உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/004

விக்கிமூலம் இலிருந்து

அணையும் கால்வாயும்

“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’

என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடுகின்றார்.

உணவு கொடுத்தவர்கள் உயிரையே கொடுத்தவர்கள் ஆகிறார்கள். உணவு நிலத்தோடு நீர் சேர்வதால் உண்டாவது. எனவே நிலத்தொடு நீர் சென்றடையும் பணியை யார் செய்கிறார்களோ அவர்கள் உடம்பையும் உயிரையும் காப்பவர்கள் ஆகின்றார்கள் அவர்கள் புகழே உலகில் நிலைத்து நிற்கும் என்பது இப்பாடல் கருத்து.

இதை அறிந்தே தமிழக அரசர்கள் பலரும் காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர் அரசர் வழிநின்ற உயர் அலுவலர்களும் அரசர்களைப் போன்ற நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கும் பணியைத் திறம்படச் செய்தனர்.

போர்க்களத்திற்குச் சென்று போரிட வீட்டுக்கொருவர் புறப்பட்டு நாட்டைக் காத்தனர். அதேபோல் ஆற்றை அடைத்து வேளாண்மையைப் பாதுகாக்கவும் வெள்ளத்தை அடைத்து முறைப்படுத்தவும் வீட்டுக்கொருவர் புறப்பட்டுச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்ற பாண்டியன் ஆணையைத் திருவிளையாடல் புராணக் கருத்து நமக்கு அறிவுறுத்துகிறது.

காலிங்கராயன் பாண்டியர் தலைவன் ஆனபின் தம்முடைய பூந்துறை நாடு வளம் பெறும் பொருட்டுப் பவானியில் இடம் தேர்ந்து, இடம் அளிக்க மறுத்த பாளையக்காரன் வெள்ளை வேட்டுவனை வென்று நாட்டு மக்கள் உதவியுடன் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயையும் வெட்டினார். அதனால் என்றும் அழியாப் பெரும் புகழ் பெற்றார்.

காலிங்கராயன் அணைகட்டத் தேர்ந்தெடுத்த பவானி ஆறு இலக்கியப் புகழ்பெற்றது. பதிற்றுப்பத்தில் ‘சாந்து வருவானிநீர் மென்மையான சாயலும் தூய்மையும் தண்மையும் உடைய சேரன் இளஞ்சேரல் இரும்பொறையன் திருமேனிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.

கொங்கு நாட்டில் உள்ள ஆறுகளையெல்லாம் தொகுத்துப் பின்வருமாறு கொங்கு மண்டல சதக ஆசிரியர் கூறுகின்றார்.

‘திருமணி தொப்பைபூங் காவேரி
        வானியும் செய்யநதி
தருமணி காஞ்சி பொருநைநள்
        ளாறொடு சண்முகமும்
குருமணி பாலை நதிவாழை
        காரி குடவந்தியும்
வருமணி சண்பகம் சிற்றாறு
        சூழ்கொங்கு மண்டலமே!’

என்பது அப்பாடலாகும். இப்பாடலில் ‘கங்கையிற் புனிதமாய’ காவிரியுடன் இணையாகக் கூறப்படும் பெருமையைப் பெற்று விளங்குகிறது வானியாறு.

‘வடகொங்கில் வானியாற்றில்’ எனவரும் வேதாந்த தேசிகர் கூற்று வானியாறு வடகொங்கு நாட்டில் பாய்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே பூந்துறை நாட்டின் வடக்கு எல்லையாக வானியாறு விளங்கும் தன்மையைக் கண்டோம்.

பூந்துறை நாட்டில் பாயும் நான்கு ஆறுகளில் இரண்டாவதாக வானியாற்றை வைத்துப் பாடுகின்றார் சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ் நூலாசிரியர் குந்தாணி சுவாமிநாதக் கவிராயர்.

‘சரசகாவிரி வானி காஞ்சி அனுமையும்
சதுர்வித நதி’

என்று கூறும் அவ்வாசிரியர் மற்றோர் இடத்தில் வானியாற்றைத் ‘தெய்வ வானி’ என்றும் குறிப்பிடுகின்றார்.

சிந்தையள்ளும் சந்தக்கவிகள் பாடிய அருணகிரிநாதர் பவானியில் எழுந்தருளியுள்ள முருகனைப் புகழ்ந்து பாடும் போது “சிலைவேட சேவற் கொடியோனே திருவானி கூடற் பெருமாளே” என்பார். பவானியைத் திருவானி கூடல் என்றழைக்கின்றார் அருணகிரியார், ‘செஞ்சொற் கறைசை திருவானிகூடல்’ என்று கொங்கு மண்டல சதக நூலும் வாணியைத் திருவானிகூடல் என்றே குறிப்பிடும். சிலர் திருவாணிகூடல் என்று பாடபேதம் கொண்டு இத்திருப்புகழை மதுரைப் பாடலோடு சேர்ப்பர்.

