உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/010

விக்கிமூலம் இலிருந்து

நிருவாகம் - அன்றும் இன்றும்

காலிங்கராயன் காலத்தில் கால்வாய்ப் பராமரிப்புக்குக் கொங்கு நாட்டில் ‘காலிங்கராய வினியோகம்’ என்ற வரி வசூலிக்கப்பட்டது. சோழநாட்டில் இதுபோன்று ‘காவிரிக்கரை வினியோகம்’ என்ற வரி வாங்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

ஆங்காங்கு இருக்கும் ஊர்ச்சபைகள் கால்வாய்க் கரைகளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் கவனித்துக் கொண்டன. அந்தந்தப் பகுதி விவசாயிகளே தங்கள் பகுதிக் கால்வாயைக் கண்காணித்துக் கொள்ளும் ‘குடிமராமத்து முறை’யும் சில காலங்களில் இருந்தது. பரம்பரைத் தொழிலாளர் பணியமர்ந்து கால்வாயைக் கண்காணிக்கும் வழக்கமும் இருந்தது.

கால்வாய் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக்காகவும் கால்வாய்ப் பராமரிப்புக்கும் பழங்காலத்தில் நெல்லாகத் தீர்வை வசூல் செய்யப்பட்டது. நெல்லாக அளிப்பதில் பல குறைகளும் சமச்சீரின்மையும் காணப்படவே தீர்வை காசாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது ஊரவை, நாடு, அரசுப் பங்குக்குக் காசாகக் கொடுக்கப்பட்ட பின்பும் கூட உள்ளூர்க் காவல்காரர், தலையாரி போன்ற கீழ்நிலை அலுவலர்கட்குத் தானியமாகவே கூலி கொடுக்கப்பட்டது.

இவ்வாறு வசூல் செய்யப்பட்ட தீர்வை, நிலங்களின் தரத்திற்கு ஏற்ப அமைந்திருந்தது. பாசனப் பகுதியில் நன்செய்க்கு 21¾ ரூபாயும் புன்செய்க்கு 13½ ரூபாயும் மானாவரிக்கு 123 ரூபாயும் வரியாகும். இப்பொழுது வேறுபாடு இன்றி எக்டேருச்கு (2.47 ஏக்கர்) 55½ ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தனிப்பாடல் ஒன்று பாரப்பத்தியம், மேல்மணியம், டபேதார், சுபேதார் இவர்கள் அணை, கால்வாய் நிருவாகிகள் என்றும், தாசில்தார் இவர்கட்கு மேல் அதிகாரி என்றும் இவர்கள் பொருட்டு செய்க்கு 5 வள்ளம் நெல் அளக்க வேண்டும் என்றும் கூறுகிறது. சிவிலிஞ்சினியர், பிரின்சிபல் கலெக்டர் ஆகியோர் இவர்களின் மேல் உயர் அதிகாரிகள் ஆவர். காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அப்பணிக்காகக் கொடுக்கப்படும் நெல் ‘அணை வள்ளம்’ என்னும் தனி அளவை மூலம் அளந்து தரப்பட்டது என்பதும் தெரிகிறது. அடிக்கடிப் பாலங்கள் பழுதுபார்த்துக் கால்வாய் மராமத்து வேலைகளும் நடக்கவேண்டும் எனக் கூறுகிறது அப்பாடல்.

அரசு, முத்திரைக் காகிதம் அவ்வப்போது அனுப்பும் என்றும், முத்திரைக் காகிதத்தில் கண்டுள்ளபடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றும் அதற்கு மாறுபட்டால் கையிழுத்துப் பிடித்து கடுந்தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக மதகைப் பிடுங்கி நீர் பாய்ச்சினால் 5 ரூபாய் அபராதம் போட்டுக் கழுத்தில் துடும்பு போட்டு அடித்து வாசியூர் (பாசூர்) முதல் ஆவுடையாபாறை வரை அவன் தவறு எல்லோருக்கும் தெரியும்படி செய்யப்படும்.

