காகிதம்
காகிதம்
மேலாண்மை பொன்னுச்சாமி
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர். சென்னை -600 017.
முதற் பதிப்பு | : | மே – 1998 |
இரண்டாம் பதிப்பு | : | டிசம்பர், 2010 |
உரிமை | ஆசிரியருக்கு |
பதிப்பாசிரியர் : வானதி திருநாவுக்கரசு
விலை | : | ரூ. 50.00 |
☐ Title | KAKITHAM | |
☐ Author | Melanmai Ponnusamy | |
☐ Language | Tamil | |
☐ Edition | Second Edition, December - 2010 | |
☐ Pages | xii + 132 = 144 | |
☐ Publication | : | THIRUVARASU PUTHAKA NILAYAM, 23, Deenadayalu Street, Thyagaraya Nagar, Chennai - 600 017. |
☐ Price | : | Rs.50.00 |
Typesetting | Goodwill Computers, T.Nagar, Chennai -17. Mobile:9940254493 E.Mail: goodwilltngr@yahoo.co.in |
Printed at : NOVENA OFFSET PRINTING CO., Chennai-5 ✆28446166, 28446891
சமர்ப்பணம்...
- வயது பேதம் பார்க்காமல்
- அலட்சியம் காட்டாமல்
- நெஞ்சு தழுவி அரவணைக்கிற
- அந்தப் பேரன்பு.
- பேசிப் பழகுகிறபோது மனசையே
- முகத்தில் வைத்துப் புன்னகைக்கிற
- நேர்மைமிகு தோழமை.
- இலக்கியப் படைப்புகள் மூலமாக
- என் போன்றோருக்கு
- மொழிநடை வழிகாட்டி.
- காயிதங்கள் எழுதுகிறபோதெல்லாம்
- நம்மைச் செதுக்குகிற அந்தப்
- பாசமான அக்கறை.
- எல்லாம் நிறைந்த எங்கள் முன்னத்தி ஏர்
- கி. ராஜநாராயணன் அவர்களுக்கு
முன்னுரை
என்னுடைய சிறுகதைகளுக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கும். அவற்றில் பெரும்பான்மையானவை பரிசுகள் பெற்றவை. முதல் பரிசு, முத்திரைப் பரிசு என்று ஏதேனும் பரிசுகள்.
‘இலக்கியச் சிந்தனை’ என்ற அமைப்பு, தமது உயர் தன்மைகளையெல்லாம் தொடர்ந்து பிறழாமல் காப்பாற்றிக் கொண்டே மாதந்தோறும் ஒரு சிறுகதைக்குப் பரிசு தருகின்றனர்.
தமிழில் அந்த அந்த மாதம் வெளியான அனைத்து இதழ்களையும் ஓர் எழுத்தாளரிடம் தந்து, அவற்றில் பிரசுரமான அனைத்துச் சிறுகதைகளையும் வாசிக்க வைத்து, அவற்றில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து, அதற்குப் பரிசு தருவார்கள். பரிசுத்தொகை வெறும் ஐம்பதுதான். ஆனால், அந்தப்பரிசு மிகமிக முக்கியத் துவமிக்கது. மாண்புமிக்கது. எழுத்தாளர்களின் மரியாதைக்குரியது.
‘இலக்கியச் சிந்தனை’ பரிசு, எனது எட்டு சிறு கதைகள் பெற்றிருக்கின்றன. ஒரே எழுத்தாளர் இத்தனை பரிசுகளைப் பெற்றிருப்பது நான் மட்டும்தானா, வேறொரு எழுத்தாளர் இருக்கிறாரா? யாமறியோம்! அந்தப் பாரதி, லட்சுமணருக்கே வெளிச்சம்.
இந்த ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பை நெறிபிறழாமல் பண்பு குறையாமல், தன்மை சிதையாமல் தொடர்ந்து நடத்தி வருகிற பாரதி, லட்சுமணன் என்ற மாண்புமிகு அசலான மனிதர்களை எத்தனை போற்றினாலும் தகும்.
