உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/014

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை எண்—3
காலிங்கராயன் கைபீது [1]

தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால்:-

பூர்வீகம்

பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள் தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப்பட்டது.

கொங்கில் குடியேற்றம்

சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும் ஏற்படுத்தியிருக்கும் நாளையில் அக்காலத்தில் என் வமிசத்தானான காலிங்க கவுண்டன் என்கிறவன் பூந்துரை நாட்டுக்கு காணியாளனாய் மேல்கரை முப்பத்து ரெண்டு கிராமத்துக்குச் சேர்ந்த வெள்ளோடு குடியிருப்பு காரனுக்குத் தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாய்ச்சியார் தேவஸ்தானம் சீர்னோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான்.

அணை கட்டக் காரணம்

பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்காரனாய் இருக்கும் நாளையில் கங்கை குலம் சாத்தந்த கோத்திரம் காலிங்கக் கவுண்டன் என்கிற தன்னுடைய குமாரனுக்குக் கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு மாமன் மச்சுனனான பண்ண குலத்தாளி வீட்டிலே பெண் கேட்டுக் கலியாணம் செய்யத்தக்கதாக யோசிச்சு பெண் சம்மதமாகி அந்த ராத்திரி சாப்பிடுகிறதுக்கு சமையல் பண்ணுகிறவன் வந்து இவர்களுக்குச் சமையல் பண்ணுகிறதுக்கு எந்த அரிசி போடுகிறது என்று கேட்க, அவாள் கம்பு விளைகிற சீர்மையிலே இருக்கிற பேர்களுக்கு எந்த அரிசி என்று தெரியவா போகிறது பழ அரிசி தானே போடு போவென்று சொல்ல அது சேதி ஷை காலிங்கக் கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்பிடாதபடிக்கு இருந்து நெல்லு விளையும் படியாக நீர்ப்பாங்கு உண்டு பண்ணிக்கொண்டு உங்கள் வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகிரோமென்று சபதம் கோரிக்கொண்டு வந்து தன் ஊரிலே வந்து சேர்ந்து மனதிலே தனக்குத் தோணியிருக்கும் நாளையில் இவர் இஷ்டமான சர்வேசுரரைத் தன்னுடைய அபீஷ்டம் சித்தியாக வேணுமென்று நினைச்சு இருக்கும் வேளையில் இராத்திரி சொப்பனத்திலே ஒரு விருத்த பிராமண ரூபமாய் வந்து இந்த சர்ப்பம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டிவைக்கச் சொல்லி காரணமாக சொப்பனமாச்சுது. அந்தச் சொப்பனமான உடனே கண் விழித்துப் பார்க்குமிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாக இருந்தது தான் கண்டு இருக்கப்பட்ட சொப்பனத்தைக் கண்டு அறிய வேண்டுமென்று நினைச்சு வீடுகட்கு வெளியிலே வந்த சமயத்தில் சர்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது அந்தச் சர்ப்பத்தைக் கண்டு தொடர்ந்து போய் இந்த வழியாகப் போகுதென்று அடையாளங்கள் போட்டுக் கொண்டு வருகிறபோது கொடுமுடி க்ஷேத்திரத்தில் சர்ப்பம் நின்றது.

வாய்க்கால்

அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாய்க்காலும் வெட்டி வைக்க வேணுமென்று நினைத்து பவானி ஆற்றிலே குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைத்திருந்த சமயத்திலே பவானிக் கூடல் ஸ்தானத்துக்கு மேல் புறத்தில் பவானி ஆத்துலே சர்ப்பம் குறுக்கே படுத்துக் கொண்டது. அந்த இடத்திலே அணை கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கு வடக்கே வூராச்சிமலையும் தடமும் சுத்தக் கிரயத்துக்கு வாங்கி அணைகட்டுகிற சமயத்திலே வெள்ளை வேட்டுவர் என்கிற பாளையக்காரன் அணை கட்டுகிற எல்லை தன்னதென்று சண்டை பண்ணினமையாலே வெள்ளை வேட்டுவரை ஜெயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள் செலவளிச்சு சர்ப்பம் போயிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாய்க்கால் வெட்டி கொடுமுடி வரைக்கும் வாய்க்கால் வெட்டி வைச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தானத்துக்கு அத்து வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சர்ப்பம் போன போக்கிலே வாய்க்கால் வெட்டின ஏழுகாதவழி நடைகோணக் கோணலாக வாக்கியால் வெட்டி வச்சான்.

