கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/17. வலிய எயினன் வரவேற்பு

விக்கிமூலம் இலிருந்து

17. வலிய எயினன் வரவேற்பு

அந்தி மயங்குகிற வேளையில் ஏதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடுபோல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவம் மலையும் மெல்லத் தெரியலாயின. தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த கருவியினால் பார்த்துவிட்டு "தீவு நெருங்குகிறது" என்று அறிவித்தான் முடிநாகன். இளையபாண்டியன் அந்தக் கருவியை வாங்கித் தொலைவில் தெரிவதைப் பார்த்தபோது, வானளாவிய மரங்கள் செறிந்த மலை ஒன்று கண்களில் தெரிந்தது. அவ்வளவு உயரமாகவும், பருமனாகவும், செழிப்பாகவும், அடர்த்தியாகவும் மரங்கள் செறித்திருந்த மலையைப் பார்ப்பதே மகிழ்ச்சியாயிருந்தது.

அந்தத் தீவின் நடைமுறைகளையும் ஒழுகலாறுகளையும் பழக்கவழக்கங்களையும் இளையபாண்டியனுக்குச் சொல்லத் தொடங்கினான் முடிநாகன்.

"யாத்ரிகர்கள் என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட நாம் அங்கே தெரிவிக்கலாகாது. அப்படித் தெரிவிப்பதனால் பெரிய பெரிய கெடுதல்கள் சம்பவிக்கலாம்" என்று முடிநாகன் எச்சரிக்கையாக முன்பே கூறிவைத்தான். இந்த எச்சரிக்கை கப்பல் ஊழியர்களுக்கும் ஒருமுறைக்கு இருமுறையாக வற்புறுத்தித் தெரிவிக்கப்பட்டது. பாய் மரங்களிலும், கப்பலின் பிற்பகுதிகளிலுமிருந்த அரசியல் அடையாளச் சின்னங்கள் மறைக்கப்பட்டன. தீவினர்களுக்குக் கொடுப்பதற்கான அன்பளிப்புப் பொருள்களாக யானைத் தந்தங்களும், முத்துக்களும், இரத்தினங்களும் எடுத்து வைக்கப்பட்டன.

"இந்தவிதான தீவுகளில் மென்மையும், நாகரிகமும் பொருந்திய பண்பட்ட இராசநீதி முறைகள் எவையும் கிடையாது. இறங்கியதும் தீவுத்தலைவனைச் சந்தித்து யாத்திரீகர்களாக வந்திருப்பதாய்த் தெரிவித்து அன்பளிப்புக்களை வழங்கிவிடவேண்டும். மனிதர்களைப் பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்களைக் கொலைசெய்வதற்குக் குறைவான வேறெந்தச் சிறிய தண்டனையையும் வழங்கத் தெரியாது இவர்களுக்கு" என்றான் முடிநாகன்.

"இயல்புதான்! நாகரிகம் அடையமுடியாத தொடக்க நிலையில் எல்லாக் குடிமக்களும் இப்படித்தான் இருக்கமுடியும். மொழியும், பேச்சும், இலக்கணமும், இலக்கியமும், இசையும், நாடகமும், கலையும், காவியமும் தோன்றித்தான் மனிதனின் தொடக்கக்கால மிருகத்தன்மைகளைப் படிப்படியாகக் கரைத்து அவனை மென்மையாக்கியிருக்கின்றன. அந்தக் கலை நாகரிகமும் மொழி நாகரிகமும் தோன்றாத இப்பகுதிகளில் கொடிய நீதிமுறைகள்தான் நிலவமுடியும்" என்று முடிநாகனுக்கு விளக்கம் கூறினான் இளையபாண்டியன்.

