காகிதம்/002
குழம்பு ஊற்றிப் பிசைந்த சோற்று வட்டிலில் விரல்களை ஊன்றியவாறு வெறித்தாள், விஜயம். சாப்பிடத் தோன்றவில்லை. முதல் கவளத்தைக் கூட எடுக்கவில்லை. மனதில் ஏதோ நினைவுகள். உஷ்ணமாய் தகிக்கும் கொதி நினைவுகள்.
வாசலுக்கு வெளியே வீதி வெயிலையே வெறித்தாள். இமை தட்டாத பார்வை. நிலைத்த பார்வை. வேறு எங்கோ ‘பார்த்துக்’ கிடந்தது, மனசு.
“அந்தப் பயலா..அப்படிச் சொன்னான்? அப்படிச் சொல்லணும்னா நெஞ்சுலே எம்புட்டுத் திமிர் இருக்கணும்? அவன் நாக்கை அறுத்து தெரு நாய்க்கு எறிய வேண்டாம்? நாசமாய்ப் போற அந்தப் பாவி வாய்லே புத்து பெறப்பட.. ஒருநாள் பேதியில் பாடையிலே போக!”
சத்தமில்லாமல் அவள் உதடு முணுமுணுத்தன. கோபக் கொதிப்பும் குலை கொதிப்புமாய் சீறித் தெறித்த வார்த்தைகள். வார்த்தைக் கங்குகள்.
விஜயத்துக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. எதுவும் செய்யத் தோன்றவில்லை. மனம் முழுக்க குருட்டுக் கோபத்தில் விறைத்துக் கிடந்தது. ‘என்ன செய்ய’ என்று யோசிக்கக் கூட இயலாமல், விரக்தியின் விளிம்பில் உறைந்து கிடக்கிற மனசு.
கூலி வேலைக்குப் போக வேண்டியவள். நாராயணசாமி நாயக்கர் தோட்டத்திற்குப் பருத்திக்குள் களைவெட்ட வருவதாக வருவதாக ஒப்புக் கொண்டிருந்தவள்தான்.
எட்டு மணிக்குள் ‘வேலைக்குப் புறப்படணுமே’ என்று பரபரத்துப் போய் வேலை பார்த்தாள். அடுப்பு வேலை, அது இது என்று சில்லறை வேலைகள். ரெக்கையடித்துப் பறக்கிற அவசரத்தில் இயங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் -
இந்தத் தீ வந்து செய்தியாகக் காதில் விழுந்தது. வேலக்கா வந்து என்னவோ பேச ஆரம்பித்து, இந்தத் தீயைக் கொட்டிவிட்டுப் போனாள். அந்தத் தீ, மனசு முழுக்க பற்றியெரிந்தது. ஜ்வாலை விட்டெரிந்தது. உடம்பும் மனசும் கிடந்து தகித்தது.
‘சோற்றையள்ளி வாயில் போட்டு விட்டு வேலைக்குப் பறக்கணும்’ என்ற பரபரப்பில் இருந்த விஜயம்... ரெக்கையில் கல்லெறி பட்ட பறவையாக விழுந்து கிடந்தாள். அவளைத் துடிக்க வைத்தது. அவமானத்திலும் அசூயையிலும் மனசே கூசிக்குறுகியது. யாரோ தன்னை மலத்தில் தள்ளி விட்டதைப் போன்ற அருவருப்பு. வெறுப்பு, கசப்பு.
அப்போதுதான் -
“வேலைக்குப் போவமா? வாரீயா?” என்று கேட்டுக் கொண்டு களை சுரண்டியும் தூக்குச் சட்டியுமாக வந்தாள் ராஜம்.
இவள் முகமே எதுவோ மாதிரி விகாரப்பட்டிருந்தது. வெப்ப நீரில் நனைந்த இமை ரோமங்கள், வெட்டுப்பட்ட பல்லி வாலாக அடி உதட்டில் ரணத்துடிப்பு. மனசுக்குள் எரிகிற தீயின் வெக்கை, முகத்திலும் அனல் வீசியது.
ராஜம் திகைத்துப் போனாள். எதுவும் தப்பாகக் கேட்டு விட்டோமா என்று தடுமாறினாள்.
“என்ன - விஜயம், நாராயணசாமி நாயக்கரு புஞ்சைக்கு வர்றதாகத்தானே இருந்தே?”
