காகிதம்/009
றெக்கையடிக்கிற சேவலின் உற்சாகச் சடசடப்பு, தொடர்ந்து எல்லாரையும் உசுப்பி விடுகிற ‘கொக்கொரக்கோ’ கூவல்.
கர்வமாய் கூவிய சேவலை யாரோ அதட்டுகிறார்கள். ‘கேர்...கெக்கேர்... கேர்’ என்று பயத்தில் வீறிடுகிறது. குதித்துத் தாவி ஓடுகிற சத்தச் சலனம்.
அந்தச் சேவலின் றெக்கையடிப்பிலேயே முழிப்பு தட்டிவிட்டது வடிவுக்கு. எந்திரிக்கவே மனதில்லை. பகலிலும் ரவ்விலும் பட்ட பாடுகள். காட்டிலும் வீட்டிலும் உழைத்த அலுப்பு. உறங்கிய களைப்பு.
அப்படியே நினைவின் மடியில் மனசு கண் சொருகி, துவண்ட உடம்பின் மயக்கத் திளைப்பில் கிறங்கிக் கிடக்கணும் போல ஏக்கமாய் இருக்கிறது. உறக்கச்சடவில் முகம் புதைத்து, சர்க்கரைப் பாகுக்குள் சிக்கிய எறும்பாக மயங்கிக் கிடக்க ஆசை.
சேவலின் ரெண்டாவது கூவல். கோழியின் ஆச்சர்யத் தொனியிலான கத்தல்கள், குஞ்சுகளின் மகிழ்ச்சியான ‘கீச்... கீச்...’ பால்கேன்கள் குலுங்கிக் கிலுகிலுக்க, விரைகிற டி.வி.எஸ்.50ன் இரைச்சல். எருமை மாடுகளின் ‘தகக், தக், தக்..’ இயங்கும்புற உலகத்தின் சத்த முகங்கள். லௌகீக வாழ்வின் சாட்டைக் குத்தல்.
நெட்டி முறித்தாள் வடிவு. திரேகத்தை நெளித்து, முறுக்கேற்றி...விறைப்பின் உச்சத்தில் நரம்புகளெல்லாம், ‘விண்ண்’னென்று விடைக்க... அப்படியே சன்னஞ்சன்னமாய்த் தளரவிட்டு... துவளச் செய்து... நனைந்த சணல் கயிறாகப் பாயில் கிடக்கிறபோது-
எந்திரிக்கணும். முத்தம் தெளிக்கணும்... காப்பி போடணும்.. பால் வாங்கணும் என்று நினைவில் உரசுகிற ஞாபகம்.
‘முத்தம் தெளிக்கணும்’ என்ற ஞாபகம் வந்தவுடனேயே முள் குத்தின மாதிரியிருந்தது உள்ளுக்குள். வெளியே போகணும். முகத்தைக் காட்டணும். வெற்று நெற்றியை..மிஞ்சிகள் இல்லாத வெறும் கால் விரல்களை- வளையல் சத்தம் இல்லாத மூளிக் கைகளை வெளியே காட்டணும்.
‘முண்டச்சி மூஞ்சியிலா முழிக்கணும்’ என்று வெறுப்பும் எரிச்சலுமாய்ச் சீறுகிற எவனோ ஒரு காட்டான்.
நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது, வடிவுக்கு. அந்தக் கணத்து அவமான உணர்வுகள் ஊசி ஊசியாகக் குத்திச் சொருகின ரண அனுபவங்கள்.
பறிகொடுத்த புருஷனின் இழப்பு. அதன் கொடூரமும், கனமும் சம்மட்டியடியாக நெஞ்சுக்குள் விழ... கண்ணோரங்களில் மனத்துளி. வேதனைக் கசிவு, பாயை விட்டு விலகிப் படுத்துக்கிடக்கிற மகனைக் கையால் துழாவினாள். அவனது உலர்ந்த முதுகு. புழுதியின் சொர சொரப்பு. இவளது ஒரே பிடிமானம்.
–நாலைந்து நாட்களுக்கு முன்பு.
நடுத்தெருவில் மைக் செட் அலறிக் கொண்டிருந்தது. மூலை மூலைக்குக் கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய குழாய்கள். எல்லார் செவிகளும் அதிர்ந்து கொண்டிருந்தன. பேய்க்கூச்சல், காட்டுக்கத்தல்.