நீலக்கடலினிடையே அந்தத் தீவும் அதிக உயரமில்லாத குன்றுகளும் மனோரம்மியமாகக் காட்சியளித்தன. மரங்களும், இலை தழைகளும், செடி கொடிகளும், நெய் பூசித் துடைத்துப் பளபளப்பாக வைத்தவைபோல் பசுமை மின்னின. தரைப்பகுதி மரங்களின் பசுமைக்கும் இந்தத் தீவுப் பகுதித் தாவரங்களின் பசுமைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இந்தப் பசுமையில் ஒருவிதமான செழிப்பும், அடர்த்தியும் மதம் பிடித்ததுபோல் பற்றியிருந்தன. மனிதர்களும் அதேபோல் வலிமை மதம் பிடித்தவர்களாய்த் தோன்றினார்கள். வலிமையையும், திடனையும் காட்டுவதுபோல் கரிய நிறம். வளையம் வளையமாகச் சுருண்ட செம்பட்டை முடி. ஒளி மின்னும் சிறிய கூர்மையான கண்கள். அதிக உயரமில்லாத தோற்றம். சதைப் பிடிப்பு வாய்ந்த திரண்ட தோள்கள். பரந்த மார்பு. வேகமாக ஓடுவதற்கும், துரத்துவதற்கும் ஏற்ப வாய்ந்தவைபோல் இறுக்கமான குதிகால்கள். அத் தீவின் மனிதர்களான எயினர்கள் பார்ப்பதற்கு விநோதமாயிருந்தார்கள். இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்புநிற மரப்பட்டையைக் கச்சையாக அணிந்திருந்தார்கள்.

இளையபாண்டியனும், முடிநாகனும் தங்கள் பாய்மரக் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தச் செய்தனர். பாய்களும் கீழே இறக்கிச் சுருட்டி முடியப்பட்டன. கரையில் குன்றினருகே ஒட்டினாற்போலக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்த முடியாமையினால் சிறிது தள்ளியே நிறுத்த வேண்டியதாயிற்று. கப்பல் நிறுத்தப்படுவதைப் பார்த்ததும் அதிலிருந்த இளையபாண்டியனோ, முடிநாகனோ கூப்பிடாமல் தாங்களாகவே இரண்டு குரூரமான தோற்றத்தையுடைய குள்ள எயினர்கள் ஒர் சிறு படகில் அதை நோக்கி வந்தனர். எயினர்கள் பேசிய தமிழில் வல்லின ஒலி அதிகமாயிருந்தது. படுத்த குரலில் சொல்லவேண்டிய சொற்களைக் கூட எடுத்த குரலில் வலித்துப் பேசினார்கள். சொற்களைப் பல்லைக் கடித்துக்கொண்டு வெளியிடுவதுபோல் வெளியிடும் சமயங்களில் அவர்களுடைய முகத்தில் பளீரென்று மின்னும் சிறிய கண்கள் பார்ப்பவர்களுக்குப் பயமூட்டுகின்றனவையாய் இருந்தன. கரையிலிருந்து கொண்டுவந்த அந்தச் சிறிய படகைக் காண்பித்து, "கீழே இறங்கி இந்தப் படகுக்கு வாருங்கள்" என்பதுபோல் இளையபாண்டியனையும், முடிநாகனையும் நோக்கி அந்தக் குள்ளர்கள் சைகையால் அழைத்தார்கள். தோற்றத்தைக்கண்டு ஏளனமாக எண்ணி அந்தக் குள்ளர்களை அலட்சியம் செய்யவோ அவர்கள் வேண்டுகோளை மறுக்கவோ, கூடாதென்பதுபோல் இளையபாண்டியனுக்குக் குறிப்பாக உணர்த்தினான் முடிநாகன்.

