உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/கட்டைத் தாலி கழுத்துடன் செக்கிழுத்தார் சிதம்பரம்.

விக்கிமூலம் இலிருந்து

9. கட்டைத் தாலி கழுத்துடன்
செக்கிழுத்தார் சிதம்பரம்!

சிதம்பரனாருக்குரிய ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையை, அவர் கோயம்புத்துர், கண்ணனூர் சிறைகளில் கோரமாக அனுபவித்தார். அப்போதெல்லாம் தமிழ்நாட்டுச் சிறைகளில் தேசபக்தர்கள் அதிகமாக தண்டனை அனுபவிப்பது கிடையாது. அதனால் சிதம்பரம், சிவா போன்றவர்கள் சிறைகளில் தன்னந்தனியாகவே அவரவர் தண்டனைக் காலங்களைக் கழித்து வந்தார்கள்.

சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு எந்தவிதமான வசதிகளும் செய்து தரும் வழக்கம் இல்லை. திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன்களைப் போன்ற சமூக விரோதிகளுடனே சரி சமமாகச் சேர்ந்தே அவரவர் தண்டனைகளை அனுபவிப்பது என்பது வழக்கமாக இருந்தது.

இத்தகைய சமூக விரோதிகள் சிறையுள்ளே என்னென்ன துன்பங்களை, கொடுமைகளை, சித்ரவதைகளை அனுபவிக்கின்றார்களோ அவற்றையெல்லாமே அரசியல் கைதிகளும் சேர்ந்தே அனுபவிக்கும் கொடுமை அரசியல் கைதிகளுக்கும் இருந்தது. அதனால், சிதம்பரம் பிள்ளையும் சிறைச்சாலையில் அளவிலா துன்பங்களை அனுபவித்ததுடன் இல்லாமல், சமூக விரோதக் கைதிகள் தன்னைப் போலவேதான் அரசியல் கைதிகளும் என்றெண்ணி சிதம்பரனார், சிவா போன்றவர்களை அவமரியாதையாக நடத்திடவும், கேவலமாக அவர்களை மதிக்கவும் செய்தார்கள்.

நல்ல உணவுகளை வீட்டில் உண்டு வந்த சிதம்பரனார் போன்றவர்களுக்கு சிறை உணவான கேழ்வரகு, கூழ், களி போன்ற உணவுகள் உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவரது உடல் நாளுக்கு நாள் உருக்குலைந்து வரலாயிற்று. ஆறே மாதங்களில் 27 பவுண்டுகள் உடல் எடை குறைந்தது என்றால், அவர் ஆறாண்டுக் காவலை எப்படிக் கழித்திருப்பார் என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றல்லவா?

இவ்வாறு உடல் மெலிந்த சிதம்பரனாரை சிறை டாக்டர் சோதனை செய்த பின்பு, சிறை அதிகாரிகளை அவர் எச்சரித்துப் புகார் கூறியதனால்தான், சிதம்பரனாருக்கு அரிசி உணவு வழங்கப்பட்டது.

சிறையில் அவரது கால்களுககு பெரும் இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டன. முரட்டுத் துணிகளாலான மேல்சட்டை, மொட்டை அடிக்கப்பட்ட தலை, என்று அவருக்கு விடுதலை என்பதைக் குறிக்கும் கட்டையைத் தாலி போல கழுத்தில் தொங்கவிடப்பட்டது.

உடல் உருக்குலைந்த ஒரு வக்கீலை, சிறையதிகாரிகள் கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார்கள். வழக்குரைஞர் பணி அவரது பரம்பரைக்கு வாழையடி வாழையாக வந்த பணி. அப்படிப்பட்டவரை வெள்ளைக்கார சிறையதிகாரிகள் மாடுபோல எண்ணும்படி செக்கின் நுகத்தடியைச் சங்கிலியாலே பிணைத்து, அந்தச் சங்கிலியை இடுப்பிலே இறுகக்கட்டி, அதைக் கைகளிலே பூட்டி அவரை இழுக்க வைத்து வேதனைப்படுத்தி, கொடுமையின் சிகரத்திலே அவரை நிற்க வைத்துத் தினந்தோறும் வேலை வாங்கி வந்தார்கள்.

சிதம்பரம் பிள்ளையைச் செக்கை இழுக்கும் மாடுபோல மாற்றிவிட்டது சிறையதிகாரம் அதனால், ஒருநாள் செக்கை மாடு போல இழுக்க முடியாமல், களைப்பு ஏற்பட்டு மயங்கிக் கீழே சுருண்டு விழுந்து விட்டாராம்! பிறகு, மனித நேயமுடைய கைதியில் ஓரிருவர் அவரைத் தூக்கி நிற்க வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்த பின்பு, திடீரென அங்கே வந்த அதிகாரிகள் மீண்டும் சிதம்பரனாரைச் சங்கிலியோடு சேர்த்துப் பிணைத்து மாடுபோல செக்கை இழுக்குமாறு சாட்டையைக் காட்டி மிரட்டினார்களாம்.

