உள்ளடக்கத்துக்குச் செல்

கலைஞர் கடிதம் 2

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





கலைஞர் கடிதம் 2.pdf

கலைஞர்
கடிதம்

கலைஞர்
மு.கருணாநிதி

அபிராமி நிலையம்
307. லிங்கி செட்டி தெரு ● சென்னை—600001.

முதற்பதிப்பு : ஆகஸ்ட், 1986.
உரிமை : தமிழ்க்கனி பதிப்பகம்
விலை : ரூ. 11–00

அச்சிட்டோர் : லோட்டஸ் ஆப்செட்பிரஸ், சென்னை—13

என்னுரை


1968ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 22ஆம் நாள் முதல் 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் வரையில் நான் எழுதிய கடிதங்களின் தொகுப்பை பத்து தொகுதிகளாக அபிராமி பதிப்பக நண்பர் பனையப்பன் அவர்கள் தமிழ்க்கனி பதிப்பகத்தாரிடம் உரிமை பெற்று முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள்.

“நண்பா !” என விளித்துத் தொடங்கியும், “உடன் பிறப்பே!” என விளித்துத் தொடங்கியும், இன்னணம் “மறவன்” என முடித்தும் — “அன்புள்ள மு. க” என முடித்தும் “மறவன் மடல்” வார இதழிலும், “நம்நாடு” வார இதழிலும் — மற்றும் பெரும்பாலும் நாள்தோறும் அல்லது வாரத்தில் நாலைந்து முறை “முரசொலி” நாளிதழிலும் நான் எழுதிய கட்டுரைகளின் வடிவமே “கலைஞர் கடிதம்” எனும் தலைப்பில் உங்கள் கரங்களில் தவழும் இந்த நூல்களாகும் !

1977–க்குப் பிறகும் இன்னமும் முரசொலியில் “கலைஞர் கடிதங்கள்” எழுதிக் கொண்டுதானிருக்கிறேன்.

உடன்பிறப்புக்களான கழகத்தினருக்குக் கூறவேண்டியவைகளையும், அவர்களை முன் வைத்து நாட்டுக்கு, சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டியவைகளையும் ஒரு பாச உணர்வுடன் வெளியிட இந்தக் கடிதம் எழுதும் முறை எனக்கு மெத்தவும் பயன்படுகின்றது.

இந்தப் பத்து தொகுதிகளைத் தொடர்ந்து படிப்போர்க்கு சுமார் ஒன்பதாண்டு கால அரசியல் வரலாற்றுக் குறிப்புகள் கூடுமானவரையில் தேதிவாரியாகக் கிடைக்கும்.

என் கடிதங்கள் காலை ஏழு மணிக்குப் பிறப்பெடுக்கும்; ஒவ்வொரு நாளும் !

இதுவரையில் இந்த அறுபத்து மூன்று வயதில் அடுத்த ஆண்டு வந்தால் ஐம்பதாண்டு காலப் பொது வாழ்க்கை எனக்கு !

அந்த வாழ்க்கையின் விரிவான விபரங்களை, நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்திலும்; இரண்டாம் பாகத்திலும் நினைவுக்கு வந்தவரை எழுதியிருக்கிறேன். மூன்றாம் பாகத்தை எழுதிட ஆரம்பிக்கவில்லை. காலம் இடம் தருமோ; தராதோ? எனக்குத் தெரியாது.

ஐம்பதாண்டு காலப் பொது வாழ்வில் இதுவரை; பாசறை—போர்க்களம் — பதவிப்பொறுப்பு — பணியாற்றும் வாய்ப்பு — இப்படி மாறி மாறி வரினும் சந்தித்த; இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிற சோதனைகள் எண்ணிலடங்கா!

குமுறல் — கொந்தளிப்பு —கவலை — கலக்கம்—ஏமாற்றம் — துரோகம் — இப்படி எத்தனையோ ஈட்டிகள் என் இதயத்தில் பாய்ந்து ரணமாக்கியுள்ளன !

அந்த ரணம் ஆற்றிடும் மருந்தாகத்தான்—எனது எழுத்துக்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன ! பயன்படுகின்றன !

