உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/006

விக்கிமூலம் இலிருந்து

தெய்வமாகக் கொள்ளல்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்பது வான்புகழ் வள்ளுவரின் வாய்மொழி. கொங்கு நாட்டு வேளாளர்களின் உரிமையுடைய காணித் தெய்வங்கள் பலவும் உலகில் பிறந்து தலைமைப் பண்புகளுடன் பிறர்க்காக வாழ்ந்த பெருமக்களே ஆவர். குடித்தலைவர்களாக விளங்கிக் கோயிலில் குடிகொள்ளும் தெய்வங்களாக அவர்கள் வாழ்வில் உயர்ந்தனர். குன்றுடையாக் கவுண்டர் மக்களான பொன்னரும் சங்கரும் அண்ணன்மார்களாகக் கொங்கு நாடெங்கும் வீற்றிருந்து கொங்கு நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் அருள் தந்து வாழ்வித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மையாகும். அப்பிச்சிமார், குப்பியண்ணன், ராவுத்தணன், நாட்டுராயன் முதலிய கொங்கு வேளாளர்களின் காணித் தெய்வங்களும் இவ்வுலகில் பிறந்து இணையில்லாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்களே ஆவர். காலிங்கராயன் பிறந்த சாத்தந்தை குலத்துக் குலதெய்வமான வெள்ளோடு ‘இராசா’வும் இவ்வுலகில் தோன்றிப் பீடுற வாழ்ந்த ஒரு தெய்வீகப் பெருமகனே ஆவார். வெள்ளோடு இராசாக் கோயிலில் தெய்வமாக நின்று என்றும் அந்த இணையற்ற தெய்வத்திருஉரு மக்களை வாழ்வித்து வருகிறது.

காலிங்கராய தெய்வம்!

எல்லையில்லாப் பெரும் புகழுடன் பாண்டிய மன்னர் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் விளங்கி, உலகு போற்றும் உயர்பணிகள் பலவற்றைக் கொங்கு நாட்டினர் பொருட்டுச் செய்த நம் கொங்குவேளாள சாத்தந்தை குலக்குரிசில் காலிங்கராயனைப் பிற்காலத்தில் தெய்வமாகவே கொங்கு நாட்டு மக்கள் வழிபட்டனர். காலிங்கராயன் அணையின் இடையில் வளமுடன் அமைந்துள்ள தீவான அணைத்தோப்பு என்னும் சோலையில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். ஆண்டுதோறும் அக்கோயிலுக்கு விழாவும் நடத்தி வந்தனர். காலிங்கராயனுக்கு மட்டுமல்ல அவருக்குக் கால்வாய் வெட்ட வழிகாட்டிய பாம்புக்கும் கோயில் அமைத்தனர் என்பதையும் சில சான்றுகளால் நாம் அறிகின்றோம்.

அணைத்தோப்பில் ஆலயம்

காலிங்கராயன் அணையின் இடையில் உள்ள தீவில் அமைந்துள்ள தோப்பில் ‘உத்தரராயன் கோயில்’ என்னும் பெயருடன் கோயில் ஒன்றுள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கொங்கு நாடு பாண்டியர் ஆட்சிக்குட்பட்டுப் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது. எனவே வீரபாண்டியன் தன் நாட்டின் வடபகுதியாகிய கொங்கு நாட்டிற்கு அரசனைப் போல விளங்கிய அரசியல் அதிகாரியாகிய காலிங்கராயனுக்கு ‘உத்தரராயன்’ என்ற பட்டப் பெயரை அளித்தனன் (உத்தரம்—வடக்கு; ராயன்—ராசன்-அரசன்). காலிங்கராயனுக்கு ‘உத்தர மந்திரி’ என்ற பட்டப் பெயரும் இருப்பதைத் திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. பாண்டியனுக்காக ஆணையிடும் அமைச்சர் என்றும் உத்தர மந்திரி என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.

இன்று அந்த உத்தரராயன் கோயிலில் உருவ அமைப்பில் சிலைகள் ஒன்றும் இல்லை. உத்தரராயன் என்ற சிறப்புப் பெயரையுடைய காலிங்கராயனுக்கு முன்பு சிலை வடித்துப் பிரதிட்டை செய்து வணங்கியிருப்பர். காலவெள்ளத்தில் அஃது அழிந்துவிட்டது போலும்.

