காலிங்கராயன் கால்வாய்/009
வாழையடி வாழை
வெள்ளோட்டுக் கனகபுரம் சாத்தந்தை குல நஞ்சையன் மகன் லிங்கையன் கொங்குப் பாண்டியரின் உயர் அலுவலனாகிக் கொங்கு நாட்டின் அதிகாரம் செலுத்தி வரும் நாளில் மேல்கரைப் பூந்துறை நாடு, மேல்கரை அரைய நாடுகளின் சில பகுதிகள் வளம்பெறக் காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாயும் வெட்டி வைத்தார் என்பது வரலாற்று ஆய்வில் கண்டறிந்த உண்மையாகும். இம்மாபெரும் அறப்பணி கி.பி. 1265 வாக்கில் முடிந்திருக்க வேண்டும் என்றும் முன்பு கண்டோம்.
கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையினர் யார்? அவர்கள் இப்போது எங்குள்ளனர்? என்று அறிந்து கொள்வதும் சிறப்புமிகு அப்பரம்பரை பற்றிய பிற்கால வரலாற்றை அறிவதும் இன்றியமையாததாகும்.
புக்கானன் 7-11-1800இல் ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் பாராட்டிவிட்டு ‘அவர் குடும்ப இன்று இல்லை’ என்று எழுதியுள்ளார். ஆனால் 1-3-1798இல் எழுதப்பட்ட பாலக்காட்டுக் கோட்டைக் கம்பெனிப் படையின் தளபதி எழுதிய கடிதத்திலும், மக்கென்சியின் கைபீதிலும் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையில் வந்த 29ஆவது பாளையக்காரரான குமாரசாமிக் காலிங்கராயர் பற்றிய செய்திகளையும் அவர் கையெழுத்தையும் காணுகின்றோம். எனவே புக்கானன் காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அதாவது அவர் கால்வாயைக் கண்ட ஈரோட்டுப் பகுதியில் அதை வெட்டியவர் குடும்பம் இல்லை என்று கூறுவதாகவே நாம் கொள்ள வேண்டும்.
சேரமான் பெருமாள் காலத்தில் காவடிக்கா நாட்டுப் பகுதியில் காலிங்கராயன் குடும்பத்தினருக்குக் கொடையாகப் பூமி அளிக்கப்பட்டிருந்தது. அந்நிலத்தில் மாட்டுப் பண்ணை இருந்தது. ஏராளமான மாடுகள் அங்கு இருந்தன. மாடுகள் தண்ணீர் குடிக்க ஊற்றுக் குழிகள் தோண்டியிருந்தனர். அப்பகுதிக்கே காலிங்கராயன் குடும்பத்தினர் குடியேறினர்.
குல தெய்வமாம் அகத்தூர் அம்மனை எடுத்துக் கொண்டு தன்னுடன் வந்த பங்காளிகள் பலருடன் ஊற்றுக் குழிப் பகுதியில் குடியேறி ஆலயம் கட்டி அரண்மனை அமைத்துப் பண்டைய அரசர்போல் காடு கொன்று நாடாக்கிக் குளம் தோண்டி வளம் பெருக்கி நல்லாட்சி புரிந்து நாடு காத்தனர் காலிங்கராயன் மரபினர்.
வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் காலத்தில் அவர்கள் அலுவலராகிய காலிங்கராயர் பரம்பரைக்கு நல்ல மதிப்பு இருந்தது. பாண்டியர் ஆட்சி மறைந்து ஒய்சளர் ஆட்சி கொங்குப் பகுதியில் ஏற்பட்டபின் காலிங்கராயன் குடும்பத்திற்கு ஏனைய பட்டக்காரர், பாளையக்காரர்கள் தங்களுக்கு அளிக்கும் மதிப்புக்களையும் மரியாதைகளையும் பரம்பரைப் பாளையக்காரர் அல்லாத காலிங்கராயர் குடும்பத்திற்கு அளிக்கக்கூடாது என்று கூறினர்.
இதைக் கண்டு மனம் பொறுக்காத காலிங்கராயர் பரம்பரையினர் காவடிக்கா நாட்டுப் பகுதிக்குச் சென்று விட்டனர். இதனைக் காலிங்கராயர் கைபீது பின்வருமாறு கூறுகிறது.
