காலிங்கராயன் கால்வாய்/008
வெளிநாட்டார் குறிப்புக்கள்
காலிங்கராயன் கால்வாயின் அமைப்பு, அணையின் தன்மை, அதன் சிறப்புமிக்க பொறியியல் திறன், சிறப்புத் தன்மை, அதன் பெருமை, வரலாற்றுத் தொன்மை ஆகியவை வெளிநாட்டார் பலரை மிகவும் கவர்ந்துள்ளது.
கி.பி. 18, 19ஆம் நூற்றாண்டில் கொங்குப் பகுதிக்கு வந்த பல வெளிநாட்டினரும் பிற நாட்டு அரசியல் அலுவலர்களும் பொறியியல் நிபுணர்களும் ஆட்சித் தலைவர்களும் காலிங்கராயன் கால்வாய் குறித்துச் சுவையான முக்கியத் தகவல்களை எழுதி வைத்துள்ளனர்.
சுவார்ட்சு (Swartze)
புக்கானன் (Dr. Bhuchanan)
மெக்கென்சி (Lt. colonel colin Meckanzie)
ரௌட்டன் (Wroughton)
ஹன்னான் (Hannan)
வெட்டர்பர்ன் (Colonel Wedderburn)
அருண்டேல் (Arundels ICS)
மாண்ட் கோமரி (Colonel Montgomerie)
மீடு பென்னி குக் (Mead Penny Cuick)
அட்ரி (Awdry)
மார்கன் (General Morgan)
சர் ஆர்தர் காட்டன் (Sir Arthar cotton)
போன்ற பலரின் பயனுடைய குறிப்புக்கள் பழைய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுடன் எதிர்காலப் பாசனத்திட்டங்களுக்கும் இன்றியமையாத பல கருத்துக்களைத் தருகின்றன.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கட்கும் மைசூர்த் தலைவர்கட்கும் நடைபெற்ற கொங்கு நாடு பற்றிய உரிமைப் போரில் காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி பெரிதும் இடம் பெற்றிருந்தது. இக்கால்வாயின் பெரும் பகுதி இப்போர்களினால் அழிந்து சிதைந்து விட்டது என்றறிகிறோம். பல ஆங்கில வரலாற்று நூல்களிலும் மாவட்டக் கெசட்டியர்களிலும் அரசாங்க நிருவாக அறிக்கைகளிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய அக்காலத்திய பல வரலாற்றுச் சான்றுகள் விரிவாகக் கிடைக்கின்றன.
சுவார்ட்சு
தமிழ் நாட்டிற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணிக்கென வந்த பல பாதிரிமார்கள் கல்வியைப் பரப்பும் பணியையும் மருத்துவப் பணியையும், தமிழ் இலக்கியப் பணியையும், இலக்கண ஆய்வையும் செய்து தமிழ் நாட்டிற்கு அரிய பல தொண்டுகள் செய்ததை நாடு நன்கறியும். அவர்களில் பலர் வரலாற்றுச் செய்திகளையும் குறித்திருக்கின்றனர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை, மைசூர் வரலாற்றோடு மிகத் தொடர்புடைய சுவார்ட்சு பாதிரியார் (1726—1798) கொங்கு நாட்டின் பல இடங்களைப் பார்த்துக் குறிப்பெழுதி வைத்துள்ளார். அவர் 1779ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் நாள் பவானிக்கும் ஈரோட்டிற்கும் வந்துள்ளார். 1769இல் முதல் மைசூர்ப் போர் முடிந்து ஐதர் அலியும் ஆங்கிலேயரும் 11 ஆண்டுக் காலம் (1780 வரை) நட்புறவோடு இருந்த காலம் அது. அப்போது காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் புகழ்ந்துள்ளார் சுவார்ட்சு பாதிரியார்.
