காலிங்கராயன் கால்வாய்/001
நாடும் நகரமும்
தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய நாடுகளுடன் தொண்டை நாடும் கொங்கு நாடும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்று கருதும் வழக்கம் முன்பு இருந்தது. இதனைப் பண்டைய இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. ‘வியன் தமிழ் நாடு ஐந்து’ என்று தண்டியலங்காரமும், ‘தமிழ் மண்டிலம் ஐந்து’ என்று திருமந்திரமும் கூறுகின்றன.
சங்க காலத்தில் கொங்கு நாடு தனி நாடாகக் கருதப்பட்டது. கொங்கு நாட்டின் வரலாறு, நாகரிகம், கலை, பண்பாடு, பழக்க வழக்கம் பிற சிறப்புக்கள் ஆகியவை தனிப்பட்டவை. கொங்கு நாட்டு மக்கள் கொங்கர் எனப்பட்டனர்.
இக்கொங்கு நாடு மேல் கொங்கு, வட கொங்கு, தென் கொங்கு, மழகொங்கம் (காவிரியாற்றுக்குக் கிழக்கே உள்ள பகுதிகள்) எனப் பெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்கியது.
நிருவாக வசதிக்காக இக்கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தனர். பிற்காலத்தில் 24 நாடுகளிலும் சில உள் நாடுகள் இணை நாடுகள் பிரிந்து கொங்கு நாடு 42 நாடுகள் ஆயிற்றென வரலாறு கூறுகிறது.
வரலாற்றுப் புகழ் பெற்ற காலிங்கராயன் கால்வாய் பெரும்பகுதி மேல்கரைப் பூந்துறை நாட்டிலும், சிறுபகுதி மேல்கரை அரைய நாட்டிலும் பாய்கிறது. காலிங்கராயன் அணைகட்டிக் கால்வாய் வெட்டிய வள்ளல் காலிங்கராயன் பிறந்த நாடு, ஊர் இவைகளின் சிறப்பை ஒருசிறிது காணலாம்.
பூந்துறை நாடு
புகழ் தங்கும் பூந்துறைநாடு கொங்கின் 24 நாடுகளிலே முதன்மையான சில நாடுகளில் ஒன்று. கிழக்கே காவிரியாறு, தெற்கே காஞ்சி எனப்படும் நொய்யலாறு, மேற்கே சென்னிமலை, வடக்கே வானி எனப்படும் பவானியாறு இவ்வெல்லைகட்குட்பட்ட 32 பழம் பெரும் ஊர்களைத் தன்னகத்தே கொண்டது பூந்துறை நாடு. காவிரிக்கு மேற்கேயுள்ள காரணத்தால் இந்நாடு ‘மேல்கரைப் பூந்துறை நாடு’ என்றும் பெயர் பெற்றது.
‘உன்னிய தெற்கில் காஞ்சி
உயர்நதி வடக்கு வானி
பொன்னிமா நதியே கீழ்பால்
புகன்றிடும் மேற்குத் திக்கில்
சென்னிமா மலையே யாகும்
சிறக்கமுப் பத்தி ரண்டூர்
மின்னுமேல் கரையாய்க் கொண்டு
விளங்குபூந் துறைநன் னாடு’
என்பது பூந்துறை நாட்டின் எல்லைகளைக் கூறும் பூந்துறைப் புராணப் பாடலாகும்.
நாட்டுச் சிறப்பு
அடியார்களுக்காக இந்நாட்டில் பொன்மாரி, பூமாரி பெய்தது என்பர். திருமலை நாயக்கனின் அரசியல் அதிகாரியாகிய இராமப்பையனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு சங்ககிரியில் முடிசூட்டியவர்கள் பூந்துறை நாட்டினரே! சேரமான் பெருமாள் நாயனார் பூந்துறை நாட்டுக்கு வந்து ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து அழைத்துக் கொண்டு சென்று முடிசூட்டிய பின்னரே கயிலை சென்றார் என்பது பூந்துறைத் தலபுராணத்திற் காணப்படும் செய்தியாகும். இக்கருத்தைக் கேரள தேச வரலாறும், சோழன் பூர்வபட்டயமும் ஆதரிக்கின்றன. இந்நாட்டின் தலைநகரமாகிய பூந்துறை தேவார வைப்புத் தலமாகும். நாலாறு நாட்டில் மேலான பூந்துறை என்பர் புலவர். இந்நாட்டின் தலைமைத் தலம் சீர் மிகுந்த சென்னிமலையாகும்.
