கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்/007
5. கல்வெட்டில் காணும்
ஊர்ப்பெயர்கள் மூலம்
நாம் அறியும் செய்திகள்
கல்வெட்டுகள் நாட்டின் பண்டைய வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நடைபெற்ற போர்கள் ஆகியவற்றை அறிய துணைபுரிகின்றன என்றும், பழங்காலத்தில் செய்யப்பெற்ற தானங்கள், அறச்செயல்கள் போன்றவற்றையும் அக்கல்வெட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் நாம் முன்னமே கண்டோம். இத்தகவல்களை நாம் அறிய நமக்குத்துணை புரிவனவற்றுள் அக்கல்வெட்டுகளில் இடம் பெறும் ஊர்ப்பெயர்களும் ஒன்று. இவ்வூர்ப்பெயர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருவதால் அக்கால வரலாற்றை, நடை முறையைத் தெள்ளத் தெளிய உணர்த்துகின்றன.
கல்வெட்டில் காணப்பெறும் ஊர்ப்பெயர்களையடுத்து தேவதானம், பள்ளிச்சந்தம், திருவிடையாட்டம், தேவதானப் பிரமதேயம், பிரமதேயம், சதுர்வேதிமங்கலம், மங்கலம், அகரச்சீர்மை, அகரப் பிரமதேயம் போன்ற சொற்களும், தொடர்களும் முன்னும் பின்னும் காணப்பெறுகின்றன. இவையெல்லாம் நமக்கு உணர்த்தும் தமிழர் வரலாறு ஆய்ந்து, உணர்ந்து, பெருமிதம் அடையத்தக்கவை.
பண்டைக்கால அரசர்கள், அரசிகள், அரசு அலுவலர்கள், வள்ளல்கள் ஆகியோர் தானங்கள் செய்வதையும், பிற அறச்செயல்கள் செய்வதையும் தமது தலையாய வாழ்க்கைச் செயல்களில் ஒன்றாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். கோயில்களுக்குத் தானங்கள் அளித்தனர். நிலங்களாக, பொருள்களாக, ஊர்களாக அளித்தனர். கோயில்களில் உள்ள கடவுளர்களுக்கு, அதாவது கடவுளர்களுக்கு நடைபெற வேண்டிய அன்றாட வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் போன்ற சிறப்பு வழிபாடுகள் தவறாமல் நடைபெற தானங்கள் செய்தனர்.
அதைப் போலவே சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்த, கடவுளர்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டு வந்த அந்தணர்களுக்கும் நிலங்கள், ஊர்கள் இவற்றைத் தானமாக அளித்தனர். அவ்வாறு கடவுளர்களுக்கும், அந்தணர்களுக்கும் தானமாக அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி தவிர்த்து, அவற்றை இறையிலி ஆக அளித்தனர் அரசர்கள். நான்மறையில் வல்ல அந்தணர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் அமைத்துத் தந்தனர். அதன் மூலம் நான்மறையில் வல்லமை பெற வழி வகுத்தனர். கடவுளர் வழிபாடுகள் தவறாமல் நடைபெறச் செய்தனர்.
அந்தணர்கள் மட்டும் அன்றி பல சாதியினரும் தத்தமக்கெனத் தனித்தனிக் குடியிருப்புகளைக் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதையும் கல்வெட்டில் காணும் ஊர்ப்பெயர்கள் நமக்கு அறிவிக்கின்றன.
மேலும் மடம், சத்திரம் போன்றவற்றிற்கும், துறவிகளுக்கும் தானம் அளித்தனர். இத்தகைய தானதருமங்களேயன்றி, மன்னர்களின் போர்ச் செயல், வெற்றி ஆகியவற்றையும் நாம் அறிய முடிகிறது. மன்னர்கள் மட்டுமன்றி தனி நபர்கள் புரிந்த வீரச்செயல் போன்ற அவர்களின் வாழ்க்கைக் கூறுகளையெல்லாம் நாம் அறிகிறோம்.
