உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/013

விக்கிமூலம் இலிருந்து


பிற்சேர்க்கை எண்—2
காலிங்கராயன் அணை கட்டின பட்டயம்

ஸ்ரீமது சுபநமஸ்து ஸ்ரீமன் மகாமண்டலீசுவரன் பாசைக்கி தப்புவராத கண்டன் ஆரிய தள விபாடன் ஆரிய மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள விபாடன் துலுக்கர் மோகந்தவிழ்த்தான் தொட்டிய தள விபாடன், தொட்டிய மோகந்தவிழ்த்தான் ஒட்டிய தள விராடன் ஒட்டிய மோகந்தவிழ்த்தான் பலநாவுக் குறைவராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாத கண்டன் வினவிசை கனவிசை ஈழமும் ஆழமும் ஒரப்பான் பட்டணமும் ரதபதி கெசபதி அசுவபதி நரபதி நால்வகைப் படையோடுங்கூடி கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசமார்த் தாண்டன் ராசகுல திலகன் ராசகெம்பீரன் நாடாளு நாயகன் றாட குலதுங்கன் பூலோக தேவேந்திரன் ஆரண முறையார் ஆறிலொன்று கடமை கொண்டு ஆடுங்கடைமணி நாவசையாமல் அரசாளும் கரிகால் சோழன் மகாராசாவய்யரவர்கள் யகமகிழ்ந்து கொடுக்கும் மக்கள் முறையும் தரிப்பான நன்மையும் பொருந்தியிருத்தியிருந்தபடியினாலே பொன் ஊஞ்சலும் பூந்தேரும் பூச்சக்கரக் குடையும் பெற்றருளிய கங்கா குல திலகன் காராள சிரோமணி மேழிக் கொடியோன் மின் குவளை மாளிகை மார்பன் நாற்பத்தியெண்ணாயிரம் கோத்திரத்துக்கும் முதன்மையாயிருக்கும் கொங்கு தேசத்துக்குச் சேர்ந்த தென்கரை நாட்டு செட்டி வேணாவுடையான் நரைய நாடு காசிப கோத்திரம் பிரமியணபிள்ளை பொங்கலூரு தெய்வசிகாமணி பூந்துறை நாடு வாரணவாசி வெள்ளோட்டுக் கனகபுரம் நஞ்சையன் ஆருநாட்டு மசக்காளி வேலணன் குருப்பை நாட்டு ரகுநாதணன் ஒடுவெங்கநாடு முத்துவேலப்பன் நல்லுருக்கா நாடு வானவராயன் வாரக்க நாடு பொங்கணன் காவுலுக்கா நாடு உடையணன் எங்களைப் பத்துப் பேரையும் காங்கய நாட்டுச் சரவண காங்கேயன் பார்த்துச் சொன்ன வசனம் கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணைகட்ட வேணுமென்று நம்மையுந் தாவுதுறை பார்த்து வரச் சொல்ல வேணுமென்று யீரோட்டுக்கு யெங்களை அழைத்துக்கொண்டு போய் வானியில் தாவுதுறை அணை கட்டுகிறதற்குப் பார்த்த இடத்தில் வெள்ளோட்டிலிருக்கும் வெள்ள வேட்டுவன் பாளையக்காரன் யென்னுடைய எல்லையிலே தாவுதுறை பார்க்கிறதென்ன அணை கட்டுகிறோமென்று பேசுகிறதென்ன நீங்கள் அணைகட்ட வேண்டாமென்று பிலத்துடனே மறித்தான்.