சுமார் 170 ஆண்டுகட்கு முன் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தில் கால்வாய் பொதுப் பணித்துறை நிருவாகத்தின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. இன்று வரை அணையையும் கால்வாயையும் பொதுப்பணித்துறையே நன்கு கவனித்து வருகிறது. பொதுப்பணித்துறை நிருவாகத்தின்கீழ் அணையும் கால்வாயும் வந்ததும் 1832இல் பல பகுதிகளில் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் அணைத்தோப்பு, காலிங்கராயன் பாளையம், கொம்பணை ஆகிய இடங்களில் உள்ளன. ஹி.டி. டுறாறி மாவட்ட ஆட்சித்தலைவராகவும் பேப்பர் துரை சிவில் எஞ்சினியராகவும் இருந்தபோது 1832-1833இல் சுப்பராயர் என்பவர் பாலங்கள் அமைத்ததாக அக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

1832, 1868, 1891, 1936, 1954, 1962, 1974 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. 1973-74 இல் 66 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. அதற்காகத் தனிப்பிரிவு ஏற்பட்டது. அத்தனிப் பிரிவு 30.6.1977ல் கலைக்கப்பட்டது .

காலிங்கராயன் கால்வாயில் மொத்தம் 769 மதகுகள் உள்ளன. இம்மதகுகள் யாவும் கால்வாயின் இடது பக்கத்தில் அமைந்துள்ளவையாகும். வலது பக்கம் பெரும்பாலும் நிலம் மேடாக இருக்கும் காரணத்தால் அடைக்கப்பெறாத குழாய் மூலமாகவோ அல்லது கால்வாயின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உயரமான துலைகளின் மூலமாகவோ மாடுகளைக் கொண்டு இறைத்து நீர்ப்பாசனம் செய்கிறார்கள். அண்மையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பலர் புதிதாக வலதுபுறம் வைத்துள்ளதால் முதலில் 1950 வரையிலும், பின்னர் 2-10-1961 வரையிலும், பின்னர் தற்போது 1984 வரையிலும் அவ்வாறு வைத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கினர். இப்போது 1984க்குப் பின்னர் இயந்திரம் பொருத்தியவர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது . 1962-73 வரை நீர் இறைக்கும் இயந்திரங்கள் 68% அதிகரித்துள்ளது. வலது புறம் அமைக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் மாடுகளுக்குப் பதிலாக அமைக்கப்பட்டதுதான். வேளாண்மையில் மாடுகட்குப் பதிலாக இயந்திரக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கருதி 2-12-1962 பொதுப்பணித்துறை ஆணை எண் 3339 இன்படி அனைவருக்கும் அனுமதி அளிக்கலாம். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

தலைப்பு மதகுகள் 1879 ஆம் ஆண்டு கட்டப்பட்டன.

காலிங்கராயன் கால்வாயில் அதிகபட்சம் உயரம் நீர் தேங்கி நிற்கும் அளவு 8 அடியாகும்.

காலிங்கராயன் கால்வாயில் முதலில் கல் மதகுகள் அமைக்கப்பட்டுப் பூட்டும் வசதியில்லாமல் தண்ணீரை நீர்ப்பாசனத்திற்கு உபயோகித்து வந்தார்கள். தற்போது ஒவ்வொரு மதகிற்கும் பூட்டும் வசதியுள்ளது. இதனால் தண்ணீர் சேதமாவது தடுக்கப்படுகிறது.