இந்தக் கடிதத் தொகுப்பில் பல செய்திகள், நிகழ்ச்சிகள், மதிப்பு மிக்கத் தலைவர்கள், அன்புக்குரிய நண்பர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கலாம்.

அது ; அந்தக் கால கட்டத்து அரசியல் தட்பவெட்பத்தைக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமென பணிவன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் பத்து தொகுதிகளை—முதல் பதிப்பாக வெளியிட முன்வந்த அருமை நண்பர் பனையப்பனுக்கும்—அவருக்குத் துணைநின்ற தம்பி சண்முகநாதனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.


15—7—86

அன்புள்ள
மு. கருணாநிதி

குறிப்பு: பத்து தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த கடிதங்களின் எண்ணிக்கை 369 ஆகும்.

பதிப்புரை

காலம் ஒன்று பிறந்தது. கருத்தொன்று மலர்ந்தது, ‘தமிழைத் தாழ்த்திப் பிறமொழிகளை உயர்த்தாதே!’ — என்னும் சொல்மாரி தமிழ் பூமியை, தரணி வாழ் தமிழர்களின் நெஞ்சங்களை நனைத்தது.

எதிர்ப்புகள், ஏளனங்கள், முதலில் முகங்காட்டினாலும், அவை மெல்லச் சுருங்கி, வாடி வதங்கி உருத்தெரியாமல் மறைந்தன.

‘தமிழை உயர்த்தி தமிழரை உயர்த்து’ என்ற எழுச்சிக்குரல் ஒலிக்க தமிழகத்தை வலம் வந்த இளைஞர்களில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் முத்திலே முதிர்ந்ததாக, முனைமழுங்கா வேலாக உருப்பெற்றவர்தான் நமது கலைஞர். இது நான் கூறுவதல்ல; நாளைய தமிழகம் அவரைப் பற்றி தீட்டப்போகிற வைரவரிகளாகும்.

ஆம், தமிழக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கத்தில் தொண்டனாக — தளபதியாக — இன்று ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தின் தலைவராக உயர்ந்து, தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்தான் அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள் !

பேரறிஞர் அண்ணாவின் காலத்திலும் அவருக்குப் பிறகும் தமது எழுத்து, பேச்சுவன்மையால் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழ் பேசும் உலக நெஞ்சங்கள் அனைத்திலும் தன்னிகரற்று விளங்குபவரும் தானைத் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக இளைஞர்களை தம் தம்பியாகப் பாவித்து, தமது எண்ண வித்துக்களை அவர்கள் நெஞ்சத்தில் ஊன்றியதுபோல், கலைஞர் அவர்கள், அண்ணாவின் தம்பியாக நின்று தமிழக இளைஞர்களையெல்லாம் தமது உடன் பிறப்புக்களாக அரவணைத்து அவர்கள் எழுச்சிபெற எழுதிய கடிதங்களே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

1968 முதல் 1977 வரை ‘மறவன் மடல்’, ‘நம்நாடு’ வார ஏடுகளிலும் ‘முரசொலி’ நாளேட்டிலும் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதங்களே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இவைகள் ஏதோ குசலம் விசாரிக்கின்ற கடிதங்களாக இல்லாமல், ஒரு கால கட்டத்தின் கருத்துக் கருவூலங்களாகத் திகழ்வதை நான் மட்டுமல்ல இதனைப் படிக்கும் வாசகர்களும் உணர்வார்கள்.

அரசியல், இலக்கியம், பொருளாதாரம், மொழி இன பிரச்சனைகள்—எதுவானாலும் தமது அருந்தமிழ் வல்லமையால் சுவைபடச் சொல்லும் கலைஞரின் பாங்கு அவருக்கென்றே அமைந்துவிட்ட தனிப் பாணியாகும். இந்த அரிய எழுத்திலக்கியத்தை நூலாக்கி வெளியிடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இதனை நூலாக்கி உங்கள் முன் வழங்க இசைந்த கலைஞர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு தந்த நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.

அன்பன்,
கா. பனையப்பன்

பொருளடக்கம்



கலைஞர் கடிதம்
பாகம்–2



"https://ta.wikisource.org/w/index.php?title=கலைஞர்_கடிதம்_2&oldid=1895878" இலிருந்து மீள்விக்கப்பட்டது