உள்ளடக்கத்துக்குச் செல்

காகிதம்/006

விக்கிமூலம் இலிருந்து
பேய்கள்

‘எப்படி வந்து சேர்ந்துச்சு இந்தக் காய்ச்சல்ச் சனியன்’ என்று தெரியவே மாட்டேன் என்கிறது சன்னாசிக்கு. தடுமனும் பிடித்த மாதிரித் தெரியவில்லை. நெஞ்சுச் சளி இருக்கிற மாதிரியும் தெரியவில்லை.

அப்பவும்...காய்ச்சல் ரெண்டு நாளாய் எள்ளாய்ப் பொரிகிறது. திரேகத்திலிருந்து வெளியேறுகிற அனல் வெக்கையை அவராலேயே உணர முடிகிறது. நாசியில் வருகிற வெப்பக்காற்று. நாசித்துளைகளே காந்துகின்றன. கண்ணெல்லாம் கிடந்து எரிகிறது, ‘திகு, திகு’ வென்று.

உதடுகளெல்லாம் உலர்ந்து போய்... முகமே வெளுத்துப் போயிற்று. வாய்க்கசப்பு, முகக் கோணலில் அசூயைச் சுளிப்பாகத் தெரிகிறது.

சன்னாசிக்கு உட்கார்ந்திருக்கவும் மனசில்லை. ‘படுத்தால், அமுக்கிரும். எந்திரிக்க விடாம, ஆளை ஒரேயடியாச் சாய்ச்சிரும்’ என்ற பயம். எழ முடியா விட்டாலும் களைப்பும் அயற்சியுமாய் உடம்பு துவண்டாலும்... பல்லைக் கடித்துக்கொண்டு எழுந்தார். குறுக்கெலும்புகள் குத்திக் குடைந்தன. வெட்டுப்பட்ட மாதிரி தொடைகளில் வலி.

கூதல் தாங்கவில்லை. ‘சிலீர், சிலீரெ’னப் புல்லரித்து நடுங்குகிற திரேகம். கனத்த சமுக்காளத்தை எடுத்து விரித்து ‘நிறைய்ய்ய’ மூடினார்.

உள்ளிருந்து ஆத்ம பங்காளியின் சலிப்பும், கண்டிப்புமான குரல்.

“பேசாம படுத்துருக்க வேண்டியதுதானே? இந் நேரத்துலே எங்குட்டுப் போறீக?”

“படுத்தா...அமுக்குற பேய், இந்தச் சனியன். காலார நடந்து மடத்துப் பக்கம் போய்ட்டு வாரேன்.”

“உப்பில்லாக் கஞ்சிதான் குடிச்சிருக்கீக. தலை சுத்தும், பார்த்துப் போய்ட்டு வாங்க.”

“ம்... மாடுகளுக்கு கூளத்தைப் போடு. பருத்தி விதையை நனையப் போட்டு வை. சாயங்காலம் ஆட்டி தண்ணி காட்டணும்.”

“ஆட்டும். கஷாயம் போட்டு வைக்கவா?”

“ம்...போட்டு வை.”

அவ்வளவு பேசியதே சன்னாசிக்கு அயற்சியாக இருந்தது. போதும் என்ற சோர்வுடன் முற்றத்தில் கால் வைத்தார்.தெருவுக்கு வந்தார்.

உச்சி மதியம். சுள்ளென்று அறைகிற கோடை வெயில். ஆனால், அந்த உஷ்ண வெயில், அவருக்குக் காலை வெயிலின் பனிக் குளிர்ச்சியாக.. சுகப்பரவசமாக இருந்தது.

எதிர்ப்படுகிற ராசபாண்டி.

“என்ன அண்ணாச்சி, உச்சி வெயில் சுட்டுப் பொசுக்குது. நீங்க சமுக்காளத்தை வைச்சு இப்படி மூடியிருக்கீக?”

“காச்சலு தம்பி..”

“பனியுமில்லே. மழையுமில்லே. வங்கோடை இப்பப் போய்.. எப்படி...தடுமன்?”

