காகிதம்/003
குருவையாவுக்கு எழுபதுக்கு மேலாகி விட்டது வயசு. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. முழங்கால் மூட்டுவாதம். நடந்தால் ஒரு தளர்ச்சி. ஒரு நிரந்தரமான வலி.
‘எல்லாம்.. முடிஞ்சு போச்சு. மயானக் கரையிலே கட்டையை சாய்ச்சிருக்கணும். சாம்பலாயிருக்கணும். ஆனா-நம்ம பாடு ஓயலியே.’
ஒரு பெருமூச்சு அவரைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டது. அடைகிற பொழுதைப் பார்த்தார். நிறம் மாறுகிற வெயில். ‘கிடைகாவலுக்குப் போவணும். விடிய விடிய செம்மறியாடுகளோடு மாரடிக்கணும்’
இந்த நினைவே அவருக்குள் சோர்வூட்டியது. வேலைப் பளுவைச் சுமக்கிற சக்தி உடம்புக்கு இல்லை. மனசின் பலத்தில்தான் வண்டி ஓடுகிறது.
“இன்னொரு டீ போடப்பா. கிடைகாவலுக்குப் போவணும்.”
வீட்டுக்குப் போனால்... கெழடி எல்லாம் ரெடி பண்ணியிருப்பாள். கம்பளி, சாக்கு, போர்வை எல்லாம் மடித்துச் சுருட்டி கட்டியிருப்பாள். அதற்குள் டார்ச்லைட்டையும் சொருகியிருப்பாள். ஆட்டுக் கம்பையும் எடுத்து வைத்திருப்பாள். கூதலுக்குக் கதகதப்பாக இருக்கட்டும் என்று காக்கிச்சட்டை, ஸ்வெட்டர், மப்ளர் என்று எல்லாம் தயார் நிலையில் இருக்கும்.
குடித்த டீயின் ருசி நாக்கில் நின்றது. ஒரு தெம்பு வந்த மாதிரியோர் உணர்வு. பீடியைப் பற்றவைத்து நடந்தார். நடை கோணல். ரெண்டு காலும் ரெண்டு பக்கமும் விரிந்து நடக்க... நடையின் அசைவில் உடம்பே தேர்போல ஆடியது.
மனுஷர் தேர் மாதிரி கம்பீரமாய் இருந்தவர்தான். ஆள் இற்றுப்போய் விட்டார், இப்போது. சதையை யெல்லாம் உடைத்துக் கரைத்துக் குடித்துவிட்டமுதுமை. அவரையே பலவீனப்படுத்திய வாழ்வின் ஏமாற்றங்கள். கொடிய வஞ்சனைகள். தாளமுடியாத அதிர்வுகள்.
பெற்ற பிள்ளைகள் வைத்த தீ. மூன்று ஆண்மக்கள். மூன்று சிங்கங்கள். உள்ளூரிலேயே குழந்தையும் குட்டியுமாய் குடும்பமாயிருக்கிறார்கள். இருந்து என்ன செய்ய? வயித்துக் கஞ்சிக்கு அலைய விட்டுட்டாங்களே.. சாகப் போகிற வயசுலே பாடுபட வைச்சிட்டாங்களே... பாவிப்பயக..! உசுரோட கொள்ளி வைச்சுட்டாங்களே...
குருவையா அந்தச் சின்ன ஓட்டுச் சாய்ப்பு முன்பு நின்றார். முற்றத்தில் கட்டிக் கிடந்த வெள்ளாட்டுக்கிடாய்க் குட்டி. அகத்திக்கொழையை 'நறுக், நறுக்' கென்று கத்தரித்துக் கொண்டிருந்தது. நடைச் சத்தத்திலேயே இவரது வாசத்தை உண்ர்ந்துகொண்டு, பாசத்தோடு, நிமிர்ந்து பார்த்தது.
‘இந்தக் கிடாய்க்குட்டிக்கு இருக்குற பண்புலே பத்துலே ஒரு பங்கு நம்ம பயகளுக்கு இருந்தாக்கூடப் போதுமே.! நன்றி விசுவாசங்கெட்ட பயக’
எரியும் மனசுக்குள்ளிருந்து ஜ்வாலைவிடும் நினைவுகள். நினைவுகளின் வெக்கை.
நின்று நிதானித்த கிடாய்க்குட்டியின் சலனமின்மையில், நின்றுபோன கழுத்து மணியோசை. அதிலேயே இவரது வருகையை நுகர்ந்துவிட்ட கெழடி... கழுத்தை வாசல் பக்கமாய் நீட்டினாள். “வந்துட்டீகளா?”