- ‘இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டு வரும் நாளையிலே கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களாய் இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும்,
- சரி மரியாதைகளும் கொடுக்கப்படாது என்று சொன்னதினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்குக் காவிடிக்கை நாட்டுப் பிறவுதவம் பண்ணிக் கொடுத்து இருக்கிற படியினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்டபடியினாலே வெள்ளோடு விட்டு மனவெறுப்பினாலே ஆனைமலைச் சருவிலே தங்கள் காணி ஆட்சியான காவிடிக்கா நாடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்த மாடுகளைச் சம்ரட்சனை பண்ணுகிறதுக்காகத் தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டு வனத்துக்கு வந்து...தம்முடைய மாட்டுப்பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக் குழிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊருகட்டிவச்சபடியினாலே ஊற்றுக்குழி என்ற கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவராய் இருந்தார்கள்'
இச்செய்தி ஊத்துக்குழி அகத்தூரம்மன் கோயில் கல்வெட்டு மூலமாகவும் உறுதிப்படுகிறது.
கால்வாய் வெட்டிய காலிங்கராயனுக்குப் பின் அக்குடும்பத்தில் வந்த அனைவரும் காலிங்கராயர் என்றே பெயர் தரித்துக் கொண்டனர்.
பூந்துறை நாட்டை விட்டு ஊத்துக்குழி சென்ற காலிங்கராயர் தமிழகமெங்கும் யாத்திரை செய்தார். கொங்கேழு சிவாலயங்களை வணங்கினார். பல தானதருமங்கள் செய்தார். ஊத்துக்குழியில் அகத்தூர் அம்மன் ஆலயத்தைக் கட்டினார். வடக்கே யாத்திரை சென்று ஒய்சள மன்னனிடம் பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார்.
தமக்கு உரிமையான நிலத்திற்கு எல்லைகளை வகுத்து அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டார்.
எல்லைப்பள்ளத்திற்குத் தெற்கும் பொன்குலுக்கி நாடு தாளக்கரைப் பள்ளத்திற்கு மேற்கும் மணியாறு கம்பளத் துறைக்குக் கிழக்கும் நல்லுருக்கா நாடு பாலாற்றுக்கு வடக்கும் அவர் நிலம் இருந்தது. கிழக்கு மேற்காக நான்கு காத தூரமும் தெற்கு வடக்காக 2 காத தூரமும் காலிங்கராயனுக்கு உரிய நிலப்பகுதிகளாக இருந்தன. அப்பகுதியே அவருக்குரிய பாளையமாக அமைந்தது.
முதல் காலிங்கராயன் காலத்திலிருந்து அவர் பரம்பரையில் வந்த பலரும் இந்நிலத்தின் உரிமைகளை அனுபவித்துக் கொண்டு பாளையக்காரர்களாக ஊத்துக்குழியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் முதல் காலிங்கராயர் காலத்திலிருந்து முறையாகப் பாளையப் பொறுப்பை ஏற்ற எல்லாப் பாளையக்காரர் பெயர்களையும் வரிசையாகக் கூறுகின்றன. இரண்டிலும் பெயர்கள் ஒத்து வருகின்றன.
