காகித உறவு/காகித உறவு

விக்கிமூலம் இலிருந்து

காகித உறவு

முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.

இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.

மூன்றாவது காலமான 'சம்பளத்திற்கு' வந்தான். எந்தச் சம்பளம்? அடிப்படைச் சம்பளமான ரூபாய் ஐந்நூறா, இல்லை அலவன்ஸோடு சேர்த்த தொகையா? போகட்டும், வாங்கும் சம்பளமா? அல்லது வாங்க வேண்டிய சம்பளமா? சிறிது குழம்பி, எப்படியோ அந்த இடத்தையும் நிரப்பினான்.

'சென்ற தடவை என்ன காரணத்திற்காகப் பணம் எடுக்கப்பட்டது?' என்ற காலத்திற்கு முன்னால் வந்து, சிறிது நொண்டினான். என்ன காரணம்?

ஞாபகத்துக்கு வந்துவிட்டது. அவனால் மறக்க முடியாத காரணம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் அவன் தந்தை உயிரோடு இருந்தபோது அவர் இறந்துவிட்ட ஈமச் சடங்கிற்காக, இரண்டாயிரம் ரூபாய் கேட்டு மனுப் போட்டான் அவன், அவன் எந்தச் சமயத்தில் எழுதினானோ தெரியவில்லை. சொல்லி வைத்து போல், அவன் தந்தை அடுத்த மாதம் அதே தேதியில், அவன் 'காரண காலத்தை'ப் பூர்த்தி செய்த அதே காலத்தில் காலமானார் என்றாலும் அய்யாவின் சாவுக்காக, வாங்கிய இரண்டாயிரத்தை, அவர் இறப்பதற்கு முன்னதாகவே, அருமை மகள் ஸ்டெல்லாவுக்கு ஐந்து பவுன் தங்கத்தில் சங்கிலி செய்து போட்டு விட்டான். அப்பன் இறந்தபோது அந்தச் சங்கிலியை, அவனால் மகள் கழுத்திலிருந்து இறக்கவும் முடியவில்லை. இறந்தபோது தந்தையின் ஈமச்சடங்கிற்கென்று சித்திக்குப் பணமும் கொடுக்கவில்லை.

'எவ்வளவு வேண்டும்?' என்ற இடத்திற்கு முன்னால் மூவாயிரம் ரூபாய் என்று எழுதிவிட்டு, கடைசி காலத்திற்கு வந்தான். உடனே உண்மையிலேயே திணறிப் போனான். அந்தக் 'காலம்', தன் மனுவுக்கு 'காலன்' போல் வந்திருப்பதை நினைத்து, அவனுக்குக் கொஞ்சம் கோபங்கூட வந்தது. என்ன காரணத்தை எழுதுவது?

அய்யாவை, இரண்டாவது தடவையாகச் சாகடிக்க முடியாது. அம்மாவை... அவள் இளைய தாயார் தானே... சாகடிச்சால் என்ன? வேண்டாம். வேண்டவே வேண்டாம். இந்தக் காலத்தில் எழுதப் போய், அவள் காலம் முடிந்து விட்டால், அவளோடு கன்னிகழியாமல் இருக்கும் இரண்டு தங்கச்சி சனியன்களும் அவன் காலில் வந்து உட்கார்ந்தால், அவனால் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்?

முடியாது.

அவனுடைய பெண் குழந்தைகளான பப்பிக்கும், ஸ்டெல்லாவுக்கும் காது குத்தலாமா? முடியாது. அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு மூன்று தடவை, பேப்பரில் காது குத்தியாகிவிட்டது. இனிமேல் அந்தக் 'காதுகுத்து' வேலை எடுபடாது. அப்படியானால் என்ன செய்யலாம்?

அரை மணிநேரம் கழித்து, அவன் இருக்கைக்கு வந்த போது, நிர்வாக அதிகாரி, "என்னாச்சி"? என்றார்.

