உள்ளடக்கத்துக்குச் செல்

காகிதம்/007

விக்கிமூலம் இலிருந்து

லங்கேஸ்வரர்கள்

முச்சாமி மிளகாய்த் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் முகத்தில் பனிக்காற்று மோதியது. போர்வை போர்த்திய உடலை நடுக்கியது. பொழியில் மெத்தென்று வளர்ந்திருந்த அருகம்புல் உள்ளங்காலை சிலீரென்று சுட்டது. பனிமழையில் நனைந்து ஈரமாயிருந்தது.

கீழடி வானத்தில் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந்த மலட்டு மேகங்களை மீறிக் கொண்டு, உஷ்ணக் கிரகணம் வெளிப்படாதா என்று ஏங்குவதைப் போல மிளகாய்ச் செடிகள் தோற்றமளித்தன.

கிராமத்திலிருந்து வானொலி அலறிய மாநிலச் செய்தி முச்சாமியின் காதில் விழுந்தது. நடக்க இருக்கும் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தில் யார் யார் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற பட்டியலை மட்டும் வரிசைப்படுத்தி ஒப்பித்தது.

முச்சாமிக்கு இது ஒன்றும் மனதில் பெரிதாகப் பாதிக்கவில்லை. அவர் மனம் மிளகாய்ச் செடிகளின் பசுமையில் கரைந்து திருப்தியில் ததும்பிக் கொண்டிருந்தது.

அட, இந்த மிளகாய்ச் செடியைத்தான் பாரேன்.... கொப்பும் கிளையுமாய்... மரகதப்பட்டாக இலைகள் மூடியிருக்க...அதுக்குள்ள சரம் சரமா காய்காய்ச்சு பாரமா இழுக்க... வெள்ளி மூக்குத்திகளை அள்ளிச் சிதறுன மாதிரி சின்னச் சின்னப் பூக்களும் சிரிப்பாய் சிரிக்கிற அழகும்..

தலைப் பிரசவத்துக்குக் காத்திருக்கிற நிறைமாசக் கர்ப்பிணி மாதிரி என்ன அழகா.. மினுமினுப்பா. என்னமாய் ஜொலிச்சி நிக்குது...

பார்க்கப் பார்க்க முச்சாமி மனசுக்குள் பரவசமானார். சந்தோஷ எண்ணங்கள் சங்கீதமாய் எழும்பி, பரவி, மனசெல்லாம் நிறைந்தன.

முறுசெல் (முறைசால்) வாய்க்காலில் நடந்தார். இருபுறமும் கடலாய் விரிந்திருந்த பசுமைச் செழிப்பை மாறி மாறிப் பார்த்தார். காய்களின் மினுமினுப்பையும், நடுநடுவே தீச்சுடராய்க் கிடந்த பழங்களையும் பார்த்தார்.

சூரியன் சந்தன வண்ணத்தில் தகதகத்தது. அள்ளிச் சொறிந்த வெளிச்சத்தில், கொடிய பனிகூட, இதமான சுகமாக மாறியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களிலும் ஒளிர்ந்தும், சில இடங்களில் நிழலுமாகத் தோற்றமளித்தன.

சூரிய வெளிச்சத்தில் உலகமே ஜோதிமயமாக மாறிவிட்டாற் போலிருந்தது, அவரது நெஞ்சுக்கு.

மிளகாய்ச் செடிகளின் செழித்த விளைச்சலின் அழகு, அவருள் உற்சாக ராகத்தை இசைத்தது.

‘இந்த ரெண்டு குறுக்கத்துலே (2 ஏக்கர்) 18 குவுண்டால் வருமா’ என்ற யோசித்தார்...

‘ஊம். வரும். வரத்தான் செய்யும்’ என்று மனசுக்குள் யூகத்தை முடித்துக் கொண்டார்.

இதே தோட்டத்துலே முன்னுக்கும் பின்னுக்கும் மாடு போய் வர.. கீச்சு மூச்சுன்னு கமலை எறைச்ச ஐயா காலத்துலே... ஆறு பொதிக்கு மேலே வெள்ளாமை எடுத்ததுல்லே..