இப்படி மைக்செட் பாடினாலேயே சிறுவர், சிறுமிகளுக்கும் ஒரே கொண்டாட்டம் குதூகலம். ஆவலும் ஆசையுமான எதிர்பார்ப்பு.
பந்திச் சாப்பாடு சாப்பிடலாம். இலைபோட்டுச் சோறு வைப்பார்கள். ரெண்டு, மூன்று கூட்டுகள்... பொரியல்-சாம்பார்.. ரசம்- அப்பளம் எல்லாவற்றையும் விட இனிப்பான விஷயம், பாயாசம் வேறு ஊற்றுவார்கள். வழித்து வழித்து சாப்பிடலாம். தித்திப்பாக இருக்கும்.
கிராமத்துப் பிள்ளைகளுக்கு அனுதினமும் குழம்புக்குக் கூட வழியிருக்காது. விறைப்பான ரேஷன் அரிசிப் பருக்கைகளைத்தான் ‘ருசி பாராமல்’ அள்ளி முழுங்க வேண்டியிருக்கும். இதுதான் கதி.
இந்தப் பிள்ளைகளுக்குப் பந்திச்சோறு என்றால் தனிக் கொண்டாட்டம்தான்... குஷிதான்... அரிதான அதிசயம்தான்.
மைக்செட் பாட ஆரம்பித்துவிட்டாலே, பிள்ளைகளின் தொண்டைக்குள்ளும் மைக்செட் பாடும். உல்லாசப் பாட்டு. அம்மாவை நச்சரிக்கத் தொடங்குவார்கள்.
“எம்மா-எம்மா-நாம ‘அந்த’ வீட்டுக்குப் போறமா?” என்று ஆசை ஆசையாகக் கொஞ்சுவார்கள்.
வடிவையும் ராமசாமி நச்சரித்தான்.
“எம்மா–எம்மா–”
“என்னடா?”
“ரேடியோ பாடுற வீட்டுக்கு நாம போவமா?”
“எதுக்குடா?”
“சாப்புடத்தான்.”
“இந்த வீட்லே பந்தி இல்லேப்பா.”
“ஏம்மா..?”
“நிச்சயதார்த்தம் மட்டும்தான் பண்ணப் போறாக. கல்யாணத்தன்னைக்குத்தான் பந்தி வைப்பாக.”
அம்மாவை நம்பாமல் பார்த்தான் அண்ணாந்து. ‘ரேடியோ படிச்சா... சோறு இல்லாமலா?’ என்று சந்தேகமாக யோசிக்கிற ராமசாமி, ‘அம்மா பொய் சொல்றாளோ’ என்ற நமைச்சல். அம்மாவின் கண்ணையே ‘துருதுரு’வென துருவித் துருவிப் பார்த்தான்.
அப்போது-
நாலு பெண்கள், நல்ல பூப்போட்ட கலர்ச்சேலை உடுத்தி... சீவிச் சிங்காரித்து... பொட்டு வைத்து.. ‘பளிச்’ சென்று வந்தார்கள். வீடு வீடாகச் சொல்லி அழைக்கிறார்கள். நிச்சயதார்த்த விழாவுக்கு வரும்படியான ஊர் அழைப்பு.
பக்கத்து வீட்டில் ‘தப தப’வென்று நுழைகின்றனர். வீட்டுக்காரர்கள் தடபுடலாக உபசரிக்கின்றனர்.
“எத்தே... எத்தே..”
“யாரடியம்மா? அடடே..வாங்க வாங்க..”
“எங்க வீட்லே தங்கச்சிக்கு நிச்சயம் பண்ணப்போறோம். வந்துருங்க.”
“எந்நேரத்துக்கு?”
“சாயங்காலம் பொழுதடைஞ்சு ‘கரு, கரு’ன்னு மயங்குற நேரத்துக்கு, ஏழு மணிக்கு.”
“அப்படியா? நல்ல காரியம். காலாகாலத்துலே நடக்கட்டும். நா வந்துருதேன்.”
“வந்துருங்க, அத்தே.”
“வராம இருப்பேனா? நம்ம புள்ளைக்கு மாலை பூத்து வருதுன்னா... எம்புட்டுச் சந்தோஷம். நா வராம இருப்பேனா..? வாரேன்..”
அங்கே சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேச்சு கல கலத்துக் கொண்டிருந்தது. வாசலில் நிற்கிற வடிவு. அவளது கால்மாட்டில் நிற்கிற ராமசாமி..
