கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. பேச்சு - பாரதி பாட்டு பிணத்தை உயிரூட்டிப் பேச விடும்.

விக்கிமூலம் இலிருந்து

8. வ.உ.சி. பேச்சும், பாரதி பாட்டும்
பிணத்தை உயிரூட்டிப் பேசவிடும்!

கலெக்டர் விஞ்ச் துரையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சிறையில் அடைக்கப் பட்ட பின்பு, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, திருநெல்வேலி மாவட்ட துணை மாஜிஸ்திரேட் ஈ.எச்.வாலேஸ் என்ற வெள்ளைக்காரர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

சிதம்பரம் பிள்ளைக்காக, தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.கே.ராமசாமி நீதிமன்றத்தில் வாதாடினார். சிதம்பரனார் வக்கீலிடம் மாஜிஸ்திரேட் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அதனால் அவர் எதிர் வழக்காட மறுத்து விட்டார்.

வாலேஸ், வழக்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி விட்டார். இந்த நீதிமன்றத்தில் சிதம்பரம்பிள்ளை வழக்கு இரண்டு மாதம் நடந்தது. வழக்குரைஞர்களான சடகோபாச்சாரியார், நரசிம்மாச்சாரியார், வேங்கடாச்சாரியார் மூவரும் சிதம்பரனாருக்காக வாதாடினார்கள். ஆங்கிலேயர் அரசுக்காக, பாரிஸ்டர் பவல், ரிச்மண்ட் என்பவர்கள் வாதாடினார்கள். கவியரசர் பாரதியார், சிதம்பரனாருக்காக சாட்சி கூறினார். அவர் மட்டுமன்று மேலும் பலரும் சிதம்பரனாருக்காக சான்று கூறினார்கள். சிலர், சிதம்பரனாருக்காக விரோதமாகவும் சாட்சி சொன்னார்கள்! யார் அவர்கள் தெரியுமா? போலீஸ் அதிகாரிகளும், வெள்ளைக்காரர் கப்பல் நிறுவன ஆதிகாரிகளுமே அவர்கள்.

வழக்குத் தீர்ப்பு ஜூலை மாதம் 7-ஆம் தேதியன்று கூறப்பட்டது என்ன தீர்ப்பு தெரியுமா? சிதம்பரனாருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனை! அரசுக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக இருபது வருடம் சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக இருபது ஆண்டு தண்டனையாம் சுப்பிரமணிய சிவா அரசு விரோதி என்று பத்தாண்டுகள் தீவாந்தரத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்புக் கூறியவர் வெள்ளைக்கார நீதிபதியான பின்ஹே என்பவராவார். “சிதம்பரம் பிள்ளை பெரிய ராஜத்துரோகி. அவர் எலும்புக் கூடும் ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் கையிலகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலி கலவரத்திற்குக் காரணம் இந்த இரண்டு பேர்கள்தான். பிள்ளையின் மேடைச் சொற்பொழிவு முழக்கத்தையும்,பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும்” என்று பின்ஹே தீர்ப்பு அளித்தார்.

கொடுமையான இந்தத் தீர்ப்பைக் கேட்ட தேசபக்த சிங்கங்களான சிதம்பரனாரும், சிவாவும் அமைதியும், அடக்கமும் கொண்ட சிங்கங்களைப் போல இருந்தார்களே ஒழிய சிலிர்த்தெழவில்லை. மனித நேயத்துடனும், தேசாபிமானத்துடனும் நெல்லைச் சீமையிலே சுதந்திர போர்ப் பரணிபாடிய சிதம்பரனார், கொலையும் - கொள்ளையும் செய்து பழக்கப்பட்ட கொடியோர்களுடன் தண்டனையை அந்தமான் தீவிலே அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டார் நீதிபதி பின்ஹே.

சிதம்பரனாருக்கு அப்போது வயது முப்பத்தைந்து; சிவாவுக்கு இருபத்தைந்து வயது. சிதம்பரனார், தனது தாய் தந்தையரையும், மனைவியையும், இரண்டு மகன்களையும் பிரிந்து சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது கண்டு அவரது குடும்பமே கவலையடைந்தது.

சிதம்பரனாரின் சகோதரரான மீனாட்சி சுந்தரம் தனது தமையனுக்கு வழங்கப்பட்ட கொடுமையான தீர்ப்பைக் கேட்டு மூளை குழம்பியவரானார். அந்த சகோதரன் தனது வாழ்நாள் முழுவதும் பைத்தியம் பிடித்தவராகவே மாறி, 1943-ஆம் ஆண்டு இறந்து போனார்.

விடுதலைப் பித்தர் சிதம்பரம் பிள்ளை தனக்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனையைக் கேட்டு கவலைப்படவில்லை. சிறைக்கு அவரை அழைத்துச் சென்ற போது, கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் மாசிலாமணியின் முகத்தைப் பார்த்து, தம்பி மாசிலாமணி வருந்தாதே. இருக்கிறது உயர்நீதி மன்றம், அங்கே வழக்கை அடித்துத் தள்ளிவிட்டு வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறியபடியே சிறைக்குச் சென்றார் சிதம்பரம்.