பெயர்க் காரணம்

அந்தச் சர்ப்பம் போன போக்கிலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆற்றிலே சர்ப்பம் படுத்துயிருந்த யிடத்திலே அணையும் கட்டி வச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்றும் பேர் வரப்பட்டுப் பிரிசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்துனாலே சம்பத்துனாம தேயமான காலிங்கன் என்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்கிற நாமதேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியாவென்றும் தான் உண்டு பண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட காலிங்க நெல்லுயென்று விளையப் பண்ணி சம்பந்த பாந்தியங்களும் செய்து கொண்டு யிருந்தான்.

நாவிதனுக்கு மானியம்

இப்படி வாக்கியால் வெட்டி அணைகட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகுற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டுயிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக் கொண்டுயிருக்கும் சமயத்திலே ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ் காரமாய் இருந்த படியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என் பேர் விளங்கி இருக்கும் படியாக பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான் தாம் கட்டி வச்ச அணையோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி நாசுவன் பாளையம் என்றும் பேர் விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்த பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார்.

இப்படிக்கு காலிங்கராய கவுண்டர் என்கிறபேர் பிரசித்திப்பட்டவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்கார ராய் பூந்துறை நாட்டுக்கு நாட்டாதிபத்தியத்தால் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு பிள்ளை பிள்ளை தலைமுறைக்கும் காலிங்கக் கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய் இருந்தார்கள்.

தெய்வமானான்

பவானிக் கூடலிலே காலிங்கராயன் என்கிறவன் அணை கட்டி வச்சு பேர் பிரசித்தி பண்ணினது கலியுகாப்தம் 2000. /காலிங்க கவுண்டன் கட்டி இருக்கப்பட்ட அணையிலே ஷை கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலாபிரதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டுவருகிறது. வருஷப்பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்கு பூசை நைய்வேத்யம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது. இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே மூர்த்திகரம் உண்டாகியிருக்கிறது.

ஈஸ்வர அனுக்கிரகத்துனாலே காலிங்க கவுண்டன் என்கிற அம்சை புருஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க சுவுண்டன் என்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது.

ஆனைமலை போன காரணம்

இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப்பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களா இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும் சரி மரியாதிகளும் கொடுக்கப்படாது என்று சொன்னதினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்கு காவிடிக்கை நாட்டு பிறவுத்வம் பண்ணிக்கொடுத்து இருக்கிற படினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக்கொண்டபடியினாலே வெள்ளோடுவிட்டு மனவெறுப்பினாலே ஆனைமலை சருவுலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கா நாடு காடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகிறதுக்காக தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டுவனத்து வந்து மாடுகளையும் பார்த்து மாடுகளுக்கு சம்ரட்சணைக்காகப் பட்டிகளும்போடுவிச்சு அஞ்சாறு சாலைகளும் கட்டிவிச்சு கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும் இவர்களுச்கெல்லாம் அதிக மரியாதைகள் உண்டு பண்ணிக்கொள்ளவேணுமென்று நினைச்சு ராய சமஸ்தானத்துக்குப் போனார்.

ராயர் பேட்டி

ராய சமஸ்தானத்தில் காத்துக்கொண்டிருக்கும் நாளையில் பண்ணிரண்டு வருஷம் வரைக்கும் ராயரவர்கள் பேட்டியில்லாமல் கையிலே கொண்டு போன திரவியங்கள் எல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக்கொண்டு அதிவிசனத்தை அடைந்தவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டு மன வயிரத்தை அடைஞ்சவனாய் பெனுகொண்டைப் பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் உசெத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார்.

