கலித்தொகை/கடவுள் வாழ்த்து

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கடவுள் வாழ்த்து[தொகு]

கடவுள் வாழ்த்து : (ஆறுஅறிஅந்தணர்க்கு)[தொகு]

ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி,
மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள் இனி;
படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ // 05 //
கொடுகொட்டி ஆடும்கால், கோடு உயர் அகல் அல்குல்
கொடிபுரை நுசுப்பினாள், கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடும்கால், பணை எழில் அணை மென்தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள், வளர் தூக்கு தருவாளோ? // 10 //
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத்தார் சுவல் புரளத்
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என ஆங்கு,
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை // 15 //
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.