இங்குள்ள கூடுதுறை, பிரயாகை (அலகாபாத்) போலத் ‘திரிவேணி சங்கமம்’ என்று கூறப்படுகிறது. வடநாட்டில் கங்கையோடு யமுனையாறு கலக்குமிடத்தில் சரஸ்வதி அந்தர் வாகிணியாகக் கலந்து பிரயாகை (திரிவேணி சங்கமம்) ஏற்படுவதைப் போல இங்கும் காவிரியும் பவானியும், அந்தர் வாகிணியாக அமுதநதியும் கலப்பதால் தமிழ் நாட்டுப் பிரயாகையாக இது விளங்குகிறது.

‘கோல மிகுந்த பவானியும்
        பொன்னியும் கூடுதுறை’

என்பார் கொங்கு மண்டல சதக ஆசிரியர். இன்னும் அவிநாசித் தலபுராணம், பூந்துறைப் புராணம் போன்ற பல்வேறு புராணங்களாலும் பல சிறு பிரபந்தங்களாலும் பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நிகண்டுகளாலும் புகழப் பெற்ற ஆறுதான் பவானியாறு.

இவ்வாறு வரலாறு இலக்கியப் புகழ்பெற்ற பவானி ஆற்றில்தான் காலிங்கராயன் அணைகட்டத் தீர்மானித்தார். பழைய கோவை மாவட்டத்திலுள்ள சுமார் 30 கால்வாய்களில் காலிங்கராயன் கால்வாயே முதலாவதாக வைத்துக் கூறப்பட்டது.

பவானிக்கு அருகிலுள்ள ஊராட்சிக் கோட்டை மலையை விலைக்கு வாங்கினார். அம்மலையிலிருந்து அணை கட்டுமிடம் வரை உள்ள வழியையும் விலைக்கு வாங்கினார். இதனை மெய்ப்பிக்கும் அடையாளமாக ‘மலையாயிரம் தடம் ஆயிரம்’ என்ற பழமொழி ஒன்று ஊராட்சிக் கோட்டைப் பகுதியில் இன்றும் வழங்குகின்றது. இதிலிருந்து ஊராட்சிக் கோட்டை மலையை ஆயிரம் பொன்னுக்கும் வழியை ஆயிரம் பொன்னுக்கும் அவர் வாங்கியதாக அறிகின்றோம்.

அம்மலையில் மிகுதியான கற்களை உடைத்து அவைகளைப் பல எருமை வண்டிகளின் மூலமாக அணை கட்டும் பகுதிக்கு எடுத்துக்கொண்டு வந்து அணையைக் கட்டினார். காலிங்கராயனும் இரண்டு எருமைக் கடாக்கள் பூட்டிய வண்டியில் கல் எடுத்தாராம். அக்கடாக்களுக்கு ‘இராமன்-இலட்சுமணன்’ என்று பெயர் வைத்திருந்தார் என்பர்.

மலையிலிருந்து அணைவரை வரும் வழியில் பல இடங்களில் தளர்ச்சி நீங்கத் தங்குமிடங்களையும் தாகந்தணிக்க நீர் நிலைகளையும் ஏற்படுத்தினார். வழியில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்களும் ஏராளமாக வைக்கப்பட்டு இருக்குமாம். வேலையாட்கள் அவைகளைத் தின்றுகொண்டே வேலை செய்யலாமாம். காலிங்கராயன் ஏவலாட்கள் மீது கொண்டிருந்த அன்பை இதன் மூலம் அறிகின்றோம். ஊராட்சிக் கோட்டை மலையில் காலிங்கராயன் மோர் குடித்த இடம், உணவு உண்ட இடம் என்று சில இடங்களை இன்றும் காட்டுகின்றனர். ஆனால் அவைகளைப் பற்றிய கல்வெட்டோ சான்றோ ஒன்றும் அங்கில்லை. இன்றும் காலிங்கராயர் குடும்பத்தின் தனிப்பட்ட உடைமையாக ஊராட்சிக் கோட்டை மலை திகழுகிறது.

அணையில் நீர் வழிந்து வரும் கலிங்கில் கற்களை இணைத்து அந்த இணைப்பு நிலையாக நிற்கக் கம்பிகளைக் கொடுத்து ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி அதனை இணைத்துள்ளார். அணைத் தோப்பின் கிழக்கில் நீர் பாய்ந்து நேராகக் காவிரியில் கலந்து விடாமல் தண்ணீர் அணைக்கு வந்து சேர மிக நீளமான தடுப்புச் சுவரை ஆற்றின் இடையில் கட்டியுள்ளார். அதனால் நீர் தடுக்கப்பட்டு அணையை நோக்கிப் பாய்கிறது. நீர் மிகுதியாக வரும் காலங்களில் தான் அணைத்தோப்பின் கிழக்குப் பகுதியில் பவானியாற்றில் தண்ணீர் வரும்.

கல்வெட்டுக்களில்

கொங்கு நாடெங்கும் கொங்குப் பாண்டியர் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்களில் காலிங்கராயன் பெயர் பொறித்த பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பிற்சேர்க்கையில் இணைத்துள்ளோம்.