புக்கானன்
நான்காம் மைசூர்ப் போர் 1799இல் முற்றுப் பெற்றது. அவ்வாண்டு ஏற்பட்ட சீரங்கப்பட்டணம் வீழ்ச்சியில் (4-5-1799) பெருவீரனாகிய திப்பு மறைந்தான். அவன் மறைவிற்குப் பின் கொங்குநாடு முழுவதும் ஆங்கிலேயர் கைக்கு மாறிவிட்டது. உடனடியாகக் கொங்குநாடு இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. நொய்யலாற்றின் தெற்கே ஒரு பிரிவையும் நொய்யலாற்றின் வடக்கே ஒரு பிரிவையும் அமைத்தனர். தென் பிரிவிற்குத் தாராபுரமும், வட பிரிவிற்குப் பவானியும் தலைநகரங்களாக அமைக்கப்பட்டன. 6-7-1799இல் வடபிரிவிற்குக் கேப்டன் மாக்ளியாட்டும் (Captain Colonel W. Macleod) தென்பிரிவிற்கு ஹர்டிசும் (Hurdis) முதல் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இக்காலத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் டாக்டர் புக்கானன் என்ற ஆங்கில வரலாற்றாசிரியரைக் கொங்கு, கருநாடக, மலையாள நாடுகளுக்கு அனுப்பி அப்பகுதிகள் பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் ஆய்ந்து அறிக்கை அளிக்கும்படி நியமித்தார்கள்.
டாக்டர் புக்கானன் கோவை மாவட்டம் முழுவதையும் மைசூரையும் சுற்றிப் பார்த்து விரிவாக, “சென்னையிலிருந்து மைசூர் கன்னடம் மலபார் வழியாக யாத்திரை” (Journey from Madras through Mysore Canara and Malabar) என்ற அருமையான நூலொன்றினை எழுதியுள்ளார். 1800ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் யாத்திரையைத் தொடங்கிய புக்கானன் 1800ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ஈரோட்டிற்கு வந்துள்ளார். ஈரோட்டில்தான் காலிங்கராயன் கால்வாயைப் புக்கனான் பார்த்து மிக மகிழ்ந்திருக்கின்றார். அதன் வியத்தகு வேலைப்பாட்டைப் பார்த்து மெய்மறந்து நின்று விட்டார். பின் அதன் வரலாற்றினையும் இம்மாபெரும் பணியைச் செய்து முடித்த காலிங்கராயன் வரலாற்றையும் கேட்டறிந்தார். தன் குறிப்பில் ஈரோடு நகரத்தைப்பற்றியும் தான் கண்டு மகிழ்ந்த காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். அப்பகுதியைக் காண்போம்.
- “பவானியிலிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஓடுகிற கால்வாய் ஒரு சிறந்த வேலைப்பாடுள்ள கால்வாய். இதன் நீளம் 15 மணி
- பயணத் தூரம். பாசன நில அளவின் பரப்பு பல இடங்களில் பலவகையாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் (ஈரோட்டில்) ஒருசிறு பாலத்தின் மேல் இக்கால்வாய் ஓடுகிறது. முன்பு இக்கால்வாய் கரூர்வரை இருந்ததாகவும் நொய்யலாற்றை ஒரு பாலத்தின் வழியாகக் கடந்தது. இது ஒரு அருமையான வேலைப்பாடாக அமைந்துள்ளது. இக்கால்வாய்ப் பணி முழுவதும் காலிங்கராய வேளாளர் என்பவரால் செய்யப்பட்டது. அவர் ஒரு செல்வராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் இருந்த காரணத்தால் தன் சாதி மக்களிடம் இருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தைத் திரட்டினார். இது சற்றேறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
- அவரது சந்ததியினர் இப்பொழுது இல்லை. அவரது குடும்பத்தினர் இச்சிறந்த பணிக்காக நிலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை.
- சற்றேறக்குறைய 1045 ‘மா’ நிலங்கள் அதாவது 3459 ஏக்கர்கள் இக்கால்வாயினால் பாசனவசதி பெறுகிறது. புன்செய் நிலம், ஏறக்குறைய 1713 ஏக்கர் கள் (400 புல்லாக்கள்) இருக்கின்றன”
அக்காலத்தில் (1800) மைல் பழக்கத்திற்கு வரவில்லை. அதனால் 15 மணி மலபார் பயணத்தூரம் என்கின்றார். அத்தூரம் சுமார் 60 மைல்கள் ஆகும்.
புல்லா என்பது 1 வள்ளம் ஆகும். 1 வள்ளம் 4 ஏக்கருக்குச் சமம். எனவே 400 புல்லாக்கள் ஏறக்குறைய 1600 ஏக்கர்கள் ஆகும்.