“ஆமா..”
“வரல்லியா?”
“வரல்லே...” வறண்ட குரலில் எரிந்து விழுந்தாள்.
“ஏன்... வரல்லே? வாரேன்னு சொல்லி, நம்பவைச் சுட்டு, கடைசி நேரத்துலே வரல்லேன்னு சொன்னா, எப்படி? வையமாட்டாரா நாயக்கரு?”
“வையட்டும்... நல்லா வையட்டும்! சின்னப்பய அல்பப்பயலெல்லாம் நாக்குலே நரம்புல்லாமே என்னைக் கேவலப்படுத்தறப்ப, பெரிய மனுசரு நாயக்கரு வையுறது பெரிய விஷயமா? வையட்டும். நாவரல்லே.”
விஜயத்தின் சீற்றம், சீறிச் சினந்து தெறித்த அனல் சொற்களுக்குள் புதைந்து கிடந்த மனவேதனை. ஒரு சோகம். குத்துண்ட புண்ணின் வலி.
ராஜத்துக்கு விஜயத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இதற்கு மேல் கிண்டிக் கிளற விரும்பவில்லை. ‘நொந்த புண்ணை நோண்டக் கூடாது’ என்கிற கிராமத்து நாகரீகம்.
“சரி...அப்ப... நா போறேன்.”
ராஜம் போய்விட்டாள். விஜயத்துக்கு செயலற்ற நிலை. செயல்பட முடியாமல் மரத்து, மந்தித்துப் போன மனநிலை.
வெளுக்கிற வெயில். இளமதியத்தை நோக்கி முகம் வெளுத்து, நிறம் மாறுகிற வெயில். வெப்பமாகிற வெயில்.
போன வருஷம் நிகழ்ந்த புருஷனின் மரணம். கிணறு வெட்டுகிற வேலைக்குப் போயிருந்தான், வேல்ராஜ். கருங்கல் கிணறு. வேட்டு வைத்து வெடிக்கச் செய்து... சிதறும் கற்களை நொறுக்கி.. கூடையில் அள்ளி வெளி யேற்றுகிற வேலை.
ஏதோ ஒரு வேட்டு வெடித்ததில் ரொம்ப உயரத்துக்கு நாலா திசைகளிலும் சிதறித்தெறித்த கருங்கல் துண்டுகள். அதில் ஒரு துண்டு... இவன் தலையில் விழ-
ரத்த மழையில் நனைந்த பிரேதமாகத் தூக்கிக் கொண்டு வந்து போட்டனர் நாலைந்து கூலியாட்கள்.
மூன்று வயதுக் குழந்தையோடு இவள் வெடித்துக் கதறி அழுத அழுகை. தலைவிரி கோலமாக நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிய கதறல். அறுத்துப் போட்ட கீரைத் தண்டாக வாடிக்கிடந்த அவலக்கோலம். வாழத் தொடங்கிய பருவத்திலேயே வாழ்க்கையையும், தாலியையும் பறிகொடுத்த பரிதாபம். வாழ்க்கையாகவே வந்து அப்பிக் கொண்ட சாஸ்வதச் சூன்யம்.
ஊர்ஜனம் அவளைப் பார்த்துக் கண் கலங்கியது. பேதலித்துப் புலம்பியது. “ஐயோ, ஐயோ..” என்று கதறிப் புலம்பியது. யார் புலம்பி, என்ன செய்ய? மிச்சமிருக்கும் நாட்களை பிழைத்துத் தீர்க்கணுமே.பிள்ளையை அரைக் கிளாஸுக்கு அனுப்பி விட்டு கூலி வேலைக்குப் போனாள். வேற வழி?
“அந்த ஒழக்கரிசி ஜீவன் உசுரோட இருந்துருந்தா... இந்த நாய்ப் பயலுக்கு இந்த நெனைப்பு வந்துருக்குமா? இப்படிப் பேசியிருப்பானா? பேசுற தைர்யம் வந்துருமா? நாக்கை அறுத்துப் போட்டிருப்பாரே - அந்த நாயகன்”
இறுக்கம் உடைந்த மனசின் நெகிழ்வு. கணவன் பற்றிய நினைவில் இன்றைய வெறுமையின் தகிப்பு. நாதியற்ற பலவீனம். சுய பரிதாபம்.