நாட்டுவளம்
காவிரி, பவானியாகிய பேராறுகளாலும், நொய்யல், அனுமநதி போன்ற சிற்றாறுகளாலும் எண்ணற்ற குளங்களாலும் குன்றாவளமும் குறையா நலமும் பெற்றுத் திகழுவது பூந்துறைநாடு. புளி, மா, அரசு, தென்னை, கமுகு, வாழை, பலா முதலிய மரங்களில் பூத்துக் குலுங்கும் பூங்கொத்துக்களிலிருந்து பொங்கிப் பெருகும் தேன் வளமுடை வயல்களிற் பாய்ந்து பூந்துறை நாட்டில் நெல் விளைகிறது என்று எழிலுறக் கவிதை வடிக்கின்றார் ‘சரவணையா’ என்ற புலவர் தன் மேழிவிளக்கம் என்ற நூலிலே!
‘திந்திறுணி மாவரசு தேங்கமுகு வாழைபலா
வந்துகுலை சாய்ந்து மடல்விரிந்து—சிந்தினதால்
வாய்ந்தரச மொடுபெருகி வயலதனிற் செந்நெல்விளை
பூந்துறை செய்நாடு’
என்பது அவர் கனிக்கவிதையின் இனிப்பு வரிகள்.
வறட்சி மிக்க காடுகளில் எல்லாம் சுவை மிகுந்த உணவு படைத்துண்பதற்குக் காரணமாக இருக்கின்ற சிறு செந்நெல் விளைகிறது. அங்குச் செந்தாமரை செங்கதிரோனைத் தேடி நின்று வாடுவதில்லை. தாமரையின் கேள்வனாம் தங்கப் பரிதியோனே அம்மங்கையை நாடி வருகின்றான்; கூடி மகிழ்விக்கின்றான். நீர்வளம் மிகுதியாக இருப்பதன் காரணமாக நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வெண்மையான முத்துக்கள் தோன்றுகின்றன. பொய்கைக் கோதையாம் அல்லியைப் பொங்கிவரும் பெருநிலவோன் தன் ஒளிக்கைகளால் அள்ளியணைக்கின்றான்! நாட்டிலெங்கும் ஈவோர் இருந்தும் இரப்போர் இல்லை. ஏன்? எல்லா வீடு களிலும் திருமகள் விளையாடுகின்றாள். நால்வேதங்களையும் ஐந்து காப்பியங்களையும் பதினெண் புராணங்களையும் மக்கள் விரும்பிப் பயிலுகின்றனர். அந்நாட்டில் பாடப்படுகின்ற பழக்குலைப் பசும்பாட்டுக்கள் செவியில் அமுதைப் பாய்ச்சுகின்றன. இச்செயல்கள் நடப்பதெல்லாம் எந்த நாட்டில்? பூந்துறை நாட்டில்தான் என்று கூறுகின்றார் ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நாடக நூலாசிரியர்.
“காடெல் லாம்சிறு செந்நெல் விளையும்
கதிரவன் வந்து கமலங்கள் சேரும்
நாடெல் லாம்வெண் தரளம் கொழிக்கும்
நல்ல அல்லியில் வெண்மதி சேரும்
வீடெல் லாம்திரு மின்விளை யாடும்
வேத காவிய புராணங்கள் ஓதும்
பாடல் லாம்பைந் தமிழதை ஆக்கும்
மன்னு பூந்துறை நாடெங்கள் நாடே”
என்பது அப்பாடலாகும். இன்னும் பூந்துறை நாட்டின் பொன்றா வளத்தைப் பற்றிக் கிழான்பாடி பாம்பண்ண கவுண்டன் குறவஞ்சி, பூந்துறைப் புராணம், சென்னிமலைப் புராணம், நல்லண்ணன் காதல் போன்ற இலக்கியங்களும் பல தனிப்பாடல்களும் புகழ்கின்றன.