சிதம்பரனார் சிறைத் தண்டனை பெற்ற அதே வாரத்தில், வடநாட்டில் திலகர் ‘கேசரி’ என்ற பத்திரிகையில் ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து எழுதினார் என்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுச் சிறை சென்றார். தென்னாட்டு திலகரும், வடநாட்டு வ.உ.சி.யும் ஒரேசமயத்தில், தேச விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்ற சம்பவம் அப்போது இந்தியாவையே சிலிர்க்க வைத்தது எனலாம்.

சிதம்பரனார் சிறையில் அடைபட்டு விட்ட கோபத்தால் கொந்தளித்த பாரதி, நெல்லை நீதிமன்றம் சென்று சிதம்பரனார் சார்பாக நாம் சாட்சியம் கூறியும், வழக்குத் தீர்ப்பு இவ்வளவு கடுமையாக வந்து விட்டதே என்று கவலையடைந்தார். இருந்தும், அந்த சினத்தைத் தணித்துக் கொண்டு வ.உ.சி.க்காக ஒரு வாழ்த்துப்பாடலைப் பாடியபடியே திருவல்லிக்கேணி வீதியில் பாரதியார் வலம் வந்தாராம். அப்பாடல் இது

வ.உ.சி.க்கு வாழ்த்து


“வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீவாழ்தி வாழ்தி!”

– என்று பாடினார் பாரதி. அதே வாரத்தில் ஆறாண்டு தீவாந்தர தண்டனை பெற்று சிறை சென்ற திலகர் பெருமானைப் பற்றிக் கண்ணீர் விடுத்து பாரதியார் பாடிய வேறோர் வாழ்த்துப் பாடல் வருமாறு :

“நாம் கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம கத்து வியப்பப் பயின்றொரு
சாத்தி ரக்கட லென்ன விளங்குவோன்;
மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்
பூம கட்கு மனந்துடித் தேயிவன்
புன்மை போக்குவல் என்ற விரதமே

நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்
நீத மேயோர் உருவெனத் தோன்றினோன்
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதே
மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்பொ டோதும் பெயருடை யாரியன்

வீர மிக்க மராட்டியர் ஆதரம்
மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலக மெனத் திகழ்
ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்
சேர வர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர டிக்கம லத்தினை வாழ்த்து வேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே”

– என்று பாரதியார் திலகர் பெருமான் மீதும், வ.உசிதம்பரம் பிள்ளைமேலும் மனமுருகப் பாடி, தனது தேசி பக்தியையும், அவர்களது தியாகப் பெருமைகளையும் தேசியத் தொண்டர்கள் மனமுருகிப் பாடி வாழ்த்துமாறு பாடிப் பெருமைப்படுத்தியுள்ளார்.

சிதம்பரனாருக்கு வெள்ளை நீதிபதியால் வழங்கப்பட்ட கொடுமையான சிறைத் தண்டனையைக் கேட்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியப் பத்திரிகைகள் நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பைக் கடுமையாக விமரிசனம் செய்து தாக்குதல்களைத் தொடுத்தன. தலையங்கங்கள் எழுதிக் கண்டனம் செய்தன.

‘வங்காளி’ என்ற ஒரு ஏடு, ‘நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பு இந்த நாட்டில் அமுலுக்கு வரும் நாள் இந்திய மக்களது உரிமைகளுக்குரிய கொடுமையான துன்பநாள்’ என்று எழுதித் தனது கவலையை வெளியிட்டது.

‘அமிர்தபஜார்’ என்ற வேறொரு வடநாட்டுப் பத்திரிகை, ‘பின்ஹேயின் அநீதித் தீர்ப்பு, சிதம்பரம்பிள்ளை ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் நேர்ந்ததில்லை. அந்த வீரப் பெருமகனுக்குத் தலை வணங்குகிறோம்’ என்று வருந்தி எழுதியது.

‘சுதேசமித்திரன்’ என்ற தமிழ்நாட்டு நாளேடு, ‘இக்கொடுந்தண்டனையால் பிரிட்டிஷ் நீதித்துறைக்கே அவமானம் என்று எழுதிக் கண்டித்தது. தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளைக்கு நேர்ந்துள்ள துன்பத்தைக் கேட்டு இந்தியாவே துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. நினைக்கும்போதே உடல் சிலிர்க்கின்றது. மயிர் கூச்செரிகிறது. எழுதக் கை கூசுகின்றது. இந்ததுக்கத்தைத் தென்னிந்திய மக்கள் எப்படிச்சகிப்பார்கள்? இவ்வளவு பெரிய கொடுந்தண்டனை விதிக்கப்படும் என்று எவருமே கனவிலும் எண்ணவில்லை’ என்று அதே ‘சுதேசமித்திரன்’ ஏடு எழுதியது. சிதம்பரம் பிள்ளைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வெள்ளையர் பத்திரிகைகளும் வெறுத்து எழுதின. எடுத்துக்காட்டாக, ‘ஸ்டேட்ஸ்மன்’ என்ற ஆங்கில ஏடு, ‘தேச பக்தர் சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தண்டனை நியாயத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமானது. சிதம்பரம் பிள்ளையின் தியாகம் மிகப் பெரிய சக்தி வாய்ந்தது’ என்றது.

