உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தொகை, இராசமாணிக்கம்/043

விக்கிமூலம் இலிருந்து

2. திறன் உண்டேல் உரை!

குறிஞ்சி நிலத்துக் குறவர் குலத்தில் பிறந்த ஒரு பெண்ணைக் காட்டு நாட்டு மகன் ஒருவன் காதலித்தான். அவர் காதலை அப்பெண்ணின் பெற்றோர் அறியார். அதனால், அவன் அவர்கள் அறியாதபடி ஒவ்வொரு நாளும் இரவில் சென்று வந்தான். ஒருநாள் காணாதிருப்பதும் அவளுக்கு முடியாததாயிற்று. காணாதபோது கலங்குவதும், காண நேர்ந்ததும் களிப்பதும் அவள் இயல்பாயிற்று. அவர் காதற் சிறப்பைக் கண்ட தோழி, அவன் இரவில் வருவதும் கூடாது; அவன் வாராமையால் அவள் வருந்துவதும் கூடாது. இதற்குத் திருமணமே வழி என உணர்ந்தாள்; ஒருநாள் அவனைக் கண்டு தன் கருத்தைத் தெரிவித்தாள். அவனும் அதற்கு இசைந்தான். மகிழ்ச்சிக்குரிய அச்செய்தியைத் தோழி அப்பெண்ணுக்கு அறிவித்தது இது;

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்,
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5

உறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண்டு அதன்முதல் குத்திய மதயானை,
நீடிரு விடரகம் சிலம்பக் கூய்த் தன்
கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட! கேள்:
ஆரிடை என்னாய் நீ, அரவு அஞ்சாய் வந்தக்கால் 10

நீர் அற்ற புலமேபோல் புல்லென்றாள், வைகறை
கார்பெற்ற புலமேபோல் கவின்பெறும்; அக்கவின்
தீராமல் காப்பதோர் திறன் உண்டேல் உரைத்தைக்காண்;
இருளிடை என்னாய் நீ, இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருள் இல்லான் இளமைபோல் புல்லென்றாள், வைகறை 15

அருள் வல்லான் ஆக்கம்போல் அணிபெறும்; அவ்வணி,
தெருளாமல் காப்பதோர் திறன்உண்டேல் உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை
திறன் சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும்; அத்திருப் 20

புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருள் உண்டேல்
                                       உரைத்தைக்காண்;
எனவாங்கு,
நின் உறுவிழுமம் கூறக்கேட்டு
வருமே தோழி! நன்மலை நாடன்,
வேங்கை விரிவிடம் நோக்கி, 25

வீங்குஇறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே."

இமயமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடை முடியோனாகிய சிவன், உமையோடு கயிலைமலையில் இருந்தானாக, இராவணன், தொடி விளங்கும் பெரிய கையை, அம்மலைக் கீழ் நுழைத்து எடுக்க முயன்று, அதைப் பெயர்க்கவோ, கீழ் நுழைத்த தன் கையை எடுத்துக் கொள்ளவோ முடியாமல் வருந்தியதைப் போல் புலியின் உருவத்தை ஒத்த வேங்கை மரத்தைப் புலியெனக் கருதிச் சினங்கொண்டு குத்திய யானை, கடைசியில், அம்மரத்தில் ஆழப்பதிந்து விட்ட கொம்புகளை வாங்கிக் கொள்ள மாட்டாமல் வருந்தி, மலையெல்லாம் எதிரொலிக்குமாறு கூக்குரல் இடும் மலைநாட்டைச் சேர்ந்தவனே! நான் கூறுவதைக் கேட்பாயாக:

உன்னைக் காண முடியாமையால், நீர் அற்ற நிலத்தில் பயிர் வாடுவது போல் வருந்தியவள், நீ கடத்தற்கு அரிது என்று கருதாது அரவங்களுக்கும் அஞ்சாமல் வரக்கண்டதும், விடியற் காலையில், பெருமழை பெய்யப்பெற்ற விளைபுலம் போல் வனப்புறுவாள். அவ்வாறு அவள் பெறும் அழகு மீண்டும் அழிந்து விடாதபடி காக்கக் கூடிய வழி இருக்குமானால் அதை எங்களுக்குக் கூறுவாயாக!