அதன் பிறகு நாங்கள் பத்துப் பேரும் ஈரோட்டுக்கு வந்து அதுக்குத் தக்கின சோமாசிகளை அனுப்பிவச்சு வெகு பிரீதியுடனே சொல்லக் கேளாதபடியினாலே இவனுடைய கெருவத்தையடக்கி அந்தத் தாவில் அணை கட்டாமல் விட்டுப் போறதில்லையென்று பிரதிக்கிணை செய்து அவையஸ் தங்குடுத்து ரண்டு மூணு மாச வரைக்கும் அவனுடனே சண்டை செய்து யெங்களினாலே செயிக்க மாட்டாமல் எழச்சுப் போயிருக்கும் வேளையிலே எண்ணை மங்கலம் பதியிலேயிருக்கும் காளியண்ணன், மதுரைக்குப் போய் சமஸ்தானம் ஆளப்பட்ட உக்கிர குமார ராசா சமூகத்துக்குப் போயி வெகுமதியும் கட்டக்கயிரும் வெட்ட வாளும் துஷ்ட சம்மாரமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து கொண்டிருக்கச் சொல்லி வரப்பிரசாதம் வாங்கிக்கொண்டு ஆனைமலை நாட்டு பாளையப்பட்டு செங்கோல் செலுத்திக் கொண்டு இருக்கிற நாளையிலே நாங்கள் பத்துப் பேருங்கூடி காலிங்கராயனை ஆனைமலைக்கு அனுப்பிவிட்டு காளியணனை யீரோட்டுக்கு வரவழைத்து வெள்ளவேட்டுவன் விருத்தாந்தமெல்லாம் வழிவிபரமாய்ச் சொல்லி அவனைச் செயம்பண்ணி அந்த ஆற்றில் அணை கட்டுகிறபடிக்குச் செயிச்சுக் கொடுக்க வேணுமென்று மெத்தவும் பத்துப் பேருங்கூடி வெகுவிதத்திலே கேட்டுக் கொண்டதுனாலே நல்லது என்று சம்மதிச்சு அந்த வெள்ளவேட்டுவன் இருக்கும் வெள்ளோட்டுக்கு ஒருரவு கொண்டு போயி அவன் ஊடையத்தையும் தகர்த்து ஊரையும் கொள்ளைப்பண்ணி சிறிது ராணுவங்களையும் வெட்டி அவன் தலையும் வெட்டிக் கொண்டு வந்து எல்லோரும் காணத்தக்கதாயி வய்த்தபடியினாலே நாங்களிருபத்துநாலு நாட்டாருங்கூடிச் செட்டி வர்த்தகங்கள் பலபட்டரைச் சாதிகளையும் வரவழைத்து நம்ம சனங்கள் மேற்கு நல்லூருக்கா நாடு ஆனைமலைநாடு காவிலுக்கா நாடு வாரக்க நாடு ஆருநாடு குருப்புநாடு ஒடுவங்க நாடு யிந்த ஏழு நாட்டுலெயும் சீவார்த்தனஞ் செய்ய வேண்டிய நிமுத்தியமாக பரந்து போயிருக்கும் சனங்கள் அந்தந்தச் சாதிகளுக்குண்டான வரமுறைமை தாய் தகப்பனுக்கு அமுதுபடையாதவன் புருசன் பெண்சாதியை முடுக்கிவிட்டவன் பெண்சாதியானவள் புருஷன் வார்த்தைக்கு ஏறுமாறாகப் பேசினவள் ஒருத்தருக்கொருத்தர் மித்துருபேதம் செய்கிற பேர்கள் இப்படி நாலு விதமாயி முறைமை தப்பி நடவாமல் தரும் நீதமாய் நடக்கும்படிக்கு இருபத்திநாலு நாட்டாருங்கூடி செட்டி வர்த்தகர்களும் பலபட்டரைச் சாதிகளும் சம்மதிச்சு காளியணனுக்கு சாதிப்பட்டயம் நேமுகம் செய்து கொடுக்க வேணுமென சகலமான செனங்களும் அனைவருங்கூடி யீரோட்டுக் கொங்கிலியம்மன் சன்னதிக்குப் போயி அம்மனுக்குப் பதினாயிரம் பழம் நெய்வேதினஞ்செய்து பின்பு காளியணனுக்குச் சாதிப் பட்டயங் குடுத்தபோது பொங்கலூரு நாட்டு தெய்வசிகாமணி வந்து இந்தப் பட்டயம் எனக்குச் சேர வேணுமென்று மரித்துச் சொன்னான் நல்லதுயென்று தாராபுரம் பிரமியணன் சொல்லும் வசனம்—உங்கள் ரெண்டு பேர்படிக்குத் திருவுளச் சீட்டெழுதி அம்மன் பாதத்திலே வய்த்து ரெண்டு பேரையும் பார்த்துச் சுனையிலே ஸ்னாநஞ் செய்து அம்மனைப் பிரதட்சினை வலமாயிவந்து தெய்வசிகாமணி நான் முன்னமே எடுப்பேனென்று சமத்துச் சொன்னான் சரவண காங்கேயன் சொல்லும் வசனம் நீ போயி இந்தப் பேர்ப் படிக்கி இந்தச் சீட்டு உன் கயிக்கு வந்தால் உனக்கே நேமுகஞ்செய்து முடிக்கிறோமென்று சொன்னார்கள்.

அப்போ கோவிலுக்குள்ளே அடியெடுத்து வைக்கவும் அம்மன் மடியிடையில் வயிலாயிருந்து ஒரு நீர்ச்சர்ப்பம் வடமுகாக்கினி போலும் சீறிக் கோபித்தெழுந்தது கண்டு பயந்து நடுநடுங்கி பிரண்டு கொண்டு பின்னிட்டுவந்து சோபந்தட்டி மயங்கி விழுந்தவனை காளியணன் எடுத்து மார்போடணைத்து நெஞ்சத்தட்டி அம்மனைத் தியானிச்சு தண்ணீர் முகத்துக்கெரச்சு பயத்தை நிறுத்தி அவன் மனசைத் தைரியப்படுத்திப் பண்ணினான்.

அதன் பிற்பாடு பத்துப் பேருங்கூடி காளியண்ணனை உன் பேர்ப்படிக்கிச் சீட்டு எடுத்துதரச் சொன்னார்கள். அதன் பிறகு சுனையிலே ஸ்நானஞ் செய்து அம்மனை வலப்பிரதட்சிணமாய் சுத்திவந்து கோவிலுக்குள் புகவும் நாகசர்ப்பம் கோவம் மாறி மாயமாய்ப் போய்விட்டது. அதன்பிறகு அம்மன் பாதத்திலேயிருந்த திருவுளச்சீட்டு எடுத்து வந்து பத்துப்பேருங் காணத்தக்கதாகச் சபையிலே வைத்தான் பத்துப் பேரும் சீட்டெடுத்துப் பார்த்து உன் பேருபடிக்குச் சீட்டுயிருக்குதென்று அனைவருங்கூடிச் சொன்னார்கள்.

யெண்ணை மங்கலத்திலேயிருக்குற ஆனைமலை காளியண்ணனுக்குச் சாதிப் பட்டயங்குடுத்து பாகுபச்சடமும் ரெட்டப்படி பாக்கு வெத்திலையும் குதிரை குடை தீவட்டியும் ஒத்தைக் கொம்பும் ஒத்த கும்பமும் மகப்பட்டையும் கட்டக்கயிறும் வெட்ட வாளும் அடிக்க ஆத்தி யாக்கையும் அஷ்டாவுக்காரமும் வேண்டிய விருதுகளும் அளியாத தருமமும் சிலா சாசின பட்டயம் அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/013&oldid=1841445" இலிருந்து மீள்விக்கப்பட்டது