"மூளையைக் குழப்பிக்கிட்டிருகேன்" என்று அவன் பதிலளித்தபோது தபால்காரர் ஒரு கடிதத்தை நீட்டினார்; அதை அவன் வாங்கிக் கொண்டே, கடித உறையைப் பார்த்தான். தங்கை தமயந்தி கிராமத்திலிருந்து எழுதியிருக்கிறாள். இந்தச் சனியனுக்கு வேறு வேலை இல்லை... வழக்கமான பல்லவியாகத்தான் இருக்கும்.

அன்பில்லாத அண்ணாவுக்கு.

எல்லாம் வல்ல, நியாய அநியாயங்களைக் கடந்த இறைவன் அருளால், நானும் என்விரக்தியும், எழுபது வயது அம்மாவும் அவள் நோயும், இருபத்தெட்டு வயதுத் தங்கை கல்யாணியும், அவளது கல்யான நிராசையும், வழக்கம் போல், நல்லபடியாகவும், ஒற்றுமையாகவும், சொத்தில்லா சுகத்தோடும் சுகமில்லா மனத்தோடும் இருக்கிறோம். இது போல் நீயும், உன் ஸ்கூட்டரும், அண்ணியும், அவள் நகைகளும், பப்பியும், அவள் நாட்டியமும், ஸ்டெல்லாவும், அவள் ஐந்து பவுன் சங்கிலியும் நலமாக இருக்க, சத்தியமாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அண்ணா! நன்றாக நினைத்துப்பார். உனக்கு மூன்று வயதானபோது, உன் அம்மா - என் பெரியம்மா - இறந்து போனாள். எனக்கு விவரம் தெரியாத பருவத்தில், உன் இளைய தாயாரான என் அம்மா, உன்னைக் கொடுமைப்படுத்தினாளோ என்னவோ. ஆனால் எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அவள் உன்னிடம் இளைய தாயாராக நடக்காமல், உன் பொருட்டு இளைத்த தாயாராகத்தான் நடந்து கொண்டு வந்தாள் என்று நான் - தெய்வ பக்தியுள்ள நான் - எந்தக் கோவிலிலும் கற்பூரத்தை அணைக்கத் தாயார். அக்கம் பக்கத்துக்காரர்கள் அம்மாவிடம் வந்து 'ஒனக்கு பகவான் கிருமையில் ஒரு ஆம்புளப் பிள்ளை பிறக்கணும்', என்று சொல்லும்போதெல்லாம், எனக்கு இனிமே பிள்ளையே வேண்டாம். என் ஒரே மவன் மாடசாமி காலும் கையும் கெதியா இருந்தால் அதுவே போதும், என்று நீ இல்லாத சமயங்களில் அவர்களுக்கு அம்மா பல தடவை பதிலளித்ததைக் காதுபடக் கேட்டிருக்கிறேன். நீ ஈ.எஸ்.எல்.சி முடித்தவுடன் உன்னை உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவள் அவள். நீ எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும், நமக்கும் தோளுக்குமேல் ரெண்டு பொட்டப்பிள்ளைங்க இருக்கு. இவனை வேலைக்கு மனுப்போடச் சொல்லலாம் என்று அப்பா சொன்னபோது, நீ மேற்கொண்டு படித்துத் தான் ஆகவேண்டும் என்று அப்பாவை அடிக்காத குறையாகப் பேசி வெற்றி கண்டவள் அம்மா. அப்படின்னா ஒன் வயத்துல பிறந்த ஒருத்தியையாவது படிக்க வைக்கனும் என்று அவர் சொன்னதும், அம்மா அரைகுறையாகச் சம்மதிக்க, நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தேன். நான் பி.யூ.சி. படிக்க விரும்பியபோது நீ காலேஜில் கஷ்டமின்றிப் படிப்பதற்காகவும், உன் ஹாஸ்டல் செலவுகளுக்காகவும், என்னைப் படிக்க வைக்கக்கூடாது என்று வாதாடி, காரியத்தைச் சாதித்துக் கொண்டவள் உன் சித்தி. பட்டப் படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்த கையோடு நீ கல்லூரித் தோழியைக் கல்யாணம் செய்ய நினைத்தபோது, ரெண்டு குமரிங்கள கரையேத்தாம. ஒனக்குக் கல்யாணம் இல்லை" என்று கோபமாகத் திட்டிய அய்யாமீது கோபப்பட்டு, கல்யாணாத்தை மேளதாளத்துடன் நடத்தி வைத்தவள் உன் அம்மாவுக்கு மாற்றாகவும், மாற்றுக் குறையாமலும் வந்த என் அம்மா.