கால்வாயில் நீர் பகிர்ந்தளித்தலைக் கவனிக்க கால்வாயை நான்கு பகுதியாகப் பிரித்திருக்கின்றனர். முதல் பகுதிக்கு ஒரு நீர்ப்பதிவாளரும் இரண்டு நீராணிகளும் பொறுப்பாக உள்ளனர். அவர்கள் கால்வாயைக் கவனித்துக் கொண்டு நீர் பகிர்ந்தளித்தலையும் கவனிக்க வேண்டும். ஏனைய மூன்று பகுதிகட்கும் ஒரு கரைக் கண்காணிப்பாளரும் நீராணிகள் நால்வர் வீதமும் கவனித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு நீர்ப்பாசனத்திற்குத் தண்ணீர் அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6 மணி வரை பத்தரை மாதங்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். மிகத் தொன்மையான இப்பவானி யாற்று அணை மூலம் 16 மைலிலிருந்து 56½ மைல் வரை முப்போகத்திற்குக் காலிங்கராயன் கால்வாய்த் தண்ணீர் பெறுவது காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி உழவர்களின் அடிப்படைப் பூர்வீக உரிமையாகும். இது 2-11-1966 அன்று பொதுப்பணித்துறை வெளியிட்ட 2647 ஆம் எண் அரசு ஆணையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10½ மாதம் தண்ணீர் விடுவதை 9 மாதமாகக் குறைத்துப் பாசனத்தை இருபோகமாக்கித் தாராளமாகப் பாசனத்திற்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

கால்வாயில் ஆங்காங்கே சிறு ஓடைகள் மூலம் வெள்ள நீர் வந்து சேர்கிறது. அந்த நீரால் வாய்க்காலின் முழு அளவு நீர்மட்டம் உயர்ந்து கரைக்கு ஆபத்து உண்டாகும் நிலையில் இருந்தால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தாம்பாங்கிகள் எனப்படும் மணற்போக்கிகளின் மூலமாகப் போதிய அளவிற்குத் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டுக் கரை பாதுகாக்கப்படுகிறது. இப்போது அண்மையில் சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்ற இடங்களில் ஓடை நீர் கால்வாயில் கலக்காமல் மேலே செல்லவும் கால்வாய் கீழே குழாய் மூலம் செல்லவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் சைபன் எனப்படும் இத்திட்டம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதும் முக்கியமான இடங்களில் தேவையான பழுது பார்க்கப்படுகின்றன. அதற்காகத்தான் குறைந்தது 45 நாட்களாவது தண்ணீர் நிறுத்தப்படும்.

தொலைபேசித் தொடர்பு பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்பட்டுக் காசிபாளையம் அருகிலும் பவானி அணைக்கட்டிலும் ஈரோடு தலைமை அலுவலகத்திலும் இயங்குகிறது. அவ்வப்போது முக்கியமான செய்திகள் இருப்பின் தொலைபேசி மூலம் தொடர்புடைய அலுவலர்கட்கு அறிவிக்கப்படுகிறது. முழு அளவு நீர் மட்டத்தைக் குறிக்கும் அளவு கோல்கள் கால்வாயில் மொத்தம் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களிலிருந்தும் அன்றாட அளவு ஈரோட்டிலுள்ள தலைமை நிலையத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் பவானி அணைக்கட்டுக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. அச்செய்திகட்கு இணங்க அணைக் கட்டில் இருக்கும் நீர்ப்பதிவாளர் நீர் பகிர்ந்தளித்தலைச் செய்வார்.

ஒவ்வொரு நீராணியும் தன்னுடைய பகுதியில் உள்ள மதகுகளைக் கவனித்துக் கொள்வதுடன், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் தொடர்புடைய மேலதிகாரிகள் ஆணைக்கு இணங்க இரவு நேரங்களில் மதகுகளை அடைத்து வாய்க்காலின் கடைசிப் பாகத்திற்குத் தண்ணீர் சரியான அளவிற்குச் செல்லப் பொறுப்புடன் உதவி புரிகின்றார்கள். நீராணிகள் சரிவரக் கவனிக்கிறார்களா என்பதை மேற்பார்வையிட ஒரு கரைக் கண்காணிப்பாளர் உள்ளார். நீராணிகளையும் கரைக் கண்காணிப்பாளரையும் நீர்ப் பதிவாளரையும் கண்காணித்துக் கொள்ளப் பிரிவு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு பொதுப்பணித்துறைக் கோட்டத்தின் நிருவாகத்தில் உள்ள மேற்குச் சிறுகோட்டத்தினரால் இப்போது காலிங்கராயன் கால்வாய் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அத்துறையினரால் கீழ்க்கண்டவாறு காலிங்கராயன் கால்வாய் நிருவாகம் இன்று நடைபெறுகிறது,

