காகிதம்/005
பகலின் மழலைப் பருவமாய் வைகறை. அஞ்சு மணிக்கு வழக்கம் போல் வேதக்கோவில் மைக்செட் முழக்கம்.
அந்தப் பாட்டுச் சத்தத்தில் பாண்டிக்கு முழிப்பு தட்டி விட்டது. கண்ணைத் திறக்க மனசில்லை. புரண்டு புரண்டு படுத்தான். அடித்துப் பிடித்துப் பரபரக்கிற மாதிரி புஞ்சை வேலை எதுவுமில்லை. மனசெல்லாம் நிரம்பி அமுக்கிக் கிடந்த சோம்பல். அசமந்தம்.
முற்றம் தெளிக்கிற மனைவி, புருஷனின் சோம்பலுக்காகத் திட்டுகிறாள். உறங்குகிற பிள்ளைகளையும் அதட்டுகிறாள். ‘சனியன்... இழவு...நாசம்.. மூதேவி’ என்று மங்கலகரமான சொற்கள், அந்த வைகறை இருட்டை அடித்துத் துரத்திக் கொண்டிருந்தன.
நச்சரிப்பு தாளவில்லை. நாற வாசலில் குடியிருந்தாலும் நச்சு (அரிப்பு) வாசலில் குடியிருக்க முடியாது. இது பெரும் தொல்லை.
‘எந்திருச்சிட வேண்டியதுதான். முகத்தைக் கழுவிட்டு, டீக்கடைப் பக்கம் போய் உக்காந்துட்டா... பொழுதைப் பேசியே கழிச்சிரலாம்.’
கண்ணைத் திறக்காமலேயே பெருமூச்சுவிட்ட பாண்டி. நெஞ்சுக்குள்ளிருந்து நெட்டித்தள்ளிக் கொண்டு வந்த கொட்டாவி.
வாசலுக்கு முகம் கழுவப்போனா... யார் முகம் தட்டுப்படுமோ? நல்ல சகுனம் அமையுமா? தீப்பெட்டி ஆபீஸுக்குப் போகிற சிறுமிகள்... தாவணிப் பெண்கள்... குங்குமப் பெண்கள்... சுமங்கலிகள் எதிர்ப்பட்டால் மனசுக்குத் திருப்தியாக இருக்கும்.
மனசுக்குள் வைகறைத் தென்றல் குளிர்ச்சியாய் வீசும். பொழுது முழுக்க அந்தச் சந்தோஷமும் இனிமைக் கரைசலுமாய் கரையும். நல்ல செய்திகளாக வந்து சேரும். நல்லதாகவே எல்லாம் அமையும். பாண்டிக்குள் அது பற்றிய யோசனைகள். அனுபவங்களை அசை போடுகிற நினைவுகள். அதில் கொஞ்ச நேரம் கழிய...
மனைவியின் நச்சரிப்பும் உச்சமாக..
பாண்டி நெட்டி முறித்துவிட்டு எழுந்தான். வேட்டியின் நழுவலை எட்டிப்பிடித்து... கட்டிக் கொண்டான். வாய்க்குள் நாற்ற ருசியான எச்சில்.
செம்பு நிறைய தண்ணீர் மோந்துகொண்டு.. தலைவாசலுக்கு வருகிறபோது,
மனசுக்குள் தயக்கம். பூவும் பொட்டுமாய் முகம் தட்டுப்படுமா? நல்ல சகுனம் அமையுமா?
ஏதாச்சும் தாலியறுத்த அமங்கல மூஞ்சி தட்டுப் பட்டுருமா?
பாண்டிக்குள் எறும்பு கடித்த மாதிரி சுருக்கிட்டது. வாசலில் நின்றான். படியில் கால் வைத்து எச்சிலைத் துப்பி விட்டு, செம்புத் தண்ணீரை வலது உள்ளங்கையில் சாய்த்துவிட்டு... குருட்டுக்காக்கா மாதிரி கள்ளப் பார்வையாகப் பார்த்தான். கழுத்தை ‘இங்குட்டும், அங்கிட்டுமாக’த் திருப்பி, தூக்கச் சடவையும் மீறியதிகிலான எதிர்பார்ப்பு, மனசுக்குள்.
தீ பிடித்த மாதிரியிருந்தது. குப்பென்று பரவிய அனலின் வெக்கை. கண்ணில் தட்டுப்பட்ட முகம்-
அமங்கல முகம். தாலியறுத்தவள். வாழ்க்கை முழுவதும் நார்ப் பறிந்து... சீப்பட்டவள். துன்பத்தையே தின்று ஜீவிக்கிற துர் அதிர்ஷ்டக் கட்டை. வெறுவாய்க் கட்டை மூஞ்சி. ஆவுடைச்சி.
