கல்வி எனும் கண்/கல்வி எனும் கண்
உலகம் சுழன்று வரும் வேகத்தில் மக்கள் உணர்வு ஊசலாடுகின்றது. கி.பி. 2000இல் இதைச் செய்வோம், அதைச் செய்வோம்—நாட்டை பொன்னாடாக்குவோம்—விண்முட்டப் புகழ் பரப்புவோம் என்று மேலை நாடுகள் மட்டுமின்றி. பரந்த பாரதமும் அதன் அங்கமாக உள்ள தமிழகமும் நாள்தோறும் முழங்குகின்றன. ஆனால் செயல் முறையில் அத்தகைய, நாட்டமும் ஊக்கமும் உணர்வும் வேகமும் காட்டவில்லை:
"கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றல் இன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே
நாளில் மறப்பாரடி"
என்று பாரதியார் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூறிய கூற்று. இன்றும் மெய்ம்மையாக அன்றோ உள்ளது. ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்பது இன்றைய வழக்கமாகிவிட்டது. அரசியலைச் சூதாட்டம் என்பர். ஆனால் அறிவியல், ஆன்மவியல், சமூகவியல், பண்பாட்டியல் யாவுமே சூதாட்டமாகவன்றோ இன்று வடிவெடுத்து உலவுகின்றது. பாரதி பாடி ஒரு நூற்றாண்டு-அவன் மறைந்து முக்கால் நூற்றாண்டு, உரிமை பெற்று அரை நூற்றாண்டு இப்படி நூற்றாண்டு எல்லை கழிந்தும் இந்திய மக்கள்—தமிழ் மக்கள் எந்தவகையில் முன்னேறி உள்ளனர் என்று சொல்ல முடியும்? எண்ணிப் பாருங்கள்!
‘வஞ்சமின்றி வாழுமின்’ என்று பெரியவர்கள் வலியுறுத்திய நாட்டில்-வள்ளுவர் பிறந்த நாட்டில் வாழ்க்கை நெறி எப்படி வரம்பின்றி வீழ்ந்து, நாட்டையும் உலகையும் நலிவுறுத்துகின்றது. இன்று பலர் பேசுவது
போன்று 'ஆங்கிலேயன் ஆட்சியே மேல்' என்ற உணர்வு தானே பலருக்கு உண்டாகின்றது. உணவிலே, உடையிலே, ஊர்ப் பயணத்திலே, உற்ற செயல்களிலே மனிதன் மாறி விட்டாலும் கவலை இல்லை. காலம் அவனைத் திருத்தி விடும் என நம்பலாம். ஆனால் உள்ளத்தால்-உள்ளத் துணர்ந்து காணும் பண்பாட்டால்-அப்பண்பாட்டின் வழியே முகிழ்க்கும் செயலால் அவன் மாறிவிட்டால் அவனை என்றும் யாராலும் திருத்த முடியாதே! சமுதாயத்தில், தன்னை ஒரு அங்கமாக்கிக்கொண்டு, தான் சமுதாயத்துக்காக வாழவேண்டியது மக்கள் நியதி. நாம் சமுதாயத்துக்கு-உயிரினத்துக்கு இன்று என்ன செய்தோம் என அவன் இரவில் படுக்கப் போகும்போது எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டவன். ஆனால் இன்றைய மனிதன், எனக்கு மற்றவர் இன்று என்ன செய்தார்கள்-நான் யார் யாரிடம் கையூட்டு வாங்கினேன்-மொத்தம் எவ்வளவு ஆயிற்று-ஏன்? எத்தனை பேருக்குத் தீங்கிழைத்தேன்எத்தனை பேரைக் கொலை செய்தேன் என்றல்லவா கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் களம் காணவேண்டிய-செயலாற்ற வேண்டிய படைக்கலன்கள், இன்று வீடுதொறும்-தெருதொறும்-சந்திதொறும் ஓயாது ஒலிப்பதையும் பாழ்படுத்துவதையும் நாம் காண்கிறோம். 'துப்பாக்கி கலாசாரம்' (Gun Culture) என்று 'பிறரைச் சுடுதலாகிய பண்பாடே' என்று பேசுவதன்றோ இன்று நாட்டில் நடமாடுகின்றது. மாணவன் ஆசிரியரைக் கண்டு பயந்து-பணிந்து வணங்கிய காலம் போய் ஆசிரியர் மாணவரைக் கண்டு பயந்து நடுங்கும் காலம் வந்துவிட்டது. நாடாளும் மன்னர்கள் அச்சமின்றி இரவிலும். பகலிலும் தனியாக நாட்டு நலன் காண வரும்போது மக்கள் அஞ்சியும் அன்புளத்தாலும் போற்றி வணங்கிய நிலைமாறி, ஆளுகின்றவர்கள் மக்களுக்கு அஞ்சி அடுக்கடுக்காகக் காவல் சூழ அன்றோ வெளி வரவேண்டியுள்ளது. வீடுதோறும் கலையின் விளக்கம் என்று கேட்டவர்களுக்கெல்லாம் புதுப்பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாரி வழங்கிய பண்பாடு நீங்கி, இன்று
பள்ளியோ கல்லூரியோ தொடங்கவோ அன்றிப் புதுப்புதுப் பாடங்கள் பெறவோ இலட்சக்கணக்காகக் கையூட்டு தரவேண்டிய காலமாகவன்றோ இன்று மாறிவிட்டது. இந்த நாட்டில் லஞ்சம் தாண்டவமாடாத இடம் எங்கும் இல்லை என்ற பெருமைக்கு இங்குள்ளவர்கள் வழிவகுத்து உள்ளார்களே. சிறு ஊழியர்கள் பத்து, நூறு என்ற அளவில் நிற்க, பெரியவர்கள்-உயர்நிலையாளர்கள், ஆட்சியாளர்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்குவதுதானே இன்றைய வாழ்க்கை நெறி, ‘சம்பளம் கிம்பளம்’ என்று வேடிக்கைக்காகச் சொல்லும் சொற்றொடர் இன்று வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்று விட்டதே. பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆயிரக் கணக்கிலும் இலட்சக் கணக்கிலும் வாரிக்கொட்ட வேண்டியுள்ளது. அப்படியே வேலை பெறத் தகுதி வேண்டாது லஞ்சமே அளவு கோலாக அமைய இலட்சத்தின் எல்லையினையும் அது கடக்கின்றதே!-இந்த அவல நிலையில், ‘மனிதன் எங்கே செல்கிறான்?’ என்ற கேள்வி எழுகின்றதே இந்த நிலையில் பாரதி கூறியபடி ‘நாட்டத்தில் கொள்வது’ எங்கே? எப்படி முடியும்?
பல பொருள்களைப் பற்றி எண்ணம் எழுகிறது. இங்கே முதலில் கல்வியைப் பற்றிக் காணலாம். பழங்காலத்தில் கல்வி போற்றப் பெற்றமை ‘குருகுல வாசம்’ என்ற வகையால் நாம் அறிகிறோம். தனித்த குருவினிட்ம், அவர்கள் வீட்டுப் பணிகளையும் செய்து கொண்டு, குடும்பமாகச் செல்வரும் வறியரும் வேறுபாடு இன்றி, கல்வி கற்று முன்னேறி நாட்டை வாழ்வித்தனர். வறிஞரான குசேலரும் அரச மைந்தனான கண்ணனும் ஒரே குருவிடம் வேறுபாடின்றிக் கற்றனர். பல பேரறிஞர்கள் அரச குமாரர்களையும் ஆண்டிகளின் பிள்ளைகளையும் தம்முடன் இருத்தி, தக்க வகையில் கல்வி கற்பித்ததைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் இன்று அந்த நிலையில்லை. ஆசிரியர்களும் நன்னூலாசிரியர் காட்டிய நல்லாசிரியர்கள் போன்று கோல்டு ஸ்மித் என்ற ஆங்கிலப் புலவர் காட்டிய என்ற ஆங்கிலப் புலவர் காட்டிய :கிராமப் பள்ளி ஆசிரியர் போன்று முற்றும் கற்று உணர்ந்தவர்களாய்-ஊருக்கு வழிகாட்டும் உத்தமராய், எதுவரினும் கலங்காத உள உரம் உடையவராய்-தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்-தலை நிமிர்ந்து மலையினும் மாணாப் பண்பு பெற்ற பெரியவராய் வாழ்ந்துவந்தனர். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் நிலையினை எண்ணிப் பார்க்கக் கூடவில்லை. எங்கோ ஒரு சிலர் பழைய பண்பாட்டு நெறி மாறாமல் வாழ்கிறார்கள். என்றாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தாழ்வுற்றுத் தறிகெட்டுத்தானே வாழ்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி மாணவர் நடந்தால் என்னாகும்? பட்டங்கள் பெறுவதிலும் எத்தனை ஏமாற்றம். பல பல்கலைக் கழகங்கள் காளான்களாகத் தோன்றி-அரசு தரும் உரிமம் இன்றியே (அங்கீகாரமின்றியே) செயல்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்து, பின் நடுத்தெருவில். நிற்கவிடுகின்றன. ருபாய் இருநூறும் முன்னூறும் தந்தால் டாக்டர் பட்டம் பெற வாய்ப்பும் உண்டே! இவை பற்றியெல்லாம் நாள்தோறும் நாளிதழ்களில் செய்திகளைக் காண்கின்றோமே! பட்டங்கள் பெறுவதைப்பற்றியும் நகைப்புக்கிடமான வகையில் பல செய்திகள் வருகின்றனவே. ‘டாக்டர்’ பட்டம் பெறுவதற்குப் பணமே முக்கியம். படிப்பு முக்கியமில்லை என்று சில ஆண்டுகளுக்குமுன் ஒரு சிறந்த நாளிதழில் அன்னையார் ஒருவர் எழுதிய கட்டுரை என் நினைவுக்கு வருகின்றது. அதை யாராவது -எந்தப் பல்கலைக் கழகமாவது மறுத்ததுண்டா? உண்மையை எப்படி மறுக்கமுடியும்?