இப்போ... காலம் கொண்ணாந்த பம்ப்செட், உரம், உப்பு, பூச்சிமருந்து எல்லாம் சேர்ந்து... வெளைச்சலை எம்புட்டு அதிகப்படுத்துது-

முன்னைப் போலவா காலம் இப்ப இருக்கு? ஜனங்க பொழைப்புதான் தேஞ்சு போயிருக்கு-

முச்சாமி,புஞ்சையின் முக்கால் பகுதிக்கு மேல் சுற்றி வந்து விட்டார். வாய்க்கால்களிலும், செடிகளுக்கு நடுவிலும் தென்பட்ட பசலிகளைப் பொறுக்கி மடியில் வைத்துக் கொண்டார். படரக்கூடிய தன்மை கொண்ட அந்தப் பசலியைப் பொழிக்கு அப்பால் போட வேண்டும்..

நோயுற்றிருந்த ஒன்றிரண்டு செடிகளைப் புரட்டிப் பார்த்தார். உடைப்பு கண்டிருந்த பாத்திகளில் கையாலேயே மண்ணைச் சுரண்டி அடைத்தார்.

பனியின் சீதம் இப்போது முற்றிலும் போய்விட்டது. பசி இலேசாக அடி வயிற்றைக் கிள்ளியது. கிணற்றை எட்டிப் பார்த்தார்.

‘ஹும்.. அடுத்த வருஷம் மழைபெய்யாட்டாலும் சமாளிச்சுடலாம்...’ என்று மதிப்பிடும்போது மனசுக்கு நிறைவாக இருந்தது.

போர்வையை எடுத்து பம்ப்செட் ரூமின் மேல் போட்டு விட்டு, ஓடைக்குள் இறங்கும் போதுகூட, செடிகளின் செழுமையைப் பெருமிதத்துடன் நினைத்துக் கொண்டார்.

காயும் பூவுமாக நிறைமாதச் கர்ப்பிணியாக அழகின் முழுமையோடு நிற்கிற காட்சிதான் குதூகலத்தின் ஊற்றாக விளங்கியது.

‘ஆடி மாதத்திலேயே ரவ்வுன்னும் பகலுன்னும் பாராம கம்மா மண்ணு அடிச்சது’ ஞாபகத்துக்கு வந்தது.

‘ஆவணி மாதத்துலே நாற்றுப்பாவி, தண்ணியிறைச்சது’ நினைவில் மின்னியது. ‘அதே மாதத்துலே திரும்பத் திரும்ப மூணு உழவு போட்டு, பூமியைப் புரட்டிப் பருவம் பண்ணுனது’-

ஓடி ஓடி குப்பையடிச்சு நிரத்துனது-

நிலா வெளிச்சத்துலே பாத்தி கட்டினது-

பணத்தைப் பணம்னு பாராம தண்ணியா இறைச்சு கூலியாளுகளுக்குக் குடுத்து நடுவை நட்டுனது, களை வெட்டுனது-

வகை வகையாப் பூச்சி மருந்து வாங்கி அடிச்சது-

உர உப்பு மூடைமூடையாய் வாங்கிக் கொட்டினது, தண்ணிவிட்டது-

எல்லா நினைவுகளும் வாய்க்கால் நீர் பாத்தியில் வந்து மோதுவதைப் போல வரிசையாக மனசுக்குள் மோதியது.

பட்ட பாடுகளில் மலர்ந்த இந்த மண்ணின் மலர்ச்சி அவருக்குப் பெருமிதமாக இருந்தது.

என்னோட ரத்தம், எங்க குடும்பத்தோட வேர்வை.. இங்க, இப்போ, இப்படி பூத்துக் குலுங்குது..

இந்தப் பூரிப்பில் முச்சாமியின் மனம் துள்ளியது.

‘உழைக்கிறவன் மனசு வைச்சு காரியத்துலே இறங்கிட்டான்னா, இந்த மிளகாத் தோட்டம் மட்டுமா... இந்த ஒலகத்தையே அழகு மயமாக்கிட முடியாதா, என்ன!’

முச்சாமி வீட்டுக்கு வரும்போது வயிறு ரொம்பக் கிள்ளியது. தா(ழ்)வாரத்தில் மாடுகள் கூளத்தை குதூகலமாக வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் அசைவுக்கேற்ப, கழுத்து மணிகள் ஒலித்து, அவற்றின் சந்தோஷத்தை வெளிப்படுத்தின.

எருமைமாடு படுத்துக் கிடந்தது. இவரைக் கண்டதும் மாடுகள் திரும்பிப் பார்த்தன. கண்கள் விரிந்து, செவிகள் விடைத்து நட்பைக்காட்டின.