உடைந்து கசிந்தாள். விசும்பி விசும்பி அழுதாள். யாருமற்ற தனிமை, சுதந்திரமாக அழுதாள். குமுறிப் பீறிட்டு வந்த உணர்வுக்கற்றை உதடுகளில் ஒரு வெடிப்போடு வெளிப்படுகிறது. கண்களில் குத்தலெடுக்கிற நீர். மடை விலகி வழிகிற கண்ணீர்.
....வேல்ராஜ் நல்ல சிவப்பு. கடுமையான உழைப்பாளி. அவனைக் கண்டாலே வேலி மரம் தலை வணங்கும். கருங்கல் பாறை நடுங்கியதிரும். புஜச்சதை உருளும். திரளும். வைரம்வாய்ந்த இறுக்கம். அவனது உள்ளங்கையே மரப்பலகை மாதிரி சொர சொரப்பாக இருக்கும்.
விஜயத்தின் மீது அவன் கொண்டிருந்த காதல். அவளுக்காக ஆறுமாசம் காத்திருந்து தாலி கட்டிய காதல் பொறுமை.
விஜயமும் ரொம்ப லட்சணம். கரிசல் காட்டுக்குச் சம்பந்தமில்லாத செவல் மண்ணைப் போல... அந்தக் கிராமத்தை மீறிய லட்சணம். அரைத்துக் குழப்பிய மஞ்சளின் நிறம். குழைவு. கனிவு. கச்சிதமான முகம். கண்ணில் ஒரு மின்னல். கனவைக் குழைத்துப் பூசிய மாதிரியான பூமலர்ச்சியான முகம்.
அவனோடு வாழ்ந்த அஞ்சு வருஷ தாம்பத்யம்.
அவனது லட்சணத்தின் மேல் இவளுக்கும் கொள்ளை மோகம். அவனை விட்டுப் பிரிந்திருக்க மனசிருக்காது. வேலைக்குப் போய் விட்டு வருகிற அவனுக்காக ஒரு தவிப்போடு காத்துக் கிடப்பாள். மனசு கிடந்து துடிக்கும். திரேகத் தவிப்பு.
அவனது அண்மை, உஷ்ணமான மோகிப்பு. மோகம் நிறைந்த அணைப்பு. மூர்க்கமான தழுவல், இறுக்கம். இறுக்கத்துக்குள் அவனது உணர்ச்சிப் பிரவாகம். அவனது பரபரப்பு, அவசரம். அதன் பரவசம். பரவசத் திணறல், திணறலில் மூர்ச்சையாகிப் போவாள், பல சமயங்களில்.
அவனது மூர்க்காவேசத்தில் இவள் நிலைகுலைந்து விடுவாள். இன்பமான குலைவு. திளைப்பான சுகத்தின் பரவசக்குலைவு. நினைத்து நினைத்து ஏங்க வைக்கிற குலைவு.
நிலை குலைந்து.. சரிந்து... முழுசாகத் தோற்று... அடித்துப் போட்ட மாதிரி கிறுகிறுத்துக் கிடப்பதில் அவளுக்கொரு பரவசம். தேனுக்குள் சிக்கின எறும்பின் திளைப்பு.
அவன் செத்த பிறகும் கூட-
பல இராத்திரிகளில் அந்தச் சுகத்திளைப்பை நினைத்திருக்கிறாள். நடுச்சாமத்தில், அந்த மூர்க்கத் தழுவலின் நெறு நெறுப்பை உணர்ந்து மூச்சுத் திணறிப் பதறிப் போய் விழித்திருக்கிறாள். அப்படிப் பல ராத்தரிகள். பல கனாக்கள். பரவசக் கனாக்கள்.விழித்துப் பார்த்தால்..
கனத்த இருட்டும், தகிக்கும் சூன்யமும்.
அந்தக் கணங்களில்தான் வேல்ராஜின் மரணம், எத்தனை கொடிய இழப்பு என்ற நிஜத்தின் முழுமை. அவளை மூர்க்கமாய்த் தாக்கும்.
அதே போல்- இப்போதும்.
