உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பரசம்/டோஸ் நெ. 2

விக்கிமூலம் இலிருந்து

டோஸ் நெ. 2

யோத்தி நாட்டு மதுகை மைந்தர்கள், மது மைந்தர்களைவிடக் கேவலமான மனப்பான்மையினராக இருந்தது பற்றிக், கம்பரசம் என்பது, கேவலம் காமரசமாக இருப்பதை எடுத்துக் காட்டினேன். ஒரு காலத்தில் சோமரசம் குடித்துக் கூத்தாடிக் கிடந்த ஆரியருக்கு ஆதிக்கம் வந்ததன் காரணம், இவ்விதமான மனப்பான்மை கொண்ட புலவர்களின் துணை கொண்டு, தமிழரின் நெஞ்சிலே ஆதிநாள் ஆரியர் நஞ்சு புகுத்தியதுதான். அதன் விளைவுதான், இந்நாள்வரை ஆரியரின் ஆதிக்கம், ஆணிவேருடன் தழைத்திருப்பது. இந்த ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், கம்பரசத்தின் சுவையிலே சொக்கும் சல்லாபிகளாக நம்மவர் இருத்தலாகாது. தித்திப்பான பண்டத்தினுள்ளே தீங்கான போதையை வைத்துக் கொடுப்பதுபோல, கலை, காவியம், என்ற இனிப்புடன் சேர்த்து, ஆரியம் தரப்பட்டிருக்கிறது. இதனை உணராதார், ஊராருக்கு வந்துற்ற இடர்களைத் தெரியாதார் என்பேன்.

நடிப்புக் கலையிலே நாலாவது இடமும்பெற இலாயக்கற்ற நங்கையர், நயனத்தின் நடமாட்டத்தாலும், இன்சொல்பேசி இடையாட்டுவதாலும், அரை நிர்வாண அலங்காரத்தாலும், நட்சத்திரங்களாவது காண்கிறோம். அவர்களின் நடைமுறையினைக் கண்டித்துப் பத்திரிகைகள் எழுதிடப் படிக்கிறோம். ‘ஆமப்பா! அவள் எந்தப் படத்திலே நடித்தாலும், ஆபாசமான காட்சிகளாகத்தான் இருக்கிறது’ என்று பேசுகிறோம். சினிமாக்கலையின் சீர்கேட்டினைக் கண்டிக்கிறோம். ஆனால் கம்பனின் கலையிலே தேங்கிக்கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்க முன்வர மறுக்கிறோம். நா கூசுகிறது, நடுக்கம் பிறக்கிறது! ஏன், இந்த ஓரவஞ்சனை?

பனிநீரில் குளித்துப் பட்டாடை உடுத்துப் பரிமளகந்தம்பூசி, அணிபலபூண்டு, பஞ்சணை ஏகி, பாசமூட்டும் விழியும், சிலம்பு கொஞ்சும் பாதமும், பவளச் செவ்வாயும், பளிங்குபோன்ற உடலும் பவுன்நிற மேனியும், பதைப்புறு காதலும் உடைய பாவையர், பக்கத்திலிருந்து ஆலவட்டம் வீசியும், ‘அன்பா! என்ன தேவை?’ என்று கேட்டும், அருகேசென்று கொஞ்சுமொழி பேசிப் பஞ்சபாணத்தைவீசி, படுக்கையிலே பக்கத்தில் படுத்து............!!

இந்த ‘ரசம்’ கேட்காமல், எதிர்பாராமல் கிடைத்திட்டால், எப்படி இருக்கும்! அதுவும் ஒரு காசும் செலவின்றி! முன்பின் கண்டதில்லை, தூது விட்டதுமில்லை; ஆனால் அந்த ரசவல்லிகளோ, உல்லாசத்தை உவகையுடன் தந்து, உரசிநின்று உபசரிக்கின்றனர். ஒரு பொருளும் கேட்டாரில்லை! வலிய அணைந்த சுகமன்றோ, சுகம். அதிலும், வக்கிரங்களல்ல, வகையிழந்த வரட்டு வயோதிகங்களுமல்ல, சரசகுணா ஜெகன்மோகினிகளய்யா! வகைதரும் பருவமுள்ள மங்கையர்! வாசமலர்க் கூந்தலழகியர், அவர்கள். அருகேயழைத்து, இருகை பற்றியிழுத்து, மஞ்சத்தில் படுக்கவைத்துப் பக்கமேவி, படுபாவியாம் மதனன் விடுகணைகளைப் பொடிபொடியாக்கி விடுகிறார்கள்!