அதே ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பு, மாதந்தோறும் தேர்வு செய்யப்பட்டு ஐம்பது ரூபாய் பரிசு வழங்கப்பட்ட பனிரெண்டு சிறுகதைகளையும் ஒரு பிரபல எழுத்தாளரிடம் ஒப்படைத்து, வாசிக்க வைத்து, ஒன்றைத் தேர்வு செய்து, அந்தச் சிறுகதையை அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக அறிவித்து அதற்கொரு பரிசு தருவார்கள்.
ஆனந்தவிகடனில் ‘சற்றே பெரிய சிறுகதை’ என்ற தனித்துவ அடையாளத்துடன் பிரசுரம் பெற்ற ‘ரோஷாக்னி’ என்ற எனது சிறுகதை, ‘ஆண்டின் சிறந்த கதை’ என்ற பரிசையும் பெற்றது.
பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெறும். கண்ணியமான விழா. மரபார்ந்த கலை இலக்கியச் செல்வங்களைப் போற்றிப் பாதுகாத்துக் கௌரவிக்கிற மரியாதைக்குரிய விழா.
பரிசை நேரில் பெற்றுக் கொள்ளும்படி அந்த விழா என்னை அழைத்திருந்தது.
கதர்ச்சட்டை, பாலியஸ்டர்வேட்டி, எண்ணெய்க் கசிவான முகம், கலைந்த தலைமுடி, உச்சி முடியில் ஒரு கற்றை, சிலுப்பிக்கொண்டு நிற்கும். தென் மாவட்டக் கிராமத்துப் பாமரனுக்குரிய அசட்டுத்தனம் அப்பியிருக்கிற முகம்.
இந்தத் தோற்றத்திலிருக்கிற என்னை “எழுத்தாளர்” என்று கடவுளால்கூட யூகித்துவிடமுடியாது. யாரேனும் அறிந்தவர்கள், “இவருதான் எழுத்தாளர்” என்று அறிமுகம் செய்து வைத்தால்கூட, “நெசந்தானா? இவருதான் அவரா?” என்ற ஆச்சரியக் கேள்வியைத் தவிர்க்கவே முடியாது.
விழா மண்டப முகப்பில் வானதி பதிப்பகம் கடை போட்டிருந்தது. ‘ரோஷாக்னி’ என்ற தலைப்பிட்ட புத்தம்புதிய “(இலக்கியச்சிந்தனை பரிசுகள் பெற்றது)” என்ற அறிவிப்புடன் கூடிய புத்தகமும் கிடந்தது.
இலக்கியச் சிந்தனை பரிசு பெறுகிற அனைத்துச் சிறுகதைகளும் வானதி பதிப்பகம் மூலமாகத்தான் வெளியிடப்படும். இது வழக்கம்.
நான் கடை முன்னால் ஆவலும் ஆர்வமுமாய் நிற்கிறேன். கடைக்குள்ளிருந்தவர் என்னைத் தீர்க்கமாகப் பார்க்கிறார். கனிவான பார்வை. அறிமுகமற்ற என்னைப் பரிவுடன் பார்க்கிறார். பார்வையில் ஏதோ ஓர் யூகம். சற்றே திகைப்பு. உதட்டில் ஒரு சிறிய புன்னகை.
அவர் கண்ணைப் பார்க்கிறேன். கண்ணில் தெரிகிற அவரது மனம். அவரது உள்மனநேர்மையும், தொழிற் பற்றுறுதியும், நாணயமும், உயர்பண்பும், கண்ணியமும் அந்தக் கண்ணின் ஒளியில் எனக்குள் இறங்குகின்றன.
அவரது தயக்கத்தில் அவரது கண்ணியம்.
“நீங்க...நீங்க...நீங்க?”