நீ பணம் அனுப்பவில்லை என்பதைவிட, போட்ட கடிதத்திற்குப் பதில் அனுப்பவில்லையே என்ற எண்னத்திலும், வயது வந்த இரண்டு பெண்களை எப்படிக் கரையேற்றுவது என்று புரியாமலும் நாடி நரம்பெல்லாம் வாடி வதங்க எங்களை வாடிய மலர்களாக்கி, மயான பூமியில் அய்யா மறைந்து கொண்டார். நீ ஈமச் சடங்கிற்கு வந்தாய் இருக்கிற நிலத்தை விற்பதற்கான பத்திரத்தில் பெரிய மனது பண்ணிக் கையெழுத்துப் போட்டு, அந்தப் பணத்தை அய்யாவின் ஈமச் சடங்கிற்கும், அம்மாவிற்கு வெள்ளைப் புடவை வாங்குவதற்கும் அனுமதித்த உனக்கு, நாங்கள் நன்றி செலுத்திக் கொண்டோம். நீயும் ஏதோ ஒரு வேகத்தில் பெஸண்ட் நகரில் குவார்ட்டர்ஸ்ல இருக்கிறேன். வசதியா இருக்கும். வந்துடுங்க', என்று சொல்லிவிட்டுப் போய், பிறகு பதிலே போடவில்லை. என்றாலும், ஆதரவற்ற அனாதைகளான நாங்கள், உனக்குக் கடிதமெழுத நேரமிருந்திருக்காது என்று எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொண்டு உன் வீட்டிற்கு வந்தோம்.

வாசலுக்கு வந்த அண்ணி, வாங்களென்று கூப்பிடாமலே அறைக்குப் போய்விட்டாள். ஒடிவந்த பிள்ளைகளையும் அடித்தாள். இருந்தாலும் நாங்கள் செஞ்சோற்றுக் கடன் கழித்தோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். மாதம் இருபது ரூபாய்க்கு அமர்த்தியிருந்த வேலைக்காரியை நீக்கச் சொல்லிவிட்டு, அம்மாவே வீட்டு வேலைகளைச் செய்தாள். வேலைக்காரிக்குக் கொடுத்த பழையதைச் சாப்பிட்டாள். மாதம் இருபது ரூபாய்க்கு பிள்ளைகளை கான்வென்ட்களுக்கு இட்டுச் சென்ற ஆயாவிற்கு, நான் மாற்று ஆயாவானேன். தங்கை கல்யாணி துணிமணிகளைத் துவைப்பதிலிருந்து கடை கண்ணிகள் வரை போய்க் கொண்டிருந்தாள். நீ அலுவலகம் போனதும் அறைக்குள் போகும் அண்ணி, மத்தியானம் சாப்பிடமட்டும் ஹாலுக்குள் வருவாள். சாப்பாடு மோசம் என்று பாதியில் வைத்துவிட்டு, கல்யாணியைப் பழம் வாங்கிகொண்டு வரச் சொல்வாள். ஜாடைமாடையாகத் திட்டுவாள். சுயமரியாதைக் காரியான அம்மா, எங்களின் எதிர்காலத்திற்காகவும், உன் மனம் நோகக்கூடாது என்பதற்காகவும் பொறுத்துக் கொண்டாள். அண்ணி, 'எங்க பப்பிக்கு வாரவன் கலெக்டரா இருப்பான். இல்லன்னா சயன்டிஸ்டா இருப்பான்', என்று வயதுக்குவராத பெண்னைப் பற்றிக் கனவு காணும்போது, கனவுகள் நனவாகாமல் நசித்துப் போயிருந்த வயதுக்கு வந்த நாங்கள், கொஞ்சம் பொறாமைப்பட்டதும் உண்மைதான். அம்மாவிடம் இதை இலைமறைவு காய்மறைவாகக் காட்டும்போது, அவள் எங்களை ஏசிய ஏச்சை இங்கே எழுத முடியாது.