காலிங்கராயனாம் சிறப்புடைச் செம்மலைப் பெற்றதால் பெரும்புகழ் பெற்ற வெள்ளாடு இப்பூந்துறை நாட்டில் உள்ள ஊர்கள் முப்பத்திரெண்டனுள் ஒன்று.
இதுவே பூந்துறை நாட்டின் இரண்டாவது தலைநகரமாகவும் காலிங்கராயன் வீற்றிருந்த கோ நகரமாகவும் விளங்கிய சிறப்பினை உடையது. காலிங்கராயனைப் ‘பூந்துறை நாட்டுக்கு நாட்டான்’ என்று குறிப்பிடும் ‘வமிசாவளி’ அவனை ‘வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரன்’ என்றும் பல இடங்களில் குறிக்கின்றது. பூந்துறை நாட்டுச் சபை இவ்வூரில் பலமுறை கூடியதாகக் கல்வெட்டு மூலமாக அறிகின்றோம்.
காணிப்பாடலும் பூந்துறைப் புராணமும் சென்னிமலை மாண்டவர் பிள்ளைத் தமிழும் வெள்ளோட்டை நகரம் என்றே குறிக்கின்றன.
‘நற்கா விரிக்குமேல் கரைதனில் பூந்துறைசை
நளிர்கொண்ட வெள்ளோடையூர்
நசையனூர் எழுமாதை எனுமுயர் புகழ்பெரிய
நகரமொடு நான்கதாக’
என்பது சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழில் வரும் சிறுதேர்ப் பருவப் பாடல்பகுதியாகும்.
காலிங்கராயன் காலத்திற்குப் பின்னர் இவ்வூர் காலிங்கராய வெள்ளோடு என்று குறிப்பிடப் பெறுவதால் காலிங்கராயனால் இவ்வூர் பெற்ற பெருமையை நன்கறியலாம்.
கொங்கு நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்ற சிறந்த அறச்செயல்களில் வெள்ளோட்டில் வாழ்ந்த பெருமக்கள் சாட்சிக் கையொப்பமிட்டிருப்பதைச் சாசனங்கள் வாயிலாகவும், பட்டயங்கள் வாயிலாகவும் அறிகின்றோம்.
32 ஊர்களில் வெள்ளோடு ஒன்று
‘பூந்துறை வெள்ளோடு நசியனூர் எழுமாதை
புகழ்சேர் பிடாரிநகரம்
பூங்கமழும் ஈங்கியூர் பெருந்துறை சாத்தனூர்
பொன்காள மங்கலம்அதும்
ஆய்ந்த தமிழ்கூறும் குழாநிலை கிழாம்பாடி
ஆண்மைகொள் முடக்குறிச்சி
அனுமநகர் பழமங்கை குலவிளக் குக்காகம்
அறச்சலூர் விளக்கேத்தியும்
வேந்தர்மகிழ் ஈஞ்சநகர் சத்திமங் கலமதும்
மிக்கசே மூர்மங்கலம்
வீரநகர் ஈரோடு பேரோடு சித்தோடு
மிக்கான திண்டல்புதூர்
சேர்ந்துமழை பெய்திடும் இலவமலை திருவாச்சி
திகழ்பனசை ஓடாநிலை
தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர்
சிறந்தபூந் துறைசைநாடே’
இவ்விசைநலன் கனிந்த பாட்டு பூந்துறை நாட்டின் கண்ணமைந்த ஒப்பில்லாத முப்பத்திரண்டு ஊர்ப்பெயர்களையும் எடுத்துரைக்கின்றது.
