காகிதம்/004
ஊருக்குப் புறப்படுகிற பரபரப்பில் இருந்த விநாயகம், ‘இந்தத் தடவையும் ஏதாச்சும் இடைஞ்சல் வந்து சேருமோ?’ என்று பயந்து தவித்தான். பயணம் நின்று போகுமோ என்று பதைத்தான்.
மர்ம முகம் காட்டி இருட்டாக மிரட்டியது ரெண்டு நாள் அனுபவங்கள்.
திருவிழாவுக்குப் போகிற கிராமத்துச் சிறுவனின் மனசைப் போல விநாயகம் ஊருக்குப் போகப் பறந்தான். ஆவலும் ஆர்வமும் அவனுக்கு றெக்கைகளாக முளைத்திருந்தன. தரையில் கால் பாவாமல் அரக்கப் பரக்க அலைந்தான்.
அவனை ஒரு வேடிக்கைப் பொருளைப் போல பார்த்தாள் ராஜம். ஓடியாடி சேட்டை செய்யும் பிள்ளையைப் பார்த்து ரசிப்பதைப் போல, பரிகாசமும் பெருமிதமும் கலந்த குறுஞ்சிரிப்போடு பார்த்தாள், புருஷனை.
“என்ன... மதிய வண்டிக்காச்சும் போயிருவீகளா, போகமாட்டீகளா?”
“இல்லே இல்லே.. இப்ப எட்டு மணி வண்டிக்குப் போயிருவேன்.”
தகரப்பெட்டியைத் திறந்தான். அந்துருண்டை வாசம் ‘கம்ம்’மென்று மணத்தது. வெள்ளைவேட்டியை ஒரு பூவைப்போலப் பதனமாகத் தொட்டு எடுத்தான். விரித்தான். உடுத்திக் கொண்டான்.
மறுநாள் உடுத்திக்கொள்ள ஒரு செட் எடுத்து மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டான்.
பனியனை மாட்டிக்கொண்டான். தலையில் எண்ணெய் தேய்த்தான். கால் கையெல்லாம் தேய்த்தான்.
அப்பவும்...அவன் மனசுக்குள் அதே பதைப்பு.
‘ஏதாச்சும் இடைஞ்சல் வந்துருமோ... கழுத்தாம் பிடியாக ஏதாச்சும் ஒரு காரியம் காலைப் பிடித்துக் கொள்ளுமோ?’
மனசு ‘திக், திக்’கென்றது. ஊரில் அகப்பட்ட எல்லாச் சாமிகளையும் மனசுக்குள் வேண்டிக் கொண் டான். ‘வில்லங்கம் ஏதும் நேராமல் ஊரு போய்ச் சேரணுமே..’
நியாயமாகப் பார்த்தால், முந்தாநாளே புறப்பட்டிருக்க வேண்டிய பயணம் இது.
...பதினைந்து மைல் தள்ளி ஒரு கிராமம். இந்த ஊர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து, 2-60 டிக்கெட் வாங்கினால்.. அந்த ஊரில் இறக்கி விட்டுவிடும்.
அந்த ஊரில் விநாயகத்தின் சிநேகிதக்காரன் முத்துசாமி. சிநேகிதம் என்றால், சாதாரண சிநேகிதமல்ல. சின்ன வயசு முதல் உயிர் பின்னி வளர்ந்த சிநேகிதம். இவன் வீட்டுக் கம்மங்கஞ்சியை அவன் குடிப்பான். அவன் வீட்டுச் சோளக்கஞ்சியும் மோரும் கரைத்து, இவன் குடிப்பான். ஒருநாள் ரெண்டு நாளல்ல... பல வருஷம்.
இத்தனைக்கும்... ரெண்டுபேரும் வேறு வேறு ஜாதி. ஜாதி அவர்கள் சிநேகிதத்துக்கு எந்தக் கணத்திலும் இடைஞ்சலாக இருக்க அவர்கள் அனுமதித்ததில்லை.
