கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/20. சந்தேகமும் தெளிவும்

விக்கிமூலம் இலிருந்து

20. சந்தேகமும் தெளிவும்

கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோகூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்துகொண்டசாரகமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். "கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு ?" என்பதுபோல் உரையாடல் மாற்றப்பட்டது.

கோநகரங்களின் அரசதந்திர நாகரிகங்களும் உரையாடல் நுணுக்கங்களும் தெரியாவிட்டாலும் நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும், உள்ளோருக்கு இயல்பாகவே வாய்க்கும் சில சந்தேகங்கள் எயினர்களுக்கும் இருந்தன. திடீரென்று தங்களுடைய கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்க வேண்டுமென்று விருந்தினர்கள் ஆர்வம் காட்டியதும், பார்த்து முடித்ததும் - அதைப் பற்றிய பேச்சை வளர்த்தாமல் - ஒரு விதமான அவசரத்தோடு கலைகளைப்பற்றிப் பேசத் தொடங்கியதும் எயினர் தலைவனுக்குக் கவலையை அளித்தன. சாதுரியமாகத் தொடர்ந்து பேசிய பேச்சினால் சாரகுமாரனும், முடிநாகனும் அந்தக் கவலையை மறக்கச் செய்துவிட்டார்கள். எயினர் தலைவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனுள்ளேயே தளரும்படி செய்ய அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது. முடிவில் அவர்கள் இருவரும் அந்தத் தீவிலிருந்து விடைபெற முயன்றபோது,

"ஏன் அவசரப்படுகிறீர்கள்? இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே?" என்று எயினர் தலைவன் உபசாரத்துக்காகக் கூறினான். அந்த உபசார வார்த்தைகளையே ஏணியாகப்பற்றி ஏறி நின்றுகொண்டு எயினர் தலைவனின் சந்தேகத்தைக் கடந்து மீண்டான் இளைய பாண்டியன். ஆயினும் சந்தேகத்தை முற்றிலும் கடந்துவிட்ட உறுதி அவனுக்கு வரவில்லை.

"ஐயா! யாத்திரிகர்களாகிய நாங்கள் ஒரே இடத்தில் தங்கி நின்று என்ன பயன்? புதிய புதிய இடங்களையும், புதிய புதிய காட்சிகளையும், புதிய புதிய மனிதர்களையும் சந்திப்பதும், காண்பதுமே, எங்களுக்குப் பயன்தரும். ஆகவே தயைகூர்ந்து எங்களுக்கு விடை கொடுக்கவேண்டும். தங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பலகாலும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று தனக்கோ முடிநாகனுக்கோ அந்தத் தீவின் மேலும் தொடர்ந்து தங்கித் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்பதுபோல் அசிரத்தையாகப் பேசிய பின்பே சாரகுமாரன் எயினர் தலைவனின் சந்தேகச் சிறையிலிருந்து மீள முடிந்தது.

அறிவுக்கூர்மை மிக்கவர்களின் சந்தேகங்களையாவது சொற்களால் தெளிவு செய்துவிடலாம். 'அறியாமையும் பிடிவாதமும் உள்ள நாட்டுப்புறத்து மனிதர்களின் சந்தேகங்களைச் சொற்களாலோ, சிந்தனைத் தெளிவினாலோ மட்டுமே தீர்க்கமுடியாது. சாதுரியம் மட்டுமே அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்கமுடியும் என்பதைச் சாரகுமாரன் அந்த வேளையில் மிக நன்றாக உணர முடிந்தது. எயினர் தலைவன் தங்களுக்கு விடைகொடுத்து விட்டாலும் தங்களை வழியனுப்புவதிலும், தாங்கள், செல்லவேண்டிய வேறு தீவுகளுக்கு எப்படி எப்படிப் போகவேண்டுமென்று வழி சொல்லுவதிலும் அவன் அதிகமான சிரத்தை காண்பிக்க முன்வந்ததிலும் ஒரு சிறப்பான உள் நோக்கம் இருக்கவேண்டுமென்று தோன்றியது சாரகுமாரனுக்கு. அதை அவன் முடிநாகனிடம் கூறி விவாதிக்கவும் விரும்பவில்லை. அந்த உள்நோக்கத்தின் விளைவு விரைவில் தெரியுமென்றும் அவனுக்குத் தோன்றியது.