அக்கோயிலில் உள்ள வேறு ஒரு கடவுளுக்குப் ‘பெத்தாரையன்’ என்று பெயர் கூறுகின்றனர். அது பெற்றாரையன் என்னும் சொல்லின் திரிபாகஇருக்கலாம். அவர் ‘காலிங்கராயனைப் பெற்றாரையனாக’ அதாவது காலிங்கராயனின் தந்தையாக இருக்கவேண்டும். ஒரு சிறந்த தலைவனைப் பெற்றெடுத்த பெற்றோருக்குச் சிலை வைத்து வழிபடுவது பண்டைய வழக்கம். உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவிக்குச் சிலை வைத்து வழிபட்டனர். அவரை ‘ஸ்ரீ மதுராந்தக சோழ தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவி’ என்று கல்வெட்டுக்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. எனவே காலிங்கராயனுக்கும் காலிங்கராயனின் தந்தைக்கும் நாட்டினர் நன்றி மறவாது அக்கோயிலைக் கட்டினர் என்பது புலனாகும்.

தலைமதகில் தெய்வத் திருவுரு

காலிங்கராயன் அணையின் தலைமதகின் அருகில் உள்பக்கம் இடப்புறம் கிழக்கு நோக்கி ஒரு சிறிய மேடையும் அதன்மீது ஒரு பாம்பின் சிலையும் இருக்கின்றது. பாம்பின் அருகில் மேடையில் ஒருசிலை இருக்க வேண்டிய இடம் காலியாக உள்ளது. அங்குச் சிலை இல்லை; ஆனால் காலிங்கராயனின் சிலையைப் பிரதிட்டை செய்திருந்த இடம் அதுவாகவே இருக்கலாம் என ஊகிக்க முடியும். பீடத்தில் கிழக்கு நோக்கி ஒரு தூண் பதிக்கப்பட்டுள்ளது. அதில் அரசக்கோலத்துடன் சிலை ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. அந்தச்சிலை காலிங்கராயன் சிலையாக இருக்கலாம். கல்வெட்டு ஒன்றும் அங்கே காணப்படவில்லை. சாசனம் இருப்பதாக வமிசாவளி கூறுகிறது. ஆனால் அஃதிருக்கும் இடம் தெரியவில்லை .

மேலே குறிப்பிட்ட இவ்விரண்டிடங்களில் ஒன்றுதான் முதலில் காலிங்கராயனுக்கு ஏற்பட்ட கோயிலாக இருக்க வேண்டும். முதலில் அணைத்தோப்பில்தான் கோயில் கட்டியிருப்பர். பவானியாற்றில் மிகுதியாக நீர் வரும் காலங்களில் ஆற்றைக் கடந்து அங்கு சென்று வழிபட இடையூறாக இருந்திருக்கும். எனவே அணைமுகப்பில் தலைமதகின் அருகில் வேறு கோயில் அமைந்திருக்க வேண்டும் இக்கோயில் அமைப்பை வமிசாவளியும் ஏற்றுக் கொள்கிறது.

வமிசாவளியில் தெய்வீகக் குறிப்பு

வமிசாவளி பின்வருமாறு கோயில் கட்டிச் சிலையெடுத்து வழிபட்ட அச்செய்தியைக் குறிப்பிடுகிறது.

“காலிங்கக் கவுண்டன் கட்டியிருக்கப்பட்ட அணையிலே கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலா பிரதிமை ரூபமாகக் கல் வெட்டி வச்சுச் சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டு வருகிறது. வருஷப் பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்குப் பூசை நைவேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே ரொம்ப மூர்த்தி கரம் உண்டாயிருக்கிறது”

இதன்படிக் காலிங்கராயன் பிரதிமைக்கு வருடம்தோறும் வழிபாடு நடத்துவதன் மூலமே தவறாமல் மழை பெய்கிறதென்றும் அதன் மூலமாக வானியாற்றில் வெள்ளம் வந்து பூமி விளைகிறது என்றும் மக்கள் நம்பினர் என்பதையும் காலிங்கராயன் மீது முன்னோராகிய கொங்குநாட்டுக் குடிமக்கள் அளவிறந்த பற்றுக் கொண்டிருந்தனர் என்பதையும் நாமறிகின்றோம்.