அவன் தங்கச்சிக்கு நாளை கல்யாணம்.
“ரெண்டு நாளைக்கு முந்தியே நீயும் ராஜமும் வந்தாகணும். இல்லேனா... எனக்குக் கேட்ட கோபம் வந்துரும். ஆமா சொல்லிட்டேன்.”
சண்டைக்குக் கூப்பிடுகிற மாதிரி கோபமும் கண்டிஷனுமாகச் சீறி விழுந்தான் முத்துசாமி. ‘திகிடு முகுடாய்’ எச்சரித்தான். பாசத்தின் மூர்க்கம். நட்பின் மூர்த்தண்யம். நாசூக்கு, பாவலா, குளிர்ச்சிரிப்பு என்று எந்தப் போலித்தனத்துக்கும் இடமில்லாத வெள்ளந்தியான சிநேகிதம்.
இவனும் சண்டைக்காரன் மாதிரியே ‘கடாபுடா’ என்றுதான் பதில் சொன்னான்.
“எந்தங்கச்சி கல்யாணத்துக்கு எப்ப வரணும்னு எனக்குத் தெரியும்ல? இவரு தாம்பாளம் வெச்சு அழைச்சாத்தான் வருவோமா? எனக்குத் தெரியாதோ? போ..போ...நாங்க வருவோம்...”
முந்தாநாளே ராஜத்தைப் புறப்படும்படி துரிதப்படுத்தினான் விநாயகம். அவள் ஒரேயடியாக மறுத்து விட்டாள்.
“நிறைமாசச் சினையா ஜெர்சிப்பசு நிக்குது. இன்னிக்கோ, நாளைக்கோ கன்னுபோடும். பத்தாயிரத்துக்கு ஏவாரிக கேக்காக அப்படிப்பட்ட பணம்பெத்த மாட்டைப் போட்டுட்டு.. கல்யாணத்துக்கும் காட்சிக்கும் நாம் ஜோடி சேர்ந்து போகவா? அது நல்லாயிருக்குமா? ஊர்லேயிருக்குறவுக கைகொட்டிச் சிரிக்கமாட்டாக?”
அவள் மறுப்பில், மறுக்க முடியாத நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், இவனுக்கு ஒப்புக் கொள்ள முடியவில்லை.
இவன் மட்டும் ஒற்றையாக எப்படிக் கல்யாணத்துக்குப் போவது? அதுவும் உரிமைப்பட்ட வீட்டுக் கல்யாணத்துக்கு. அது ரொம்ப வேற்றுமையாகத் தெரியாதா? மொய் செய்ய மட்டும் வருகிற வேற்றாளுக்கும் இவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடாதா?
விடாமல் வற்புறுத்தினான். வீடு சண்டைக் காடாயிற்று. காச்சு மூச்சென்று சத்தக்காடு. வசவும் விசும்பலுமாக வீடே ‘கசாபுசா’வென்று கிடந்தது
நேற்றுதான் சுமுகமாயிற்று. தான் மட்டும் புறப்படுவது என்று முடிவு செய்தான், விநாயகம்.
மதிய பஸ்ஸுக்குப் போவது என்று திட்டம். எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. வேலைகள் றெக்கைகட்டிப் பறந்தன. காலில் செருப்பை மாட்டிக்கொண்டு புறப்படும் தருணம்... வாசலை மறித்துக் கொண்டு ஒரு முக்கிய உறவினர்.
இவனுக்குள் மகா எரிச்சல். குப்பென்று பற்றிக் கொண்ட தீ. திகு திகுவென்று தகிப்போடு பரவுகிற தீ.
ஆனாலும், முகம் நிறையச் சிரித்தாகணும். உறவினரை உபசாரமாகப் பேசி வரவேற்றாகணும். சிரித்தான்.
“வாங்க மாமா... வாங்க மாமா..”
“ஆமா மாப்ளே.. எங்கேயோ கெளம்புன மாதிரித் தெரியுது. தூரவா?”