சுத்த உபவாசத்துடனே காளி கோவிலிலே இருக்கப்பட்ட காலிங்கக் கவுண்டன் சொப்பனத்திலே பன்னிரண்டா நாள் இராத்திரி ராயர் குமாரனுக்கு சித்தப் பிரமை பிடிச்ச அது நிவாரணம் இல்லாமல் இருக்கிறபடியினாலே என்னுடைய சன்னிதானத்திலே இருக்கப்பட்ட விபூதியைக் கையிலே கொண்டுபோய் அந்தச் சித்தப் பிரமையாய் இருக்கப்பட்டவன் பேரில் போட்டால் சித்தப் பிரமை தீர்ந்து ராச குமாரனாக அரண்மனை போய்ச் சேர்ந்துயிருப்பான். ராயரவர்கள் உன்பேரிலே சந்தோஷமாய் உன் மனோபீஷ்டம் சித்தியாகும் என்று சொப்பன மாச்சுது.

அந்தச் சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரெண்டு நாள் பட்டினி இருக்கப்பட்டவன் விபூதி யெடுத்துக்கொண்டு பெனுகொண்டா பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை பார்த்துக்கொண்டு வருகுற சமயத்தில் ராசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிரமை பிடிச்சு தன்னப்போலே திரிகிற குறிப்பைக் கண்டு பிடிச்சு ராசகுமாரன் பேரிலே காளியை நினைச்சு விபூதி பேட்டான்.

அந்த விபூதி தூளி ராசகுமாரன் பேரிலே விழுந்தவுடனே சித்தபிரமை தெளிஞ்சவனாய் ராஜ சின்னங்களுடனே அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்.

அக்காலத்து நரபதி சிம்ஹஸ்னாதிபதியான பெனு கொண்டை விசய நகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்குச் சித்தப் பிரமை விடுதலை பண்ணினவனைத் தருவிக்கக் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்தரவு செய்தபடியினாலே அந்த சமயத்தில் தரிவிச்சு ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத்தினாலே காலிங்கக் கவுண்டனைப் பார்த்து உன் சென்மப் பூமி முதலான விருத்தாந்தங்கள் என்னவென்று கேள்குமிடத்தில் பவானி கூடல் சமீபத்தில் உண்டுபண்ணின அணை - வாய்க்கால் முதலான சங்கதிகளும் தெய்வ கடாட்சத்துனாலே காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் வழங்கப்பட்ட வரலாறும் கொங்கு இருபத்து நாலு நாட்டுலே பட்டக்காரர்களாய் சமானிடை...சி மரியாதிகள் தாள்வு நடக்கப்பட்டு சமுஸ்தானத்திலே காத்துக்கொண்டிருந்து காளிகாதேவி அனுக்கிரகமம் பண்ணின நாள் வரைக்கும் வரலாறு அறியப்பண்ணிக் கொண்ட படியினாலே ராயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்னவென்று கேட்டார்கள். அப்போ பேர் அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே ராயர் அவர்கள் உத்திரவு செய்து எண்னுடைய வம்சம் உத்தாரம்பண்ணி இருக்கிறபடினாலே என்னுடைய பேர் தெய்வ கடாட்சத்துனாலே உண்டாகிய பேருடனே ராச கடாட்சத்துனாலே கொடுக்கப்பட்ட ராயச புத்தகத்துடனே காலிங்கராய கவுண்டன் என்று பேர் வச்சு உனக்கு என்ன வேணுமென்று கேட்டார்கள். அந்த சமயத்தில் என் காணியாட்சியான ஆனைமலை சரிவுலே காவிடிக்கை நாடு என்னப்பட்ட பூமியை தயவு செய்ய வேணுமென்று கேட்டுக் கொண்டார்.