“பரதா! எங்கேயப்பா, இத்தகைய ‘புண்யவதிகள்’ உள்ளனர்? இத்தகைய காமவல்லிகள், கருணா மூர்த்திகள், தியாகதேவிகள், எங்கே உள்ளனர்? இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி, எழுந்து வாயேண்டி இரவு மணி பத்தாச்சே என்று அழைத்தாலும், இருமலும் காய்ச்சலும் இழுத்து வதைக்குதே என்று ஈனக்குரலில் பேசிடும் இன்பக் கொல்லிகளிடம் இடர்பட்டுக் கிடக்கிறோமே, கண்டதும் களிகொண்டு, மதனன் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் ஆரணங்குகள் உள்ள அந்தப் போகபூமி எங்கேயிருக்கிறது? எமக்குக்கூறு” என்று கேட்கத் தோழர்கள் துடிப்பர்! கலவியைக் கேட்கு முன் வழங்கும் இக்காரிகையர் வாழுமிடம் தெரியும்; ஆனால் என் மொழியை அவர் கேளார்; அந்தக் கோலாகலக் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர், சாதாரண சாமான்ய பேர்வழியல்ல. பரமனருள் பெற்றுப் பந்தபாசம்விட்டு, நாலுவேதங்கற்றுணர்ந்த பரத்துவாச மாமுனிவர், இந்த இன்பத்தை இல்லை என்னாது ஈயும் வள்ளற்றன்மை கொண்ட வனிதையரின் வசீகரக் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர்!

“என்ன புதிரப்பா, கிளப்புகிறாய்? அரைநொடிக்குள் எமது ஆனந்தத்தைத் தகர்த்துவிட்டாயே! போகம் வழங்கும் பூவையருக்கு யோகம் செய்யும் முனிவரா ஏஜண்டு? இது எம்மால் நம்பமுடியவில்லையே. காமக் குரோதாதிகளை அடக்கும் ரிஷிசிரேஷ்டர், காமக்கூத்துக் கழகத்தின் நிர்வாகியா? ஓமத்தீயை மூட்டி சாமவேதத்தைப் பாடிடும் சற்குணர், காமத்தீயை மூட்டிச் சரசகீதம் பாடிடும் மடந்தையர் மன்றத்திற்குத் தரகரா? சே! இது சுத்தத் தப்பு” என்று கூறுவீர்கள். தயவு செய்து, நம்புங்கள் தோழர்களே! கூறிய அந்தக் “குணவதிகளின்” கூட்டத்துக்கு, பரத்துவாச மாமுனிவரே மானேஜிங் ஏஜண்டாக இருந்தார்! அவர் அழைத்தார்; அவர்கள் சதங்கை கொஞ்ச ஓடிவந்தனர். அவர் பணித்தார், முனிவரின் விருந்தினருக்கு அந்தச் சுந்தரிகள் மகிழ்வூட்டினர். பர்ணசாலைகளிலே அல்ல! சாதாரண மாளிகைகளிலேயுமல்ல! சந்திர மண்டலம்போன்ற தமது மாளிகைகளிலே! சந்திரமண்டலம், வெறும் சுந்தரம் மிகுந்ததாக மட்டுமா இருக்கும்! சந்திரன் என்ன சாமான்யப் பேர்வழியா? குரு பத்தினியைக் கூடிய குணாளன்! அவனுடைய மண்டலம்போன்ற அழகும் காமமெழுகும் நெகிழும் இடம், அந்தச் சுந்தரிகளின் மந்திர மாளிகைகள்!! இன்னும் ஒன்று கேண்மின்! “நீ மந்திரியா, அப்படியானால் மஞ்சத்தில் வா! நீ யார் மந்திரியின் தேரோட்டியா? சரி வெளியே போய்ப் படு! நீ யார்? சேனாதிபதியா? மெத்தச் சந்தோஷம்; போர்க் கோலத்தைக் கலைத்துவிட்டுச் சயனக்கிரகம் வாரும்! நீ யார்? சேனாதிபதியின் சேவகனா? நீ போய்த் தெருத்திண்ணையிலே, படுத்துறங்கு!” என்று அந்த மாதர் பேதம் பாராட்டி, தக்கோருக்குத் தயைகாட்டி, மற்றையோரை இல்லை என்று கூறி வாட்டினர் என்று கருதுகிறீர்களா? அப்படிச் செய்யவில்லை! பேதநிலை கண்டு காதலை நிறுத்தும் கயவரல்ல, அந்தக் கருங்குழலிகள்! எல்லோரும் இன்புற்று இருப்பதே யல்லாமல், வேறொன்று அறியாப் பராபரங்கள், அப்பாவைகள். சர்வம் ஜெகன்னாதம், எவரையும் விடவில்லை, சகலருக்கும் சரி என்று சம்மதித்தனர்!!