வீட்டுக்குள் நுழைந்தார். மூத்த பெண் தோட்ட வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். சாப்பிடுவதில் அவசரம் தெரிந்தது.

“என்ன... பொழுது உச்சிக்கு வந்துருச்சு. இந்நேர வரை எங்க போயிருந்தீக?”

“ஓடைக்கு..”

“அதுக்கு இம்புட்டு நேரமா?"

“அப்படியே புஞ்சைக்குள்ளே போயிட்டு வந்தேன்..”

“மாட்டுக்கு அகத்திக் கொழை ஒடிச்சுட்டு வரக் கூடாது?” வெறுங்கையை வீசிக்கிட்டு வந்தீராக்கும்?”

மௌனமாயிருந்தார். ‘ஒடிச்சிருக்கலாம்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டார். அந்த யோசனை அந்நேரம் வரவில்லையே!

கஞ்சியில் கை அலைய, ஏறிட்டுப் பார்த்தாள் ராசம்மா. பார்வையில் சிறிது கண்டிப்பு முள்ளாக நின்றது.

“சொன்னது காதுலே நுழைஞ்சதா? ஊமைக் கோட்டான் மாதிரி உம்முன்னு இருந்தா எப்படி?”

வார்த்தை அவருக்குள் சுரீர் என்று சுட்டது. ‘கழுதை, சவம்’ என்று மனசுக்குள் ரோஷமாய் வார்த்தைகள் பீறிட்டன. உதட்டுக்குள்ளேயே நின்று கொண்ட ரோஷம் வழிமாறி கண்களில் கோபமாக அனல் வீசியது.

இதை உணர்ந்து கொண்ட ராசம்மா பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். குரலில் கனிவைச் சேர்த்துக் கொண்டாள்.

“சரி சரி..பல்லைத் தேச்சு, கஞ்சியைக் குடிங்க...”

“பல்லெல்லாம் தேச்சாச்சு... கஞ்சியை ஊத்து” கோபத்தின் தூவானம் தெறித்தது.

அவசியமாய் சொல்ல வேண்டியவற்றை மறந்து போனது போல -சட்டென்று நினைவுக்கு வந்தவள் போல்...“ஆ...” என்ற சப்தத்துடன் நிமிர்ந்தாள்.

“சொசைட்டி ‘கிளாக்கர்’ வந்துட்டுப் போறாரு. பெறகு வாரேன்னுட்டு போயிருக்கார்..”

எளிய பதத்தில் சொல்லப்பட்ட அந்தத் தகவல் அசுர வலிமையுடன் அவரைத் தாக்கியது. விக்கலுக்குத் தண்ணீர் குடிக்க அதுவும் விக்கிக் கொண்டால் நெஞ்சையடைக்குமே... அந்த அடைப்பு உள்ளுக்குள் திக்கென்று நிகழ்ந்தது.

முகத்தில் ஒரு இருள் நிழலாகப் படர்ந்து விலகியது. கண்கள் தாழ்ந்து - தயங்கி - நோக்கின்றி நிமிர்ந்தன.

விவசாயக் கூட்டுறவு நாணய சங்கத்தின் செயலாளர் நினைவுக்கு வந்தார். கடந்த இரண்டு வருஷமாய் அலட்சியப்படுத்தப்பட்டு, புண்படுத்தப்பட்டு - குரோத வடிவமெடுத்துள்ள அவரது கருத்த முகமும், ஆபீஸர் தோரணை மின்னும் சிறிய கண்களும் மனசில் தெரிந்தது.

தன் பெயரில் ஒரு கடனும், ராசம்மா பெயரில் ஒரு கடனுமாக 14 ஆயிரம் கடன் இருக்கிறது. வட்டியும் குட்டியும் போட்டு அது என்ன உயரத்தில் ஏறி நிற்கிறதோ!

சாப்பிட்டு முடித்துவிட்டு, வாய்த் தண்ணீரைக் கொப்பளிக்க வாசலுக்கு வந்தபோது, பேரேடும் கையுமாக செயலாளர் வந்தார்.

“வாங்க செக்கரட்டரி அய்யா...” முச்சாமிக்கு ஏனோ மனது அச்சத்தில் படபடத்தது. பசியெடுப்பது போன்றதோர் பதைப்புணர்வு.