ஒன்றுக்கும் உதவாத ஒரு நாய்ப்பயல். கால் தூசிக்குக் கூடப் பெறாத அற்பன். பல்லில் நாக்கைப் போட்டுப் பேசியிருக்கிறான் என்று கேள்விப்படுகிறபோது-
அந்த உழக்கரிசி உயிரின் அருமை இவளுக்குள் மலையாய் உயர்ந்து, சமுத்திரமாய் விரிந்து-
"ஐயய்யோ... எந் தங்கப்பெட்டியைத் தூக்கிக் குடுத்துட்டேனே... ஏ ராசா... எங் காவல் தெய்வமே... என்னை வுட்டுட்டுப் போய்ட்டீகளே- நாதியத்த சீவனா என்னைத் தவிக்கவுட்டுட்டு சாவோட சேர்ந்து போறதுக்கு எப்படி மனசு வந்துச்சு?”
நெஞ்சுக்குள் முட்டிக் கொண்டு வந்த அழுகை. தாங்க முடியாமல் வலது தோளில் முகத்தைப் புதைக்கிற விஜயம். ஒப்பாரியும் புலம்பலுமாய் அழுது கசிகிற அவள் கண்ணிலிருந்து சிந்திச் சிதறுகிற கண்ணீர், உலர்ந்து கொண்டிருந்த வட்டில் சோற்றில் தெறிக்கிறது.
.....விடிந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது. மஞ்சள் வெயிலின் நிறம் இன்னும் மாறவில்லை. அடுப்புக்கு விறகு இல்லையே என்று வெளியே போய் எடுத்து வந்தாள் விஜயம்.
விறகுகளை அடுப்பில் சொருக. கொழுந்து விட் டெரிகிற தீ. தீயின் சந்தன நிறம், அவள் கால்சதையில் விழுகிறது. கால்சதையின் மஞ்சள் ஜ்வலிப்புக்கு முன்னால் நிற்க முடியாமல், தீயின் நிறம் தோற்று முகம் மங்கியது.
அப்போதுதான் -
வேலக்கா வந்தாள். ஏதோ விஷயம் பேச வந்த வளைப் போல ‘வளா, வளா’வென்று அதை, இதைப் பேசினாள். விஜயத்துக்குள் வெறுப்பாக இருந்தது. கண்ணில்கூட மன எரிச்சல் லேசாக மின்னியது. இருந்தாலும் முகத்தாட்சண்யத்திற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்த முகம் காட்டினாள். ‘ம்’ கொட்டினாள், அரைமனசாக.
வேலக்கா ‘ஒரு மாதிரி’ என்று ஊர் முழுக்கத் தெரிந்த விஷயம். தகாத உறவுகள்-முறைகேடான சேர்க்கைகள்-கள்ளப்பறவைகள்-என்று நடக்கிற ரகசிய இழிவுகளுக்கெல்லாம் துவக்கப் புள்ளியாகத் தூதாக இருந்து, பாலமாக விளங்குபவள்.
இவள் வீட்டுப்படி ஏறி, நின்று பேசுவதையே அசூயையாக உணர்ந்தாள், விஜயம். வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள் குமைந்தாள்.
அப்போதுதான் -
பேச்சோடு பேச்சாகப் பேசுவதைப் போல... ரொம்ப இயல்பாக, அந்தத் தீப்பந்தத்தை வீசினாள், வேலக்கா.
“அடிக்கடி... அந்த வேப்பமரம் பக்கமாப் போவீயோ?”
“ஆமா... கடைக்குப் போறப்ப... தண்ணிக்குப் போறப்ப அந்த வழியாப் போவேன். அதுக்கென்ன?”
“அங்க நடராசன் உக்காந்திருப்பானோ?”“யாரு? அந்த புதுப் பணக்காரனா? வட்டிக்குக் கடன் குடுத்து வாங்குறதைப் பொழைப்பா வைச்சிருக்கானே.. அவனா?”
“அந்த எளவட்டந்தான்;”
“அதுக்கென்ன?”
“ஒறங்குதுக்குக் கண்ணை மூடுனா... நீதான் கனாவுலே வாரீயாம். அப்புறம் ஒறக்கமே வர்றதில்லியாம். ஒம் மேலே அப்படிச் சொக்கிப் போய்.. இருக்கானாம்.”
