கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/14. எளிமையும் அருமையும்

விக்கிமூலம் இலிருந்து

14. எளிமையும் அருமையும்

அந்த வைகறை வேளையில் புன்னைத் தோட்டத்தின் குளிர்ந்த சூழ்நிலையில் கண்ணுக்கினியாள் ஒர் அழகிய தேவதைபோற் காட்சியளித்தாள். அவளுக்கு இயற்கையாகவே நிரம்பியிருந்த பேரழகு போதாதென்றோ என்னவோ அவனைக் கண்டு நாணிய நாணம் அவள் அழகை இன்னும் சிறிது அலங்காரம் செய்தது. பெண்ணுக்கு அவள் தேடி எடுத்து அணியாமல் தானாகவே அவள் மேல் படர்ந்து அலங்கரிக்கும் அழகு ஒன்று பருவகாலத்தில் வருவதுண்டு. அதுதான் நாணம். அதுதான் பிறக்கும்போது அவளால் தனக்குத்தானே சூட்டப்பட்டுக் கொண்டு வரப்படுகிற பிறவி அணிகலன். பிறந்த பிறகு கற்பிக்கப்படாமல் உயிரோடு ஒட்டிக்கொண்டு வரும் உணர்வுகள் எல்லாவற்றிலுமே அழகு உண்டுதான். அந்த அழகையும் - அவளையும் தொடர்புபடுத்தி அப்போது சிந்தித்தான் சாரகுமாரன். அவனுடைய சிந்தனை அவளை வியக்கும் சொற்களாக வெளிப்பட்டது.

"எல்லா நாட்களும் பொழுது புலர்ந்தாலும் மிகச் சில நாட்கள் யாரோ மிகச் சிலருக்குப் பாக்கியத்தோடு பொழுதுகள் புலர்கின்றன. என்னுடைய நாள் இன்று பாக்கியத்தோடு விடிந்திருப்பதாக நான் நினைக்கிறேன் பெண்ணே நான் இப்போது சற்றுமுன் கேட்டதும் அழகு. இதோ என் முன் காண்பதும் அழகு."

- இப்படி அவன் கூறிக்கொண்டே வந்தபோது கடற்புறத்திலிருந்து பலமாக வீசிய காற்றினால் மேலே இருந்த புன்னைமரக் கிளைகள் ஆடி அசைந்ததன் காரணமாகக் கொட்டினாற்போல ஒரு கொத்துப் பூக்கள் கண்ணுக்கினியாள் மேல் உதிர்ந்தன. பூக்கள் வேகமாக உதிர்ந்ததற்கே நொந்து வருந்தினாற்போல் காற்றைக் கடிந்து கூறியவாறே விலகினாள் அவள்.

"ஏன் விலகுகிறாய்? மலரை நோக்கி மலர்கள் உதிர்வதுதானே இயல்பு?"

"ஆகா கேட்பானேன்? கபாடபுரத்து முத்து வணிகர்களுக்கு எது வருகிறதோ, வரவில்லையோ, நன்றாகப் புகழ வருகிறது. இனிமேல் உங்களை முத்து வணிகரென்று சொல்வதுகூடத் தவறு. அன்று முத்து வணிகரென்று சொல்லிக் கொண்டீர்கள். அதற்குப்பின் ஒருநாள் அரண்மனைக் கொலுமண்டபத்தில் பார்த்தேன். பின்னொரு சமயம் தேர்க் கோட்டத்துக் கூட்டத்தில் உலாவில் பெரியபாண்டியருடைய தேருக்கு அடுத்த அலங்காரத் தேரிலிருந்து இறங்கி வந்தீர்கள். இன்று காலையிலோ - அவையெல்லாம் பொய்யாக இப்போது இப்படிப் பழந்தீவுக் கொலை மறவர்களான அவுணர்களைப்போல் கோலத்தில் வந்து நிற்கிறீர்கள்... நீங்கள் யாரோ ஒரு மாயா விநோத மனிதராயிருக்கவேண்டும்... நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்பவை பொய்கள். அந்தப் பொய்கள் உங்களைப் பற்றிய உண்மையைத் தெரிவித்துவிடும் அளவுக்குப் பலவீனமான பொய்களாயிருக்கின்றன."