வெள்ளோட்டின் பெயர்க்காரணம்
கொங்கு நாட்டின் பழமையான ஊர்களுக்கெல்லாம் எவையேனும் காரணங்கள் கருதியே பெயர்கள் வைக்கப்பட்டன. பிற்காலத்தில் அவ்வூர்களின் பெயர்கள் மாறிப் பல்வேறு வடிவங்களை அடைந்தன. அவற்றின் உண்மைக் காரணங்கள் தெரியாமல் மறைந்தன. குளிர் தண்டலை—குளித்தலை ஆனதும், பொழில் வாய்ச்சி—பொள்ளாச்சி ஆனதும் இராசராசபுரம் தாராபுரம் ஆனதும் இதற்கு நல்ல சான்றுகளாகும்.
வெள்ளோடு என்னும் சிற்றூர் ஈரோட்டின் தென் மேற்கில் ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் வழியில் 14 கிலோ மீட்டரில் உள்ள ஊராகும். இவ்வூரில் பல செந்தமிழ்ப் புலவர்களும் அரசியல் தலைவர்களும் வள்ளல்களும் தோன்றி வாழ்ந்து ஊருக்குச் சிறப்புண்டாக்கினர். நமது தலைவன் காலிங்கராயன் பிறந்து வளர்ந்ததும் இவ்வூரில் அருகில் விளங்கும் கனகபுரத்தில்தான். புராணக் கதைகளோடு இணைத்து இவ்வூரின் பெயருக்குப் பல காரணங்கள் கூறுவர். காளியண்ணப் புலவர் மிகச் சுவையான முறையில் வெள்ளோட்டின் பெயர்க்காரணத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
“தேவர்கள் அனைவரும் கொங்கு மண்டலத்தில் பூந்துறை நாடு புகுந்து இறைவனை வணங்க ஏற்ற இடம் எது என்று ஆராய்ந்தனர். அவர்கட்கு முன்னே திருமாலுடைய யானை வழிபட இடந்தேடிச் சென்றது. அந்த யானை வெள்ளோடு இருக்குமிடம் வந்தவுடன் நின்றது. தேவர்கள், இறைவனை வணங்கத் தகுந்த இடம் கண்டோம் என்று ஆரவாரித்தனர். நால்வேதங்கள் முழங்க அங்குச் சர்வலிங்க நாயகராய் இறைவன் இருக்கக் கண்டனர். அந்த யானை தன்னுடைய தந்தங்களாலும் கால்களாலும் நிலத்தைத் தோண்ட அங்கு வெண்மணல் இருக்கவும் பால் நிறம் போன்ற ஓடை ஒன்றிருப்பதைக் கண்டனர். அதனைத் தீர்த்தமாக வைத்துத் தேவர்கள் இறைவனை வழிபட்டேகினர். அவ்வோடைக்கு வெள்ளோடை என்று பெயர் ஏற்பட்டது. பின்னர் அப்பெயர் வெள்ளோடு என்று மாறிற்று.
“மேல்பாலில் வாசவன்தன் கரியொன் றேகி
விளங்குமதம் பொழிந்துநிழல் சுழித்து விம்மிக்
காலாலும் கோட்டாலும் நிலத்தைக் கீண்ட
கண்டதுநீர் வெள்ளோடை கமழ்பால் ஓடை”
என்பது அப்பாடல் பகுதியாகும்.
கோயில்கள்
வெள்ளோட்டின் பெருமையையும் வரலாற்றுப் பழமையையும் எடுத்துக் காட்டுவதற்கு இன்றும் அங்குள்ள கோயில்களே சிறந்த சான்றுகளாக அமைகின்றன.
வெள்ளோட்டின் வடக்கே வயல்களிடையில் பாழடைந்த சிறுகோயில் ஒன்றுள்ளது. அது சமண சமயத்தைச் சேர்ந்த ஆதிநாதர் கோயிலாகும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையில் கொங்கு நாட்டில் ஈரோடு வட்டாரத்தின் பல இடங்களில் (விசயமங்கலம், திங்களூர், சீனாபுரம், வெள்ளோடு, பூந்துறை) சமண சமயத்தவர் வாழ்ந்தனர். இவ்வூர்களிலெல்லாம் சமண சமய ஆலயங்கள் இன்றும் இருக்கின்றன.