இக்கல்வெட்டுக்களில் உயர் அலுவலராகக் காலிங்கராயன் குறிக்கப்பட்டுள்ளார். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்ற தொடர் இருப்பதும் கவனிக்கத் தக்கது.

காலிங்கராயன் வீரபாண்டியனின் ஆட்சியாண்டு 15இல் நாள் 129 அன்று கம்மாளர்களுக்குச் சில உரிமைகள் கொடுத்துள்ளார். அக்காலமே அணைகட்டி முடிக்கப்பெற்ற காலமாக இருக்கலாம் காலிங்கராயன் வினியோகம் என்ற வரியையும் காணுகின்றோம்.

கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இப்பெயரில் தலைவர் ஒருவரும் இல்லாததை நோக்கப் பாண்டியர் நாளில் இருந்த காலிங்கராயனே அணைகட்டிக் கால்வாய் வெட்டினார் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அதன் காலம் கி.பி. 1265 ஆகும்.

செவிவழிச் செய்தி

காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய அரிய செயல்பற்றிச் செவிவழிச் செய்தியாக சில கதைகள் வழங்குகின்றன.

காலிங்கராயன் பண்ணை குலத்தைச் சேர்ந்த தன் அத்தை வீட்டில் திருமணத்திற்குப் பெண் கேட்டதாகவும் ‘எங்கள் நடுவீட்டில் வாய்க்காலா கொண்டுவந்து விடுகிறாய்?’ என்று அத்தை கேட்க அவ்வாறே வாய்க்கால் வெட்டி அத்தை வீட்டு நடுவே விட்டார் என்று கூறுவர்.

வேறு சிலர் திருமண நிச்சய தினத்தன்று பெண் வீட்டுச் சமையல்காரன் மாப்பிள்ளை வீட்டார்களுக்குச் சமையல் செய்ய என்ன அரிசி போடுகிறது என்று கேட்க ‘அவர்கள் கம்பு விளைகிற சீமையில் இருப்பவர்கள். என்ன அரிசி என்று தெரியவா போகிறது; பழைய அரிசி போடு, என்று சொல்ல அதுகேட்டு நெய்விளையும் பூமி ஏற்படுத்தக் கால்வாய் வெட்டினார் என்றும் கூறுவர்.

காலிங்கராயன் தன் சொந்த ஊராகிய வெள்ளோட்டுப் பகுதியைக் கால்வாய்ப் பாசனத்தால் வளம்பெறச் செய்யவில்லை. எனவே இக்கதைகள் நம்புதற்கு உரியவை அல்ல. அரசியல் உயர் அலுவலனான காலிங்கராயன் திட்டமிட்டு நாட்டு நல்வாழ்வின் பொருட்டுச் செய்த பெரும் பொதுப் பணியே அணையும் கால்வாயுமாகும்.

வமிசாவளி கூறும் செய்தி

வமிசாவளி பெரும்பாலும் இக்கதையை ஒப்புக்கொள்ளுகிறது. ஆனால் காலிங்கராயன் பண்ணைக் குலத்தைச் சேர்ந்த மாமன் மைத்துனன் வீட்டில் தன் மகனுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது தடைப்பட்டது என்றும் கால்வாய் வெட்டிச் சபதம் முடிந்தபின் திருமணம் நடைபெற்றது என்றும் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுத் தமிழ் நடையின் அழகை நாமறிய வேண்டுமல்லவா? வமிசாவளியில் உள்ளவாறே அப்பகுதியைக் காண்போம்.

“பூந்துறை நாட்டிற்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கின்ற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ணவேண்டுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்குச் சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேழ்க்க ‘அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது. பழ அரிசிதானே போடுபோ’ என்று சொல்ல அது சேதி மேற்படி காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும்படியாக நீர்ப்பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிறோமென்று சபதம் கோரிக் கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேஸ்வரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாகச் சொப்பனமாச்சுது. அந்தச் சொப்பனமான உடனே கண் விழிச்சுப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக இருந்தது. தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பனத்தைக் கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்திலே சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி சேத்திரத்திலே சர்ப்பம் நின்றது. அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்துப் பவானி ஆற்றிலே குறுக்கே அணை கட்டி வைக்கவேணுமென்கிறதாக நினைச்சிருந்த சமயத்தில் பவானிக்கூடல் ஸ்தானத்துக்கு மேல்புறத்தில் பவானி ஆற்றிலே சர்ப்பம் குறுக்கே படுத்துக்கொண்டது. அந்த இடத்திலே அணைகட்டி வைக்கவேணுமென்று பவானிக் கூடலுக்கு வடக்கே வூராச்சி மலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டுவரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டிவைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்து அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்குச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழு காதவழி நடை கோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.

அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சுப் பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்துயிருந்த இடத்திலே அணையும் கட்டிவிச்ச படியினாலே காலிங்கக் கவுண்டன் என்று பேர் வரப்பட்டுப் பிரசித்திப் பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணமும் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்தினாலே சம்பத்து நாமதேயமான ‘காலிங்கன்’ என்கிற நாமதேயமும்

வேளாள சாதியான படியினாலே ‘கவுண்டர்’ என்கிற நாமதேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து ‘காலிங்கக் கவுண்டன்’ என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வைச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும், காலிங்கக் கவுண்டன் வாக்கியால் என்றும், தான் உண்டுபண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட நெல்லுக்குக் ‘காலிங்க நெல்லு’யென்றும் விளையப் பண்ணிச் சம்பந்த பாத்தியங்களும் செய்து கொண்டு இருந்தான்’’’

என்பதே கால்வாய் வெட்டியதுபற்றி வமிசாவளி கூறும் செய்தியாகும். இன்றும் இந்நினைவு மாறாமல் ‘காலிங்கராயன் அணை’ என்றும், வாய்க்கால் ‘காலிங்கராயன் வாய்க்கால்’ என்றும் அணையின் அருகிலுள்ள ஊர் ‘காலிங்கராயன் பாளையம்’ என்றும் வழங்கப்பெறுகின்றன. இக்கால்வாய் நீர்பாய்ந்து விளையும் நெல்லுக்குக் ‘காலிங்க நெல்லு’ என்று பெயர். இச்செயற்கரிய செயலைச் செய்த பெருந்தகையின் காலத்தில் இவன் பெயரால் காலிங்கராயன் காசு, காலிங்கராயன் பணம் என நாணயங்கள் வழக்கத்தில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவற்றை நோக்கக் காலிங்கராயன் மீது நாட்டினர் கொண்ட அளப்பரிய பற்றை அறிகின்றோம்.

ஆங்கிலநூல் கருத்து

‘இந்தியாவின் ஆளுந்தலைவர்களும் பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளிக் கருத்தைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. ஆனால் கனவில் தோன்றிக் கூறியவர் வெள்ளோடு சர்வலிங்கேஸ்வரன் என்பதற்குப் பதிலாகச் சுப்பிரமணிய சுவாமி கூறினார் என்றும், பாம்பு வழிகாட்டிச் சென்றது என்பதற்கு மாறாகப் பாம்பு சென்றிருந்த வழியையே பின்பற்றிக் கால்வாய் வெட்டினான் என்றும், அந்தப் பாம்பையும் மயில் துரத்திக்கொண்டு சென்றது என்றும் ஆங்கில நூல் கூறுகிறது. எனவே, அது முதற் கொண்டு காலிங்கராயனுக்கும் அவன் பரம்பரையினர்க்கும் இன்றும் மயிலே குலத்தின் சின்னமாக விளங்குகிறது என்றும் கூறுகிறது. காலிங்கராயனுக்கு வழிகாட்டிச் சென்ற பாம்பின் பெயர் ‘காலிங்கராயன்’ என்று இந்நூல் கூறுகிறது. கண்ணபெருமான் அடக்கியது ‘காலிங்கன்’ என்ற பாம்பையே என்று புராணம் கூறும். இதனை உட்கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காலம்

காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் கூறுகின்றன. இவ்வாண்டு மிகைபடக் கூறலாகவே இருக்கின்றது. ஆனால் அவை இரண்டும் குறிப்பிடும் பரம்பரையினரின் ஆட்சியாண்டுகளின் தொகைகளைக் கூட்டிப்பார்க்கும் பொழுது காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டுதான் வருகிறது. அக்காலமே கல்வெட்டுக்கள் அனைத்திலும் காலிங்கராயன் பெயர் கூறப்படும் காலமாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலே மட்டுமே காலிங்கராயன் பெயரைக் காணுகின்றோம். தனிப்பாடலில் வீரபாண்டிய வேந்தமைச்சன் என்று கூறப்படுகிறது. கி.பி. 1800இல் எழுதப்பட்ட கைபீது, 582 ஆண்டுகட்கு முன்பு கால்வாய் வெட்டப்பட்டதாகக் 1800இல் கூறுகிறது. கால்வாயைப் பார்வையிட்ட புக்கானன் 400 ஆண்டுகட்கு முன்பு வெட்டப்பட்டது என்று கூறுகின்றார். கல்வெட்டுக்களின் கூற்றுப்படிக் கி.பி. 1253இல் வீரபாண்டியனிடம் அரசியல் அலுவலனாக அமர்ந்த காலிங்கராயன் 12 ஆண்டுக் காலம் முயன்று கி.பி. 1265ஆம் ஆண்டு இப்பணியை முடித்தான் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

உதவியவர்கள் யார்?

வரலாற்றுக் குறிப்பெழுதிய புக்கானன் (1800) ‘காலிங்கராயன் ஒரு செல்வந்தராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் இருந்த காரணத்தினால் தன் சாதி மக்களிடமிருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தை திரட்டினார்’ என்று கூறுகின்றார். இச்செய்தியையும் ‘காலிங்கராயன் வினியோகம்’ என்ற வரியையும் நோக்க இது உண்மைச் செய்தியாக இருக்கலாம் என்று கொள்ளுதல் வேண்டும்.