மேலை நாடுகளில் சிறப்பாக அமெரிக்காவில் தமிழ் நாட்டுப் பழங்காலக் கல்வி முறையினை, நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது: கண்டு மகிழ்ந்தேன். என் நூலிலும் (ஏழு நாடுகளில், எழுபது நாட்கள்) அதுபற்றிக் குறித்துள்ளேன். ஒரே பாடத்துக்கு. நான்கு ஆசிரியர் என்ற அவல நிலை அங்கில்லை. ஒரே பேராசிரியரின் கீழ், ஒரே
தெளிந்த பாடத்தினை எடுத்துக் கொண்டு, அவரிடமே முறையாகப் பயின்று, நூல் நிலையத்தினை நன்கு பயன்படுத்தி, தக்க வகையில் சில விடங்களில் ஆண்டு எல்லை கூட இன்றிப் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். அவர்தம் தெளிந்த புலமையை உலகம் வியந்து போற்றுகின்றது. இது நம்நாட்டுப் பழக்காலக் குருகுல வாக்கையினையே நினைவூட்டுகிறதன்றோ! அங்கே தமிழும் அந்த வகையிலேயே பயிற்றப்பெறுகின்றது. ‘ஒளவையார்’ பாடல்கள் ஒன்றனையே பாடமாகப் பெற்று, ஒரே ஆசிரியரின் கீழ்ப் பட்டம் பெறப் பயின்றவரை நான் கண்டேன். அப்படியே டாக்டர் பட்டம் பெறுவதும் ஆழ்ந்து பயின்று தெளிந்தாலன்றி இயலாது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தே தமிழ்நாட்டுப் பொருள் பற்றிய (worship of Sun God in Tamilnadu during nineth century) கட்டுரை ‘எம்.எ.’ வகுப்பிற்கு ஆய்வுக் கட்டுரையாக அமைய, பல தேர்வாளர்களோடு நானும் ஒருவராய் இருந்தேன். நில நூல், தமிழ், வானநூல் போன்ற பல நூல்கள் கற்ற பல துறையினர் 36 பேர் கூட்டி, அந்தக்கட்டுரையை ஆராய்ந்து, கேட்ட கேள்விக்ளுக்கெல்லாம். அந்த மாணவி பதில் அளித்தார். சிறந்த வகையில் அமைந்ததால் பட்டமும் பெற்றார்.
இங்கே டாக்டர் பட்டத் தேர்விற்கு அம்மாணவரின் மேற்பார்வையாளரே முக்கிய தேர்வாளர். அவருக்கு வேண்டிய வேறு இருவர் உடன் தேர்வாளர்கள். பின் எதை எழுதினும் பட்டம் பெறத் தடை என்ன?
எங்கள் கல்லூரியில், தமிழில் முதல் வகுப்பில் தேறிய ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். ஒரு நாள் அவரை அழைத்து, ‘வாக்குண்டாம்’ என்ற நூலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று கேட்டேன். ஆமாம் ‘வாக்குண்டாம் நல்ல மன்முண்டாம்’ என்ற பாடல் இருக்கிறது என்று யோசித்துச் சொன்னார். ஆனால் அந்த நூலைப் பற்றியோ அதன் ஆசிரியரைப் பற்றியோ அவ்ர் எழுதிய வேறு நூல்களைப்
பற்றியோ ஒன்றும் தெரியவில்லை. நல்லவேளை அவர்கள் இப்போது பணியில் இல்லை.
ஒருமுறை தேர்வாணையத்தில் கல்லூரி ஆசிரியரைத் தேர்வு செய்யும் பணிக்கு அழைக்கப்பெற்றேன். அங்கே வந்த ஒருவர் ‘எம்.ஏ.’ வகுப்பில் சைவ இலக்கியங்களைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார். எனவே நான் அவர்களை நோக்கி, முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் யார்? என்று கேட்டேன். உடனே தயக்கமில்லாமல் ‘திருநாவுக்கரசர்’ என்றார். உறுப்பினர் அனைவரும் சிரித்தனர். என் பக்கத்திலிருந்த முகமதிய உறுப்பினர் ‘ஐயா, எனக்குத் தெரிகிறதே, இவர்களுக்குத் தெரிய வில்லையே’ என்று வருந்தினார். அந்த ஆண்டு அவரைத் தேர்வு செய்யவில்லை. எனினும் அடுத்த ஆண்டு எப்படியோ இடம்பிடித்து, இப்பொழுது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இதுபோன்று எத்தனையோ சான்றுகள் காட்ட முடியும்.
தமிழில் மட்டுமின்றி பிறமொழிகளிலும் பிறபாடங்களிலும் இதே நிலையினைக் காண முடிகின்றது. எங்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு வரும் விண்ணப்பங்களைப் பார்த்தால் மயக்கம் வந்துவிடும். ஆங்கிலத்தில் சிறப்பு நிலையில் 80% மேல் எண் வாங்கிய ஒருவர் எழுதிய விண்ணப்பத்தில் குறைந்தது ஐந்தாறு சாதாரணப் பிழைகள் இருக்கும். அப்படியே தமிழ் பயின்றவர்கள் நேர்முகத் தேர்வில் சங்கப் பாடல்களில் சாதாரண கேள்விகள் கேட்கும் போதுகூட, பதில் சொல்ல முடியாது திணறுவார்கள் இத்தகைய ஆசிரியர்களிடம் பாடம் பயிலும் மாணவர்கள் எப்படி வல்லுநர்களாக-நாட்டின் பெருமையைக் கட்டிக்காப்பவராக வரமுடியும்? நாடாளும் நல்லவர் இந்த நிலையினை எண்ணிப் பார்க்கவேண்டும்.
நாட்டில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்றவற்றிற்கெல்லாம் நூற்றுக்கு 70, அல்லது 80 வாங்க
வேண்டும் என வரையறுக்கிறார்கள், ‘பி.பி.ஏ.’ போன்ற பாடங்களுக்கு 60% தேவையாகிறது. ஆனால் ஆசிரியர் படிப்புக்கோ ஒன்றும் தேவை இல்லை. பல முறை தோல்வியுற்று நூற்றுக்கு முப்பத்தைந்து நாற்பது வாங்கினால் போதும் என்ற விதி உள்ளது. ‘இது முறையோ! இது தகுமோ! இது தருமந்தானோ?’ என்று வள்ளலாரைப் போன்று வாய் விட்டு அலற வேண்டியுள்ளது.
ஆசிரியர் பயிற்சி சிறுவகுப்புகளுக்கு உரிய ஆசிரியர்களுக்கு (Sec-Grade) இரண்டாண்டுகள் இருக்க, உயர்நிலைப் பள்ளியில் பயிற்றுவோருக்கு ஓராண்டாகக் குறைத்தது ஏனோ எப்படி அந்த எல்லையில் அவர்கள் பயிற்சி பெற முடியும்? அவர்களுக்கு (Practical work) களப்பணியும் செம்மையாக நடைபெறுவதில்லை. ஜூலை கடைசியில் சேர்ந்து, பிப்ரவரி இறுதியில் முடித்து. மார்ச்சில் தேர்வு எழுதி, பட்டம் பெற்றவர் எப்படி முதிர்ந்த அறிவுடைய பவணந்தி காட்டிய ஆசிரியராக முடியும்? அதிலும் இப்போது அஞ்சல் வழிக்கல்வி முறையிலே இப்பயிற்சியைப் பல்கலைக் கழகங்கள் போட்டியிட்டுப் புகுத்தியுள்ளன. எப்படி, களப்பணியும் பாடங்கள் அறியும் நிலையும் அவர்களுக்கு அமையும். ஆகவே எப்படியோ இயந்திர சாலையில் இயந்திரங்களை உற்பத்தி செய்து அனுப்புவது போன்று பல்கலைக்கழகங்கள் பல்லாயிரவரை அனுப்பி நாட்டைப் பாழ்படுத்துகிறது. இயந்திரங்களாவது செம்மையாகச் செயலாற்றும். ஆனால் ஆசிரியர்கள்? இவர்கள் தேர்வினைத் தக்க வகையில் 70% மேற்பட்ட எண் பெற்றவராகத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டு தக்க ஆசிரியரின் கீழ்ப் பயிற்சி பெறச் செய்தால் இவர்களிடம் பயில்வோர் சிறந்து விளங்குவர். இந்த அடிப்படை இல்லை. நாட்டில் கல்வியின் தரம் ‘குறைந்து விட்டது-குறைந்து விட்டது’ என்று மத்திய அமைச்சர்கள்-மாநில முதல்வர்கள் ஆகியோர் கூறுவதில் பயனில்லை. சிகரெட்டு விளம்பரத்தை அழகாக நாளிதழில் விளம்பரப்படுத்தி, அடியில் சிகரெட்டு பிடிப்பது நோயற்ற வாழ்வுக்கும் கேடு பயப்பது’ என்று அச்சிட வேண்டும் என: அரசாங்கம் சட்டம் செய்துள்ளது. சிகரெட்டை அரசாங்கம் விரும்பினால் தடை செய்யலாம். அதைச் செய்யாது, அது பற்றி விளம்பரங்களையும் அனுமதித்து, அதன் கீழே அது தீங்கு செய்யக் கூடியது என்று அச்சிடுவது கேலிக் கூத்தாக அல்லவோ உள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்கள் எனக் கருதுகிறார்களோ எனவும் நினைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வகையில் நாட்டின் கண்ணான கல்வியினைக் காட்டும் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முதல் பணி செம்மையாக நடைபெற வேண்டும். அத்தகைய நிலை அமைந்தால்-நல்லவர்-கற்றவர்-வல்லவர்-கடமை உணர்ந்து செயலாற்றுபவர் (கை எழுத்திட்டு வேறு வேலை கவனிக்காது செயல்புரிபவர்) மாணவர் நலம் கருதி அவர் உளங்கொளப் பாடம் சொல்பவர் பவணந்தியின் இலக்கணத்துக்கு இலக்கியமாக அமைபவர் ஆசிரியர்களாக அமைவர். அவ்வாறு அமைந்தால், நாட்டுக் கல்வி உயர்நிலை பெறும் என்பது உறுதி. ஆட்சியாளர்கள் இதில் முதல் கவனம்-முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.