தங்களுடைய மரக்கலத்துக்கு வந்து பயணத்தைத் தொடங்கிய பின்பும் இதைப்பற்றித் தனிமையில்கூட அவன் முடிநாகனிடம் எதுவும் கூறவில்லை. மரக்கலத்தைச் செலுத்தும் மீகாமனும் பிற ஊழியர்களும் முடிநாகனும் செல்ல வேண்டிய திசையைக் குறித்துத் தங்களுக்குள் உரையாடத் தொடங்கியபோதும் இளையபாண்டியன் அதில் கலந்து கொள்ளவில்லை. 'இன்ன இன்ன திசையில் இப்படி இப்படி மரக்கலத்தைச் செலுத்திக்கொண்டு சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய தீவுகளுக்கு ஏற்றபடி வழி அமையும்' என்று விடைபெறும்போதும் எயினர் தலைவன் கூறிய வழிகளை இப்போது முடிநாகன் பிற ஊழியர்களிடம் நம்பிக்கையோடு விவரிக்கத் தொடங்கியபோதுகூட இளைய பாண்டியன் அதில் தலையிடவில்லை. எல்லாம் பேசி முடிந்து ஊழியர்களுக்கு இடவேண்டிய கட்டளைகளையும் இட்டு முடித்தபின் முடிநாகன் தனியே நின்றுகொண்டிருந்த இளையபாண்டியனுக்கருகே நெருங்கி,

"எந்தத் திசையில் மரக்கலத்தைச் செலுத்தச் சொல்லியிருக்கிறேன்; தெரியுமா?" என்று வினாவியபோது

"எந்தத் திசையில் செலுத்திக் கொண்டுபோனாலும் ஆபத்து இருக்கிறது என்பதை மறந்து விடாதே" என்று பூடகமாக மறுமொழி கிடைத்தது இளையபாண்டியனிடமிருந்து. அந்த மறுமொழியைக் கேட்டு முடிநாகன் ஒரளவு அதிர்ச்சியடைந்தான் என்றே சொல்லவேண்டும். மேலும் தொடர்ந்து இளையபாண்டியன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்து முடிநாகனுக்கு அவனுடைய தொடர்பான நீடித்த மெளனம் திகைப்பையே அளித்தது. அந்த மெளனத்தைத் தற்செயலான அமைதியாகவோ சோர்வாகவோ கருதி விட்டுவிடவும் முடிநாகனால் இயலவில்லை. ஏதோ பெரிய காரணம் இருக்கவேண்டுமென்றும் தோன்றியது. ஒரு காரணமும் தனியே பிரிந்து புலப்படவில்லை. அந்த நிலையில் இளையபாண்டியனின் அந்த மெளனத்தைக் கலைத்து உரையாடலை வளர்க்கவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு. நீண்ட நேரம் அதே நிலைமை நீடித்தது. இளையபாண்டியனிடம் ஏதாவது பேசியாக வேண்டுமென்று முடிநாகனே வாய் திறந்தபோது சிறிதும் எதிர்பாராதவிதமாக இளையபாண்டியனே பேச முன்வந்தான்.

"முடிநாகா! நாம் இந்தத் தீவில் இன்னும் சிலநாட்கள் தங்கி நம்மோடு எயினர் தலைவன் சுபாவமாகப் பழகத் தொடங்கிய பின்பு கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்கும் ஆவலை வெளியிட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டு விட்டோம். அவசரப்படாமல் காரியங்களைச் சாதித்துக் கொள்வதிலுள்ள நீடித்த செளகரியம் அவசரப்படுவதில் எப்போதுமே இருப்பதில்லை" என்று இளையபாண்டியன் கூறத்தொடங்கியது முடிநாகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தனக்கு ஒன்றும் புரியாத பாவனையில் திகைப்போடு சாரகுமாரனின் முகத்தைப் பார்த்தான். சாரகுமாரனோ கடலைப் பார்த்தான். நான்குபுறமும் திரும்பித் திரும்பி எதையோ எதிர்பார்ப்பதுபோல் பார்த்தான். அதிலிருந்தும் முடிநாகனால் எதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய சந்தேகமும் தீரவில்லை. தெளிவும் பிறக்கவில்லை. அந்நிலையில் அவர்கள் மனநிலையைப்போல் இருளும் மயங்கத் தொடங்கியது.