ராயரிடம் பெற்ற வரிசை

ராயவர்கள் கடாட்சம் செய்து சிபஹல்லா பல்லாக்கு, உபயசாமரம், சுருட்டி, சூரியபான், ஆலவட்டம், வெள்ளைக் கொடை, பச்சைக் கொடை, பஞ்சவர்ணக் கொடை, பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனுமடால்—கெறுடடால் மகரடால் பசவசங்கரடால் பஞ்சவர்ணடால், ஆனைமேல் பேரிகை ஒட்டைமேல் நகாரு, குதிரைமேல் டகாரி எருதுமேல் தம்பட்டம், தாரை, சின்னம் எக்காளம் பேரிகை சிக்குமௌம் இது முதலான வாத்தியங்கள் பிருதுகளும் கொடுத்து ரண பாஷிகரம் கலிகிதுருயி முத்தொண்டி பஞ்சொண்டி ஒண்டி ரேக்கு வீர சங்கிலினாக ககாணும் புலி செறமம் கரடி மயிர் வக்கிய பிரீதங்கனிகளம் வீர கண்டாமணி சாமதுரோகா வெண்டையம் தங்க பிஞ்சு இது முதலான ஆபரணங்களை யெல்லாம் அலங்கரிச்சு குதிரைக்கு புலித் தோல் மேல் மடக்கு அடை சல்லி முக சல்லி பக்க சல்லி கால் தண்டை கலிகிதுருயி இது முதலான ஆபரணங்களை தறீச்சு பட்டத்துக் குதிரையென்று நேமுகம் செய்து பட்டணப் பிரவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சரிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே மனச புதாரனாக ஆண்டு கொண்டு சந்திராதித்தியர் உள்ள வரைக்கும் வம்ச பரம்பரெயாய் மனசபுதாரனாக ஆண்டு அனுபவிச்சுக்கொண்டு வரவேணுமென்று பட்டாபிஷகம் செய்து பட்டத்து ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமரகாரை நேமுகம் செய்து இரட்டை வாள் பச்ச ஈட்டி, கரீட்டி, வெள்ளி ஈட்டி, தங்கக்கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீறு மாறுடை இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள்.

பாளையக்காரன்

முன்னாலே நாடூர் பாளைப்பட்டு பட்டக்காரர்கள் சரிசமமான மரியாதை கொடுக்கிறது இல்லை என்று சொன்ன மனவெறுப்புனாலே ராய சமஸ்தானத்திலே காத்து இருந்து தெய்வ கடாட்சத்துனாலே சகல பிருதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப் பாளையக்காரராக காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவனாய்ப்பட்டு கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனை மலைச் சரிவிலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப் பட்டிகள் இருக்கப்பட்ட இடத்தில் சேர்ந்து அரண்மனையும் கட்டி வீடுகள் உண்டுபண்ணி பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாகத் தோண்டியிருக்கப்பட்ட ஊற்றுக்குளிகள் இருக்கப்பட்ட இடத்தில் ஊரு கட்டிவிச்ச படியினாலே ஊற்றுக்குழி என்று கிராம நாமதேயம் உண்டாகி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய் இருந்தார்கள். ராயர் சமஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் தெய்வ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பிரசித்திப்பட்டு பாளையப்பட்டு உண்டான நாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல் சகாபுதம் 1702 வரைக்கும் 582 பட்டங்களுடைய வரிசைகளும் அவாளவாளுடைய சரிதைகளும் இதன் கீழே எழுதி வருகிறது.

பரம்பரை

வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் சாலிங்கராயன் என்கிற பேர் வமுச பரம்பரையாய் பட்டக்காரர்களுக்குப் பேர் உண்டாகி வருகிறது.

தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கில் வாக்கியாலும் வெட்டி வச்சு அணையும் கட்டி வச்சு காலிங்கனென்கிற பேர் பிரசித்திப்பட்டு வமுசாபிவிருத்தியிலே காலிங்கராயனென்கிறவர் காவிடிக்கா நாட்டுக்கு மனபுதாரனாயி காலிங்கராயனென்கிற பேராலே ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அன்னாருடைய நாள்வரைக்கும் காலிங்கராயன் அணையென்றும் காலிங்கராயன் வாக்கியாலென்றும் பேர் பிரசித்திப்படலாச்சுது.

1. காலிங்கராயக் கவுண்டர் பட்டமாண்ட வருஷம் 50

2. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 40

3. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 23

4. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராய கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 20

5. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 19

6. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 21

7. இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 12

8. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 23

9. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 27

10. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 16 11. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 9

12. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 28

13. இவர் குமாரன் விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 30

14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 11

15. இவர் குமாரர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 20

16. இவர் குமாரன் ஈசுரமூர்த்திக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 6

17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 15

18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 31

19. இவர் குமாரன் விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 23

20. இவர் குமாரன் பிள்ளை முத்து காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 13

21. இவர் குமாரன் சின்னைய காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் 19

22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 20

23. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 30

24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 20 25. இவர் தம்பி நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 12

26. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் 29

27. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 2

28. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 4

முதல் பட்டம்

முதல் பட்டக்காரனாகிய காலிங்கராயக் கவுண்டன் நாளையிலே ஊத்துக்குளி புரமும் உண்டு பண்ணி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் கொங்கேளு சிவாலயம் முதலாகிய ஸ்ரீரங்கம் சிதம்பரம் கும்பகோணம் மாயூரம் திருக்கடவூர் ஆவடயார் கோவில் ராமேஸ்வரம் தர்ப்ப சேணம் மதுரை பழனியாண்டர் பிரதட்சணமாய் இந்த பிரதீரத்து மஹாஸ்தலங்களை எல்லாம் யாத்திரை செய்து அந்தந்த ஸ்தலங்களுக்கு தருமங்கள் தானங்கள் பண்ணி யாத்திரங்கள் தீர்ந்தவுடனே ஊத்துக்குழிக்கு வந்து ராய சமுஸ்தானத்திலே தமக்கு பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாகப்பட்ட தேவாலயம் சீரணோதாரணம் பண்ணி அகத்தூர் அம்மனென்று பேர் பிரசித்தி படும்படியாய் பூஜை நெயிவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு ராய சமுஸ்தானத்திலே தனக்கு மனசபுதார யிலாவுக்குச் சேர்ந்த வாரக்கனாட்டு யெல்லை பள்ளத்துக்குத் தெற்கு நல்லுருக்கா நாடு பாலாத்துக்கு வடக்கு புங்குலுக்கே நாடு தானசாரை பள்ளத்துக்கு மேற்கு கம்பால துரை மணலியாறுக்கும் கிழக்கு இந்த நான்கெல்லைக்குட்பட்ட கீழ்மேல் நாற்காதம் தென்வடல் இருகாதம் இந்த அத்துக் காவிடிக்கா நாட்டு காடுகளையெல்லாம் வெட்டி வச்சு அந்தந்தயிடங்களிலே நீர்ப்பாங்கு உண்டு பண்ணி வீடேத்தி ஊர்களும் உண்டு பண்ணிக்கொண்டு நஞ்சை புஞ்சை நிலங்களும் திட்டப்படுத்தி நாடுவூர் பாளைப் பட்டுக்களுக்கு அரண்மனையிலே அதிக மரியாதைகாரனாய் ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் அதிதிறமைசாலிகளாய் பிரபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தார்.