பல்கலைக் கழகமானியக் குழு, இந்த அஞ்சல் வழிக்கல்வி முறையினை-ஆசிரியர் பயிற்சி அளவில் எடுத்துவிடப் போவதாக அண்மையில் ஒரு செய்தி வந்தாக அறிகிறேன்: விரைவில் செயலாக்கப் பெறின் பயன் விளையும்.
மற்றொரு வேடிக்கை. கல்லூரி ஆசிரியருக்கு" எந்தவிதப் பயிற்சியும் இல்லை. நேற்றுவரை ‘எம்.ஏ.’, பயின்றவர் எம்.பில்., தேர்வு எழுதியவர், இன்று சூன் திங்களில் அந்த ‘எம்.ஏ’ அல்லது ‘பி.ஏ’. வகுப்பிற்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியராகிவிடலாம். இதை எந்த அறிவுள்ள உலகமாவது ஏற்றுக்கொள்ளுமா? எண்ணிப்பார்க்க வேண்டாமா? பின் எவ்வாறு நம் மாணவர்கள் முன்னேற முடியும்? இனியாகிலும் உள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலோ அன்றிப் புதிதாகக் கல்லூரி அமைத்தோ தனியாகக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சியினை அளித்தல் இன்றியமையாததாகும், பள்ளிகளும் கல்லூரிகளும் நாட்டில் பல்கிப் பெருகி. விட்டன. ஆனால் தரம் தாழ்ந்துவிட்டது. இதுதான் ஆளும் தலைவர்கள் உட்படப் பலரும் கூறுவது. ஏன் இந்த அவலநிலை? நான் மேலே காட்டிய இரண்டொன்று மட்டும் காரணமாக நின்றுவிடாது. இன்னும் சில உள்ளன.
இன்று எல்லாரும் கல்வி கற்க வேண்டும் என்ற அவாவினால் பலரும் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் நகரங்களிலும் - கிராமங்களிலும் கூட ஆங்கில்ப் பயிற்சிப் பள்ளிகளே அதிகமாக வளர்கின்றன. ‘வீதி’தோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி இத்தகைய பள்ளிகளைச் சொல்லவில்லை. வீட்டில் பெற்றோர்களும் மம்மி, டாடி என்று குழந்தைகள் அழைப்பதில் பெருமை கொள்ளுகின்றனர். ஆயிரக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து, நூற்றுக்கணக்கில் மாதச் சம்பளம் கட்டி, நெருக்கமான வீடுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள இப்பள்ளிகளில் பெற்றோர் தம் குழந்தைகளைச் சேர்க்கின்றனர். அங்கே உரிய பாடங்களையும் நன்கு கற்றுத் தருவதில்லை. எங்கோ ஒரு சில பள்ளிகள் தவிர, பல, வணிக நிலையங்களாகவே செயல்படுகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய பள்ளிகளில் பயின்ற பிள்ளைகளை எக்காரணம் கொண்டும், அரசாங்க இசைவு பெற்ற பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்ற உத்திரவிட்டு, அதைச் செம்மையாகப் பாதுகாக்க வேண்டும். ‘முதற்கோணல் முற்றும் கோணல்’ என்றபடி இந்த முதற் கோணலே நாட்டுக் கல்வியை நலிவு செய்கிறது. இது மாற்றப் பெறல் வேண்டும். அரசாங்கம் உடன் ஆவன செய்ய வேண்டும்.
பள்ளியில் பயிலும் மாணவரும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் அமைவதோடு அவற்றை மாணவர் நன்கு அறிந்து தெளிந்த பின்னரே மேல் வகுப்பிற்கு மாற்றப் பெறல் வேண்டும். பள்ளியில் சேர்ந்துவிட்டால் பத்தாம் வகுப்பு வரை, தன்னை யாரும் தடை செய்ய முடியாது என்ற நினைவில் பலர் படிக்காமலும் பள்ளிக்குப் பல நாள் வராமலும் வேறு வகையில் வாழ்கின்றனர். சில பெற்றோர் தங்கள் வேலைகளுக்குப் பிள்ளைகளையும் பயன்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வினை முறையாக நடத்தி நன்கு எழுதி வெற்றி பெறுபவரையே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும், எந்தவிதத் தேர்வும் இன்றிப் பத்தாம் வகுப்பு வரையில் செல்லலாம் என்ற நிலை ஒருகால் இருந்தது. நூற்றுக்குப் பதினைந்து பெற்றால் போதும்; மேல் வகுப்பிற்குப் போகலாம் என்ற நியதியும் ஒருகால் இருந்தது. இன்று அவை இல்லை என எண்ணுகிறேன். பள்ளியில் பயிலும் பிள்ளைகள் வகுப்பிற்கு ஏற்ற பாடங்களை முறையாகப் பயின்று படிப்படியாக மேலேறினால் தான் பயன் உண்டு. இந்த நிலை நன்கு வற்புறுத்தப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் (செப்-5) நடைபெறுகிறது தேர்ச்சிபெற்ற சிறந்த மாணவர்களுக்குப் பரிசுவழங்கப் பெறுகிறது. நல்லாசிரியர் விருதும் வழங்கப்பெறுகின்றது. ‘நல்லாசிரியர்’ விருது பற்றிச் சிலருக்கு மனக்கசப்பு உண்டு. இங்கே நான் அதுபற்றி ஆராயவிரும்பவில்லை. ஆனால் மாணவருக்குப் பரிசு வழங்குவது எண்ணத்தக்கது. பல பள்ளிகளில் மாணவர் தங்கள் தங்கள் பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். பல பள்ளிக்கூட மாணவர்கள் வேறுபள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதன் காரணத்தை நான் ஆராய வேண்டா. ஆனால் தம் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தாமே விடைசொல்லித் தருவதும், நூல்களைத் தந்து விடை எழுத வைப்பதும் சிலவிடங்களில் நிகழ்கின்றன. ஆனால் அதே பள்ளியில் தேர்வு எழுதும் வேற்றுப்பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாளும் உரிய வேளையில் தருவதில்லை முடியப் பத்து நிமிடம் இருக்கும் போது, எழுதத் தாள்கேட்டால், ‘நீ இனி என்ன எழுதிக் கிழிக்கப்போகிறாய்! போதும் கொடு’ என்று தடுப்பவரும் உள்ளனர். இதுபோன்ற கொடுமைகள்பற்றித் தேர்வாணையருக்கும் பெற்றோர் கடிதம் எழுதி இருப்பார்கள்.
முன்பெல்லாம் ஒரு பள்ளிமாணவர் மற்றொரு பள்ளியில் தேர்வு எழுதுவது
வழக்கம். திரு வி க. பள்ளி கிறித்துவர் கல்லூரிப் பள்ளியில் எழுதலாம். கிறித்துவர் கல்லூரிப் பள்ளி வேறுபள்ளியில் எழுதலாம். வேறு பள்ளி மாணவர் திரு.வி.க. வில் எழுதலாம். இந்த முறை கல்லூரிக்கும் பொருந்தும். நான் பச்சையப்பரில் பணியாற்றிய ஞான்று பெரும்பாலும் லயோலா கல்லூரி மாணவர் பச்சையப்பரில் எழுதுவர்.