மிளகாயை அரைத்துக் கன்னத்தில் அப்பிய மாதிரியிருந்தது பாண்டிக்கு. மனசெல்லாம் கிடந்து காந்தல் எடுத்தது. எரிச்சல் எரிச்சலாக வந்தது. சண்டாளமாய் வந்த ஆத்திரம்.
கடுப்பேறிய முகம். வெறுப்பின் மடிப்புகளோடு கோணலான முகம். அருவருப்பும் அசூயையுமாய் மனசுக்குள் குமட்டல்.
கூச்சமற்ற குரூரமாய்த் திட்டினான்.
“வெறுங்கழுதை. மூதேவி மூஞ்சியைக் காட்டிக் கிட்டு வீதியிலே வரணுமாக்கும், விடியக்காலையிலே? ச்சே. இவா... மொகரையிலே முழிச்சா... வெளங்குன மாதிரித்தான். இன்னிக்குப் பொழுது பூராவும் அமங்கலம் தான்.”
மனசின் வெக்கை, நீர்க்கொப்பளிப்பின் சத்த அதிர்வில் முகம் காட்டியது. காறிக் காறித் துப்பினான்.
பாண்டிக்குள் திகில். ‘இன்னிக்கு என்னென்ன கெட்ட செய்தி வருமோ? எவன் எவன் கூட எல்லாம் சண்டை சத்தம் வருமோ? என்னென்ன கூத்து நடக்குமோ?’
அவனுக்குள் நினைக்க நினைக்க பகீர் என்று வந்தது. அடிவயிற்றில் சொருகின மாதிரி ஒரு சூன்யம்.பயப்படபடப்பு. பிடறி நரம்பெல்லாம் பாய்ந்தோடிய பயச்சிலிர்ப்பு.
பாண்டிக்கு நிஜமாகவே பயமும் வெறுப்புமாக இருந்தது. மாறி மாறி- ஆவுடைச்சி முகம். பொட்டில்லாத வெற்று முகம். மூக்குத்தியில்லாத வெறும் நாசி. கம்மல் இல்லாத வெறும் காது. கறுப்புக் கயிறு இல்லாத வெறும் கழுத்து. எல்லாமே.. ‘வெறும்’
‘ச்சேய்..’ என்று வந்தது.
வீட்டுக்குள் போனான். துண்டைத்தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு விருட்டென்று வெளியேறினான். கதவை இழுத்து அடைத்த சத்தத்தில் அவனது கோபம். தரையே ‘தக் தக், தக்’ கென்று அதிர்கிற மாதிரி நடந்த நடையில் அவனது ஆத்திரம்.
“ச்சேய்... இன்னிக்கு விடிஞ்ச நேரமே சரியில்லே. என்னென்ன வினைகள் வந்து சேருமோ.” என்று பயத்தில் உலர்ந்த உதடுகளில் முணுமுணுத்துக் கொண்டான்.
டீக்கடை ஜே ஜே என்றிருந்தது. காலை நேரத்து சம்சாரிகள். நாலா விஷயங்களையும் நாலாவிதமாகப் பேசிக்கொண்டு, பொழுதைக் கரைக்கும் ஆட்கள்.
“ஒரு டீ போடப்பா” என்று சலிப்பான குரலில் சொல்லிவிட்டு-இவனும் ஓர் இடத்தில் உட்கார்ந்தான்.
பாண்டியும் வந்து பேச்சைப் பிடித்தால்... இள மதியம் வரைக்கும் பேசுவான். இருந்த இருப்பில் மூன்று டீ குடிப்பான். மாறி மாறி பீடியைப் பற்ற வைத்து தரையில் தேய்ப்பான்.
அப்படிப் பேசிப் பொழுதைக் கழிக்கின்றவன் தான்.. இன்றைக்கு ‘கம்ம்’மென்றிருக்கிறான். ‘உர்ர்ர்’ ரென்று கடுவன் பூனை மாதிரி சிடுசிடுப்பான பார்வை பார்க்கிறான். வம்புக்கு இழுத்து, வாய் கொடுத்தவர்களுக்குக் கூட பதில் சொல்ல மனசில்லாமல் மௌனச் சோகத்தில் புதைந்து போனான்.