ஆங்கில நூலின் கருத்து

காலிங்கராயன் பரம்பரையில் வந்தவர்கள் மட்டுமல்ல, கொங்கு நாட்டு வேளாளர்கள் அனைவரும் காலிங்கராயனையும் வழிகாட்டிய பாம்பையும் தெய்வமாகவே வழிபட்டனர் என்பதை ‘இந்தியாவின் ஆளுந்தலைவர்களும் பெருமக்களும் நிலக்கிழார்களும்’ என்னும் ஆங்கில வரலாற்று நூல் கூறுகிறது.

Stone statues of Kalingarayar and the serpent were placed near the anicut, and festivals and Pujas were performed by his descendants and other ryots

என்பது அந்நூல் கூறும் பகுதியாகும்.

பள்ளு நூலில்

‘ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு’ என்னும் நயத்தகு நாடக நூலில் காலிங்கராயன் பெற்ற தெய்வத் தன்மை இரண்டு முக்கியமான இடங்களில் விளக்கப்படுகிறது. அப்பள்ளு நாடக நூலை மேடையில் நடித்துக் காட்டியவர் சஞ்சீவி என்பவர். எங்கு? வோளாளர்கள் கூடிய அவையில்; இதைக் கூறுகின்ற ஆசிரியர் புலவர் கரூர் முத்துக்கருப்பனார். அந்த வேளாளர்கள் காலிங்கராயனின் கருணையினால் தான் வாழ்கிறார்கள் என்றும், அவர்கள் வாழ்வும் உழவுத் தொழிலும் மேன்மேலும் ஓங்குவதற்குக் காரணம் அவர்களுக்குக் காலிங்கராயன் கருணை இருப்பதுதான் என்றும் பாடுகின்றார்.

“காலிங்க ராயன் கடாட்சத்து னாலே
சாலவே இந்தத் தரணியில் வாழும்
குடியான வர்கள் கூடிய சபையில்
வடிவான பள்ளை வந்துமே ஆடிய”

தாகவும் சஞ்சீவி தனக்குச் சதுருடன் செம்பொன்னை அவர்கள் கொடுத்ததாகவும் அறிகின்றோம்.

பள்ளு நூலில் மற்றுமொரு இன்றியமையாத குறிப்பைக் காண்கின்றோம். மழைவேண்டும் என்று ஆண்டானிடம் பணிபுரியும் பள்ளர்கள் வேண்டிக் கொள்ளுமுன் மணியகாரன் வந்து இச்சையாகிய தேவதை தங்கட்கு ஏற்கவே பூசை செய்யுமாறு கட்டளையிடுகின்றான். அதைக் கேட்ட பள்ளர்கள் ஈரோட்டுத் தலத்தில் உள்ள விநாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை, ஐயனார், தொண்டீசுவரர், வாரணியம்மன், கலியுகவரதர், கமலவல்லித்தாயார், கொங்கிலம்மன், கொல்லிவாய்க் கருப்பன் போன்ற எல்லாத் தெய்வங்கட்கும் பூசை நடத்துகின்றனர். தெய்வத் திருமேனிகட்கும் வழிபாட்டுக்கும் வேண்டிய பொருள் அனைத்தும் விரும்பிக் கொடுக்கின்றனர்.