“தடுமனுமில்லே... ஒண்ணுமில்லே... எப்படியோ பேய் மாதிரி வந்து, அமுக்கிக்கிடுச்சு..”

“ஊசி கீசி போட்டீகளா?”

“நேத்துப் போட்டேன். மாத்திரைகளையும் முழுங்குனேன். போட்ட நேரத்துக்கு காச்ச கொறையுது. பெறகு- வந்துருது.”

“அப்ப..?”

“கண்டங்கத்திரி... இண்டு... தூதுவளை போட்டு, கஷாயம் வேகப் போடச் சொல்லியிருக்கேன்... போய்க் குடிக்கணும்”

“இங்கிலீஷ் மருந்துக்குப் பயப்படாத காச்சலு, கஷாயத்தைக் கண்டா.. கழிஞ்சிக்கிட்டு ஓடிரும்.”

“பாப்பம்” என்று நகர்ந்த சன்னாசியின் காய்ந்த உதடுகள், மெல்ல விரிய முயன்றன. அவனது வார்த்தைகளும்.. அதைச் சொன்ன விதமும்... அவருக்குள் மலரவைத்த ஒரு மென்னகை.

“எப்படியோ... சனியன் விட்டுத் தொலைஞ்சா.. சரிதான்” என்று முணுமுணுத்துக் கொண்டார். பத்து நாள் ரோமக்கட்டை கன்னத்தில், ஒரு வறண்ட பெருமூச்சோடு அதைத் தடவினார். ஐம்பது வயசு, பாதி ரோமங்களை நரைக்க வைத்திருந்தது.

மடத்துத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அவருக்கே அந்நியமாக உறுத்தியது. மடத்தில் அவர் உட்கார்ந்ததேயில்லை. இதுநாள் வரை. மடத்தில் துண்டு விரித்துப் படுத்திருக்கும் ‘சோம்பேறி’களை- ‘கிழி, கிழி’ என்று அப்படிக் கிழிப்பார்.

“துப்புக்கெட்ட நாய்க... ஒடம்பை வளைக்காம, சுருண்டு கெடக்குற எச்சிலை நாய்க.”

உழைப்பு என்பது சன்னாசிக்கு சுவாசம். அதைச் செய்யாமல் ஒரு கணம்கூட இருக்க மாட்டார். காட்டில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... கை எதையாச்சும் நோண்டிக் கொண்டேயிருக்கும். சும்மாவே இருக்காது.

எல்லாச் சம்சாரிகளும் அப்படித்தான் என்றாலும்- சன்னாசி சற்றுக் கூடுதல். அவருக்குப் பிடித்த வாசமே வியர்வை வீச்சம்தான். குளித்து முழுகி அலைகிற மைனர்களை, ஒரு நாயைப் பார்க்கிற மாதிரி அருவருப்பாகப் பார்ப்பார்.

தண்ணீர் பாய்ச்சல், களைவெட்டு, உழவு, பாத்தி கட்டு, நடுவை எல்லா வேலைகளுமே அவர்தான். அவரது வியர்வைப் பிசுபிசுப்பு படாமல், அவர் தோட்டத்தில் ஓர் அங்குலம்கூட இருக்காது. இது போக...

வாரா வாரம் வியாழக்கிழமை சந்தைக்கு ராசபாளையம் வண்டி போடுவார். வண்டியில் ரெண்டு நீள தேக்கு வாரி கட்டியிருப்பார். பருத்தி மருகைகளோ, மிளகாய் வத்தல் பாரமோ ஏதாச்சும் ஒரு லோடு, போகும் போது. வரும்போது... பல சரக்குக் கடைக்காரர்கள் போடுகிற கடைச்சரக்குகள், வெல்லமூடை, விதைமூடை, அரிசிமூடை. புளிச்சிப்பம் என்று பாரம்.