மெக்கென்சி
கர்னல் மெக்கென்சி இந்தியாவின் நில அளவுத்தலைமை இயக்குநராகப் பதவியேற்றவர் (1753-1821). வரலாற்று உணர்ச்சி மிகுந்த அவர் தமிழகத்தில் இருந்த பொழுது எண்ணற்ற கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகளையும், பாளையக்காரர்களின் பரம்பரை பற்றிய செய்திகளையும், ஓலைச்சுவடிகளையும், பிற எண்ணற்ற புராண, இலக்கிய வரலாற்றுச் செய்திகளையும் பொருள்களையும் பல மொழிகள் தெரிந்த ஆட்களைக் கொண்டு கம்பெனியார் உதவியின்றி அவர் சொந்தப் பணத்தில் ஏறக்குறைய ரூ 15,000 செலவில் தொகுத்து வைத்தார். அவைகளில் காலிங்கராயன் பரம்பரையில் வந்த குமரசாமிக் காலிங்கராயர் தம் பரம்பரைபற்றி எழுதிக் கொடுத்த குறிப்பும் ஒன்றாக இருக்கின்றது. காலிங்கராயனைப் பற்றியும் கால்வாயைப் பற்றியும் பல அரிய குறிப்புக்களை நாம் அதில் காணலாம். அதன் நகல் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இன்றும் உள்ளது. அதன் தலைப்பு “Calinga Ray Gauunden pattagar of uootoocoolie in Malabar” என உள்ளது. அந்த ஆவணம் முழுமையாக இந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது.
ரௌட்டன்
பவானி ஆற்றைப் பற்றியும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றியும் ரௌட்டன் 1845ஆம் ஆண்டு பல சுவையான புள்ளி விவரங்களைத் தருகின்றார்.
- “காலிங்கராயன் அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412.48 அடி உயரம். இடையில் உள்ள தூரம் 32 மைல். பவானியிலிருந்து தெற்காகவும் தென்கிழக்காகவும் மைலுக்கு 3.79 அடி தாழ்வாகக் கால்வாய் ஓடுகிறது. காலிங்கராயன் கால்வாயின் நீளம் ஏறக்குறைய 57 மைல். கால்வாய் நீர் 8866 ஏக்கர்களுக்குப் பாய்கிறது. காலிங்கராயன் கால்வாயில் 1840 மதகுகள் இருக்கின்றன. ஒரு மதகிலிருந்து செல்லும் நீர் 4.8 ஏக்கர் பாய்கிறது. மதகுகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன. பல இடங்களில் அவைகள்
- அடுத்தடுத்து மிகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. அதனால் புது மதகுகள் எதுவும் ஏற்படுத்த முடிவதில்லை. கால்வாயின் 1,2,3,6,9,16ஆம் மைல்களில் பல மண் மதகுகள் இருக்கின்றன. 3,9,15,25,34,36,39,41,47ஆம் மைல்களில் காட்டாறுகள் வந்து கால்வாயோடு கலக்கின்றன.”
ஹன்னான்
காலிங்கராயன் கால்வாயிலுள்ள சில குறைகளையும் சுட்டிக் காட்டுகின்றார் ஹன்னான்.
- “கால்வாய் முழுவதிலும் நேரடியாகவே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச வசதியாகப் பல மதகுகள் இருக்கின்றன. இந்த மதகுகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சிறு கிளைக்கால்வாய்களை அமைத்து நீர் பாய்ச்சினால் இன்னும் ஏராளமான நிலங்கட்கு நீர் பாய்ச்ச முடியும். இக்கால்வாயிலுள்ள மிகப் பெரிய குறைபாடு அது மிகப் பெரியதாக இருப்பதே”
என்று குறிப்பிடுகின்றார்.
- “தொடக்கத்தில் 30,000 ஏக்கர்கள் பாயவேண்டியதற்கு மேல் தண்ணீர் வருகிறது; ஆனால் கால்வாயின் கடைசியில் மிகக் குறைந்த தண்ணீரே செல்கிறது. வாய்க்கால் பெரியது. ஆனால் அதனால் அடையும் பயனோ மிகக் குறைவு”
வெட்டர்பர்ன்
இவர் ஓர் அற்புதமான திட்டத்தைத் தந்துள்ளார்.