தேவதானம்: கோயில்களுக்கு, அதாவது கடவுளர்களை வழிபடும் செயல் தடையின்றி நடைபெற நிலங்கள், ஊர்கள் தானமாக அளிக்கப் பெற்றன. அவ்வாறு கோயில்களுக்கு அளிக்கப் பெற்ற தானங்களில் சிவன் கோவில்களுக்கு அளிக்கப் பெற்ற நிலங்கள் தேவதானம் என்னும் பெயரால் குறிக்கப்பெற்றன.
திருவோத்தூருடைய நாயனார் தேவதானம் ஆன திருவோத்தூர்[1]
இன்னாயனார் தேவதானம் ஆலச்சுக்குடி[2]பொதுவாகக் கோயிலில் வழிபாடு நடைபெற வழங்கப் பெற்ற தானத்தைப்போல பூசைசெய்தல், விளக்கெரித்தல், விசேஷ உற்சவங்கள் நடத்தல் போன்ற குறிப்பிட்ட செயல்களுக்காகவும் தானங்கள் வழங்கப் பெற்றன.
(அ) கோயிலில் விளக்கெரிய செய்யப்பட்டதானம் திருக்கா மஞ்சூர் ஊரார் விளக்கெரிய நெய்தானம் செய்துள்ளனர்.[3] திருவிளக்குப்புறமாக திருநாமத்துக் காணியான தேவதானம் தச்சன் தாங்கல்[4]
(ஆ) மகர சங்கிரமண தினத்தன்று விசேஷ உற்சவம் நடத்த வீரராகவப் பெருமாளுக்கு மகர சங்கிரமண தினத்தன்றைக்கு விசேஷ உற்சவம் நடத்துவதற்காகத் தலகாஞ்சேரி என்னும் கிராமத்தில் ஆயிரம் குழி நிலம் தானம் செய்துள்ளனர்.[5]
பள்ளிச்சந்தம்
ஜைன பௌத்தப் பள்ளிகளுக்கு அளிக்கப் பெற்ற தானம் பள்ளிச்சந்தம் என்னும் பெயரால் குறிக்கப்பெற்றன. இராஜராஜனின் தமக்கையராகிய குந்தவைப் பிராட்டியார் வைகைத் திருமலையில் ஒரு ஜினாலயம் அமைத்ததாகவும், அது குந்தவை ஜினாலயம் என்று பெயர் பெற்றதாகவும் தெரிகிறது.[6]
“முகைநாட்டுப் பள்ளிச்சந்தம் வைகலுர்த் திருமலை ஸ்ரீ குந்தவை ஜிநாலயத்து தேவற்குப் பெரும் பாணப்பாடிக் கரை வழி மல்லியூர்”[7] என்ற செய்தியும்;
“திருப்பருத்திக்குன்றில் நாயனார் செம்பொற் குன்றாழ்வார் பள்ளிச்சந்தம் காலியூர்க் கோட்டத்து விற்பெட்டு நாட்டு காண்ணிப்பாக்கம் நெடுநாள் செல்லாதே இதனைத் தியாக சமுத்திரம் பட்டையாரான விமரைசர் ராஜராஜ தேவர்க்கு யாண்டு பதினெட்டாவது முதல் இதை நாயனார்க்குப் பள்ளிச்சந்தமாக விட்டார் காண்ணிப்பாக்கம் விமரைசர்”[8] என்ற செய்தியும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.ஊருடையான் பள்ளி, சரப்பள்ளி போன்ற கல்வெட்டு ஊர்ப்பெயர்கள் பள்ளிகள் இருந்தமையை நமக்கு அறிவிக்கின்றன.
திருவிடையாட்டம்: வைணவக் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானம், நிலங்கள் திடையாட்டம் என்ற பெயரால் குறிக்கப்பட்டன.