தீப்பந்தத்தால் முகத்தில் அறைந்த மாதிரியிருந்தது, விஜயத்துக்கு. வெலவெலத்துப் போனாள். 'இப்படி ஒரு மலப் பேச்சு முகத்துக்கு நேராக வந்து விழும்' என்று கனாக்கூட கண்டதேயில்லை அவள். அத்து மீறலான அசூயை. கற்பனை செய்ய முடியாத அருவருப்பு.
“அடி செருப்பாலே... நாயை” என்று பீறிட்டு வந்த உணர்வுப் பொறியான வார்த்தைகளைக் கூட சொல்ல வாயில்லாமல் ஸ்தம்பித்துப் போய்விட்ட விஜயம். மனம் முழுக்க தகிப்பு. திரேகமே பற்றி எரிகிற மாதிரியான தோர் தகிப்பு.
வந்த கடமை முடிந்ததென்று போய்விட்ட வேலக்கா.
விஜயத்தால் நிற்கக்கூட முடியவில்லை. திரேகமே நடுங்குவதைப் போலிருந்தது.
‘நா வேணும்னா லட்சணமாப் பொறந்தேன்? லட்சணமா இருந்து தொலைச்சுட்டா. அதுக்கு நா என்ன செய்ய? இந்தப் பாவியோட கொள்ளிக் கண்ணுலே படணும்னா... வேப்பமரம் வழியாப் போறேன்? இந்தச் சின்னப்பய சில்லறையைப் பாத்து சிரிச்சு மயக்கவா, அவன் முன்னாலே போறேன்? அந்தச் சின்ன நாயி சில்லறை... என்னோட கெண்டைக்காலுலே ஒட்டுற புழுதிக்குச் சமானம்.த்தூ!’
நினைக்க நினைக்க அவளுக்குள் குலை கொதித்தது. மனசெல்லாம் கிடந்து கசந்தது. அவமானத்தில் கூசிப் போகிற நினைவு.
‘ச்சேய்... நம்மளை எம்புட்டு ஏளனமா... இழிவா- நெனைச்சுட்டான்! ஏழையைக் கண்டா, மோழை (கொம்பில்லா மாடு)யும் பாயுங்கிறது சரியாய்ப் போச்சே. எளியவன் பொண்டாட்டின்னா- எல்லாருக்கும் மதினி முறையா? அப்படி ஒரு சின்னப்பய நினைக்குற அளவுக்கா- நா நடந்துக்கிட்டேன்? இருக்குற லட்சணத்தைக் குலுக்கி மினுக்கிக்கிட்டா-திரிஞ்சேன்?’
வேப்ப மரப் பாதையில், தான் நடந்து போய் வந்த நினைவுச் சுவடுகள். கடைக்கு-ஓடைக்கு-தண்ணீர் எடுக்க. எல்லாம் அந்தப் பாதைதான்.
அப்போதெல்லாம்... வேப்பமரத் திண்ணையில் அந்தக் கொரங்கு உட்கார்ந்திருக்கும். பல்லையிளித்துக் கொண்டு. கண்ணில் காம எச்சில் வழிய கழுத்துக்கு மேல் ஓநாய்த் தலையோடு.. உட்கார்ந்திருக்கும். உற்று உற்றுப் பார்க்கும். கண்ணால் துரத்தும். எத்தனையோ தடவைகள் இவளது உள்ளுணர்வில் உறுத்திய பார்வைகள்.
‘இது என்னடா- இச்சிலாத்தி’ என்று மனசுக்குள் சள்ளைப்பட்டிருக்கிறாள்.
வேப்பமரப் பாதையில்லாமல் வேறு பாதையிருக்கத்தான் செய்கிறது. மேலத் தெரு வழியாகப் போகலாம். ஆனால், அங்கே ஒரு சிக்கல். இவளுக்குப் பகையான ஒரு சின்னச் சிறுக்கியின் வீடு, அந்தப் பாதையில்.‘அந்தச் சனியன் மூஞ்சியில் முழிக்கக் கூடாதே’ என்ற வெறுப்பில்தான் வேப்ப மரப் பாதை. இங்கே. இந்த முள். இந்தச் சனியன். புதுப் பணக்காரனின் வாய்க் கொழுப்பு.