“ஏம்மா_”
“என்னய்யா கண்ணு?”
“அந்த ஆச்சியை கூப்புடுதாகளே... நம்மளையும் கூப்புடுவாகளா?”
ராமசாமி குரலில் ஒரு துள்ளல். கூப்பிடணும் என்று ஆசைப்படுகிற மனசின் பரபரப்பு. ஆவல் பறப்பான அவனது ரெக்கையடிப்பு. வடிவுக்கு வாயடைத்துப் போயிற்று. என்ன சொல்ல? எப்படிச் சொல்ல?
நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது.
அந்த வீட்டைவிட்டு வெளியேறி வருகிற அந்தப் பெண்கள். இந்த வீட்டை நெருங்குகின்றனர். வீட்டு முற்றத்தில் நடக்கின்றனர்.
ஆவல் வெளிச்சம் கண்ணில் மின்ன அவர்களையே பார்க்கிற ராமசாமி. அம்மா சேலையைப் பற்றியிருந்த அவனது உள்ளங்கையின் மெல்லிய நடுக்கத்தில் உணர முடிகிற அவனது மனசு. முற்றத்தில் நடக்கிற அந்தப் பெண்கள். நிமிர்ந்து கழுத்தைத் திருப்பி இவளைப் பார்க்கின்றனர். ஏறிட்டுப் பார்க்கிற பார்வையில் தெரிகிற அம்மா, தர்மசங்கடமான புன்முறுவலோடு கடந்து போகிற அவர்கள், அசட்டு முறுவல்.
மங்களகரமான வீட்டுக்கு அமங்கலியை எப்படி அழைப்பார்கள்?
‘வா’ என்று அழைக்கவில்லை. அடிமனசில் சப்பென்று அறைகிற ஏமாற்றம். கடந்துபோகிற அவர்கள் எதையோ பறித்துக் கொண்டு போகிற மாதிரியோர் வேதனை.
இந்த நிராகரிப்பு. புறக்கணிப்பு. கல்லெறிபட்ட குருவியாகத் துடிக்கிற மனசு. வடிவுக்குள் தவிக்கிற தவிப்பு. அவமானப்படுத்தப்பட்ட அவஸ்தை. இழிவுப்படுத்தப்பட்ட கொதி உணர்வு.
‘ஒழக்கரிசி சீவன், அந்த ஆளு. அவரு சாகப்போய் எம்புட்டு மரியாதை போயிருச்சு? பொட்டு, பூ, போச்சு, ஆதரவு, அரவணைப்பு போச்சு. மனுச மக்க மத்தியிலே நிக்குற உரிமையுமில்லே. போயிருச்சு? ‘நல்லது’ எதுலேயும் நாயகமா இருக்க முடியலியே... அட, ஓரத்துல ஒதுக்கத்துலே கூட ஒண்டி நிக்க வழியில்லாமப் போச்சே..’
அவலப்புலம்பலாக அழுது நீள்கிற சோக நினைவுகள்.
“எம்மா..”
“ம்”
“ஏம்மா, அந்த ஆச்சியைக் கூப்புட்டாக, நம்மளைக் கூப்புடலை?”
“அய்யா செத்துட்டாருல்லே..? அதான்”
“நாம சாகலைல்லே? நம்மளை ஏன் கூப்புடலை?”
அந்தப் பிஞ்சு மனசின் சோகக் கேள்வி. இவளுக்குள் தீக்கோலைச் சொருகி உருவிய மாதிரியிருந்தது.
சின்னஞ்சிறுசின் வெள்ளந்தியான அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல? எப்படிச் சொல்ல?
அவளுக்குள் குலை கொதித்தது. பொங்கித் திமிறிக் காண்டு வந்த அழுகை, ‘கோ’வென்று தலையில் அடித்துக்கொண்டு கதற வேண்டும் போலிருந்தது.
அடக்கிக்கொண்டாள்.
‘சின்னப்பய, பதறிப் போவான். அழுகையை அடக்க உஷ்ணக் கண்ணீரை உள்ளேயே நிறுத்த ரொம்பச் சிரமப்பட்டாள் வடிவு.-
...சொரசொரப்பான மகனின் முகம். புழுதியில் விளையாடி விட்டு அப்படியே படுத்திருக்கிற ராமசாமி. “சின்னப் பயலாக இருந்தாலும் அறிவான பய. அம்புட்டு வெவரமாகேக்கானே... ‘நாம் சாக லேல்லே’ன்னு. எங்க அய்யாவைப் போல கூரான பயல்” என்று சோகத்தில் நனைந்த ஒரு பெருமிதத்தில் சொல்லிக் கொண்டாள்.