             நிருவாகப் பொறியாளர்
                             ↓
        உதவிச் செயற் பொறியாளர்
                             ↓
   பிரிவு அதிகாரி அல்லது இளம் பொறியாளர்
                             ↓
நீர்ப்பதிவாளர் (அல்லது) கரை கண்காணிப்பாளர்
                             ↓
                         நீராணி

காலிங்கராயன் அணையில் கால்வாய்க்கு நீர்வரும் தலை மதகுகள் ஆறு கண்ணறைகளாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் அளவுகள் 6’.6”X4’.6” ஆகும்.

மணற்போக்கிகள் மூன்று கண்ணறைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அளவுகள் 6’.0”x4’.6” ஆகும்.

காலிங்கராயன் கால்வாயில் காலத்துக்குக் காலம் பல சீரமைப்புக்கள் செய்யப்பட்டுப் பொதுப்பணித்துறையில் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டும் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. பொதுப்பணித்துறையில் அவ்வப்போது பின்வரும் சீர்திருத்தங்கள் மிக நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது. 720 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான அணையையும் வெட்டிய கால்வாயையும் கண்மணியை இமைகள் காப்பதுபோல் பொதுப்பணித் துறையினர் அல்லும் பகலும் அயராது காத்து வருகின்றனர்.

பொதுப்பணித்துறை கீழ்வரும் சீரமைப்புக்களைச் செய்துள்ளது.

1. வாய்க்கால் சைபன் கட்டுதல்
2. ரெகுலேட்டர்கள் கட்டுதல்
3. வாய்க்காலினுள் மாதிரிக் கட்டிடங்கள் அமைத்தல் (Model Section)
4. நீர் வெளியேறும் பகுதிகள் கட்டுதல் (Out lets)
5. நீர் தேங்கிக் கீழிறங்கும் பகுதிகள் அமைத்தல் (Drops)
6. கரைகளை அகலப்படுத்திச் சாலைகள் அமைத்தல்
7. தூர் எடுத்தல்
8. கரைச் சரிவுகளில் கருங்கல் கட்டிடம் கட்டுதல் (Revetments)
9. கரைகளைப் பலப்படுத்துதல்
10. பின் தொட்டிகள் அமைத்தல் (Rear cisterns)
11. கால்வாயில் தேவைக்கேற்பத் தண்ணீரைத் தேக்கும் அமைப்பை ஏற்படுத்துதல் (Bed Regulaters)

இப்பணிகளால் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்பட்டுப் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க ஏதுவாகிறது. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி வேண்டிய தண்ணீரை நிறுத்தச் செய்து தேவைக்கு ஏற்பச் சமமான தண்ணீரைப் பங்கீடு செய்வதற்கு வழிவகைகள் அமைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மிகச்சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டுவரும் கால்வாய்களில் தலை சிறந்தது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.

தடப்பள்ளிக் கால்வாய் சீரமைக்கப்பட்ட போது அதில் உள்ள 448 மதகுகள் 316 ஆகக் குறைக்கப்பட்டன. அரக்கன் கோட்டைக் கால்வாயில் 207 மதகுகள் 70 ஆகக் குறைக்கப்பட்டன. காலிங்கராயன் கால்வாயில் உள்ள 789 (769+20) மதகுகளை 226 ஆகக் குறைக்க 73-74இல் பொதுப்பணித் துறையினரால் திட்டமிடப்பட்டது. ஆனால் விவசாயிகளின் தீவிர எதிர்ப்பால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கொடிவேரி அணையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களைப் பார்வையிட்டு, இன்னும் கொஞ்சம் மதகுகள் குறைப்பில் மாற்றம் செய்து இத்திட்டம் கொண்டுவந்தால் தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம். காலிங்கராயன் கால்வாயில் 18ஆம் நூற்றாண்டில் 1840 மதகுகள் இருந்தன. பின் அவை 769 ஆகக் குறைக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ளல் அவசியம்.