“இனிப் பொறுக்கமாட்டோம், பரதா! எங்கே! இருக்கிறது, இந்த விபசாரவிடுதி? இதற்கும் பரத்துவாசருக்கும் என்ன சம்பந்தம்? நீ கூறுகிறபடி, எப்போதாவது நடந்ததா? அந்த அதிர்ஷ்டசாலிகள் யார்? அந்தச் சம்பவம் நடந்தது, உனக்கு எப்படித் தெரியும்?” என்று அடுக்கடுக்காகக் கேட்கவேண்டாம் தோழர்களே; கூறிவிடுகிறேன். இந்த “விடுதி” இருக்குமிடம் சுவர்க்கலோகம். இதனை அனுபவித்தவர் அயோத்தியின் மதுகை மைந்தர்!! இதை நடத்திவைத்தவர், பரத்துவாச முனிவர்! இதை நான் தெரிந்துகொண்டது, கம்பரின் காதையினால்!!! கல்கத்தாவிலே சில வீதிகளில், விபசாரிகள் தங்க வீட்டு வசதிகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்து, பட்டாளத்துக்காரர் விபசார வசதிபெற வழிசெய்து தந்தனர் என்று முன்பு ஓர் புகார் வெளிவந்தது. பத்திரிகைகளெல்லாம் சீறின. பாதிரிகள் சிலர் கூடப் பதைத்தனர். சர்க்கார் மறுத்தனர், பிறகே சந்தடி அடங்கிற்று. போகத்தைப் பணத்துக்குப் பெறும் பேர்வழிகள், பொது மகளிருடன் சம்பந்தங்கொள்ள இடமளிப்பது குற்றமென்று குடைந்த குணவான்களெவரும், பரத்துவாசர், யாரும் கேட்கா முன்பு, இந்த விபசார விடுதியை அமைத்துத் தந்தார் என்பதற்காக அவரைக் கண்டிக்க மாட்டார்கள்! நான் ஓர் கட்டுக்கதையுங் கூறவில்லை; கடவுள் திரு அவதாரக் காதையாம் இராமாயணத்தைக் கூறுகிறேன். கம்பன் எழுதியது; சாதாரணப் பேர்வழியின், சாரமற்ற கதையல்ல! சாட்சாத் கம்ப இராமாயணத்திலே இருக்கிறது, இந்தச் “சத்விஷயம்.”