“ஆமா மாமா ஒரு முக்கியமான கல்யாணம். போகலேனா சண்டைக்கு வருவான். நேத்தே போயிருக்கணும். போகலே. இப்பவாச்சும் போயாகணும்.”
“நானும் முக்கியமான காரியமாத்தான் வந்துருக்கேன். நீங்க அடுத்த வண்டிக்குப் போங்க, மாப்ளே.”
முக்கியம், நிஜமாகவே முக்கியம்தான். ஒரு நெருக்கமான உறவுப் பெண்ணின் குடும்ப வழக்கு பற்றிய விஷயம்.வாழ்க்கையா - விவாகரத்தா என்று நிர்ணயிக்கிற அளவுக்கு முக்கிய விவகாரம். அந்த முக்கிய விவகாரம் முடிய... அன்றைய பொழுது சரியாயிற்று. ரெண்டாம் நாளும் போச்சு, நாளை கல்யாணம்.
இப்பவாச்சும் போயாகணும். போகலேன்னா... முத்துசாமி காறித்துப்புவான். ‘நீயெல்லாம் ஒரு மனுஷந்தானா?னு’ நாக்கைப் புடுங்கிக்கிடுற மாதிரி ‘நறுக்கு’னு வேள்வி கேப்பான். கேட்டா வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்.
முத்துசாமி நல்ல மனசுக்காரன். இவனுக்கும் ராஜத்துக்கும் வேட்டி, சட்டை, சேலை எல்லாம் புதுசாக எடுத்துத்தர எண்ணியிருந்திருக்கிறான். கல்யாணச் செலவு கையைக் கடிக்க, அந்த எண்ணத்தை வருத்தத்தோடு கை விட்டிருக்கிறான். அதை அவனே அன்றைக்குச் சொல்லிச் சொல்லி மருகின விதம்... இயலாமை குறித்துப் புலம்பிய விதம்..
ராஜம்தான் ஆறுதல் சொன்னாள். “விடுங்கண்ணாச்சி... இதுக்குப்போய் வருத்தப்பட்டுக்கிட்டு... நாளும் பொழுதும் கெடக்கு. நாம எப்ப வேணும்னாலும் நல்லது பொல்லது கொண்டாடிக்கலாம்.”
அப்பேற்பட்டவன் வீட்டுக் கல்யாணத்துக்கு-நாலு பேரைப்போல நாலாம் மனிதரைப்போல... நாமும் கல்யாணத்தன்னிக்குப்போய் நிக்கிறதா? நின்னா... அது நியாயமா? ச்சே!
“அப்ப...நா போயிட்டு வரட்டா..?”
“போயிட்டு வாங்க.”
“பசுவைப் பாத்துக்க.”
“ஆட்டும்.”
வீட்டு முற்றத்தில் காலெடுத்து வைத்தான் விநாயகம். ஒருத்தன் ஓட்டமாக ஓடி வந்தான். உயிர்தெறித்துப்போக, வெறி வேகமாக ஓடி வந்த அவன் முகத்தில் தாங்க முடியாத வெலவெலப்பும் திகிலும்...
விநாயகமும் வெலவெலத்துப்போய்..
“என்னப்பா?”
“உங்க கீழக்காடு பருத்திப் புஞ்சை இருக்கு இல்லே?”
“ஆமா...”
“ஒன்றைக் குறுக்கம் புஞ்சையும் ஒரு செடி விடாம் ஆடுக மேய்ஞ்சிருச்சு. வெள்ளாமை பூராவும் சர்வநாசம், பானைஞ்சாயிரமும் படு நாசம்.”
