உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆந்திர ராச்சியம்

விக்கிமூலம் இலிருந்து

ஆந்திர ராச்சியம் : இது இந்திய யூனியனின் ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953 அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000 ச. மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி. கோதாவரி, மே. கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும் மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய ஆறுகள்

ஆந்திர ராச்சியம்

பெண்ணை, துங்கபத்திரை, கோதாவரி, கிருஷ்ணா. முக்கிய மலைகள் கிழக்கு மலைத் தொடர்கள், நல்லமலைத் தொடர்கள், நிமிகிரி மலைகள். கர்நூல் இதன் தலைநகரம். பல்கலைக் கழகமும் பல துறைக் கல்லூரிகள் பலவும் உள்ளன. துங்கபத்திரை, கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கு அணை கட்டப்பட்டிருக்கின்றன. விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெறுகிறது. இவ்வீராச்சியத்தில் கனிப் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கிருஷ்ணா, கோதாவரி, நெல்லூர் மாவட்டங்களில் நெல் உற்பத்தி மிகுதி. கடப்பையில் கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. பல புண்ணியத் தலங்கள் இவ்விராச்சியத்தில் உள்ளன. மக் : 2,05,07,801 (1951).

வரலாறு: ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம்

கி. மு. ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிராமணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதிலும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற்றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்குகிறது. கி.மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில் கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி. மு. 261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது.

அப்போது அரசாண்ட சாதவாகன அரசர்களுடைய இராச்சியத்தில் பூனா, மாளவம், குஜராத் எல்லைகள், மத்தியப்பிரதேசம் ஆகியவை அடங்கியிருந்தன. அவர்களுடைய தலைநகரம் முதலில் நாசிக்கிலும், பின்னர் ஸ்ரீகாகுளத்திலும், இறுதியில் அமராவதி அருகிலுள்ள தரணிக்கோட்டையிலும் இருந்து வந்தது.

சாதவாகன வமிசத்து முதல் அரசனான சீமுகன் கொடுங்கோலனாயிருந்தபடியால் கொல்லப்பட்டான். அவனுக்குப்பின் ஆண்ட I-ம் சதகர்ணியும், II-ம் சதகர்ணியும் சுங்க அரசரிடமிருந்து மாளவத்தைப் பற்றிக் கொண்டனர். கி.பி. 20-29-ல் ஆண்ட ஹாலன் காதற் பாட்டுக்களையும் பக்திப் பாடல்களையும் தொகுத்தான். இவ்வாறு இவ்வமிசத்தினர் ஆட்சி இரண்டு மூன்று நூற்றாண்டுகள் நடைபெற்று வந்தது. ஆனால் அது எவ்வாறு முடிவுற்றது என்பது தெளிவாக விளங்கவில்லை.

இப்போது தென் கன்னடமாயிருப்பதிலுள்ள பனவாசியைத் தலைநகரமாகக் கொண்ட கடம்ப மன்னர்கள் நான்காம் நூற்றாண்டில், சாதவாகனர் இராச்சியத்தில் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆறாம் நூற்றாண்டில் வாதாபி (பிஜாப்பூர்) யிலிருந்த சாளுக்கியர்கள் கடம்பர்களை வென்றனர். மேற்குச் சாளுக்கியர் பல்லாரியைக் கைப்பற்றினர். ஆனால் 8ஆம் நூற்றாண்டில் ராஷ்டிரகூடர் சாளுக்கியரிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிக்கொண்டனர்.

காஞ்சிபுரத்திலிருந்த பல்லவர்கள் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளுக்கிடையே வேங்கி மாகாணத்தை உண்டாக்கினார்கள். பல்லவர்களுள் ஒரு கிளையினரான கோலம்பாடிகள் அதை ஆண்டனர். 10ஆம் நூற்றாண்டில் சுங்க அரசர்கள் கோலம்பாடிகளை வென்று கோலம்ப குலாந்தகர் என்ற பெயரைச் சூடிக் கொண்டனர்.

இச்சுங்க மன்னர்கள் சோழர்களாலும், இராஷ்டிரகூட மன்னர்கள் மேற்குச் சாளுக்கியராலும் 1004-ல் முறியடிக்கப்பட்டனர். சாளுக்கியருடைய ஆதிக்கம் இரண்டு நூற்றாண்டுக் காலம் நடைபெற்று வந்தது. இறுதியில் அவர்களுடைய ஆட்சி, அவர்களுக்குக்கீழ் சிற்றரசர்களாயிருந்த கால சூரிகளாலும், ஹொய்சளர்களாலும், யாதவர்களாலும் முடிவுற்றது.

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர், தெற்கே வந்து யாதவர்களையும் ஹொய்சளர்களையும் வேறு சில இராச்சியங்களையும் வென்று, அவற்றை ஆள, முஸ்லிம் கவர்னர்களை நியமித்தான். டெல்லி சுல்தானின் உத்யோகஸ்தரில் ஒருவனான ஜாபர்கான் 1347-ல் தட்சிணத்திலுள்ள தௌலதாபாத்தைக் கைப்பற்றித் தான் சுதந்திர அரசனாகப்பிரகடனம் செய்தான். இவன் ஏற்படுத்திய பாமினி அரச வமிசம் தட்சிணத்தில் பெரும் பகுதியைக் கைப்பற்றி இரண்டு நூற்றாண்டுக் காலம் ஆட்சி புரிந்து வந்தது. டெல்லி சுல்தானுடைய கவர்னர்களும் சுதந்திர மன்னர்களாகத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடைய இராச்சியங்கள் பேரார், ஆமத்நகர், பிஜாப்பூர், கோல்கொண்டா என்பன.