“......ஆக இன்னான் கெல்கைக்குட்பட்ட பற்றில் உடையார் திருக்குற்றாலமுடைய நாயனார் தேவதானமும் உடையார் விக்கிரம பாண்டீஸ்வரமுடைய நாயனார் தேவதானமும் நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடையாட்டமும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவிடையாட்டமும் பராக்கிரம பாண்டிய நல்லூரில் நயினார் திருவேங்கடநாதன் திருவிடையாட்டமும் முகந்தானத்து நாராயண ஸ்ரீபாதங்கள் மடப்புறமும் அகரப்பற்றும் நீங்கலாக இன்னான் கெல்கைக்குட்பட்ட பற்றும்” என்ற பராக்கிரம பாண்டிய தேவனின் இருபத்தெட்டாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுத்தொடர் இதற்குச் சான்று (T. A. S. vol. I. No. 11 கி.பி. 1451)
பிரமதேயம்
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்துவந்த அந்தணர்களுக்குத் தான தருமங்கள் செய்வதைப் பெரும் புண்ணியமாகக் கருதிய நம் பண்டைய மன்னர்கள் நிலங்களையும், ஊர்களையும் அங்கங்கே அந்தணர்களுக்குத் தானமாக அளித்தனர். அவ்வாறு பிராமணர்களுக்கு அளிக்கப் பெற்றவை பிரமதேயங்கள் எனப் பெயர் பெற்றன. அப்பிரமதேயங்களை வரிநீக்கி இறையிலியாக அளித்தனர்.
செற்றுர்க் கூற்றத்துப் பிரமதேயம் நாலூர்
பிரமதேயம் மகேந்திர மங்கலம்
தேவதானப் பிரமதேயம்
கோயிலுக்கென அளிக்கப்பெற்ற தேவதான நிலங்கள், ஊர்கள் இவற்றின் வருவாயிலிருந்து ஒரு பகுதியைப் பிராமணர்களுக்கு அளிக்கும் நடைமுறையும், அதே போல பிராமணர்களுக்கென அளிக்கப்பெற்ற பிரமதேயநிலங்கள், ஊர்கள் இவற்றின் வருவாயிலிருந்து ஒரு பகுதியைக் கோயிலுக்கு அளிக்கும் நடைமுறையும் இருந்தன. இவ்வாறு கோயிலுக்கும் பிராமணர்களுக்குமாக செய்யப் பெற்றவை தேவதானப் பிரமதேயம் எனப் பெயர் பெற்றன.
- வடகரை தேவதானப் பிரமதேயம் அமநிநாராயணச் சதுர்வேதிமங்கலம்
- ஆர்க்காட்டுக் கூற்றத்துகீழ் பிரம்பில் தேவதானப்பிரமதேயம் திருவேதிகுடி
- கருநிலக்குடி நாட்டுத் தேவதானப் பிரமதேயம் திருத்துங்கால்
“இந்தத் தேவதானம், பிரமதேயம் முதலியன இறையிலியாக விடப்பட்டன என்பதை, தேவதானம் இறையிலி இட்டபடிக்கும் பழம்பேர் தவிர்த்த படிக்கும் திருவிடை மருதூர் உடையார்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாகப் பழம் பேர் தவிர்த்து யாண்டு ஏழாவது முதல் தேவதானம் இறையிலி இட்டபடி உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பிரமதேயம் கண்ணக்குடியான்”[9] என்பன போன்ற கல்வெட்டுத் தொடர்கள் மூலம் நாம் அறியலாம்.
சதுர்வேதிமங்கலம்
அந்தணர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகளையும் ஏற்படுத்தினர் நம் முன்னோர். அக்குடியிருப்புகளில் நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களைக் குடியேற்றினர். இத்தகைய குடியிருப்புகள் நான்கு வேதங்கள் வல்லவர்களின் குடியிருப்புகளாதலின் சதுர்வேதிமங்கலங்கள் என வழங்கப் பெற்றன. இத்தகைய சதுர்வேதிமங்கலங்களையும் வரிநீக்கி இறையிலியாகவே வழங்கினர். இவை அவ்வட்டாரக் கல்விக் கழகங்களாக விளங்கி, கல்வியறிவையளித்தன. இந்தச் சதுர்வேதி மங்கலங்கள் அவற்றை அமைத்து வழங்கிய மன்னர்கள் பெயராலும், அவர்களின் பட்டப் பெயர்களாலும், அவர்களின் தேவியர்களின் பெயராலும் பெயர் பெற்றன. அரசிகளே வழங்கியவையும் இவற்றில் அடங்கும்.
