காவடிச் சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


காவடிச்சிந்து

ஆசிரியர்: அண்ணாமலை ரெட்டியார்[தொகு]

பாடல் 01 (திருவுற்றிலகு)[தொகு]

பிள்ளையார் வாழ்த்து
திருவுற் றிலகுகங்க வரையில் புகழ்மிகுந்து
திகழத் தினமுறைந்த வாசனை, - மிகு
மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை, - பல
தீயபாதக காரராகிய சூரர்யாவரும் மாளவேசெய்து
சிகரக் கிரிபிளந்த வேலனை, - உமை
தகரக் குழல்கொள்வஞ்சி பாலனை,


மருவுற் றிணர்விரிந்து மதுபக் குலம்முழங்க
மதுமொய்த் திழிகடம்ப ஆரனை, - விக
சிதசித்ர சிகிஉந்து வீரனை, -எழில்
மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி
மருவப் புளகரும்பு தோளனை, -எனை
அருமைப் பணிகொளும்த யாளனை,


தெரிதற் கரியமந்தி ரமதைத் தனதுதந்தை
செவியில் புகமொழிந்த வாயனை, - இள
ரவியில் கதிர்சிறந்த காயனை,- அகல்
தேவநாடுகெ டாதுநீடிய சேனைகாவல னாகவேவரு
திறலுற்ற சிவகந்த நாதனை, - விரி
மரையத் தொளிருகின்ற பாதனை,


மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து
மதுரக் கனிவுவந்து கூடவே, - பல
விதமுற் றிலகுசிந்து பாடவே, - விரி
வாரிநீரினை வாரிமேல்வரு மாரிநேர்தரு மாமதாசல
வதனப் பரனிரண்டு தாளையே - நயம்
உதவப் பணிவமிந்த வேளையே.


பாடல் 02 (சீர்வளர்பசுந்)[தொகு]

(முருகப்பெருமான் வாழ்த்து)


சீர்வளர் பசுந்தோகை மயிலான், - வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கையுறும் அயிலான்- விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.


குஞ்சர வணங்காவல் வீடா- தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.


வல்லவுணர் வழியாதும் வி்ட்டு, - வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்ல உணர் வழியாது மட்டு - மிஞ்சு
ஞான பரமானந்த மோனம் அடைவோமே.


ஒரு தந்த மாதங்கமுகத்தான் - மகிழ
உத்தம கனிட்டனென உற்றிடு மகத்தான்
வருதந்த மாதங்க முகத்தான் - எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல் செய்வோமே.

பாடல் 03 (தெள்ளுதமிழுக்குதவு)[தொகு]

(கழுகுமலை நகர்)


தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
செப்பணாம லைக்குமனு கூலன் - வளர்
செழியப் புகழ்விளைத்த கழுகு மலைவளத்தைத்
தேனே! சொல்லு வேனே.


வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யவிர தப்பரியும்
விலகும் படி யிலகும்.
[வெள்ளிமலை = கைலாசம்; மேடை = மாடி; முடி = உச்சி; வெய்யவன் = ஞாயிறு, சூரியன்;
துய்ய = தூய, வெளுத்த; இரதப் பரி = தேர்க் குதிரை; இலகு = ஒளிவிடு]
வீதிதொறு மாதிமறை வேதம், - சிவ
வேதியர்க ளோதுசாம கீதம் - அதை
மின்னுமலர்க் காவதனில் துன்னுமடப் பூவையுடன்
விள்ளும், கிள்ளைப் புள்ளும்.
[ஆதி மறை வேதம் = முந்திய பழைய நூலான வேதம்; சாம கீதம் = சாமவேதப் பாடல்கள்'
கா = பூங்கா, சோலை; காஅதனில் = அந்தக் காவில்; துன்னு = நெருங்கு, கூடியிரு;
மடம் = மென்மை; பூவை = பெண்; விள்ளும் = கூறும், சொல்லும்; கிள்ளைப் புள்ளும் = கிளிப் பறவையும்கூட;
வீதிதோறும் பழைய நூலான வேதமான சிவ அந்தணர்கள் ஓதும் சாமவேதப் பாட்டுக்கள்;
அந்தச் சாமகீதத்தை மின்னும் பூக்கள்கொன்ட பூங்காவிலே தன்னோடு கூடியிருக்கும் மெல்லிய பெண்கிளியோடு
கிளிப் பறவையுங்கூடக் கூறும்]
சீதள முகி்ற்குவமை கூறும் - நிறச்
சிந்துரங்கள் சிந்துமத் தாறும், - உயிர்ச்
சித்திரம் நிகர்த்தமின்னார் குத்துமுலைக் குங்குமச்செஞ்
சேறும் காதம் நாறும்.


நித்தநித்த மும்கணவ ரோடும் - காம
லீலையில் பிணங்கிமனம் வாடும் - கரு
நீலவிழி யார்வெறுத்த கோலமணி மாலைரத்னம்
நெருங்கும் எந்த மருங்கும்.


கத்துகட லொத்தகடை வீதி - முன்பு
கட்டுதர ளப்பந்தலின் சோதி - எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டுமத யானையிற்பல்
களிறும் நிறம் வெளிறும்.


முத்தமிழ்சேர் வித்வசனக் கூட்டம் - கலை
முற்றிலு முணர்ந்திடும்கொண் டாட்டம் - நெஞ்சில்
முன்னுகின்ற போதுதொறும் தென்மலையில் மேவுகுறு
முனிக்கும் அச்சம் சனிக்கும்.


எத்திசையும் போற்றமரர் ஊரும் - அதில்
இந்திரன் கொலுவிருக்கும் சீரும் - மெச்சும்
இந்தநக ரம்தனை அடைந்தவர்க் கதுவும்வெறுத்
திருக்கும், அரு வருக்கும்.


துள்ளியெழும் வெள்ளையலை அடங்கும் - படி
சுற்றிலும் வளைந்தஅகழ்க் கிடங்கும் - பல
சொன்னமலை போல்மதிலும் மின்னுவதி னாலேபுகழ்
தோன்றும் லோகம் மூன்றும்.


கள்ளவிழ் கடப்பமலர் வாகன் - குறக்
கன்னியை அணைக்கும்அதி மோகன் - வளர்
கழுகுமலை நகரின்வள முழுமையுமென் நாவிலடங்
காதே, மடமாதே!
[கள் = தேன்; அவிழ் = சொட்டு; கடப்ப மலர் = கடம்ப மரத்துப் பூ; 
வாகன் = வாகௌ உடையவன்; கடப்ப மலர் மாலை சார்த்திய தோளையுடையவனாகிய முருகன்;
குறக் கன்னி = வள்ளி; அதி = மிகுந்த; மோகன் = மோகங்கொண்டவன்; 

மடம் = மென்மை; மாதெ = பெண்ணே; மடமாது = மெல்லிய பெண்ணே!

முருகன் செழிக்கும் கழுகுமலை நகரின் வளம் என் நாவில் அடங்காதே]

பாடல் 04 (சென்னி குளநகர்)[தொகு]

(கோயில் வளம்)


சென்னி குளநகர் வாசன் - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன், அயில் வீரன்.


வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!


கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.