வாரணி அம்மனுக்குப் பொன் கலமும், மங்கலகிரிவாசருக்குத் தங்கக் கிரீடமும் அளிக்கின்றனர். இத்தெய்வங்களை வழிபடுவதற்கிடையில் காலிங்கராயனையும் அவர்கள் மறக்கவில்லை. பள்ளர்களின் வேளாண்மையைச் சிறப்படையச் செய்து குடியை வாழ்விக்கும் தெய்வமல்லவா காலிங்கராயன்! எனவே,


‘கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக்
கண்ட சரமும் உத் தொண்டியும் சாற்றுங்கள்’

என்று மணியகாரர் கட்டளையிட, அவ்வாறே பள்ளர்கள் செய்கின்றனர். காலிங்கராயனின் இனத்தவராகிய வேளாளர்கள் மட்டுமல்லர், கொங்கு நாட்டவர் அனைவரும் இதன் மூலம் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பது விளங்குகின்றது. ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாய்க் கரையிலேயே இப்பள்ளு நாடகத்தைப் பெற்றுச் சிறப்புற்ற ஐயனாரப்பன் கோவில் இன்றும் இருக்கிறது.

பள்ளர் வழிபட்ட கோயில் எது?

பள்ளர்கள் வழிபட்ட எல்லாத் தெய்வங்களும் ஈரோட்டிலும் ஈரோட்டைச் சூழ்ந்தும் அருகில் இருப்பனவே! பள்ளர்கள் ஈரோட்டில் வாழ்ந்தமையே அதற்குக் காரணம். எனவே காலிங்கராயனைப் பள்ளர்கள் வாழ்த்தி வணங்கிய காரணத்தால் காலிங்கராயன் கோயில் ஈரோட்டிலும் ஒன்று இருந்திருக்கவேண்டும். அக்கோயில் எங்கிருந்தது என்பதற்குச் சில சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஈரோட்டின் கிழக்கு எல்லையில் காலிங்கராயன் கரையில் ‘காரைவாய்க்கால் மைதானம்’ என்னுமோர் இடம் இருக்கிறது. அதனருகில் பாம்புக் கோயில் ஒன்றுள்ளது. சுமார் 10 அடி நீளத்திற்குக் கிழக்கு - மேற்காகப் பாறையில் அழகிய புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுச் சுற்றியும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலில் மற்றுமொரு சிறப்பு உண்டு. அப்பாம்பிற்கு அபிடேகம் செய்யும் நீர் எல்லாம் ஓர் ஆழக்குழியில் சென்று பின் புதைகால் வழியாகக் காலிங்கராயன் கால்வாயையே அடைகிறது. அக்கழிவு நீர்க்கால்வாய் வெளியே தெரிவதில்லை. இங்கு முன்பு ஓர் ஆண் தெய்வத்தின் சிலை இருந்ததாகவும் கூறுகின்றனர். அதுவே காலிங்கராயன் தெய்வத்தின் சிலையாக இருக்க வேண்டும் என்று எண்ணலாம். காலிங்கராயனுக்கும் வழி காட்டிய பாம்புக்கும் கோயில் எடுக்கப்பட்டதாக ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளியும் கூறுகின்றன. இங்குப் பாம்புக்கோயில் மட்டும் எஞ்சியிருக்க, காலிங்கராயன் கோயில் அழிந்துவிட்டது போலும்.

கட்டியது யார்?

இக்கோயிலை யார் கட்டியது? உரிமையுடையவர்கள் யார் என்று இக்கோயில் பூசை செய்யும் திருவேங்கடராமசாமி என்ற முதியவரைக் கேட்டால் அவர் கூறும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

‘ஆசாரிமார்கள் இக்கோயிலைக் கட்டினார்கள், அவர்கள் இக்கோயிலுக்கு உரிமையுடையவர்கள். கொங்கு நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆசாரிமார்கள் இக்கோயிலுக்கு வருவார்கள். அவர்கள்தாம் விழா முதலியன நடத்தினார்கள். அருகில் இருக்கும் மண்டபமும் அவர்களுடையதே! ஆனால் சிலகாலமாக இக்கோயில் ஐயர்கள் கைக்கு மாறிவிட்டது’

என்று கூறுகின்றார் அப்பெரியவர்.