திறந்த கண்ணுக்குள் நிறைந்திருந்த இருட்டு. அடுப்போரத்து கையகல ஜன்னலில் தெருவிளக்கின் வெளிச்சத்துண்டு.
இருட்டு விலகாத விடியல். நெட்டி முறித்து, உறக்கச் சடவைக் கழுவிக் கொண்டு இயங்கத் தொடங்கிவிட்ட கிராமத்துச்சலனம். சத்த சலனம்.
கூத்துவன் பண்ணிய அலங்கோலத்தையும், கோண எழுத்தையும் எண்ணிய மனவிசாரம். அதிலேயே நனைந்து துவண்டு கிடந்த வடிவு.
“வடிவு...ஏய்...வடிவு”
கதவைத் தட்டுகிற சத்தம். ஒரு பெண்ணின் குரல்.
“என்னக்கா?”
“இன்னும் எந்திக்கலியா?”
“ம்ள்ச்சூ! எந்திரிக்கணும்”
சோர்வும் சலிப்புமாய் சரிந்த குரல்.
“என்ன வடிவு, ஆறுமணி வேலைக்குப் போவனும்லே? வரல்லியா? புஞ்சைக்கார நாயக்கரு நாற வசவு வையப்போறாரு”
நிஜமாகவே அதிர்ந்து போனாள். சட்டென்று மூளையில் தாக்கிய நினைவு.
“ஐயய்யோ-! அந்த ஆவுகமே (ஞாபகம்) இல்லேக்கா. இந்தா வந்துட்டேன்க்கா”
பதைத்துப் போய் ‘தடபுட’வென்று எழுந்தாள், வடிவு.
நாயக்கர் புஞ்சையில் பருத்தி விதை ஊன்றப்போக வேண்டும். காலைக் கரண்டு. ஆறு மணி முதல் மதியம் வரை ‘த்ரீ’ பேஸ் மோட்டார் ஓடும். வாய்க்கால் நிறைய ஊர்ந்து வருகிற தண்ணீர். பாத்தி பாத்தியாகப் பாயப் பாய... ஈரச்சகதிக்குள் விதை ஊன்றணும். சாணத்தில் புரட்டி, உலர வைத்த பருத்தி விதை.
விதை ஊன்றுகிற முதல் நாளிலேயேதாமதமாய்ப் போனால்...அம்புட்டுத்தான். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக ‘தங்கு, புங்கெ’ன்னு குதிப்பார் நாயக்கர்.
சும்மாவே எல்லாரையும் வைவார். பேர் சொல்லியே கூப்பிடமாட்டார். ஏதாச்சும் வசவுதான். அவருக்கு இவர்கள் வைத்திருக்கும் பட்டப் பெயரே ‘நாறவசவு நாயக்கர்’தான்.
“நல்ல நாள் பார்த்து, விதை ஊனுற மொத நாளு. இன்னிக்கே லேட்டாய் வர்ற. வெள்ளாமை விளங்குன மாதிரித்தான்” என்று சீறிச் சினந்து தெறிப்பார்.
நினைத்தாலே-நடுக்கமாக வருகிறது வடிவுக்கு.
அவசர அவசரமாகத் தலையை அள்ளி முடிந்தாள். கதவைத் திறந்தால், வந்து மோதிஅப்புகிற இருட்டு. பொழுதுக் காலைக் கண்ட பயத்தில் முகம் வெளுக்கிற வைகறை இருட்டு.
சொஸைட்டியிலே போய் பால் வாங்கணும். காப்பி போடணும்.சோற்றுக்கு உலை வைக்கணும். ஒரு குழம்புப்பாடு பாக்கணும். ஓடைக்குப் போய்விட்டு வரணும். அள்ளி வயிற்றில் கொட்டணும். அரக்கப் பரக்க ஓடணும்.
இத்தனை‘ணும்’களும் முக்கால் மணி நேரத்திற்குள் முடிந்தாகணும், காலில் சக்கரம் கட்டிப் பறக்கணும்.