இந்த முறை இருப்பின் மாணவர் உண்மையான திறன் கண்டு தெளியப் பெறும். இல்லையாயின் இன்று சிறந்த மாணவர்களுக்கு வழங்கும் பரிசை ‘லஞ்சமற்று’ வழங்கிய பரிசாகக்கொள்ள இயலாது. மத்திய கல்வி நிலையங்களில் வேறு பள்ளியின் தலைவர் வந்து பள்ளியின் தேர்வை நடத்துவர். அதனினும் முந்தியது சிறந்தது. வேண்டுமாயின் மாணவர் அடையாளம் காட்ட, பயின்ற பள்ளியின் இரண்டொரு ஆசிரியர் தேர்வுப்பள்ளியில் கண்காணிப்பாளராகச் செல்லலாம். ஒரு கல்லூரியில் மூன்றுமணி நேரத் தாளை நான்குமணி நேரம் எழுதவைத்ததோடு விடைகளையும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தார்களாம். எப்போதோ ஒரு முறை பல்கலைக் கழகப் பறக்கும்படை வரும். அப்போது சற்று நிமிர்ந்து விடுவார்களாம். இதுபற்றிச் சென்ற ஆண்டு பல்கலைக்கழகத்துக்குக் குறிப்புவந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்ததோ தெரியாது. எனவே, தேர்வுமுறை இந்தவகையில் மாற்றி அமைத்தாலன்றி, சிறந்த மாணவருக்குப் பரிசு வழங்கல் ஒரு கேலிக்கூத்தாகவே முடியும்.
இனி பள்ளிநடக்கும் வேளையினைப்பற்றி எண்ணுவோம். மேலைநாடுகளிலும் அமெரிக்கா ஜப்பான் மலேசியா போன்ற கீழைநாடுகளிலும் பள்ளிகள் காலை 7.30 அல்லது 8க்குள் தொடங்கி 12 அல்லது 1 மணிக்குள் முடிந்துவிடும். காலை 8 மணிக்குச் சூரியனைக் காணாத அந்த நாடுகளிலெல்லாம் அவ்வாறு விடியலில் பள்ளிகள் நடக்கும்போது, நம்நாட்டில் மட்டும் பத்துக்கு என வைத்து, நன்கு உண்டபிறகு, உறங்கும் நிலையில் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகிறோம். சென்னை போன்ற நகரங்கள் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குப் போவதால் பெரும்பாலும் அவர்கள்பணி 10க்குத் தொடங்குவதால் குழந்தைகளை அப்படியே பள்ளியில் விட்டு வேலைக்குச் செல்ல செளகரியமாகும் என நினைக்கின்றனர். நல்லவேளையாக, பஸ் நெருக்கடி காரணமாகச் சென்ற ஆண்டு காலை 8.30க்குப் பள்ளிகள் தொடங்க முடிவு செய்து இன்று நடைமுறையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நடைபெறுதல் நல்லது. .
‘வெள்ளி முளைக்கப் பள்ளிக்கும் வாரும்’ என்று விநாயகர் வழிபாட்டில் ஓரடி வருகிறது. அப்படி விடியற்காலையில் சென்று. விளக்கின்றேனும் முறையம் சொல்லும் வகையில், பல இலக்கியங்களை, வாய்பாடுகளை முறையாக ஆசிரியரோ, மற்றைய அறிந்த மாணவரோ சொல்ல, மற்றவர்கள் சொல்லுவார்கள். பின் பொழுது விடிய; அவரவர் வீட்டிற்குச் சென்று, ஒன்பது மணி அளவில் வந்து பாடங்களைப் பயில்வர். இந்த ‘முறையம்’ சொல்லும் வகையில் கீழ்வாய் இலக்கம், முதலிய கணக்குக்குரிய வாய்பாடுகள் மனப்பாடமாகின்றமையால் இன்றைய (Clerk Table) கிளார்க்டேபில் போன்றவை இல்லாமலே எத்தகைய. பின்ன கணக்குகளையும் பிறவற்றையும் மனத்தாலேயே போட்டு முடிவு எடுப்பர். அப்படியே நிகண்டு முதலியன படிப்பதால், அகராதி இன்றியே எல்லா இலக்கியங்களுக்கும் உரை காண்பர். நல்ல இலக்கியங்கள் மனப்பாடம் ஆவதால் அவர்தம் பேச்சும் எழுத்தும் சிறந்து விளங்கும். இளமையில் என் கிராமத்தில், அக்காலத்தில் (1918-24) இவ்வாறு பயின்றமை இன்றும் நினைவுக்கு வருகிறது. ஆயினும் இந்த முறை இன்று நடைபெறாது. அதுபோன்று விடியலில் எழுந்து சொல்லித்தரும் ஆசிரியரும் இல்லை; மாண்வர்களும் எழுந்து போக மாட்டார்கள். ஓரளவு இன்று வேறுபல சாதனங்கள் வந்துவிட்டமையால் மனப்பாடம் தேவை இல்லாத ஒன்றாகி விட்டது மனிதனால் செய்யப் பெற்ற கணிப்பொறி மனிதனைக் காட்டிலும் ஆயிரமாயிரம் நினைவாற்றல் உடையதாக, மனிதனுடைய வாழ்வையே தனதாக்கிக் கொள்ளும் நிலையில் நாம் வாழ்கிறோம். எனவே குருகுல வாசமும் மனப்பாடம் செய்யும் முறையும் மெல்ல மெல்ல இல்லையாகிவிட்டன.
இனி, பாடங்களைப் பற்றி ஓரளவு எண்ணலாம் என எண்ணுகிறேன்.
- கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின்
- கார்கொள்வானிலோர் மீன் நிலைதேர்ந்திலார்
- அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
- ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
- வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்
- வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
- துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
- சொல்லுவார் எட்டுணைப் பயன்கண்டிலார்
என்றுபாரதி பாடிய அதே நிலையில்தானே இன்றும் நாடு இருக்கிறது. 11+2+2 என்பதுமாறி 11+1+3 எனமாறிற்று பின் அதுவும் மாறி 10+2+3 என மாறிற்று. இப்படி வருடக் கணக்கு மாறி மாறி வருவதால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடுமா? பாடத்திட்டங்களில் என்ன மாற்றம் உண்டு? அப்படியே தமிழ் இரண்டாம் இடத்திலிருந்து முதலிடம் என்று பெயரைப் பெற்றதே தவிர ஆங்கிலம்தான் கட்டாயம் பயில வேண்டியுள்ளது. தமிழோ பிற இந்திய மொழிகளோடு, மற்றைய பிரஞ்சு, லத்தீன் மொழிகளோடு ஒரு மொழியாகவே ஒதுக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோது, இன்றைக்குச் சுமார் நாற்பதாண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் பயிலும் மாணவர் அனைவரும் தமிழைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும் என வற்புறுத்தினர். சட்டம் செய்தார். அன்று பாட நூல்களைத் தனியார் வெளியிட்டனர். எனினும் அத்தகைய பாடநூல்களை உடன் துணிந்து எழுத யாரும் முன் வரவில்லை இம்முறை என்னாகுமோ? என அஞ்சினர். அமைச்சர் என்னை அழைத்து எழுதச்சொன்னார்கள். நான் பாடநூல் எழுதுவது இல்லை என்ற கொள்கை உடையவன். எனினும் அவர் கேட்டுக்கொண்டதற்காக இசைந்து ஆறு, ஏழு. எட்டு ஆகிய மூன்று வகுப்புகளுக்குப் பாடநூல் எழுதினேன். அதனை வெளியிடத் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் விரைந்து செயல்படாதபோது, அப்போது ஆங்கிலப் பதிப்பகமாக இருந்த மாக்மில்லன் கம்பெனியே வெளியிட்டது. பின்னால் பலரும் வெளியிட்டனர்.
தமிழினைப் பொது, சிறப்பு என இருவகையாகப் பிரித்து, பொதுவினை எல்லாரும் பயிலவேண்டும் எனவும் சிறப்பினுக்குப் பதிலாக சிறுபான்மையோர் அவரவர் தாய் மொழியினையோ வேறு வேண்டிய மொழியினையோ கற்கலாம் எனவும் விதித்து அவ்வாறே ஒரு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயமாக இருந்தது. அதே வேளையில் வேற்று மொழியாளராகிய சிறுபான்மையோருக்கும் அவரவர் மொழியினைக் கற்க வாய்ப்பும் இருந்தது. ஆயினும் அதே காங்கிரசினைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் கல்வியமைச்சராக வந்ததும், அந்த முறையை எடுத்துவிட்டு, தமிழைப் பதினான்கு மொழிகளோடு ஒன்றாக்கினார். அன்றுமுதல் வரும் கல்வி அமைச்சர்கள் முதல்வர்களுடன் இதைச் செயலாக்கவேண்டும்; தமிழ் நாட்டில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் யாரும் செவிசாய்க்கவில்லை. அண்டை மாநிலங்களில் கன்னடம், மராத்தி போன்ற மொழிகள் கட்டாயமாக வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல வேளை இன்றைய முதல்வரும் கல்வி அமைச்சரும் விரைவில் தமிழைக் கட்டாயம் பயில வழிகாண ஏற்பாடு செய்வதாக
அறிய ஆறுதல் பிறக்கிறது. அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் கடிதங்கள் எழுதினேன். விரைந்து செய்வார்கள் என நம்புகிறேன். அடுத்த கல்வியாண்டிலேயே (1992-93) அது செயலாக்கப்பெறும் என நம்புகிறேன்.