- தென்கரைப் பிரமதேயம் ஸ்ரீ ராஜகேஸரிச் சதுர்வேதிமங்கலம்
- வடகரைக் குறுக்கை நாட்டு பிரமதேயம் வெடேல் விடுகு சதுர்வேதிமங்கலம்
- தஞ்சாவூர் கூற்றத்து பிரமதேசம் இராசசுந்தரி சதுர்வேதிமங்கலம்
- கருங்குடி நாட்டுப் பிரமதேயம் திருவள்ளுரான திரயிலோக்ய மாதேவிச் சருப்பேதிமங்கலம்.
பிரமதேயம் என்று பெயர் கூறப்படாமல் இன்ன ஊரான சதுர்வேதிமங்கலம் என்றும் வழங்கி வந்துள்ளன.
- பவித்திர மாணிக்க வளநாட்டு வாகூராந அழகிய சோழச் சருப்பேதிமங்கலம்.
மேற்கூறியவாறெல்லாம் பிரமதேயம் என்றோ, இன்ன ஊரான சதுர்வேதிமங்கலம் என்றோ பெயர் குறிக்கப் பெறாமல் சதுர்வேதிமங்கலத்தின் பெயரை மட்டும் கூறி, அந்தச் சதுர்வேதிமங்கலத்தில் உள்ள இன்ன ஊர் என்று கூறும் வழக்கும் இருந்து வந்துள்ளது.
- நித்தவிநோதச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகை காட்டுமுண்டூர்
- ராஜராஜச் சதுர்வேதிமங்கலத்து சிறுநானலூர்.
மன்னன் தன் பெயரைச் சதுர்வேதி மங்கலத்திற்கு வைக்க வேண்டும் என்று அவனே விரும்பி வைத்தான் என்ற செய்தியை கீழ்வரும் கல்வெட்டுத் தொடர் நமக்கு அறிவிக்கிறது.
“கணக்கும் எழுதிப் போதும்படிக் கணக்காடான சோழகுல வல்லிபுரத்து வீரமார்த்தாண்ட சதுறுவேதிமங்கலம் என்று நம் பேரால் வைத்த”[10]
இந்தச் சதுர்வேதிமங்கலங்கள், சதுறுவேதிமங்கலம் என்றும் சதுப்பேதி மங்கலம் என்றும், சருப்பேதி மங்கலம் என்றும் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன.
மங்கலம்
சதுர்வேதி மங்கலம் என்ற தொடரின் குறுகிய வடிவமாக மங்கலம் என்பதைக் கருதுகின்றனர்.[11] சதுர்வேதி மங்கலங்களைப் போலல்லாமல் இப்பெயர்கள் சாதாரண ஊர்ப் பெயர்களைப் போலவே அமைந்துள்ளன. ஒருசில மங்கலங்கள் மட்டுமே அரசர்கள் பெயரால் அமைந்திருக்கின்றன.அட்டைய மங்கலம்
ஆதமங்கலம்
இராசிமங்கலம்
குட்டமங்கலம்
செய்யாமங்கலம்
சேந்தவன் மங்கலம்
தூவேலிமங்கலம்
பெருமங்கலம்
மாற மங்கலம்
மிழலை மங்கலம்
வெள்காமங்கலம்
ஸ்ரீகரணமங்கலம்
அகரச்சீர்மை
பிராமணர்கள் வசித்த இடங்கள் அக்கிரகாரம் என வழங்கப் பெற்றன. அதன் குறுக்கமே அகரம் எனக் கருதுகின்றனர்[12] ஆகவேதான் “சோழகுல வல்லிபுரத்து வீரமார்த்தாண்ட சதுறுவேதிமங்கலம் என்று நம்பேரால் வைத்த அகரச் சீர்மையில”—எனப் பெயர் பெற்றது போலும். ஆனால் வேறு ஊர்களும் அகரம் என்ற பெயருடன் வழங்கி வந்துள்ளமையை கல்வெட்டுகள் நமக்கு அறிவிக்கின்றன.
- புத்தகரம்
வேறு சாதியினர் வாழ்ந்த பகுதிகூட அகரம் என்று கூறப்படுகிறது என்று கூறி “வேளாளர் அகரம்” என்ற தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்தில் உள்ள ஊர்ப் பெயரை மேற்கோள்காட்டுவர் இடப்பெயராய்வாளர்.[13]
பல சாதியினரும் தத்தமக்கெனத் தனித்தனிக் குடியிருப்புகளைக் கொண்டு வாழ்ந்து வந்தனர் என்ற செய்தியை ஈண்டு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும்.