“ம்...”
“சாப்ட்டுக்கிடுதீகளா?”
“போடு. ஏதாச்சும் போட்டு அடைச்சுக்கிடணும்லே?”
கிழடி இவரை விடவும் நொடித்துப் போயிருந்தாள். தோலைப் போர்த்திய எலும்புக்கூடாகிப் போய்... அதன் குழல் வாய்க்குள் ஊசலாடுகிற உயிர்க்காற்றாகி..
சாப்பிட்டு முடித்தார். நரைத்த மீசையை ஒதுக்கி விட்டு நீவி விட்டுக் கொண்டார்.
பீடியைப் பற்றவைக்கப் போனவரை... கிழடி கடிந்தாள்.
“ஏய் கெழட்டுச் சனியனே... அதுக்குள்ளே எதுக்கு இந்த நாத்தத்தை வாய்லே சொருகுதீக?”
“பீடி குடிச்சா...ஒனக்கென்ன வந்துச்சு?”
“வவுத்த வலிக்கு மாத்திரையும் டானிக்கும் குடிச்ச பிறகு பத்தவைக்க வேண்டியதுதானே?”
“அது வேற... இச்சிலாத்தி. ச்சே!”
அவரது முகச் சுருக்கங்களில் ததும்பி நின்றன சலிப்பும், எரிச்சலும்.
வாயில் வைத்த பீடியை எடுத்துக் காய்ந்த தலை முடிக்குள் சொருகிக் கொண்டார். கிழடி தந்த மாத்திரையை ஏழு கோணலாய் நெளிந்த முகத்தோடு பார்த்தார். கசப்பும் வெறுப்புமாய் விழுங்கினார். ரோஸ்கலரில் சுண்ணாம்புக் கரைசலைப் போலிருந்த டானிக்கையும் குடித்தார்.
கிடைகாவல் தந்த சீதனம் இந்த வயிற்றுவலி. கொதி வெயில்பட்ட புஞ்சை மண்ணில் படுப்பதால் வந்த சூடு. குடல்புண், இரைப்பை முழுக்க புண். பசித்தாலும் வயிறு வலிக்கும். சாப்பிட்டாலும் வயிறு வலிக்கும் சாஸ்வதரணம். ரண அவஸ்தை.
என்ன செய்வது! கிடைகாவலுக்குப் போகாமல் எப்படி உயிர் வாழ? எதைத்தின்று ஜீவனம் செய்ய? வருமானம்? வேறு என்ன தொழில் செய்ய முடியும், இந்த வயசில்? உயிர் வற்றிப்போன வெறும் வயசில்.
எல்லாம் ஆயிற்று. காக்கிச் சட்டையை மாட்டி, ஸ்வெட்டர் (ஒரு பட்டாளத்தார் உபயம்தான் எல்லாம்) மாட்டி, மப்ளரையும் கட்டிக் கொண்டார். ஆட்டுக்கம்பு நுனியில் கிழடி கட்டி வைத்த கம்பளிச்சுருட்டும், காபி போடுகிற அலுமினியச் சட்டி, தண்ணீர் கேன் உள்ள தூக்குப்பையும் தொங்க... ஆட்டுக்கம்பு தோளில் பற்றியிருக்க
அவரது நடை. இயல்பு தப்பிய தேரின் நடை.
சாயங்காலம் முடிந்துவிட்டது. அந்தி இருட்டு வந்து கொண்டிருந்தது, தானடித்த மூப்பாக. நரைத்த வெள்ளை இமைகள் 'பொசுக் பொசுக்'கென மூடி முழித்தன. எதிர்வரும் ஆளை இனம் காண முயன்று திணறின. ம்ஹூம். முடியவில்லை. குரலில்தான் ஆள் புரிகிறது. சத்தமாகவே முகம் காட்டுகிற உலகம். காதே கண்ணாகிப் போன அவலம்.
“தாத்தா...எங்கே.. கெடை காவலுக்கா?”
“ஆமய்யா. யாரது? ராசமணி மவனா?”
“ஆமா தாத்தா... கண்ணுக்கு ஆளே தெரியலியே, நமக்கு ஆடுக எப்புடி தெரியும்? விடிய விடிய அதுகளைக் கட்டிக்கிட்டு எப்படி மாரடிப்பீரு?”