மனசுக்குள் -
அந்த ஓநாயின் மூஞ்சி. கறுத்தமூஞ்சி. மேல் உதட்டுக்கு மேல் மீசை ஓரத்தில் ஒரு மச்சம். கண்ணை உறுத்துகிற மச்சம். தொண்டையில் ஒரு கறுப்பு நரம்பு புடைத்து நெளிந்து இறங்கும். பனியன் போடாத நேரங்களில் நெஞ்சுக்குழியில் ரோம அடர்த்தி. பனியன் போட்டிருந்த தோலின் நிறமாற்ற அடையாளம்.
‘ச்சேய்... அந்த ஓநாய் மூஞ்சிக்கு இப்படி ஒரு சபலமா? எச்சில் வடிப்பா?’
இந்தக் கணத்தில்-
அவன் மனசின் ஆழத்தில் ஒரு பெருமித உணர்வு முகம் காட்டுவதை அவளே உணர்ந்து வியந்தாள்.
இப்படி ஓர் ஈனப் பார்வையை ஈர்த்துவிட்ட அழகின்-இளமையின் மீது அவளுக்கே ஒரு கர்வமா? தற்பெருமையா? அல்லது வேல்ராஜ் தந்த அஞ்சு வருஷ ருசியா? ருசி கண்ட பூனையின் கள்ளத்தனம், தன் மனசிற்குள்ளும் பம்மிக் கிடக்கிறதா? நெளிகிறதா?
நானும் எங்கோ... ஒரு மூலையில் சலனப்பட்டி ருக்கேனா? சபலப்பட்டிருக்கேனா? சதைத் திரட்சியின் மோகப் பேயின் ராட்சஸத்துக்குப் பலியாகியிருக்கேனா?
அவனது மேல் உதட்டு மச்சத்தை கண்டுணர்கிற அளவுக்கு நானும் உற்றுப் பார்த்திருக்கேனா?அப்ப.. மேலத் தெருப் பாதையை நான் தவிர்த்ததன் காரணமே... பொய்யா? அந்தப் ‘பகையாளியின் முகரையைப் பார்க்கக் கூடாது’ என்பது, நானே எனக்குச் சொல்லிக் கொண்ட சாக்குப் போக்குதானா? மாய்மாலம் தானா? ‘வேறு வழியில்லாமல் வேப்பமரப் பாதையில் போய் வந்தேன்’ என்பதுவும் பொய்யா? உள்மனச் சலனத்தால்தான் வேப்பமரப் பாதையா? விரும்பிச் செல்கிற மோகப் பாதையா? பாவப் பாதையா?
விலகி நின்று அவளை அவளே பார்த்துக்கொள்கிற போது.. தனது அந்தரங்கத்தைத், தானே உற்று நோக்கிய கணத்தில்-
தனக்குத்தானே மலமாய் - அருவருப்பாய்- அசூயையாய்..
‘ச்சேய்ய்’ என்று வந்தது. காறித்துப்பணும் போல மனசுக்குள் ஓர் உன்மத்தம். யார் மீது? அவன் மீதா? தன் மீதேதானா?
வெறிகொண்டவள் போல எழுந்தாள், விஜயம். உலர்ந்த சோற்றை... கழுநீர்ப்பானையில் கொட்டினாள். சம்பந்தமற்ற அந்த இளமதியத்தில் பச்சைத் தண்ணீரில் குளித்தாள். சிலீர் என்று பரவிப்படர்ந்த நீர்க் குளிர்ச்சி. மனத்தகிப்பு. ‘திகு திகு’ வென்று பற்றி எரிகிறது உணர்வுத் தீ
வேறு சேலையை உடுத்திக் கொண்டாள். ஈரக்கூந்தல் முதுகு பூராவிலும் பரவிப்படர்ந்து தொங்க..வேக வேகமாக நடந்தாள். ரௌத்ர காளியாக.
வேப்பமரப் பாதையில்தான் நடந்தாள்.
வேப்பமரத்திண்ணை. அவன் இல்லை.
இல்லாமற்போனாலும்... அவன் இருக்கும் திசை பார்த்து, காறித்துப்பினாள். “த்தூ ஊஊ...”
காறித்துப்பிவிட்டு வீடு திரும்புகிறபோது, அவள் மனசு வைராக்யமாய்ச் சொல்லிக் கொண்டது.
“வேப்பமரப் பாதையிலே நடக்குறது, இதுதான் கடைசித் தடவை.”