1. காலிங்கராயர்
2. நஞ்சைய காலிங்கராயர்
3. அகத்தூர் காலிங்கராயர்
4. நஞ்சைய காலிங்கராயர்
5. காலிங்கராயர்
6. நஞ்சைய காலிங்கராயர்
7. அகத்தூர் காலிங்கராயர்
8. காலிங்கராயர்
9. பராக்கிரம நஞ்சைய காலிங்கராயர்
10. அகத்தூர் காலிங்கராயர்
11. காலிங்கராயர்
12. நஞ்சைய காலிங்கராயர்
13. விருமாண்ட காலிங்கராயர்
14. அகத்தூர் காலிங்கராயர்
15. காலிங்கராயர்
16. ஈசுவரமூர்த்திக் காலிங்கராயர்
17. காலிங்கராயர்
18. அகத்தூர் காலிங்கராயர்
19. விருமாண்டக் காலிங்கராயர்
20. பிள்ளை முத்துக் காலிங்கராயர்
21. சின்னைய காலிங்கராயர்
22. காலிங்கராயர்
23. நஞ்சைய காலிங்கராயர்
24. காலிங்கராயர்
25. நஞ்சைய காலிங்கராயர்
26. காலிங்கராயர்
27. நஞ்சைய காலிங்கராயர்
28. அகத்தூர் காலிங்கராயர்
29. குமாரசாமிக் காலிங்கராயர்
30. முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர்
31. முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர்
32. சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர்
33. முத்துராமசாமிக் காலிங்கராயர்
34. அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர்
35. அகத்தூர் முத்து இராமசாமிக் காலிங்கராயர்
இவர்களில் மூத்த பிள்ளைதான் பாளையக்காரராகப் பட்டமேற்கும் வழக்கம் ஏற்பட்டது. பட்டத்திற்குரியவராகும் மகன் ஒருவருக்கு இல்லாமலிருந்தால் அவருடைய தம்பி பட்டமேற்றார். 7,14,25,28,33ஆம் பாளையக்காரர்கள் தம்பியாக இருந்து பட்டம் எய்தியவர்களாவார்கள். தந்தை பாளையக்காரராக இருந்தால் மூத்த மகனுக்கு ‘குமார பாளையக்காரர்’ என்று பட்டம் சூட்டுவதும் உண்டு. பாளைய நிர்வாகப் பொறுப்பில் அவர்களுக்குப் பயிற்சி ஏற்பட இது மிகச் சிறந்த முறையாகக் கையாளப்பட்டது.
இரண்டாவது பாளையக்காரர் முதல் 8ஆவது பாளையக்காரர் வரை அமைதியாக இருந்து அவ்வக்காலத்தில் ஆட்சி நடத்தும் அரசர்கள் குறிப்பறிந்து வரிவசூல் செய்து ஊத்துக் குழியில் வாழ்ந்து வந்தனர். 9ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டவர் மதுரை விசுவநாத நாயக்கர் ஆவார். எல்லாப் பாளையக்காரர்களையும் மதுரைக்கு அழைத்துப் பேட்டியளித்தார் விசுவநாத நாயக்கர். அக்காலத்தில் திருநெல்வேலிச் சீமையில் ‘அஞ்சு ராசாக்கள்’ (5 அரசர்கள்) கோட்டை கட்டிக்கொண்டு மதுரை நாயக்கருக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர். விசுவநாத நாயக்கர் ஆணைப்படி நஞ்சைய காலிங்கராயர் அவர்கள் ஐவரையும் போரில் அடக்கிச் சிறையெடுத்து மதுரைக்குக் கொண்டு வந்தார். நாயக்கர் காலிங்கராயரைப் பாராட்டிப் பல பரிசுகள் அளித்ததோடு ‘பராக்கிரமன்’ என்ற பட்டத்தையும் அளித்தார். மதுரைக் கோட்டையில் 51ஆம் கொத்தளத்துக்கு அவரைத் தலைவராக்கினான். பாளையத்தைச் சேர்ந்த கிராமங்களின் வரிகள் அனைத்தையும் நீக்கினான். 72 பாளையப்பட்டில் ஊத்துக்குழியை ஒன்றாக மதுரை நாயக்க அரசர்கள் நியமித்தது ஏனைய கொங்கு நாட்டுப் பட்டக்காரருக்கும் பாளையக்காரருக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
19ஆம் பாளையக்காரர் விருமாண்டக் காலிங்கராயர் காலத்தில் மதுரை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் போர் ஏற்பட்டது. அப்போர்கள் பெரும்பாலும் ஆனைமலை சூழ்ந்த கொங்குநாட்டுப் பகுதிகளுக்காகவே நடந்தது. எனவே தங்கள் அதிகாரத்தையும் நிலங்களின் உரிமைகளையும் காத்துக் கொள்வதே பாளையக்காரர்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. 22ஆம் பாளையக்காரர் வரைக்கும் இந்த நிலையே நீடித்தது.
23ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் ஆனைமலைப் பகுதி மைசூர் இம்முடி ராஜாவின் வசம் இருந்தது. நஞ்சைய காலிங்கராயர் குடகின் மீது படையெடுத்துக் கொண்டு சென்று மைசூருக்காகப் போராடி வென்றார்.