இங்குள்ள சிவாலயத்தில் வீற்றிருந்தருள் புரிபவர் சர்வலிங்கேசுவரன் அம்மன்—பாடகவல்லி அம்மன். காலிங்கராயனுடைய வழிபடு கடவுள் இந்த ஈசுவரனே!
இங்குள்ள பெருமாளுக்கு ஆதிநாராயணப் பெருமாள் என்பது திருநாமம். பிற கோயில்கள் நஞ்சுண்ட ஈசுவரன் கோயில், சுப்பிரமணியர் கோயில், அண்ணன்மார் கோயில், இராசாக் கோயில், பொன்காளி அம்மன் கோயில், அயத்தாள் அம்மன் கோயில், ஆயி அம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் இவைகளாகும்.
கல்வெட்டுக்கள்
இவ்வூரில் சர்வலிங்கேசுவரன் ஆலயம், இராசாக் கோயில், பொன்காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், அண்ணன்மார் கோயில் ஆகிய கோயில்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வூர்க் கல்வெட்டுக்களில் சருவலிங்கர் கோயில் கல்வெட்டுக்களைச் சாசன இலாகாவினர் படி எடுத்துள்ளனர். இக்கோயிலில் மட்டும் ஒன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. வீரபாண்டியன் காலக் கல்வெட்டுக்கள் மூன்றும் விசயநகர அரசர் காலக் கல்வெட்டுக்கள் நான்கும் காலம் குறிப்பிடப்பெறாமல் உள்ள பாடல் சாசனங்கள் இரண்டும் இருக்கின்றன.
இலக்கியங்கள்
இவ்வூரைப்பற்றி உள்ள தனிப்பாடல்களேயன்றிக் காணிப்பாடல்களும் ஊர்த்தொகைப் பாடலும் இவ்வூரின் புகழ்பாடும். கொன்றை வேந்தன் வெண்பா இவ்வூரைப் பற்றியதே! இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள பாடகவல்லியம்மன்மீது பிள்ளைத்தமிழ் ஒன்றுண்டு. சிவாலயக் கல்வெட்டிலிருந்து ‘அழைப்பிச்சான் பாட்டுக் கலம்பகம்’ என்ற நூலொன்று இருந்ததாக அறிகின்றோம்.
வெள்ளோட்டில் வாழ்ந்த தெள்ளுதமிழ்ப் பாவலர் குந்தாணி சுவாமிநாதக் கவிராயர்தான் ‘சென்னிமலை யாண்டவர் பிள்ளைத் தமிழ்’, ‘நல்லண்ணன் காதல்’ போன்ற நூல்களைப் பாடியவர். ‘வாலசுப்பப்புலவன்’ என்பவர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகக் கொங்கு மண்டல சதகம் மூலமாக அறிகின்றோம். இவ்வூரருகே புலவர் பாளையம் என்ற ஊர் ஒன்றுள்ளது. இராசாக்கள் அம்மானை, பாடகவல்லி பதிகம், குப்பணன் நீதிச்சதகம் என்பன இங்கே பாடப்பட்ட நூல்களாகும்.
தலைவர்கள்
வெள்ளோட்டில் சாத்தந்தை குலத்தில் நஞ்சையன், காலிங்கராயன், காசிலிங்கக் கவுண்டர், கொழந்தவேல் கவுண்டர், முத்தித்திருமலைக் கவுண்டர், ராசாக்கவுண்டர், நல்லண கவுண்டர், முதலியாக் கவுண்டர், பயிரகுலத்தில் குப்பண கவுண்டர், பழனிக் கவுண்டர் போன்ற பல வள்ளல்கள் வாழ்ந்து ஆலயத்திருப்பணி செய்தும் அருந்தமிழ் வளர்த்தும் புலவர்களைப் பேணியும் பணிகள் பல புரிந்துள்ளனர்.