சாட்டைச் சுழற்சியாக அவளை முடுக்குகிற புற உலக நிர்ப்பந்தம். சுவிட்சைத் தட்டினால் சுழன்றோடுகிற பம்ப் ஷெட் மோட்டாரைப் போலச் சுற்றியாக வேண்டும்.
எல்லா வேலைகளும் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தன. அவள் கைகளில் ஒரு துரித கதி. பரபரப்பு.
‘வெளியே ஓடைக்குப் போகணுமே’ என்ற நிஜம் நினைவில் வந்தது. அதில் முட்டிக்கொண்ட மாதிரி திகைத்துத் தேம்பினாள்.
வீட்டுக் கதவைத் திறந்து, வெளியே தலைகாட்டுவதற்கு முன்பு, ரொம்ப யோசிக்க வேண்டும். எதிர் வீட்டுக்கு அடுத்த ரெண்டாவது வீட்டுக்காரன், உறங்கி முழித்தவுடன் செம்புத் தண்ணீரோடு முகம் கழுவ வருவான். அவன் பார்வையில் இவள் தலை தட்டுப்பட்டு விடக்கூடாது.
இவள் முகத்தைப் பார்த்துவிட்டால்... அம்புட்டுத்தான். தாட்சண்யமில்லாமல் வெறுப்பைக் கக்குவான். அசூசையில் முகம் குரூரமாகக் கோணலாகும். சப்பழிந்த முட்டை ஓடாகக், கண்கள் கோபத்தில் குறுகிச் சிறுக்கும்.
கூச்சநாச்சமில்லாத அடாவடித்தனமாக முணு முணுப்பான். “வெறுவாய்க் கெட்ட கழுதை! விடிஞ்சவுடனே வெறும் மூஞ்சீயை கொண்ணாந்து காட்டணுமாக்கும்? ச்சேய்... இன்னிக்கு பொழுது வெளங்குன மாதிரித்தான்.”
அக்கினித் துண்டுகளான வார்த்தைகள். ஊசி ஊசியாகப் பாய்ந்து சொருகும். அவமானம் அவளைப் பிடுங்கித்தின்னும். ‘நாக்கைப் புடுங்கிக்கிட்டு செத்துத் தொலையலாமே’ என்று மனசு கிடந்து கசக்கும்.
புருஷனை நானா கொன்றேன்? தாலியில்லாமல் போனதற்கு நானா பொறுப்பு? வெறும் நெற்றியும், வெறும் கால்விரலும், பூவில்லாத வெறும் கூந்தலுமாய் இருக்க நானா பிரியப்பட்டேன்? என் வாழ்க்கையே வெறும் வாழ்க்கையாகிப் போன கொடுமைக்காக இரக்கப்படக்கூடாதா? நாதியற்றுப் போன பாவத்துக்குப் பரிதாபப் படக்கூடாதா? ஆண் துணையே அற்றுப்போய் வயதும் உடம்பும் காட்டு நிலாவாக வீணாகிப் போகிற விதிக்கொடுமைக்குக் கருணை காட்டக் கூடாதா?
மனுசத்தன்மையில்லாத மனுசங்களா? கருணை காட்டவேண்டிய பரிதாபத்திற்குரிய பலவீனமான ஜீவனை... சகுனம் பார்த்து வெறுப்பது என்ன நியாயம்? என்ன மனுசத்தனம்? ச்சேய்!
இப்படியெல்லாம் நினைத்து... இப்போது ஆத்திரப்பட முடிகிறது. கோபப்பட முடிகிறது. ஆனால்..
அந்தக் கணத்தில்...
‘வெறுவாய்க்கட்டகழுதை’ என்ற வசவுச்சொல்லை வெட்கங்கெட்ட துணிச்சலோடு அவன் சொல்கிறபோது-
சீறிச் சினந்து, காறிக் காறித்துப்புகிற அத்துமீறலான அந்த நிமிஷத்தில்...
அவமானமாக உணர்வாள். பிறந்த பிறப்பின் மீதே கசந்து வரும். உயிர் வாழ்வதில் அர்த்தமேயில்லை. மானம் கெட்டு வாழணுமா? மாண்டு மடியலாமே... என்று விரக்தியில் மனம் கசந்துபோய் அழுவாள் வடிவு.
இப்படிப் பல நாட்கள். பல கத்திக் குத்துகள். பல காறித்துப்பல்கள்.
