உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தொகை, இராசமாணிக்கம்/028

விக்கிமூலம் இலிருந்து

24. ஆயிழை கவினே!

பொருள் தேடிவரப் போகும் தன் கருத்தை, ஓர் இளைஞன் தன் மனைவியின் தோழிக்கு உணர்த்த, அதுகேட்ட அவள் நீ பிரிந்தால், அழகிழந்து போகும் உன் மனைவியினுடைய கண். கைவளை, நெற்றி முதலாயின உன்னைப் பழிதூற்றும் எனக்கூறி அவனைத் தடுத்து நிறுத்தியது இது;

"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்,
களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு, அகத்தவா, 5

முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத், தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல,
எழுஉறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்,
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத், தம் 10

குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள்நிலைமை கேட்டீமின்;
மணக்குங்கால் மலரன்ன தகையவாய்ச் சிறிதுநீ
தணக்குங்கால் கலுழ்புஆனாக் கண்ணெனவும்
                                                                                   உளவன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்போற்றி மற்றுஅவர் 15

புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்
ஈங்குநீர் அளிக்குங்கால், இறைசிறந்து ஒருநாள் நீர்
நீங்குங்கால் நெகிழ்போகும் வளைஎனவும் உளவன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன்உண்டு, மற்றவர்
ஒல்கிடத்து உலப்பிலா, உணர்விலார் தொடர்புபோல்; 20

ஒருநாள்நீர் அளிக்குங்கால், ஒளிசிறந்து, ஒருநாள்நீர்
பாராட்டாக் கால்பசக்கும் நுதல்எனவும் உளவன்றோ?
பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து, அம்மறை,
பிரிந்தக்கால் பிறர்க்குஉரைக்கும் பீடிலார் தொடர்புபோல்;
எனவாங்கு, 25

யாம் நிற்கூறுவது எவன்உண்டு? எம்மினும்
நீநற்கு அறிந்தனை; நெடுந்தகை! வானம்
துளிமாறு பொழுதின்இவ் வுலகம் போலும், நின்
அளிமாறு பொழுதின்இவ் ஆய்இழை கவினே."

புகழ்மிக்க வடநாட்டு மொழியால், திருதராட்டிரன் என்று பெயர் பெற்றவனுடைய மக்கள் நூற்றுவருள், துரியோதனன் சூழ்ச்சியால், ஐவர்கள் என்று உலகத்தவரால் புகழ்ந்து பாராட்டப் பெறும் பாண்டவர்கள் உள்ளே இருக்க, அரக்கு மாளிகையை நெருப்புச் சூழ்ந்து கொண்டதுபோல், செருக்கிக் களிக்கும் மதங்கொண்ட களிறுகள் உள்ளே அகப்பட்டுக்கொள்ள, மூங்கில்களைக் கொண்ட மலையில் பற்றி எரியும் பெருந்தீயை, அவ்வரக்கு மாளிகையைக் காற்றுக் கடவுள் பெற்ற வீமசேனன் அழித்துத், தன் உடன்பிறந்தார்களோடு பிழைத்து வெளியேறியது போல், கணைய மரம்போல் பருத்துத் திரண்ட துதிக்கையுடைய அந்த யானைகளைக் காக்கக் கருதிய வேழம், சூழ்ந்து புகைந்து எரியும் அத்தீயை மிதித்து வழிச்செய்து கொண்டு வெளியேறிச் செல்லும் குன்றும் கொதிக்கும் காட்டு வழியைக் கடந்து செல்லக் கருதினால், ஐய! இவள் நிலையைக் கூறுகின்றேன்; கேள்:

ஒருவர் தம் அருகில் இருக்கும் பொழுது அவர்க்குச் சிறப்புப் பல செய்து புகழ்ந்து போற்றிவிட்டு, அவர் அவ்விடம் விட்டு அகன்றவுடனே, அவர் குறைகளைக் கூறிப் பழிதூற்றிப் புறங்கூறும் இழிந்தோர் நட்புப்போல கூடியிருக்கும் காலத்தில், நீ கண்டு மகிழும்படி மலர்போலக் காட்சி அளித்து விட்டு, நீ சிறித பிரிந்தவுடனே உன்னைப் பழி தூற்றுவதுபோல் ஓயாது அழும் இயல்புடைய இக்கண் என்ற ஒரு பகை உளதல்லவோ?

ஒருவர் செல்வ வாழ்வில் வாழுங்காலத்தில், அவரோடு சேர்ந்திருந்து அவர் வளத்தை உண்டு வாழ்ந்துவிட்டு, அவர் வறுமையுற்ற காலத்தில் அவர்க்கு எவ்வித உதவியும் செய்யாத சிறியோர் நட்புப் போல், நீ இங்கே இருந்து அன்பு செய்யும் காலத்தில். இவள் முன் கையில் நீங்காதிருப்பது, அவளோடு அழகு பெற்று விட்டு, நீ ஒருநாள் பிரிந்தாலும், தளரும் தோள்களுக்குத் துணைபுரிவதற்குப் பதிலாக, கைகளைவிட்டுக் கழன்றோடும் வளை என்ற ஒருபகை உளது அல்லவா?

உள்ளம் கலந்த நட்புடைமையால், நண்பர் அறிவித்த மறையான ஒரு செய்தியை, அந்நண்பர் நீங்கிய உடனே பலர்க்கும் பறைசாற்றும் பண்பிலாதவர் போல், நீ, அன்பு காட்ட, ஒளிபெற்று விளங்கிவிட்டு, நீ அன்பை மறந்து அகன்றதும் உன் அன்பற்ற தன்மையைப் பலர்க்கும் பறைசாற்றுவதற்காக ஒளி இழந்து பசந்து போகும் நெற்றி எனும் ஒரு பகை உளது அல்லவா? என்று உன் மனைவியின் நிலையை எடுத்துக்காட்டிக் கூறக்கூடியது யாதுளது? நெடுந்தகாய்! இவ்வுண்மைகளை, எம்மைக்காட்டிலும் நீ நன்கறிந்துள்ளாய். ஆயினும் ஒன்று கூறுகிறேன்; மழை பெய்யாது மறுத்துவிட்ட காலத்தில் இவ்வுலகம் வருந்தி அழிவதுபோல், உன் அன்பு மாறிவிடும் போது, இவள் அழகும் அழிந்துபோகும்!

புணர்ப்பு-சூழ்ச்சி. கதழ்எரி-பெரு நெருப்பு. முளிகழை-உலர்ந்த மூங்கில். வளிமகன்-வீமசேனன். எழுஉறழ்-தண்டாயதத்தை ஒத்த. இறத்திரால்-போவதானால். மணக்குங்கால்சேர்ந்து வாழும் பொழுது. தணக்குங்கால்-பிரியும் பொழுது. புறக்கொடை-இல்லாத போது. ஒல்கிடத்து-வறுமை உற்றக்கால். உலப்பிலா-உதவாத. துளி-மழை. அளி-அன்பு.