பாவனி ஆற்றின் நீளம் 104 மைல் ஆகும். ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி மலைப்பகுதியில் 640 சதுர மைல்கள். ஆற்றின் பயன்பாட்டுப் பகுதி சமவெளியில் 1730 சதுரமைல்கள் ஆகும்.

காலிங்கராயன் முக்கிய அணையின் நீளம் 757.00
சராசரி அளவு 541.15
வெள்ளத் தடுப்புக் கரை நீளம் 1740.00
வெள்ளத் தடுப்புக் கரை உச்சி அளவு 552.66
மைய அணைக்கட்டின் நீளம் 854.00
சராசரி அளவு 544.13
முரியான் அணைக்கட்டு நீளம் 1350.00
சராசரி அளவு 542.90
உயர்ந்த அளவு வெள்ள வருகை 9-12-72 548.05
உயர்ந்த அளவு தண்ணீர் வெளியேற்றம் 9-12-72 1267.77

காலிங்கராயன் கால்வாயில் சராசரி 11,000 Mc Ft. தண்ணீர் பாசனத்திற்காக விடப்படுகிறது.

பவானி ஆற்றில் அணைத் தோப்புக்குக் கிழக்கே ஆழமான ஆற்றுப் பகுதியில் தண்ணீர் செல்வதை முரியன் அணை தடுத்து மேற்குப் பக்கம் காலிங்கராயன் அணைப் பக்கம் தண்ணீரை அனுப்புகிறது. பவானியாற்றின் நடுவே கட்டப்பட்டிருக்கும் கலிங்கின் உதவியால் நீர்மட்டம் உயர்ந்து எளிதாகக் காலிங்கராயன் கால்வாய்க்குத் தண்ணீர் வருகிறது. மிக எளிய அமைப்பைத் திட்டமிட்டு 720 ஆண்டுகட்கு முன்பு தேர்ந்த பொறியியல் அறிவுடன் கட்டி முடித்த அணையும் கால்வாயும் அறிஞன் காலிங்கராயன் புகழ்பாடி சந்திரசூரியர் உள்ளவரை நின்று நிலைக்கும் என்பது திண்ணம்!

பேரரசர்கள், அரசர்கள் உருவாக்கிய கால்வாய்களைத் தமிழகமெங்கும் காணுகின்றோம். ஆனால் ஒரு சாதாரணக் குடிமகன் தன் அறிவாற்றலால் பதவி பெற்று நாடு நலம்பெற நன்செய் வளம் செழிக்க இவ்வாறு திட்டமிட்டுச் சொந்தப் பொறுப்பில் கால்வாய் வெட்டி அதனைப் பொதுவுடைமையாக்கி அனைவரின் பயனுக்கு விட்ட அரிய செயல் உலகில் வேறெங்கும் நடைபெற்றதில்லை.

கீழ்பவானி, கொடிவேரி போலப் பெரும்பாலும் அதிக நிலம் இல்லாமல் ½ ஏகர் ‘ஏக்கர்’ 2 ஏக்கர் உடைய விவசாயிகளே காலிங்கராயன் பகுதியில் அதிகம். தம் உழைப்பால் அவர்கள் பொன் கொழிக்கச் செய்கிறார்கள். இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தாற்போல் இங்குதான் கடுமையாக உழைத்து நல்ல வருமானம் பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/010&oldid=1841441" இலிருந்து மீள்விக்கப்பட்டது