காலிங்கராயன் கால்வாய்/003
‘பெயரும் பெருமையும்’
பட்டப்பெயர்
நமது தலைவனின் சிறப்புப் பட்டப்பெயராக அமைந்துள்ள ‘காலிங்கராயன்’ என்ற பெயர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
பழங்கால மன்னர்கள் தம் நாட்டில் சிறப்புற்று விளங்கியோர்க்கும் தங்கள் அரசியல் அதிகாரிகட்கும் அவர்தம் பணியைப் பாராட்டித் தகுதிக்கேற்ற வகையில் பற்பல பட்டப்பெயர்களை அளித்தனர். எட்டி, ஏனாதி, காவிதி என்பன அவற்றுட் சில பெயர்களாக வரலாற்றில் அறிகின்றோம்.
பிற்காலத்திலும் இவ்வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. காலப் போக்கில் பட்டங்களாக அளிக்கும் பெயர்கள் பெருகின. இவ்வாறு அளித்த பல பட்டப்பெயர்களுள் ‘காலிங்கராயன்’ என்பதும் ஒன்று.
காலிங்கராயன்-பெயர் உருவாதல்
‘விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான்’
ஆகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1096இல் தென் கலிங்கத்தையும் கி.பி. 1112இல் வடகலிங்கத்தையும் வென்று தன் குடைக்கீழ்க் கொணர்ந்தான். இதில் கி.பி. 1112இல் அனந்தவர்மனோடு நடைபெற்ற வடகலிங்கப் போர் வெற்றியையே செயங்கொண்டார் பரணியாகத் தரணி போற்றப் பாடினார். குலோத்துங்கன் தன் கலிங்க வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவனும் சிறந்த சிவபக்தனுமாகிய நரலோக வீரன் என்ற சிறப்புப் பெயரையுடைய மணவிற்கூத்தனுக்குக் ‘காலிங்கராயன்’ என்ற பட்டத்தை அளித்தான். கலிங்க வெற்றியின் அடையாளமாகவே குலோத்துங்கன் இவ்வாறு பட்டப் பெயரை அளித்தான். இம்மணவிற்கூத்தனைத் தில்லைக் கல்வெட்டுப் பாடல் ‘காலிங்கர் ஏறு’ என்று பாராட்டுகின்றது. காலிங்கராயர் பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர் மணவிற் கூத்தரே ஆவார்.
தென்கரைச் சோழவந்தான் மூலநாதர் கோயில் கல்வெட்டில் ‘சீவல்லவன் அழகிய மணவாளனான கலிங்கராஜன்’ என்ற ஒரு பெயர் காணப்படுகிறது. கலிங்கராஜன்-காலிங்கராயன் என மாறியிருக்க வேண்டும். (தமிழ் இலக்கண முறைப்படி சொல் இடையில் உள்ள ஜ-ய என்று மாறும். பங்கஜம் - பங்கயம்; புஜம் - புயம்)
இப்பெயரோடு தொடர்புடைய ‘கலிங்கதரையன்’ என்ற பெயரும் கல்வெட்டுக்களில் பயின்று வருதலைக் காண்கின்றோம். குலோத்துங்கனுடைய கலிங்க வெற்றிக்கு முன்னர்த் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரிகள் எவரும் காலிங்கராயன் என்ற பெயரோடு இருந்ததில்லை என்பதை நோக்கக் கலிங்க வெற்றிக்குப் பின்னரே இவ்வாறு பட்டப் பெயர் அளிக்கும் வழக்கு வந்தது என்ற உண்மை புலனாகும். குலோத்துங்கனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழர்களில் பலரும் பாண்டியர்களும் விசயநகர அரசர்களும் போசளரும் (ஒய்சளர்) தொண்டை நாட்டுச் சம்புவராயர் மரபினரும் இப்பெயரைத் தங்கள் அரசியல் அதிகாரிகட்கு வழங்கியதிலிருந்து கலிங்கநாட்டு வெற்றியிலும் காலிங்கராயன் என்ற பெயரிலும் பிற்காலத்தவர் கொண்டிருந்த பெருமதிப்புப் புலனாகின்றது.