உள்ளம் உவந்து 8 கலசங்களுடன், தங்கப் பல்லக்கும், விலைமதிக்க முடியாத ஆடையணிகளும், 9 கிராமங்களில் 750 பொன் வரிச்சலுகையும் அளித்தார். அப்போது காலிங்கராயரிடம் 5000 காலாட்படையினரும் 5000 குதிரை வீரர்களும் இருந்தனர். ஒரு கடகம் யானைப் படையும் இருந்தது. இவரும் இவருக்குப் பின்னர் வந்தவர்களும் ஆனைமலையில் யானைகள் பிடித்து மைசூர் அரண்மனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டும், அரசர்களுக்கு வேண்டிய காலத்தில் உதவி செய்து கொண்டும் வாழ்ந்தனர். ஆனைமலையையும் மாச்சி நாயக்கன் குட்டையையும் காவல் காத்து வந்தனர். இவ்விடங்களின் வரிவசூல் உரிமைகைளும் இவர்கள் வசமே இருந்தன. எனினும் அரசர்கள் மாறும்போது பாளையக்காரர்களுக்குச் சில தொல்லைகள் இருந்தன. இக்காலத்தில் காவல் படையிலும் பாதி அழிந்து விட்டது.
26ஆம் பாளையக்காரர் கோழிக்கோடு அரசர்மீது போர் தொடுத்துத் தோல்வியடைந்த போதும் ஆனை மலை மீதுள்ள உரிமையை விடவில்லை. அவர் காலம் வரை வரி வசூலிக்கும் உரிமை இருந்தது.
27, 28ஆம் பாளையக்காரர்கள் காலத்தில் ஐதர் அலியின் படைகள் கொங்கு நாட்டில் கொள்ளையடித்தன, கொலைகள் புரிந்தன. வரி வசூலிக்கும் உரிமைகள் அனைத்தும் எல்லாப் பாளையக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. கி.பி. 1769 முதல் 1799ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த குமாரசாமிக் காலிங்கராயர் காலத்திலும் ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தானின் தொல்லைகள் மிகுந்தன. எனவே, திப்புவை ஒழிக்க அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாரோடு சேர்ந்து கொண்டார். குமாரசாமிக் காலிங்கராயரைப் போலவே மற்றக் கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் பெரும்பாலும் திப்புவின் தொல்லைகள் பொறுக்க மாட்டாமல் திப்புவை ஒழிக்க ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணம், படை போன்றவைகளை அளித்து எல்லா உதவிகளையும் செய்தனர். அனைவரும் ‘கும்பினி சர்க்கார் அதிகாரம்’ நாட்டில் நிலைக்கத் துணைபுரிந்தனர். இதற்கான பல சான்றுகள் சென்னை அரசினர் பழஞ்சுவடிச் சாலையில் இருக்கின்றன. இறுதியில் திப்புவின் ஆட்சி ஒழிக்கப்பட்டபோது, தம் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையைக் குமாரசாமிக் காலிங்கராயர் பெற்றார். ஆனால் வசூலில் 10இல் 7 பங்கைக் கம்பெனிக்கு அளித்துவிட வேண்டிவந்தது. 10இல் 3 பங்கையே காலிங்கராயர் பரம்பரையினர் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் இருந்தது. 30ஆம் பாளையக்காரர் முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர் நாளிலும் அவ்வாறே நடந்தது. ஜமீன் எல்லைக்குள் 19ஆம் நூற்றாண்டில் 10 கிராமங்கள் அடங்கியிருந்தன. 10,600 ரூபாய் வசூல் ஆயிற்று. அரசுக்கு 4393 ரூபாய் அளிக்கப்பட்டது. இது பிற்கால நிலை.
31ஆம் பாளையக்காரர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 1832இல் பிறந்தார். அவர் பட்டத்திற்கு வந்தவுடன் ஆனைமலை, மாச்சி நாய்க்கன்குட்டை போன்ற இடங்களில் சில பகுதிகளை விலைக்கு வாங்கினார். அங்கு மாளிகைகளையும் கட்டினார். இவர் சிறுவராய் இருக்கும்பொழுதே இவர் தாயார் நஞ்சையம்மாள் தன் சேமிப்புப் பணத்தைக் கொண்டு அம்பராம் பாளையத்தில் ஒரு பெரிய மாடி வீட்டைக் கட்டினார். அது பிற்காலத்தில் தங்கும் சத்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. இவர் 23-4-1874 ஆம் ஆண்டு காலமானார்.
