உள்ளடக்கத்துக்குச் செல்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/சிதம்பரம் ஆணையிட்டால்; அனலை விழுங்குவர் மக்கள்!

விக்கிமூலம் இலிருந்து

6. சிதம்பரம் ஆணையிட்டால்...
அனலை விழுங்குவர் மக்கள்!

விபின் சந்திரபால், இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். சிறந்த நாவன்மை படைத்த அஞ்சா நெஞ்சர். வங்க நாட்டின் தலைவர். எல்லாராலும் பாராட்டத்தக்க சிறந்த பண்பாளர்!

அரவிந்த கோஷ் என்ற தீவிரவாதக் கட்சித் தலைவர் மீது வெள்யைர் ஆட்சி அப்போது ஒரு சதி வழக்கைத் தொடுத்திருந்தது. அந்த வழக்கில் அரசு சார்பாக சாட்சி கூற விபின் சந்திர பால் வன்மையாக மறுத்து விட்டார். சான்று கூற அவர் மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்று காரணம் கூறி சந்திரபாலருக்கு ஆறுமாதம் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.

தண்டனையை அனுபவித்து விட்டு, 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி விபின் சந்திரபால் விடுதலை பெற்று சிறை மீண்டார். அந்த நாளை திருநெல்வேலி மக்கள் விழாவாக் கொண்டாட முடிவு செய்தார்கள். வடநாட்டிலும் அந்நாள் விபின் சந்திரபால் வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மக்களது விழாவை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் கவலை மிகவும் கொண்டு, தூத்துக்குடி நகரில் 9-ம் தேதியன்று ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்தக் கூடாது என்று தடைவிதித்து விட்டார்கள். மாஜிஸ்திரேட் சிதம்பரம்பிள்ளையை வரவழைத்து, விபின் சந்திரபால் விடுதலை விழாக் கொண்டாட்டத்தில் நீர் கலந்து கொள்ளவோ, பொதுக் கூட்டத்தில் பேசவோ கூடாது என்று நேரிலேயே எச்சரித்தார்.

உடனே சிதம்பரம் பிள்ளை மாஜிஸ்திரேட்டைப் பார்த்து, ‘நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை அப்படியே எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். ஆனால், மாஜிஸ்திரேட் அதற்கு முடியாது’ என்று மறுத்தார்.

சுதேசி கப்பல் நிறுவனத்தாருக்கும், சிதம்பரம் பிள்ளையின் தீவிரவாத அரசியல் போக்கு அறவே பிடிக்கவில்லை. ஆங்கில அதிகாரிகள் அடக்குமுறையைக் கண்டு தினம் தினம் பயந்து கொண்டே பொழுதைப் போக்கி வந்தனர். அதனால் சுதேசி நிர்வாகத்தினரின் அவசர செயற்குழுக் கூட்டம் திடீரெனக் கூடியது.

நிறுவனத்தின் வளர்ச்சி, லாபம் கருதி, சிதம்பரம் பிள்ளை தீவிரவாத அரசியலில் ஈடுபடக் கூடாது என்று நிர்வாகம் தீர்மானம் செய்தது. இந்த முடிவு கண்டு சிதம்பரனார் மனம் கலங்கினார்.

சுதேசி நிறுவனத்தார்களும், பங்குதாரர்களும் கம்பெனியின் லாப நோக்குதான் முக்கியம் என்று பகிரங்கமாகவே செயற்குழுவில் பேசினார்கள். “நாடாவது காடாவது அதன்று பிரச்சனை. நாடு என்ன துன்பப்பட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு மட்டுமன்று, யார் யார் சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களோ அவர்கள் எல்லாம் லாபத்துக்காகத்தான் கம்பெனியின் உறுப்பினர்களானார்கள். அவர்கள் இல்லையானால் இயங்குமா கப்பல் நிறுவனம்? சிதம்பரம் பிள்ளைக்கு வேண்டுமானால் தேச சேவை, மக்கள் சேவை என்ற நோக்கங்கள் இருக்கலாம். தவறென்று நாங்கள் அதைக் கூறமாட்டோம். ஆனால், கம்பெனி நிர்வாகிகளுக்கு பொருளாசை உண்டு, அதே நேரத்தில் புகழாசையும் கூட உண்டுதான். எனவேதான் கூறுகிறோம் தயவு செய்து சிதம்பரம் பிள்ளை வெள்ளையரைப் பகைக்கும் அரசியலில் தீவிரம் காட்ட வேண்டாம்” என்று செயற் குழுவினர் சிதம்பரனார் முகத்துக்கு எதிராகவே பேசினார்கள்.