கருமாரச்சேரி
தச்சன் தாங்கல்
வண்ணாரக் கொல்லை
ராவத்தநல்லூர்
அகரப்பிரமதேயம்
பிரமதேயம் என்றாலே பிராமணர்களுக்கு அளிக்கப்பெற்ற ஊர் எனக் குறிக்கும் முறை இருந்தும், பிராமணர்கள் வாழ்ந்த இடத்தைக் குறிக்கும் அகரம் என்ற சொல்லையும் சேர்த்து அகரப்பிரமதேயம் எனக் குறித்துக் கூறும் முறையும் இருந்ததைக் கல்வெட்டு ஊர்ப் பெயர்கள் நமக்கு அறிவிக்கின்றன.
- ஏப்புலி நாயக்கர் கேரளசிங்க வளநாட்டு அகரபிரமதேயம் அம்பலத்தாடு சதுர்வேதிமங்கலம்
- மேற்பாக்கைநாட்டு நிரந்தனூரான அகரப்பிரமதேயம்
ஒரு சில சதுர்வேதி மங்கலங்கள் அகரம் என்ற அடையுடன் மட்டும் குறிக்கப் பெற்றுள்ளன.
மண்டை குளநாட்டு முருகமங்கலப்பற்று சம்புகுலப்பெருமான் அகரமான இராச கெம்பீரச் சறுப்பேதிமங்கலம்.
- ஆன்றி நாட்டு அகரம் காங்கேய நல்லூரான நீலகண்டச் சதுர்வேதிமங்கலம்.
உதகபூர்வதானம்
தானம் கொடுக்கும் பொழுது நீர் வார்த்துத்தானம் செய்தல் மரபு எனத் தெரிகிறது. நிலங்களை இறையிலி ஆகத் தானம் கொடுக்கும் பொழுது நீர்வார்த்துக் கொடுத்து, கைஓலையும் திருமுகமும் அளித்துத் தானம் செய்துள்ளமையும் கல்வெட்டுத் தரும் செய்தியாகும்.
“நாவற் பாக்கமும் இதில் பிரிவாந குதிரைச் சேவகன் தாங்கலும் முன்னாள் நாலாவது நாளில் தம்பிரானார் திருப்பாட்டு ஓதும் மாஹேஸ்வரர்க்கு காணிமடப்புற இறையிலி ஆக திருஞான சம்பந்த நல்லூர் என்று உதகபூர்வ தானமாக கைய்ஓலையும் திருமுகமும் குடுத்தருளிநபடிக்கு”[14]
போதகதானம்
தனிப்பட்ட மனிதனுக்கும் தானங்கள் அளிக்கப் பெற்றன. ராமச்சந்திரபட்டருக்கு போதகதானமாக பூமி கொடுக்கப் பெற்ற செய்தியை, தாராபுரம் வட்டத்தைச் சார்ந்த சித்தூர் ஒபளி மயிலம்பட்டியிலே இருக்கும் அப்பய்யன் குமரன் சேஷய்யனிடத்தில் இருக்கும் சாசனம் நமக்கு அறிவிக்கின்றது.[15]
பூதானம்
இத்தகைய தானங்களைப் பூதானம் என்ற பெயராலும் கொடுக்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
புது ஆயக்குடி-பெரியகுளத்தைச் சார்ந்த எறனாகாளம் நிலத்தை ரெங்கய்யனவர்களுக்கு பூதானமாக அளித்த செய்தியை மதுரை மாவட்டம் பழனிக்குப் பக்கத்தில் உள்ள ஆலக்குடிப் பாளையப்பட்டு தெலுங்குப் பிராமணராகிய வேங்கடராமய்யரிடத்தில் இருக்கிற சாசனத்தின் மூலம் அறிகிறோம்.[16]
சர்வமானியம்
தானங்கள் சர்வமானியமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன என்ற செய்தியையும் கல்வெட்டு நமக்கு அறிவிக்கின்றது.