- “30,000 ஏக்கர்களுக்கு மேல் பாயக்கூடிய அளவு தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது. ஆனால் பெரும்பகுதித் தண்ணீர் வீணாகிறது” என்று ஹன்னான் கூறிய குறையை நீக்கவே இத்திட்டத்தைத் தயாரித்துள்ளார் என்றறிகின்றோம். காலிங்கராயன் கால்வாய் இப்பொழுது நொய்யல்வரைதான் செல்லுகிறது. கால்வாய் இறுதியில் நொய்யலாற்றில் கலக்கிறது. ஒரு கால்வாயின் வழியாக மீதியாகும் தண்ணீரை நொய்யலைக் கடந்து செல்லச் செய்து அமராவதி (கரூர்) வரை கொண்டு சென்றால் புதிதாக 13,000 ஏக்கர்கள் பாயும்” என்று காலிங்கராயன் விரிவுத்திட்டத்தை 21-3-1872ஆம் ஆண்டு ரூபாய் 8,71,000 செலவில் தயாரித்துக் கொடுத்தார் வெட்டர்பர்ன். அரசு அனுமதி கொடுத்தும் போதிய பணம் இல்லாத காரணத்தால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் இத்திட்டம் எவருடைய நினைவிற்கும் இன்றுவரை வரவில்லை.
அருண்டேல்
காலிங்கராயன் கால்வாயிலுள்ள சிறு குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றார் கோவை மாவட்டத் தலைவராக இருந்த அருண்டேல்.
- “காலிங்கராயன் அணையின் தலை மதகிலேயே 20 அல்லது 30 ஏக்கர்கள் பாய்வேண்டிய நீர் வருகிறது. ஆனால் இரவும் பகலும் இடைவிடாமல் தலை மதகில் நீர் பாய்ந்தும் வளப்படுத்துகின்ற நிலப்பகுதி 2 அல்லது 3 ஏக்கர்தான். மற்றத் தண்ணீர் அனைத்தும் கழிவு நீராக வீணாகச் செல்லுகிறது”
என்று வருந்துகின்றார் அருண்டேல். மதகுகளைப் பற்றியும் பின் வருமாறு கூறுகின்றார்.
- “காலிங்கராயன் கால்வாயில் பல மதகுகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுவாக அணையின் அருகில் தலைப்புக் கால்வாயில் இருக்கும் மதகுகளே அவ்வாறு மிக மோசமாக இருக்கின்றன. உறுதியற்ற சாதாரணக் கற்களாலும் மண்ணாலும் ஒரு சுரங்கம் போலக்
- காலிங்கராயன் கால்வாயின் மதகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கடுமழை பெய்தது. அதன் காரணமாகக் கால்வாயின் முதல் 7 மைலுக்குள்ளாகவே இருக்கும் 17 மதகுகள் உடைத்துக் கொண்டன.”
பவானியில் பிற அணைகள்
1850ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்பவர் பல திட்டங்களை அளித்துள்ளார். மாண்ட் கோமரியும் (1828) மீடு பென்னிகுக் அட்ரி குழுவினரும் (1878) மார்கனும் (1883) காலிங்கராயன் அணையையும் கால்வாயையும் பார்வையிட்டனர். பவானியாற்றில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுமாறு பரிந்துரை செய்தனர். சத்தியமங்கலத்தின் மேற்கே 4 ஆவது கல்லில் பவானியாற்றைத் தடுத்து அணை கட்டினால் தாராபுரம், பல்லடம் தாலூக்காப் பகுதியில் 50,000 ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என்று மாண்ட் கோமரி குறிப்பிடுகின்றார்.
இத்திட்டம் பொதுப்பணித் துறையில் ‘மேல் பவானித் திட்டம்’ (Upper Bhavani project) என அழைக்கப்பட்டது. இது பின்னர்க் ‘கீழ் பவானித் திட்டம்’ (Lower Bhavani project) எனப்படும் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. கீழ்பவானிக் கால்வால் 1952 செப்டம்பர் மாதம் பூர்த்தி ஆயிற்று. பாசனம் பெறும் நிலம் 2,07,000 ஏக்கர்கள்.
