உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/011

விக்கிமூலம் இலிருந்து

காலிங்கராயன் கரையில்

‘காடெல்லாம் சிறு செந்நெல் விளையும்’ என்று இலக்கியம் எடுத்துரைத்ததற்கு ஏற்பக் காலிங்கராயன் கால்வாயால் சிறப்பு மிக்க நீர்வளம் ஏற்பட்டு நிலவளம் பெருகி நன்செய் விளைவு ஏற்பட்டுள்ளது எல்லோரும் அறியும் உண்மையாகும்.

‘காலிங்கராயன் கடாட்சத்தி னாலே
சாலவே இந்தத் தரணியில் வாழும்
குடியானவர்கள்’

என்று ஈரோடு ஜயனாரப்பன் பள்ளு கூறுவதற்கு ஏற்பக் காலிங்கராயனால் ஏற்பட்ட நன்மைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

கரையில் கீழ்வரும் ஊர்கள் அமைந்துள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பது கால்வாய் மைல் ஆகும்.

அணை நாசுவம் பாளையம் (0/0)
இராமநாதபுரம் புதூர் (4.2½)
பெரிய அக்கிரகாரம் (7.1½)
ஈரோடு (14.0)
சாத்தனூர் (20.00)
சாவடிப் பாளையம் (24.0)
காளமங்கலம் (27.2)
பாசூர் (31.1½)
பழனிக்கவுண்டம் பாளையம் (32.4)
வட்டக்கல் வலசு (34.4)
மலையம் பாளையம் (35.23)
கொளாநல்லி (37.4)

குட்டப் பாளையம் (38.0½)
காரணம் பாளையம் (40.4½)
அமராவதி புதூர் (41.4)
கருக்கம் பாளையம் (42.0)
ஊஞ்சலூர் (43.2½)
கொளத்துப் பாளையம் (44.4)
பனப்பாளையம் (45.6)
கல்வெட்டுப் பாளையம் (47.4)
வெங்கம்பூர் (48.2)
வடக்குப் புதுப்பாளையம் (50.0)
கணபதி பாளைம் (51.3½)
கொடுமுடி (53.7½)
வருந்தியா பாளையம் (54. 2)
சோழக்காளி பாளையம் (55 2½)

இவைகள் இல்லாமல் இவைகளின் அருகில் இன்னும் பல ஊர்கள் நெருக்கமாக ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பல ஊர்கள் மிக நெருக்கமாக ஏற்படக் காரணம் காலிங்கராயன் கால்வாயே ஆகும். சூரியம் பாளையம், தளவாய் பாளையம், வைரா பாளையம், கருங்கல் பாளையம், வெண்டிபாளையம், காங்கயம்பாளையம் குறுக்கபாளையம், செப்பிலி பாளையம், வேலம் பாளையம், மன்னாதம் பாளையம், பாம்பகவுண்டம் பாளையம், கோம்புப் பாளையம், காரநாயக்கன் பாளையம், வள்ளிபாளையம், பனைப்பாளையம், காசிபாளையம், கணபதிபாளைம், அரசம்பாளையம், நாகம நாயக்கன் பாளையம் ஆகியவைகளும் பிற பாளையங்களும் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்டனவாகும்.

காலிங்கராயன் கால்வாய்ப் பாசனப்பகுதிக்குள் இருந்த பல ஊர்கள் நீரின் மிகுதியால் அழிந்தன. ஊர்ப்பகுதிகள் வயல்களாக மாற்றப்பட்டன. மக்கள் மேட்டுப்பகுதிக்கு மேற்கு நோக்கிக் குடி பெயர்ந்தனர். சாத்தம்பூர் மக்கள் நஞ்சை ஊத்துக்குளிக்கு குடி பெயர்ந்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். பல இடங்களில் கால்வாயினால் இவ்வாறு குடிப் பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன.

ஊர் அழிவுபட்டதால் பழைய சில ஊர்ப் பகுதிகள் நத்தம் என்று அழைக்கப் பெற்றன. பள்ளர் நத்தம், சத்திர நத்தம், பூச்சக்காட்டு நத்தம் என்பன அவற்றுட் சிலவாகும்.

கால்வாய் வளம் ஏற்பட்டவுடன் சில ஊர்கள் நஞ்சை, புஞ்சை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. நஞ்சை லக்காபுரம், புஞ்சை லக்காபுரம், நஞ்சைக் காளமங்கலம், புஞ்சைக் காளமங்கலம், நஞ்சைக் கொளாநல்லி, புஞ்சைக் கொளாநல்லி என அவை அழைக்கப்பட்டன.

வயல்வெளியில் நெற்போர் அடிக்கக் களங்கள் அமைக்கப்பட்டு அதன் அருகில் வீடுகள் அமைக்கப்பட்டுச் சில சிற்றூர்கள் அதனால் களம் என்றே அழைக்கப்பட்டன. இலட்சுமண கவுண்டன்களம், ஆலைக்காட்டுக்களம், கம்பங்காட்டுக்களம் என்பன அவ்வாறு அமைந்த ஊர்களாகும்.

கால்வாய் பாய்ந்து வளம் ஏற்பட்ட காரணத்தால் பழைய ஊர்களின் அருகே அப்பெயரில் புது ஊர்களும், புதிய குடியிருப்புக்களும் பல ஏற்பட்டன. அதனால் பிற பகுதியைக் காட்டிலும் காலிங்கராயன் கால்வாய்க் கரையில் ஊர்ப் பெருக்கமும் மக்கள் தொகைப் பெருக்கமும் மிகவும் மிகுதியாக ஏற்பட்டன.