பலர் ‘காலிங்கராயன்’ என்ற பெயரைக் ‘காளிங்கராயன்’ என்று எழுதிவருகின்றனர். எந்த ஒரு பழைய ஆவணத்திலும் அவ்வாறு எழுதப் பெறவில்லை. அவ்வாறு எழுதுவது பிழையானதும் வரலாற்றுக்கு மாறுபட்டதுமாகும்.
சோழ நாட்டில்
தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பற்பல காலங்களில் அரசியல் அதிகாரிகள் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினர். சோற்றால் மடையடைக்கும் சோழ நாட்டில் இப்பெயரோடு விளங்கிய தலைவர்கள் பலர்.
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள மதுரையும் ஈழமும் கொண்ட இராசாதிராச தேவனின் 11ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ‘காலிங்கராயர்’ என்ற ஒரு அரசியல் அதிகாரியின் பெயரைக் காண்கின்றோம்.
பண்பட்ட தில்லையில் கூத்தரசப் பெருமான் ஆலயக் கல்வெட்டில் ‘காலிங்கராயர் ஓலை’ என்ற பெயரில் ஓர் அரசியல் அதிகாரியின் ஆணை குறிக்கப்பெறுகிறது.
திருவரங்கம் கோயில் கல்வெட்டில் ‘காலிங்கராயர் வைக்கிற அகரம்’ என ஒரு கல்வெட்டில் காணுகின்றோம். பிறிதோர் கல்வெட்டில் ‘காலிங்கராயர் அகரம்’ என்றே அது அழைக்கப் பெறுகிறது. அத்திருவரங்கத்திலேயே ‘உடையார் பெரியபெருமாள் ஆன காலிங்கராயர் கலியுகராமச் சதுர்வேதிமங்கலம்’ என்று அந்தணர்கட்கு ஊர் ஏற்படுத்தியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.
திருவிடைமருதூர்ச் சிவாலயத்தில் உள்ள கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில் ‘காலிங்கராயன்’ என்ற அதிகாரி சாட்சிக் கையொப்பமிட்டுள்ளான். நன்னிலம் தாலூக்கா திருமீயச்சூர் சிவாலயக் கல்வெட்டில் ‘உடையார் காலிங்கராயர்; குலசேகர காலிங்கராயர்’ என்று இருவர் குறிப்பிடப்பெறுகின்றனர்.
பாண்டிய நாட்டில்
திருப்பரங்குன்றம் உமையாண்டான் கோயிலில் உள்ள சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் கல்வெட்டினால் ஓர் அலுவலர் பெயர் ‘காலிங்கராஜன்’ என்றிருப்பதை அறிகின்றோம்.
திக்கெலாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மூன்றாம் பிரகாரம் வடக்குச் சுவரில் உள்ள குலசேகர தேவனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ‘நெட்டூருடையான் திருவிருந்தான் காலிங்கராயன்’ என்ற அரசியல் தலைவர் குறிக்கப்பெற்றுள்ளார்.
மிழலைக்கூறு நடுவிற்கூறு பராந்தக நல்லூர் ஆன கட்டிக்குறிச்சியிலும் ‘காலிங்கராயர்’ என்ற பெயரைக் காணுகின்றோம்.
‘மலர்ந்த சீர்மாட’ மதுரைச் சுந்தரேசவரர் கோயிலுக்குத் திருவிழா நடத்த நிவந்தம் விட்ட பலருள் ‘முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் கரிய மாணிக்காழ்வான் திருவுடை நாயகரான வீரபாண்டியக் காலிங்கராயர்’ என்பவர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றார்.