மூடை சுமக்கப் பயப்படமாட்டார். குவிண்டால் மூடைகளைக்கூட முதுகில் ஏந்தி... அனாயசமாகத் தூக்கிப் போடுவார். திரேகமும் அப்படி. ஓங்குதாங்கான திரேகம். வைரம் பாய்ந்த சதைத் திரட்சிகள். தாட்டியமான ஆள்.

‘வேழக்கெழமை’ச் சந்தைக்கு வண்டிப் பாரத்துக்கப் போய் வந்தவர்தான். வெள்ளிக்கிழமை காலையில் வந்தார். கடை கடைக்குப் போய் மூடைகளை இறக்கிப் போட்டார். பாரக்கயிற்றைச் சுருட்டி வண்டியில் போட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார். மாட்டைக் கட்டினார். காலைக் கஞ்சியையே மதியத்தில்தான் குடித்தார். எங்கிருந்துதான் வந்ததோ... சனியன்-

சாயங்காலமே காய்ச்சல் வந்துவிட்டது. சும்மா சாதாரண காய்ச்சல் இல்லை. குளிரும் காய்ச்சலும், திரேகமே கிடந்து ‘கிடு, கிடு’ வென்று நடுங்கியது. மூன்று சமுக்காளத்தைப் போட்டு மூடிய பிறகும் நடுக்கம் குறையவில்லை.

அப்படி வந்த காய்ச்சல்தான்..

‘அலுப்புனாலே காய்ச்ச வந்துருக்குமோ’ன்னு ஒரு நினைப்பு. அதற்கான கை வைத்தியம். ம்ஹூம்.. ப(ரு)ப்பு வேகிற மாதிரித் தெரியவில்லை. அப்புறம்.. ஊசி மாத்திரைகள். அதிலும் கட்டுப்பட மாட்டேன் என்கிறது. ‘என்ன தான் செய்ய?’ என்ற சலிப்பு. சன்னாசி மனசில்.

திங்கட்கிழமையாயிற்று. சன்னாசிக்குள் வந்து போகிற புஞ்செய், உழ முடியாமல் கிடக்கிறது. குப்பை அடிக்க வேண்டும். கிடைபோட வேண்டும்.

“பாடுசோலிக மலைபோல குமிஞ்சிக்கிடக்கு. ஓடியாடிப் பாடுபட வேண்டிய நாள்லே, கொக்கு நோய் கண்ட கோழியா மொடங்கிக் கெடந்தா.. எப்படி? என்ன வேலை நடக்கும்? எப்படி வெள்ளாமை செய்றது?”

காய்ச்சல் வெறியில் சத்தமாகவே முணுமுணுத்துக் .கொண்டார். மடத்துத் திண்ணையிலிருந்த ஒன்றிரண்டு பேரும் இவர் தலையைக் கண்டதும் பதறிப் போய் ஓடிவிட்டனர். இவர் தான் ‘மடத்துவாசிகள்’ என்றால்- நாற வசவாக வைவாரே...

பெரிய மடம். விரிந்து நீண்ட திண்ணை. ஒற்றையாளாக இவர் மட்டும். தனிமையும் தேவைதான். சுள்ளென்று சுடுகிற வெறுமை, நெஞ்சைத் தாக்கினாலும். பேசத் சீவனில்லாத நேரம். தனிமைதான் தோது. யாரும் வாய் கொடுத்து, ‘நைய்.... நைய்’ என்று நச்சரித்தால்.. இச்சிலாத்தியாக இருக்கும். உயிர் வாதை.

இப்படி ஒற்றையில் இருப்பதுவும் நல்லதுதான். கை விரலை மடக்கி எண்ணினார். ‘வெள்ளி ஒண்ணு, சனி ரெண்டு, ஞாயிறு மூணு, திங்கள் நாலு... ‘அடேயப்பா- நாலு நாளா காய்ச்ச அமுக்கிருச்சா...? நாலு நாளா புஞ்சையை மிதிக்காம இருக்கோமோ.. இப்படியிருந்தா புஞ்சைதான் வெளையுமா? வீடுதான் விளங்குமா?’