அடுத்து 32ஆம் பாளையக்காரராகச் சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர் பட்டத்திற்கு வந்தார். ஜமீன் காரியங்களில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சில புதுக்கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். தமிழில் மிகப் புலமை கொண்ட அவர் ஆங்கிலத்தையும் தனியாக ஓர் ஆசிரியரிடம் கற்றார். வேதாந்த ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இரண்டாம் சந்திர குப்தரும் ஹர்ஷரும் அக்பரும் தமிழகத்து மன்னர்களில் பலரும் எப்பொழுதும் வேதாந்த வல்லுநர்களைத் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தது போல இவரும் வேதாந்தப் பண்டிதர்களையும் தமிழ்ப் புலவர்களையும் தம் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தார். எனவே இவரை அனை வரும் ‘வேதாந்த துரை’ என்றழைத்தனர். 7 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த இவர் 1881 ஆம் ஆண்டு காலமானார்.
பின்னர் இவருடைய தம்பி முத்துராமசாமிக் காலிங்கராயர் 33ஆம் பாளையக்காரர் ஆனார். இவர் 24-1-1864இல் பிறந்தார். 17ஆம் வயதில் பாளையக்காரர் ஆனார். இவர் இளமையில் குதிரை ஏற்றத்திலும் வேட்டையாடுவதிலும் சிறந்து விளங்கினார். மற்போரிலும் உடற்பயிற்சியிலும் ஆர்வம் காட்டினார். இசையை முறையாகக் கற்றதோடு சிறந்த இசைப் புலவர்களையும் ஆதரித்தார். பாளையக்காரரானவுடன் திரு ரைட் என்ற ஆங்கிலேயரிடம் தனியாக ஆங்கிலம் கற்றார். அரண்மனையை அழகுபடுத்துவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஜமீன் வருமானத்தை உயர்த்தினார். இவர் செய்த எல்லாச் சிறந்த பணிக்கும் திருவனந்தபுரம் மானுப்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார்.
புலவர்க்கு என்றும் ஓய்விலாது உதவு கீர்த்தி ஓங்க வாழ்பவர் சமத்தூர்க் குறுநில மன்னர் வானவராயர் மரபினர். சேர அரசிடம் வானவராயர் பட்டம் பெற்றவர்கள். வணங்காமுடிப் பட்டம் பெற்ற அவர்கள் கொங்கு வேளாளரில் பவள குலத்தின் பண்புடைத் தலைவர்கள். 1894இல் சமத்தூர்ப் பாளையக்காரர் வானவராயர் நோய்வாய்ப்பட்டார். ஊத்துக்குழிப்பாளையக்காரருக்கு உறவினரான சமத்தூர்ப் பாளையக்காரர் தன்மகனை ஊத்துக்குழிப் பாளையக்காரரிடம் ஒப்படைத்தார். சமத்தூர்ப் பாளையக்காரரும் ஊத்துக்குழியில் தங்கியிருந்து 14-11-1895இல் காலமானார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஊத்துக்குழிப் பாளையக்காரரிடமே சமத்தூர்ப் பாளையம் இருக்கட்டும் என்று செய்த பரிவுரையை அரசு ஏற்றுக் கொண்டது. சமத்தூர் ஜமீன் வருமானத்தை உயர்த்திச் சீர்திருத்தங்கள் பல செய்து சமத்தூர் இளைய ஜமீன்தாருக்கும் தன் மகளுக்கும் 1901இல் மிகச் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
மைவாடி ஜமீன்தார் இறந்தவுடன் மாவட்ட நீதிபதியின் அதிகாரப் பொறுப்பிலிருந்த இந்த ஜமீனை அரசு வேண்டுகோள்படி 1898இல் அதன் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார். தாலூக்காக் கழகம், மாவட்டக் கழகம் இவைகளில் உறுப்பினராக இருந்தார். கோவை வேளாண்மைக் கல்லூரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல நிலையங்களுக்கும் விழாக்களுக்கும் ஆயிரக் கணக்கில் நன்கொடைகள் அளித்தார். 1912இல் ஊத்துக்குழியில் ஒரு தொடக்கப் பள்ளியை ஏற்படுத்தி 3000 ரூபாய் மானியம் அளித்ததுடன் மாத வருமானம் நிலைத்து மானியமாக வரவும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்.
