கள்வனின் காதலி/கோஷா ஸ்திரீ

விக்கிமூலம் இலிருந்து

கோஷா ஸ்திரீ

மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார வைப்பது போல் அந்தக் கம்பெனியில் உட்கார வைக்கும் வழக்கம் கிடையாது. பக்க வாத்தியக்காரர்கள் மேடையின் ஓரத்தில் மறைவான இடத்தில் தான் இருப்பார்கள். அவர்களை அதிகம் பேர் பார்த்திருக்கவே முடியாது.

மேற்படி ஜனாப் முகமது ஷெரிப் சாயபு ஒரு நாள் ராத்திரி எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு கோஷா ஸ்திரீயுடன் வந்து சேர்ந்தார். கோஷா என்றால், புடவைத் தலைப்பைச் சிறிது இழுத்துவிட்டுப் பாதி முகத்தை மூடும் அரை குறை கோஷா அல்ல. உயர்ந்த முஸ்லிம் குடும்பத்து மாதரைப்போல் தலையிலிருந்து பாதம் வரையில் ஒரு பெரிய அங்கியால் மூடி, கண்களுக்கு மட்டும் துவாரம் வைத்திருக்கும் சம்பூரண கோஷா. அந்த கோஷா ஸ்திரீயை அவர் பெண்கள் வண்டியில் ஏற்றி விட்டு தாம் வேறு வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.

மறுநாள் அதிகாலையில் இவர்கள் கொள்ளிடத்துக்கு அடுத்த புரசூர் ஸ்டேஷனில் இறங்கி, ஒரு மாட்டு வண்டி பிடித்துக் கொண்டு, மேற்கு நோக்கிப் பிரயாணமானார்கள். கொஞ்ச தூரம் போன பிற்பாடு அவர்கள் பிரயாணம் செய்த சாலை, கொள்ளிடக்கரை லயன்கரைச் சாலையோடு சேர்ந்தது. அந்தச் சாலையோடு ஏழெட்டு மைல் சென்றதும் அங்கு பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் ஒரு கிராமம் இருந்தது. வண்டியை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு, "நாங்கள் திரும்பி வரும் வரை காத்திரு" என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு, சாயபுவும் கோஷா ஸ்திரீயும் கொள்ளிடத்துப் படுகையில் இறங்கிச் சென்றார்கள்.




முத்தையன் பாழடைந்த கோயிலுக்கு அருகில் நாவல் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்த வண்ணமாக, கல்யாணிக்கு கோபம் வரும்போது அவளுடைய புருவங்கள் எப்படி வளைகின்றன என்பதைத் தன் மனக்கண்ணின் முன்னால் கொண்டுவரப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான். எவ்வளவோ முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே, அவள் சிரிக்கும்போது அவளுடைய பல் வரிசைகள் எப்படியிருக்கின்றன என்பதை உருவகப்படுத்திப் பார்த்தான். பிறகு, இன்று அவள் வருவதற்கு இன்னும் எத்தனை நேரம் ஆகும் என்று எண்ணமிட்டவனாய், ஆகாயத்தில் சூரியன் எங்கே வந்திருக்கிறது என்று அண்ணாந்து நோக்கினான்.

முத்தையனுடைய உள்ளத்தில் நாளுக்கு நாள் அமைதி குன்றி வந்தது. ஒரே இடத்தில் தங்கி ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருப்பது அவனுடைய இயல்புக்கே விரோதமல்லவா? சாலையில் மாட்டு வண்டி போகும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவனுக்குப் பரபரப்பு உண்டாகும். அந்த க்ஷணம் சாலைக்குப் போய் வண்டிக்காரனை இறங்கிவிட்டுத் தான் மூக்கணையில் உட்கார்ந்து கொண்டு வண்டி ஓட்ட வேண்டுமென்ற ஆசை பொங்கிக் கொண்டு வரும். இராஜன் வாய்க்காலில் வரும் புதுவெள்ளத்தில் குதித்துத்துளைந்து நீந்த வேண்டுமென்ற ஆவலினால் அவன் மனம் துடிதுடிக்கும். எங்கேயாவது மாடு "அம்ஹா!" என்று கத்துவது காதில் விழுந்தால், ஓடிப்போய் அதைப் பிடித்துக் குளத்தில் கொண்டு போய்க் குளிப்பாட்டவேண்டுமென்று தோன்றும். இன்னும் பூங்குளத்தின் தெரு வீதிக்குப் போகவும், தன்னுடைய வீட்டைப் பார்க்கவும், ஆசை உண்டாகும். காலை நேரத்தில், கோவில் பிரகாரத்தில் உள்ள பவளமல்லி மரத்தின் அடியில் புஷ்பப் பாவாடை விரித்திருக்குமே அதைப் போய் இப்போதே பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பொங்கிக் கொண்டு கிளம்பும்.