“ம்ம்..கே..முத்துச்சாமிங்கிறது தானே உங்க பேரு?”

“ஆமாஞ் சார்..”

“உங்க அப்பா பேரு?”

“ஐயோ பேரா...? கிட்ணத்தேவர்”

“கிருஷ்ணசாமித் தேவர்னு இதுலே போட்டிருக்கே.”

“அதான் சரி... கூப்பிடுறது கிட்ணத் தேவர்தான்”

“சரி...உங்களுக்கு ரெண்டு லோன் இருக்கு. ரெண்டும் தவணை கடந்ததுதான். ரெண்டு வருஷமாய் ரசீதே போடலே. எப்படி.. இந்த வருஷமாச்சும் போடுறீங்களா?”

அவரது போலிப் பணிவு முச்சாமிக்குத் தன்னைக் கேலி செய்வது போலிருந்தது. தனது வீழ்ச்சியால் மகிழ்ச்சி காணுகிற எக்காளமும், குரூரமும் செக்ரட்டரியிடம் வெளிப்படுவது போலிருந்தது.

இயல்பாகப் பீறிட்ட ஆவேசத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்ட முச்சாமி, சிரிக்கக்கூட முயற்சித்தார். சிரிப்பின் போலித்தனம் அசட்டுத் தோற்றத்தைத் தந்தது.

“இந்த வருஷம் பச்சைப் போர்டெல்லாம் காட்ட முடியாது... சென்ட்ரல் கவர்மெண்ட் வசூல் பண்ணச் சொல்லி ஸ்டிரிக்ட்டா ஆர்டர் போட்டிருக்கு- ஸ்டேட் கவர்மெண்ட்டும் வாயைப் பொத்திக்கிட்டு காரியத்திலே இறங்கப் போகுது.. ரசீது போடுறது உங்களுக்கு நல்லது..”

செக்ரட்டரியின் இகழ்ச்சியும் மிரட்டலும் முச்சாமியின் மனசில் ஆத்திரத்தை மூட்டியது. வெளம் வௌமாய் வந்தது. அடக்கிக் கொண்டார்.

“போட்டுருவோம் சார்... ஆண்டவன் புண்ணியத்துலே வத்தலுக்கு நல்ல விலையிருக்கு. இந்த வருஷம் போட்ருவோம் சார்”

“சொன்னபடி செய்யணுமே..”

“செய்யாமெ என்ன சார்..வாங்குன கடன் அடைஞ்சாகணும். வழி நடந்தாகணும். எங்களுக்கு இல்லாத அக்கறையா!.. உங்க புண்ணியத்துலே வத்தலுக்கு நல்ல விலையிருக்கு. இந்த வருஷம் போட்டுருவோம் சார்”

“என்னமோ நா சொல்றதை சொல்லிட்டேன். நல்லபடியா நடந்துக்குங்க. இல்லேன்னா... இந்த வருஷம் போலீஸ் வந்துதான் வசூல் பண்ணும்” கடுமையான மிரட்டல் ஒன்றை கடைசிக் குண்டாகத் தூக்கிப் போட்டு விட்டு நடந்தார். அவரது மடிப்புக் கலையாத பேண்ட்டும், கட்டம் போட்ட ஸர்ட்டும், வலது கை ரிஸ்ட் வாட்சும்... பார்க்கப் பார்க்க முச்சாமிக்கு வெறுப்பாக இருந்தது.

ஹும்... உழைச்சுக் குடுத்த எங்களுக்கு அழுக்கு வேட்டி, உங்களுக்கு கோட்டு, சூட்டு... காலம் இப்படியேவா போயிடும்?

இனம் புரியாத குருட்டுக் கோபத்தில் சிந்தனை தடம் மாறித் தாறுமாறாக ஓடியது.

அரிவாள் கம்பு ஒரு கையிலும், மீசையில் ஒரு கையுமாக எதிரில் ஒரு கொடிய உருவம் நெருங்கி வருவதைப் போன்ற பிரமை! மனசைப் பிடித்து குலுக்குகிற பயம்.

“அட, அரசாங்கம் அம்புட்டு மோசமாகவா போயிடும்” அப்படியொரு நம்பிக்கை பயத்தைச் சற்றுத் தணியச் செய்தாலும் ஒரு அயற்சி கவ்வியது.