பரதன், பிரதானியர், படையினர் ஆகியோர், இராமனைக் காட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரச் சென்றபோது, வழியிலே பரத்துவாச முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டனர். முனிவரைத் தொழுதனர். குசலம் விசாரித்த பிறகு, பரதனுக்கும், அவனுடன் வந்தவருக்கும் விருந்தளிக்க ரிஷி எண்ணினார். காட்டிலே, பர்ணசாலையிலே, விருந்தளிக்க வேண்டுமானால், மானிறைச்சியும் மதுவும், பசுங்கன்றின் கறியும் பழமும்தானே கிடைக்கும்! எனவே, பரத்துவாசர், ஓமத்தீயை மூட்டினார், ஆகுதி பெய்தார்; “சுவர்க்கமே! வா இங்கே!” என்று கட்டளையிட்டார். சுவர்க்கம் அந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தது! நான் சொல்வதை நம்பமறுக்கும் நண்பர்கள், கம்ப இராமாயணத்தைக் கையிலெடுத்து, அயோத்தியா காண்டம், திருவடி சூட்டுபடலம் 6, 7-வது பாடல்களைப் பார்க்கக் கோருகிறேன். தீயினாவுதி செங்கையினீக்கினான் - சிவந்த தன் கைகளால் ஓமத்தீயில் சில ஆகுதிகளைப் பெய்திட்டான், என்று 6-வது பாடலிலும் துறக்கம் பறந்துவந்து படிந்தது—சுவர்க்க லோகம் பறந்து வந்து நின்றது, என்று 7-வது பாடலிலும் இருக்கக் காண்பர்!

அப்படிவந்த அந்தச் சுவர்க்கலோகத்திலே, விருந்துக்குக் குறைவா? ஆனந்தமாக அறுசுவை உண்டி கிடைத்தது. அத்துடன் நிறுத்திவிட்டிருக்கலாம், கவி! ஆனால் கம்பரா, நிறுத்துவார்? இழவுவீட்டு வருணனையிலும் மாதரின் எழிலைத் தீட்டும், காமப் பொழிலின் காவலரல்லவா, கம்பர்? ஆகவே அவர் காட்டிலே வந்து குதித்த அந்தச் சுவர்க்க லோகத்திலே பரதனுடன் வந்தோர், என்னென்ன சுகமனுபவித்தனர், என்பதை வர்ணிக்கிறார். சுவர்க்கலோகத்துச் சுந்தரிகள், பரதனுடன் வந்தோர்க்குச் சோடச உபசாரம் செய்தனர், என்று சொல்கிறார். அதுவும் போதாது என்று, அந்த மங்கையர் ஆடவரைப் பஞ்சணையிலே, படுக்கையிலே படுக்கச் செய்து, தாமும் அவர் பக்கத்திலே படுத்து உறங்கினர், என்று கூறுகிறார். படியுங்கள் அப்பாடலை:

அஞ்சடுத்தவமளி யலத்தகப்
பஞ்சடுத்தபரிபுரப் பல்லவ
நஞ்சடுத்த நயனியர் நவ்வியிற்
றுஞ்ச வத்தனை மைந்தருந் துஞ்சினர்.

காமரசத்தை எவ்வளவு கருத்தோடு, கனிவோடு கம்பர் பொழிகிறார், என்பதைப் பாருங்கள். முதலிலே பஞ்சணையின் சிறப்பு, பிறகு பாவையரின் வர்ணனை, பிறகு ஆடவரும் பெண்டிரும் பக்கத்திலே படுத்து உறங்கும் காட்சியின் வருணனை! நல்ல வேளையாக, அத்தோடு விட்டார்! அன்னத்தின் மெல்லிய சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில்தூவி, வெண்பஞ்சு, ஆகிய இந்த ஐந்து பொருளினாலும் செய்யப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டிருந்ததாம், பஞ்சணையிலே! ஆஹா! எவ்வளவு கோலாகலவாழ்வு, கம்ப சித்திரத்தின்படி! அந்தப் பெண்களோ, காமநோயூட்டும் விழியினராம்! அவர்கள் உபசரித்து, உறங்கினர், பஞ்சணையில் பக்கத்தில்; அப்போது, மைந்தரும் துஞ்சினர்! ஏனப்பா, தூக்கம் வராது? கம்பரசம் காமரசம் என்பதை, இப்பாடல் நன்கு விளக்கும் என்றாலும், அப்பாடலிலே, அணங்குகள் தூங்கவே ஆடவரும் தூங்கினர் என்று முடிக்கிறாரே, அதிலே தொக்கியுள்ள காமரசம், அடஅடா, சொல்லி முடியாது!