பவானி ஆற்றில் பல்வேறு தடுப்புக்களை (கலிங்குகளை) ஏற்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களுக்குப் பாய்ச்சும் வண்ணம் நீர் கிடைக்கும் என்று கூறினர் அட்ரி குழுவினர்.
அட்டபாடி என்னும் அமைதிப் பள்ளத்திலிருந்து வரும் பவானியைத் தடுத்து மாயாறு என்னும் பள்ளத்தாக்கினிடையில் போளுவாம்பட்டி அருகே அணை கட்டவேண்டும் என்றார் மார்கன்.
சில குறிப்புக்கள்
கோவை மாவட்டக் கெசட்டியர், மானுவல் போன்ற நூல்களிலும், இந்தியாவை ஆண்ட நிலக்கிழார்கள் பற்றிய ஆங்கில வரலாற்று நூலிலும், முத்துசாமிக் கோனாரின் ‘கொங்கு நாடு’ என்ற நூலிலும் காலிங்கராயன் கால்வாயைப் பற்றிய குறிப்பைக் காணுகின்றோம். கொங்கு நாட்டின் முதல்தரமான கால்வாய் ஆகிய இதன் கரையின் எல்லா இடங்களும் சோழ நாட்டைப் போன்ற மிக வளம் பொருந்தியதாகக் காணப்படுகின்றன. கி.பி. 1799இல் கொளாநல்லிக்கு அப்பால் உள்ள கரையின் பெரும்பகுதி உடைந்துவிட்டது. கொளாநல்லிக்கு அப்பால் தண்ணீரே செல்லவில்லை. அதனால்தான் புக்கானன் 1800ஆம் ஆண்டில் 3459 ஏக்கர்கள் பாய்ந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
1840 மதகுகளில் 1762 முதல் 1799 வரை ஐதர், திப்புவிற்கும் ஆங்கிலேயர்க்கும் நடைபெற்ற போரில் பல மதகுகள் சீர்குலைந்து சிதைந்துவிட்டன. காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் எடுத்த ஓர் அளவையில் நீர் பாயும் நிலங்களில் 31% வண்டல் கலந்த களிமண் என்றும், 68% செம்மண் என்றும், 1% மணல் என்றும் அறிகின்றோம்.
1880இல் 7545 ஏக்கர்கள் தாம் நீர் பாய்ந்தது. ஆனால் இப்பொழுது 15,743 ஏக்கர்கள் நேரடியாக நீர்வளம் பெறுகிறது. பதிவு செய்யப் பெறாத வகையிலும், வலப்புறப் பாசனத்திலும் 5400 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன. மொத்தம் 21,143 ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.
கால்வாயின் நீளம் 56 மைல் 5 பர்லாங்கு 350 அடி ஆகும். வினாடிக்கு 650 கியூசெக்ஸ் தண்ணீர் அணையிலிருந்து விடப்படுகிறது.
காலிங்கராயன் பாளையம் காலிங்கராயன்
கால்வாய்ப் பாலக் கல்வெட்டு
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் துறூறி துரையும் பொறியாளர் பேப்பர் துரையும் 1832இல் கால்வாயைப் பழுது பார்த்த விபரத்தை இக்கல்வெட்டுக் கூறுகிறது.
மகாராச ஸ்ரீ கனம் பொருந்திய
கும்பினியாரவர்கள் நாளில்
ஜி.டி. துறூறி துரையவர்களுடைய
பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில்
பேபர் துரையவர்கள்
சிவிலிஞ்சினீரில்
அசூர் மராமத்து
சூப்பரிண்டெண்டு
சுப்பராயர்னாலே யிந்த
பாலம் பாகல்வாடம் பூர்த்தியாய்
கட்டலாச்சுது
கொம்பணைக் கல்வெட்டு
மகாராஜஸ்ரீ கனம் பொரிந்திய
கும்பினியாரவர்கள் நாளில்
ஜார்ஜி தூநூரி துரையவர்கள்
பெர்ன்சிபல் கலக்ட்டர் அதிகாரத்தில்
பேபர் துரையவர்கள் சிவிலிஞ்சினீரில்
அசூர் மராமத்து சூபிரிண்டெண்டாண்டு
சுப்பராயர்நாயே யிந்த கீழ்பாலம்
பூர்த்தியாய் கட்டலாச்சுது
1303 ஹு சப்டம்பர் மீ