உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/002

விக்கிமூலம் இலிருந்து

பட்டமும் பதவியும்

இளமைக் காலம்

காலிங்கராயனின் இயற்பெயரைப்பற்றியும் இளமைப் பருவத்தைப்பற்றியும் விரிவாக அறியக் குறிப்புக்கள் எவையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ‘இந்தியாவின் ஆளும் தலைவர்களும் பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூல் அவரைச் ‘சாத்தந்தை காலிங்கராயர்’ என்று குறிப்பிடுகிறது. ‘சாத்தந்தை, என்ற குலப்பெயருடன் அவர் பெயர் இணைந்து வழங்கப் பெற்றமை தெரிகிறது. அண்மையில் கிடைத்த ஓலைப் பட்டயம் ஒன்றின்மூலம் காலிங்கராயனின் தந்தை பெயர் நஞ்சயன் என்றும் காலிங்கராயனின் இயற்பெயர் லிங்கய்யன் என்றும் தெரிகிறது.

“தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் ஜீரணோத் தாரணம் பண்ணிக்கொண்டு இருந்தான்”

என்று ‘வமிசாவளி’ கூறுவதால் சிறந்த சிவபக்தன் என்றும் வெள்ளோடு சர்வலிங்கேசுவரரை வழிபடு தெய்வமாக வழிபட்டு வந்தார் என்றும் தனியாகக் கோயில் திருப்பணி செய்யும் அளவிற்கு மிகுந்த செல்வமுடையவர் என்றும் அறிகின்றோம். வைணவக் கோயில்கள் பலவற்றிற்கும் அவர் திருப்பணி செய்திருப்பதால் சமரச நோக்குடையவர் என்பதனையும் அறிகின்றோம். வமிசாவளிமூலம் காலிங்கராயனுக்கு ஒரு மகன் இருந்ததாகவும் பண்ணை குலத்தினரை மாமன் முறையாகக் கொண்டு வாழ்ந்தவர் என்றும் அறிகிறோம். மாமன் வீடு கொடுமுடிப் பகுதியில் இருந்ததாகக் கூறுவர்.

சோர்வில்லாத முயற்சியும் அயராத உழைப்பும் அனைவர்மீதும் பற்றிப் படரும் அன்பும் தடைக்கு அஞ்சாத ஆற்றலும் கொண்டு விளங்கியவர் காலிங்கராயர் என்று அவர் வாழ்க்கைக் குறிப்புக்கள் மூலம் தெரிகிறது.

இவர் கற்பவை கசடறக் கற்றவர். செல்வத்துட் செல்வமாம் செவிச் செல்வமும் சிறக்கப் பெற்றவர். வெள்ளோட்டுக்காரர்களும் பூந்துறை நாட்டவர் அனைவரும் கொங்கு நாட்டவர் எல்லோரும் காலிங்கராயன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தனர்.

காலிங்கராயர் வடமொழி, தமிழ் இரண்டிலும் பெரும் புலமை படைத்திருந்தார் என்றும், திருக்குறளுக்கு உரை இயற்றிய 10 தொன்மையான புலவர்களில் காலிங்கர் என்பவர் நமது காலிங்கராயரே என்றும், புருஷசூக்தமாலா என்னும் வடமொழி நூலுக்குத் தமிழில் விரிவுரை கண்டார் என்றும் கரூர்ப் பெரும்புலவர் அ. கணபதி ஐயா அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்கள். காலிங்கராயர் பற்றிய தனிப்பாடல் ஒன்றில் ‘கற்ற அறிவினன்’ என்று குறிக்கப் பெறுவதால் கணபதி ஐயா கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

காவிரியை ஒட்டியுள்ள மேடு பள்ளமான இடத்தில் மிகுந்த பொறியியல் திறத்துடன் நிலத்தை நன்கு அளந்து திட்டமிட்டு ஆராய்ந்து கால்வாயை வெட்டியுள்ளார். கணிதம், பூகோளம் போன்ற கலைகளில் காலிங்கராயன் மிகவும் வல்லவராகத் திகழ்ந்திருக்க வேண்டும். பொறியியல் கலையில் மிகவும் மேலோங்கிய ஆற்றலையும் அறிவையும் காலிங்கராயர் பெற்றிருக்க வேண்டும்.