பாடநூல்களை இன்று அரசாங்கமே வெளியிடுகிறது. அந்த வெளியீட்டகம் பெரிய பத்து மாடிக் கட்டடமும் கட்டிக்கொண்டு சிறக்க வாழ்கின்றது. ஆயினும் பாடங்களைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரே வகையான நூலைத்தான் படிக்க வேண்டியுள்ளது. முன்பெல்லாம்-கால்நூற்றாண்டுக்கு முன் பல பதிப்பாளர்கள்-நூற்றுக்கு மேல் இருப்பர் என எண்ணுகிறேன். மொழிப்பாடங்கள் உட்பட நல்ல பாடநூல்களை எழுதினார்கள்-வெளியிட்டார்கள். பல தெளிந்த அறிவும் மதிநுட்பமும் உடைய ஆசிரியர்கள் நூல்கள் எழுத வாய்ப்பு இருந்தது. அப்படியே பதிப்பகத்தாரும் தரமான நூல்களை வெளிக்கொணர முடிந்தது. அவற்றை ஆராய ஒவ்வொரு பாடத்திற்கும் வல்லுனர்குழுக்கள் அமைத்து, நல்லனவற்றைக் கொண்டு, அல்லனவற்றைத் தள்ளினர். பள்ளிகளிலும் நல்லனவற்றை ஆராய்ந்தெடுத்து, சிறக்கக் கல்வியினை-எல்லாப் பாடங்களையும் கற்றுத் தந்தனர். இப்போதோ ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களை ஆசிரியர் குழுக்களாக அமைத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பகுதிகளை-சிலசமயம் அரசியல் வாடை வீசுவனவாக உள்ளவற்றையும் தொகுத்துப் பாடநூல்களாகத் தருகின்றன. சில சமயம் பாடத்திட்டத்தினையும் பிறவற்றையும் சரியாகப் புரிந்து கொள்ளாது ஏதோ தொகுத்தோம் என்று பாடநூல்களைத் தொகுத்துவிடுகின்றனர். புதிய பாடத்திட்டம் (10+2) வந்தபோது ஒரு பாடத்திற்கு இவ்வாறு தவறாக அச்சிடப்பெற்ற சுமார் 40000 நூல்கள் (நாற்பதாயிரம்) தள்ளப்பெற்று வேறு புதிய வகையில் வெளியிடப்பட்டதெனக் கேள்விப்பட்டேன். (அப்போது உயர்நிலைப் பள்ளிக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்),
தனியார் வசம் ஒப்புவித்தால் சிலசமயங்களில் தவறு உண்டாகிறது என்பார் கூற்று காதில் விழுகின்றது. வேண்டியவர்கள்-அல்லது கையூட்டு அதிகமாகத் தருகின்றவர்கள் அல்லது மேலிடத்து ‘சிபாரிசு’ பெற்றவர்கள் பாடநூல்களை -அவை பிழைபட்டனவாயினும் வெளியிட ஒப்புதல் தருவதும், அத்தகைய நூல்களை அப்படியே கையூட்டு முதலியன பெற்று பள்ளிக்கூடங்களில் வைக்கப்பெறுவதும் உண்டு என்றும் சிலர் கூறுகின்றனர். நாமும் அவர்தம் கூற்றினையும் நூற்றுக்கு நூறுபொய் என்று தள்ளவும் முடியாது. பல்கலைகழகப் பாடநூல் குழுவினர் இந்த வகையில் செயல்படுகின்றனர் என்ற பேச்சு அடிக்கடி காதில் விழுகிறது. இந்த ஆண்டு ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப்பகுதி நீக்கப்பெற்று வேறு அமைக்க ஏற்பாடு செய்யப்பெற்றதை நாளிதழ்கள் வெளியிட்டன. எனவே குறை எதிலும் இல்லாமல் இல்லை. எனினும் பலவற்றுள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து நல்லன செய்து வழிகாண வேண்டுவது அரசாங்கத்தின் கடமையாகும்-இன்றியமையாததுமாகும்.
பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிப்பாடங்களைத் தொகுக்கும் பொறுப்பினைக் கல்லூரி ஆசிரியர்களிடம் விடுகின்றது. இது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கொள்வோர் கொள்கை அறிந்து, இளம் உள்ளங்கள் அறிந்து பாடங்களை அமைக்க இயலாது என்பது பலர் கருத்து. மத்திய பள்ளிகளில் 10,12 ஆகிய தேர்வு எழுதும் வகுப்புகள் தவிர்த்து முற்றைய அனைத்து வகுப்புகளுக்கும் தனியார் பாடநூல்கள் உள்ளன-தரமாக உள்ளன. எனவே பயில்பவர் சிறக்க வருகின்றனர் என்ற நிலையும் உண்டாகிறது. இதை மாற்றுவதில் தவறு இல்லை. அறிவியல் போன்ற பாடங்களை வேண்டுமாயின் அத்தகைய உயர்நிலையில் உள்ளவர் இரண்டொருவர் துணைகொண்டு வெளியிடலாம். ஆனால் மொழிப்பாடங்கள் போன்றவை பயிற்றுபவர்களில் அனுபவம் முதிர்ந்தவர்களைக் கொண்டு தொகுக்கப்பெறின் பயன் விளையும்.
அண்மையில் மத்திய அரசாங்கம் கரும்பலகைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தில் ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கோடிக்கணக்கில் வாரிவழங்கியது. தமிழ்நாட்டில் அந்தத் தொகையினைத் தக்க வகையில்-அக்குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் நூல்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சான்றுகள் காட்டிச் சில இதழ்கள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை மறுத்து அரசாங்கமோ அந்த நூல்களுக்கு உரியவர்களோ எந்த மறுப்பும் வெளியிடாத காரணத்தால் அக்குற்றச்சாட்டுகள் உண்மை என்று கொள்ளத்தானே வேண்டி உள்ளது. எனவே இத்தகைய குறைபாடுகள் இல்லாவகையில் மாணவர்தம் எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் நல்ல பாட நூல்களை வெளிக்கொணர முயலவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் அமைக்கும் பாடங்களைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் அந்தந்தத் துறைகளைத் தனியாகக் காணும்போது விளக்கலாம் என எண்ணுகிறேன்.
தாய்மொழியிலேயே கல்வி அமையவேண்டும் என்று விடுதலைக்கு முன்பே மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் எல்லாப் பாடங்களுக்கும் நல்ல தமிழ்ச்சொற்களைக் கண்டு தனித்தனி (ஒவ்வொரு பாடத்திற்கும்) அகராதி நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவோர்க்கு ஊக்கம் அளித்தார் இராஜாஜி. அதற்குப் பிறகும் ஒருமுறை இந்த வகையில் எல்லாப் பாடங் களுக்கும் தனித்தனி அகராதிகள் வந்தன. மத்திய அரசும் ஒரு மொழிக்கு ஒரு கோடி அளவில் அவ்வம் மொழியில் பாட
க—2 நூல்கள் வெளியிடுவதற்கென மானியமாகத் தந்து ஊக்கியது. பிற மாநிலங்களெல்லாம் அவற்றைச் செலவு செய்து நூல்கள் வெளியிட்டன. சில மாநிலங்கள் கொடுத்த மானியம் போதாது என்று மேலும் கேட்டன. ஆனால் தமிழகம் தனக்கென மானியமாகத் தந்ததில் பெருந்தொகையினைத் திரும்பத் தந்தது எனக் கூறக்கேட்டிருக்கிறேன். ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று மேடையில் பேசுவதே அன்றிச் செயலில் காட்டுவர் இலரே என வருந்தவேண்டியுள்ளது இன்று (I.A.S.) ஐ.ஏ.எஸ். முதலிய தேர்வுகளில் தமிழ்நாடு எங்கேயோ பின்தங்கிவிட்டது என அரசியல் தலைவர்களும் ஆள்வோரும் கூறுகின்றனர். ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று கடை இடத்தில் வரக்காரண்ம் என்ன? பாடங்களை அவ்வம் மொழியில் பயிலலாம் என்ற நிலை மற்ற மாநிலங்களில் இருப்பதோடு ஐ.ஏ.எஸ். தேர்வினையும் அவரவர் தாய்மொழியில் எழுதலாம் என்ற விதியும் உள்ளது. வடநாட்டவரும் பிறரும் இந்தியிலும் பிற மொழிகளிலும் எழுதி அவ்வம் மொழி அறிந்தவராலேயே திருத்தப்பெற்று நல்ல இடங்களைப் பெறுகின்றனர். தமிழ் நாட்டிலிருந்து ஐ.ஏ.எஸ். எழுதுகின்றவர்கள் எத்தனை பேர் தமிழில் எழுதுகின்றனர்? யார் எண்ணிப் பார்ப்பவர்?