- சறுவமானியமாகப் பண்ணிக்குடுத்த தானப் பிரமாணமாவது[17]
- “சறுவமானியப் பிரமாணமாவது”[18]
தவசிக்குழி
சில ஊர்கள் தவசிக்குழியாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
- “விலை கொண்டு அனுபவித்துப் போகிற தவசிகுழியான திருஞான சம்பந்த நல்லூர்”
- “இத்தவசி குழியான தேவர்கனாயக நல்லூர்”
சில பங்குகள் மட்டும் தானம் செய்தல்
கிராமங்களை முழுமையாகத் தானம் செய்ததோடு, கிராமங்களைப் பல பங்குகளாகப் பிரித்துச் சில பங்குகளை மட்டும் தானம் செய்யும் மரபும் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
- “சின்ன மாம்பா சமுத்திரம் என்னும் கிராமத்தின் நூற்று ஆறு பங்குகளிலே ஒன்பது பங்குகள்.”[19]
தர்ம ஸ்தாபனங்கள், துறவிகள்
கோயில்களுக்கும், அந்தணர்களுக்கும் மட்டும் தானம் அளித்ததோடு நிற்காமல், மடம், சத்திரம் போன்ற தர்ம ஸ்தாபனங்களுக்கும், துறவி போன்றோருக்கும் தானம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கும் போது சர்வமானியமாகவும் அளித்தனர்.
பப்புதிம்மய்ய தேவமகாராயர் திருத்தானம் என்னும் இடத்தில் உள்ள சத்திரத்துக்காகப் புத்தகரம் என்னும் கிராமத்தைச் சர்வமானியமாக அளித்துள்ளார்.[20]
சோழமண்டலம் பெத்தனபுரத்தில் மடத்திற்கு வேண்டி தானம் அளிக்கப்பட்டுள்ளது.[21]
அக்கரை நெறிச் சதுர்வேதிமங்கலத்து கள்ளக்குடி மடப்புறமாக விடப்பட்டது.[22]
கிராமங்களில் சுவாமியார் அவர்கள் சன்னிதானத்துப் பூதான நிலம் அளிக்கப்பட்டுள்ளது.[23]
தனியார் தானம் செய்தல்
மன்னர்கள், மன்னர்களின் அலுவலர் போன்றோர் மட்டுமன்றி தனியார் போன்றோரும் தானம் செய்துள்ளனர். தருமம் செய்துள்ளனர்.
அரசனுடைய பிரதான மந்திரியான இரகுநாத பண்டிதரும், கொங்கு நாட்டுச் சதுர்வேதிமங்கலம் திரு முருகன் பூண்டி ஊரார்களும் கூடித் திருமுருகன் பூண்டிக் கோயில் அர்ச்சகருக்குத் தானம் செய்துள்ளனர்.[24]
வீரராகவ சுவாமியின் நிவந்தத்துக்காக அழகப்ப செட்டியார் என்பவர் காக்களூர் கிராமத்தில் ஆவாரம்பட்டி பகுதியைத் தானம் செய்துள்ளார்.[25]அவ்வாறு தானமாக அளிக்கும்போது ஒரு ஊரில் மட்டுமன்றி ஒன்றற்கு மேற்பட்ட ஊர்களிலிருக்கும் பகுதிகளைத் தானமாக அளித்துள்ளனர்.
சிக்கமாயபுரம் என்னும் கிராமத்தில் ஒரு பகுதியும், வீரராகவபுரம் என்னும் கிராமத்தில் ஒரு பகுதியும் ரகுபதி ஐயன் என்பவரால் தானம் அளிக்கப்பட்டன.[26]
வேறு பல செய்திகள்
தான தருமங்களை மட்டுமன்றி வேறுபல செய்திகளையும் கல்வெட்டுகள் நமக்கு அறிவிக்கின்றன. மன்னர்கள் போர் புரிந்த செய்தியை அறிந்தோம். அவ்வாறே தனிநபர் சண்டை செய்தது போன்ற வீரச்செயல்களும், ஆடுமாடு பிடித்துச் செல்லுதல் போன்ற செய்திகளும் கூறப்பெற்றுள்ளன. அநியாயம் செய்வோர்களின் தலையை வெட்டிக் கொண்டு வருவோருக்குப் பரிசுகள் அளிப்பதாக அறிவிப்பும் செய்யப்பட்டிருந்ததும் தெரிகிறது.