ஒய்சளர் காலத்தில்
கொங்கு நாட்டுக் குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஒய்சள நாட்டு மன்னன் வீரவல்லாள தேவன் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் உடையாண்டான் அழகப்பெருமாள் பிள்ளையாண்டானான காலிங்கராயன் என்ற குறுப்பு நாட்டு அரசியல் தலைவன் ஒருவன் குறிக்கப் பெறுகின்றான்.
விசயநகர ஆட்சியில்
திருவரங்குளம் அரிதீர்த்தேசுவரர் கோயிலில் உள்ள வீர அச்சுதராயர் கல்வெட்டில் (கி.பி. 1531) ‘செவந்தி காலிங்கராயன்’ என்பவரும் பிரான்மலை மங்கை நாதேசுவரர் கோயிலில் உள்ள கிருட்டிண தேவராயன் காலத்துக் கல்வெட்டில் ‘அறந்தாங்கிக் கணக்கு அடியார்க்கு நல்லான் கற்பூரக் காலிங்கராயன்’ என்பவரும் அரசியல் அதிகாரிகளாகக் குறிக்கப் பெறுகின்றனர்.
சம்புவராயர் நாளில்
‘எழிலாரும் பொழிலார் கச்சி’ என்று நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் பாவுள் போற்றும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள ‘சகல லோக சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர்’ காலத்துக் கல்வெட்டில் ‘எயில் கோட்டத்து ஆர்ப்பாக்கக் கிழான் பெருங்கருணையாளன் திருவேங்கடமுடையான் காலிங்கராயன்’ என்ற அரசியல் அதிகாரி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
இக்கல்வெட்டுப் பகுதியிலிருந்து அரசியல் அதிகாரிகளுக்கும் (அரண்மனை உள் அதிகாரி, நாட்டு அதிகாரி) படைத்தலைவருக்கும் சிற்றூர்த் தலைவர்கட்கும் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயர் வழங்கி வந்தமை புலனாகிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காலிங்கராயன் என்ற பெயர் வழக்கிலிருந்ததை நாம் அறிகின்றோம்.
காலிங்கராய அரண்மனை
அரசியல் தலைவர்கட்கு மட்டுமின்றித் தங்களுக்கு மிக விருப்பமான பிறவற்றிற்கும் ‘காலிங்கராயன்’ என்று பெயரிட்டு அரசர்கள் மகிழ்ந்தனர் என்று கல்வெட்டுக்களின் மூலமாக நாமறிகின்றோம்.
பார் புகழ நாடாண்ட பாண்டியர்கள் தாங்கள் சீர் திகழ வீற்றிருந்து செங்கோலோச்சிய அரண்மனைக்கும் அமர்ந்த இருக்கைக்கும் காலிங்கராயன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியிருந்தனர் என்பதற்கும் சான்றுகள் சில கிடைத்துள்ளன. ‘கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது 292ஆம் நாள் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி சோழ மண்டலத்துப் பாண்டிய குலபதி வளநாட்டுக் கண்டியூர் கோயில் பள்ளியறைக் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருக்க’ எனவரும் இத்தொடரால் சோழ நாட்டை வென்ற பாண்டியன் கண்டியூரில் இருந்த தன்னுடைய அரண்மனையில் ஒருபகுதிக்குக் காலிங்கராயன் என்று பெயர் வைத்த சிறப்பை அறிகின்றோம்.
‘மதுரைக் கோயில் பள்ளியறையுள்ளாலை பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருந்து’ எனவரும் குலசேகர பாண்டியன் கல்வெட்டுத் தொடரால் மதுரை அரண்மனையிலும் ஒருபகுதி இச்சிறப்புப் பெயர் கொண்டு விளங்கிய பெருமையை அறிகின்றோம். சீவல்லபதேவர் காலத்திலும் ‘மாடக்குளக்கீழ் மதுரைக் கோயில் உள்ளாலை அழகிய பாண்டியன் கூடத்துப் பள்ளிப்பீடம் காலிங்கராயன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மதுரோதய வளநாட்டு இராசசிங்கன் குளக்கீழ் இராசேந்திரசோழபுரத்திலும் இதே பெயரில் அரண்மனைப் பகுதி விளங்கியுள்ளது.