பிறந்த ஊர்

‘பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரன்’ என்று ஆவணங்கள் கூறினாலும் காலிங்கராயன் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் தென் முகம் வெள்ளோட்டுக்குரியவர் என்றும் அண்மையில் கிடைத்த பட்டயத்தாலும் சில கல்வெட்டுக்களாலும் உறுதிப்படுகிறது.

காலிங்கராயன் அணை கட்டின பட்டயத்தில் ‘கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணை கட்ட வேணுமென்று’ என்ற தொடர் வருகிறது. கனகபுரம் விநாயகர் கோயிலில் ‘காலிங்கராயன் வங்கிஷத்தில் காசிலிங்கக் கவுண்டன் உபயம்’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. கவுண்டச்சி பாளையம் பாலமடை அம்மன் கோயிலை 1850ஆம் ஆண்டுத் திருப்பணி செய்த கனகபுரம் கொளந்தவேல் கவுண்டர் தம்மைக்காலிங்கராயன் வம்மிஷம் என்றும் தாம் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் அக்கோயில் கல்வெட்டில் குறித்துக் கொள்ளுகின்றார். கனகபுரம் கரையைச் சேர்ந்த செம்மாண்டம் பாளையத்தில் காலிங்கராயர்க்கு நிலங்கள் இருந்ததாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது. எனவே காலிங்கராயர் கனகபுரத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுகிறது.

அரசியல் தலைவன் ஆதல்

கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கொங்கு நாட்டைச் சடையவர்மன் வீரபாண்டியன் என்பவன் கைப்பற்றினான்.

“கொங்கீழங் கொண்டு
          கொடுவடுகு கோடழித்துக்
கங்கை இருகரையும்
          காவிரியும் கைக்கொண்டு”

எனவரும் அப்பாண்டியன் மெய்க்கீர்த்திப் பகுதி இச்செய்தியை வலியுறுத்தும். வெற்றி பெற்ற பாண்டியன் படையில் வெள்ளோட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன் சேர்ந்து மதுரை சென்றான். விரைவில் தன் அறிவு ஆற்றலால் பாண்டியன் படைக்குத் தலைமை பூண்டான். வீரபாண்டியனுக்கு அறிவுரை கூறும் தலைமை அமைச்சனாகவும் ஆனான். சடையவர்மன் வீரபாண்டியனும் கி.பி. 1253ஆம் ஆண்டு அவ்வீரனைப் பாராட்டிக் ‘காலிங்கராயன்’ என்ற சீர்மிகும் சிறப்புப் பட்டப்பெயரும் அளித்தான். அவரே நமது கால்வாய் வெட்டிய வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கராயர் ஆவார்.

ஏறக் குறைய தன் 30 ஆம் வயதில் ஆட்சி அலுவலில் சேர்ந்த காலிங்கராயன் (சுமார் கி.பி. 1253 ஆம் ஆண்டு) பாண்டிய நாட்டின் வடக்குப் பகுதியாகிய கொங்கு நாட்டிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். ‘உத்தர மந்திரி’ ‘உத்தர ராயன்’ ‘சுந்தர பாண்டிய கலிங்கராயன்’ என்ற சிறப்புப் பட்டப் பெயர்களும் பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியன் என்ற மூன்று கொங்குப் பாண்டிய அரசர்கள் காலத்தில் சுமார் 40 ஆண்டுகள் அரசியல் தலைவராக விளங்கிப் பெருமைகள் பெற்றவர் நம் காலிங்கராயன். கொங்கு நாட்டில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் காலிங்கராயர். தன் பெயரில் நாணயம் அச்சிட்டார் என்பதனையும் அறிகின்றோம்.

காலிங்கராயன்—பெயர்க்காரணம்

லிங்கையன் என்பது காலிங்கராயனின் இயற்பெயர் என்பதால் அப்பெயரை ஒட்டியே பட்டப் பெயர் காலிங்கராயன் என்றும் வழங்கப் பெற்றிருக்கலாம் என்றும் கருதலாம். தமிழரசர்கள் பெற்ற கலிங்க வெற்றியின் அடையாளமாகவே ‘காலிங்கராயன்’ என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. ‘வமிசாவளி’ காலிங்கராயன் என்பதற்கு ஒரு புதிய பெயர்க் காரணம் கூறுகிறது. கலிங்கு என்ற சொல்லுக்கு ஏரி, மதகு, நீர் வழியும் அணைக்கட்டு என்று பொருள் உண்டு. கலிங்கல் என்ற சொல்லும் ‘ஏரி நிறைந்து நீர் போகும் வழி’ என்ற பொருள்தரும்.