“கஷ்டந்தான்...ஆனாலும் சமாளிச்சிடுவேன்.”
“எப்படி தாத்தா?”
“பத்து வயசுலே ஆட்டுக்கம்பைத் தூக்கிக்கிட்டு, ஆட்டு வாடையை ஏத்துக்கிட்டு மேய்க்க ஆரம்பிச்சவன், நா. மனுச சகவாசத்தைவிட ஆட்டுச் சகவாசம் ரொம்ப சுத்தமாய் அத்துப்படி. அதுக ரோம அசைவுலேயே ஒரசுற சலன சத்தத்துலேயே- அதுக மனசு புரிஞ்சு போகும். கள்ளத்தனம் புடிபட்டுடும். அதுக்கேத்தாப்புலே அடக்கி வச்சிரலாம்.”
“ம்” கேட்டவன் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தான்.
“குருவையாக்கோனாரு கெடைகாவல் காத்து-தப்பு வந்ததாக நீ கேள்விப்பட்டிருக்கீயா, இதுவரை? ஆடுக தப்பிப் போய் வெள்ளாமையிலே விழுந்துச்சுன்னு இதுவரைக்கும் ஒரு தாக்கலாச்சும் உண்டா?”
அவரது கேள்வியின் கம்பீரம். நிமிர் சுடராக ஒளி வீசுகிற தன்னம்பிக்கை. நரைத்த மீசையில் ஒரு நிமிர்வு. உணர்வுப் பிரகாசம்.
அந்தக் கணம்–
அவருக்கே அவர் அருமையானவராக- உன்னத மானவராக- மொத்த வாழ்க்கையும் முழுமையாக அர்த்தப் பட்டிருப்பதாக-
ஒரு சுயதரிசனம். சுய பெருமிதம். அவர் நெஞ்சு விம்மியது.
அவரது மனசுக்குள் பூக்களின் சிரிப்பு. பூவிதழ்களின் மென்வருடல். மாயலோக போதை மயக்கம்.
தெருப் புழுதிகூட பூமெத்தையாக உள்ளங்காலை முத்தமிடுவது போலிருந்தது.
எல்லாம்... சில கணம்தான்.
அதற்குள்-
பூமனசைக் குத்திக்கிழிக்கிற முட்களாக மகன்களின் நினைவு. வளர்த்து ஆளாக்கிய மகன்கள். கல்யாணம் செய்து வைத்து, கண்டு ரசித்த மகன்கள். கஞ்சி ஊற்றாமல் வஞ்சனை செய்த மகன்கள். பாசமற்று, ஈரமற்று, பாறைகளாகிப் போன மகன்கள். இந்த சமூக அமைப்பைப் போலவே உலர்ந்து, காய்ந்து, குரூரமாகிப்போன மகன்கள்.
அவர் மனசெல்லாம் முட்கள். அதன் குத்தல்கள். அவற்றின் கிழிப்புகள். அதன் ரணம்.
அவருக்குள் கசந்து அழறியது.
மூத்தமகன் அடிஉதட்டைக் கடித்துக் கொண்டு ஓங்கிய கையோடு அடிக்கப் பாய்ந்து வந்த அந்த நாளின் பயங்கரம்.
ரெண்டாவது மருமகள் இவரது வட்டிலை தெருப்புழுதியில் கோபவசவுகளோடு வீசியெறிந்த அந்த அவமான வேதனை...
புருஷனுடன் வாய்ச்சண்டை. அடிதடி. அடிபட்ட கொதிப்பில் அழுது புலம்பிய மூன்றாவது மருமகள், “எல்லாம் இந்தக் கெழட்டுச் சனியன்களாலே வந்த வெனை. இதுக நம்ம காலைச்சுத்துன பாம்புகதான்.”
முற்றி உலர்ந்த கிழட்டு மனசுக்குள் விழுந்த செருப்படிகள்
மணிமுத்து புஞ்சை மிருதுவாக இருந்தது. உழுது புரட்டப்பட்டிருந்தது. ஈரல்கட்டி மாதிரி மினுமினுக்கிற மண். இதில் தான் கிடை.
செம்மறியாடுகளை துண்டம் துண்டமாய் (துண்டம்=ஏறக்குறைய நாற்பது ஆடுகள்) கொண்டு வந்து சேர்ப்பார்கள். மேய்ந்த ஆடுகள், இரவு முழுக்க அசை போடும். படுத்துக் கிடக்கும். மூத்திரம் பெய்யும். புழுக்கை போடும். இதுதான் புஞ்சைக்கு உரம்.