எலவமலை, காலிங்கராயன் பாளையம், குன்னத்தூர் வெள்ளிரவெளி போன்ற பகுதிகளில் காலிங்கராயர் தன் பங்காளிகளான சாத்தந்தை குலத்தாரைப் புதிய ஊர்களில் குடியேற்றியுள்ளார். எனவே அணை, கால்வாய்த் திருப்பணிகட்குப் பங்காளிகளின் துணை இருந்திருக்க வேண்டும் என உறுதியாக எண்ணலாம்.

பாண்டிய அரசனும் பிற அரசியல் அலுவலர்களும் உதவி செய்தமை குறித்து முன்னர்க் கண்டோம். செவிவழிச் செய்தி கூறுவது போலத் தாயார் தேடி வைத்திருந்த குடும்பச் சொத்தினைக் கொண்டும் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டியிருக்கலாம். ஆனால் வெள்ளோடு, அந்தியூர், பேரூர்க் கல்வெட்டுக்களின் மூலம் காலிங்கராயன் கம்மாளர் எனப்படும் ஆசாரிமார்களுக்குச் சில உரிமைகள் அளித்தமை குறித்து முன்னர்க் கண்டோம். அணை, கால்வாய்த் திருப்பணிக்கு ஆசாரிமார் மிகுதியும் உழைப்பால் உதவி செய்திருக்க வேண்டும்; அதனாலேயே உரிமைகளை அம்மக்கள் பெற்றிருக்க வேண்டும் என ஊகிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு இன மக்களின் உதவியுடன் சாத்தந்தை குலம் பங்காளிகளின் துணையுடன் நாட்டு நன்மைக்காகக் காலிங்கராயன் இப்பணியைச் செய்து முடித்திருக்க வேண்டும்.

சாபத்தின் உண்மை என்ன?

செவிவழிச் செய்தியாக வழங்கும் வரலாற்றில் மற்றொரு செய்தி குறிக்கப்படுகிறது. காலிங்கராயன் திருப்பணிக்கு அவனுடைய தாயாதிகளான சாத்தந்தை குலத்தினர் எவ்வித உதவியும் செய்யவில்லை; சிறிய குட்டைக் கொழுவைக்கூடக் கொடுக்க மறுத்தனர். மறுக்கவே காலிங்கராயன் தான் செய்த மாபெரும் பணி முடிந்தவுடன், தனக்கு ஒரு உதவியும் செய்யாத தன் தாயாதிகளான சாத்தந்தை குலத்தினரை அழைத்து, “நீங்கள் இக்கால்வாய்த் தண்ணீரைக் குடிக்கக்கூடாது. இக்கால்வாயிலிருந்து நீர் பாயும் நிலத்தை நீங்கள் உழுது பயிரிடக்கூடாது; அணை பெருகவேண்டும். உங்கள் குடி கருக வேண்டும்” என்று கூறினார் என்பர். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஒருவன் ஓர் அறச்செயலைச் செய்கின்றான் என்றால் அவன் வழியினரே, அவன் குடும்பத்தினரே அந்த அறச்செயலின் பயனை நுகர்வதில் பங்கு கொள்ள விரும்பக் கூடாதல்லவா? அதுபோலச் சாத்தந்தை குலத்தாரின் துணையுடன் காலிங்கராயன் செய்த இம்மா பெரும் அறச்செயலில் அவர்கள் வழியினரே பங்கு கொள்வது நன்றன்று; அது பிறர்க்கே முழுவதும் பயன்பட வேண்டும் என்று அணை, கால்வாயைப் பயன்படுத்தாமல் சாத்தந்தை குலத்தினர் ஒதுங்கியிருந்தனர். இதுவே உண்மையாகும்.

காலிங்கராயர் பல்வேறு அறச்செயல்களைச் செய்தவர; கோயில்களைக் கட்டியவர்; குளங்களை வெட்டியவர்; நாடெங்கும் வரி விதித்து வசூலித்தவர். பாண்டியர் அரசியல் அலுவலராகவும் ஆற்றல் படைத்தவராகவும் இருந்தவர். எனவே காலிங்கராயன் வழியினர் அவரை எதிர்த்திருக்க முடியாது. அமைதியான ஆட்சிக்காலத்தில் தான் அறச்செயல்கள் நடக்கும். எனவே பிற்காலத்தில் உண்மையறியாமல் சாப வரலாற்றைக் கற்பனையாக நாட்டில் வழங்கவிட்டிருக்க வேண்டும்.

வெள்ளோடு, கனகபுரம், கவுண்டச்சி பாளையம் கல்வெட்டுக்களிலும், நல்லணவேள் காதல் போன்ற இலக்கியங்களிலும், தனிப்பாடல்களிலும் சாத்தந்தை குலத்தினர் தாங்கள் காலிங்கராயன் வமிசத்தில் வந்தவர்கள் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளுகின்றனர். எனவே எவ்வகையிலும் அவர்கள் காலிங்கராயனை மதித்துள்ளனர். காலிங்கராயனும் பங்காளிகள் மீது பகைகொள்ளவில்லை என்பதனையே அறிகின்றோம்.