‘சம்சாரிகளைப் பிடிச்ச இந்தக் கடன்சள்ளை எப்பத்தான் தொலையப் போவுதோ... சாவோட சேர்ந்து தொலையுமா, அதுக்குப் பிறகு பிள்ளைகளை நசுக்குமோ- ஹும்-எம்புட்டுக் கடன்!’

கிணறு வெட்ட வாங்கிய எல்.எம். பேங்க் கடன் ஞாபகத்திற்கு வந்தது. சுருக்குப் பைக்குள் சுருண்டு, பாண்டியன் பேங்க் லாக்கருக்குள் கிடக்கிற மனைவியின் நகைகள் மனசில் தோன்றின.

கமிஷன் கடையில் வாங்கிய கடன் - பலசரக்குக் கடை லோன்... போதாக் குறைக்குக் கைமாத்தும் கால்மாத்துமாய் வாங்கிய ‘அல்லுச் சில்லு’ கடன் வேறு!

இம்புட்டுக் கடன் எப்படித்தான் வந்து சேர்ந்துச்சு? வருஷத்துக்கு வருஷம் வெளச்சல் கூடித்தான் விளையுது. ஆனாலும் கடன் ஏறிக்கிட்டே போகுது. எப்படித்தான் இந்த மாயம் நடக்குதோ!

இம்புட்டுக் கடனையும் எப்படி கட்டி முடிக்கப் போறோம்?

நினைத்தாலே முச்சாமிக்கு மலைப்பாக இருந்தது. நடுவெள்ளத்தில் சிக்கிச் சோர்ந்து போனவனைப்போல மிரட்சியில் தவித்தார்.

நேற்றிரவு ‘உழவர் உலகம்’ முடிவதற்கு முன்பாக மார்க்கெட் நிலவரத்தில்...‘மிளகாய் வற்றல் சன்ன ரகம் ரூ. 1600 முதல் 1700 வரை’...என்று டிரான்சிஸ்டர் முழங்கிய அறிவிப்பு நினைவுக்கு வந்தது. மனசுக்குள் குளிர்ந்த நீர் ஓடியது. சற்றுத் தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டது.

வற்றல் களத்துக்கு வரும்போது விலை குறையத்தான் செய்யும். 1600 விக்கிற விலை குறைஞ்சாலும் 1200-க்கும் கீழேயா போயிடப் போகுது? அந்த விலை வித்தாலும் போதும்... எப்படியும் கடன் சுமையிலே பாதிக்கு மேலே இறக்கிடலாம்!

நினைத்துப் பார்க்கிறபோது மனம் இப்போது சுமை குறைந்து இலேசாகியிருந்தது.

கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நெஞ்சில் புதிது புதிதாகப் பூத்துச் சொரிய, திகிலை மென்று விழுங்கிக் கொண்டே நாட்கள் மெதுவாக நகர்ந்தன.

ஊருக்கு மேற்கேயுள்ள களத்தில் நின்றார். மாசி மாதத்துப் பனி மச்சியைத் துளைக்குமாமே! இப்போது உடலைத் துளைத்தது. ரத்தத்தைப் பூமியில் சதுரம் சதுரமாய்ப் பூசி வைத்திருப்பார்களா!

இதோ, மிளகாய்ப்பழம் காயப் போடப்பட்டிருக்கிறது. அவரவர்கள் பழத்தைத் தனித் தனியாக சதுரமிட்டு விரித்துள்ளனர்.

இளஞ்சூரியனின் மஞ்சள் வண்ண ஒளியை ய மிளகாய்ப் பழம் வாங்கி எதிரொளித்தபோது... ஈரம் உலராத புது ரத்தம் போல பிரகாசித்தது.

முச்சாமி நெஞ்சில் பொங்கி நிறையும் பூரிப்புடன் நின்றார்.

இந்த ரத்தப்பெருக்கை - அழகுச் செல்வத்தை - கமிஷன் கடைகளில் விற்பனைக்குக் கொண்டு போனால்... ஏதேதோ வியாபாரச் சூதாடிகள் எருமைகளாக மிதித்து துவைத்து... எங்களை அள்ளி விழுங்கிவிட்டுப் போய்விடுவார்களே...

‘குவிண்டால் 1200 ரூபாய் விக்குதாம்... இந்த விலை நிலைச்சாக் கூட, பாதிக் கடனை அடைச்சுப் போடலாம்..’