‘மகன் ராமசாமிக்காக உயிர் வைத்து வாழணுமே!’ என்ற ஒற்றை இழையில்தான் அவளது பிழைப்பே தொடர்கிறது.
வடிவு கதவில் கைவைக்க நடுங்கினாள். திறக்கப் பயந்தாள். தலைகாட்டத் தயங்கினாள். உள்ளுக்குள் மருகி மருகித் தவித்தாள்.
‘அந்தப் பாவி வந்து நிப்பானோ!’ என்ற திகில், ‘திக், திக்’ கென்று அடித்துக் கொள்கிற மனசு. பயத்தில் வியர்த்துக் கொட்டுகிறது.
‘நாயக்கரு நாற வசவு வைவாரே’ என்கிற நினைவு.
வேறு வழியில்லை. கதவைத் திறந்தாள். மெல்ல மெல்ல தலையை நீட்டினாள். தயக்கமும் நடுக்கமுமாய் அந்தச் சகுனக்காரன் வீட்டைப் பார்த்தாள். பார்வையை நிமிர்த்துவதற்குள் அவள் மனசுள் பதைப்பு. பீதியின் அலைக்கழிப்பு.
அப்பாடா!
அவன் இல்லை.
அவள் மனசே பாரமிழந்து, பஞ்சாயிற்று. சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது. மூச்சுத்திணறல் மாயமாகியிருந்தது.
அப்போதுதான்...
மண்டைக்குள் ஒரு ஞாபகம் சுரீரென்று வந்து சுட்டது. அந்தச் சகுனக்காரன் ஊருக்குப் போய் ரெண்டு நாளாயிற்று. அவன் ஊரிலேயே இல்லை. முற்றத்தில் இறங்கிய வடிவுக்குள் சாட்டையடியாய்ச் சுளீரிட்ட நினைவு.
‘ஊர்லேயே இல்லாத அற்பப் பயல் ஒருத்தனுக்காகவா... இம்புட்டு நேரமும் பயந்து செத்தோம்?’ என்று நினைத்தவுடன் மனசெல்லாம் பரவிய கசப்பு. குமட்டலெடுக்கிற கசப்பு. அவமானத் தகிப்பு. உள்ளுக்குள் குத்திக் கிழிக்கிற வெட்க உணர்வு.
‘ச்சேய்’ என்று வந்தது.
மங்களகரமான பொதுக்காரியத்துலே கூடிக் கலந்து நிக்கற கொடுப்பினை இல்லை. தெருவுலே முகம் காட்டி நடமாடவும் கூடாதா? அதுவும் பயந்து பயந்து சாகணுமா?
நாளெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி, கிழித்துப் போட்டு சீப்படுத்தணுமா? இதைவிட தாலியறுக்குறதுக்குப் பதிலா... அன்னைக்கே உயிரை அறுத்துருக்கலாமே.
ச்சேய்... இனியும் உசுரு வைச்சு வாழறதுலே அர்த்தமேயில்லை. சாகணும். அரளிக்கொட்டையை அரைச்சுக்குடிச்சுச் சாகணும்.
அவளுள் ஒரு கோபம். ரௌத்ரச் சீற்றம், அவலமாய நிறம் காட்டும் பத்ரகாளி வீரம்.
‘தக், தக்’கென்று தரையதிர நடக்கிற அவள் நடையில் முகம் காட்டுகிற மனத்தகிப்பு.
மகனை உசுப்பி விபரம் சொல்லி, எல்லா வேலையும் முடிந்து தெருவில் இறங்குகிறபோது-
பால் வண்டி வந்து திரும்புகிற சத்தம்.
அப்படீன்னா_மணி ஆறரை.
‘அய்யய்யோ... லேட்டாயிருச்சே. நாயக்கரு நாற வசவுவைவாரே.’
பதற்றமும் பதைப்புமாய் ஓடினாள். பொழுது ரத்த ஜொலிப்பாக முகம் காடியது.
‘என்ன மாதிரி வசவு வையப் போறாரோ...’ என்ற பயத்தில், ‘வெக், வெக்’ கென்று நடையை எட்டிப் போட்டாள்.
புஞ்சைக்கு வந்தாள்-
ஒரே ஆச்சரியம்.
குளிர்ந்த முகம் காட்டி, மனச் சிரிப்போடு
“இப்பத்தான் வாரீயா?” என்று கனிவாகக் கேட்கிற நாயக்கர். முகத்தில் புன்முறுவலின் ஒளிக்கீற்று. கோபமுமில்லை. நாறவசவுமில்லை.