“ஆமா. நாந்தான் எழுத்தாளர். மேலாண்மை பொன்னுச்சாமி” “அடடே, நீங்கதானா? நா நெனைச்சேன், நீங்களாத்தான் இருக்கும்னு. உங்க கதைகளை நிறைய படிச்சிருக்கேன்.”
- “அப்படியா?”
“உங்க கதைதான் இந்தத் தொகுப்புலே தலைப்புக் கதை. நல்லா பிரிண்டாயிருக்கா? பாத்தீகளா?”
“ம்.. ம்... ரொம்ப அற்புதமா வந்துருக்கு. நல்ல காகிதம். நேர்த்தியான அச்சு. நல்ல கலர்லே ரேப்பர். எல்லாமே ரொம்ப கச்சிதம்.”
- “உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
- “பிரமிச்சுப் போயிருக்கேன்.”
“வேணும்னா... நீங்க விருப்பப்பட்டா... உங்க கதைகள்லே பத்தோ பன்னிரண்டோ குடுங்க. மேட்டர் குடுத்தீங்கன்ன... ஐயாகிட்டே கலந்துபேசிட்டு... நாங்க தொகுப்பா வெளியிட ரெடியாயிருக்கோம்.”
இப்படித்தான்... எனக்கும் வானதி பதிப்பகத்துக்குமான உறவு முளைத்தது. துளிர்த்தது.
அன்றைக்குக் கடைக்குள்ளிருந்து என்னிடம் பேசியவர் வேறுயாருமல்ல... திருமிகு. ராமு அவர்கள்.
அந்தச் சந்திப்பும் உரையாடலும் சம்பிரதாயப் பூர்வமான சடங்காக முடிந்துவிடவில்லை. முளைத் தெழுந்த உறவுக்கு அன்று, விருட்சமாயிற்று.
நான் ஊர்வந்து சேர்ந்தவுடன் அனுப்பி வைத்த மேட்டரை சுடச்சுட வெளியிட்டது, “கங்கை புத்தக நிலையம்.”
வானதி பதிப்பகம் வெளியிட்ட எனது முதல் தொகுப்பான “மனப்பூ” அந்த ஆண்டில் தமிழக அரசின் மாநில இலக்கிய விருதைப் பெற்றது. இரண்டாவதாக நான் அனுப்பிய மேட்டரை “ஒரு மாலை பூத்துவரும்” என்ற தலைப்பில் தொகுப்பை வெளியிட்டார்கள்.
அந்த நூலுக்கும் அந்த ஆண்டில் தமிழக அரசின் மாநில இலக்கிய விருது கிடைத்தது இனிய ஆச்சரியமாக இருந்தது.
முதல்வருடன் பேராசிரியர் அன்பழகன் கையில் விருது பெறுகிற நான், மறுவருடம் மாற்றுமுதல்வர் பன்னீர் செல்வம் கையில் பெறுகிறேன். அடுத்தடுத்து மாநில விருதுகள்.
அப்புறம்தான்... வானதி பதிப்பக உரிமையாளர் திருமிகு. திருநாவுக்கரசு ஐயா அவர்களைச் சந்தித்துப் பேசினேன். ஆச்சரியமான சாதனையாளர், ‘வெற்றிப் படிகளி’ல் ஏறியவர். ‘வெற்றிப்படிகளை’ப்படைத்தவர். புகழ்மிகு மனிதர்களின் மரியாதையைப் பெற்ற மாண்பு மிக்கவர், ஐயா.
அவரிடம் தன்னடக்கம், அன்பு போன்ற உயர்பண்புகள் பலவற்றை கற்றுக் கொள்ளலாம்.