மிகச் சிறந்த அறிவாளியான இவர் பணியாட்களிடமும் மிக அன்பாக நடந்து கொண்டார். 1910ஆம் ஆண்டு கொடிய பிளேக் நோய் உண்டானபோது அரிய பணிகள் பல புரிந்தார். இவருடைய பணியைப் பாராட்டிய அரசாங்கத்தினர் இவருக்கு 1913இல் திவான்பகதூர் பட்டமளித்துச் சிறப்பித்தனர். 1917இல் ஜமீன்தார்கள் பிரதிநிதியாக இந்திய அரசுச் செயலாளர் மாண்டேகுவையும் இந்திய வைசிராய் செம்சுபோர்டையும் சந்தித்தார்.
1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 19, 20 தேதிகளில் பிராமணரல்லாதோர் மாநாடு (Non-Brahmin Conference) கூட்டப்பட்டபோது, வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து முக்கியப் பங்கேற்றார். அவர் காலத்தில் நடத்தப்பட்ட நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தில் (South Indian Liberal Federation) உறுப்பினராக இருந்தார். இன்றைய தமிழக அரசியலுக்குக் கால்கோளாக இருந்த அந்த அமைப்புக்களைத் தோற்றுவித்துக் கட்டிக் காத்த பெருமை முத்துராமசாமிக் காலிங்கராயரையே சேரும்.
சென்னை ஜமீன்தார்கள் நிலக்கிழார்கள் சங்கத்தின் (Madras Zamindars and Landlords Association) துணைத் தலைவராக விளங்கினார். இவர் பொதுமக்களுக்காகப் பல்வேறு நன்கொடைகளைப் பெரிய அளவில் வழங்கினார்.
1. பிராமணரல்லாதோர் மாநாடு
2. இங்கிலாந்து இளவரசரின் திருமணம்
3. சென்னையில் அமைக்கப்பட்ட ராஜ்குமார் கல்லூரி
4. டாக்டர் நாயர் அவர்களின் நினைவு நிதி
5. குன்னூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம்
6. வேல்ஸ் இளவரசரின் வரவேற்புக்குழு
7. குன்னூரிலுள்ள லாலி மருத்துவமனை
ஆகியவற்றிற்குப் பெருந்தொகை வழங்கினார்.
இவர் 1918இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக் குன்னூர், கொடைக்கானலில் ஓய்வெடுத்து வந்தார். 1931இல் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார்.
கோவையில் முக்கியமான தெரு ஒன்றிற்குக் காலிங்கராயர் தெரு என்று பெயர் வைத்திருப்பது கோவை மக்களுக்கு இக்குடும்பத்தின் மீது இருந்த பற்றுக்கு எடுத்துக் காட்டாகும்.
34ஆவது பாளையக்காரராக வந்தவர் அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர். இளமையிலேயே தந்தை இருக்கும்போதே பல பொதுப்பணிகளில் ஈடுபட்டார். முதல் உலகப் பெரும் போரின்போது படைக்கு ஆட்களைச் சேர்ப்பதில் மிக உதவினார். கோவையில் கௌரவ நீதிபதியாக இருந்தார். படையில் பெரிய அதிகாரியாக இருக்கச் சென்னை ஆளுநரால் அழைக்கப்பட்டார். ஆனால் இவர் அப்பதவியில் சேரவில்லை. இவருடைய பணிகளைப் பாராட்டிப் பட்டங்களும் பதக்கங்களும் பல வழங்கப்பட்டன. 1932இல் வேல்ஸ் இளவரசர் சென்னை வந்தபோது அவரைச் சிறப்புடன் வரவேற்றார். நாடு போற்றும் நல்லோராக விளங்கிய இவர் 1936இல் மறைந்தார். இவருக்கு அளிக்கப்பட்ட பல பாராட்டுக்களில் மாதிரிக்காக இரண்டு இங்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
I
The Kumara Poligar of Uttukuli
Sri Agathur Muthu Krishnaswami Kalingarayar, the eldest son and heir, is now actually managing the affairs of the poliem after the retirement of his revered father. He took a leading part in the year 1919 in the recruitment of men for field service in Mesapatomia. He was appointed Honorary Assistant Recruiting Officer for the Pollachi Taluk. He recruited the largest number of men from Coimbatore District, especially in the Pollachi Taluk. He was awarded a certificate of Merit and a Medal for the valuable Services rendered in the recruitment of men for field service. The following is a copy of the badge and sannad presented;—
Recruiting badge awarded to M.R.Ry. Agathur Muthu Krishna Kalinga Rayar Avargal, Kumara Zamindar of Uttukuli and Member of the District Board, Coimbatore, the Services rendered in connection with recruiting during the great war.