"இவர்கள் இந்தத் தீவிற்குத் தலைவனான வலிய எயினனின் பணியாளர்கள். வலிய எயினனுடைய வார்த்தைக்குத் தீவிலுள்ள பெருமக்கள் அடங்கிக் கட்டுப்படுவார்கள். வலிய எயினர்கள் அரசகுடும்பத்தினரைப்போல் பரம்பரையாகப் பட்டத்துக்கு வந்து தீவின் ஆட்சி உரிமையைப் பெறுகிறவர்கள். தீவுக்கு வருகிற பிறநாட்டினரை இவர்கள் முதலில் வலிய எயினனிடம் அழைத்துக்கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். பாட்டனார் நம்மிடம் கொடுத்து அனுப்பியிருக்கும் அன்பளிப்புப் பொருள்களில் ஒரு பகுதியை இப்போது நம்முடன் எடுத்துக்கொண்டுவிடவேண்டும். மற்றெந்த நாட்டினர் எந்த எந்த அன்பளிப்பைக் கொண்டுவந்து கொடுத்தாலும் கபாடத்து முத்துக்களை அன்பளிப்பாகக் கொண்டு தருகிறவர்களிடம் இவர்கள் தனிப்பிரியம் காட்டுவார்கள் என்று தங்கள் பாட்டனார் கூறியிருக்கிறார் அல்லவா? அந்த உபாயம் இப்போது நமக்குப் பயன்படும் வேளை வந்திருக்கிறது" என்று இளையபாண்டியனின் செவியருகே நெருங்கி மேலும் கூறினான் முடிநாகன்.

ஊழியர்களை எல்லாம் கப்பலிலேயே விட்டுவிட்டு இளைய பாண்டியனும் முடிநாகனும் வலிய எயினனைச் சந்திப்பதற்காகத் தீவிற்குள் அழைத்துச் செல்லவந்த படகில் புறப்பட்டனர். படகு கரையை நெருங்கியதும் - வேறு இரண்டு குள்ளர்கள் தீப்பந்தத்தோடு காத்திருப்பது தெரிந்தது. தீவில் இருள் செறிந்திருந்தது. மேலே வானளாவிய மரங்களும் செடிகொடிகளும், அடர்ந்து படர்ந்திருந்த பகுதியில் நூலிழை ஒடுவதுபோல் ஒற்றையடிப்பாதை ஒன்று ஊடறுத்துக்கொண்டு போயிற்று. அந்தப் பசுமை அடர்த்தியினிடையே சிள் வண்டுகள் ஒசையிடும் சூழலில் ஒற்றையடிப்பாதை என்ற சிறு வழி அச்சமூட்டுவதாக இருந்தது. குரவையிடும் ஒலி மெல்லக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆள் நடந்துவரும் ஒலியில் அமைதி கலைந்து மரங்களில் அடைந்திருந்த பறவைகள் சிறகடித்து எழுந்தன. பறந்துவிட்டு மறுபடியும் அடைந்தன.

அந்தி மயங்கும் நேரத்தின் இயல்பான இருளை மரங்களின் அடர்த்தி மிகைப்படுத்தி அதிகமாக்கி இருந்தது. தேக்கு, வெண்கடம்பு, தேவதாரு, ஆகிய மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அவற்றின் பருத்த அடிமரங்கள் இருளில் பூதாகாரமாகத் தோன்றின. இரு குள்ள எயினர்கள் தீப்பந்தத்தோடு முன்னால் வழிகாட்டி நடக்கப் பின்னால் வேறிரண்டு எயினர்கள் காவல் வர இளையபாண்டியனும், முடிநாகனும் நடந்து சென்ற வழி நீண்டு கொண்டேயிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பின் தாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த ஒற்றையடிப்பாதை ஒரு பள்ளத்தாக்கை நோக்கி இறங்குமுகமாகச் செல்வதை அவர்களால் உணர முடிந்தது. செழிப்பும், வளமும், பெருகி ஒரே பசுமை அடர்த்தியாகத் தாவரக்குகையாக இருண்டிருந்த அந்தப் பகுதியில் மேடு பள்ளம் உணர்வதே அருமையாக இருந்தது.