ராத்திரி முழுக்க விழித்திருக்கணும். ஒரு மணிக்கொரு தடவை படுத்துக் கிடக்கிற ஆடுகளை உசுப்பி, வட்டமடித்து இடம் மாற்றிப் படுக்க வைக்கணும். கள்ள ஆடுகள் சிலது தப்பிப்போய் பக்கத்து வெள்ளாமைகளை மேய்ந்து நாசமாக்கிவிடும். அப்படியாகாமல் காப்பதில் தான், கிடைகாவலின் முக்கியத்துவமே.
வெயில் காலத்தில் மட்டுமே கிடை போட முடியும். ஒரு கிடைகாவலுக்கு அறுபது ரூபாய் சம்பளம். மழை நாளில்....? குருவையா பாடு திண்டாட்டம்தான். பீடி வாங்கக் கூட துட்டு இருக்காது.
புஞ்சை மூலையில் மண்கட்டிகளைக் காலால் தள்ளினார். சாக்கை விரித்தார். படுத்துவிட்டார். நடுச்சாமம் வரை புஞ்சைக்காரன் பொறுப்பு. அப்புறம்தான் இவர்.
ஆகவே முன்கூட்டியே உறங்க ஆரம்பித்து விட்டார்.
மணிமுத்து அவரை உசுப்பினான், நள்ளிரவில்.
“நேரமாயிருச்சா?”
“ம்."
அள்ளியிறைத்த சோளமாக ஆகாய நட்சத்திரங்கள்.
“காப்பி போட்டுட்டீயா?”
“போட்டேன் மாமா. உங்களுக்கும் வைச்சிருக்கேன். ரெண்டு தடவை குடிச்சுக்கலாம், நீங்க.”
குருவையா முகத்தை அழுந்தத் துடைத்தார். உறக்கத்தையும் தான்.
“சரி..மணிமுத்து, நீ வீட்டுக்குப் போறீயா?”
“ம்.”
“பேர்வையடிச்சீயா?”
“மூணு பேர்வையடிச்சேன்.”
“மணிமுத்து-ஆடுகளை நல்லபடி காவல் காத்தீயா? எது ஒண்ணும் கள்ளத்தனமாய்த் தப்பிப்போகலியே?”
“இல்லே. நல்லா பாத்துக்கிட்டேன். நீங்களும் பாத்துக்கங்க.
எழுந்தார். கம்பைக் கையில் எடுத்தார். ஆடுகளைச் சுற்றிப் பார்த்தார். அதன் கொச்சை நெடி. மூத்திர வாசம். அசைபோடுகிற அழகு. மூக்குச்சளி சிதறித் தெறிக்க அதன் செருமல்கள். இவரை அடையாளம் பார்த்துக் கொண்டே அன்புக் கனைப்பு.
இரவின் கனம். தொலைதூரத்தில் கூட்ஸ் ஓடுகிற சத்தம். லாரிகளின் மங்கலான இரைச்சல். ஆலைச் சங்கின் சத்தம். இரவு நீளமாகிக் கொண்டிருந்தது.
மறுநாள் டீக்கடையில் உட்கார்ந்திருந்த இவரைத் தேடிக் கொண்டு ஒருவன் அரக்க பறக்க ஓடி வந்தான்.
“தாத்தா...”
“என்னப்பா?”
“ஊர்க் கூட்டம் கூடியிருக்கு. உங்களைக் கூப்புடுறாக”
“என்னை எதுக்கு?”
“ஒமக்கு வெஷயமே தெரியாதா? நேத்து கெடை காவல் காத்தீர்லே?”
“ஆமா...”
“அதுக்கு ரெண்டு புஞ்சை தள்ளி பருத்தி வெள்ளாமை. தண்ணி பாய்ஞ்ச புஞ்சை. பூராத்தையும் ஆடுக மேய்ஞ்சிருச்சு.ஆட்டுத்தடம் அப்படியே கெடக்கு-”
“ஐயய்யோ!”
“ஊர்க் கூட்டத்துக்கு வருவீகளாம்.”
அவருக்குள் கத்திக்குத்து விழுந்த மாதிரியிருந்தது. அடி மனசில் குப்பென்று பற்றிக்கொண்ட தீ. இவர் வாழ்ந்த நாட்களில் - இத்தனை வருஷ சர்வீசில்- இப்படியொரு தவறு நிகழ்ந்ததேயில்லை. ஊர்க் கூட்டத்தில் குற்றவாளியாய் நின்றதேயில்லை. தலை குனிந்ததேயில்லை.