சன்னாசிக்குள் கிடக்கிற சம்சாரி மனசின் தவிப்பு. தகிக்கிற காய்ச்சல். கண்பட்டையெல்லாம் கோழி கொத்திப் பிடுங்குகிற புண்ணாக, ரணம். மொத்தத் தலையும் வலி தாங்க முடியவில்லை. அதிலும் பிடறி வலி, உயிரைப் பிடுங்குகிறது.

கண்ணைத் திறக்க முடியவில்லை. மூடினால்... இமைக்குள் கலர் கலராக மிதக்கிற ரேகைகள். குறுக்கெலும்பின் வலி, உட்கார விடமாட்டேன் என்கிறது.

‘ம்ஹூம்-படுத்துரக் கூடாது...’ மனசின் வைராக்யம்.

ரெண்டு கைகளையும் பின்பக்கமாக ஊன்றி, மெல்லச் சாய்ந்து... இடுப்பாற்றிப் பார்த்தார். கால்களை விறைப்பாக நீட்டிப் பின்னிக் கொண்டார். இந்த விறைப்பான பின்னலில் உளைச்சல் மட்டுப்படுகிற மாதிரியோர் பிரமை.

‘அப்படியே... மல்லாக்கப்படு’ என்று உடம்பின் ஒவ்வொரு அணுவும் அவரைப் போட்டு பாடாய்ப் படுத்தியது. அவர் பல்லைக் கடித்துச் சமாளித்தார். இடுப்பு கடுக்கிறது. தொடையெல்லாம் உளைச்சல். நாசிக்காந்தல். அனலாய்க் கொதிக்கிற திரேகம்.

மூடிய இமைகளை மேலும் அழுத்தினார். அது கொஞ்சம் சுகமாக இருந்தது.

...வியாழக்கிழமை ராத்திரி. மூடைகளை வரிசைப் படுத்தி, அடுக்க வேண்டிய முறைப்படி அடுக்கி.. பாரக்கயிறைப் போட்டு இறுக்கி (சக வண்டிக்காரரின் உதவியுடன்), அரிக்கேன் லைட்டைப் பொருத்தி அடியில் கட்டி மாட்டை வண்டியில் பூட்டுகிற போது... மணி பத்து. சந்தைக் கூட்டம். ரோட்டில் விலக இடமில்லை.

சமுசிகாபுரம் தாண்டி- சத்திரப்பட்டி வருவதற்குள் வண்டிச் சட்டத்தில் படுத்து ஒரு உறக்கம் போட்டு விட்டார்.

வழக்கப்படி மாடுகள் ஓரம் கட்டி நின்ற பிறகுதான்.. முழித்தார். முறுக்கு, முட்டைக்கோஸ் என்று ரெண்டைப் பொறுக்கி வாயில் போட்டு... டீயடித்து.. வெத்தலை பாக்கும் வாங்கிக் கொண்டு.. வண்டியில் ‘ம் ம்...’ என்று ஏற..”

மாடுகள் சுழற்றிக் கொண்டு பாரவண்டியோடு நகர்ந்தன. சத்திரப்பட்டி கழித்து... அய்யனாபுரம் வந்தவுடன்.. வண்டி வலது பக்கமாய்த் திரும்பியது.

மெட்டல் ரோடு. எப்போதோ ஒரு காலத்தில் போட்டது. விழுந்த பள்ளங்களை, பிடுங்கிய ஓடைகளை சரள் அடித்து நிரப்பியிருந்தார்கள். நத்தம்பட்டி வழி, இது குறுக்கு வழி.

கரிசல் குளம் சுற்றிப் போகிறதைவிட... இது ‘எட்டிப்பிடித்த’ மாதிரி. நேர்ப்பாய்ச்சல். பழகிய வழி. பழகிய தடம். மாடுகள் தன் போக்கில் செல்ல... மென்று துப்பிய வெத்தலைச் சுவையோடு தலைசாய்த்தவர் தான்.... சன்னாசி. நன்றாகத் தூங்கிவிட்டார். ஓடி ஓடி மூடை சுமந்த அலுப்பு. அசந்த உறக்கம்.