இரண்டாவது பட்டம்

முதல் 8வரை

ரெண்டான் பட்டக்காரனான நஞ்சய் காலிங்கராயக் கவுண்டன் நாள் முதல் எட்டாம் பட்டக்காரனான காலிங்கராயன் கவுண்டர் நாள் வரைக்கும் ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவர்களாய் வம்ச பரம்பரையாய்ப் பண்ணப்பட்ட தருமங்களைப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்திலே ராய சமுஸ்தானாதிபதிகள் கட்டளையிட்டபடிக்கு சமுஸ்தானத்திலே ஆஜரிலே இருந்து நடந்து கொண்டு மனசு புதாரனாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள்.

கால்வழியினர்

ஒன்பதாம் பட்டக்காரனாகிய நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் பாண்டிய சிம்மாசனாதிபதியாகிய விசுவநாத நாயக்கர் எழுந்தருளியிருக்குற நாளையில் சமுஸ்தானத்துக்குச் சேர்ந்து இருந்து பாளையக்காரர்களையெல்லாம் பேட்டிக்குத் தருவிச்சு மதுரைக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்து தட்சிண பிரதேசத்திலே திறன்னவல்லி சீர்மையிலே அஞ்சு கோட்டை போட்டுக் கொண்டு அஞ்சுராசாசளயென்றவாள் சமுஸ்தானத்துப் பிரபுக்களை நிராகரிச்சு யெதிர் பாளையம் போட்டுக் கொண்டுயிருக்கும் நாளையில் அந்த சமயத்தில் நாயக்கரவர்கள் உத்தரவுப்படிக்கு என் சமஸ்தான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் சேன சேகரத்துடனே திர்ன்னவல்லி சீமைக்குப் போய் அஞ்சு ராசாக்களுடனே யுத்தம் செய்து ஒரு கோட்டையிலே இருக்கிற அஞ்சுராசா வெட்டிப் போட்டு கோட்டையைக் கைவசம் பண்ணிக்கொண்டு யெதிராளிகளையும் கொண்டுவந்து நாய்க்கரவர்கள் சமஸ்தானத்திலே வைத்தார். அப்போ நாயக்கரவர்கள் ‘நீ பராக்கிரமசாலி’ என்று நிரம்பவும் சந்தோஷப்பட்டு தங்கனிகளத்திலே சுற தைத்து அதிலே தலைபோல பண்ணிப் போட்டு யெதிராளி தலையென்று காலுக்குப் போடுகுற பிறிதும் கொடுத்து பராக்கிரம நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் என்று பேரும் கொடுத்து ஆடையாபரணங்கள் முதலான ஆபரணங்களும் கொடுத்து சகல வெகுமதிகளும் பண்ணி மதுரை ஆஸ்தானக் கோட்டைக்கு அன்பத்தோரான் கொத்தளத்துக்கு தலமை வயிக்கும் படியாக நிகுதிசெய்து பாளையப்பட்டு கிராமங்களை சுத்த ஜாரியாக அனுபவிச்சுக் கொண்டு வரும்படியாக நிகுதி செய்தபடியினாலே அந்த நாள் முதல் பதினெட்டாம் பட்டம் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் நாள் வரைக்கும் மதுரை சமஸ் தான கர்த்தராகிய நாயக்கரவர்கள் பரம்பரையிலே கட்டு பண்ணின நிகுதி தீட்டுக்கு அரண்மனைக்கு நடந்து கொண்டு வமிச பரம்பரையாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள்.

பத்தொன்பதாம் பட்டக்காரனான விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்து மதுரை சமஸ்தானத்துக்கும் கனுவாஇக்கு கீள்ப்பட்ட கெடிகளுக்காக யுத்த சன்னாஹமாகயிருந்தார்கள்.

இருபத்து மூன்றாம் பட்டக்காரரான நஞ்சிய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் கணுவாய்க்கு கீள்பட்ட கெடிகள் எல்லாம் மைசூர் சமஸ்தானத்துக்குச் சேர்ந்துயிருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்துக் கர்த்தராகிய இம்முடிராஜ உடையாரவர்கள் பேட்டிக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்துக்குச் சேர்ந்த கொடகர் சமஸ்தானத்துக்கு யெதுத்துயிருக்கிற றகளையென்று யென் வம்சத்தார்களில் சனசேகரத்துடனே குடகு போகச் சொல்லி உத்தரவு ஆனபடியினாலே சனசேகரத்துடனே கொடகு ராஜாவின் பேரிலே போய் யுத்தம் செய்து ஜெயிச்சு வந்தார்கள்.