‘சாகப்போற வயசுலே இப்படியொரு அவமானமா?’
ஊர்க்கூட்டம்னா... சும்மாவா? ஊரே கூடியிருக்குமே.. எல்லாக் கண்ணும் இவரையே பார்க்குமே... ஆள் ஆளுக்குக் கேள்வி கேட்பார்களே.. கேலி செய்வார்களே.. அழிமானம் ஆன புஞ்சைக்காரன் ஆவேசமாய் வைவானே... சபிப்பானே... ஆயிரம் ரெண்டாயிரம் என்று அபராதம் போடுவார்களே...
ஐயய்யோ... இத்தனை அவமானத்தையும் அனுபவிக்கவா? அதை விடச் செத்துத் தொலையலாமே... இனிமே இருந்து எந்த ராஜ்யத்தைக் கட்டியாளப் போறோம்_?
அவருக்குள் அடிபட்ட பறவையாகத் துடிக்கிற நினைவுகள். பயமும் திகிலுமாய் நனைந்து போகிற மனசு.
காலடித் தரையே உருவிக் கொண்டோடுகிற மாதிரி பகீர் உணர்வு. மனப்படபடப்பு, மயக்கமும் தலைசுற்றலுமாய் உலகமே சுழல்கிற மாதிரியோர் பிரமை.
அந்த நிலையிலும் அவருள் ஒரு நெருடல்.
நடுச்சாமத்துக்குப் பிறகு, இவரது காவலில் ஆடுகள் தப்பிப்போகவேயில்லையே... ஒன்றிரண்டு கூட நழுவிப் போகவில்லையே..
அப்படீன்னா._?
மணிமுத்து காவலில்தான் தப்பு நடந்துருக்குமா? ஒப்புக் கொள்வானா? தைர்யமாய் நேர்மையாய் ஒப்புக் கொள்வானா? அந்த நேர்மையையும், நாணயத்தையும் இந்தத் தலைமுறை மனுசன்கிட்டே எதிர்பார்க்க முடியுமா?
அவன் ஒப்புக் கொள்ளாவிட்டால்... இவர்தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்தான் கிடைகாவல்.
மரண விளிம்பில் தடுமாறும் நம்பிக்கைச் சுடர்.
மணிமுத்துவைத் தேடி ஓடினார். அகலித்த முழங்கால்கள். இயல்பு தப்பின தேரின் சாய்வு, எலும்புத் தோலின் நகர்வு.
மணிமுத்து கள்ள முழியாக முழித்தான். தனது காவல் நேரத்தில் தப்பே நடக்கவில்லை என்று சாதித்தான்.
குருவையாக மருகி மருகிக் கேட்டார். உயிரை நாவில் வைத்துக் கேட்டார். தவிப்போடு கேட்டார்.
“சாமி சத்தியமா ஏங்காவல்லே தப்பே நடக்கலே மாமா.”
‘சாமிசத்தியம்’ என்றதும் வாயடைத்துப் போனார், குருவையா. இதுக்குமேல் பேச என்ன இருக்கு?
மணிமுத்துவின் கள்ளமுழியை வெறுப்பும் கசப்புமாய்ப் பார்த்தார். உண்மையைத் தொலைத்த தலைமுறை. நேர்மையையும், நாணயத்தையும் இழந்த தலைமுறை. பெற்ற தாய், தகப்பனுக்குக் கஞ்சி ஊற்றிக் காப்பாற்றுகிற கடமையை வெட்கமில்லாமல் கழற்றிப் போட்ட ஈரமற்ற தலைமுறை.
அவருக்குள்.
தனது ரத்த உயிர்கள். மகன்கள்! உலகமே மகன் மயமாகிவிட்ட மாதிரியோர் பிரமை. வஞ்சனையின் விஷக்காற்றின் முற்றுகை.
மணிமுத்துவை விட்டு விலகி நடந்தார். பாதம் கனத்தது. புகலற்ற நிலையில் ஊர்க் கூட்டத்தை நோக்கி நடந்தார்.
நெஞ்சுக்குள் ‘சுருக்’கென்று ஒரு வலி. மின்சாரமாய்த் தாக்கிப் பரவிய வலி.
நடந்தார்.
எந்த இடத்தில் விழுவாரோ..