உள்ளடக்கத்துக்குச் செல்

கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)/9. முதியவர் முன்னிலையில்

விக்கிமூலம் இலிருந்து

9. முதியவர் முன்னிலையில்

அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர் இருவரையும் நன்றாக ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். "நகர் பரிசோதனையை மிகவும் சுறு சுறுப்பாகச் செய்து வருவதாகத் தெரிகிறது."

"இளைய பாண்டியர் விரும்பினார் அழைத்துச் சென்றேன்."

"எங்கெங்கே சென்றிருந்தீர்கள்? என்னென்ன நிகழ்ந்தது? என்பதையெல்லாம் நான் அறிந்து கொள்ளலாமா முடிநாகா! இந்தக் கிழவனுக்கு இன்றென்னவோ உறக்கம் வரவே மறுக்கிறது" என்றார் பெரியவர். அப்போது இளையபாண்டியரின் விழிகள், 'தயைசெய்து கடற்கரைப் புன்னைத் தோட்டத்து நிகழ்ச்சியை மட்டும் சொல்லி விடாதே' -என்பதுபோல் முடிநாகனைக் கெஞ்சின.

முடிநாகனும் அந்தக் குறிப்பை ஏற்றுக் கொண்டான். பெரியவரிடம் அவன் மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் கூறினாலும் இளையபாண்டியனுடைய விருப்பத்தை மீறாமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றதைப் பற்றி மட்டும் கூறாமல் மறைத்து விட்டான். பெரியவரோ முடிநாகன் கூறியவற்றை எல்லாம் கேட்டுவிட்டுப் புன்முறுவல் பூத்தார். அடர்ந்த மீசையினிடையே தெரிந்த அந்தத் தளர்ந்த பற்களின் சிரிப்பு வழக்கத்தை மீறியதாகவும் புதுமையாகவும் இருந்தது. "முடிநாகா! உங்கள் இருவரிடமும் நான் ஒன்று கேட்கவேண்டும்? ஏன்கோட்டை மதிற்பக்கத்தோடு நகர்பரிசோதனையை முடித்துக் கொண்டு திரும்பி விட்டீர்கள்? கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கமும் போயிருக்கலாமே?”

"இன்றென்னவோ அங்கே போக நேரிடவில்லை... பெரிய பாண்டியர் கட்டளையிட்டால் நாளை அவசியம் அங்கே சென்று வருவோம்..."

"ஆம்! ஆம்! அவசியம் சென்றுவர வேண்டும். ஏனென்றால் அந்தப் புன்னைத் தோட்டத்துப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாணரும், பொருநரும், விறலியரும், இரவில் நெடுநேரம் இசையும் கூத்துமாகப் பொழுது கழிக்கின்றார்களென்று கேள்வி. நகர் பரிசோதனை செய்து அலைந்து திரிந்து களைத்த பின் அங்கே போய்வருவது உங்களுக்கும் ஆறுதலாக இருக்குமல்லவா?"

பெரியவரின் இந்தச் சொற்களைக் கேட்டு முடிநாகனுக்கு உள்ளே குறு குறுத்தது. பொதுவாகத்தான் இவர் இப்படிக் கேட்கிறாரா அல்லது ஏதாவது உட்பொருள் வைத்துக் கேட்கிறாரா என்று புரிந்துகொள்வது அரிதாயிருந்தது. பெரியவரோ அவர்களிருவரின் முகபாவங்களையும் இமையாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். தங்கள் முகங்களில் ஏற்படும் சிறு மாறுதல்கூட அப்போது அவர் பார்வையிலிருந்து தப்ப முடியாதென்று தோன்றியதனால் இருவரும் ஆடாது அசையாது சிலைகளாய் சபிக்கப் பட்டாற்போல நின்றனர்.

எதிராளியின் தீர்க்கமான கண்பார்வைக்கு முன்னால் உணர்வுகள் மாறி முகத்தில் சலனம் தோன்றினால்கூட அகப்பட்டுக் கொள்ள நேரிடும். இப்படி நிலைமை உடைமைக்குரியவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் பொருளைத் திருடத் துணிவதைப் போன்றது. அரச தந்திரத் துறையில் பயிற்சியும் பழக்கமும் மிகுந்தவர்களின் கண்களே மாபெரும் படைகளுக்குச் சமமானவை. தங்களின் கண்பார்வையிலேயே பல வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க அப்படிப்பட்டவர்களால் முடியும். பெரியபாண்டியருடைய கண்களுக்கே அவருடைய வெற்றிகளை நிர்ணயிக்கும் ஆற்றல் உண்டு என்பதை முடிநாகன் அறிவான். எதிரி பலவீனமாயிருக்கும் நேரத்தை அறிந்துகொண்டே மேலும் பலவீனப் படுத்துவதுபோல் பெரியவர் தொடர்ந்தார்.

"நான் சொல்வதெல்லாம் உங்கள் நன்மைக்குத்தான் முடிநாகா ஏனென்றால் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருக்கும் கலைஞர்கள் தங்களுக்குள் பொழுது போக்குவதற்காக ஒரு நோக்கமும், பயனும் இன்றி நிகழ்த்துகிற கலைகள் அதிக அழகுடனிருக்க முடியும். சொந்த மனத்தின் திருப்தியையே ஒரு சித்தியாக எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்லமுடியாமல் அது உயர்ந்துவிடும்! இல்லையா?"

முடிநாகன் வாய்திறக்கவில்லை. பெரியவர் வகையாகப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவரிடம் பொய் கூறியதை எண்ணி அவன் மனம் தவித்து மெய் நடு நடுங்கி நின்றான். அந்தச் சமயத்தில் அவருக்கு இவையெல்லாம் எப்படித் தெரியவந்தன என்பதும் அவன் மனத்தில் குழப்பமாயிருந்தன. அவரோ சொற்களாலும், பார்வையாலும் அவர்களை ஊடுருவினார். உறுத்தும் பார்த்தார்.