கால் நூற்றாண்டுக்கு முன் ஐ.ஏ.எஸ். தேர்விற்குத் தமிழில் ஒருதாள் அமைக்க விரும்பியபோது, நானும் திரு தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களும் பாடத் திட்டம் வகுத்து ஒரு தாளை எழுத ஏற்பாடு செய்தோம். அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளும் நான் பின் இரண்டு ஆண்டுகளும் தேர்வாளராக இருந்தோம். மிகக் குறைவாகவே -ஒரு சிலரே எழுத முன்வந்தனர். இன்றும் அந்தத் தாள் இருக்கிறது என எண்ணுகிறேன். (தமிழ் இலக்கிய வரலாறு-மொழி வரலாறு). அதை எழுதுபவர்கள் உளரோ இல்லையோ என்பது தெரியாது.
எனவே தமிழன் பேச்சினை விடுத்துத் தாய்மொழியில் கல்வியைக் கற்றுத் தெளிந்தாலன்றி, பாரத நாட்டுப் பிற பகுதிகளோடு போட்டியிட முடியாது. இன்று தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியில் பாதிக்குமேல் தமிழ் அறியாதவர்களாகவே உள்ளமைக்கும், கோட்டையில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் பயிலாதவர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம். தில்லி மத்திய அரசாங்கத்திலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் எத்துறையில் சென்றாலும் தமிழரைப் பெரும்பாலும் காணமுடியும். அவர்களும் இங்கிருந்து செல்வோரை அன்புடன் ஏற்று ஆவன செய்து உதவினர். இன்று அங்கேயும் தமிழனைக் காண்பதரிது. ஏன் இந்த அவல நிலை? இதைத் திருத்த வேண்டாமா?
நான் ஆங்கிலத்தையோ இந்தியையோ வேற்று மொழியையோ நம் மாணவர் கற்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ‘தாய்க் கொலைச் சால்புடைத்து என்பாரும் உண்டு’ என்று முன்னைப் பெரியவர்கள் கூறியது போன்று தாய்மொழியைக் கொலைசெய்துவிட்டு வேற்றுமொழியினை ‘ஓம்பு’தல் தவறு எனவே சுட்டிக்காட்டினேன். தமிழோடு எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்கலாம் தமிழன் அத்துணை அறிவும் ஆற்றலும் திறனும் பெற்றவன். இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தமிழுக்குத் தமிழ்நாட்டில் முதலிடம் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்! இது புதிதன்று. இப்படியே பல மாநிலங்களில்-உலகில் பல நாடுகள் உள்ள நிலையினை அறியவேண்டும்.
தமிழ்நாட்டில் ஒருசில ஆண்டுகளுக்குள் ஆங்கிலம் பயிற்றுவிக்க அடிக்கடி விதிகள் மாற்றப்பெற்றன. ஒருமுறை ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் தொடங்கினால் போதும் என்றும், ஒரு முறை மூன்று அல்லது நான்காம் வகுப்பில் தொடங்கினால் போதும் என்றும் அரசு ஆணையிட்டதாக அறிகிறேன். அந்தக் காலத்தில்தான் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மூலைக் கொன்றாகத் தோன்ற ஆரம்பித்தன. அந்தோ ஆங்கிலம் இல்லையா? என்று ஒன்றும் அறியாக் கிராமவாசிகள் உள்பட, ஆங்கிலப் பள்ளி எங்கே எங்கே என்று தேடி அவற்றுள் தம் பிள்ளையைச் சேர்க்கப்பாடுபட்டனர். இன்று கட்டுப்பாட்டுக்கு அடங்கா வகையில் அது பெருகி விட்டது. அவற்றை முறைப்படுத்துவதும் பெற்றோர்களைத் தெளிவுபடுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வகையில் 10ஆம் வகுப்பு வரையில் பலப்பல வகையில் பள்ளிகள் அமைந்துள்ளன. அரசாங்க இசைவு பெறாத குழந்தைகள் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன. பின் ஆறு முதல் பத்து வரையிலும் எத்தனையோ வேறுபாடு! மானியம் பெறும் எஸ்.எஸ்.எல்.சி எனும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், கீழ்த்திசைப் (Oriental) பள்ளிகள், மத்தியப் பள்ளிகள், தில்லி கிறிஸ்தவ சங்கம் நடத்தும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனப் பலவகையில் பள்ளிகள் நடைபெறுகின்றன. முதலது அரசாங்க முழு மானியம் பெற்று நடைபெறுவது. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலோ பாடத்திட்டம்-மொழித் திட்டம் மிகக் குறைவாக உள்ளது. கீழ்த்திசைப் பள்ளிகளும் அவ்வாறே. மத்தியப் பள்ளிகளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஆங்கிலத்தையே பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. சில மத்தியப் பள்ளிகளில் இந்தி பயிற்சி மொழியாக இருக்கலாம். இப்படித் தமிழ் நாட்டு இளஞ்சிறுவர்கள் பயில இடர்ப்படும் கல்வி நிலை தேவைதானா? அன்று ஆங்கிலேயன் ஆண்டகாலத்தில் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், அம்மரபினரைச் சார்ந்த குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இன்று அந்த மரபினர் தமிழ் மரபினரோடு ஒன்றிவிட்டனரே! மேலும் அப்பள்ளிகளில் 100க்கு 95க்கு மேல் மற்றவர்கள் தானே பயில்கின்றனர். ஆசிரியர்களும் அப்படியே. சிறுபான்மை கருதியோ வேறு காரணத்தாலோ அன்று ஆரம்பித்தாலும் அத்தகைய நிலை இன்று இல்லையே! சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் அனைத்தும் அந்த நிலையில் தானே உள்ளன. சிறுபான்மை நிலையங்களில் 100க்கு 90க்கு மேல் மற்றவர்கள்தானே பயில்கின்றனர். கிறித்தவப் பள்ளிகளிலும் சிறுபான்மையோர் நடத்தும் பிற பள்ளிகளிலும், அடிப்படையில் அமைந்த சிறுபான்மையோர் பள்ளிகளிலும் பயில்வோருள் 100க்கு 90க்கு மேல் அவ்வச் சிறுபான்மையைச் சாராதவர்கள்தாமே பயில்கின்றனர். இவற்றைச் சிறுபான்மையோர் கல்விச்சாலைகள் எனக் கொண்டு தனிச் சலுகைகள் அளிப்பது எப்படிப் பொருந்தும்? அவர்களே பெரும்பான்மையிராகவோ முற்றுமாகவோ பயின்றால் தனிச்சலுகைகள் தேவையே! அரசியல் சாசனத்தில் இதற்கு விளக்கம் தரப்பெறுதல் வேண்டும்.
எங்கோ சென்று விட்டேன். மன்னிக்கவும். தமிழ் நாட்டில் இவ்வாறு பலவகைக் கல்விகள் தொடக்கநிலையில் இருப்பது தேவைதானா! ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளி களில் பயிலும் மாணவர் தாமே உயர்ந்தவர் என்று கருதித் தனிச் சாதியாக வளர்கின்றனர். உள்ள வேறுபாடு போதாது என்று இந்தப் புதிய வேறுபாட்டினை அரசாங்கமே உண்டாக்க வேண்டுமா? கல்வித்துறை நிர்வாகிகளும் அமைச்சகமும் கருத்திருத்தி உடன் இதற்கு மருந்து காண வேண்டும். கல்வியை மாநில எல்லையிலே கொள்ள வேண்டுமேயன்றி, மத்திய அரசுடன் இணைத்தல் தவறாகும். இதை உணரும் நாளே நாட்டில் உண்மையான கல்வி மலரும் நாள். தமிழ்நாட்டு அரசாங்கம் உடன் தீவிரமாகச் சிந்தனை செய்து தொடக்கக் கல்வி நிலையில் (10ம் வகுப்பு வரை) இத்தனை வேறுபாடுகள் இல்லையாகச் செய்யவேண்டும். இளம் பிஞ்சு உள்ளங்களில் கற்கும்போதே மாற்று எண்ணங்களை-வேறுபாட்டு உணர்வுகளை வளர்க்கும் கல்வி முறை களையப்படல் வேண்டும். இன்றேல் நகத்தால் கிள்ளுவதை விட்டுப் பின் கோடரி கொண்டு வெட்ட வேண்டிய நிலை உண்டாகும். இந்த அடிப்படை மாற்றம் செய்யாது, எத்தனை ஒருமைப்பாடு மாநாடுகள் கூட்டினாலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வரிசை வரிசையாக நிகழ்ச்சிகள் அமைத்தாலும் பயன் விளையாது. ஆரம்பக் கல்வி பற்றியும் பிற நிலைகளைப் பற்றியும் உயர்நிலைக் கல்வி நிலை முதலியன பற்றியும் அவ்வத் தலைப்புகளில் பிறகு ஆராயலாம்.