கொங்குறாயன் என்பவன் மாந்தபுரத்திலே வந்து வியாழக்கிழமை நாள் அன்று வெட்டிக்குத்திச் சில்லறை பண்ணி ஆடுமாடு பிடித்துச் சென்றான்—கொங்குறாயன் தலையை வெட்டிக்கொண்டு வந்து வைத்தவர்களுக்கு உம்பளிக்கை கிராமம் கட்டளையிடப்பட்டிருந்து.[27]
முடிவுரை
மேற்காணும் கட்டுரைகள் மூலம் நம் பண்டைய வரலாற்றுச் சிறப்பை அறிவிக்கும் வகையில் ஊர்ப்பெயர்கள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்ற உண்மையை நாம் உணரலாம். தொடர்ந்த ஆராய்ச்சி மேலும் நல்ல பயனை அளிக்கும் என்பது சொல்ல வேண்டாத ஒன்று.
கட்டுரைகளில் இடம்பெறும் ஊர்ப்பெயர்கள் அவை இடம்பெறும் கல்வெட்டு முதலிய விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர்கள் எல்லாம் கல்வெட்டில் உள்ளவாறே கொடுக்கப்பட்டுள்ளன. குறிலுக்கு நெடில், நெடிலுக்குக் குறில், இடையினத்திற்கு வல்லினம், வல்லினத்திற்கு இடையினம், நகர, ணகர, னகர வேறுபாடின்மை போன்ற குறைகள் இருக்கலாம். சரியாகத் தெரிந்தவை மட்டும் திருத்தி எழுதப்பட்டுள்ளன.
- ↑ S.I.I Vol. VII No. 115 (A.R.No. 104A of 1900)
- ↑ S.I.I Vol. VII No. 148 (A R No 135 of 1900)
- ↑ S.I.I.Vol. XIX No.424 (A.R.No.443 of 1917)
- ↑ S.I.I. Vol. VII No.107 (A.R.No.97 of 1900)
- ↑ தெ.இ.கோ.கா. 1106
- ↑ ஊரும் பேரும்—தேவும் தலமும்—சமணமும் சாக்கியமும் ரா.பி சேதுப்பிள்ளை.
- ↑ S.I.I.Vol.I No.67
- ↑ S.I.I. Vol.VI No.368 (A,R.No. 45 of 1890)
- ↑ S.I.I.Vol.XXIII No.273 (A.R.No.273 of 1907)
- ↑ கன். கல். தொகுதி 5 தொ. எ. 1969/51
- ↑ பேரும் பெருமையும்—மா.நயினார் எம்.ஏ.
- ↑ Names of Villages donated to Brahmins—Dr. M. Chidanantamurthy
- ↑ ஊரும் பேரும்—இறையும் அறமும்-அடிக்குறிப்பு 22—ரா.பி. சேதுப்பிள்ளை
- ↑ S.I.I. Vol.VII No. 106 (A.R.No.96 of 1900)
- ↑ தெ.இ.கோ.சா.1195 (மக்கென்ஸிபிரதி)
- ↑ தெ.இ.கோ.சா.1194 (மக்கென்ஸிபிரதி)
- ↑ S.I.I.Vol. XXIII No.123 (A.R.No.123 of 1907)
- ↑ S.I.I.Vol. XXIII No 122 (A.R.No.122 of 1907)
- ↑ தெ.இ.கோ.சா.1109
- ↑ தெ.இ.கோ.சா.1118
- ↑ S.I.I. Vol.VII No.382. (A.R.No.397 of 1903)
- ↑ S.I.I. Vol.VII No.398 (A.R.No.112 of 1903)
- ↑ தெ.இ.கோ.சா.1197
- ↑ தெ.இ.கோ.சா.1185
- ↑ தெ.இ.கோ.சா.1111
- ↑ தெ.இ.கோ.சா. 1112
- ↑ தெ.இ.கோ.சா. 1223