சிதம்பரம் செக்கை இழுக்கும் போது, அவருக்கு செக்கை இழுப்பது போன்ற நினைவே இருக்காதாம். சுதந்திர தேவியின் திருக்கோயிலைச் சுற்றி வலம் வருவது போலவே அவர் எண்ணிக் கொள்வாராம்!

சிறையிலேதான் இந்த சித்ரவதைகள் என்றால், சிறைக்கு வெளியேயும் இருந்து அவருக்குத் துன்பங்கள் தொடர்ந்து வந்தவாறே இருந்தன. என்ன அந்தத் துயரங்கள்?

சிதம்பரனார் சிறை புகுந்ததும், அவர் அரும்பாடுபட்டு ஆரம்பித்த சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகமும் மூடப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி சிதம்பரனாரின் கப்பல் நிறுவனத்தை எப்படியும் அழிப்பது என்றே கங்கணம் கட்டி அலைந்ததல்லவா? அதற்கேற்றவாறு, சுதேசி கப்பல் கம்பெனியால் பிரிட்டிஷ் போட்டி வாணிகத்தைச் சமாளிக்க முடியவில்லை. அதே நேரத்தில் சிதம்பரனாருக்கு 40 வருடங்கள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்ட உடனே, சுதேசி நிறுவன நிர்வாகிகளுக்குப் பயம் ஏற்பட்டு விட்டது. அதனால் வ.உ.சி. துவங்கிய கப்பல் கம்பெனியைக் கலைத்து விட்டார்கள்.

கலைத்தது மட்டுமன்று, என்ன பாடுபட்டு இரண்டு கப்பல்களை சிதம்பரனார் வாங்கினாரோ, அந்தக் கப்பல்களை சிதம்பரனாரைக் கேட்காமலேயே வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனிக்கே விற்று விட்டார்கள் என்ற கொடுமையான செய்திகளைக் கேட்ட சிதம்பரனார், அனுபவிக்கும் சிறைக் கொடுமைகளைவிடக் கோரமான, கொடுமையான வேதனைகளை அவர் சிறையிலே அனுபவித்தார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு காலிபா கப்பலை வாங்கி வந்தோம். அதை அழிக்க நினைத்த வெள்ளையனுக்கே அதை விற்று விட்டார்களே மாபாவிகள் என்று எண்ணி உணவின்றியும் உறக்கமின்றியும் வேதனைகளோடே அவர் உள்ளம் நைந்தார்.

சிறையிலே சித்ரவதைகளை நாள்தோறும் ஏற்றுக் கொண்டிருந்த சிதம்பரம் பிள்ளைக்கு, மேலும் பல துன்பச் செய்திகள் தினந்தோறும் வெளியே இருந்து வந்து துன்புறுத்தின. அதாவது, சுதேசிக் கப்பல் நிறுவனம் மூடப்பட்டதற்கு சிதம்பரனாரின் தீவிரவாத அரசியல் கொள்கையே காரணமாதலால் நிர்வாகிகள் இழந்த பொருள்களுக்குரிய நஷ்ட ஈட்டை சிதம்பரனார்தான் கொடுக்க வேண்டும் என்று சுதேசிக் கப்பல் கம்பெனி நிர்வாகிகள் கேட்டு அவர் பெற்றோரை நெருக்கினார்கள் சிறையிலே உள்ள சிதம்பரனார் என்ன செய்வார்?

இந்த நெருக்கடிக்குக் காரணமறிந்த சிதம்பரம் பிள்ளை, சுதேசிக் கம்பெனியின் சட்ட ஆலோசகரான சேலம் சி.விஜயராகவாச்சாரியாருக்குக் கடிதம் மூலமாகக் குறிப்பிடும் போது, கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பங்குதாரர்கள் ஏற்பதே நியாயம். அவர்கள் மறுப்பார்களானால், நானே கடன்களைக் கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்தார் இந்தத் துன்பங்கள் அவரை நெருக்கி வேதனைப்படுத்தினாலும் அதற்காக அவர் வருந்தவில்லை.