நம் நாட்டில் நன்கு பயின்று சிறக்கப் பட்டம் பெறுபவர் நம் நாட்டில் தங்காது பிற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றார்களே என்று பெருந்தலைவர்கள் உள்படப் பலர் வருந்துகின்றனர். அண்மையில் நம் தமிழக முதல்வர் கூட அத்தகைய கருத்தினை ஓரிடத்தில் பேசியுள்ளார்கள் என அறிகிறேன். அதற்கு அடிப்படைக் காரணத்தை ஆராயவேண்டும். நான் 1985இல் மேலை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சென்ற காலை அங்குள்ளவர்களை இதுபற்றிக் கேட்டேன். பல நல்ல மருத்துவர்கள் (Doctors) பொறியியலாளர்கள் (Engineers)-பிற துறைகளில் வல்லுநர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்-அங்கங்கே சிறக்கச் செயல் புரிந்து அவ்வந் நாட்டை வளப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் ‘தாய்நாட்டை விட்டு ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் கூறிய பதில்கள் ஏறக்குறைய ஒரே முடிவினைத் தருவதாகவே உள்ளன. ‘நாங்கள் இங்கே நிறையவே சம்பாதிக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டை விட்டு வர மனமில்லைதான். இங்கே சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பாகம் அங்கே சம்பாதித்தாலும் போதும்; மன நிறைவோடு வாழ்வோம். இங்கே அறிவுக்கு, திறனுக்கு, ஆற்றலுக்கு, ஆக்க வழிக்கு உழைக்கும் உழைப்புக்கு முதலிடம் தருகிறார்கள். அங்கேயோ-தமிழ் நாட்டில் வேண்டியவர்களுக்கு, கையூட்டு தருபவர்களுக்கு தன் சொந்தக்காரனுக்கு-ஜாதிக்காரனுக்குத் தானே முதலிடம். அவர்களுக்கே பதவி உயர்வு, பிற எல்லாச் சலுகைகளும் தரப்பெறுகின்றன என்று நைந்து புலம்புகின்றனர். அவர்கள் திறனால் அங்கே எத்தகைய அற்புதகங்கள் நிகழ்கின்றன. அவர்கள் எல்லாம்-பொறியாளர்கள்-மருத்துவர்கள்-நோபல் பரிசு பெற்றவர்கள்-பேராசிரியர்கள்-பிற துறை வல்லுநர்கள்-இங்கே தமிழ்நாட்டில் இருந்தால் நாடு எவ்வளவு முன்னேறும் என எண்ணி நான் வருந்திய நாட்கள் பல. என் நூலில் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) இது பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டியுள்ளேன். இங்கும் பலர் உள்ளனர். அவர்கள் குமுறலோடு வேலை செய்வதையும் அறிவேன். அதனால் பல துறைகளில் வேலைகள் மந்தமாவதோடு முறையற்றதாகவும் அமைகின்றன. கல்வித் துறையிலேயே முறையாக மேலே வரவேண்டிய ஒருவரைத் தள்ளி வேறொருவரை உயர்த்தியதை அவர் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விடுகிறார் எனக் கேள்விப்படுகிறேன். இந்த நிலை, நாட்டில் நீங்கினால் ஒழிய, ஆயிரம் கோடி கோடியாக நாம் கல்விக்குச் செலவிடும் தொகை யாருக்கோ தான் பயன்படுவகையில் அமையும், இதை நம் நாட்டு அரசு நன்கு எண்ணி, தக்கதின்ன தகாதன இன்ன என்று ஆய்ந்து செயல்படல் நன்று.
நாற்பத்தைந்தாண்டுகளுக்குமுன் கல்வித் துறை மாவட்டக் கழகத்தின்கீழ் நன்கு செயல்பட்டு வந்தது. ‘District Board’ என்றும் ‘Taluk Board’ என்றும் மாவட்டங்கள், வட்டங்கள்தொறும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயல்புரிந்தன. கல்வி, சுகாதாரம், சாலை போன்ற முக்கிய துறைகள் அக்கழகத்தின் வசம் இருந்தன. அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் நாற்பது அல்லது ஐம்பது கிராமத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் சிறு அளவில் உள்ள தம் எல்லையினை அடிக்கடி பார்வையிட்டு, மக்கள் தேவை அறிந்து திங்களுக்கு ஒரு முறை நடக்கும் கழகக் கூட்டத்தில் அத்தேவைகளை வற்புறுத்தி மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்துவந்தனர். அதிகாரம் இவ்வாறு பரவலாக இருந்ததோடு, உறுப்பினரும் தம் எல்லையைச் சார்ந்தவராக இருந்ததால் மக்களும் அவர்களிடம் விரும்பிச் சென்று தத்தம் குறைகளை முறையிடுவர். மற்றும் ஊர்தொறும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறக்கப் பணியாற்றுகின்றனரா என மேற்பார்வை பார்க்கவும் வசதியாக இருந்தது. வைத்திய வசதிகளும் சாலை வசதிகளும் அவ்வாறே போற்றப்பட்டன. கல்வித்துறை நெறியில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்ட ஆய்வாளர்களின் நேர்முகப் பார்வையோடு, அம்மாவட்டக் கழக உறுப்பினர் அடிக்கடி பள்ளிகளைப் பார்வையிட்டு வந்தமையின் பள்ளிகள் முறையாக நடைபெற்றன எனலாம். கல்லூரி தவிர்த்து மற்றைய எல்லாப் பள்ளிகளும் இவர்கள் மேற்பார்வையிலேயே இருந்தன.
இன்றோ இந்த நிலை இல்லை. பஞ்சாயத்து ஒன்றியங்கள் என்று பெயரளவில் இருப்பினும் அதன் எல்லை விரிந்துள்ளமையின் தனி உறுப்பினர் நேர்முகப் பார்வை அருகிவிட்டது. முன் இருந்தமை போன்று ஒன்றியத்துக்கென, கல்வியைக் கவனித்துப் போற்ற, தனிக் கல்வி அலுவலகமும் கிடையாது. அரசியல் சூழலால் அடிக்கடி இந்த ஒன்றியங்களும் கலைக்கப் பெறுகின்றன. எனவே ஊர்தோறும் கல்வியில் முன்னேற்றம் காண முடியவில்லை எங்கிருந்தோ ஆய்வாளர்-முன் அறிவிப்புடன் வரும்போது எப்படியோ வகுப்புகளைச் சரிகட்டிக் காட்டிவிட்டுப் பல நாள் மூடிக் கிடக்கும் பள்ளிகள் பல உள. தனியாசிரியர் பள்ளிகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. தக்க நல்லாசிரியர்களும் தற்காலத்தில் கிடைப்பதரிது. எனவே கிராமப் பள்ளிகளில் நல்ல முறையில் கல்வி அமைய வேண்டுமாயின் நெருங்கிய தொடர்புடைய நல்லவர் குழுக்கள் தேவை. இங்குள்ள பிற நிலைகளைப்பற்றிப் பின்பு தனியாகக் காணலாம்.
வயது வந்தோருக்கு எனக் கல்வி கற்பிக்கும் முறை நாட்டில் போற்றப்பெறுகின்றது. அதற்கெனக் கோடிக் கணக்கில் மத்திய அரசும் மாநில அரசும் போட்டியிட்டுக் கொண்டு செலவு செய்கின்றன. பல தனியார் நிறுவனங்களும்கூட ஓரளவு உதவுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் செலவுக்கு ஏற்ற பயன் விளைவதில்லை. ஏட்டுக் கணக்கினை நாட்டு நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்பின் உண்மை விளங்கும். தற்போது புதிய வேகத்தில் மாவட்டந்தோறும் இந்த முயற்சி செயலாக்கப்பெறுகின்றது. ‘எழுத்தறியார் இந்த மாவட்டத்தில் இல்லையாகச் செய்வோம்’ என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் அவரைச் சார்ந்தோர்களும் முயல்கின்றனர். எனினும் மக்கள் ஒத்துழைப்புத் தேவை. அதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும். எல்லாரும் கற்றோரே என்ற நிலை நாட்டில் மலரின் அந்தநாள் நன்னாளாகும் என்பது உண்மை! ஆனால் அந்நாள் என்று வருமோ!