ஒரளவு பொறுமையைச் சோதிக்கும் தொலைவுவரை நடந்தபின் பள்ளத்தாக்கானதொரு சமவெளியில் மரங்கள் ஆகாயத்தை மறைக்காத திறந்தவெளிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். திறந்த வெளியில் அங்கங்கே பரவலாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. எயினர்கள் கூட்டம் கூட்டமாகத் தென்பட்டார்கள். மேல் மரம் வெட்டப்பட்டதால் பத்துப் பன்னிரண்டுபேர் அமர முடிந்த வட்டவடிவமான மேடைபோல் தானே நேர்ந்திருந்த ஒர் அடிமரத்தில் வலிய எயினன் கம்பீரமாக வீற்றிருந்தான். அவன் கையில் நீண்ட வேல் இருந்தது. அதன் இலைபோன்ற கூரியநுனி தீப்பந்தத்தின் ஒளியில் பளீரென்று மின்னிக்கொண்டிருந்தது. இருளில் ஒவ்வொருவருடைய கண்களும்கூட அந்த வேல் நுனியைப்போல் பளிரென்று ஒளிர்ந்துகொண்டிருந்தன. இளைய பாண்டியனும், முடிநாகனும் ஏழுகோல் தொலைவிலேயே நிற்குமாறு செய்துவிட்டு உடன் வந்த குள்ளர்கள் - வலிய எயினனைப் பயபக்தியோடு அணுகி வணங்கி - ஏதோ கூறினர்.

அந்த நேரம் பார்த்துச் சமயோசிதமாகக் கபாடத்து முத்துக்களையும், சில இரத்தினங்களையும் இரு உள்ளங் கைகளிலும் ஏந்தியபடியே வலிய எயினனை நெருங்கினான் முடிநாகன். இரவில் விண்மீன்களாக மின்னும் அந்த முத்துக்களையும் இரத்தினங்களையும் கண்டவுடன் வலிய எயினனின் குரூரமான முகத்தில்கூட ஒரு மலர்ச்சி பிறந்தது. இளைய பாண்டியன் ஏனோ வலிய எயினனின் அருகில் நெருங்கிச் செல்வதற்குத் தோன்றாமல் முதலில் நிறுத்தப்பட்ட இடத்திலேயே தயங்கி நின்றான்.

முடிநாகனோ தானாக எடுத்துக்கொண்ட உரிமையுடன் வலிய எயினனுக்கு அருகில் நெருங்கி முத்துக்களை வழங்கியதோடு அமையாமல், "தலைவரே! நாங்கள் பாண்டிய நாட்டு யாத்ரிகர்கள். தென்பழந்தீவுகளின் இயற்கை வளங்களைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறோம். தங்களுக்கு அன்பளிப்பாக இந்த முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தோம்" என்று மிக விநயமாகப் பேசவும் தொடங்கிவிட்டான். வலிய எயினன் முகமலர்சியோடு அவற்றைப் பெற்றுக்கொண்டான்.

"ஏன் உங்களுடன் வந்தவர் அங்கேயே தயங்கி நிற்கிறார் அவரையும் கூப்பிடுங்கள். இருவரும் அப்படி அமர்ந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று பக்கத்தில் மென்மையாக அலங்கரிக்கப்பட்டிருந்த இன்னோர் வெட்டுண்ட அடிமரப் பகுதியைக் காண்பித்தான் வலிய எயினன். இளையபாண்டியனும் முடிநாகனுக்கு அருகில் வந்துசேர வேண்டியதாயிற்று. இருவரும் வலிய எயினனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அமர்ந்துகொண்டனர். வலிய எயினன் அந்தத் தீவில் விளைந்த விநோதமான தோற்றங்களையுடைய பல நிறக்கணிகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தான்.

"இந்தத் தீவுக்கு வரும் விருந்தினர்களையும் நண்பர்களையும் நாங்கள் நேசபாவத்தோடு வரவேற்க முடிவுசெய்து விட்டோமென்றால்தான் இப்படிக் கனிகளை அளித்து உபசரிப்போம்" என்று இரைந்து சிரித்துக்கொண்டே தன் முரட்டுக் குரலில் உரத்துக் கூறினான் வலிய எயினன். முடிநாகனும், இளைய பாண்டியனும் கூடப் பதிலுக்குப் புன்முறுவல் பூக்க முயன்றனர்.