!

தன் விளக்கம் பாடுகின்றான் பாவேந்தன் இங்கே!
தமிழ்ப்புலவன் செம்மாப்பைக் கேளுங்களிப் பாட்டால்!!

‘சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்

போர்த்திறத்தால் இயற்கை புனைந்தஓர் உயிர், நான்!’


இன்விளக்கம் இதுவாகும்! ‘இயற்கைதந்த உயிர்நான்’
என்றுரைக்க வில்லையவன்; ‘புனைந்தஉயிர்’ என்றான்!
என்விளக்கம்! உணர்ந்தீரா? இருக்கும்உயிர் யாவும்
இயற்கைத்தாய் செய்தெடுத்து வீசிவிட்ட உயிராம்!
என்வியப்பு! பாவேந்தன் உயிரைமட்டும் நன்றாய்
எழில்சீர்த்தி அறம்செழுமை வீரத்தொடு புனைந்தாள்!

பாவேந்தன் சொல்கின்றான்! யாரிவன்போல் சொன்னார்?
பாருங்கள் மேன்மேலும் அவன்கையின் வண்ணம்!
நாவேந்திப் பிறர்சொன்னால் உணர்வேந்திச் சொல்வான்!
நல்லதமிழ் பிறர்சொன்னால் உயிர்த்தமிழைச் சொல்வான்!
காவேந்திக் கொண்டிருக்கும் பூவேந்தித் தேனைக்
களிமதர்ப்பக் குடித்திசைக்கும் தேனீப்போல் தமிழின்
ஈவேந்தித் தருகின்றான் செந்தமிழாய்! பாவாய்!
இயற்கையினை இவனைப்போல் படம்பிடித்த தெவரே?

‘கடல்நீரும் நீலவானும் கைகோக்கும்’ என்றே
கற்பனைக்கும் கற்பனையாய் யார்சொன்னார்? கேட்பீர்!

‘கடல்நீரும் நீல வானும்
கைகோக்கும்! அதற்கி தற்கும்
இடையிலே கிடக்கும் வெள்ளம்!
எழில்வீணை! அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத்தின் பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி

வன்கடல் பண்பாடல் கேள்!


உடலிலவன் நறுந்தென்றல் உணர்வுபெற்றுப் பேசும்
ஒருபாட்டைக் காட்டுகிறேன் கேளுங்கள் நன்றாய்!

‘களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப்போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்றே லே, நீ!

செருந்தி, ஆச் சா,இலந்தை
தேக்கீந்து, கொன்றை, எல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒருமூங்கில்; இருகுரங்கு

கண்டேன்பொன் னூசல்ஆடல்!


"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_8/014&oldid=1858593" இலிருந்து மீள்விக்கப்பட்டது