அப்போ மைசூர் சமஸ்தான கர்த்தாக்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு அஷ்ட கோண தண்டிகைக்கு தங்க முலாம் பூசியெட்டு கலசத்துடனே தண்டிகையுங் கொடுத்து ஆடையாபரணங்களும் கொடுத்து ஊற்றுக்குழி பாளையப்பட்டுக்கு அக்காலத்து சேர்ந்து இருந்த கிராமங்கள் ஒன்பதுக்கும் வருஷம் ஒண்ணுக்கு ராசகோபாலி 756 நிகுதி செய்து உத்தரவு செய்தார்கள். அந்த நாள்முதல் என் சகோதரரான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்டு கொண்டு வந்த நாள் வரைக்கும் மைசூர் சமஸ்தானத்தார் கட்டளையிட்ட நிகுதிப் படிக்கு அரமணைக்கு நடந்து கொண்டு ஊற்றுக்குழி பாளையக்காரர் என்கிறவாளாய் பட்டம் ஆண்டு கொண்டு வந்தார்கள்.

பூர்வம் முதலாக என் வமுசத்திலுள்ள பாளையப்பட்டு ஆண்டு கொண்டு வரப்பட்டவர்கள் செவுறிய வுதார கெம்பீர குணாதிசயங்கள் உள்ளவர்களாய் இருந்து மற்ற பாளையக்காரர்களிலே அந்தந்த காலத்திலே அரமனைக்கு நிராகரிச்சுயிருக்கப் பட்டவர்களையும் தமக்கு யெதிரியாயிருக்கப்பட்டவர்களையும் மடக்கிக் கொண்டு ஊத்துக்குளியிலே கோட்டையும் பந்தோபஸ்தும் பண்ணிக்கொண்டு கால் தளம் அய்யாயிரம் நூறு குதிரை ஆயுதங்கள் வச்சு இருக்கப்பட்ட சனம் அய்யாயிரம் ஒரு கடகம் யானை இதுகளுடனே ஆனைமலை கானல்களிலே ஆனைகள் பிடிச்சு அரண்மனைக்குக் கொடுத்துக் கொண்டு அரமனையார் கட்டளையிட்டபடி நடந்து கொண்டு அரமனையார் கட்டளையிட்ட ஆனைமலை மாச்ச நாயக்கன் பாளையம் பாதிகாவலும் முன்னாள் மூலை போதிக்கு ஒரு ரூபாயும் மகமை நடந்து வந்தபடியினாலே அந்தப் பாதிகாவலும் மகமையும் அனுபவிச்சுக் கொண்டு அரமனையிலே கட்டுப்பண்ணின நிகுதி பணமும் செலுத்திக் கொண்டு ஆண்டு அனுபவித்துக்கொண்டு வரும் நாளையில் என் முப்பாட்டனார் நாளிலே பாதிகாவல் விட்டுட்டுப்போய் மலையாளத்து கோளிகூடு ராசாவின் பேரிலே யுத்த கனுகத்திலே யெலைபள்ளியிலே விளுந்து போய் விட்டார்கள் என் தோப்பனார் நாள் முதல் சுங்கம் மகமை நடந்து வந்தது.

என் தமையனார் ரெண்டுபேர் நாளையிலேயும் திப்புசுல்தான் அங்காமி நாள் வரைக்கும் ஒரு நிகுதியில்லாமல் சில்லரை கள்ளர் அங்காமிகளுக்கும் தொந்தரைகள் பட்டுக்கொண்டு யிருந்தார்கள்.