‘மூத்த பெண் பருவத்துக்கு வந்து இந்த மாசியோட ஏழு வருஷம் முடியப் போகுது... அவளுக்கும் ஒரு வழி பண்ணியாகணும்’ என்று நினைத்தவுடன் நெஞ்சில் ஒரு கனம் ஏறித் திணறடித்தது.

வகை பண்ணுறதுன்னா... சுலபமா? மூக்குத்தி, கம்மல் செய்யணும், ஒன்று ரெண்டாச்சும் நகை வேணும்... கல்யாணச் செலவுக்குப் பணம் வேணும்... இதெல்லாம் எப்போ செய்ய?

இந்த வருஷமே செஞ்சுட்டா... என்ன! சொஸைட்டிக் கடனையும் மற்ற கடனையும் ‘அப்படியும் இப்படியுமா இழுவி, அடுத்த வருஷத்துக்கு நகட்டி விட்டுட்டா என்ன...ஹூ...!’

இந்த நினைவு சுகமாக இருந்தது. மூச்சு சீராகப் போய் வந்தது. வழி பண்ணி முடித்து விட்டாற்போன்ற சந்தோஷம் மனசை மெல்லிசாகத் தாலாட்டியது. கல்யாணக் கோலத்தில் மகளை மனசுக்குள் பார்க்கிற போது தந்தை உள்ளம் தத்தளித்தது.

அரிவாள்கம்பு ஒரு கையிலும், கிடா மீசையில் ஒரு கையுமாக ஒரு அசுர உருவம் வன்ம வெறியுடன் நெருங்கி வருவதைப் போன்ற பிரமை! “ம் ம்... உடம்புக்கு எப்படி இருக்கு” என்று கரகரத்த உறுமலில் மிரட்டுவதைப் போன்று மனதில் ஒரு தோற்றம்!

பயத்தில் இதயம் ஜில்லிட்டு நடுங்கியது.

மகள் எண்ணெய் வழியும் முகத்துடன் களைச் சுரண்டியுடன் புஞ்சைக்குப் போய்க் கொண்டு இருந்தாள்.

☐☐☐

ந்தச் சிறிய நகரமே தூக்கத்தில் ஆழ்ந்தது, அமைதி கொண்டிருந்த நேரத்தில் - அந்தக் கமிஷன் மண்டிகளில் மட்டும் திருவிழாக் கோலமும், ஆர்ப்பாட்டக் கூச்சலும் தெரிந்தது.

பட்டியில் ஆடுகள் அடைக்கப்பட்டிருப்பது போல், வரிசையற்ற கும்பலாக - நெருக்கமாக வற்றல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் கூதலுக்குத் தலைத் துண்டைப் போர்த்திக்கொண்டு நோக்கின்றி அலைந்தனர். முச்சாமி கவலையுடனும், திகிலுடனும் திரிந்தார். திரும்பத் திரும்ப தனது வற்றல் மூடைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். வற்றலை அள்ளிப் பார்த்துக்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் கிடக்கும் பிள்ளையைப் பார்க்கிற தந்தையைப் போல ‘என்னாகுமோ’ என்கிற திகிலும் வருத்தமும், முச்சாமி மனசை அலைக்கழித்தன.

கமிஷன் மண்டியில் பரபரப்புடன் அலைந்தனர். வேலையாட்கள் ஓடிச் சாடினர்.வியாபாரிகள் வெள்ளையும் சொள்ளையுமாக வட்டமாக உட்கார்ந்திருந்தனர்.

மூடையிலிருந்து ஒரு சௌகில் நாலு கை வற்றலை அள்ளிப்போட்டு கடைப்பையன்கள் அந்த ‘வட்டத்’திற்குள் வைக்கின்றனர்.

ஒவ்வொரு ‘வெள்ளை’யும் வற்றலை அள்ளி நசுக்கிப் பார்க்கிறது. மடித்துப் போட்ட துண்டுக்குள் கை கொடுக்கின்றனர்.

விரல்களுக்குள்ளே விலைகள் நிர்ணயமாகின்றன.

வற்றல்காரனின் பெயருடன் ‘தீர்ந்த’ விலை அறிவிக்கப்படுகிறது.

முச்சாமிக்கு திகில் நெஞ்சைப் பிடித்துக் குலுக்க.. விதம் விதமான நினைவுகள் உள்ளுக்குள் ஓடிச் சாட - பதைப்போடு காத்திருந்தார்.