அரசு அலுவலர், ஆசிரியர் என்று ஏதேனும் ஒரு மாதச் சம்பளத்துடன்தான் எல்லா எழுத்தாளர்களும் பதிப்பகத்துடன் உறவு கொள்கின்றனர். எந்த மாத வருமானமுமில்லாமல், கிராமத்து எளிய விவசாயக் குடும்பமாக இருக்கிற எனது வறிய நிலையில் எழுத்தாளனாக நீடிப்பது ரொம்பவும் கஷ்டம். அதிலும், கமர்ஷியல் ரைட்டராக மலினப்படாமல், கண்ணியமான முற்போக்கு எழுத்தாளராக நீடிப்பது அதனினும் கஷ்டம்.
வானதி திருநாவுக்கரசு ஐயா, ‘கங்கை’ ராமு போன்ற பதிப்பகத்தார்களின் நேர்மையையும், பரிவையும், அக்கறையையும் அன்பையும் தனித்த பாசத்தையும் நம்பித்தான் என் போன்றோர் வாழ முடியும்.
‘என்னை வாழவைக்கும் வானதி பதிப்பகம்’ என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
‘காகிதம்’ தொகுப்பை மறுபதிப்பாக வெளியிட முன்வந்திருக்கிற வானதி பதிப்பகத்தின் பெருந் தன்மைக்கும், எனது இலக்கியப் பயணத்திற்கான ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருக்கிற என் தம்பி கரிகாலனுக்கும், மறுபதிப்புக்கான தொகுப்புப் பணியில் உடன்ஒத்துழைத்த எனது துணைவியார் பொன்னுத்தாய், எனது இளைய மகள் தென்றல் மற்றும் குடும் பத்தினருக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், என் படைப்புகளுக்கு ‘ஆய்வரங்கங்கள்’ நடத்தி என்னைச் சிறப்பிக்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற புகழ்மிகு அமைப்புக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
- நன்றி
என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி
மேலாண்மறைநாடு
626127
இராஜபாளையம் வழி
விருதுநகர் மாவட்டம்
04562/271233 & 9942610700
ஆசிரியரின் பிற நூல்கள்
1. மானுடம் வெல்லும் (சிறுகதை தொகுப்பு)
2. சிபிகள் (சிறுகதை தொகுப்பு)
3. மானுடப் பிரவாகம்
4. பூச்சுமை (லில்லிதேவசிகாமணி விருது)
5. தாய்மதி
6. பூக்காதமாலை (ஆனந்தாச்சாரி அறக்கட்டளை விருது)
7. காகிதம்
8. கணக்கு
9. விரல்
10. உயிர்காற்று (பாரதஸ்டேட் வங்கி விருது)
11. என்கனா
12. மனப்பூ (தமிழக அரசு இலக்கிய விருது)
13. ஒரு மாலை பூத்துவரும் தமிழக அரசு இலக்கிய விருது)
14. அன்பூ வாசம் (பாரத ஸ்டேட் வங்கி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது)
15. மானாவாரிப்பூ (அமரர் சி.பா. ஆதித்தனார் இலக்கியவிருது)
16. ராசாத்தி
17. மின்சாரப்பூ (மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது)
18. பூமனச் சுனை
19. பூமாயன்
20. பூக்கும் மாலை
21. சூரிய வேர்வை
22. கோடுகள் (குறுநாவல் தொகுப்பு)
23. தழும்பு (குறுநாவல் தொகுப்பு)
24. மரம்
25. ஈஸ்வர...
26. பாசத் தீ
27. முற்றுகை (கல்கி பொன்விழா முதல் பரிசு) நாவல்
28. இனி (நாவல்)
29. அச்சமே நரகம் (நாவல்)
30. ஆகாயச் சிறகுகள் (நாவல்)
31. ஊர் மண் (பாரத ஸ்டேட் வங்கி விருது) (நாவல்)
32. முழு நிலா
33. சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் (கட்டுரைகள்)
☐☐☐
பொருளடக்கம்
| 1 |
| 17 |
| 30 |
| 42 |
| 50 |
| 59 |
| 73 |
| 88 |
| 101 |
| 117 |