மாடுகளின் கழுத்துமணிச் சலங்கை... அதன் ஒரு சீரான குளம்புச் சத்தம்... வண்டிப் பைதாவின் ‘க..டக், பு..டக்’ கென்கிற தாளலயமான சத்தம் எல்லாம் சேர்ந்து அவருக்கு ரோராட்டு (தாலாட்டு) மாதிரியிருந்தது. தென்திசைக் காற்றின் மென் தழுவல் வேறு. சொல்லவா வேண்டும். சொக்கிப் போவதற்கு.

மாடுகளுக்கு அவரது குறட்டைச் சத்தம் வழித்துணை. தேய்பிறை நிலா, உடைந்த அப்பளமாய். மூளி வெளிச்சம் கண்ணை மூடிக்கொண்டு அழுது வழிகிறது. மங்கலான வெளிச்சம்.

உறங்கிய சன்னாசிக்குள் என்னவோ கனா.

வண்டி நத்தம்பட்டியைத் தாண்டியது. நத்தம் பட்டியின் மேல்புறத்தைத் தழுவி... ரோடு கிழக்காகத் திரும்புகிறது. ஊரின் தென்புறத்தில் வண்டி போய்க் கொண்டிருக்கிறது. ஊரைத் தாண்டி விட்டது. ஆனால் ஊர்க் காட்டைத் தாண்டவில்லை. நத்தம்பட்டிக்காரர்களின் காட்டில்தான்போகிறது. ஒரு சீராய்... தாளலயம் தப்பாமல்... எல்லாம் வழக்கப்படி... போய்க் கொண்டிருந்தபோதுதான்-

அந்த விபரீதம்

ஏதோ களேபரச்சத்தத்தில் பதறிப்போய் முழித்தார்.

வண்டி நின்று போயிருந்தது. மாடுகள் முன்னே எட்டு வைக்க முடியாமல்.. பின்னேயும் போக முடியாமல் தறிய முறிய விழுந்தன. பின்னோக்கி நகர்வதற்குப் பகீரதயத்தனிப்பு. மாடுகளின் கழுத்து உள் ஒடுங்கி, பின்னே திரும்ப... மருண்டுபோய்... அரண்டு போய்க் கதறுகின்றன. அபஸ்வரமாய் குழம்பிப் போய் சலங்கை மணி. ஒரே இடத்தில் காலை மாற்றி மாற்றி வைப்பதால்... “தக்... தக்க் தக்..தக்க்...” கென்கிற மாறுபட்ட சத்தமாய் குளம்புகள்.

‘என்னாச்சு..?’ என்று திகைத்துப் போனார். அனிச்சைச் செயலாய் மூக்கணாங் கயிற்றை அழுத்திப் பிடித்தார். அதற்குத் தேவையில்லை.

மாடுகள் எதைக் கண்டு மிரள்கின்றன. மருண்டோட முயல்கின்றன?

ஒன்றும் புரியவில்லை, உறக்கச்சடவில். கண்ணைக் கசக்கிவிட்டு-வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு உற்றுப் பார்த்தார்.

பாதைக்குத் தெற்கே -

வெறும் சிதைத்தீ. ‘சட்... சட்...சடார்’ ரென்கிற தெறிப்புச் சத்தங்களோடு வெறுமனே எரிகிற தீ. கனன்று எரிகிற தீ. ‘ஆமா... இது... நத்தம்பட்டிச் சுடுகாடுதான்’ என்று நினைத்துக்கொள்கிறார்.

கழுத்தைத் தூக்கி... எம்பி... மாட்டுக்கு முன்னால் பார்க்கிறார்.கன்னங்கரேலென்று ஓர் உருவம், பாதையின் நடுவில் -மாடுகளை மறித்துக் கொண்டு அந்தக் கரிக் கட்டையான தோற்றம்.