ஒவ்வொரு நாளும் சிதம்பரனார் சிறையில் அதிகாரிகளுடன் தனது சுயமரியாதைக்காகப் போராட வேண்டிய நிலை இருந்தது. ஜெயில் அதிகாரி ஒரு நாள் சிறையைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அப்போது சிதம்பரனார் திடீரென்று சிரித்து விட்டார் அதைக் கண்ட அதிகாரி ஏன், சிரிக்கிறாய்? என்று சிதம்பரம் பிள்ளையைக் கேட்டார். அதற்கு அவர், சிரிக்காமல் என்ன செய்ய சொல்கிறீர்? அழுவதா? என்று கேட்டுவிட்டார் கோபம் கொண்ட அதிகாரி இந்த விவகாரத்தை ஜெயில் சூப்ரெண்டிடம் புகார் செய்தார். சிரித்த குற்றத்திற்காக மேலும் 2 வாரம் சிறை தண்டனையை சிதம்பரம் பெற்றார்.

வேறோர் நாள் சிறை அதிகாரி, சிதம்பரம் பிள்ளையைத் தோட்டி வேலை செய்யுமாறு பலாத்காரமாக வற்புறுத்தினார். உயிரே போனாலும் அந்த வேலையைச் செய்யமாட்டேன் என்று கண்டிப்பாக அவர் மறுத்துவிட்டார் சிதம்பரத்தின் பிடிவாதமான மன உரத்தைக் கண்ட அதிகாரி மேற்கொண்டு அவரை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்.

இராமன் என்ற ஒரு காண்விக்ட் வார்டர், சிதம்பரம் பிள்ளையின் பெருமையை உணர்ந்து அவரைக் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுவதை ஒரு ஜெயிலர் பார்த்து விட்டார். “இனிமேல் சிதம்பரத்தை வணங்கினால் உன்னைச் செருப்பால் அடிப்பேன்” என்று வணங்கிய ராமனைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தான் அந்த ஜெயிலர்

கோயம்புத்தூர் சிறையிலே, திருநெல்வேலி கலவரத்தில் தண்டிக்கப்பட்ட சிலர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிதம்பரனாருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அந்தக் கைதிகளும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்கள். அதே நேரத்தில் ராமன் சிதம்பரத்தை வணங்கியபோது ஜெயிலர் பேசிய கடுமையான வார்த்தைகளையும், சிதம்பரத்தின் பெருமை, புகழ், மரியாதை, மதிப்பு தெரியாத அந்த அதிகாரியின் செயலைக் கண்டும் அவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள்

ஒருநாள் அதிருப்தியாளர்கள் எல்லாம் வேறொரு வார்டில் கூடி, நமது தலைவரை அவமதித்த அந்த ஜெயிலரைக் கொன்று விடுவது என்று திட்டமிட்டார்கள் திடீரென்று ஒரு நாள் அந்த ஜெயிலரின் அலுவலகம் தாக்கப்பட்டது. அன்று ஞாயிற்று கிழமை. விடுமுறை நாளாதலால் காவலாளிகளில் பலர் வரமாட்டார்கள் விடுமுறையில் இருந்தார்கள் இதனையெல்லாம் தாண்டி அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், இரண்டு மணி நேரமாக ஜெயிலிலேயே பெரிய கலவரத்தையும், அடிதடிசண்டைகளையும் உருவாக்கி, சிறையையே கலவரக் கூடமாக்கி விட்டார்கள். உடனே சிறையினுள்ளே இருந்த அபாயமணி ஒலித்தது. இடைவிடாமலும், விட்டு விட்டும் மணி அலறிக் கொண்டே இருந்தது. கைதிகளில் பலர் பூட்டுக்களை உடைத்துக் கொண்டு சிறைக்கு வெளியே ஓடினார்கள். அந்த நேரத்தில் ஏராளமான ரிசர்வ் போலீசார் கார்களில் வந்து குவிந்தார்கள். சுட்டார்கள் கைதிகளை ஒரு கைதி பிணமானார். ஆனால், அந்த ஜெயில் அதிகாரி, அதாவது சிதம்பரம் பிள்ளையை அவமரியாதையாக எண்ணி ராமன் என்ற கன்விக்ட் கைதியைச் செருப்பாலடிப்பேன் என்று கூறிய ஜெயிலரை கைதிகள் பயங்கரமாகத் தாக்கி, பலத்த காயப்படுத்தி விட்டார்கள் அந்த ஜெயிலர் உடல் தேறிட சில மாதங்களாயின.

இந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்று கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரனார் கைதிகள் பக்கமே நியாயம் இருப்பதாக சாட்சி கூறினார். ஜெயில் அதிகாரி செய்த கொடுமைகளும், நடத்திய அவமரியாதைச் செயல்களும், கைதிகளிடம் அவர் காட்டிண ஆணவ அகம்பாவ ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளுமே காரணம் என்று சிதம்பரனார் சாட்சியமளித்தார். இந்த சான்றளிப்புக்குப் பிறகு சிதம்பரம் பிள்ளையைக் கண்ணனூர் சிறைக்கு மாற்றிவிட்டது வெள்ளையர் அரசு.