"நீ குற்றம் சுமத்துவதுபோல் பொய்கள் எவற்றையும் நான் கூறவில்லை என்பதை மறுபடியும் வற்புறுத்திச் சொல்ல விருப்புகிறேன் பெண்ணே..."

"அப்படியானால் பொய்க்கும், மெய்க்கும், இலக்கணமோ வேறுபாடோ தாங்கள்தான் இனிமேல் எனக்குச் சொல்ல வேண்டும். உண்மை அல்லாதது பொய்யென்றும் பொய் அல்லாதது உண்மை என்றும்தான் உலகியல் ரீதியாக என் பெற்றோர்களிடமிருந்து நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்."

" நீ தெரிந்துகொண்டிருப்பது வாதத்திற்குப் பொருந்தலாம்; ஆனால் நியாயத்திற்குப் பொருந்தாது. உண்மையைப் போல் தோன்றும் பொய்களும் உண்டு. பொய்யைப்போல் தோன்றிவிடுகிற உண்மைகளும் உண்டு..."

"இதில் நீங்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது."

"நீ எப்படி வைத்துக்கொண்டாலும் அதை நான் மறுக்கத் துணியவில்லை. நான் கூறியதில்தான் என்ன தவறு? இந்தக் கபாடத்தின் விலையுயர்ந்த முத்துக்களை எல்லாம் உலகத்துக்கு அளிப்பவர்கள் நாங்களே அல்லவா?"

"வணிகரைப்போல் சாதுரியமாகப் பேசுகிறீர்கள். கலைஞரைப்போல் இசையை அதன் நுணுக்கமறிந்து புகழ்கிறீர்கள். அரசரைப்போல் முகக்குறியுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறீர்கள். புலவரைப்போல் சொற்போருக்கு வருகிறீர்கள்...! இதில் எது உண்மையென்றுதான் விளங்கவில்லை?"

"ஏன்? எல்லாவற்றிலுமே சிறிது சிறிது உண்மையிருக்கலாம்! ஒன்று மட்டும்தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்?"

"அந்தக் கற்பனைகள் எல்லாம் இனிமேல் என்னிடம் பலிக்காது ஐயா! நீங்கள் யாரென்ற உண்மையை நான் எப்போதோ தெரிந்துகொண்டாகிவிட்டது. என்னென்ன தன்மைகள் பொருந்தியவர் என்ற உண்மைதான் இன்னும் எனக்குத் தெரியவில்லை என்று இப்போது கூறினேன்."

"தன்மைகளை உணர முயலவேண்டும். ஆராய்வதற்கு ஆசைப்படக் கூடாது..."

"உணர்வது வேறு; ஆராய்வது வேறு என்றா நினைக்கிறீர்கள்?"

"சந்தேகமென்ன? உணர்ச்சிக்கு முடிவில்லை. ஆராய்ச்சிக்கு முடிவுண்டு! 虏 என்னை உணர வேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுவேனே ஒழிய ஆராய வேண்டுமென்று நான் ஒருபோதும் ஆசைப்படமாட்டேன்."

"அப்படியல்ல மனிதர்களை ஆராய்ந்து உணரவேண்டு மென்பார் என் தந்தை..."

"உணர்ந்தவர்களையே ஆராயவேண்டுமென்று சொல்ல வில்லையே அவர்? உணராதவர்களைத்தானே ஆராயவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்? தெரிந்த பின்பு தெளியலாம். தெளிந்தபின்பும் தெரிய முயல்வது குறும்பு, அல்லது அநீதி..."

"நீதி எது அநீதி எது என்பதை உங்களைப்போல் அரச குடும்பத்தார் அறிந்திருப்பது நியாயமே! இப்படித் தர்க்கம் செய்பவர்கள் எப்போதும் அறிவுக்கு மதிப்பளிக்கிற அளவு உணர்ச்சிக்கு மதிப்பளிப்பதில்லை..."

"அறிவும், உணர்வும் வேறுவேறென்று நினைப்பதால் தான் உனக்கு இப்படிப் பேசத்தோன்றுகிறது. அறிவும், உணர்வும் உள்ளங்கையும் புறங்கையும் போன்றவை கலைஞனிலிருந்து அரசன்வரை இதில் மாறுதல் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை." - "அப்படியே இருக்கட்டும்! தயைசெய்து என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் சொற்களால் ஏழை; என்னிடமிருப்பவை ஆடம்பரமில்லாத எளிய சொற்கள். அவை தருக்க ஞானத்தாலோ, விவகார ஞானத்தாலோ கூராக்கப் படாதவை..."