பாண்டிக்குள்- வெறும் ஆவுடைச்சி. ‘பகீர், பகீர்’ என்று பற்றுகிற தீயாக அந்த முகம். அச்சமும் கிலியுமான நினைவுகள். அமங்கலமான கற்பனைகளாய் படையெடுத்து, அவன் மனசில் பீதியை உண்டாக்கின.
பயத்தில் உறைந்து போய்க் கிடந்தான்.
டீக்கடை வழக்கம்போல கலகலத்துக் கொண்டிருந்தது. இவன் மட்டும் அந்நியமாய். மௌனமாய்..
புஞ்சையில் ஒன்றும் வேலையில்லை இன்றைக்கு. இருந்தாலும் ‘சும்மாவாச்சும்’ போனான், சுற்றிப் பார்த்தான். கம்பம் பயிர் ஆள் உயரத்துக்கு வளர்ந்திருந்தது. கதிர் நிறைய தேன் நிறப் பூக்கள். இன்னும் ‘மணி’ பிடிக்கவில்லை. ரெண்டு தண்ணி பாயணும்.
கிணற்றை எட்டிப் பார்த்தான், கோடை காலத்தை கிணறு சொல்லியது. அடியில் கொஞ்சமாய் தண்ணீர்.
பார்வை ஓரிடத்திலும், மனசு வேறு இடத்திலும், நினைவுகள் தாறுமாறாக மற்றொரு இடத்திலுமாய் பாண்டியே முறுக்கேறிப் போய்க் கிடந்தான்.
ஆயாசத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.
மதியக்கஞ்சி குடித்தவுடன், ஊர் மடத்துத் திண்ணையில் துண்டை விரித்துப்படுத்து விட்டான். உண்ட மயக்கம். அசந்த உறக்கம். கோடை வெயிலுக்கும், ஆடிக் காற்றுக்கும், மடத்துச் சிமெண்டுக் குளிர்ச்சிக்கும் உடம்பு ‘அப்படி’ மயங்கிக்கொண்டு வந்தது.
நிம்மதியான நல்ல உறக்கம். குறட்டைச் சத்தம் ஏழு ஊரை உசுப்பியது.
கண்ணைத் திறந்து பார்த் போது -
வெயில் மஞ்சளாகியிருந்தது, தெருப்புழுதியைக் கிளப்பிக் கொண்டு, டக்கர்கள் டீசல் நாற்றமாய் ஓடின. எருமைகள்... செம்மறி ஆட்டு மந்தைகள்... விறகுப் பாரவண்டிகள்.
பாண்டி எழுந்தான்.வெள்ளை பஸ் வந்து திரும்புகிற மைதானத்திற்கு வந்தான். இன்னும் கண்ணில் உறக்கச் சடவு எச்சிலை ‘புளிச் புளிச்’ சென்று துப்பினான்.
அங்கே ஒரு கடை, நாளிதழ் கிடக்கும். எடுத்துப் படித்தான். பக்கம் பக்கமாய் கண்கள் பாய்.... மனசு எங்கெங்கோ தாவ..
வீட்டில் கிடக்கிற மிளகாய் வற்றல் அம்பாரம். சித்திரையிலேயே துட்டாகியிருக்க வேண்டிய வற்றல். மூன்று குவிண்டால் தேறும். விலை இறங்குமுகமாகவே இருக்க.. விற்க முடியாமல் போயிற்று.
ரத்தச் சிவப்பாக இருக்க வேண்டிய வற்றல்... கறுத்துப் போய். வீடு முழுக்க கமறல் வாசம் நாசியைத் துளைக்க-துட்டாகாமல் ‘சும்மாவே’ கிடக்கிறது.
‘மார்க்கட்’ என்ற பகுதியில் நாளிதழ் இவன் கண்ணைச் சுண்டியிழுத்தது. ஆவல் பறப்பாய் பார்த்தான். மனசு கிடந்து துடித்தது. ‘வற்றல் விலை ஏறுமுகம்' என்ற உபதலைப்பில் ஒரு செய்தி.வற்றலைத் துட்டாக்கிவிடலாம். அடகு கிடக்கும் பொண்டாட்டி நகையைத் திருப்பிவிடலாம்.
அவனுக்குள் ஒளிச்சிமிட்டல்கள். மகிழ்ச்சி மின்னல்கள். ஆசை ஆசையாக அந்தப் பத்தியையே திரும்பத் திரும்பப் படித்தான்.