எல்லாவற்றையும் கேட்டு பிள்ளை அலைமோதினார். நாட்டுப் பற்றா? அல்லது நாணயக் குவியலா? என்று செயற்குழுவில் அவர்பேசி பதில் கூறும் போது, இந்தியாவில் சுரண்டிக் கொண்டிருக்கும் வெள்ளையரை வாணிபத் துறையிலே இருந்து விரட்டுவது ஒன்றே எனது நோக்கம். அந்த லட்சியத்தோடுதான் சுதேசிக்கப்பல் நிறுவனத்தை உருவாக்கினேன். எனக்குப் பொருளோ, புகழோ அல்ல பெரிது. மக்கள் சேவை, நாட்டின் விடுதலை, மனிதச் சுதந்திரம் தான் முக்கியம். எனவே, செயற்குழுவினர் பேசிய கருத்துக்கள் எனக்கு ஒவ்வாதவை. அதனால், கம்பெனி நிர்வாகிகள் தீர்மானப்படி என்னால் நடக்க முடியாது என்று சிதம்பரம் மறுத்து விட்டார்.

‘சுதேசியத்தை வளர்ப்போம்! அது போதும் நமக்கு அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பை வேறு யாராவது செய்யட்டுமே’ எனக் கெஞ்சிப் பார்த்தார்கள்! “இந்திய நாட்டின் விடுதலைப் போருக்குரிய துணைக் கருவியாகப் பயன்படுத்தவே கப்பல் கம்பெனியை நான் படாதபாடுபட்டு நாடெங்கும் அலைந்து ஆரம்பித்தேன். இதை உங்களைவிட வெள்ளையர்கள் நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் கப்பல் நிறுவனத்தை அழிக்கப் பலசதித் திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால், இந்த மண்ணின் மைந்தர்களான நீங்களோ எங்களுக்குப் பணம்தான் முக்கியம்! லாபம்தான் நோக்கம் என்று என்னையே திசை திருப்புகின்றீர்கள்! எனக்கு இந்த ஈனச் செயல்கள் எல்லாம் பிடிக்காது. நான் கலெக்டர் எச்சரிக்கையினையே புறக்கணித்தேன் - தேச பக்திக்காக! கப்பல் நிர்வாகத்தினர் கட்டளையினையும் கம்பெனியைக் கலைப்போம் என்பதையும் புறக்கணிக்கின்றேன். நாட்டின் சுதந்திர உணர்ச்சிக்காக” என்று கூறிவிட்டு செயற்குழுவை விட்டு விர்ரென்றுப் புறப்பட்டு விட்டார்.

ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின்படி மார்ச் 9-ம் தேதியன்று விபின் சந்திர பாலின் சிறை மீண்ட விடுதலைத் திருநாள் நெல்லையில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கையோடு எல்லா திட்டங்களையும் ஒழுங்கான முன்னேற்பாடாகவே செய்து வைத்திருந்தார்கள்.

சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் போலீசார் தடையுத்தரவை மீறி, விழா ஊர்வலத்திலே பவனி வந்து கொண்டிருந்தார்கள். அதே போல, பொதுக் கூட்ட மேடையிலே நெருப்புக் கனற்துண்டுகளை சொற்பிரயோகங்கள் மூலமாக வெள்ளையனை எதிர்த்து சிவா தகித்துக் கொண்டிருந்தார். பிறகு பேசிய சிதம்பரம் தனது சூறைக் காற்று வேகத்தால் வெள்ளையன் எதிர்ப்புக்கு விசிறிக் கொண்டிருந்தார். அந்த உணர்ச்சிகளிலே வார்த்த எஃகு ஆயுதங்களைப் போல மக்கள் சூடேறிக் கொண்டிருக்கும் போது, வந்தே மாதரம்! பாரத்மாதா வாழ்க! வந்தே மாதரம்! என்ற முழக்கங்களை விண் அதிர, மண்ணதிர மக்கள் முழக்கமிட்டவாறே கலைந்து சென்றனர். திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே சிதம்பரனார் இட்டதே சட்டமாயிற்று. அவர் சொல்லுக்கு மறுசொல் கிடையாது. சிதம்பரனார் ஓர் ஆணை பிறப்பித்தால், மக்கள் அனலையே விழுங்கிடத் தயாராக இருந்தனர்! அவ்வளவு செல்வாக்கும் சொல்வாக்கும் அவருக்கு மக்களிடையே அப்போது இருந்தது.