கலிங்கத்துப் பரணி/காடு பாடியது

விக்கிமூலம் இலிருந்து

75

களப்போர் விளைந்த கலிங்கத்துக் கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம். 1

மரம் செடி கொடிகள்[தொகு]

76

பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்
உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. 2

77

உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே. 3

78

வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்
முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. 4

பரிதியின் செயல்[தொகு]

79

தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. 5

நிழல் இல்லாமை[தொகு]

80

ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே. 6

நிழலின் செயல்[தொகு]

81

ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. 7

நெருப்பும் புகையும்[தொகு]

82

செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார் செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்
பந்நெ ருப்பினிற் புகைதி ரண்டதொப் பல்ல தொப்புறா வதனி டைப்புறா. 8

நிலத்தில் நீரின்மை[தொகு]

83

தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந்
நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. 9

நிலத்தின் வெம்மை[தொகு]

84

இந்நி லத்துளோ ரேக லாவதற் கெளிய தானமோ வரிய வானுளோர்
அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித் தல்ல வோநிலத் தடியி டாததே. 10

இரவியும் இருபொழுதும்[தொகு]

85

இருபொழுது மிரவிபசும் புரவிவிசும் பியங்காத தியம்பக் கேண்மின்
ஒருபொழுதுந் தரித்தன்றி யூடுபோ கரிதணங்கின் காடென் றன்றோ. 11

பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே[தொகு]

86

காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்
ஓடியிளைத் துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ. 12

தேவர் வாழ்க்கை[தொகு]

87

விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
மைம்முகடு முகிற்றிரையிட் டமுதவட்ட வாலவட்ட மெடுப்ப தையோ. 13

பேயின் மூச்சும் மரத்தின் புகையும்[தொகு]

88

நிலம்புடைபேர்ந் தோடாமே நெடுமோடி நிறுத்தியபேய்
புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். 14

வறண்ட நாக்கும் முதிய பேயும்[தொகு]

89

வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே. 15

சூறாவளியின் இயல்பு[தொகு]

90

விழிசுழல வருபேய்த்தேர் மிதந்துவரு நீரந்நீர்ச்
சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். 16

நீறு பூத்த நெருப்பு[தொகு]

91

சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை சீத்தடிப்பச் சிதறியவப் பொடியாற் செம்மை
புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். 17

முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்[தொகு]

92

மண்ணோடி யறவறந்து துறந்தங் காந்த
வாய்வழியே வேய்பொழியு முத்த மவ்வேய்
கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேற்
கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும். 18

முத்துக்கள் கொப்புளங்கள்[தொகு]

93

வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேன் முத்தம்
வீழ்ந்தனவத் தரைபுழுங்கி யழன்று மேன்மேற்
பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும்
போலாவேற் கொப்புளங்கள் போலும் போலும். 19

காற்றின் தன்மை[தொகு]

94

பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
பாய்கடல்கள் நூக்குமதப் படர்வெங் கானில்
செல்காற்று வாராமல் காக்க வன்றோ
திசைக்கரியின் செவிக்காற்று மதற்கே யன்றோ. 20

வெந்தவனமே இந்தவனம்[தொகு]

95

முள்ளாறுங் கல்லாறுந் தென்ன ரோட முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும். 21

மணலின் தன்மை[தொகு]

96

அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே. 22