காலிங்கராய நந்தவனமும் நிலமும்
உடையார் பாளையம் சென்னிவனம் சென்னியாண்ட சுவாமி கோயிலில் சுரும்புப் பாடலுக்கு அரும்பு விரியும் அழகிய நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனம் ‘காலிங்கராய நந்தவனம்’ என்று கவின்பெயர் தாங்கிச் சிறப்புற்றிருந்தது. அந்த நந்தவனத்தை 50 குழி நிலப்பரப்பில் உண்டாக்கியவர் உடையார்பாளையம் பாளையக்காரர் ‘காலாட்கள் தொழ உடையார்’ என்றும் கல்வெட்டால் அறிகின்றோம். திருச்சிமாவட்டம் காவேரிப் பாளையம் கல்வெட்டால் ஒரு நிலத்தின் பெயர் ‘காலிங்கராயன் கொல்லை’ என்று அறிகின்றோம்.
காலிங்கராய நடனமாது
காளையார் கோயில் காளீசுவரர் கோயிலில் விழாக் காலத்தில் நடனமாட வந்தாள் ஒரு நங்கை. அவருக்குக் கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியதேவன் தன் 40ஆம் ஆட்சியாண்டில் உரிமைகள் சிலவற்றை உவந்தளித்தான். அப்பெண்ணின் பெயர் ‘நக்கன் செய்யாளான காலிங்கராயத் தலைக்கோலி’ என இன்றும் நின்று நிலவுகிறது; அங்குள்ள கல்வெட்டு மூலம்!
காலிங்கராயன்—நாணயமும் வரியும்
‘காலிங்கராய வினியோகம்’ என்ற பெயரில் ஒரு வரி இருந்தது என்று நெரூர், வெஞ்சமாங்கூடல் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இது காலிங்கராயன் செய்த பணிகட்காக நாட்டு மக்கள் அளித்த வரி என்பார் கல்வெட்டாய்வாளர் திரு தி. நா. சுப்பிரமணியனார். இது காலிங்கராயன் கால்வாயின் பராமரிப்புக்கு மக்கள் செலுத்திய வரியும் ஆகலாம். இன்னும் கொங்கு நாட்டில் ‘காலிங்கராயன் காசு’, ‘காலிங்கராயன் பணம்’ என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தமையை அறிகின்றோம்.
ஒப்புமைப் பெயர்கள்
அரசியல் அதிகாரிகட்கு அரசர்கள் வழங்கிய காலிங்கராயன் என்ற பட்டப்பெயரை ஒத்து வேறு பற்பல பட்டப் பெயர்களையும் ஏறக்குறைய அதே காலத்தில் அளித்துள்ளனர். அவர்களுட் சில வருமாறு:
அழகராயன், இராசாண்டராயன், ஈழத்துராயன், கச்சிராயன், களப்பாளராயன், கனகராயன், காங்கேயராயன், காடவராயன், குமணராயன், குருகுலராயன், கொங்கராயன், சிமிஞ்சராயன், தன்மபோதிராயன், தெலுங்கராயன், தென்னவராயன், தொண்ணராயன், பாஞ்சாலராயன், மலையப்பியராயன், மாதவராயன், மழவராயன், மூவேந்தராயன், வத்தவராயன், வாணாதிராயன், வில்லவராயன், வைகைராயன், வைசியராயன், வைதும்பராயன்.
பெயரின் பெருமை
மேற்கூறிய பல்வேறு சிறப்புப் பெயர்களில் அரசியல் தலைவர்களில் மிகவும் சிறந்தவர்களுக்கே தலைமையானவர்களுக்கே காலிங்கராயன் என்று பெயர் அளித்துப் பாராட்டுவது வழக்கமாக இருந்தது என்பதைச் சில கல்வெட்டுக்களால் குறிப்பாக அறிகின்றோம்.