எனவே, காலிங்கராயன் அணை கட்டியதன் காரணமாகவே ‘கலிங்குராயன்’ அல்லது ‘கலிங்கல்ராயன்’ என வழங்கப்பெற்றது. பின்னர் அப்பெயரே ‘காலிங்கராயன்’ என்று மாறியது என்ற கருத்து அதில் கூறப்படுகின்றது.

“அணையும் கட்டிவச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்னும் பேர் வரப்பட்டுப் பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில்” எனவரும் பகுதியால் இக்கருத்தை அறியலாம். ஆனால் அணை கட்டுவதற்கு முன்னரும் காலிங்கராயன் என்ற பெயர் நம் தலைவனுக்கு வழங்கியதென்பதையும் அணை, குளம் கட்டாத பிற தலைவர்களும் பல்வேறு காலங்களில் காலிங்கராயன் என்று பெயர் பெற்றிருப்பதையும் நோக்கும்போது இக்கருத்து அவ்வளவு வலியுடையது அன்று என்பது தெரிகிறது. எனவே ‘காலிங்கராஜன்’ என்ற பெயரே ‘காலிங்கராயன்’ என்று வழங்கப்பட்டதென அறியலாம்.

வமிசாவளி மற்றொரு வகையிலும் பெயர்க்காரணம் கூறுகிறது. ‘காலிங்கன்’ என்பதுதான் முன்பு வழங்கிய பெயர். பின்னர் ராயர் சமஸ்தானம் உள்ள பெனு கொண்டாவிற்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுக்காலம் காத்திருந்து பேட்டி கண்டு ‘ராயர்’ பட்டம் பெற்றுக் காலிங்கராயர் என்று புகழ் பெற்று விளங்கியதாகவும் கூறுகின்றது.

பாண்டியர் ஆட்சியே கொங்கு நாட்டில் பரவியிருந்தது என்பதாலும் காலிங்கராயன் என்ற பெயரிடும் வழக்கம் கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து உள்ளது என்பதாலும் ‘காலிங்கராயன்’ என்ற பெயரே அரசன் அளித்த பட்டப்பெயராக நம் தலைவனுக்குள்ளமையை விளக்கும் கல்வெட்டுக்களைத்தான் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பது தோன்றுகின்றது.

செல்வச் செழிப்பு

உயர்பதவி வகித்த காலிங்கராயன் செல்வாக்குடன் மிகுந்த செல்வந்தராகவும் இருந்திருக்கவேண்டும். அணை கட்டிக் கால்வாய் வெட்டும் முயற்சியில் காலிங்கராயன் சோர்வுற்றிருக்கும்போது அவர் தாயார் மகனுக்குத் தைரியமூட்டிப் பணியில் ஈடுபடுத்தினார் என்பது செவிவழிச் செய்தியாகும்.

‘மகனே நம் வீட்டில் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. தயிர் விற்ற பணம் தாவாரம் வரை கிடக்கிறது. மோர் விற்ற பணம் முகடுவரை உள்ளது. அவைகளை எடுத்துக்கொண்டு சென்று தைரியமாக அணையைக்கட்டு; கால்வாயை வெட்டு’ என்று காலிங்கராயன் தாயார் கூறினார்களாம். இவ்வாறு மகனுக்கு ஊக்கமூட்டிய தாயாரின் பெயரைத் தெரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ‘காலிங்கராய வினியோகம்’ என்ற வரி கொங்கு நாட்டில் வசூலிக்கப்பட்டது.

பங்காளிகள் பகையா?