‘ஸ்டாண்டர்டு’ என்ற மற்றொரு ஏடு, நீதிபதி பின்ஹேயையே கடுமையாகத் தாக்கியது.

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கேட்ட ஆந்திர தேசபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆங்காங்கே ஆந்திரப் பகுதிகளில் கண்டனக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் கணக்கின்றி நடத்திக் கண்டித்தனர்

அப்போது பெஜவாடா என்றும், இப்போது விஜயவாடா என்றும் அழைக்கப்படும் பெரும் நகரிலே இருந்து வெளிவரும் ‘சுயராஜ்யா’ என்ற தெலுங்கு வாரப் பத்திரிக்கை; பின்ஹேயின் சிறுமைத் தீர்ப்பைக் கண்டித்து மிகக் காரசாரமாகத் தலையங்கம் எழுதியது.

அந்தத் தலையங்கம், மக்களிடையே பலாத்காரத்தைத் தூண்டி விடுவதாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டி பத்திரிக்கை அலுவலகத்தையே பூட்டி சீல் வைத்துவிட்டார்கள் வெள்ளையர் போலீஸ் அதிகாரிகள். அந்த தலையங்கத்தை எழுதிய ஆசிரியருக்குக் கடுமையான தண்டனையை வெள்ளையர் அரசு அளித்தது.

மகாகவி பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ என்ற தமிழ் வார இதழுக்கும் அதே நிலை ஏற்பட்டது. ஏன், அவ்வாறு வெள்ளையர் ‘இந்தியா’ பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றால், நீதிபதி பின்ஹேயை அந்த இதழ் கண்டனம் செய்து எழுதியதாம். அத்துடனில்லாமல், சிதம்பரம் பிள்ளை எதற்காகத் தண்டனை பெற்றாரோ அதனையே பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்று எழுதியதாம்.

பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகையினை வெளியிடுபவராக, சீறிநிவாசய்யங்கார் என்பவர் இருந்தார். ஐயங்காரையும் தண்டித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதற்குப் பிறகு தான் ‘இந்தியா’ வார ஏட்டின் அலுவலகம் பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி என்ற நகருக்கு மாற்றப்பட்டது.

இந்திய மந்திரியாக அப்போது இருந்த மார்லி என்ற வெள்ளைப் பெருமகனுக்கு, சிதம்பரம் பிள்ளைக்கு 40 ஆண்டுகள் தந்துள்ள தீவாந்தரச் சிறை தண்டனையின் கொடுமைத் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் ராஜப்பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு மிண்டோவிற்கு, “சிதம்பரனாருக்கும், சிவாவுக்கும் விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று பகிரங்கமாகக் கண்டித்து எழுதினார். அந்தக் கொடுமையான தண்டனைகள் நிலைக்காது” என்றும் எழுதினார். இவர் இப்படி எழுதியதை முன்னிட்டு மிண்டோ துரை நீதிபதி பின்ஹேயை வேறோர் மாகாணத்திற்கு மாற்றிவிட்டார்.

தனக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு சிதம்பரம் மேல் முறையீடு செய்தார். தலைமை நீதிபதியான ஆர்னால் ரைட், நீதிபதி மன்றோ ஆகியோர் அவரது வழக்கை விசாரணை செய்தார்கள். ஆட்சி சார்பாக, பாரிஸ்டர் ரிச்மாண்ட் வாதாடினார்.

சிதம்பரம் பிள்ளைக்கு பின்ஹே அளித்த தண்டனையைக் குறைக்கக் கூடாது என்று ரிச்மாண்ட் வன்மையாகவே வாதாடினார். 1908-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் நாள் தீர்ப்புக் கூறும் போது, “ராஜத் துரோகத் தண்டனை”க்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு தண்டனையை நான்கு ஆண்டுகள் என்றும், அதே போன்று சிவாவுடன் உடந்தையாக சிதம்பரனார் இருந்தார் என்பதற்காக விதிக்கப்பட்ட20 ஆண்டுத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டது. அதாவது, சிதம்பரம் பிள்ளைக்கு பின்ஹேயால் விதிக்கப்பட்ட 40 ஆண்டு தண்டனையில் 30 ஆண்டுகளைக் குறைத்து 10 ஆண்டுகள் தண்டனை என்று உயர்நீதி மன்றம் விதித்தது.

சிதம்பரனார் நண்பர்களது அரிய முயற்சியால், உயர்நீதி மன்றம் அளித்த 10 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து லண்டன் பிரிவிகெளன்சில் நீதிமன்றத்துக்கு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, அங்கு அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு வருடம் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.