“எளிய சொற்களுக்கு அவை எளிமையானவையாய் இருப்பதே ஒரு பெரிய வலிமை..."

"போதும் அதோ பூக்கொய்யச் சென்ற என் தோழிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். இதோ உங்கள் பின்புறம் மரத்திற்கு அப்பால் பதுங்கி நிற்கிற உங்கள் நண்பரும் அதிசயத்தைப் பார்ப்பதுபோல் எட்டி எட்டிப் பார்க்கிறார். முடியுமானால் அருகிலிருக்கும் எங்கள் கூடாரத்திற்கு வரவேண்டுகிறேன். என் பெற்றோர் வழிப்பயணத்தில் என்னைக் காப்பாற்றிக் கபாடபுரம் வரை தேரில் கொண்டுவந்து சேர்த்ததற்காக உங்களுக்கு நன்றிகற ஆர்வத்தோடிருக்கிறார்கள். அரண்மனைக்குத் தேடிவந்து அவர்கள் அதைக் கூற இயலாது. நாங்கள் ஏழைகள், அரண்மனைக்கு வருகிற தகுதியோ, பெருமிதமோ இல்லாதவர்கள். தயை செய்து எங்கள் குடிசையில் உங்கள் பொன்னடிகள் ஒரு முறை நடக்கும்படி செய்தால் பாக்கியமுள்ளவர்களாவோம்..."

"எளிமையில்தான் அருமை இருக்கிறது. அந்த அருமையை விட வேறு பெருமிதம் எளிமைக்கு எதற்கு? நீங்கள் இன்னும் சிறிதுகாலம் கபாடபுரத்தில் தங்கியிருப்பீர்கள் அல்லவா? இன்னொருநாள் நானே உங்கள் கூடாரத்திற்கு வருகிறேன் பெண்னே! இன்று எனக்கு விடைகொடு என்னால் இயலுமானால் உன்னுடைய குரலுக்காகவே தனியாய்ப் புதிதாய் ஒரு பெரிய இசையிலக்கணமே படைக்கும் படி செய்வேன். அப்படி ஒரு காலம் வந்தாலும் வரலாம்."

"ஏதோ நாங்கள் எங்களுடைய எளிய கலையைப் பெரிய பற்றுடன் ஆண்டுவருகிறோம். உங்களுடைய ஒயாப் புகழ்ச்சியைக் கேட்டால் எனக்குப் பயமாயிருக்கிறது. கலைஞர்களுக்குப் போதாத காலம் சில வேளைகளில் அவர்களை வந்தடைகிற புகழோடு சேர்ந்து வருமென்பார் எங்கள் தந்தை."

"நீ கூறுவதை எல்லாம் கேட்டால் உங்கள் தந்தையை உடனே பார்க்கவும் பேசவும் வேண்டும்போல் ஆசையாயிருக்கிறது எனக்கு. ஆனால் அதுவும் இப்போது இயலாமலிருக்கிறது. அரசியல் கடமையாக வந்தவனுக்கு வேண்டிய போது நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்கிறது? உயர்ந்த இசையைக் கேட்க நேரும்போதெல்லாம் பொற் பூவும், பொன்னாரமும் அளிப்பது எங்கள் குடிவழக்கம். ஆனால் இப்போது இந்த விநாடியில் இந்த இடத்தில் என்னிடம் பொற் பூ இல்லாத காரணத்தால் உன்னைப்போலவே நானும் ஏழைதான். மறுக்காமல் இதைப் பொற் பூக்களாக ஏற்றுக்கொள் பெண்ணே....." என்று உணர்வு பொங்கக் கூறியபடியே கிளையை வளைத்து இரண்டு பெரிய புன்னைப் பூக்களைக் கொய்து அவளிடம் நீட்டினான் சாரகுமாரன்.

அவள் நாணத்தோடு அவற்றை வாங்கிக்கொண்டு வணங்கினாள். அவன் முடிநாகனை நோக்கி விரைந்தான். அவள் தோழிகளும் அவளை நெருங்கி வந்துகொண்டிருந்தனர். அந்தப் பூக்களை நுகர்ந்தபோது அவைமட்டும் தனியே நிறைய மணப்பதுபோல உணர்ந்தாள் கண்ணுக்கினியாள்.