நாவிதன் கரையும் ஊரும்

காலிங்கராயன் அணை கட்டி முடிக்க ஆன 12 ஆண்டுகளும் சபதம் செய்து அது முடியும் வரை தாடி வைத்துக் கொண்டிருந்தார். “சீரில் பொலியும் தவம் இருந்து தெய்வவானி அணைதேக்கி” என்பது பழம்பாடல் பகுதியாகும்.

அணை, கால்வாய் வேலைகள் முடிந்தவுடன் காலிங்கராயன் மிகுந்த சோர்வினால் அப்படியே படுத்து உறங்கிவிட்டார். அப்பொழுது குடும்ப நாவிதன் வந்து அவர் உறக்கம் கெடாத வகையில் தாடியை மழித்து எடுத்து விட்டான். காலிங்கராயன் விழித்து எழுந்தவுடன் மகிழ்ந்து நாவிதனைப் பார்த்து ‘உன்னைப் பாராட்டுகின்றேன்; உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அப்போது தன் பெயர் நின்று நிலவ ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாவிதன் இறைஞ்சினான். காலிங்கராயன் மகிழ்ந்து காலிங்கராயன் கால்வாயின் முதல் கரையை நாவிதன் கரையென்று நாவினிக்க அழைத்தார். தன் பெயரிட்ட காலிங்கராயன் பாளையம் என்ற ஊருக்கு அருகில் நாவிதன்பாளையம் என்ற ஊருண்டாக்கிச் சருவமானியமாக அளித்தார்.

இதனை வமிசாவளியும் பின்வருமாறு நயமான நடையில் நவிலுகின்றது.

“இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகிற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டுயிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை
எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ்காரமாய் இருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என்பேர் விளங்கி இருக்கும்படியாகப் பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான், தாம் கட்டி வைச்ச அணை யோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்குத் தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி ‘நாசுவன் பாளையம்’ என்றும் பேர் விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்தப் பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார்.

தெய்வீகத் தன்மை

காலிங்கராயர் தவமிருந்து அணை கட்டிக் கால்வாய் வெட்டினார் என்று சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ் கூறுகிறது.

நாட்டுப்பாடல், வானிலிங்கேசுவரர் வேதநாயகி இருவரும் வரம் அருளக் காலிங்கராயர் இத்திருப்பணியை முடித்தார் என்று கூறுகிறது.

காலிங்கராயர் கைபீது வேதியர் வடிவில் கனவில் சிவபெருமான் வந்து கூறினார் என்றும், பாம்பு வழி காட்டியது என்றும் கூறுகிறது.

இவை அனைத்தும் தெய்வீக சக்தியால் அணை கட்டிக் கால்வாய் வெட்டப்பட்டது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

பல பெயர்கள்

காலிங்கராயன் கால்வாயைப் பல இடங்களில் ‘கோண வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். கோணல் கோணலாகக் கால்வாய் இருப்பதே அதற்குக் காரணம். ஈரோட்டில் ‘காரை வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். ஈரோட்டில் வாய்க்காலின் கீழே பெரும் பள்ளம் செல்லுகிறது; மேலே காலிங்கராயன் கால்வாய் செல்லுகிறது. நீர் கசியாமல் இருக்கக் கால்வாய் காரையால் கட்டப்பட்டிருக்கிறது. எனவே ‘காரை வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர். இன்னும் பல இடங்களில் ‘பவானி வாய்க்கால்’ என்றும் சிறியதாக இருப்பதால் ‘சின்ன வாய்க்கால்’ என்றும், புதிதாகக் கீழ்பவானி வாய்க்கால் வெட்டப்பட்டிருப்பதால் காலிங்கராயன் கால்வாயைப் ‘பழைய வாய்க்கால்’ என்றும் பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கின்றனர். பலர் கால்வாய் என்ற சொல்லைக்கூடப் பின்னர் சேர்க்காமல் ‘காலிங்கராயன்’ என்ற தனிச் சொல்லாலேயே கால்வாயைக் குறிப்பர்.

கோணலின் காரணம்

பவானி தொடங்கி நொய்யலில் கலக்கும் வரை காலிங்கராயன் கால்வாய் மிகவும் கோணல் கோணலாக இருக்கிறது. அதனால்தான் ‘கோண வாய்க்கால்’ என்று கூறுகின்றனர். எனவேதான் பாம்பு வழிகாட்டியதாகக் கதை நாட்டில் உலவுகின்றது என அறிகின்றோம். ஆனால் இதன் உண்மையான காரணம் என்ன?