விநாயகத்துக்குள் ‘திக்’கென்றது. நெஞ்சுக்குள் அடைப்பது போல ஒரு திணறல், ‘இன்னது நடந்தது’ என்று நிதானிக்க முடியாத மனப்பதட்டம். குருட்டுத் திகைப்பு.“ஐயையோ... ஏங்குடியே நாசமாப் போச்சே..” என்று ராஜம் வைக்கிற ஒப்பாரி. தலையில் ‘மடேர், மடேரெ’ன்று அடித்துக் கதறுகிற பரிதாபம்.
விநாயகத்துக்குள் பயப் படபடப்பு. நெஞ்சுக்கூடே வெறுங்கூடாகிப் போன மாதிரி. பகீரென்கிற சூன்யம்.
காயும் பூவுமாக நிறைமாசக் கர்ப்பிணியாகத் தளதளத்து நின்ற தன் புஞ்சையை, ஆடுகள்மேய்ந்த பிறகு- வெறும் குச்சிகளாக - எலும்புகளாக - நிற்கிற பரிதாபம். மனசுக்குள் தோன்றி மறைந்த அந்தக் காட்சியே... அவனுக்குள் தீ வைத்த மாதிரியிருந்தது.
வந்திருக்கும் நாசத்தின் கனம், அதன் பரிமாணம்.
அவன் மனசு கிடந்து துடித்தது. ஒரு வருஷ உழைப்பே நாசம். வெள்ளாமையே அழிவு.
என்ன செய்ய?
ஆட்டுக்காரனைத் தேடணும். சண்டை போடணும். பக்கத்து ஊரு டவுனுக்கு ஓடணும். போலீஸ் ஸ்டேஷன் போகணும். அததுக்கு ‘செல்வாக்கான’ ஆளைப் புடிக்கணும். பணம் புரட்டணும். வேனைப் புடிக்கணும். சேதாரத்தை போலீஸ் பார்க்க வைக்கணும்..
இப்படி நிறைய்ய்ய்ய்ய்ய ‘ணும்’கள்.
சூறாவளிக்குள் சிக்கிய துரும்பாக இவன் சுழன்று சுழன்று, புழுதி பறக்க ஓடித் தவித்தான். மறுநாளும் தவிப்போடு ஓடினான். சோகமும் துயரமுமாக வீடே இழவு விழுந்த வீடாகிப் போக... தகிப்பும் துன்பத் துடிப்புமாகத் திரிந்தான். கல்லெறிபட்ட மைனாவாக இவன் உயிர் துடிக்க ஓடித்திரியும் போது..
முத்துசாமியை நினைக்கக்கூட இயலவில்லை.
அதே நேரத்தில்..
பதினைந்து மைல் தள்ளிய அந்தக் கிராமத்தில்...
களைகட்டிப் பரபரத்துக் கொண்டிருந்த கல்யாண முகூர்த்த நேரத்தில்...
வாசலுக்கு வந்துவந்து பார்த்தான், முத்துசாமி. உயிரையே கண்ணில் வைத்து உற்று உற்றுப் பார்த்து அவன் கண்ணே பூத்துப்போயிற்று.
சிநேகிதனைக் காணாத முகவாட்டம். அவனது வாட்டத்தில் மனம் சோர்ந்த அவனது மனைவி.
“என்னங்க..இன்னும் வரலைல்லே, உங்ககூட்டாளி?”
“வரலே..”
“என்ன காரணமாயிருக்கும்?”
“தெரியலே..”
“புது வேட்டி புதுச்சீலை எடுக்கணும்னு நெனைச்சுட்டு, எடுக்காம வுட்டுட்டீகளே.. அந்தக் கோபம்தான் காரணமாயிருக்குமோ..?”
“என்ன இழவோ தெரியலே. எம்புட்டுப் பழகி என்ன செய்ய? மனுசன் கொணத்த மனுசன் அறிய முடியலியே. எந்த நாய் வந்தாலும் வராட்டாலும் சரிதான்... நம்ம வீட்டுக்கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். போய் ஆகுற வேலையைப் பார்ப்போம்.”
அவன் குரலில் எல்லையற்ற விரக்தியும் வெறுப்பும் கொப்பளித்தது.