பெஸண்ட நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலை அதிகாலையில் ஒன்பது தடவை சுற்றினால், கல்யாணம் கூடும் என்று அம்மாவிடம் ஒரு மாமி கூறியதை ஒட்டுக் கேட்ட நான், மறுநாளிலிருந்து பிள்ளையாரைச் சுற்றினேன். அதற்கு ஏற்றாற்போல், ஒரு வரன்வந்தது உனக்கு ஞாபகம் இருக்கும். வெள்ளிக்கிழமை நல்ல நாள். நிறைந்த பெளர்ணமி நாள். ஞாபகம் இருக்கா அண்ணா?

'நாலாயிரம் ரொக்கம். நகை போட்டா போதுமாம். திருவான்மியூர்ல மளிகைக்கடை வச்சிருக்கற பையனுக்குக் கேட்டாக என்று அம்மா சென்னாள்.

உடனே, 'நாலாயிரம் ரூபாய்க்கு எங்க போவ? ஸ்கூட்டர் கடன், பெஸ்டிவல் கடன், ஜி.பி.எப். கடன், பரீட்சை பீஸ், பால் கார்டு அது இது என்று போக பைசா மிச்சமில்லை...' என்று நீ இழுத்தாய். அம்மாவாவது சும்மா இருந்திருக்கலாம் மனம் இருந்தா மார்க்கம் இல்லாமலா போகும்? என்று சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்தாள். உன் மனைவி, தன் பங்குக்கு நாக்கை நீட்டிவிட்டாள். 'இந்த சனியங்க வந்ததிலிருந்து எனக்கு நிம்மதியில்லாமப் போச்சி. போன பிறவியில் செய்த கர்மம் எவ எவளுக்கெல்லாமோ இங்கு அழனுமாம்; வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா இப்படி வாய்க் கொழுப்பு இருக்குமா? கிழவிக்கு மாப்பிள்ள பார்க்க முடியுமா? மனதிருந்தாலும், கிழடா போனவளுக்கு வாலிபன் கிடைக்கறது லேசா? என்று கொட்டினாள்.

நீயாவது அண்ணியைத் தடுத்துக் கேட்டிருக்கலாம் அண்ணன் தடுக்கவில்லையே என்ற ஆத்திரத்தை நானாவது அடக்கியிருக்கலாம். என்னால் இயலவில்லை.

நானும், 'அம்மா சொன்னதுல என்ன அண்ணி தப்பு? மனம் இருந்தா மார்க்கமும் தானாக வரும். நீங்க போட்டிருக்கிற நகைய எனக்குப் போடப்படாதா? சின்னப் பொண்ணு ஸ்டெல்லாவின் சங்கிலியைத் தரப்படாதா, ஜடமா இருக்கிற ஸ்கூட்டர வித்து இந்த ஜடங்கள கரையேத்தக் கூடாதா? அப்படியே இல்லாவிட்டாலும் பி.ஏ. படிச்ச நீங்க, கொஞ்ச நாளைக்கு வேலைக்குப் போயி எங்களுக்கு வழி பண்ண முடியாதா? அண்ணன் ஒரு நாளைக்கு மூணு ரூபாய்க்கு மூணு பாக்கெட் சிகரெட் பிடிக்காரு தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணனும் என்கிற வைராக்யத்துல அத. விட்டா மாசம் நூறு ரூபாய் தேறும். போகட்டும். பப்பிக்கு முப்பது ரூபாய் செலவுல டான்ஸ் முக்கியமா? பதினைஞ்சு ரூபாய் தந்தா டைப்ரைட்டிங் கத்து, நான் வேலைக்குப் போயி, எனக்கு நானே ஒரு வழி பண்ணியிருப்பேன். முடியாததுன்னு உலகத்துல எதுவுமே இல்ல அண்ணி மனசுதான் வேணும் என்று ஏதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டேன்.

நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுதான். ஆனால் அதற்கு நஷ்டஈடு கொடுப்பதுபோல், அம்மா என் தலைமுடியைத் தன் கைக்குள் சுற்றி வளைத்துக்கொண்டு முதுகிலும் பிடரியிலுமாகக் கொடுத்தாள். என்னைக் கோபத்தோடு பார்த்த உன் காலைத் தொட்டு அம்மா கும்பிட்டதுடன், ‘திமிர் பிடிச்ச கழுத பேசுறத தப்பா நினைச்சிக்காதப்பா பால் குடுக்கிற மாட்ட பல்லப் பிடிக்கிற ஜென்மம் இவா’ என்று சொல்லிவிட்டு மீண்டும் என்னை அடித்தாள். எனக்கு அவள்மேல் அனுதாபந்தான் ஏற்பட்டது.

போதாத வேளை பப்பிக்கு ஜூரம் வந்துவிட்டது. சீஸன் கோளாறுதான். ஆனால் அண்ணியோ, எந்த வேளையில இந்த முண்ட நீ பெத்த பொண்ணுக்கு டான்ஸ் எதுக்குன்னு கேட்டாளோ என் பொண்ணு உடம்பெல்லம் ஆடுது. இந்த நிமிஷத்துல இருந்து இவளுக இங்க இருக்கப்படாது. ஒண்ணு அவளுக போகனும். இல்லன்னா நான் போகணும் என்றாள்.

இரண்டு மூன்று நாட்களில் நீ மூன்று டிக்கெட்டுகளை வாங்கி, மெளனமாக எங்களிடம் நீட்டினாய்.

கிராமத்திற்கு வந்த நாங்கள் மனமிரங்கி லெட்டர் போட மாட்டாயா என்று ஏங்கினோம். போஸ்ட் மேனிடம் உன் கடிதம் வருகிறதா என்று உனக்காக அவரிடம் பேசி, இறுதியில் அவருக்காகவே பேசத் துவங்கினேன். முப்பது வயது பிரம்மசாரி அவர் என்னைப்போல் எஸ்.எஸ்.எல்.சி. வரசித்தி விநாயகர் ஏமாற்றவில்லை. எப்படியோ எங்கள் உள்ளங்கள் ஒன்றிப் போய்விட்டன. அவர் நல்லவர். ஏனென்றால் பேனாவைப் பிடிக்காமல், உத்தியோகம் பார்ப்பவர். நம்பிக்கையானவர். ஏனென்றால் அதிகம் படிக்காதவர், இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் திருமணம் தோரணமலை முருகன் கோவிலில் நடக்கப்போகிறது.

எப்படியோ, நீ கல்யாணத்துக்கு வந்தால், தாரை வார்த்துக் கொடுக்க வேறு ஆள்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. பணம் இல்லை யென்றாலும், எப்படியாவது வருவதற்கு டிக்கெட்டு வாங்கிவிடு. போகும்போது அவர் டிக்கெட் வாங்கிக் கொடுப்பார்.

அன்புள்ள ஒன்றுவிட்ட தங்கை,
- தமயந்தி

கடிதத்தைப் பாதி படிக்கும் போதே பல்லைக் கடித்த மாடசாமி, முழுவதும் படித்ததும் அதிர்ந்து போனான். தமயந்தி மீது கோபம் வந்தது.