பவானி அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலாற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் கடல் மட்டத்திலிருந்து 412.48 அடி உயரம். நேராகப் பவானிக்கும் நொய்யலுக்கும் இடையில் உள்ள தூரம் 32 கல். ஆனால் வளைந்து செல்லுவதால் கால்வாயின் நீளம் 57 கல் ஆகிறது. காலிங்கராயன் கால்வாய் பவானியிலிருந்து நேராக நொய்யல் வரை செல்லுமானால் வயலுக்குத் தண்ணீர் பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவேதான் நீர் தேங்கி நின்று வயலுக்குப் பாய்ந்து வளப்படுத்துவதாகவும் நீரின் வேகத்தைக் குறைத்துக் கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்காகவும் கால்வாய் வளைந்து வளைந்து மேட்டுப்பாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்லுகிறது. இது காலிங்கராயனின் பொறியியல் திறத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.

காஞ்சியில் கலத்தல்

காஞ்சி என்ற பெயரையுடைய நொய்யலாற்றில்தான் காலிங்கராயன் கால்வாய் இறுதியாகக் கலக்கிறது என்று முன்பே கண்டோம். ‘மீ கொங்கில் அணிகாஞ்சி’ என்று செந்தமிழ் வல்ல சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்நதியினைப் போற்றியுரைத்துள்ளார்.

திருப்பாண்டிக் கொடுமுடிக்குத் தெற்கே காலிங்கராயன் கால்வாயைத் தொடர்ந்து நாம் செல்வோமானால் காலிங்கராயன் கால்வாயின் அளவு சுருங்கியிருப்பதைக் காணலாம். ‘வெங்கமேடு’ அருகில் உள்ள நாகமநாயக்கன் பாளையத்தில் மிகச் சுருங்கிக் கழிவு நீர்க் கால்வாய் போல மாறித் தென்கிழக்கில் உள்ள ஆவுடையா பாறை என்றும் ஊரை நோக்கிச் செல்லுகிறது காலிங்கராயன் கால்வாய். ஆவுடையாபாறையில் புகைவண்டிப் பாதையை ஒரு சிறு பாலத்தின் மூலம் கடந்து தெற்கு நோக்கி ஓடி நொய்யலாற்றில் கலக்கின்றது. இந்த இடத்தின் எதிர்க்கரையில் செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது. காலிங்கராயன் நொய்யலோடு கலக்கும் இந்த இடத்தைப் பொது மக்கள் ‘கூடுதுறை’ ‘கூட்டாற்று மூலை’ என அழைக்கின்றனர். இந்த இடத்தில் காலிங்கராயன் கால்வாயின் அகலம் சுமார் 3 அடியேயாகும்.

கிளைக் கால்வாய்கள்

காலிங்கராயன் கால்வாயில் மூன்று கிளைக்கால்வாய்கள் உள்ளன.

1. மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால்:- காலிங்கராயன் கால்வாயில் 31.6.430 மைலில் பழனிக்கவுண்டம் பாளையம் அருகே பிரிந்து சுமார் 4 மைல் தூரம் காலிங்கராயன் கால்வாய்க்கு இணையாகவே ஓடி மலையம் பாளையம் அருகே காலிங்கராயன் கால்வாயுடனே கலக்கிறது. இக்கால்வாய் சுமார் 675 ஏக்கர் நிலங்களை வளப்படுத்துகிறது.

2. பெரியபட்டம் பரிசோதனை வாய்க்கால்:- நாகம நாயக்கன் பாளையத்தில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலில் கலப்பதற்காக ஆவுடையா பாறையை நோக்கிப் பாயுமிடத்தில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு கால்வாயைத் தென்மேற்காகக் கொண்டு செல்லுகின்றனர். அது பெரியபட்டம் என்ற ஊரைக் கடந்து செட்டிபுள்ளா பாளையம் என்ற ஊரில் நொய்யலோடு கலக்கிறது. அதற்கும் காலிங்கராயன் கால்வாய் என்றே பெயர் கூறி அழைக்கின்றனர். ஆனால் இந்தப் பெரியபட்டம் கிளைக் கால்வாயைப் பற்றி வேறு சில செய்திகளும் இங்கு வழங்கப் பெறுகின்றன. இக்கால்வாய் 625 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளிக்கிறது. இதன் நீளம் 1.5.600 மைல் ஆகும்.

3. ஆவுடையாபாறை பிரிவு வாய்க்கால்:- ஆவுடையா பாறையில் காலிங்கராயன் கால்வாய் நொய்யலோடு கலக்குமிடத்திற்கு அருகில் மைல் 56.5.234 இல் கால்வாயை ஒரு கலிங்கின் மூலமாகத் தடுத்துத் தண்ணீரை மேற்கு நோக்கிக் கொண்டு செல்லுகின்றனர். அதற்கும் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்றே பெயர் கூறுகின்றனர். இருநூறு ஏக்கர்களை வளப்படுத்தி இக்கால்வாய் ‘புதுத்தோட்டம்’ என்ற இடத்தில் நொய்யலோடு கலக்கிறது. இதற்குக் ‘கல்லுக்கட்டுமடை’ என்றும் பெயர் கூறுகின்றனர். ‘ஆவுடையபாறைப் பிரிவு வாய்க்கால்’ என்பது பொதுப் பணித்துறையினர் பெயர். இதன் நீளம் ¼ மைல்.