இவ்வளவு ஆவல்களையும் அடக்கிக் கொண்டு, முத்தையன் பொறுமையுடனிருப்பதை சாத்தியமாகச் செய்தவள் கல்யாணிதான். அவள் மட்டும் தினம் ஒரு தடவை வந்து கொண்டிராவிட்டால் அவனால் அங்கு இத்தனை நாள் இருந்திருக்கவே முடியாது. "ஆயிற்று, இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கல்யாணி வந்து விடுவாள்" என்ற நினைப்பில் அவனுக்குக் காலை நேரமெல்லாம் போய்விடும். அவளும் தானுமாய்க் கப்பல் பிரயாணம் செய்யப் போவதையும் மலாய் நாட்டில் ஆனந்தமாய் வாழ்க்கை நடந்தப் போவதையும் பற்றி மனோராஜ்யம் செய்வதில் மாலை நேரத்தின் பெரும் பகுதியைக் கழிப்பான். அன்று முத்தையன் மரக்கிளைகளின் இடைவெளி வழியாக ஆகாயத்தில் சூரியன் வந்திருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, "கல்யாணி வருவதற்கு இன்னும் இரண்டு நாழிகை பிடிக்கும்" என்று எண்ணமிட்டான். அவள் வரும்போது தான் எங்கேயோவது ஒளிந்துகொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று வேடிக்கை பார்க்கலாமா என்பதாக ஒரு யோசனை அவன் மனத்தில் தோன்றிற்று. "அப்படி நான் ஒளிந்து கொண்டால் அவள் பயத்துடன் அப்புறமும் இப்புறமும் கண்களைச் சுழற்றிப் பார்ப்பாள் அல்லவா? அவளுடைய புருவங்கள் நெறிந்து வளையுமல்லவா? அந்தத் தோற்றம் எவ்வளவு அழகாயிருக்கும்!" என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே, சலசலவென்று செடிகள் அலையும் சப்தம் கேட்க திடுக்கிட்டுச் சப்தம் வந்த திசையை நோக்கினான். அவனுக்கு எதிரே தலை முதல் கால் வரை கோஷா அங்கி, தரித்த உருவம் ஒன்று வரவே, ஒரு கணநேரம் அவன் பதறிப் போனான். சட்டென்று கீழே பக்கத்தில் கிடந்த ரிவால்வரை எடுத்துக் கொண்டு துள்ளி எழுந்தான்.

"யார் அது?" என்று அதட்டிய குரலில் கேட்டு, கைத்துப்பாக்கியை நீட்டிப் பிடித்தான்.

கோஷா அங்கியின் உள்ளிருந்து கிண் கிணி சப்திப்பது போன்ற சிரிப்புச் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் அங்கி எடுத்தெறியப்பட, உள்ளிருந்து திவ்ய சௌந்தரியம் பொருந்திய மோஹன ஸ்திரீ உருவம் ஒன்று வெளிப்பட்டது.

"நீதானா, கமலபதி! ஒரு நிமிஷத்தில் என்னை இப்படி மிரட்டி விட்டாயே? நிஜமாகவே பயந்து போனேன்!" என்றான் முத்தையன்.

ஆம், அந்தக் கோஷா ஸ்திரீ உண்மையில் பெண் உருவத்தில் இருந்த கமலபதிதான். கொள்ளிடக்கரை பிரதேசத்தில் முத்தையனைப் பிடிப்பதற்குப் பலமான போலீஸ் ஏற்பாடுகள் நடக்கின்றன என்பதை அறிந்து, இம்மாதிரி வேஷத்தில் வந்தால்தான் சந்தேகம் ஏற்படாமல் அவனைப் பார்க்க முடியுமென்று தீர்மானித்துத்தான் அவன் அப்படிப் பெண் வேஷம் தரித்துக் கோஷாவாக மாறி இங்கே வந்தது. அபிராமியிடம் அன்று "நான் தான் சதாரம்" என்று அவன் சொன்னபோது இந்த யோசனை அவன் மனத்தில் உதயமாயிற்று.

ஐயோ! துரதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பெண் வேஷம் அவ்வளவு நன்றாகப் பலித்தல்லவா இருந்து விட்டது? நாடகத்தில் அவனைப் பார்த்திருக்கும் நாமே ஒரு நிமிஷம் மயங்கிப் போய் விட்டோ மென்றால், பேதை கல்யாணி என்ன கண்டாள்? அவனை ஓர் இளமங்கை என்றே அவள் கருதி விட்டதில் வியப்பில்லையல்லவா? ஆஹா? அதனுடைய பலன் தான் எவ்வளவு விபரீதமாகப் போய்விட்டது!