இனிப் பத உரையைப் பாருங்கள், என் பொழிப்புரை தவறா என்பது தெரிய:

அஞ்சு அடுத்த அமளி = அன்னத்தூவி, இலவம் பஞ்சு, செம் பஞ்சு, மயில் தூவி, வெண் பஞ்சு எனும் ஐந்து பொருள்களாலான படுக்கை மெத்தையிலே;

அலத்தகம் பஞ்சு அடுத்த = செம் பஞ்சுக் குழம்பு ஊட்டப் பெற்ற;

பரிபுரம் பல்லவம் = சிலம்பணியை அணிந்த தளிர்போன்ற பாதங்களையும்;

நஞ்சு அடுத்த நயனியர் = (காம நோயையூட்டுங் காரணத்தால்) விஷம்போன்ற விழிகளையுமுடைய தேவமகளிர்;

நவ்வியின் துஞ்ச = பெண்மான்கள் போலே அருகிற்படுத்து உறங்க;

அத்தனை மைந்தரும் துஞ்சினர் = பரதன் சேனையிலுள்ள ஆடவர்களனைவரும் உறங்கினார்கள்!

திருவடிசூட்டு படலம், 11வது செய்யுள் இது, பரதனின் சொந்தச் சரக்கல்ல.

அத்தனை மைந்தரும், என்று கவி கூறினாரே, அதன் கருத்தைப் பிறிதோர் பாடலில், 12ல் விளக்கமாகவே உரைக்கிறார். வேந்தராதி சிவிகையின் வீங்கு தோண் மாந்தர் காறும் அந்தத் தேவமாதர் உபசரித்தனராம். அதாவது, வேந்தர் ஆதி = அரசர் முதலாக, சிவிகையின் வீங்குதோள் மாந்தர் காறும் = பல்லக்குத் தூக்குவதால் வீங்கிய தோளையுடைய மனிதர்கள் ஈறாக அனைவரையும், அம்மாதர், அன்போடு உபசரித்து அளவளாவி, அம்சதூளிகா மஞ்சத்தில் அருகே படுத்திருந்தனர். இந்த ஆரிய திருத்தொண்டுபுரிய அவர்களை அழைத்தவர், பரத்துவாசர்.

இந்த லோகத்திலே புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் புகுவார்கள் என்று கூறிடுகின்றனர். அங்ஙனம் புண்யம் செய்ததால், தேவமாதரானவர்களின் தொண்டு, இப்படி விலைகேளா விபசாரவிடுதியை நடத்துவதுதானா? இதுதான் சொர்க்கலோக வாசமா? ஒரு முனிவரின் விருந்து வைபவம் இவ்விதந்தான் இருக்கவேண்டுமா? ஒரு அரசகுமாரரின் அவதியைப் போக்கச் சென்றபடை, வழியிலே இந்த “வேட்டை”யிலே ஈடுபடுவதா? சுவர்க்கத்திற்குத்தான், இது யோக்யதையா? ரிஷிக்குத்தான் இது நியாயமா? வீரருக்கு இது அழகா? இந்தக் காட்சி கடவுளின் திரு அவதாரக் கதையிலே புகுத்தியதற்குக் கம்பருக்குக் காமரசத்திலே இருந்த மட்டற்ற பாசமன்றி வேறு என்ன காரணங்கூற முடியும்? கலாரசிகர்களே! சற்றே தயைசெய்து பதில் கூறுங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பரசம்/டோஸ்_நெ._2&oldid=1790263" இலிருந்து மீள்விக்கப்பட்டது