உன்னைக் காண முடியாமையால், செல்வம் இல்லாதவன் இளமை சீரழிந்து போவது போல், அழகிழந்து போனவள், நீ, இருள் நிறைந்த இரவு என்றும் கருதாது, கேடுகண்டு அஞ்சாமல் வரக்கண்டதும், அருள் உள்ளம் உடையவன் செல்வம், நாள்தோறும் வளர்ந்து வளம் பெறுவதுபோல் வளம் பெறுவாள். அவ்வாறு அவள் பெறும் அவ்வனப்பினைக் காணும் இவ்வூர் மகளிர் இது பிறிதொரு காரணத்தால் வந்தது எனக்கருதி மயங்காது இது, இவள் கணவனால் வந்தது எனக்கூறிப் பாராட்டத் தக்க பெருவழி இருக்குமானால், அதை யாம் அறியக் கூறிச் செல்வாயாக!

உன்னைக் காண முடியாமையால், அறநெறியைக் கைவிட்டு வாழ்ந்து, வறிதே வயது முதிர்ந்த ஒருவன், மறுமைச் செல்வத்தையும் இழந்து சீரழிவது போல் அழகிழந்தவள், நீ, வழியில் வாழும் கானவர், கொலை கொள்ளைகளில் குறைவின்றித் திருந்திய அறிவுடையவர் ஆவர் என அறிந்தும் அஞ்சாது வரக் கண்டதும் விடியற்காலையில் துயில் நீத்து எழுந்ததும் அன்று செய்ய வேண்டிய கடமைகளைக் கருத்தோடு எண்ணி முடிவு செய்யும் ஒருவன் செல்வம், சீர் பெற்றுச் சிறப்பது போல் சிறந்த அழகைப் பெறுவாள். அவ்வாறு பெறும் அழகால், புறங்கூறும் ஊர்ப் பெண்கள் வாயை நிலையாக அடக்கவல்ல வழியிருக்குமாயின் அதை எங்களுக்கு அறிவிப் பாயாக!

- என்று கூறக்கேட்ட தலைவன், வேங்கை மலர்ந்து காட்டும் மணநாளை எதிர்நோக்கியிருந்து, உன் தோளை மணந்து கொள்ள வருகின்றான். ஆகவே, இனி உன் வருத்தம் ஒழிவதாக!

வாங்கிய-வளைத்த. உழத்தல்-வருந்துதல். நீடு இரு விடர் அகம்-நீண்டபெரிய மலையின் பிளவுகள். சிலம்ப-எதிரொலிக்க. புய்க்கல்லாது-பிடுங்கமாட்டாமல். தெருளாமல்-உணராமல். மறம் திருந்தார்-கொலைத் தொழிலைக் குறைவறப் பெற்ற கானவர்.

உள்ளுறை : மலர்ந்து மணம் வீசும் வேங்கையைப் புவியெனக் கருதியது, இல்லற இன்பம் பெறத் துணைசெய்யும் தோழியின் அறிவுரையைக் களவு இன்பத்தை இழக்கச் செய்வதால், கொடிதெனக் கருதுதலாம். யானை வேங்கையை அழிக்க எண்ணுதல், தலைவன் தோழியின் வரைவுகடாய் கூற்றை மறுக்கத் துணிதலாம்; கோட்டினைப் பிடுங்க முடியாமல் கூவி அழுதல், அவள் கூற்றைக் கொடுமை உடையதாகக் கருதியதை மாற்றிக் கொள்ளமுடியாமல், தலைவன் வருந்திக் கூறலாம்.