இலவசக் கல்வி பற்றியும் சற்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஆரம்பப்பள்ளி வகுப்புகள் ஐந்தாம் வகுப்புவரை எங்கும் இலவசமாகவே இயங்கின. ஒருசில தனியார்-கிறித்தவர் பள்ளிகள் போன்றவை மிகக் குறைந்த அளவில் சம்பளம் பெற்றன. பள்ளியில் மத்திய வகுப்புகளிலும் (6, 7, 8) மேல் வகுப்புகளிலும் (9, 10, 11) மிகக் குறைவாகவே சம்பளம் பெற்றனர். கல்லூரிகளிலும் அப்படியே. இன்று மேநிலைப்பள்ளி வரையில் கல்வி இலவசமாக்கப்பெற்றுள்ளது. ‘இது தேவைதானா’ என்ற வினா பலர் உள்ளத்தில் எழுகின்றது. ஏழைகளுக்கு உதவ அன்றும் சென்னைக் கல்வி விதிகளில் 72இல் தனிவிதி இருந்தது. அக்குறைந்த சம்பளத்தையும் அவர்கள் கட்டவேண்டியதில்லை. அப்போது இருந்த தரம் இன்று கல்வியில் இல்லை. பல பெற்றோர் பணம் செலவில்லையாதலால் பிள்ளைகள் படிப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாடெங்கும் இலவசப் பள்ளிகள் இருக்கும்போது, நூறும் இருநூறும் மாதச்சம்பளமும் பெற்று, சேர்க்கும்போது சில ஆயிரங்களும் நன்கொடை வாங்கும் பிற பள்ளிகள் வளர்வதற்குரிய காரணத்தை எண்ணிப் பார்க்கவேண்டும். பல ஏழைகளும் கூட, பிற செலவுகளைக் குறைத்துக்கொண்டு சம்பளம் கட்டும் பள்ளிகளுக்கே பிள்ளைகளை அனுப்பக் காண்கிறோம். ‘எனவே இலவசக் கல்வி எனில் தரம் குறைந்தது’ என்று மக்கள் நினைக்கும் அளவுக்குத் தனியார் மானியம் பெறும் பள்ளிகளும் அரசாங்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. ஒரு வகுப்பிற்கு 40 அல்லது 45 என்பதுபோக 75 அல்லது 80 வரை மாணவரை அடைத்துவைக்கும் அவல நிலையினைச் சில பள்ளிகளில் காண்கிறோம். சூன் மாதம் தொடங்கிய பள்ளிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேவையான ஆசிரியரை அனுப்புகின்ற அரசாங்க விதிமுறைகளும் உள்ளன. ஆசிரியர்களும், முன்னைவிடப் பல மடங்கு-எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு-சம்பளம் வாங்குகிறார்கள். என்றாலும் பிள்ளைகள் கல்வியில் போதிய கருத்தினைச் செலுத்தவில்லை எனப் பெற்றோர்களும், தலைவர்களும், ஆளுநர், அமைச்சர் போன்றார்களும் சொல்லுகின்றனர். எனவே ஏழைகளுக்கு எனத் தனிச் சலுகை அளித்துச் சம்பளம் இல்லையாக்கி, இன்றைய நிலைக்குத் தேவையான சம்பளத்தை ஓராம் வகுப்பு முதல் வரையறுத்து வசூல் செய்தால் பணம் கட்டும் பெற்றோர்க்கும் அக்கறை உண்டாகும். அரசின் கண்காணிப்பும் அதிகமாக்கப்பெறல் வேண்டும். தொடக்கக் கல்வியும் அடுத்த உயர்நிலைக் கல்வியும் தரம் உயர்ந்து தக்க வகையில் மாணவருக்கு அளிக்கப்பெற்றால்தான் பின் கல்லூரிக் கல்வியில் தெளிவும் தரமும் காணமுடியும். எனவே அதிகக் கண்காணிப்பும் கண்டிப்பும் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளுக்குத் தேவையானவை. இலவசக் கல்வியுடன் அரசியலும் இணைக்கப் பெற்றிருப்பதால் என் கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எனினும் உள்ள நிலையினைத் தெள்ளத்தெளியக் காட்டவே இதைக் குறித்தேன்.
இப்படியே இலவச பஸ் பாஸ் வழங்கலும். இது வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை. பெரும்பாலும் பள்ளிப் பிள்ளைகள் தத்தம் வாழிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே இடம் பெறுகின்றனர். சம்பளம் வாங்கும் பள்ளிகளில் பெரும்பாலன உந்துவண்டிகள் கொண்டுள்ளன. எனவே இந்த நிலை தேவையற்றது. இதனால் தேவை இல்லாதவர்கள்கூட இரண்டொரு நிறுத்துமிடமாயினும் அதன் முற்றிய எல்லை வரையில் இலவசச்சீட்டு வாங்கி உந்து வண்டிகளில் நெரிசலை உண்டாக்குகின்றனர். மேலும் இதைத் தயாரிப்பதற்கும் தகவல்கள் சேர்த்து அனுப்புவதற்கும் போக்குவரத்து அலுவலகமும் ஒவ்வொரு பள்ளியும் பெறும் அல்லலும் அவதியும் எழுத முடியா! பல பள்ளிகளில் இதனால் முறையான வேலையும் தடைப்படுகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் உடன் வாங்கித் தரவில்லையே என வாதிடும் நிலையும் உண்டாகிறது. இப்படித் தேவையற்ற வகையில்-அரசியல் பின்னணியில் அமையும் சில செயல்களைப் பற்றி அதிகம் எழுதாமல் இருப்பதே நலமென எண்ணுகிறேன்.
இதுவரை கூறியவாற்றால் தமிழகக் கல்வியின் முந்திய ஏற்றம், இடைக்காலப் பின்னடைவு, இன்றைய குறைகள், பள்ளிகளின் வகைகள், பிறநாட்டு நிலையில் கல்வி அமைப்பு முதலியவற்றை ஓரளவு சுட்டிக் காட்டினேன். நீக்க வேண்டியவை பற்றியும் ஆக்க வேண்டியவை பற்றியும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தமிழகம் முன்போன்று முன் நின்று உயர்நிலை பெறுதற்கும் வழித்துறைகளை ஓரளவு சுட்டிக் காட்டினேன். இனி ஒவ்வொரு துறையினையும் தனித்தனியே கொண்டு அததில் உள்ள நலக்கேடுகளையும் தேவையான திருத்தங்களையும் பிறவற்றையும் பற்றி ஆராயலாம் என எண்ணுகிறேன்.
மேலும் ஆசிரியர் நிலை, மாணவர், பெற்றோர் நிலை, நாட்டு நடப்பு, அரசாங்கத்தின் கடமை போன்றவற்றையும் உடன் எண்ணிப் பார்த்தலும் ஏற்புடைத்தாகும் என நினைக்கின்றேன். தொடர்ந்து நாட்டுக் கல்வி நலம் பெற்று, உலக அரங்கில் நம் பாரதமும் சிறப்பாகத் தமிழகமும் உயர்வெய்தி உலகோர் போற்றும் நிலை எய்தவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இனி வருவனவற்றை எழுத நினைக்கிறேன். ஒருவரையும் குறைசொல்லுவதற்கென்றோ குற்றம் சாட்டுவதற்கென்றோ வேறு பழிபடர்நிலையிலோ நான் இவற்றை எழுதவில்லை. ‘ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்’ என்ற அடிப்படையில் நாட்டு நலன்-அதன் கண்ணாகிய கல்வி-அதை மக்களுக்கு அளிக்கும் மரபும் முறையும்-இவை பற்றியே என் எண்ணமும் எழுத்தும் பற்றிப் படரும் எனக்கூறி மேலே செல்லுகின்றேன்.
நம் நாட்டுக் கல்வி வளராமைக்கு இந்திய அரசாங்கம் அமைத்த கல்வி ஆய்வு பற்றியும் திருத்த வேண்டிய முறை பற்றியும் விளக்க அமைத்த குழுவின் அமைப்பாளர் திரு. இராமமூர்த்தி அவர்தம் முன்னுரையில் கூறியவற்றை அப்படியே உங்கள் முன்வைக்கிறேன்.
One fundamental reason for failure has been that while we go on making radical protestations, our education to this day continues to be governed by the same assumptions, goals and values that governed it in the days of the British Raj. The British believed in the ‘downward filtration theory’ under which education and culture would inevitably flow from the classes to the masses. They kept the common people away from education. and education away from life. But things have not much changed since they left. Even today the principal beneficiaries of our education are the upper and middle classes. To them also we give a wrong education. Our formal system remains confined to the four walls of a school or college. It is tied down to text books and examinations. Even then the books are unreadable and the examinations totally unreliable, The courses of study are so framed that the students are not equipped with any productive skills. Whatever education they receive cuts them off from their natural and social environment. They become aliens to their own community. They lose faith in life itself what Jayaprakashji wrote in 1978 still holds true. According to him ‘it also converts them into a parasitic class which perpetuates and even intensifies the poverty of the masses. The system has failed to promote individual growth. It also becomes more of a hindrance than a help to bring about an egalitarian transformation’. If this be true, can we say that we have basically departed from the Macaulay tradition? And, if this is what our education has done to us, one may well ask, is not no education better than bad education?
One may admit—that for this situation education alone is not responsible, During the last forty-three years we have pursued a model of economic development that has led to the creation of two Indias—one of the rich, the other of the poor. A new privileged class has come into being. It holds monopoly over political and economic power and sources. of wealth. It controls culture and education. It is firmly established every where. It is this class whose interests our education is made to serve. The result is that as in economy so in education, two parallel systems have come into being– one for the rich, the other for the poor. No wonder, a divided education finds itself totally devitalised, and incapable of meeting the challenges of independent India's national life. To the rise and growth of this class, holding sway over the whole range of national affairs, can be traced most of the ills we are faced with— the erosion of social and moral values, weakening of democracy, the partisan character of our development, corruption and a number of other elitist aberrations. It is responsible for the impoverishment of the nation's very soul. It is, therefore time the nation, most of all education, took serious note of this phenomenon, and guarded against further damage to national life.
Report of the committee for Review of
National Policy of Education—1986
— Pages - V & VI
உயர்ந்தோர் கருத்தறிந்து உற்றதைச் செய்யின் உய்தி உண்டு. தக்கவர்-அரசாங்க நெறியாளர் உடன் ஆம்வு செய்வார்களா
- வெள்ளத்தால் போகாது வெந்தணலால்
- வேகாது வேந்தராலும்
- கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
- நிறைவொழியக் குறைபடாது
- கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ
- மிகஎளிது கல்வி என்னும்
- உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம்
- பொருள்தேடி உழல்வதேனோ!
- வெள்ளத்தால் போகாது வெந்தணலால்