கம்பரசம்
கம்பரசம்
C.N.அண்ணாதுரை,M.A.
திராவிடப் பண்ணை
தெப்பக்குளம்: :திருச்சி
முதற்பதிப்பு செப்டம்பர், 1947
பதிப்புரிமை
விலை ரூ. 1—8—0
பதிப்புரை
அறிஞர் அண்ணாவின் அரும் பெரும் கருத்துரைகளையும், எழுத்தோவியங்களையும் தமிழ் மக்கள் படித்துப் பயனுறவேண்டும், தமிழகம் மறு மலர்ச்சியுற்றுத் திகழ வேண்டும் என்ற விருப்பாலேயே-அவ்வறிஞரின்-கட்டுரைகள் பலவற்றையுந் தொகுத்தும், தொடர்ந்தும் திராவிடப் பண்ணையாராகிய நாங்கள் வெளியிட்டு வருகிறோம். தமிழர்களின் கரங்களிலே அவை இலங்குவதையும், மேலும் மேலும் அவைகட்கு வரவேற்பு வளர்வதையும் கண்டு மகிழ்கிறோம்; களிப்பைத் தெரிவிக்கிறோம்.
அண்ணாவின் எழுத்து—தமிழர் பிணிபோக்கும் மருந்து. கருத்து—தமிழரின் தாழ்வு போக்கும் தன்னுணர்வு. உரையோ—தமிழரின் வாழ்வுக்கு வழிகாட்டும் பகுத்தறிவு. எனவேதான்—‘கம்பரசம்’ என்ற தலைப்பில் சில ‘டோஸ்கள்’ தரப்படுகின்றன, திருந்தவேண்டிய தமிழருக்குத் தேவையான மருந்தானதால்.
‘கம்ப இராமாயணம்’—ஆரிய உயர்வுக்கும் தமிழரின் தாழ்வுக்கும் காரணமாயிற்று என்பதை ஒப்புக் கொண்டவர்களும் கூட, அந்தக் காப்பியம் கலைவல்லானாகிய கம்பனின் திறமையெல்லாம் கொண்டமைக்கப்பட்ட கலைக் கருவூலம், இலக்கியப் பூங்கா, செஞ்சொற் கவிச்சுவைத் தேன், தமிழ்ப் பண்ணின் பாட்டு என்று ஏற்றித் தொழுது, அதன் பெருமையை நிலைநாட்ட வழிவகை தேடினர். அதையுணராதாரெல்லாம் “செவிச்சுவை உணரா மாக்கள்” என்றும் தூற்றினர்.
அறிஞர் அண்ணா அவர்கள், செவிச்சுவையுணரத் தலை பட்டவர்கள், அதை விட மனமில்லாதபடி அதன் கண்ணேயே மூழ்கிவிடக் காரணமாகக் கம்பர் கலந்தளித்திருக்கும் ‘காமச்சுவை’யை—இராமாயணத்திலன்றி வேறு நூலில் சுவைக்க முடியாத அந்தக் “கம்பரசத்தை”—கம்பதாசர்கள்—காவியக் கலையத்திலே மறைத்துக் குடிக்கும் ‘ரசத்தை’—ஆராய்ச்சி என்னும் “கண்ணாடிப் பாத்திரத்திலே” ஊற்றிக் காட்டுகிறார். நிறமும் தெரிகிறது, அதன் நாற்றமும் புரிகிறது. உண்மையும் விளங்குகிறது என்று மக்கள் கூறுவதும் நம் காதிலே விழாமற் போகவில்லை.
மற்றவர்களும், சிறப்பாகக் கம்பதாசர்களும்—உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பாலேயே இதைப் பதிப்பித்துள்ளோம். பயன்கொள்ள வேண்டுகிறோம்.
உள்ளடக்கம்