பூர்வம் முதலாக வமுசாவளி முதலானதுகளுக்கு உண்டான ஆதாரங்கள் முதலானதுகளும் காலாந்திரங்களிலே ராசீகங்களிலே கைசோர்ந்து போய்விட்டபடியினாலே அகப்பட்ட பூர்வத்திய பளமுளி கிரந்தங்களினாலேயும் ஒளுகுகள்யாலேயும் பரம்பரையிலே அனுபவித்த கேள்வியினாலேயும் தெரிந்து கொண்டு கைபீது தெரியப்படுத்திக் கொள்ளலாச்சுது.

கம்பெனி ஆட்சி

கலியுகாபுதம் 4891 மேல் செல்லாநின்ற விரோதிகிருது வருஷம் மாசி மாதம் 4 தேதி சுபதினத்தில் எனக்குப் பட்டமாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டர் என்னப்பட்ட பேர் விளங்கிக் கொண்டவனாகயிருந்து திப்புசுல்தான் துரைத்தனத்தில் சில்லரை கள்ளர் தொந்தரவுகள் பட்டுக்கொண்டு இருக்கும் நாளையில் மகாராஜ ராஜஸ்ரீ கும்பினி துரைத்தனமாகிறது என்று ரொம்பவும் சந்தோஷத்தை அடைந்தவனாய் குஞ்சு குழந்தைகளையெல்லாம் பெம்பாயி சீர்மையிலே வச்சுப் போட்டு நான் ஊற்றுக் குழியிலே ஹாஜரிலே காத்துக்கொண்டு கும்பினி தயவு கோரியிருக்கும் நாளையில் சித்தார்த்தி வருஷத்திலே மகாராஜ ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் இன்சீபு (ஜேம்சு) ரமலி சாயபு அவர்கள் மஹாராஜராஜஸ்ரீ பெம்பாயி பவுசுதார்களுக்கு யெல்லாம் பெரிய சேர்வை துரைகளாகிய இற்றியொட்டு சாயபு அவர்கள் மகாராஜராஜஸ்ரீ செண்டறல் அட்டலி சாயபு அவர்கள் மேல் எழுதப்பட்ட துரையள் என் பேரிலே கடாட்சம் செய்து வந்த படியினாலே நானும் துரையள் கடாட்சயத்தும்படி நடந்து கொண்டு வந்தவனாய் இருந்தபடியினாலே என்னிடத்திலே பூரண தயவாகக் கடாட்சம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையள் கடாட்சம் செய்து யென் மான மரியாதிகளைப் பரிபாலனம் பண்ணி ஊத்துக் குழிக்குச் சேர்ந்த ஒன்பது கிராமமும் கண்டு முதலான பேரீஜுலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் மூணு பாளையக்கார மிறாசு பத்தில் மூணு சாரி செய்துயிருக்கிறபடியினாலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் ஏழு சருகாருக்குச் செலுத்திக் கொண்டு யென் பட்டத்து ஆயுதங்கள் தயவு செய்து இருக்கிறபடியினாலே ஊற்றுக்குழி பாளையக்காரர் என்ற பேராய் இருக்கிறேன்.

மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரனாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் உள்ளவனாய் என் வம்ச பரம்பரையிலே சம்ரட்சணை பண்ணப்பட்டவாளுடைய சந்ததியிலே சேரப்பட்ட அடுத்த சனம் சயிதமாய் முந்நூறு ஜனத்துக்கு அஹமனனியானியாய் காலட்சேபத்துக்கு மார்க்கமாய் நடப்பிவிச்சுக் கொண்டு துரையள் கட்டளையிட்டபடிக்கு நடந்துகொண்டு மஹாராஜ ராஜஸ்ரீ கம்பெனி துரையள் கடாட்சத்துக்குப் பாத்திரனாக இருக்கிறேன்.

ஊற்றுக்குழி காலிங்கராயக் கவுண்டன் ருசு
25 பங்குனி விஷூ

  1. * இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.
"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/014&oldid=1841446" இலிருந்து மீள்விக்கப்பட்டது