பங்காளிகளிடம் பகை கொண்டிருந்தார் காலிங்கராயன் என்று சிலர் கூறுவர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வேட்டுவர்களைக் காலிங்கராயன் வெல்லும் முயற்சியில் எண்ணமங்கலம் சாத்தந்தை குலத்தினர் உதவியுள்ளனர். வெள்ளோடு வெள்ளை வேட்டுவரை அடக்கும் முயற்சியிலும் பாலமடை அம்மன் கோயில் கட்டவும் வெள்ளோடு சர்வலிங்கேசுரன் கோயில் திருப்பணியிலும் வெள்ளோடு கனகபுரம் சாத்தந்தை குலத்தினர் அனைவரும் உதவியுள்ளனர். எலவமலை சாத்தந்தை குலத்தினர் அணை கட்டும் இடத்திலும் கால்வாய் வெட்டும் இடங்களிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர். தான் காடுபிடித்து நாடாக்கி வெள்ளிர வெளிப் பகுதியில் மக்களைக் குடியேற்றிய காலிங்கராயன் வெள்ளோட்டில் இருந்த தன் பங்காளிகளையே குடியேற்றியுள்ளார். இவை அனைத்துக்கும் கல்வெட்டு, பட்டய ஆதாரங்கள் உள்ளன. எனவே தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரிடம் காலிங்கராயன் மிகவும் மரியாதை வைத்திருந்தார்; சாத்தந்தை குலத்தினரும் உயர்பதவி வகித்த தம் பங்காளி காலிங்கராயனைப் பெரிதும் மதித்து வேண்டிய பல உதவிகள் செய்தனர் என்று உறுதியாகத் தெரிகிறது. எனவே பங்காளிகளுக்கும் காலிங்கராயனுக்கும் பகை இருந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

ஆட்சிப்பகுதி

கொங்கு நாட்டில் பூந்துறை நாட்டுக்கு உரியனவாய் வெள்ளோட்டை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த காலிங்கராயன் பாண்டியர்களின் ஆட்சிப் பிரதிநிதியாகக் கொங்கு நாடு முழுவதையுமே ஆண்டு கொண்டிருந்த கொங்குப் பாண்டியரின் கீழ் அரசியல் அதிகாரியாக விளங்கினார் என்று அவர் கல்வெட்டுக்கள் வாயிலாக நாமறிகின்றோம்.

வெஞ்சமாங்கூடல், நெரூர், கொடுமுடி, வெள்ளோடு, இராமநாதபுரம் புதூர், அந்தியூர், திங்களூர், குன்னத்தூர், விசயமங்கலம், சர்க்கார் பெரியபாளையம், எலத்தூர், குடிமங்கலம், பேரூர், கரூர், பாரியூர், மொடச்சூர் போன்ற பல பகுதிகளில் காலிங்கராயனின் கல்வெட்டுக்கள் கிடைப்பதால் ஏறத்தாழ அமராவதி ஆற்றுக்கு வடக்கும் காவிரிக்கும் மேற்கும் பேரூரின் கிழக்கும் கோபி, அந்தியூரின் தெற்கும் இவைகளின் மத்தியப்பரப்பில் உள்ள கொங்கு நாட்டுப் பகுதி முழுவதையும் காலிங்கராயன் தன் அதிகார எல்லைக் குட்படுத்தியிருந்தார் என்று தெரியவருகிறது. தன் காலத்தில் கொங்குநாடு எழிலும் ஏற்றமும் பெற்று விளங்க வேண்டும் என்றெண்ணிக் காலிங்கராயன் செய்த பணிகள் எண்ணிலடங்கா.

ஆட்சியின் பொருட்டும் நிருவாகத்தைச் சரி செய்வதன் பொருட்டும் அறக்கொடைகளை நிலைநாட்டும் பொருட்டும் பாண்டியர் தம் ஆணையை நாட்டும் பொருட்டும் நீதி செலுத்தும் பொருட்டும் மக்கள் குறை கேட்டு முறை செய்யவும் கொங்குநாடு முழுவதும் காலிங்கராயன் பயணம் மேற்கொண்டுள்ளமை அவருடைய பரந்த கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். காலிங்கராயன் அரசர்மீது பற்றும் உடன் அலுவலர்மீது பரிவும் கொண்டு விளங்கினார் என்பது அவர் வெட்டி வைத்த பல கல்வெட்டுக்கள் மூலம் நாமறிகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/002&oldid=1841423" இலிருந்து மீள்விக்கப்பட்டது