10th December 1919.
Sd/- A.H. BINGLEY,
Major General,
Secretary to the Government of India,
Army Dept.
II
The Sanned is presented to M.R.Ry. Agathur Muthu Krishna Kalinga Rayar Avargal, Kumara Zamindar of Uttukuli by order of his excellency the Viceroy and Governor General of India in recognition of service rendered to the Indian Army during the great war and as a mark of approbation.
SIMLA
Dated: 3rd Aug. 1920.
Sd/- A.H. BINGLEY,
Major General,
Secretary to the Government of India,
Army Dept.
35 ஆவது பாளையக்காரராகப் பட்டமேற்றவர் உயர்திரு அகத்தூர் முத்துராமசாமிக் காலிங்கராயர் ஆவார்கள். 9-4-1918இல் அகத்தூர் முத்துக்கிருட்டிணசாமிக் காலிங்கராயருக்கும் சண்பகவல்லியம்மாளுக்கும் மகனாகப் பிறந்த இவர் 13-4-1936இல் ஜமீன் பட்டமேற்று வழிவழிப் பெருமைக்கு உரியவராயினர்.
இவருடன் பிறந்தவர்கள் திரு அருணகிரிக் காலிங்கராயர் திரு கதிர்வேல் காலிங்கராயர் என்னுமிருவராவர். இவருடைய சகோதரியார் திருமதி அகத்தூர் அம்மாள் அவர்கள் பழையகோட்டைப் பட்டக்காரர் திரு நல்ல சேனாதிபதிச் சர்க்கரை மன்றாடியார் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாராவார். பட்டக்காரர் அவர்களின் சகோதரியார் திருமதி ருக்மணி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்று வாழ்ந்த இல்வாழ்வில் மக்கட் செல்வங்களாகக் கிருஷ்ணராஜ் காலிங்கராயர், வெற்றிவேல் காலிங்கராயர், மோகன்ராஜ் காலிங்கராயர், அருண்குமார் காலிங்கராயர் எனும் நான்கு ஆண் மக்களும் சித்திரகலா காலிங்கராயர் என்ற பெண்ணும் உள்ளனர். மோகன்ராஜ் காலிங்கராயர் பொள்ளாச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அகத்தூர் முத்து ராமசாமிக் காலிங்கராயர் அவர்கள் தம் மைத்துனர் பழையகோட்டை இளவல் அர்ஜுனன் அவர்கள் போலவே பெரியார், அண்ணா ஆகியோர்மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கினார். சமூக சீர்திருத்தம், பொதுமைக் கொள்கை ஆகியவற்றின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மாவட்டத்தில் அரசியல் இயக்கங்களில் நேரடியாக ஈடுபடாமலேயே அவைகட்கு வழிகாட்டியாக விளங்கினார். அஞ்சாமையும், ஆற்றலும், பேரறிவும் கொண்டு பொதுப் பிரச்சனைகளை அணுகினார். கோவையில் அண்ணா சிலை நிறுவியது இவர்கள் முயற்சியாலே யாகும். அண்ணா நினைவாக இன்னும் பல நிறுவனங்களை ஏற்படுத்துவதாக இருந்தார். அதற்குள் அவர்கள் 20-11-1966 இல் அமரர் ஆனார்கள்.
ஊராட்சிக் கோட்டை மலை
கல் வந்த வழி
அணையில் கம்பி இணைப்பு
காலிங்கராயன் அணை
தலைப்பு மதகு
ஈரோடு - ஐயனாரப்பன் கோயில்
கால்வாய் காட்சி
நொய்யலில் கலத்தல்