புதுப்பாளையம், அணைக்கட்டுப் புதூர், வடக்குப் புதுப்பாளையம், தெற்குப் புதுப்பாளையம், மிளகாய்ப் புதுப்பாளையம், சேட்டையூர் புதூர், சாத்தம் புதூர், இராயபாளையம் புதூர், இராமநாதபுரம் புதூர், புத்தூர், ஆட்டுக் கவுண்டன் புதூர், குள்ளக்கவுண்டன் புதூர், முத்துக் கவுண்டன் புதூர், சாவடிப்பாளையம் புதூர், அமராவதி புதூர், பொறையம்பாளையம் புதூர் என்பன அவ்வாறு புதியனவாக ஏற்பட்ட ஊர்களாகும்.

ஈரோடு, காளமங்கலம், பாசூர், கொளாநல்லி, ஊஞ்சலூர், வெங்கம்பூர், கொடுமுடி போன்ற பல ஊர்களில் புதிய கோயில்கள் பல கட்டப்பட்டன. பழைய கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன. கொடைகள் பல அளிக்கப்பட்டன. விழாக்கள் விரிவாக நடத்தப்பட்டன. கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டன.

அந்தணர்கட்கு அக்கிரகாரங்கள் பல ஏற்படுத்தப்பட்டன. அவர்கட்குக் கொடையாகப் பிரமதேய நிலங்கள் அளிக்கப்பட்டன. அக்கிரகாரம் என்ற ஊர்ப்பெயரும், பட்டவர்த்தி என்ற நிலப்பெயரும் வழங்குவது இதற்கு எடுத்துக்காட்டாகும். பலர் பூந்துறை நாட்டின் பல பகுதியிலிருந்து கால்வாய்ப் பகுதிக்குப் புதியவர்களாகக் குடியேறினர். கால்வாய்ப் பகுதி மக்களுடன் பூந்துறை நாட்டின் பிற பகுதி மக்கள் அங்குள்ள செல்வச் செழிப்பின் காரணமாக உறவு கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

கால்வாய்க் கரையில் உள்ள ஊர்கள் மிகுதியான செல்வவளம் பெற்றன. பொருளாதாரப் புழக்கம் மிகுதியாக ஏற்பட்டது. ஈரோட்டில் தென்னகத்திலேயே மஞ்சள் வணிகம் சிறந்து விளங்குவதற்குக் காலிங்கராயன் கால்வாய் முக்கியக் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

ஈரோடு செல்வச் செழிப்புற்று வாணிகம் மிகுதியாகப் பெருகுவதற்கும், காலிங்கராயன் கால்வாய்ப் பகுதிமக்கள் பலர் ஈரோட்டில் குடியேறி அதன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மூல காரணமாக அமைவதற்கும் கால்வாய் வளமே காரணமாக அமைந்தது.

கால்வாய்ப் பகுதியில் ஆலயங்கள் பெருகவே விழாக்கள் மிகுதியாக நடைபெற்றன. வாத்தியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், சமயச் சடங்கு, ஆலய வழிபாடு நடத்துவோர் நன்கு ஆதரிக்கப்பட்டனர். அதனால் கலையும், சமயமும், சிற்பமும் பெருகியது.

புலவர்கள் பலர் ஆதரிக்கப்பட்டனர். இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. கல்வி அறிவு பெருகியது. விவசாயத்துடன் பல துணைத் தொழில்கள் பெருகியது. விவசாயத் தொழிலாளர்கள் பலர் வளமுற வாழ்ந்தனர்.

மக்கள் வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்ததால் பல சமயத்தாரும், பல சாதியினரும் சமய, சாதிப் பூசல் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இதனை இப்பகுதி வரலாறு சிறப்புடன் கூறுகிறது.

சைவ வைணவக் கோயில்கள் ஒரே தன்மையில் ஏற்றத்தாழ்வின்றி ஆதரிக்கப்பட்டன. பல கல்வெட்டுக்கள் சிவமயம் என்று தொடங்கி ராமஜெயம் என முடிவுற்றது. வேட்டுவர் வேளாளர் ஆகியோர் ஊர்ச்சபைகளில் ஒன்றாக இயங்கிக் கோயில்கட்கும் ஒற்றுமையுடன் கொடைகள் அளித்தனர். கொங்கு வேளாளர் காணித் தெய்வங்கள் பல திருப்பணிகள் செய்யப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றன.

10-11-1800 இல் கொடுமுடிக்குப் பகுதி வருகை புரிந்த புக்கானன் ‘இந்தியாவிலேயே நான் பார்த்த இடங்களில் இப்பகுதி மிகவும் அழகு வாய்ந்தது’ என்று பாராட்டும் அளவுக்கு இப்பகுதியை வளமாக மாற்றியது காலிங்கராயன் கால்வாயே ஆகும்.

பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளப்படுத்தி ஆயிரக் கணக்கான மக்களை வளத்துடன் வாழச் செய்யும் புனிதன் புகழோன் காலிங்கராயன் கட்டிய அணையும் வெட்டிய கால்வாயும் என்றும் வளம் பெருக்கி அன்னைபோல் அணைத்தூட்டி வாழவைப்பதாகுக!

வாழ்க காலிங்கராயன் புகழ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/011&oldid=1841442" இலிருந்து மீள்விக்கப்பட்டது