இதே சமயத்தில் முஸ்லிம் ஆட்சியை ஒழிப்பதற்காகத் துங்கபத்திரா ஆற்றங்கரையில் விஜயநகர இராச்சியத்தை ஹரிஹரர், புக்கர் என்ற உடன் பிறந்தார் இருவர் உண்டாக்கினார்கள். இப்புது இராச்சியத்தின் மன்னர்கள் விரைவில் தங்கள் இராச்சியத்தைப் பெரிதாக்கிக் கொண்டனர். இவர்களுள் மிகப் பெரியவர் கிருஷ்ணதேவராயர். இவருடைய காலத்தில் விஜய நகர சாம்ராச்சியம், ஆந்திர ராச்சியம் பிரியுமுன்னிருந்த சென்னை ராச்சியத்தையும் மைசூரையும் கொண்டதாயிருந்தது. விஜயநகர சாம்ராச்சியம் எல்லாவகைகளிலும் மிகுந்த புகழ் பெற்றதா யிருந்தது.

பிஜாப்பூர், ஆமத்நகர், கோல்கொண்டா, பேரார் சுல்தான்கள் 1564-ல் ஒன்று சேர்ந்து விஜயநகரத்தைத் தாக்கித் தலைக் கோட்டை என்ற இடத்தில் நடந்த போரில் முறியடித்து, நகருள் புகுந்து அதை அழித்தனர் ; அப்போதிருந்த அரசன் ராமராஜாவைக் கொன்றனன். சாம்ராச்சியம் சிதைவுற்றது. அரசனாக வரவேண்டியவன். பெனுகொண்டாவில் அடைக்கலம் புகுந்தான். அவனுடைய வம்சத்தாரில் ஒருவனான I-ம் வேங்கடன் 1585·ல் சிம்மாசனம் ஏறிச் சந்திரகிரியைத் தலைநகராக்கினான். இவன் வழித்தோன்றலான சந்திரகிரி அரசன் 1639-ல் இப்போது சென்னையுள்ள இடத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குத் தானமாக வழங்கினான்.

மொகலாய சக்கரவர்த்தி ஷா ஜகான் (1626-58) கோல்கொண்டா முதலிய சுல்தான்களை அடக்கித் தனது ஆட்சிக்கு வணங்கும்படி செய்தான். ஆனால் ஒளரங்கசீப் இறந்தவுடன் தட்சிணத்திலிருந்த மொகலாய அரசப் பிரதிநிதியான ஆசப் ஜா ஹைதராபாத் நைஜாம் என்ற பெயருடன் சுதந்திர மன்னன் ஆனான்.

ஆசப் ஜாவுக்குப்பின் நைஜாமான சலபத்ஜங் என்பவனுக்குப் பிரெஞ்சுக்காரரின் உதவி வேண்டியிருந்ததால், அவன் அவர்களுக்கு வட சர்க்கார்கள் என்னும் பகுதியைக் கொடுத்தான்.

இப்போது சுதேச மன்னர்களுக்கிடையே சச்சரவு நிகழும்போது இவர்கள் ஆங்கிலருடைய உதவியையோ பிரெஞ்சுக்காரருடைய உதவியையோ நாடுவது வழக்கமாயிருந்தது. விஜயநகர அரசன் ஆங்கிலேயருடைய உதவியுடன் வட சர்க்காரைத் தாக்கிப் பிரெஞ்சுக்காரரை அடியோடு முறியடித்தான்.

மகாராஷ்டிரக் குறுநில மன்னனான முராரி ராவ் கூட்டி என்னுமிடத்தில் 1746-ல் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டு, கோட்டைகளைக் கட்டவும் புதுப்பிக்கவும் செய்தான்.

டெல்லி பாதுஷா 1756-ல் வட சர்க்காரை ஆங்கிலேயருக்குக் கொடுத்தான். நைஜாமும் சம்மதித்தார். ஆங்கிலேயர் இதற்குப் பதிலாகக் கப்பங் கட்டவும், வேண்டும்போது படை உதவி தரவும் இசைந்தார்கள்.

இச்சமயத்தில் ஐதர் அலியும் அவனுக்குப்பின் அவன் மகன் திப்புவும் பல்லாரி முதலிய பகுதிகளைக் கைப்பற்றினர். கார்ன்வாலிஸ் பிரபு அவர்களை வென்று அப்பகுதிகளை விடுவித்தார். அவற்றை அதாவது பல்லாரி, அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களை நைஜாம் மறுபடியும் ஆங்கிலேயருக்கு அளித்தார். அதனால் அவை அது முதல் “அளிக்கப்பெற்ற மாவட்டங்கள்” என்று பெயர் பெறலாயின.

அது முதல் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையும்வரை, ஆந்திரநாடு சென்னை இராச்சியத்தில் ஒரு பகுதியாக ஆங்கிலேயருடைய ஆட்சியில் இருந்துவந்தது. 1953 அக்டோபர் முதல் தேதியன்று ஆந்திர மாவட்டங்கள் பதினொன்றும் சேர்ந்து ஆந்திர ராச்சியம் என்ற பெயருடன் இந்திய யூனியனில் தனி ஏ வகுப்பு இராச்சியமாக ஆகியிருக்கின்றன.