பார்த்த கணத்தில் -

இவரது நெஞ்சுக்குள் ஊசியைச் சொருகின மாதிரி சுருக்கிட்ட வலி. முதுகின் பாதிவரை பாய்ந்து பரவிய வலி.

குப்பென்று உடம்பெங்கும் வியர்வை. வியர்வைக் காடு. பயத்தில் நாக்கு ஒட்டிக் கொண்டது. ‘தொப், தொப்’ பென்று நனைந்து போன வியர்வைத் திரேகம்.

“ஏய்... ஏய்க்...ஏய்க்” என்று தொண்டை, மூளிச் சத்தமாய் உடைந்து கதறுகிறது. உயிரே 'போய் வந்த மாதிரியிருந்தது, ஒரு கணத்தில்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட அறிவு; சாமம், ஏமம் என்று பாராமல் காடு கரைகளில் அலைந்து திரிந்த சம்சாரி அறிவு; அதற்கேயுரிய முரட்டுத் துணிச்சல்.

“அட.... இதுதானா?” என்று சுய பரிகாசமாய் வியந்து கொண்டார். “பேயா..பிசாசா? பிரேதம் தானே..? வேகாத பிரேதம் தானே, இதுக்குப் போயா.. இம்புட்டுப் பயப்படுதே.?”

மாடுகளுக்குச் சொன்னாரா, தனக்கே சொல்லிக் கொண்டாரா? ரெண்டும்தான்.

மாடுகளின் முதுகில் தட்டுவதும், தடவுவதுமாய் அவரது உள்ளங்கைகள். ஆசுவாசப்படுத்தி தைர்யமூட்டுகிற ஸ்பரிசமொழி.

மாடுகளை மறித்துக் கொண்டு கிடப்பது, பாதி வெந்த பிரேதம். நரம்புக் கொடிகள் வெந்து நிணம் கசிகிற போது... மொத்தப் பிரேதமே விம்மி விறைக்கும். அப்போது, நெஞ்சுக்கூட்டை அமுக்குகிற கனத்த பாரம் இல்லாவிட்டால்... விறைக்கிற பிரேதம்... விடைத்து... துள்ளித் தெறித்துவிடும்.

அப்படித் தெறித்த கரிக்கட்டைதான்.. எதிரில்.

‘வெட்டியான்கள் ஒறங்கிட்டாங்களா...?’ என்று முணு முணுத்த சன்னாசி- அவர் நெஞ்சுக்குள் இன்னும் ‘திக், திக்’கென்கிற அதிர்வு, உள்மார்புச் சவ்வை யாரோ கசக்கி இறுக்குவதைப் போல ஒரு மூச்சுத் திணறல்.

அதையெல்லாம் உணர முடியாத மனநிலையில்.. பயத்தை மறைக்கிற சவடால்த்தனச் சத்தத்தோடு... கத்தினார்.

“டேய்-டேய்-எவண்டா விட்டியான்?”

ரெண்டு பேர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். கவட்டைக் கம்பால் அடித்து, தூக்கிக் கொண்டு சென்றனர், பிரேதத்தை. சிதைத் தீக்குள் போட்டு அமுக்கினர்.

“சாமி... தெரியாம நடந்து போச்சு... சாமி யாரு கிட்டேயும் சொல்லிடாதீக... சாமி... புண்ணியமாப் போகுது சாமி.”

மருகி மருகி மன்னிப்புக் கோருகிற வெட்டியான்கள்.

“போங்கடா போங்க” என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டு- மாடுகளை அதட்டிப் பார்த்தார்.

மாடுகள் நகர்ந்தன. ஒரு பெரீ... ய்ய்ய கண்டத்திலிருந்து தப்பித்த மாதிரியிருந்தது, சன்னாசிக்கு. ஆனாலும், மனசுக்குள் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்கிறமாதிரி அடிக்கடி சொல்லிக் கொண்டார், சத்தமில்லாமல்.

‘பேயா..பிசாசா? பிரேதம்தானே?’

அஞ்சுவதற்குரிய பேயல்ல... பிசாசல்ல... ஒரு பெளதீகப் பொருளான அரைப் பிரேதம்தானே என்கிற தொனியில்- அவரது மனக்குரல்.