சோழவந்தான் கல்வெட்டில் குலசேகரதேவன் ஓர் உரிமைச் சாசனம் வழங்கும்பொழுது, ‘ஐயன் காலிங்கராயன் நமக்குச் சொன்னமையால்’ தான் அறச்செயல் செய்வதாகக் குறிப்பிடுகின்றார். சடையவர்மன் சுந்தரபாண்டியனின் குருவித்துறைக் கல்வெட்டிலும், மூன்றாம் குலோத்துங்க சோழனின் எண்கண் கல்வெட்டில்கூடக் ‘காலிங்கராயர் நமக்குச் சொன்னமையில்’ என்ற தொடரைக் காணுகின்றோம். திருவரங்குளம் கல்வெட்டில் ஒரு கணக்கு அதிகாரி “வல்லநாட்டுக் கணக்கு நாடுமதித்த காலிங்கராயர்” என்று குறிப்பிடப் பெறுகின்றான். ‘உடையார் காலிங்கராயர்’ என்று வேறு கல்வெட்டில் ஒருவர் குறிக்கப் பெறுகின்றார்.
இச்சான்றுகள் அரசர்கள் ‘காலிங்கராயன்’ என்ற பெயரை எவ்வளவு சிறப்பாகவும் புனிதமானதாகவும் மேலானதாகவும் மதித்துப் போற்றினார்கள் என்பதையும் இன்றியமையாச் சிறப்பு அரசியல் அதிகாரிகளுக்கே இப்பெயரை அளித்தனர் என்பதையும் சாற்றுகின்றன.
தனிப்பாடல் ஒன்றில் ‘அண்ணல் காலிங்கன்’ என்ற தொடர் வருகிறது. கொங்கு நாட்டு வேளாளர்களில் சாத்தந்தை குலத்தினர் பிற்காலத்தில் தங்களைக் ‘காலிங்கராயன் வங்குசத்தில்’ வந்தவர்கள் என்று பெருமையாகக் கூறிச் சொல்வதைக் கனகபுரம் கல்வெட்டாலும், கவுண்டச்சி பாளையம் பாலமடை அம்மன் கோயில் கல்வெட்டாலும் அறிகின்றோம். பிற குலத்தினரும் ‘காலிங்கராயன்’ என்று பெயர் வைத்துக் கொண்டனர் என்பதைக் காஞ்சிக் கோயில் (செம்பன் குலத்தினர்) குன்னத்தூர்க் (கணவாளர்) கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
காலிங்கராயனுக்குப் பின் வந்த சாத்தந்தை குலத்தினர் பலரும் காலிங்கராயக் கவுண்டர் என்று பிற்காலம் வரை பெயர் வைத்துக் கொண்டதைக் கொங்குக் காணியான பட்டயம், மதுக்கரைப் பட்டயம், அகிலாண்ட தீட்சிதர் செப்பேடு ஆகியவற்றால் அறிகின்றோம்.
எனவே தமிழகமெங்கும் பல அரசர்கள் பல்வேறு காலங்களில் தங்கள் மிக உயர்ந்த அதிகாரிகட்கு வழங்கிய சிறப்பான பெயராகிய ‘காலிங்கராயன்’ என்ற பெயரையே நமது அணையும் கால்வாயும் அமைத்த அருளாளராகிய தலைவரும் பெற்றுள்ளார். நம் தலைவர் ஒருவரே பாண்டியர் நாளில் கொங்கு நாட்டில் இப்பெயர் தாங்கி இணையிலாது ஓங்கி அதிகாரம் செலுத்தி வசையொழித்து இசைகொழித்து வாழ்ந்தவராகின்றார். சிறப்புமிகு இக்காலிங்கராயன் என்ற பட்டம் பெற்றதால் அவர் பாண்டிய மன்னர்களிடம் பெற்றிருந்த உயர்வும் பெருமையும் மதிப்பும் நன்கு புலனாகிறது.