நாலைந்து பாத்திகள் தண்ணீர் பாய்ந்து கிடக்கிறது. யாரும் இன்னும் விதை ஊன்றக் குனியவில்லை. ரெண்டு பெண்கள் பாத்தியின் ஈரச்சகதிக்குள் சும்மா நிற்கின்றனர்.
“என்ன... இன்னும் ஊன ஆரம்பிக்கலியா?” என்று கேட்டுக் கொண்டே இவள் ஈரப்பாத்திக்குள் கால் வைத்தாள். நனைந்து, குழைந்து, மண்ணே மிருதுவாகி.. பொதுக்கென்று இறங்கியது, பாதம்.
“நீ வரட்டும்னு பாத்துக்கிட்டிருந்தேன்”
“என்னத்துக்கு?”
“நீதான்-மொத வெதையை மாரி மூலையிலே ஊனி- நடுவையை ஆரம்பிச்சு வைக்கணும்”
“ஐயய்யோ...நானா?”
“ஆமா, நீதான். ராசியான பேர்க்காரி. ஒம் புருஷன் பேரு வடிவேலு. ஒம்பேரு வடிவு. ஒரு பேர்க்காரவுக. அதுவே ஒனக்கு ஒரு கைராசி–”
“சும்மா இருங்கய்யா... நீங்க போய்... என்னை... போயும் போயும்”
கூச்சத்தில் திணறினாள். குழப்பத்தில் தடுமாறினாள். வார்த்தை வராமல் தத்தளித்தாள்.
“வடிவு, வருஷா வருஷம் எங்கம்மாதான் வெதைப் பெட்டியை தூக்கிக் குடுத்து மனசார வாழ்த்தி அனுப்பிச்சு வைப்பா. இந்த வருஷம் அவா இல்லை. போய்ச் சேர்ந்துட்டா.... இந்த வருஷம் பேர் பொருத்தமான நீ மனசார வாழ்த்தி... மொத வெதையை ஊனு”
“நா மாட்டேன்... போயும் போயும் வெள்ளைச் சீலைக்காரி நா. நா மொத வெதையை ஊனவா? ம்ஹும்.”
“வடிவு, எங்கம்மா வெள்ளைச் சீலைக்காரிதானே? வெள்ளைச் சீலை, கலர்ச் சீலையிலே என்ன இருக்கு? எல்லாம்...வாழ்த்துற மனச் சுத்தம்தான் முக்கியம். மனுசத்தன்மைதான் முக்கியம்.”
வாய்க்காலில் ஊர்ந்து வந்த தண்ணீர் முழுவதும் அவளுள் பாய்ந்து..ததும்பி..
மனப்பாத்தியே நனைந்து, குழைந்து, மிருதுவாகி..வாழ்ந்த - வாழும் - வாழ்க்கையே அர்த்தம் நிறைந்து-தனக்குள்ளும் ஓர் அருமை இருப்பதை உணர்ந்து-
உள்ளுக்குள் பரவசமாகிப் போன வடிவு. சந்தோஷப் பெருக்கில் கனிந்த மனசு, கண்ணில் நீராகக் கோர்த்து- வாய்க்கு வார்த்தை வராமல் தத்தளித்து-
“நெசமாகவா...? நாந்தான் மொத வெதை ஊனணுமா?”
“ஆமா...ஆமா..ஆமா..”
அடித்துச் சொன்ன நாயக்கர் முகத்திலும் ஒரு மலர்ச்சி. அடுத்த பாத்திக்கு வாய்மடையை மம்மட்டியால் கொத்தினார்.
தன்னையே - தன் வாழ்வின் அர்த்தத்தையே - உணர்ந்த பூரிப்பில்... உணர்வுகளையெல்லாம் ஒருமுகப்படுத்தி... குல தெய்வத்தை மனதில் நினைத்து...
“வெளைஞ்சு செழிக்கட்டும். வீடு நிறையட்டும்” என்று வாழ்த்தி விட்டு..
முதல் விதையை ஊன்றுவதற்காகக் குனிந்தபோது அவள் அவளுக்குள் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றாள். இனி-
‘செத்துத் தொலையலாமே’ என்ற நினைப்பு, கிட்டத்தில் கூட அண்டவே அண்டாது.