காலிங்கராயன் கால்வாய்/015
பிற்சேர்க்கை எண்—4
கும்பினிக் கடிதம்
ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம் [1]
ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதிபாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம்.
பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானியறாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக்குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ் கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லியிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணையாச்சுது.
அது காரியத்துக்கு இப்போ சர்க்கார் காரியத்திலே தாங்கள் கும்பினிக்கு செய்து நடக்கவேண்டிய காரியத்துக்கு யிப்பச் சம்மதமான படியினாலே தாங்கள் அறியவேண்டி தங்களுக்கு தாக்கீதா எழுதியிருக்கிறோம். பின்னையும் நமக்கு அம்பணையான தலங்களுக்கும் தங்கள் வகையிலே தங்களைச் சேர்ந்த கவுண்டமாரும் தங்களுக்குச் சினேசிதமாகயிருக்கிற கவுண்டமார் ஆனார் தங்களைச் சேர்ந்து இருக்கிறார்களோ அவர்களும் தாங்களுமாக கும்பினி சருகாறத்துக்கு எந்தப் பிரகாரம் குமுக்கு செய்வீர்களோ அந்தப் பிரகாரம் பிரயாசைப்பட்டு நடந்துகொள்ள வேணுமோ அந்தப்படி நடக்க வேண்டியது. அந்தப்படி நடந்து கொண்டால் தங்களுட குமுக்கு வேண்டி தங்களுக்கும் தங்கள் குஞ்சு குளந்தையள் தங்கள் சீர்மையும் மோதலும் தங்களைச் சேர்ந்த கவுண்டமாரேயும் இதுக்கெல்லாம் தங்களுக்கு வேண்டி இங்கிலீஷ் கம்பெனி சர்க்கார் உங்களை வச்சு ரட்சிக்கிறாப்போலே நம்முடைய வசம் உம்மிட சீமையும் தங்களையும் கம்பெனி சர்க்கார் உள்ளவரைக்கும் ரட்சிக்கிறாப்போலே செய்து தருகிறோம். தங்கள் கையிலே எந்தப் பிரகாரம் ஆகுமோ. பாலக்காட்டுச் சேரியிலிருக்கிற ஜனத்தோடே கூடி தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களும் நமக்குத் துசுமனாக இருக்கிறவனை அலாக்கு செய்ய வேண்டுமோ அப்படிக்குச் செய்யவும் அல்லாதே போனால் திண்டுக்கல்லிலே பவுசுகளத்தோடகூட நிண்ணு தாங்கல் செய்விக்கிறதானால் செய்யவும் இல்லாதே போனால் பளனியிலே யிருக்கிற பவுசோடே கூடனின்று செய்யரதானால் செய்யவும் அல்லாதே போனால் தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களுமாக அவனையெந்த படியே சாரு செய்யவேணுமோ அந்தப்படி செய்யவும் மகாராஜராஜஸ்ரீ சென்றல் இற்றியோட்டு சாயபு அவர்களும் றாசஸ்ரீ சென்டறால் அட்டலீ சாயபு அவர்களும் கமசல சாயபு அவர்களும் இவர்கள் முன்னதாக தங்களை யெந்தபடி பெரியவாக்கி வைக்கவேணுமோ அந்தப்படியாக்கி இருக்கிற படியினாலே தங்கள் காரியக்காரர் ஒருத்தர் நம்மண்டையிலே எந்நேரமும் பிரியாமல் காத்து இருக்கிறாப்போலே செய்யவும். சர்க்கார் காரியம் எந்த வேளை எந்தப்படி வருமோ? ஆனபடியினாலே தங்கள் மனுஷரைப் பிரியாமல் இருக்கச் செய்யவேண்டியது. தாங்கள் இவ்விடத்துக்கு எந்த வேளை வந்தாலும் தங்களைக் காணுகிறது மெத்த சந்தோஷம்.
ராஜ மானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் ஜேம்ஸ் ரமலீ சாயபு.
1798 மார்ச்சு—1
- ↑ தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண்.டி. 3045.