அவனுக்குள் குதூகல ஊற்று. மரத்துக் கிடந்த நரம்புகளெல்லாம் சட்டென்று ரத்தம் பாய்ந்த மாதிரி அவனுள் ஓர் உற்சாகப் பெருக்கு. ஒரு மகிழ்ச்சியான வெள்ளச் சூழல்
தெருவில் நடந்தான். நடையில் ஒரு துள்ளல். வீசுகிற கைகள், சற்று தாராளமாய் நீள்கின்றன. கைவீசி நடந்தான். மேல் துண்டைப் பிடித்து இழுக்கும் காற்றை ஒரு சந்தோஷ வசவு வைது கொண்டான். துண்டை தலையில் வட்டக்கட்டாகக் கட்டிக் கொண்டான்.
அவன் மனசுக்குள் ஒரு துடிப்பு. அறுந்து கொண்ட கன்றுக் குட்டியின் கும்மாளம். மயிலிறகின் உரசலால் வருகிற மகிழ்ச்சியான - புல்லரிப்பான கூச்சம் மனம் முழுக்க ததும்பியது.
வீடு வந்து சேர்ந்தான்.பொழுது அடைந்துவிட்டது. இன்னும் இருட்டவில்லை. மேகத்து வெளிச்சம் மிச்சமாக இருந்தது.
வீட்டுத் திண்ணையில் -
வேறு யாரோ.. ஓர் ஆள்.
யார் இது?-
யோசனையோடு நெருங்கிப் பார்த்தால்...
‘அடடே! இந்த ஆளா’ என்று மனசுக்குள் வியப்புணர்ச்சியின் வியாபிப்பு.
மூன்று மாதத்துக்கு முன்பு-
பாண்டியிடம் ஒரு ஜெர்சிப் பசுவை எண்ணாயிரம் என்று விலை பேசி-ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துவிட்டுப் பிடித்துக் கொண்டு போனவன்.
அந்த ஆயிரம் வருகிற மாதிரி தெரியவில்லை.
பாண்டியும் ஆள் மூலமாக தரகர் மூலமாக கடனை ‘கேட்டுப்’ பார்த்தான். வருகிற மாதிரியான நல்ல பதில் எதுவும் வந்து சேரவில்லை.
‘சரி... போய்த் தொலையுது’ என்று று மனசளவில் வராத கடனாக நினைத்து, வரவு வைத்து தலை முழுகி விட்டான்.
‘ஆயிர ரூபாய் வெலை கொறைச்சு வித்ததாக நெனைச்சுட்டுப் போவோமே’ என்று மனசைத் தேற்றிக் கொண்டான். சமாதானமாக்கிக் கொண்டான்.
அந்த ஆள்தான் இப்போது....
இவனுக்காகக் காத்திருக்கிறான்.
“என்ன அண்ணாச்சி. எப்ப வந்தீக?”
“வந்து அரை மணி நேரமாச்சு. ஒங்களுக்காகத்தான் காத்திருக்கேன்..”
“என்ன வெஷயம்?
“நல்ல வெஷயந்தான்”
“மாடு நல்லா பால் கறக்கா?”
“உங்க புண்ணியத்துலே ஒரு கொறையில்லே. நேரத்துக்கு ஆறு லிட்டருக்குக் கொறையாம... கறக்குது.”
“சந்தோஷம். நல்லாயிருந்தாச் சரி...”
“உங்களுக்குத் தரவேண்டிய ரூவா, குடுக்காமப் போட்டுட்டேன்லே. கைக்கும் மெய்க்கும் துட்டு அமையலே. வரும்னு நெனச்ச பணமெல்லாம் வழுகிக்கிட்டுப் போயிருச்சு... இப்பத்தான் பணம் கை வந்து சேர்ந்துச்சு.”
“ம்”
“இந்தாங்க ஒங்க ரூவா. தாமதமானதுக்கு மன்னிக்கணும்.”
“பரவாலே பரவாலே... இதெல்லாம் சகஜம்தானே.”
உபசாரம், சாப்பாடு எல்லாம் முடிந்து அந்த ஆள் புறப்படராத்திரி மணி எட்டாகி விட்டது.
வராத கடன் வந்த சந்தோஷத்தில் ததும்பித் தத்தளிக்கிற மனசோடு மனைவியைப் பார்த்தான். பெருமிதமும் பூரிப்புமாக ‘வற்றல் விலை ஏறுமுகம்’ பற்றி விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தபோது-
‘வெறும்’ ஆவுடைச்சியின் முகம் மட்டும் ஞாபகத்துக்கே வரவில்லை பாண்டிக்கு.