மாடுகளின் கழுத்துமணிச் சலங்கை. அதன் சங்கீதம். ஒரு சீரான குளம்புச்சத்தம். வண்டிப் பைதாவின் ‘கடக், புடக்’ கென்கிற தாளலயம் தப்பாத சத்தம். தென்திசைக் காற்றின் மென்தழுவல்.

ஆனாலும், சொக்க முடியவில்லை. கண்ணைச் சொருக முடியவில்லை. அதற்குப் பிறகு உறக்கம் ஒட்டவேயில்லை.

வாய்க்கு வந்த பாட்டுகளையெல்லாம் சத்தம் போட்டுப் பாடிப்... பாடி ‘அதை’ மறக்க முயன்றார், சன்னாசி.

மறந்தும் விட்டார்..நிஜமாகவே.

மற்றவர்களிடமும் இதைப் பற்றிப் பேசிக் கொள்ளவுமில்லை.

டத்தில் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்த நிலையில் உட்கார்ந்திருந்த சன்னாசிக்கு, இடுப்பு தாங்கவில்லை. ரொம்பக் கடுத்தது. காய்ச்சல் ரொம்பக் கூடிவிட்டது. குளிர் தாங்க முடியாமல் ‘வெட, வெட்’ வென்று நடுங்கினார். உதடுகள் வெடவெடத்தன. மேல் பல்லும் கீழ்ப் பல்லும் மோதிக் கொள்கிற சத்தம்.

அந்தக் காய்ச்சலின் உக்ரத்தில்... கண்மூடிய நிலையில்- பிரக்ஞை தவறிய கணத்தில்.. காய்ந்துலர்ந்த உதடுகள் முணுமுணுத்தன.

“பேயா- பிசாசா? பிரேதம்தானே?”

டத்து சிமெண்டுத் திண்ணையில் மயங்கிக் கிடந்தவரை நாலைந்து பேர் கூடித் தூக்கிச் சென்றனர், வீட்டுக்கு.

அன்றைக்கு ராத்திரி பூராவும் -

கண்ணைத் திறக்காமல் கிடந்தார், சன்னாசி. எதை எதையோ புலம்பினார். போனது - வந்தது - நடந்தது- நினைத்தது என்று சகலத்தையும் குழம்பிக் குழம்பிப் புலம்பினார், காய்ச்சல் வெறியில்.

அந்தப் புலம்பலுக்கு நடுவில் -

சம்பந்தமற்ற தனித் தொனியில் -

“பேயா... பிசாசா? பிரேதம்தானே?” என்றும் தைர்யம் சொல்லிக் கொண்டார்.

அவரைச் சுற்றிலும் உறவுகளின் ஒப்பாரி சத்தம்.

மறுநாள்–

சன்னாசி செத்தே போனார்.

எப்படிச் செத்தார் என்று அவருக்கே தெரியாது. பிறருக்கும் தெரியாது. தெரியாவிட்டாலும்... கற்பனா சக்திமிக்க பிறர், எப்படிச் சும்மாயிருப்பது?

“சன்னாசின்னா.. லேசுப்பட்ட ஆளா? பத்தாளுக கூடி அடிச்சாலும் சாய்க்க முடியாதே... அம்புட்டுத் தாட்டியமான ஆளாச்சே.. நாலுநா காச்சலா அவரைக் கொல்ல முடியும்? அதெல்லாமில்லேப்பா... ‘காத்தோ, கறுப்போ’ அடிச்சிருக்கும்.”

“இருக்கும் இருக்கும்... தேரைவிட்டு எறக்கி, குழிக்குள்ளே கொண்டு போறப்ப ரெண்டு கண்ணாலே பாத்தேன்... அவரு முதுகுலே... அஞ்சுவெரலு அப்படியே பதிஞ்சிருஞ்துச்சு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=காகிதம்/006&oldid=1813268" இலிருந்து மீள்விக்கப்பட்டது