பிற்காலத் திருப்பணி செய்த இருவர்
வட்டக்கல் வலசு சின்னத்தம்பிக் கவுண்டர்

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் பெருமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அதன் காரணமாகப் பள்ளங்களில் ஓடிவந்த தண்ணீர் காலிங்கராயன் கால்வாயினுள் புகுந்து பல இடங்களில் கரைகள் உடைந்தன. பொதுப் பணித்துறையினரால் விரைந்து பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உடைப்பு மிகுதியானதால் உழவர்கள் பெரிதும் துன்புற்றனர்.

அப்போது வட்டக்கல்வலசில் வாழ்ந்த கொங்குவேளாளரில் கண்ண குலத்து நிலக்கிழாரான சின்னத்தம்பிக் கவுண்டர் அவர்கள் பெரும்பகுதிக் கால்வாய்க் கரைகளை அடைக்கத் திட்டமிட்டார்.

தம் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எடுத்துரைத்தார். வட்டக்கல்வலசுச் சின்னத்தம்பிக் கவுண்டரின் நுண்ணறிவையும் விடாமுயற்சியையும் கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சின்னத்தம்பிக் கவுண்டருக்கு உதவி புரிந்தார். எங்கு வேண்டுமானாலும் சின்னத்தம்பிக் கவுண்டர் எவ்வளவு மரங்களை வேண்டுமானாலும் வெட்டிக்கொள்ளலாம். பாறைகளை உடைக்கலாம். மண் எடுக்கலாம். யாரையும் உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சாசனம் எழுதித்தந்தார்.

தம் செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆட்களைத் திரட்டி அரிய முயற்சியால் சின்னத்தம்பிக் கவுண்டர் கால்வாய்க்கரைகளைப் பழுது பார்த்துக் கட்டினார். கால்வாய் முன்பு போலவே நன்றாக அமைந்து தண்ணீர் வந்தது. உழவர்கள் மகிழ்ந்தனர்.

மணியம் காளியப்ப கவுண்டர்

சுமார் 75 ஆண்டுகட்கு முன்பு மணியம் காளியப்ப கவுண்டர் என்பவர் ஆவுடையாறை அருகே தண்ணீர் வீணாகச் சென்று நொய்யலில் கலப்பதைக் கண்டு வருந்தி ஆவுடையாபாறை அருகிலிருந்து கிளைக்கால்வாய் ஒன்றமைத்துப் பாசனத்திட்டம் ஒன்றை அளித்தார். அவரே முன்னின்று அந்தச் செயலை முடித்தார். இன்று அவர் அமைத்த திட்டம் நன்கு செயல்பட்டுப் பலநூறு ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றன. பெரியபட்டம் பரிசோதனைக் கால்வாய் என்பது இதன் பெயராகும்.

பிற்காலத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் நம் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.

காலிங்கராயன் பவானியாற்றில் கட்டிய
மற்றொரு அணை

டணாயக்கன் கோட்டை என்பது பவானி ஆற்றங்கரையில் இருந்த புகழ்வாய்ந்த பழைய கோட்டையாகும். இப்போது அக்கோட்டை கீழ்பவானி அணையில் மூழ்கிவிட்டது.

டணாயக்கன் கோட்டைப் பகுதியில் ஊருக்குச் சற்று மேற்கே பவானி ஆற்றில் அணை ஒன்று கட்டிச் சிதைந்த நிலையிலும் 1800 வாக்கில் 400 ஏக்கர் நிலத்திற்குப் பாய்ந்து வந்தது. கீழ்பவானி அணை கட்டியபின் இந்த அணை முழுவதும் அணையினுள் மறைந்து விட்டது. 1799இல் மேக்ளியாட் இந்த அணையைப் பழுதுபார்த்தார். தூர்ந்த கால்வாயைச் செப்பனிட்டார்.

இந்த அணைக்கட்டைக் கட்டியவர் வேளாளர் லிங்கையன் என்பவர் என்று ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. 1933ஆம் ஆண்டு டிசம்பர் 29இல் வெளிவந்த முல்லைக்கொடி என்னும் மாத இதழில் இந்த அணை பற்றிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

காலிங்கராயன் அணை கட்டின பட்டயம் மூலம் காலிங்கராயனின் இயற்பெயர் லிங்கையன் என்பதனை அறிகின்றோம். டணாயக்கன் கோட்டை அணை தொன்மையானதாகவும் உள்ளது. எனவே பவானியின் இறுதியில் அணை கட்டிய காலிங்கராயன் பவானியின் தொடக்கப்பகுதியிலும் அணை கட்டியுள்ளார் என்பதைத் தெளிவாக அறிகின்றோம். இது மிகவும் அரிய செய்தியாகும். புக்கானன் எழுதிய யாத்திரைக் குறிப்புக்களிலும் இந்த அணைபற்றிக் கூறப்பட்டுள்ளது. அவருடைய குறிப்பிலும் இவ்வணை கட்டியவர் பெயர் லிங்கையன் என்றே காணப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/004&oldid=1841435" இலிருந்து மீள்விக்கப்பட்டது