வட்டமிட்டு உட்கார்ந்திருக்கும் அந்த வெள்ளை வேங்கைகளைப் பார்க்க அவருக்குப் பயமாக இருந்தது.

“இந்த வெள்ளை வேங்கைககிட்ட விவசாயிகளை ஒப்படைச்சுட்டு, சர்க்கார் என்ன மயிரா பிடுங்கப் போகுது? வசூலுக்கு மட்டும் அருவாக் கம்பும், மீசையுமா வந்து நிக்குறானுவ.. சாவாடு செத்த பயக..”

இப்படி முச்சாமி முணு முணுத்துக் கொண்டிருந்த போதே....அவரைக் ‘கடித்துக் குதறி முடிக்கப்பட்ட’ விஷயம் பெருமையுடன் பிரகடனப்படுத்தப்பட்டது.

“..முத்துச்சாமி எழுநூத்தி இருபத்தெட்டு”

ஆம், அவரும் குடும்பமும் சேர்ந்து உழைத்த ஒரு வருஷப்பாட்டுக்குக் கிடைத்த மதிப்பு 728தான்!

முச்சாமிக்கு வெடித்து விடுவதைப்போல இதயம் விம்மியது. ‘அடக் கொலைகாரப் பாவிகளா..’ என்று கத்த வேண்டும் போல ஆவேசம் பொங்கி ஆர்ப்பரித்தது.

காயும் பூவுமா இருந்தபோது 1600 என்று வானொலி அறிவித்தது.பழமாகி கடைக்கு வரும்போது 728. இதென்ன கொடுமை? இந்தக் கூத்துதானே வருஷமெல்லாம் நடக்குது?

இதை வைச்சு எப்படிக் கடன் கட்டுறது? மானத்தோட வாழ்றது? இந்த இழவெடுத்த கூத்தாலேதானே வருஷா வருஷம் கடன் ஏறிக்கிட்டே போகுது. எவ்வளவு பாடுபட்டாலும், எவ்வளவு விளைஞ்சாலும்... கடன் கூடிக்கிட்டே போறது, இதனாலேதானே!

கடன் வசூலுக்குப் பட்டாளமா பாய்ஞ்சு வர்ற சர்க்கார். இதுக்கொரு நியாயமா விலை நிர்ணயம் பண்ணியிருந்தா.. சம்சாரிக கடனைக் கட்டியிருக்கலாமே.

விலை நிர்ணயம் பண்ணாததாலே.. எங்க விளைச்சலெல்லாம் வியாபாரிக வீட்டுக்குள்ளே போய்ச் சேர்ந்துடுச்சு. சம்சாரிக பட்ட கடனை ஞாயமாப் பார்த்தா... சர்க்கார் ஏவாரிக்கிட்டே வசூல் பண்ணனும். பண்ண முடியாட்டா-விட்டுட்டுவிரலைச் சூப்பிட்டுப் போகணும்.. ஏழை சம்சாரிகிட்டே வந்து மீசை முறுக்குறது, என்ன ஞாயம்?

முச்சாமியின் மனசில் நெருப்பாக நினைவுகள் ஜுவாலை விட்டெரிந்தன.

வெறும் தாட்டுகளைச் சுருட்டித் தலையில் வைத்துக் கொண்டு, பஸ் ஏறினார் முச்சாமி.

அரிவாள்கம்பும் மீசையுமாய் நெருங்கி வருகின்ற சர்க்கார்.... களை சுரண்டியுடன் அந்த வருஷமும் காட்டுக்குப் போகும் மகள்-

சுற்றி மொய்க்கும் யதார்த்தம் அவரைச் சுட்டது.

போரில் சகலத்தையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற லங்கை வேந்தன் கலங்கினானே... அதைவிடவும் கொடிய கலக்கம், கடன்பட்ட முச்சாமியின் நெஞ்சத்தைக் கலக்கியது.

கடன் அடைஞ்சாகணும், வழி நடந்தாகணும். எப்படியும் மகளுக்கு ஒரு நல்லது செய்யணும். அது எப்படி?

கேள்விகள் நெஞ்சைக் கவ்வி, பாரமாகித் தொங்கி இழுக்க, அந்த லங்கேஸ்வரன் குமுறலுடன் ஊருக்குள் நுழைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=காகிதம்/007&oldid=1813269" இலிருந்து மீள்விக்கப்பட்டது