வேட்டுவர் - வேளாளர் போராட்டத்தின் காரணமாக ஆசாரிமார்களின் உரிமைகள் சில பறிக்கப்பட்ட செய்தியையும் பின்னர்க் காலிங்கராயன் அவர்கட்கு மீண்டும் உரிமை அளித்த செய்தியையும் முன்னரே கண்டோம். காலிங்கராயன் அவர்களுக்கு உரிமை அளித்த மாபெரும் நன்மைக்காக ஆசாரிமார்கள் தங்கள் நன்றியைக் காட்டக் காலிங்கராயனுக்கும் வழிகாட்டியதாகக் கருதப்பட்ட பாம்புக்கும் ஈரோட்டில் கோயில் கட்டியிருக்கலாம்.

வெள்ளோட்டில் உருவச்சிலை

வெள்ளோட்டில் உள்ள சருவலிங்கேசுவரர் கோயிலின் தெற்கு வாயில் முன்மண்டபத்தின் தென்மேற்குத் தூணில் ஒரு தலைவர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வூர் மக்களும் அக்கோயில் அர்ச்சகர்களும் அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமே என்று கூறுகிறார்கள். காலிங்கராயன் வெள்ளோட்டில் தங்கியிருந்தார் என்பதும் இச்சருவலிங்கேசுவரன் கோயிலில் பல திருப்பணிகள் செய்து கொடைகளும் அளித்துள்ளார் என்பதாலும் மேற்கண்ட செய்தி உண்மையாக இருக்கலாம்.

பாலமடை அம்மன் கோயிலில்

கவுண்டச்சிபாளையம் அருகேயுள்ள பாலமடை அம்மன் கோயில் மகாமண்டபக் கிழக்குச் சுவரின் வெளியே ஒரு கொங்குத் தலைவரின் சிற்பம் உள்ளது. பாலமடை அம்மன் ஆலயத்திற்கும் காலிங்கராயன் கால்வாய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நோக்க அச்சிற்பம் காலிங்கராயன் சிற்பமாக இருக்கக் கூடும் என எண்ண இடமுள்ளது.

கலைமகள் கலைக்கூடத்தில்

கொங்குக் கலைக்கூடம் ஒன்று ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் அருகேயுள்ள பிராமணப் பெரிய அக்கிரகாரம் என்னும் ஊரில் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் சிதைந்த ஒரு கோயிலில் இருந்த ஒரு சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் கலைமகள் கலைக்கூடத்திற்கு அனுப்பினர். அச்சிலையை அவ்வூர்ப் பொது மக்கள் ‘காலிங்கராய சுவாமி’ என்றே குறிப்பிட்டுக் கூறுகின்றனர். எனவே அந்த அக்கிரகாரப் பகுதியில் காலிங்கராயனுக்குக் கோயில் ஒன்று இருந்தது என்பது திண்ணம்.

அச்சிலையைத் தேடி எடுத்துப் பாதுகாத்துவரும் கலைமகள் பள்ளிகளின் நிருவாகி செல்வி எம். முத்தையா அவர்கள் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகின்றார்கள்.

இவைகளின் மூலம் கொங்கு நாட்டவர் அனைவரும் காலிங்கராயனைத் தெய்வமாக வழிபட்டதையும் அணையில் மட்டுமல்ல, ஈரோடு போன்ற பல இடங்களில் பல மக்களும் கோயில் அமைத்து வணங்கி வரம் பெற்று வாழ்ந்தனர் என்பதையும் நாமறிகின்றோம்.

இராசாக் கோயிலில்

வெள்ளோடு இராசாக் கோயிலில் சாத்தந்தை குலத்தலைவர்கள் சிலருடைய சிற்பங்கள் தூண்களில் அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. சில சிற்பங்கள் அடியார் போலவும், சில சிற்பங்கள் அரசியல் அலுவலர் போலவும், சில சிற்பங்கள் அரசர் போலவும் அமைக்கப்பட்டுள்ளன. அச்சிற்பங்களில் ஏதாவது ஒன்று சாத்தந்தை குலச் செம்மல், இராசாவைக் குல தெய்வமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் நம் காலிங்கராயன் சிற்பமாக இருக்க வேண்டும். கல்வெட்டுக் குறிப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் அவைகளில் எந்தச் சிற்பம் காலிங்கராயனுக்கு உரியது என்று நம்மால் அறிய முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/006&oldid=1841437" இலிருந்து மீள்விக்கப்பட்டது