மாலையில் வீட்டுக்கு வந்ததும், மனைவியிடம் கடிதத்தைக் கொடுத்தான்.

"லெட்டரா எழுதியிருக்கா? அந்தக் காலத்துல பில்லி சூன்யம் வைக்கறதுக்காக, மந்திரச் சொல்ல இப்படித்தான் மறச்சி வைப்பாங்களாம். நாம நாசமா போகணுமுன்னு சாபமிட்டிருக்கா."

நாலைந்து நாட்கள் நடந்தன. தமயந்தியின் கடிதத்தை மறந்தேவிட்டார்கள். ஆனால் ஜி.பி.எப் லோனை மட்டும் மறக்கவில்லை. மாட சாமி மனைவியிடம், லோனுக்கு அத்தாட்சியோடு கூடிய காரணத்தை எப்படிக் கற்பிக்கலாம் என்று கேட்டபோது, அவள் சளைக்காமல் பதில் சொன்னாள்.

"தமயந்தி கல்யாணமுன்னு சொல்லுங்க. அவள் ஒங்கள அண்ணன்னு நினைக்கலன்னாலும், நீங்க அவளை தங்கச்சிங்கறத மறக்காமத்தான் இருக்கீங்க கல்யாண நோட்டீஸ் வச்சி அனுப்புங்க."

"அதெப்படி முடியும்? அது நியாயமில்ல."

“எது நியாயமில்ல? இன்னையோட உறவு போயிடப் போறதா, என்ன? நாளைக்கி, அவள் வாயும் வயிறோட இருக்கையில் நாம கவனிக்க வேண்டியது இருக்குமே. அவகிடக்கட்டும். கவனிக்காண்டாம். அத்தையையும், கல்யாணியையும் அவா அடிச்சி விரட்டமாட்டாங்கறது என்ன நிச்சயம்? அப்போ நாமதான கவனிக்கணும்."

அவன் ஒருநாள் யோசித்தான்; மறுநாள் பிகு செய்தான். அதற்கு அடுத்த நாள் கல்யான அழைப்பிதழுடன், விண்ணப்பத்தை அனுப்பினான். அருமைத் தங்கைக்குத் தன்னை விட்டால் வழியில்லை என்று விளக்கமாக எழுதியிருந்தான். மூவாயிரம் ரூபாய் நாலு நாளில் சாங்கவடினாகி பி.ஏ.ஒ ஆபீசுக்குப் போய் பணமும் வந்து, 'பப்பி' பேரில் பிக்ஸாகிவிட்டது.

மிஸஸ் மாட சாமிக்கு இன்னும் திருப்தியில்லை. ஸ்டெல்லாவுக்கும் ஒரு வழி பண்ன வேண்டாமா? அரசாங்க கஜானாவில் அவன் பேரில் உள்ள அடிவடினல் கிராக்கிப்படி இரண்டாயிரம் ரூபாய் தேறும். சார்ந்திருக்கும் உறவினர்களில் ஒருவருக்குத் தீரா நோய் இருப்பதாக மருத்துவ அத்தாட்சியுடன் காட்டினால் அவ்வளவு பணத்தையும் கொடுத்துவிடுகிறார்களாம். கணவனை நம்பியிருக்கும் அவனது சிறிய தாயாருக்கு - அவளின் மாமியாருக்கு தீராத வாத் நோய், ஏற்கனவே அவளுக்குச் சென்னையிலிருந்து வாங்கி மெடிக்கல் ரி எம்பர்ஸ்மெண்ட் செய்த 'பில்லுகள்' நிறைய வருகின்றன. அவற்றை அத்தாட்சியாகக் காட்டி இரண்டாயிரம் ரூபாயையும் வாங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.


***

£3-£3-£

"https://ta.wikisource.org/w/index.php?title=காகித_உறவு/காகித_உறவு&oldid=1533112" இலிருந்து மீள்விக்கப்பட்டது